பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழன் கி.பி.1010-ம் ஆண்டு கட்டினான். இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலுக்கு நுழையும் இடத்தில் கேரளாந்தகன் கோபுரம் உள்ளது. அதைத்தொடர்ந்து ராஜராஜன் கோபுரம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 214 அடி உயர விமான கோபுரம் உள்ளது. கோவிலில் உள்ள கேரளாந்தகன், ராஜராஜன், விமான கோபுரம் அனைத்தும் கடந்த 2008-ம் ஆண்டு புதுப்பிக்கும்பணி நடைபெற்றது. அப்போது கோவில் கோபுரத்தில் இருந்த பாசிகள், அழுக்குகள், பறவைகளின் எச்சம் போன்றவை சுத்தப்படுத்தப்பட்டு பின்னர் சுதை வேலைகள் நடைபெற்றன.
தஞ்சை பெரியகோவிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து கோவிலில் பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோவிலின் மேற்கு திருச்சுற்று மண்டபம் மற்றும் வடக்கு திருச்சுற்று மண்டபத்தில் சிவலிங்கங்கள் உள்ளன. இந்த சிவலிங்கத்தை யாரும் தொடாமல் இருப்பதற்காக மரக்கட்டைகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்புகளின் உயரம் 3 அடியாக இருந்ததால் பக்தர்கள் அதன் உள்ளே சென்று விடுகின்றனர். அதனால் தடுப்புகளை உயர்த்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்திய தொல்லியல் துறையினர் தற்போது 6 முதல் 6½ அடி உயரம் வரை மரக்கட்டைகளால் தடுப்புகளை அமைத்து வருகின்றன. மேலும் சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யும் வகையில் ஆங்காங்கே கதவுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. கோவிலின் தெற்கு திருச்சுற்று மண்டபம், வடக்கு திருச்சுற்று மண்டபம், மேற்கு திருச்சுற்று மண்டபத்தில் உள்ள கதவுகளும் சீரமைக்கப்படுகின்றன.
இதன் அடுத்த கட்டமாக 214 அடி உயர விமான கோபுரம் சுத்தம் செய்யப்படுகிறது. முதலில் விமான கோபுரமும் அதைத்தொடர்ந்து மற்ற கோபுரங்களும் சுத்தம் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட உள்ளது.
Blog
-
2018-03-10-13-09-36
-
2018-03-09-05-55-30
முருகக் கடவுளின் விழாக்களில் பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். முருக பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராண கதைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சிவன்-பார்வதி திருமணத்தின் போது, அவர்களது வைபோகத்தை காண தேவர்களும் முனிவர்களும் கயிலைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதன் காரணமாக வடக்கு திசை தாழ்ந்தும், தென் திசை உயர்ந்தும் காணப்பட்டது. பூமியை சரி செய்யும் பொருட்டு சிவபெருமான், அகத்திய முனிவரை தென் திசைக்கு அனுப்பி வைத்தார். அங்கு பொதிய மலையில் தங்கிய அகத்திய முனிவர் தாம் வழிபட சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களைக் கொண்டு வருமாறு தன் சீடனாகிய இடும்பாசுரனிடம் கட்டளையிட்டார்.
இடும்பாசுரன் மிகப்பெரிய பக்திமான். தன் குருவான அகத்தியர் இட்ட கட்டளையை நிறைவேற்ற தன் மனைவி இடும்பியுடன் கயிலை சென்று முருகப்பெருமானுக்கு உரிய கந்தமலையில் உள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு குன்றுகளையும் பெயர்த்தெடுத்து ஒரு பெரிய பிரமதண்டத்தின் இரு புறங்களிலும் காவடியாகக் கட்டினான். அதனை தனது தோளின் மீது வைத்துக் கொண்டு பொதிய மலைக்குத் திரும்பி வரும்வழியில் திருவாவினன்குடிக்கு மேலே ஆகாயத்தில் பறந்தபோது முருகப்பெருமான் அவ்விரு மலைகளையும் அங்கேயே இறங்குமாறு செய்து அவ்விடத்திலேயே நிலைபெறச்செய்துவிட்டார்.
