Blog

  • 2018-02-09-14-20-27

    சிவபூஜை செய்ய இயலாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம். அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம். அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.

  • 2018-02-09-14-06-04

    பஞ்சபூதங்களில் ஆகாயத்தை தலமாக சிதம்பரம் நடராஜர் கோவில். ஆகாச தலமான இங்கு இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து ஆகாயமாக அருள்புரிகிறார். சிவனின் வழிபாட்டுப்பாடல்களின் ஆரம்பம் மற்றும் முடிவில் திருச்சிற்றம்பலம் என்று கூறப்படுவது இத்தலமே. எல்லாவற்றிற்கும் ஆரம்பம் மற்றும் முடிவு ஆகாயம் என்பதை உணர்த்தத்தான் திருச்சிற்றம்பலம் என்று கூறப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்றே குறிப்பிடப்படுகிறது. இங்கு இறைவன் உலக உயிர்கள் உய்யும்பொருட்டு தனது ஆனந்த தாண்டவத்தை பதஞ்சலி, வியாக்கிரதபாதர் மற்றும் உலக உயிர்களுக்கு காட்டி அருளுகிறார். பஞ்ச சபைகளில் இத்தலம் பொன்னம்பலம், கனக சபை என்று வழங்கப்படுகிறது. சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற சிறப்பினைப் பெற்றுள்ளது இத்தலம். இங்கு மகாவிஷ்ணு கோவிந்தராஜப் பெருமாள் என்கின்ற நாமத்துடன் புண்டரீகவள்ளித் தாயாருடன் அருள்புரிகிறார். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்றாகும். இங்கு இறைவன் நடராசன் என்ற பெயரிலும் அம்மை சிவகாமி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். பஞ்சபூதங்களின் வடிவில் உலகம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனான சிவபெருமானை போற்றி வணங்குவோம்.

  • 15-39

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 241 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 26 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் 3.02 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

  • 2018-02-09-11-41-42

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடக்கிறது. முன்னதாக, சிவன் கோவிலில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோருக்குச் சிறப்புப்பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோரை பல்லக்கில் வைத்தும், பிரம்மோற்சவ விழா கொடியை மேள தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்த கண்ணப்பர் கோவிலான கைலாசகிரி மலைக்குப் பக்தர்கள், ஊழியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பக்த கண்ணப்பர் கோவில் கொடி மரத்தில் சிவ.. சிவ.. என்ற பக்தி கோ‌ஷம் முழங்க அர்ச்சகர்கள் கொடியேற்றினர். அதைத்தொடர்ந்து பக்த கண்ணப்பருக்கு அபிஷேக, ஆராதனை, சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம், தீபாராதனை ஆகியவை நடந்து முடிந்ததும், மங்கள வாத்தியங்கள் முழங்க, கைலாசகிரி மலையில் இருந்து உற்சவ மூர்த்திகளை ஊர்வலமாக ஸ்ரீகாளஹஸ்திக்குக் கொண்டு வந்தனர். சிவன் கோவிலின் நான்குமாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

  • 2018-02-08-12-41-34

    முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும். அதன் பின், ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக , மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை நந்து வீடு திரும்பவேண்டும். வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம். இந்த நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும்.

  • 2018-02-08-12-19-54

    சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசிமகம் தோஷம் தடைகள் நீக்கும் புனித நாளாகும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை பிறப்பதாக ஐதீகம். மாசிமகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும்.

  • 2018-02-08-11-11-06

    சிவனுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே `மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். ‘ராத்திரி’ என்ற சொல்லுக்கு அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. ஆகவே, இந்த புண்ணிய காலத்தில் சிவனின் திருநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம். இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும். இதனால், இந்த ஜென்மம் மட்டுமல்லாது மறுஜென்மத்திலும் நிறைவான வாழ்வையும் பெற முடியும் அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நாள் அது.

  • 2018-02-07-16-51-25

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரும் மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ஏழுமலையான் கோவிலில் சன்னதிகள், மண்டபங்கள், பிரசாதம் தயாரிக்கும் பகுதிகள், உண்டியல் காணிக்கை எண்ணும் பகுதிகளை தவிர மற்றவை மேற்கூரையின்றி திறந்த வெளியில் உள்ளது. இதனால் கோடை வெயில், அடைமழை மற்றும் கடும் பனி காலங்களில் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் அப்பகுதிகளில் தேவஸ்தான நிர்வாகம் நகரும் மேற்கூரை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. மேலும் திருப்பதியில் குழந்தை கடத்தல், வழிப்பறி செயின் பறிப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கவும், பக்தர்களுக்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கவும் திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருமலை நடைபாதை மார்க்கங்கள் மாடவீதிகள், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் 1400 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  • 2018-02-06-05-20-38

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்த ஆண்டிற்கான சிவராத்திரி திருவிழா இன்று பிப்ரவரி 6-ல் தொடங்கி பிப்ரவரி 17 வரை நடைபெறுகிறது. செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு ராமநாதசுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வீதி உலா வருகிறார்கள். பிப்ரவரி 13-ம் தேதி மாசி சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் நடராஜர் கேடயத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு ஒளி வழிபாடு முடிந்ததும் சுவாமி அம்பாள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வீதி உலா வருகிறார்கள். பிப்ரவரி 14-ம் தேதி காலை 09.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார்கள். தொடர்ந்து தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. பிப்ரவரி 15-ம் தேதி மாசி அமாவாசையன்று காலை 9 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்து அங்கு பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவையோட்டி தினமும் தெற்கு நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

  • 2018-02-06-04-55-53

    ஆந்திர மாநில மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பஞ்சபூதங்களில் காற்றினை குறிக்கும் காளத்தியப்பர் திருக்கோயில். வாயுத்தலமான இங்கு இறைவன் வாயு லிங்கம் என்றழைக்கப்படுகிறார். சீ என்ற சிலந்தி, காளம் என்ற பாம்பு, அத்தி எனப்படும் யானை ஆகிய மூன்றும் இத்தல இறைவனை வழிபட்டு முக்தி பெற்றதால் இவ்விடம் சீகாளகத்தி என்றும், திருகாளகத்தி என்றும், ஸ்ரீகாளகத்தி என்றும் வழங்கப்படுகிறது. கண்ணப்பநாயனார் இத்தல இறைவன்மீது கொண்ட பேரன்பினால் தனது கண்களை தானம் செய்து முக்தி பெற்றார். கண்தானத்தில் உலகின் முன்னோடியாக கண்ணப்பர் திகழக் காரணமான தலம் என்னும் சிறப்புடையது. இக்கோயிலை சோழப் பேரரசின் முக்கிய அரசனான இராஜேந்திரச் சோழன் என்பவரால் கட்டப்பட்டு பின் பல மன்னர்களால் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அப்பர் தனது தேவாரப் பதிகத்தில் இத்தல அம்மை மற்றும் அப்பனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இங்கு இறைவன் காளத்தியப்பர் என்ற பெயரிலும், அம்மை ஞானப்பூங்கோதை என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.