Blog

  • 2018-02-28-11-28-29

    காஞ்சிபுரம் சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மகாசமாதி அடைந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூச்சு திணறல் காரணமாக சங்கரமடம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுமதிக்கப்பட்டார். பல நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகாசமாதி அடைந்தார்.

  • 2

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்பல் உற்சவத்தின் இரண்டாவது நாளில் ருக்மணி சமேத கிருஷ்ணர் சுவாமி தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று மாலை 5 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவ மூர்த்திகளில் ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணி ஆகியோர் மட்டும் தெப்பத்தில் எழுந்தருளி மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணிவரை 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தெப்ப உற்சவத்தின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

  • 2018-02-27-15-24-03

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 11-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11-ஆம் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெறுகின்றன. காலை 6.45மணியில் இருந்து 8.15 மணிக்குள் காப்பு கட்டப்பட்டு பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. கோயில் ஊழியர்கள், ஊர் பிரமுகர்கள் பூக்களை தட்டுகள், கூடைகளில் எடுத்து, ஊர்வலமாக சென்று அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்கின்றனர். வெளியூர், வெளி மாவட்ட பக்தர்கள் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்ய உள்ளனர்.
    இந்த தேவஸ்தான பூச்சொரிதல் விழா முதல் வார பூச்சொரிதல் விழாவாகும். அன்றைய தினம் அம்மன் உலக நன்மைக்காக பச்சை பட்டினி விரதத்தை தொடங்குவார். அதேபோல், பக்தர்களும் மஞ்சள் ஆடை உடுத்தி விரதத்தை தொடங்குவார்கள். பங்குனி மாதம் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை வரை விரத்தை கடைபிடிப்பார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 4-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.

  • 2018-02-26-07-31-32

    ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்ம தேவன், கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை காணச்சென்றார். அவரிடம் உலகத்தை அழிக்கக்கூடிய பிரளய காலம் எனும் ஊழி வெள்ளம் வர உள்ளது. (ஊழி வெள்ளம் என்பது உலகத்தையே அழிக்கக்கூடிய சுனாமி போன்றது). பிரளய காலத்தில் வேதம் முதலிய பொருட்கள் யாவும் அழிந்துவிடும் என்றும், சிருஷ்டி பீஜம்(படைப்பதற்கு உரிய மூலப்பொருள்) அழிந்து விட்டால் எப்படி நான் எனது படைப்பு தொழிலை மேற்கொள்ள முடியும் என சிவபெருமானிடம் கவலையுடன் பிரம்மதேவன் முறையிட்டு அதற்கு தாங்கள்தான் ஒரு உபாயம் தெரிவிக்கவேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினார்.
    அதற்கு சிவபெருமான் அமுதத்தையும், மண்ணையும் சேர்த்து பிசைந்து மாயமாகிய குடத்தை செய்து அதனுள் அமுதத்தை நிரப்பி, அதனுள் தான் அளிக்கும் விதையாகிய சிருஷ்டி பீஜத்தை வைத்து, வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்களை அதன் நான்கு புறமும் வைத்து,அதில் அதிகமான அமுதத்தை சேர்த்து, குடத்தின் மேல் மாவிலை, தேங்காய், வில்வம், பூணூல், தர்ப்பை முதலியவற்றை சேர்த்து அத்துடன் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களையும் கும்பத்தில் அடக்கி அதற்கு சிறப்பு பூஜை செய்து அக்குடத்தை ஒரு உறியில் வைத்து மகாமேருமலையில் ஓர் இடத்தில் வைக்க கூறினார். ஊழி வெள்ளம் ஏற்படும்போது அதற்கு வேண்டியதை யாம் செய்திடுவோம் என சிவபெருமான் பிரம்மனிடம் கூறினார். பிரளய வெள்ளமும் ஏற்பட்டது. மகாமேரு மலையில் வைக்கப்பட்ட சிருஷ்டி பீஜம் அடங்கிய குடம் மிதந்து தென்திசை நோக்கி செல்லும். அப்போது அந்த இடத்தில் நான் தோன்றி வேண்டுவதை நிறைவேற்றுவோம் எனக்கூறி பிரம்மதேவனை அனுப்பி வைத்தார்.
    சிவபெருமான் கூறியபடியே பிரம்மதேவனும் மகாமேருமலையில் சிருஷ்டிபீஜம், அமுதம் அடங்கிய மாயமாகிய குடத்தை வைத்து சிவபெருமானின் திருவருளை எதிர்நோக்கி காத்திருந்தார். இதையடுத்து சில நாட்களில் உலகத்தை அழிக்க பிரளயம் உருவாகி ஏழு கடல்கள் யாவும் ஒன்றாய் கலந்து உலகை மூழ்கடித்தது. பெருவெள்ளம், மழை, காற்று ஆகியவற்றால் அனைத்து ஜீவராசிகள், மலைகள் முதலான அனைத்தும் மூழ்கி உலகமே அழிந்தது. அப்போது சிவபெருமான் அருளியபடி தென்திசை நோக்கி அமுதம் நிரம்பிய குடம்(கலசம்) சுழன்று, சுழன்று மிதந்து வந்து திருக்கலயநல்லூர் எனும் இடத்தில் வந்தது. அப்போது அதன் மேல் இருந்த மாவிலை,தர்ப்பை திருக்கலசநல்லூர் தலத்தில் விழுந்து சிவலிங்கமாகின. மீண்டும் வடமேற்கு திசையில் சென்று ஓர் இடத்தில் அந்த குடம் தங்கியவுடன் ஊழி வெள்ளம் வடிந்தது. பிரம்மனும்,தேவர்களும் அதனைப்பின்தொடர்ந்து வந்தனர். அப்போது சிவபெருமான் கிராதமூர்த்தியாக எழுந்தருளி சற்று தொலைவிலிருந்து அம்பு எய்து அந்த அமிர்த குடத்தை உடைத்தார்.
    அப்போது மாயகுடம் இரண்டாக உடைந்தது. இந்த நிகழ்வு நடந்த இடம் கும்பகோணம். அந்த இடத்தில் தான் தற்போது கும்பேஸ்வரர் கோயில் அமைய பெற்றுள்ளது. சிவன் உடைத்த குடத்தில் வைக்கப்பட்டிருந்த அமிர்தம் ஆறாய்ப் பெருகி எட்டு திக்குகளிலும் பெருகிச்சென்றது. அதே போல் தேங்காய், வில்வம், உறி உள்ளிட்ட அனைத்தும் சிதறி விழுந்தன. இந்த கோயில்களில் உள்ள சுவாமிகள் புண்ணிய குளமான மகாமககுளத்திற்கு மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பவுர்ணமி நாளும், மக நட்சத்திர நாளும் இணைந்து வரும் நாளில் மாசி மக விழா கொண்டாப்படுகிறது. இதுவே சிம்ம ராசியில் குருபகவான் வந்தால் மகா மக விழாவாக கொண்டாடப்படும். வழக்கமாக இது 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். அன்று தான் குளத்தில் உள்ள 20 தீர்த்த கிணறுகளிலும் அந்த தெய்வங்கள் வந்து புனித நீராடுவார்கள் என்பது ஐதீகம்.

