Blog

  • 2018-02-05-12-40-43

    திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது அண்ணாமலையார். பஞ்சபூதங்களில் நெருப்பினை இத்தலம் குறிக்கிறது. அக்னித்தலமான இங்கு இறைவன் தேயு லிங்கம் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்தில் இறைவன் ஜோதி ரூபமாக அடிமுடி தேடிச் சென்ற திருமால், பிரம்மா மற்றும் உலகத்தினருக்கு காட்சியளித்தார். இங்கு காணப்படும் மலையே இறைவனாகக் கருதப்படுகிறார். திருவண்ணாமலையில் காணப்படும் மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பௌர்ணமி தினங்களில் இத்தலத்தில் கிரிவலம் வருவது சிறப்பாகும். இத்தலத்தில் உள்ள சிவபெருமானை சைவ சமயக்குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் முருகனின் மீது இத்தலத்தில் பாடல்கள் பாடியுள்ளார். நினைத்தாலே முக்தி தரும் தலம் இது என்பது இதன் சிறப்பாகும். இங்கு நடைபெறும் கார்த்திகை தீபம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இறைவன் அருணாச்சலேஸ்வரர், அண்ணாமலையார் என்ற பெயரிலும், அம்மை உண்ணாமலை என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

  • 2018-02-05-12-16-58

    பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 82-வது சிவராத்திரி விழாவினை முன்னிட்டு அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசனம் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதத்தின் புகழ்மிக்க 12 ஜோதிர்லிங்கங்களையும், அமர்நாத்திலுள்ள பனி லிங்கத்தையும் ஒரே இடத்தில் மக்கள் தரிசிக்க சென்னை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இம்முப்பெரும் ஆன்மீக நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 9 முதல் 14 வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். லிங்க தரிசனங்களை பார்த்த பிறகு இராஜயோக ஞான விளக்கம் படக்கண்காட்சியாகவும், வீடியோ காட்சியாகவும் காண்பிக்கப்படும். அதன் பிறகு 5 நிமிடங்கள் அமர்ந்து தியானிக்க பிரத்யேக தியான கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து ஒவ்வொரு தினமும் காலை 10.30 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் தாய்மார்களுக்கான விளக்கு தியானம், திருநங்கைகளுக்கான தனி நிகழ்ச்சி, தேர்வு பயத்தை நீக்கும் வழிகள் என்னும் மாணவ மாணவிகளுக்கான நிகழ்ச்சி, தமிழ் படைப்பாளிகள், அறிஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி, டென்ஷனுக்கு விடை கொடுப்போம் எனும் பொது நிகழ்ச்சி, அர்ச்சகர்கள், ஒதுவார்கள், உபன்யாசகர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி, ஊடகம் மற்றும் கலைத்துறையினருக்கான நிகழ்ச்சி, ஓய்வு பெற்ற முதியோர்களுக்கான முதுமையை வெல்வோம் நிகழ்ச்சி, மனபாரமற்ற வணிகம் என்னும் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான நிகழ்ச்சியென பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதேபோல தினமும் மாலை 6 மணியிலிருந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் அஷ்ட லட்சுமி, நவதேவிகள் மற்றும் கைலாச திருக்காட்டி போன்றவைகளின் தத்ரூப காட்சிளும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை அனைவரும் இலவசமாக காணலாம்.

  • 2018-02-05-11-51-10

    மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ஜபமும் பெற உதவுகின்றன. ஆழ்ந்த தியானம் செய்யும் போது அதன் பலனை நாம் உணர முடியும். சரி தியானம் செய்வது எப்படி என்பது பலரின் கேள்வி? தியானம் செய்ய எளிய வழிகளை தற்போது பார்க்கலாம். முதலில் உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம். தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த நேரத்தை தேர்தெடுக்கின்றோமோ அதே நேரத்தில் தொடர்ந்து தியானம் செய்ய அமர வேண்டும். வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமர்ந்து தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடி சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும். இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும். பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும். இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.

