நாகை மாவட்டம்,வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழாவின்போது தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழா, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, பிரதான கதவின் எதிரே அப்பர், சம்பந்தர் ஆகியோர் எழுந்தருள, இவர்களை உருவகப்படுத்தப்பட்ட ஓதுவாமூர்த்திகள் பதிகம் பாடினர். கோயில் கதவு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, அப்பர், சம்பந்தர் எழுந்தருளிய வீதியுலா நடைபெற்றது. வேதாரண்யேசுவரர் கோயிலில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நான்கும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும்,பின்னர், கோயிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்றதாகவும் செவிவழித் தகவலாக கூறப்பட்டு வருகிறது. பின்னாளில் இக் கோயிலுக்கு வந்த சமயக் குரவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரும் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடியதால் கதவு திறந்ததாகவும் கோயில் தலப்புராணத்தில் கூறப்படுகிறது. இதில், அப்பர் கதவினை திறக்கவும், சம்பந்தர் கதவினை மீண்டும் திருகாப்பு செய்யவும் பாடியதாக சொல்லப்படுகிறது.
Blog
-
2018-02-17-11-45-19
நவகிரக நாயகர்களில் செவ்வாய் மிகவும் வலிமை மிக்கவர். சகோதரர் பூமி யோகம், தேக நலம், ஆகிய பலங்களைத் தருபவராக இருக்கிறார். செவ்வாய் தோசத்தால் திருமணத் தடை உண்டாகும் என்பர். இதனைப் போக்கும் தலமாக விளங்குகிறது வைத்தீஸ்வரன் கோயில். செவ்வாய் வழிபட்ட சிவலிங்கம் இங்கு அமைந்துள்ளது. செவ்வாயின் அதிதேவதையான மிருகப்பெருமான் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் இங்கு வீற்றிருக்கிறார். செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் தனக்குரிய ஆட்டு வாகனத்தில் கோயிலுக்குள்ளே உலா வருகிறார். இங்கு தன்வந்திரி சித்தர் ஜீவ சமாதி ஆகி இருப்பதால் நோய் தீர்க்கும் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தல இறைவனை வைத்தீஸ்வரரையும், அம்பிகை தையல் நாயகியையும் விரதம் இருந்து வழிபாடு செய்வோருக்கு திருமணத் தடை நீங்கி நல்ல வாழ்க்கை அமையும்.
-
2018-02-17-11-21-56
பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா மார்ச் 22-ந் தேதி தொடங்குகிறது. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஒரே நேரத்தில் இந்த கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது, உலக சாதனையாகி ‘கின்னஸ்‘ புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறது. எனவே இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்புக்குரியதாகும். 1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி நடந்த பொங்கல் வழிபாட்டில் 15 லட்சம் பெண்களும், 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதி நடந்த பொங்கல் வழிபாட்டில் 25 லட்சம் பெண்களும் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
2018-02-16-05-23-21
வீட்டில் பூஜை செய்யும் போது சிலருக்குப் பல குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்? எந்த பழம் எந்த தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எந்தப் பூ கொண்டு ஸ்வாமிக்கு அர்ச்சனைச் செய்வது எனப் பல சந்தேகங்கள் ஏற்படும். வெற்றிலைக்கு நுணியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலைபாக்கில் நுண்ணாம்பு இருக்கக் கூடாது. அவல்பொறி, கடலை மற்றும் கல்கண்டு நிவேதனமாகப் படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்து தான் கடவுளுக்குப் படைக்க வேண்டும். மேலும், நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இளந்தை, விளாம்பழம், புளியம்பழம், மாம்பழம் ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையாகும். வாழையில் நாட்டுப்பழம் நல்லது. குடுமி தேங்காயை சீறாக உடைத்து பிறகு குடுமியைப் பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் இருந்தால், அதனை மாற்றி வேறு தேங்காயை உடைக்கலாம். கோணலான, வழுக்கையான தேங்காய் இருக்கக் கூடாது. வழிப்பாட்டிற்கு முன்பாக சாம்பிராணி புகை போடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல் கொண்டது. கோலமிட்டு, விக்ரகங்களைச் சரியாக