திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் பங்குனிப் பெருவிழா குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மண்டல பிரமோற்சவம் கடந்த மாதம் 25ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக பங்குனித் தேர் திருவிழா கடந்த 14ம் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின் சுவாமியும், அம்பாளும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தையொட்டி ஜம்புகேஸ்வரர் சுவாமி பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்பாள் மற்றொரு தேரிலும் அதிகாலையில் எழுந்தருளினர். முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேரோட்டம் நடந்தது. தேர்கள் தேரோடும் வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தது. அதன் பின்னர் காலை 5.35 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேர் மேல உள் வீதி, வடக்கு உள் வீதி, கீழ உள் வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றி வீதியுலா வந்தது. காலை 7.15 மணிக்கு சுவாமி தேர் மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து 7.15 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்பாள் வீற்றிருக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து காட்சி அளித்தார். அம்மன் தேர் சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மறுபடியும் சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து வர காலை 11 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. சுவாமி தேர் நிலைக்கு வந்த பின்னர் அம்மன் தேர் காலை 11.30 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தின் போது யானை அகிலா தேருக்கு முன்னால் செல்ல, மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் சுவாமியும், அம்பாளும் தேரில் வீதி உலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி பெரிய தேரில் வலம் வருவது திருவானைக்காவலில் மட்டும்தான். திருவானைக்காவல் தேரோட்டத்தின்போது 2 ஹெலிகேமராக்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதுநிலை கோயில் உற்சவங்களை வீடியோ எடுத்து அரசுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதனால் கோயில் உதவி ஆணையர் ஜெயபிரியா உத்தரவின்பேரில் தேரோட்டத்தை வீடியோ எடுக்க ஹெலிகேமராக்களை பறக்க விட்டதும் தெரியவந்தது.
Blog
-
2018-03-20-12-26-48
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா மார்ச் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனி பெருவிழா மிக சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா மார்ச் 21 ஆம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக வருகிற 30-ந்தேதி பங்குனி உத்திரமும், 31-ந்தேதி சூரசம்ஹார லீலை நடக்கிறது அன்று ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி முருகப் பெருமானுக்கு தங்கிரீடம் சூட்டி, நவரத்தினங்களான செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக 2-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானையின் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கிறது.
-
2018-03-20-12-11-14
சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மார்ச் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக் கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறும். எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில், பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, கடந்த 14-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டு தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை-வழிபாடுகள் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற பங்குனி மாத பூஜை நேற்றுடன் நிறைவு பெற்றது. இரவு அத்தாழ பூஜைக்குப் பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 20 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. மார்ச் 21 ஆம் தேதி முதல் திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கோவில் முற்றத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் திருவிழா கொடியினை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைப்பார். திருவிழா நாட்களில் தினமும் மதியம் உத்சவ பலி சிறப்பு பூஜை நடைபெறும். விழாவையொட்டி, சன்னிதானம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு 29-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 30-ந் தேதி பம்பை ஆற்றில் பகல் 11 மணிக்கு ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். ஆராட்டு நிறைவு பெற்று மீண்டும் மேளதாளம் முழங்க புத்தாடை உடுத்தி, யானை மீது வைத்து சாமி விக்ரகம் சன்னிதானத்திற்கு பவனியாக கொண்டு வரப்படும் ஐயப்ப சாமி விக்ரகத்திற்கு சன்னிதானத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் விழா நிறைவு பெறுகிறது. -
2018-03-18-07-42-07
திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனிதசை, ராகுதசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது சிங்க பெருமாள் கோயில். இந்த கோயில் நரசிம்மரின் பெயரால் சென்னை அருகே செங்கல்பட்டு செல்லும் வழியில் “சிங்க பெருமாள் கோவில்” அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு குடவரைக் கோவிலாகும் பெருமாளின் திருமேனியே மலையாக விளங்குவதால் நாம் மலையைச்சுற்றி வலம் வர வேண்டும். பெருமாள் சங்கு சக்கரம் தாங்கி நான்கு கரங்களுடன் வலது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் நெற்றிக்கண்ணுடன் பிரம்மாண்டமாக சேவை சாதிக்கின்றார். ஆரத்தி காட்டும் போது திருமண்ணை விலக்கி, நெற்றிக்கண்ணை சேவை செய்து வைக்கும் போது அந்த காட்சி மெய் சிலிர்க்க வைப்பதாக இருக்கும். இத்தலம் பாடலாத்ரி என்றும் அழைக்கப்படுகின்றது. பாடலம் என்றால் சிவப்பு அத்ரி என்றால் மலை எனவே இந்தக் குன்று பாடலாத்ரி என்றும் இம்மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் பாடலாத்ரி நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகின்றார். ஜாபாலி என்னும் முனிவர் பெருமாளை நரசிம்ம மூர்த்தியாக சேவிக்க வேண்டும் என்று இம்மலையில் தவம் செய்தார். அவரது தவத்திற்கிணங்கி பெருமாள் பிரதோஷ வேளையில் உக்ர நரசிம்மராக சிவந்த கண்களோடு பாடலாத்ரி மீது தரிசனம் தந்தார். முனிவர் வேண்ட பின் அதே கோலத்தில் நாம் எல்லோரும் வழிபடுவதற்காக இத்தலத்தில் கோவில் கொண்டார். பிரணவகோடி விமானத்தின் கீழ் நரசிம்மர் சங்கு சக்கரம் ஏந்தி வலக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடக்கரத்தை தொடை மீது வைத்தும் பிரம்மாண்ட திருவுருவில் அருள்கிறார். வலது காலை தொங்கவிட்டு இடக்காலை மடித்த நிலையில் நெற்றிக்கண் ஒளிரும் அபூர்வ திருமேனி கொண்டவர் இவர். இவருக்கு பிரதோஷ தினத்தன்று திருமஞ்சனம் நடைபெறுகின்றது. ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், ஆழ்வார்கள், இராமானுஜர் ஆகியோர்களுக்கு இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கிரிவலம் வரும் போது அரிய வகை அழிஞ்சல் மரத்தை பார்க்க முடியும். அதையும் தவறாமல் வழிபட வேண்டும். அம்மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு நெய் விளக்கேற்றி வழிபட திருமண வரம், மழலை வரம் இருக்கிறது. பலர் இம்மரத்தில் தொட்டில் கட்டியிருப்பதைக் காணலாம். பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரது பாதங்களிலும், ரத சப்தமி தினத்தன்று நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படருகிறது. கடன் தொல்லை, வழக்குகளிலிருந்து விடுதலை, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக, இந்த நரசிம்மர் அருள்கிறார். திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனிதசை, ராகுதசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது. நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜ ஜயந்தி, சித்ரா பவுர்ணமி, வைகாசி சுவாதி நட்சத்திர தினத்திற்கு முன்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஆடிப்பூரம், ஆவணி பவித்ரோற்சவம், கிருஷ்ணஜயந்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாளமாமுனிகள் உற்சவம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தை மாதசங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மார்கழியில் 5 நாட்கள் தெப்போற்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் என ஆண்டு முழுவதும் விழாக்கோலம் காண்கின்றது இத்திருத்தலம் . இவரிடம் தன் கோரிக்கை நிறைவேறினால் பானகம் கரைத்து ஆலய வலம் வரும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக்கொண்டால், கட்டாயம் அந்த கோரிக்கை நிறைவேறிவிடும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
-
2018-03-18-07-17-11
காற்று மாசை தடுக்கும் வகையில் திருப்பதி-திருமலை இடையே பேட்டரி பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் வாகனங்களால் காற்றில் மாசு ஏற்படுவதைத் தடுக்க, முதற்கட்டமாக 1,500 பேட்டரி பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கோல்ட் ஸ்டோன் எலக்ட்ரிக் பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரூ.3 கோடி செலவில் ஒரு பஸ்ஸை வாங்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக 2 பஸ்கள் தயாராகி உள்ளது. இதில் ஒரு பஸ் திருப்பதியில் நேற்று காலையில் அறிமுகம் செய்யப்பட்டது. திருப்பதி பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த பஸ் திருமலைக்கு சென்றது. புகை, சத்தம் இல்லாத, காற்றில் மாசு கலக்காத இந்த பஸ்ஸில் 32 பேர் செல்லலாம். கண்காணிப்பு கேமரா, சீட் பெல்ட், டிவி, ஆகிய வசதிகள் இதில் உள்ளன. இதில் உள்ள சென்ஸார் மூலம் விபத்து ஏற்படுவதை முன் கூட்டியே அறிந்து அதைத் தவிர்க்க முடியும். இதில் சாதாரண பஸ்களைப் போல ‘கியர்’கள் இல்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால், 275 முதல் 300 கி.மீ வரை இதை இயக்கலாம். இதேபோல மேலும் 40 பஸ்கள் வரும் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து திருப்பதி-திருமலை இடையே இயக்கப்படும் என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
-
2018-03-17-11-52-57
அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை. செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசரம், குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை. அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்குக் கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.
துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துவது நல்லது. ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது. வில்வம் துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
சம்பகமொட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை. துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.
கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதுபோலவே தாழம்பூவை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். பகல் காலங்களில் விலக்க வேண்டும். குருக்கத்தி, ஆனந்ததிகா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை.
விலக்கப்பட்ட பூக்களை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம். -
2018-03-17-11-37-02
கூச்மாண்டன்… அரக்கர் குலத்தில் பிறந்த அரும் தவ புதல்வன். அரக்கர்களுக்குள்ள குலவழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான்.
அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி, வைகுண்டனை சரணடைவது தான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள்.
புண்ணியதேவனே….. தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது. தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார்கள்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே வெல் லும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் நாராயணன்.
உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார். வந்திருப்பது நாராயணன் என்பதை மறந்தான். தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச்மாண்டன். சண்டைக்கும் தயாரானான்.
அதுசரி…. அழிவுகாலம் வந்துவிட்டால், அறிவு தான் வேலை செய்யாதே.
யுத்தத்தின் இறுதியில் வேரறுந்த மரம் போல் விழுந்தான்.
கூச்மாண்டா…. நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய். இது உன்பாவத்தின் சம்பளம்.
வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே… இனி நான் பிழைக்க போவதில்லை.
எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வர மாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியிட்டான்.
சரி கேள்… என்ன வரம் வேண்டும்?
நான் மறைந்தாலும்… என் புகழ் அழியாத வரம் வேண்டும்.
இதுவரை… உன் வாழ்நாளில் எந்த நன்மையை யும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது?
பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கை யால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.
இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீங்கள் தான் அருள வேண்டும்.
சரி…. நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும். கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம், ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ…… அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.
அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.
அதனால், இன்றும்கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.
கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைக்கும் நடைமுறையில் இதனா ல் வந்தது. அந்த பூசணிக்காயை உடைத்தால் சகலதோஷமும் மறைந்து விடும். -
114
குருபெயர்ச்சியை முன்னிட்டு, 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கர விழா, விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதம் 11-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் மகாபுஷ்கர விழா நடக்கிறது. இந்த விழாவையொட்டி பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணிக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் முக்கிய பிரமுகர்கள் புனித நீராடுகிறார்கள். மேலும், துறவியர்கள் மாநாடு, ஊர்வலம், சதுர்வேத பாராயணம், திருவாசகம் முற்றோதுதல், சைவ மாநாடு, நாலாயிர திவ்ய பிரபந்த பாராயண வைணவ மாநாடு, லலிதா சகஸ்ரம பாராயணம், விஷ்ணு சகஸ்ரம பாராயணம் நடக்கிறது. 12 நாட்களும் ஆற்றில் உள்ள அனைத்து படித்துறைகளிலும் மகா ஆர்த்தி நடைபெறுகிறது.
-
2018-03-16-06-31-31
அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்டது, கொண்டுவரப்பட்டது, தானாக விழுந்தது, காய்ந்தது, மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டது, அசுத்தமான இடங்களில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்டது போன்ற புஷ்பங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது. பறித்த பிறகு மலர்ந்த பூக்கள், வாடிப்போன பூக்கள் பழைய பூக்கள், ஆமணக்கு இலையில் கட்டிவைத்த பூக்கள், உடல் உறுப்புகளில் பட்ட பூக்கள், கட்டிய ஆடையிலும், கையிலும் வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடிக்கற்றை பட்ட பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள், ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள். தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர். இது மிகவும் தவறானது. பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும்.
-
2018-03-16-06-26-39
பூக்களுள் சிறந்தது தாமரைப்பூவே. இதனை பூவுக்குத் தாமரையே, பொன்னுக்கு சாம்புநதம் என்கிறது ஒரு பழம்பாடல். வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான். தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ. இதைப்போலவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்கப்பூ. பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாபங்கள் அகலும். முருகப்பெருமானுக்கு பிடித்தமான மலர் கடம்பமலர். கடம்பமலர், காண்டள் பூக்கள், குறிஞ்சிப்பூ, செவ்வலரி ஆகிய பூக்கள் வேலனுக்கு மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.