தன்னை யறியாமல் தரையில் இறங்கிய இடும்பன் எவ்வளவு முயற்சித்தும் பிரமதண்டத்தின் ஓரங்களில் கட்டிய மலைகளை அசைக்க கூட முடியாததை எண்ணி திகைத்துப்போனார். அப்போது சிவகிரி குன்றின் மீது கோவணத்துடன் அழகிய சிறுவன் வடிவில் நின்று நகைத்துக் கொண்டிருந்ததை இடும்பன் கண்டுள்ளார்.
அச்சிறுவனால்தான் மலையை அசைக்கக்கூட முடியவில்லை எனக்கருதிய இடும்பாசுரன் அச்சிறுவனை மலையிலிருந்து இறங்கும்படி அதட்டினான். சிறுவனோ மலை தனக்கே சொந்தம் என வாதிட்டான். சினம் கொண்ட இடும்பாசுரன் சிறுவனை தாக்க முயன்றான். தாக்க வந்த இடும்பன் வேரற்ற மரம் போல் சாய்ந்துவிட அவன் மனைவி இடும்பி கணவனை காப்பாற்ற சிறுவனை வேண்டினாள்.
தன் தவ வலிமையால் நிகழ்ந்தவற்றை அறிந்த அகத்தியர் முருகப்பெருமானை வணங்கினார். அக்கணமே இடும்பாசுரனும் உயிர்பெற்று எழுந்து முருகப்பெருமானின் திருவிளையாடல் அறிந்து மூவரும் முருகப்பெருமானை வணங்கி பக்தி யோடு துதித்தனர். குரு பக்தியை மெச்சிய முருகப் பெருமான் இடும்பனை பழனி தலத்தின் காவல் தெய்வமாக இருக்கும்படி பேரருள் செய்தார்.
இரு குன்றினையும் காவடிபோல் தூக்கி வந்த இடும்பாசுரன் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றதுபோல் இன்றும் பக்தர்கள் காவடி தூக்கிச்சென்று முருகப்பெருமானின் பேரருளைப் பெறுகின்றனர். இளவரசனாக முருகன் இடும்பனுக்குக் காட்சியளித்ததால் இன்றும் பழனி முருகனுக்கு செய்யப்படும் ராஜ அலங்காரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. -
2018-03-09-05-35-08
சென்னை பூந்தமல்லிக்கு அருகே கரையான்சாவடியை அடுத்துள்ளது மாங்காடு. புராணங்களில் சூதவனம் என வழங்கப்பட்ட தலம்தான் இப்போதைய மாங்காடு. இக்கோயிலின் தல விருட்சம் மாமரம். இது 3000 வருடங்கள் பழமையானதாம்.
விளையாட்டாக ஈசனின் கண்களை மூடியதால் ஈசனால் சாபம் பெற்ற உமையன்னை தவம் செய்த இடம் இது. தவத்தின் முடிவில் ஈசனின் ஆணையால் காமாட்சி காஞ்சிபுரம் சென்றுவிட அன்னை வளர்த்த அக்னியால் இப்பகுதியே தகிக்க, அதைத் தணிக்க, ஆதிசங்கரர் இங்கே அர்த்தமேருவை பிரதிஷ்டை செய்தார். அஷ்டகந்தங்களால் ஆன அர்த்தமேருவிற்கு அர்ச்சனையும் காமாட்சிக்கு அபிஷேகங்களும் நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பு. அர்த்த மேருவிற்கு சந்தனம், புனுகு சாத்தி குங்குமம் இடப்படுகிறது. விஜயதசமியன்று எட்டுவித மூலிகைகளால் ஆன அஷ்டகந்தமும், அதன்மேல் தங்கக் கவசமும் சாத்தப்படுகின்றன. இங்குள்ள அர்த்தமேரு பிரமாண்டமானது. கூர்ம உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் படிக்கட்டுகள் கட்டி 16 இதழ் தாமரையுடன் விளங்குகிறது.