அமைத்துக்கொண்டு, விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி அர்ச்சனை செய்து அதன்பின் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளுக்கு அர்ச்சதையால் பூஜிப்பதும் தவறு. சிவபெருமானுக்கு தாழம் பூ ஆகாது. திருமகளுக்கு தும்பை பூ ஆகாது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உகந்தது அல்ல. வில்வம், கொன்றை, தும்பை, வெள்ளேருக்கு, ஊமத்தை சிவனுக்கு உரியது. காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளி பூக்கள் உகந்தவை. அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ, ரோஜா, பன்னீர் ரோஜா, சங்குப்பூ, தாமரை, மரிகொழுந்து, சம்பங்கி, துளசி, விரிச்சிப்பூ ஆகியவை பூஜைக்கான மலர்கள் என்று ஆன்றோர்களால் கூறப்படுகிறது. சாமந்தி போன்ற மனமில்லாத மலர்கள் பூஜைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால், அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம். அர்ச்சிக்கும் போது முழு மலரால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும். காய்ந்துபோன மற்றும் அழுகிப்போன, வாடிப்போன, பூச்சி கடித்த பூக்களைப் பயன்படுத்த தெய்வ குற்றமாகும். இவையே பூஜை அறையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஆகும்.
-
2018-02-16-05-07-20
முறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பௌர்ணமி அன்றும் இதைச் செய்யலாம்.
துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்கவேண்டும். தொடர்ந்து அவை ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஷ்ருஷிகேசா, பத்மநாபா, தாமோதரா என்று சொல்லி, மனதார வணங்கவும். அத்துடன், ‘ஸ்வாகதம்’ என்றும் 3 முறை கூறவும். இனி, வெற்றிலையின் மீது சந்தனப் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அவருக்கு குங்குமத் திலகமிட்டு செம்மலரால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். அடுத்து, தேங்காய், பழம், தாம்பூலம், பால் பாயசம் நிவேதனத்துக்கு வைத்துக்கொண்டு பூஜையைத் துவங்குங்கள். ‘ஓம் ஸ்ரீ விஷ்வக்சேனாய நம:’ – என்று மூன்று முறை சொல்லி விநாயகருக்கு துளசி தீர்த்தம் விடவேண்டும். தொடர்ந்து… ‘ஓம் கஜானனாய நம:’ என்று துவங்கி விநாயகர் திருநாமங்கள் சொல்லி துதித்து, பழம் நிவேதித்து ஆரத்தி செய்யவும். -
2018-02-15-14-23-35
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மாசி மக பிரமோத்ஸவத்திற்காக பிப்ரவரி 19-ஆம் தேதி (திங்கள்கிழமை) கொடியேற்றம் நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாசி மக தீர்த்தம் அளிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் காரைக்கால், நிரவி, திருமலைராயன்பட்டினம், திருமருகல் பகுதி கோயில்களில் இருந்து பெருமாள் சிறப்பு பல்லக்கில் கடற்கரைக்கு எழுந்தருளுவார்கள். இந்தத் திருவிழா பிரமோத்ஸவமாக பெருமாள் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் இவ்விழா தொடங்குவதற்காக பந்தல்கால் முகூர்த்தம் புதன்கிழமை நடைபெற்றது. வருகிற 19-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது. மார்ச் 1-ஆம் தேதி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாச மக தீர்த்தவாரியும், 3-ஆம் தேதி தெப்பம், 4-ஆம் தேதி புஷ்பபல்லக்குடன் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
29
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில், வரும் ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில், குளிர் காலங்களில் பனியால் மூடப்பட்டு விடும். இதன் காரணமாக 6 மாதங்கள் நடை சாத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு நவம்பரில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்படவுள்ளது. குளிர் காலத்தின்போது கேதார்நாத் கோயில் சிலை ஓம்காரேஸ்வரர் கோயிலில்தான் வைக்கப்பட்டிருக்கும். மீண்டும் நடை திறப்பதையொட்டி, ஏப்.26-ஆம் தேதி கேதார்நாத் சுவாமி சிலை பல்லக்கில் எடுத்துச் செல்லப்படவுள்ளது. இமய மலையில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலுக்கு, உள்நாடு, வெளிநாடு என லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருவது குறிப்பிடத்தக்கது.