  • 2018-02-03-14-57-04

    மகா விஷ்ணுவின் மனைவியான, செல்வத்தை அளித்தரும் திருமகளின் வடிவமாக வணங்கப்படுகிறது துளசி. தூய்மையின் மறு உருவமாக விளங்குகிறது துளசி. பல இடங்களில் விஷ்ணு பக்தர்களால் விஷ்ணுப்ரியா என்ற நாமத்துடன் துளசி பூஜைகள் நடைபெற்று வருவதே, துளசியின் பெருமையைச் சொல்லும். மரணத்தைக் கூட தள்ளிப்போட வைக்கும் சக்தி துளசிக்கு உண்டு என்கிறது புராணங்கள். பூலோக வாழ்விற்குத் தேவையான செல்வங்களைப் பெற வீடுகளில் துளசியை வைத்து தூப, தீபங்கள் காட்டி வழிபாடு செய்வது நம் மரபு. துளசியை வளர்ப்பதன் மூலம் தெய்வ அருள் மட்டுமல்ல, வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. பெருமாள் தலங்களில் இடம் பிடித்திருக்கும் துளசி, மூல முதற்கடவுளாக விளங்கும் விநாயகப்பெருமானுக்கும் அர்ச்சனைக்குரியதாகிறது. துளசி அர்ச்சனை செய்பவர்களுக்கு, நுண்ணறிவு பலன் கிட்டும். ஒரு துளசி தளத்தில் 33 கோடி தேவர்களும், பன்னிரு சூரியர்களும், அஷ்ட வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கின்றனர். அதன் நுனிப்பகுதியில் பிரம்மனும், நடுவில் மகாவிஷ்ணுவும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரீ, பார்வதி ஆகியோரும் வசிக்கின்றனர். துளசியை வளர்த்து வழிபடுபவதால் ஆயுள் பலம், புகழ், செல்வம், குழந்தைப்பேறு ஆகியன கிட்டும். துளசி காஷ்டம் என்ற மணிமாலையைக் கழுத்தில் அணிபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகும்; மற்ற பாபங்களும் அகன்று விடும். அமாவாசை அன்று யாக்ஞவல்கியரின் மனையாளான காத்யாயினி சக்தியை துளசியால் வழிபட்டால், பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையும் பாக்கியம் கிடைக்கும்.

  • 2018-02-03-13-36-49

    பஞ்சபூத தலத்தில் நீர் தலமாக அமைந்துள்ளது ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருச்சி அருகில் திருவானைக்காவல்அமைந்துள்ளது இக்கோயில். பஞ்சபூதங்களில் நீரினை இத்தலம் குறிக்கிறது. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இத்தலலிங்கம் அப்பு லிங்கம் என்றழைக்கப்படுகிறது.
    இத்தலத்தில் உமையம்மை நீரில் சிவலிங்கத்தை வடித்து வழிபாடு நடத்தினாள். யானையும், சிலந்தியும் இத்தல இறைவனை வழிபட்டு முறையே சிவகணத்தலைவனாகவும், கோச்செங்கட் சோழ அரசனாகவும் உயர்நிலை அடைந்தன.
    ஜம்பு என்றழைக்கப்படும் வெண்நாவல் மரத்தின் அடியில் இத்தல இறைவன் அருள்புரிந்ததால் இவர் ஜம்புகேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
    இங்குள்ள இறைவன் தரைமட்டத்திற்கு கீழே அமையப்பெற்று எப்போதும் நீர் சூழ்ந்தே காணப்படுகிறார். இத்தல இறைவனை உமையம்மை வழிபட்டதால் உச்சி கால வழிபாட்டின்போது அர்ச்சகர் சேலை அணிந்து இங்கு வழிபாடு நடத்துவது சிறப்பம்சமாகும்.
    யானை ஏறி செல்ல முடியாத அளவில் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் இத்தலம் முதன்மையானது. சிவனடியார்கள் பலராலும் இத்தலம் பாடப்பெற்றுள்ளது. இத்தலத்தில் அம்மையும் அப்பனும் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் என்ற பெயர்களில் அருள்புரிகின்றனர்.