தவம் செய்யும் நிலையில் இங்கிருந்து காஞ்சி சென்ற தபஸ்காமாட்சியை இன்றும் காஞ்சி காமாட்சியின் கருவறையில் தரிசிக்கலாம். கருவறையில் பேரழகுப் பெட்டகமாய் காமாட்சி தேவி கையில் கிளி ஏந்தி, தலையில் சந்திர கலையோடு தரிசனமளிக்கிறாள். அர்த்த மண்டபத்தில் பஞ்சாக்னியில் நின்று ஒற்றைக்காலில் தவம் புரியும் நிலையில் காமாட்சியை தரிசிக்கலாம். ஆறு வாரங்கள் இந்த அன்னையைப் பாடி வழிபட, ஒரு வாரத்துக்கு ஒன்று வீதம் ஆறு பாடல்கள் உண்டு. வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் ஒரு எலுமிச்சம்பழத்துடன் வந்து காமாட்சியை தரிசித்து அடுத்து ஆறு வாரங்களில் அதே நாளில் தொடர்ந்து வழிபட, நினைத்தது நிறைவேறுகிறது. முதல் வாரம் ஆலயத்திலிருந்து பெற்ற எலுமிச்சம் கனியை, இரண்டாவது வாரம் அன்னையிடம் சமர்ப்பித்து புது எலுமிச்சம் பழத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்க வேண்டும் என்பது இங்கே வழிபாட்டு மரபு.
திருமணமாகாத காளையரும், கன்னியரும் இத்தல மரத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டி நேர்ந்து கொண்டால் அவர்களுக்கு உடனே திருமண வரம் கிட்டுகிறது.
கருவறை காமாட்சி, ஸ்ரீசக்ரம், தபஸ் காமாட்சி தவிர கருவறையில் உள்ள காமாட்சி விளக்கும் இத்தலத்தில் காமாட்சியாகவே வழிபடப்படுவதால், இத்தலத்தில் நான்கு காமாட்சிகளை தரிசிக்கும் நிறைவு உண்டு. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தேவியின் முன் உள்ள அர்த்தமேருவிற்கு புடவை சார்த்தியும், எலுமிச்சம்பழ மாலை அணிவித்தும் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர். காமாட்சியின் திருமணத்திற்கு சீராக, கணையாழியைக் கொண்டு வந்த வைகுண்ட பெருமாளும் இந்த ஆலயத்தின் அருகில் கோயில் கொண்டிருக்கிறார். வாமன மூர்த்தியால் கண்ணை இழந்த சுக்கிரனுக்கு அருள்புரிந்த வெள்ளீஸ்வரரும் இத்தலத்தின் அருகே அருள்கிறார். காமாட்சி ஆலயப் பணி எதற்காவது குறிப்பிட்ட தொகை அல்லது பொருள் தேவையானால், அது அப்படியே அந்த வார உண்டியலில் வந்து சேர்ந்துவிடுவது காமாட்சியின் அற்புதம்தான். -
24
முருகக் கடவுளின் விழாக்களில் பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். பழநி தண்டாயுதபாணி சாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் 24ம் தேதி காலை 11 – 12 மணிக்குள் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 29ம் தேதி நடக்கிறது. அன்றிரவு 7 – 8.30 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், முத்துக்குமாரசாமி மற்றும் வள்ளி-தெய்வானை மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். பங்குனி உத்திர தேரோட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது.