-
2018-02-13-12-23-08
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கினால் முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நாம் நினைத்த காரியம் கைக்கூடும். விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம். சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.
-
2018-02-13-05-47-51
மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகிமை மிக்க இந்த மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது.
விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டையைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.
அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் “எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.
பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.
ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார்.
நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான்…. நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமான் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.
விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலராவாய் என்றும் சாபமிட்டார்.
இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.
இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் “லிங்கோத்பவர்” வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி விழா தோன்றிய தலமும் திருவண்ணாமலையே.
திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது.
சிவபெருமானுக்குரிய முக்கிய 25 வடிவங்களில் முதலாவது அமைவது லிங்கோத்பவர் வடிவம்தான். லிங்கம் என்பது சிவ வடிவம். அந்த லிங்கத்தில் இருந்து தோன்றிய உருவம்தான் லிங்கோத்பவர். அதாவது லிங்கத்துக்கு தலை, கை, கால் முளைத்தால் கிடைக்கும் உருவம்தான் லிங்கோத்பவர்.
சிவபெருமான் முதலில் உருவம் இல்லாமல் அருவமாகத்தான் இருந்தார். ஆனால் உலக உயிர்கள் முன்பு தோன்ற நினைத்தபோது அருவுருவாகவும், பிறகு உருவமாகவும் தோன்றினார். அருவத்துக்கும், உருவத்துக்கும் இடையில் நின்றதே அருவுருவமாகும். இதுதான் திருவண்ணாமலையில் நெருப்புப் பிழம்பாக நின்ற லிங்கோத்பவர் உருவமாகும். எனவேதான் திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் வழிபாடு, மிக, மிக சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதை காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
பொதுவாக லிங்கோத்பவரை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். மலையில் இருட்டத் தொடங்கும் நேரத்தில் இவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும்.
மகாசிவராத்திரி நாளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களில் மூன்றாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அருவுருவமாக லிங்கோத்பவர் அருள்பாவித்த காலமாக இதை சொல்கிறார்கள்.
ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் மகா சிவராத்திரியின் இரண்டாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கோத்பவர் முதன் முதலில் திருவண்ணாமலையில் தோன்றியவர் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் மற்ற தலங்களுக்கு முன்பாக இரண்டாம் ஜாமத்திலேயே திருவண்ணாமலையில் பூஜைகள் நடத்தப்படுவதாக ரமேஷ் குருக்கள் தெரிவித்தார்.
உலக உயிர்கள் “நான்”, “எனது” என்பன போன்ற ஆணவம், அகந்தை கொள்ளாமல், தானும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறு அணுவே என்பதை உணர்ந்து புரிந்து கொள்வதே லிங்கோத்பவர் வடிவத்தின் தத்துவமாக உள்ளது. இந்த வடிவை வழிபட்டால் உடல் நலமும், மோட்ச பிராப்தமும் கிடைக்கும். எனவேதான் இந்த வழிபாட்டை, “மோட்ச பிரதாயினி” என்று சொல்கிறார்கள்.
லிங்கோத்பவர் பூஜையின்போது மட்டும் சுவாமிக்கு நெய்பூசி, வெண்ணீர் அபிஷேகம் செய்து, பிறகு கம்பளி போர்த்தி தாழம்பூ சூட்டுவார்கள். இந்த ஒரு காலத்தில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ அணிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மகா சிவராத்திரியன்று இந்த பூஜையை நேரில் பார்த்து தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கெல்லாம் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்படும். பிறகு தங்கக்கவசம் அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெறும்.
அன்றிரவு 4 ஜாம பூஜைகள் நடத்துவார்கள். இரவு 7 மணிக்கு முதல் ஜாம பூஜை, 11 மணிக்கு இரண்டாம் ஜாம பூஜை நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் ஜாம பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் ஜாம பூஜை நடத்துவார்கள்.