  • 2018-02-26-07-16-53

    வட மாநிலங்களில் அலகாபாத், ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புண்ணிய நதிகளில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா தமிழகத்தின் பெருமளவு பக்தர்கள் குவியும் விழாவாக இருக்கிறது. இப்பெருவிழா ஜீவநதிகளின் பாவங்களையும், முப்பத்துமுக்கோடி தேவர்களின் பாவங்களையும் போக்கி புண்ணியம் தருவதாகும். மகாமக தீர்த்தவாரியின்போது கங்கை,யமுனை,நர்மதா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய 9 புண்ணிய நதிகள் சங்கமமாகி நீராட வருவதாகவும், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன்,வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்ட திக்கு பாலகர்களும், பிரம்மதேவனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம், நாக, தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் இங்கு புனித நீராடவருவதாகவும் ஐதீகம். எனவே குடந்தை மகாமக திருக்குளம் புனிதத்தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது. இந்தக் குளத்திற்குள் 20 தீர்த்தக்கிணறுகளும், குளத்துடன் சேர்த்து 21 தீர்த்தங்களாகிறது. குளத்தின் 4 கரைகளை சுற்றிலும் 16 சோடச லிங்கங்களும் உள்ளன. புனித குளமான மகாமக குளம் சுமார் ஆறரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. சதுரமாகவும் இல்லாமல், செவ்வகமாகவும் இல்லாமல் அரூபமாக காணப்படும். குளத்திற்கு அரசலாற்றிலிருந்து தண்ணீர் வருவதற்கும், குளத்தின் தென் கிழக்கு மூலையில் தண்ணீரை வெளியேற்ற வடிகாலும் உள்ளது. அதனால் அங்குள்ள தெருவிற்கு வடிவாய்க்கால் தெரு என்ற பெயரும் உண்டு.