  • 2018-02-03-12-51-52

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் தை உத்திர வருசாபிஷேகம் ஞாயிறு அன்று (4.2.2018) நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். இக்கோயிலின் மூலவரான சுப்பிரமணிய சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது தை மாதம் உத்திர நட்சத்திரத்தில்தான். எனவே, ஒவ்வொரு வருடமும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று வருசாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தை உத்திர வருசாபிஷேகம் ஞாயிறு அன்று நடைபெறுகிறது. வருசாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, கும்பகலச பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் கும்ப கலசங்கள் விமானதளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மேளதாளம் முழங்க விமானக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றி, வருசாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மூலவர் சுவாமி சுப்பிரமணியருக்கு 21 வகை அபிஷேகங்கள் மற்றும் கும்ப கலச அபிஷேகங்கள் நடக்கின்றன. பின்னர், விஷேச அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.வருசாபிசேகத்தை முன்னிட்டு இரவு 7 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்குப் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. தொடர்ந்து, உற்சவமூர்த்தியான சுவாமி குமரவிடங்கப் பெருமாள் தெய்வயானை அம்பாளுடன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வருதல் நடைபெறுகிறது.

  • 2018-02-02-02-26-40

    திருமலை திருப்பதியில் வடக்குதுவாரம் என்பதற்கு பதிலாக ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களுக்கு மட்டும் வைகுண்ட பிரதட்சணம் நடைபெறுகிறது. அதாவது 12 ம் நூற்றாண்டில் ஆனந்த நிலையம் விரவுபடுத்துவதற்காக, கர்ப்பாலயத்தை சுற்றிவரும் பாதை அகலப்படுத்தப்பட்டது. அந்த பழைய குறுகலான பாதையே வைகுண்ட பிரதட்சணமாக, இந்த இருநாட்கள் மட்டும் திறந்து விடப்படுகிறது. மற்றநாட்களில் நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளியிருக்கிறார்.கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார் , வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.
    பரமபதநாதர் (வண்ண கட்டமிடப்பட்டிருப்பது) அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான் விமான வெங்கடேஸ்வரர். ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது. இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம். “..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்கள சொல்லமுடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு..,இவருகிட்ட உங்களோட வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வாங்க..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்..”

  • 2018-02-02-01-42-57

    ஏகாம்பரேசுவரர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூதங்களில் நிலம் எனப்படும் மண்ணினை இத்தலம் குறிக்கிறது. இங்குள்ள லிங்கம் பிருத்வி லிங்கம் என்றழைக்கப்படுகிறது. கம்பை ஆற்றின் கரையில் சுயம்புவாக எழுந்தருளிய இறைவனை உமையம்மை கண்டபோது ஆற்றில் ஏற்பட்ட வெள்ள மிகுதியால் இறைவனை இறுக அணைத்தாள். அதனால் இறைவனின் திருமேனி குழைந்து அதில் தழும்புகள் ஏற்பட்டன. அதனால் இத்தல இறைவன் தழுவக் குழைந்த நாதர் என்றழைக்கப்படுகிறார். இத்தலம் முக்திதரும் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரர் பார்வையிழந்து தவித்தபோது இத்தல இறைவனின்மீது பாடல்கள் பாடியே இடக்கண் பார்வையைப் பெற்றார். சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவனுக்கு அபிசேகங்கள் நடைபெறுவதில்லை. இவ்விடம் திருக்குறிப்புத்தொண்டர், கழற்சிங்கர், ஐயடிகள் காடவர்கோன் போன்ற நாயன்மார்களின் அவதாரத் தலம் மற்றும் சாக்கிய நாயனாரின் முக்தித்தலமாகும். இத்தலத்தில் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற நாமத்துடனும், அம்மை ஏலவார்குழலி என்ற நாமத்திலும் அருள்புரிகிறார்கள்.

  • 2018-02-01-07-46-14

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. சமயபுரம் மாரியம்மனுக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சீர்வரிசை கொடுக்கப்பட்டது. இதற்காக சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரை வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி அம்பாள் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், அறங்காவலர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் தலையில் சுமந்தும், கையில் ஏந்தியவாறும் ஊர்வலமாக புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க, மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்பாள் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வந்தனர். அங்கு சீர்வரிசைப் பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வழங்கினர். இதையடுத்து அம்பாளுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களுடன் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

  • 2018-01-31-08-27-57

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் பிப். 2-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி, மார்ச் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பிப். 2-ம் தேதி பிற்பகல் 4.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில், அவரது அலுவலகத்தில் உள்ள சிப்பி கூடத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேவையான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.