இதில் இரவு 11 மணி முதல் 1 மணி வரையிலான இரண்டாம் ஜாம பூஜை லிங்கோத்பவருக்கான பூஜையாக நடைபெறும். அடி, முடி காண முடியாதபடி சிவபெருமான் நெருப்புப் பிழம்பாக நின்ற நேரம் அது. எனவே இந்த நேரத்தில் லிங்கோத்பவரை வழிபாடு செய்வதும், கிரிவலம் வருவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக இரவு முழுவதும் பன்னிரு திருமுறை இசைக் கச்சேரி நடைபெறும். ராஜகோபுரம் அருகே 108 தவில், நாதஸ்வர வித்வான்களின் கச்சேரி நடக்கும்.
கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வைப்பார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் லட்சதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி தினத்தன்று லட்ச தீபத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அது மட்டுமல்ல, கிரிவலம் வரும் பக்தர்கள், மகாசிவராத்திரி தினத்தில் மட்டும் வில்வ கூடையை ஏந்தியபடி கிரிவலம் செல்வது வித்தியாசமாக இருக்கும். நெருப்பு மலையாக இருக்கும் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்த பக்தர்கள் கூடை, கூடையாக வில்வம் எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஐதீகமாகும். சிவராத்திரி கிரிவலம் காரியசித்தி தரும் என்பார்கள்.
சிவபெருமான் நெருப்பு மலையாக உருவெடுத்தது பற்றி பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழக்கூடும். கார்த்திகை தீபத்தன்றுதானே ஈசன் நெருப்பு உருவில் தோன்றினார் என்று நினைக்கலாம்.
உண்மையில் சிவபெருமான் திருவண்ணாமலையில் இரண்டு தடவை ஜோதி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மாசி மாதம் விஷ்ணு, பிரம்மாவின் ஆணவத்தையும், அகந்தையையும் விரட்ட நெருப்புப் பிழம்பாக வந்தார். கார்த்திகை மாதம் அம்பாளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தப்போது ஜோதிச்சுடராக வந்தார். முதல் ஜோதி தரிசனத்துக்கும் இரண்டாம் ஜோதி தரிசனத்துக்கும் வித்தியாசம் உள்ளதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாசியில் நெருப்புப் பிழம்பு, கார்த்திகையில் ஜோதி சுடர்.
சிவபெருமான் ஜோதி ரூபமாக வெளிப்பட்டதால்தான் திருவண்ணாமலை தலம், “அக்னி தலம்” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அண்ணாமலையார் சன்னதியின்அர்த்த மண்டபத்தில் சிறிது நேரம் நின்று பாருங்கள்… அனல் வீசுவதுபோல இருக்கும். வியர்த்துக் கொட்டும். திருவண்ணாமலை நெருப்புத்தலம் என்பதை உறுதிப்படுத்த இந்த உதாரணம் ஒன்றே போதும் என்கிறார் ரமேஷ்குருக்கள்.
சமீபத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அணுவில் உள்ள எலக்ட்ரானுக்குள்ளும் லிங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். எலக்ட்ரானுக்குள்ளும் பச்சை நிற வட்டமும, நடுவில் செந்நிறமான ஜோதி வடிவமும் இருப்பதைக் கண்டார்கள். இது திருவண்ணாமலையில் பச்சை பசேல் இயற்கை வளத்துக்கிடையே ஈசன் நெருப்புப் பிழம்பாக தோன்றியதை பிரதிபலிப்பதாக ஆன்மிக பெரியவர்கள் சொல்கிறார்கள்.
அந்த நெருப்பு மலைதான் பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக விஷ்ணு, பிரம்மா வேண்டுதலின்பேரில் சிறு லிங்கமாக மாறியது. அந்த லிங்கத்தை சுற்றியே தற்போதைய ஆலயம் உருவானது.
-
2018-02-13-05-28-37
வீடு, கட்டிடங்கள், கோவில் கட்டும் போது வாஸ்து பார்க்கிறார்கள். யார் இந்த வாஸ்து புருஷன் தெரியுமா?
அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், “இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்,” என்று கூறினர்.
மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.