  • 2018-02-26-05-07-10

    திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயிலில் வருடாந்திர இந்திரப் பெருவிழா உத்ஸவ கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சீர்காழி அருகேயுள்ள திருவெண்காட்டில் உள்ளது பிர்ம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயில். இக்கோயிலில் அகோரமூர்த்தி சுவாமி, நவக்கிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்றழைக்கப்படும் புதன் பகவான் தனிதனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையானது இக்கோயில் ஆகும். இக்கோயிலில் சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து விழுந்த தீப்பொறியிலிருந்து உருவான அக்னி, சந்திரன், சூரியன் ஆகிய முக்குளங்கள் உள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாள்கள் இந்திரப் பெருவிழா உத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.
    நிகழாண்டு உத்ஸவம் பூர்வாங்க பூஜைகள், விக்னேஸ்வரபூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. தொடர்ந்து, பஞ்சமூர்த்தி மகா மண்டபம் பிரவேசம் நடந்தது. உற்தவ கொடியேற்றம் நடைபெற்றது. 27-ஆம் தேதி கைலாச வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், 28-ஆம் தேதி பிற்பகல் சுவேதராஜா மணிக்கர்ணிகையில் ஸ்நானம் செய்து திரும்புகையில், தர்மராஜா வழிமறித்தல் பின்னர் எமசம்ஹாரம் நடைபெறுகிறது.
    மார்ச் 1-ஆம் தேதி அகோரமூர்த்தி மகாமண்டபம் பிரவேசமும், 2-ஆம் தேதி அகோரமூர்த்திசுவாமி நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளல், இரவு மருத்துவன் இம்சையால் நந்திகேஸ்வரர் வந்து தரிசிப்பதும், மருத்துவ சம்ஹாரமும், வெள்ளி ரிஷப வாகன காட்சி, சகோபுரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறவுள்ளது. 4-ஆம் தேதி பிர்ம்மவித்யாம்பிகை அம்மன், சுவேதாரண்யேசுவரர் சுவாமி திருக்கல்யாண உத்ஸவம், இரவு முத்துப்பல்லக்கில் காட்சி நடைபெறுகிறது.
    மார்ச் 5-ஆம் தேதி பிட்சாடனார் இந்திர விமானத்திலும், 63 நாயன்மார்களுடன் வீதியுலா காட்சியும், 6-ஆம் தேதி விநாயகர், முருகன், சுவாமி-அம்பாள் திருத்தேரில் எழுந்தருளும் தேர் திருவிழா நடைபெறுகிறது. 7-ஆம் தேதி கொடியிறக்கம், 9-ஆம் தேதி சந்திர தீர்த்தத்தில் தெப்போற்சவம் நடைபெறவுள்ளது.

  • 2018-02-26-04-33-23

    கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!
    இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
    இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
    பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
    கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் தூய்மை அடைகிறது.

  • 2018-02-24-12-58-11

    திருச்செந்தூர் மாசி திருவிழாவில் நேற்று சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், வெள்ளி சரப வாகனத்தில் தெய்வானை அம்பாளும் வீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று 4ம் திருவிழாவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பலவகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் இருந்து இரவு 6.30 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி குமரவிடங்கபெருமானும், வெள்ளி சரப வாகனத்தில் தெய்வானை அம்பாளும் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • 63

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் மாசிமக விழாவை முன்னிட்டு நேற்று 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசிமகத்துக்கு பெயர் பெற்ற இக்கோயிலில் கடந்த 20ம் தேதி விழா கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் உற்சவம் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று காலை வெள்ளிப்பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. அலங்கரிக்கப்பட்ட தனித்தனி படிச்சட்டங்களில் நாயன்மார்களின் உற்சவர்கள் இரட்டை வீதியுலாவாக ஆதிகும்பேஸ்வரர், சாரங்கபாணி கோயில் வீதிகளில் உலாவந்தது. அப்போது கோயில் யானை மங்களம் முன்னே செல்ல, திருக்குடந்தை சிவனடியார் பக்தர்கள் தேவார திருமுறைகள் பாடி சென்றனர். தொடர்ந்து 63 நாயன்மார்களும், அதன்பின்னர் சுவாமி- அம்பாளும் மங்கள இசைவாத்தியத்தோடு வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பின்னர் நேற்று இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் யானை அம்பாரியில் வீதியுலா நடைபெற்றது. முக்கியவிழாவாக 28ம்தேதி சுவாமி, அம்பாள் தேரோட்டமும், மார்ச் 1ம் தேதி மகாமகம் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

  • 2018-02-22-14-39-44

    தீபத்தினை வழிபடுவதற்கு என்று சில வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தெய்வீகமான குத்து விளக்கின் அடிப்பாகத்தில், ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப் பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில், ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாகச் சொல்லப் படுகிறது.
    விளக்கில்லாத கோயிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்பெற வேண்டிய ஒன்று.
    குத்து விளக்கில், அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்றும் போற்றப் படுவதால், குத்து விளக்கு, கடவுளின் அம்சமாகவே கருதப்படுகிறது.
    விளக்கினை, உபயோகப்படுத்திய பின்னர், அதில் அழுக்கும், பிசுக்கும் ஏறி இருக்கும்.நான்கு நாட்களுக்குப் பிறகாவது சுத்தம் செய்ய வேண்டாமா? விளக்கினை தேய்த்து சுத்தம் செய்ய சில குறிப்பிட்ட நாட்களே உகந்தவை ஆகும்.
    திங்கள் நடு ராத்திரி முதல் புதன் நடுராத்திரி வரை, குபேர தன தாட்சாயணி மற்றும் குககுரு தன தாட்சாயணியும் குடி கொண்டிருப்பதால், இந்த நாட்களில் குத்து விளக்கினைத் தேய்ப்பதால், இந்த சக்திகள் விலகி விடும். வெள்ளி அன்று தேய்த்தால் குபேர சங்கநித யட்சணி விலகி விடும்.

    ஆகையால், ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில்தான் விளக்கினை சுத்தம் செய்ய வேண்டும்.

    ஞாயிறு அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், கண் சம்பந்தப் பட்ட நோய்கள் அகலும். திங்கள் அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், மன சஞ்சலங்கள் நீங்கும்.வியாழன் அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், குரு கடாட்சம் கிட்டும். சனி அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், வாகன விபத்துக்களில் இருந்து விடுபடலாம்.