-
2018-03-07-13-02-15
ஞாயிற்றுக்கிழமை : சூரிய பகவானுக்கு உரிய நாள். இந்த நாளில், காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்திய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபடலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் பலனைத் தரும்! திங்கட்கிழமை : சிவபெருமானுக்கு உரிய அற்புதமான நாள். இதை சோமவார விரதம் என்பார்கள். கார்த்திகை மாத சோமவாரத்தில் விரதம் மேற்கொள்வது நற்பலன்களை வாரி வழங்கும்! செவ்வாயக்கிழமை : அங்காரக விரதம் மேற்கொள்வதற்கான அருமையான நாள். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இந்த நாளில் விரதம் இருப்பது, கூடுதல் பலன்களை வழங்கும்! மேலும், சிவாலயங்களில் உள்ள முருகன் சந்நிதிக்குச் சென்றோ அல்லது முருகப்பெருமான் தனியே கோயில் கொண்டிருக்கும் தலத்துக்கோ சென்று கந்தக் கடவுளை வழிபடலாம்! புதன்கிழமை : இந்த நாளில் விரதம் அனுஷ்டித்தால் கல்வி, புகழ், ஞானம், தனம் பெருகும். இந்த நாளில், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஸ்ரீஹயக்ரீவ வழிபாடு சிறந்தது. ஸ்ரீநரசிம்மரை பானகப் பிரசாதம் வழங்கி தரிசிக்கலாம்! வியாழக்கிழமை : குரு பகவானுக்கு உரிய நாள். இந்த நாளில் விரதமிருந்தால் குருவின் அருளால் திருமணம் கைகூடும். நல்ல குழந்தைகள் பிறக்கும். சகல காரியங்களும் கைகூடும். காலை அல்லது மாலை வேளையில், நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்கலாம்! வெள்ளிக்கிழமை : சுக்கிர வார விரதம் மேற்கொள்வதற்கான அருமையான நாள். அம்பாளை பூஜை செய்து பாயசம், வடை நைவேத்யம் செய்து வழிபடலாம். ஸ்ரீலலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்யலாம்! காலையும் மாலையும் சிவாலயத்தில் உள்ள அம்பாளையும் பெருமாள் கோயிலில் உள்ள தாயாரையும் வணங்கி வளம் பெறலாம்! சனிக்கிழமை : சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோயிலுக்குச் சென்று, ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது, மிகுந்த பலனைத் தரும். முடிந்தால், கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுங்கள். மேலும், சனிக்கிழமை திருமாலுக்கு உரிய அருமையான நாள். திருப்பதி வேங்கடாசலபதிக்கு உகந்த நாள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களும் பெறலாம்!
-
2018-03-07-12-22-34
வெள்ளிக்கிழமை, கார்த்திகை, வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டி ஆகியவை முருகனுக்கு உரிய முக்கிய விரதங்கள் ஆகும்.
கார்த்திகை விரதத்தின் சிறப்பைச் சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருளினார். கார்த்திகைப் பெண்கள் குமரக்கடவுளை வளர்த்த காரணத்தால், அவர்களுடைய நாளான கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து, குமரப்பெருமானை வழிபடுவோர் கல்வி, செல்வம், ஆயுள், தர்மபத்தினி, நன்மக்கள், நிலபுலம் யாவும் பெற்று வாழ்வார்கள் என்று சிவபெருமான் அருள்புரிந்தார்.
கார்த்திகை மாதம் பரணி நாளில் விரதம் தொடங்கி, வழிபாடு செய்து, அடுத்த நாள் கார்த்திகையில் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்து, அடுத்த நாள் ரோகிணி காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்து அடியார்களோடு கூடி உண்ண வேண்டும். பின்னர் மாதந்தோறும் கார்த்திகையில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
நாரதர், சப்தரிஷிகளிலும் மேன்மையுற விரும்பி, அதற்கான விரதத்தை அருளுமாறு விநாயக்கடவுளை வேண்டிக் கொண்டார். அவர் அருளியவாறு, பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து மேன்மை அடைந்தார்.
வெள்ளிக்கிழமை விரதம்:
வெள்ளிக்கிழமை விரதம், ஐப்பசி மாதம் முதல் சுக்கிர வாரத்தில் தொடங்கி, முறைப்படி விரதம் அனுஷ்டித்து, பின்னர் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை விரதத்தின் சிறப்பை வசிஷ்ட முனிவர், முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு எடுத்துக் கூறினார். அவர் அனுஷ்டித்து மேன்மையுற்றார்.
பகீரதன் என்னும் மன்னன் வெள்ளிக்கிழமை விரதம் மேற்கொண்டு, கோரன் என்னும் அரக்கனை வென்று இழந்த தன்னுடைய அரசு உரிமையை மீண்டும் பெற்றுப் புகழ் பெற்றான்.
கந்த சஷ்டி விரதம் :
கந்தசஷ்டி என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கில் பட்சத்தில் வரும். பிரதமை நாளில் தொடங்கி, சஷ்டி வரை ஆறு நாட்கள் முறைப்படி விரதம் இருக்க வேண்டும். அந்த நாட்களில் காலையில் நீராடி, வழிபாடு வீட்டிலும் கோயிலிலும் செய்து, முருகன் சரிதத்தைக் கேட்டு அல்லது படித்து, முருகன் நாமத்தை ஜெபித்து, ஏழாம் நாள் காலையில் வழக்கப்படி வழிபாடு செய்து, விரதத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி விரதம் இருக்கலாம். சஷ்டி விரதம் இருப்பவர்களின் வினைகள் அகலும், எண்ணிய காரியங்கள் நிறைவேறி, புண்ணியமும் கிடைக்கும்.
கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்த முசுகுந்தச் சக்கரவர்த்தி எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்புடையவரானார்.
குமார சஷ்டி விரதம் :
ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும். கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் ‘சுப்பிரமணிய சஷ்டி’ என்றும், ‘அனந்த சுப்பிரமணிய பூஜை’ என்றும் கூறுவர்.
அனந்த சுப்பிரமணிய பூஜை:
‘சுப்புராயன்’ என்ற பெயர் முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம். திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் அனந்த (நாக) சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும். முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம். அல்லது, இணைந்த இரு பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்த முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும் விலகும். இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும் நம்புகின்றனர். -
2018-03-07-11-45-40
திருவள்ளூர் அருகே நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திர தினத்தையொட்டி, உற்சவருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பழைமைவாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில், பெருமாள் பிறந்த சுவாதி நட்சத்திர தினத்தன்று மாதந்தோறும் உற்சவருக்கு திருமஞ்சன நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்துக்கான திருமஞ்சன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் இரவு முதலே திருக்கோயில் வளாகத்தில் குவிந்தனர். பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு கோ பூஜை, யாக பூஜையுடன் திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் நெய் விளக்கேற்றி, திருக்கோயில் வளாகத்தை சுற்றி வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதையடுத்து, உற்சவர் நரசிம்ம பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வந்தார்.
-
2018-03-05-04-35-28
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், மாசி கொடை விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு, கேரள பெண்கள், விரதமிருந்து இருமுடி கட்டு ஏந்தி வருவர்.கடலில் குளித்து, அம்மனை வழிபடுவ தால், இது பெண்களின் சபரிமலை என, அழைக்கப்படுகிறது.இங்கு, மாசி கொடை விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மேல்சாந்தி, சட்டநாதன் குருக்கள் கொடியேற்றினார்.தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது.௯ம் தேதி இரவு, பெரிய படுக்கை பூஜையும், 12ம் தேதி இரவு, பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடக்கிறது. 12ம் தேதி நள்ளிரவு, ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
-
13
யுகாதி பண்டிகையை யொட்டி, வரும் 13ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பதால் அன்று 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகிய விசேஷங்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வரும் 18ம் தேதி யுகாதி பண்டிகையான தெலுங்கு வருட பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்காக 13ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு கருவறையில் உள்ள மூலவருக்கு பட்டு வஸ்திரத்தால் மூடப்பட்டு, கருவறை முதல் கோயில் அனைத்து சன்னதிகளும், மண்டபங்களும் சுத்தம் செய்து பச்சை கற்பூரம், சிலிகட்டை, மஞ்சள், குங்குமம் மற்றும் திரவியம் கலந்து மூலிகை கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட உள்ளது.இதையொட்டி அன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும். இப்பணிகள் முடிந்ததும் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
2018-03-05-04-15-47
திருப்பதி, தமிழகத்தில் கன்னியாகுமரி, அரியானா மாநிலத்தில் குருஷேத்ரா ஆகிய இடங்களில் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் திருப்பதி வெங்டேஸ்வரா கோயில் திறக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கன்னியாகுமரியிலும், அரியானா மாநிலம் குருஷேத்ராவிலும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் வரும் கோடை காலத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். கன்னியாகுமரியில் ரூ.22.60 கோடியில் கட்டப்பட்டுவரும் கோயில், வரும் மே மாதம் திறக்கப்படும். அரியானாவில் ரூ.34.60 கோடியில் கட்டப்பட்டு வரும் வெங்கடேஸ்வரா கோயில் பணிகள் முடிந்து, ஏப்ரல் மாதம் திறக்க முடிவு செய்துள்ளோம். மேலும், சென்னையில் ரூ.7 கோடி செலவில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலும் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மேலும், ஒடிசா மாநிலம், புவனேஷ்வர் நகரிலும் ரூ. 7 கோடி செலவில் வெங்கடேஷ்வரா கோயில் கட்டும் பணியும் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.