Blog

  • 2018-03-26-05-10-42

    பூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஸ்ரீரங்கநாதர், சீனிவாசர், வரதராஜ பெருமாள் என மூன்று பெருமாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இந்த கோவில் வளாகத்தில் உள்ளது. இந்த நிலையில் ஆண்டுதோறும் கருட சேவை நடைபெறும் இந்த ஆண்டும் காலை வழக்கம் போல் சிறப்பு பூஜைகள், அபிசேகங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் இருந்து கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது. மேலும் 3பெருமாளும் கோவிலின் முக்கிய நான்கு வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதியில் கோவில் வளாகத்தை சென்றடைந்து. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ ரங்க நாதர், சீனிவாச பெருமாள், வரதராஜ பெருமாள் என 3பெருமாளும் இந்த கோவிலில் அமைந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

  • 27

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைக்கான பந்தக்கால் நடும் விழா மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலும் ஒன்று. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலமும் ஆகும். பாண்டியர் கால சிவாலயங்களில் பழமையானது. கருவூரார் சித்தர், அகஸ்தியர் உள்ளிட்ட பல சித்தர்கள் வழிபட்ட ஸ்தலம் ஆகும். இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2004-ம் ஆண்டு நடந்தது. இதைத்தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி கோவில் கோபுரம், விமானம், கொடிமரம், சுற்றுச்சன்னதிகள் பாலாலயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் தளம் அமைத்தல், கோபுரம், விமானங்கள் புதுப்பித்தல், வண்ணம் தீட்டுதல், வெள்ளையடித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைகள் அமைப்பதற்கான கொட்டகை அமைக்கும் பணிக்கான கால்நடும் விழா மற்றும் பந்தக்கால் நடும் விழா ஆகியவை நாளை மறுநாள் காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடக்கிறது.

  • 2018-03-24-13-10-33

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் வரும் 30-ம் நடைபெற உள்ளது. பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெறும் அந்தவகையில் இந்தாண்டுக்கான பங்குனி உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதன் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வரும் 30-ம் தேதி நிகழ உள்ளது. அன்று மாலை கொடிமரம் முன்புறம் சுவாமி எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு கல்யாண மண்டபத்தில் உற்சவம் நடைபெறும். தொடர்ந்து நள்ளிரவு 12.00 மணியளவில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதியுலா நடைபெறும். ஏப்ரல் 3-ல் ஊஞ்சல் உற்சவமும், 4-ம் தேதி பாலிகைவிடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

  • 2018-03-23-05-23-36

    நீலோற்பலமலர் எல்லா பூக்களைவிடவும் சிறந்தது என்பதை எல்லா ஆகமங்களும் தெரிவிக்கின்றன. சில ஆகமத்தில் அலரி சிறந்தது என்றும், வேறு சில ஆகமங்கள் கொக்குமந்தாரை சிறந்தது என்றும், இவ்வாறே மலைப்பூ, தாமரைப்பூ என்ற பலவிதமான பூக்களை ஒவ்வொரு ஆகமமும் சிறந்ததாகக் கூறுகிறது.

    வசந்த ருதுவாகிய சித்திரை வைகாசி மாதங்களில் செங்கழுநீர், கடம்பமலர், புன்னாகமம், தருப்பை, கண்டங்கத்திரி என்றும் இவ்வகையான பூக்களால் சிவபெருமானை பூஜித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும்.

    பாடலி புஷ்பம், நூறு இதழ்களை உடைய தாமரைப்பூ மல்லிகைப் பூக்கள் ஆகியவற்றால் கிரீஷ்ம ருதுவாகிய ஆனி, மற்றும் ஆடி மாதங்களில் சிவபெருமானை அருச்சிக்க அக்கினிஷ்டோமம் செய்த பலன் ஏற்படும்.

    வருஷ ருதுவாகிய ஆவணி, புரட்டாசி மாதங்களில் தாமரை, மல்லிகை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்தால் அசுவமேத யாகம் செய்த பலன்களைப் பெறலாம்.

    சரத் ருதுவாகிய ஐப்பசி, கார்த்திகை, மாதங்களில் ஊமத்தை, செங்கழுநீர், சுஜாதம், நீலோற்பலம் ஆகியவற்றின் புஷ்பங்களினால் சிவபெருமானை பூஜித்தால் சந்திர யாகம் செய்த பலன் கிடைக்கும்.

    அலரி, சுஜாதம், நீலோற்பலம் ஆகியவற்றின் பூக்களினால் ஹேமந்தருதுவான மார்கழி, மற்றும் தை மாதங்களில் பூஜை செய்தால் நூறு யாகங்கள் செய்த பலன்களை அடையலாம்.
    சிசிர ருதுவாகிய மாசி, பங்குனி மாதங்களில் சிவபெருமானை கர்ணிகாரப் புஷ்பத்தினால் அர்ச்சனை செய்தால் எல்லா யாகங்களையும் ஒரு சேரச் செய்தால் எத்தனை பலன் கிடைக்குமோ அத்தனை பலன்களையும் தடையில்லாமல் பெறலாம் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது.

  • 2018-03-23-05-08-46

    சிவ தலங்களில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்தாண்டு பங்குனி பெருவிழா மார்ச் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று கோலவிழியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இரவு 9.30 மணியளவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளினார். தொடர்ந்து, நேற்று காலை 5.15 மணிக்கு பங்குனி பெருவிழா கொடியேற்றம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர, கெட்டிமேள இசை ஒலிக்க பலத்த ஆரவாரத்துடன் காலை 5.15 மணியளவில் பங்குனி பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து புன்னைமரம், கற்பக மரம், வேங்கை மர வாகனங்கள் சுவாமி வீதியுலா வந்தார். பங்குனி பெருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாய்ப்பாட்டு, வயலின், நாதஸ்வரம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் சூரிய வட்டம், இரவு 9 மணியளவில் சந்திர வட்டம் நடக்கிறது. பின்னர் கிளி, அன்ன வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருகிறார்.

  • 2018-03-22-13-46-52

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை அளிக்கப்பட்டது. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தூக்க திருவிழா சிறப்பு வாய்ந்தது. திருமணம் முடிந்து குழந்தை பேறு கிடைக்கப் பெறாத தம்பதியினர், குழந்தை பேறு வேண்டி பத்ரகாளி அம்மனை வேண்டிக் கொள்வார்கள். அந்த வேண்டுதலின் பலனாக குழந்தை பேறு பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளை பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறும் தூக்க திருவிழாவுக்கு அழைத்து வந்து தூக்க நேர்ச்சை செலுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான தூக்க திருவிழாவையொட்டி, அம்மன் திருமுடிகள் வட்டவிளையில் அமைந்திருக்கும் பிரதான கோவிலில் இருந்து திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு கடந்த 12-ந் தேதி மேள தாளம் முழங்க கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து தூக்க திருவிழா தொடங்கியது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் வண்டியோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10-ம் திருவிழாவான நேற்று சிறப்பு வாய்ந்த தூக்க திருவிழா நடந்தது. இதையொட்டி முட்டுகுத்தி நமஸ்காரத்தை தொடர்ந்து, கோவிலில் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் அம்மன் எழுந்தருளினார். அதைதொடர்ந்து தூக்கக்காரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் மேளதாளம் முழங்க நடைபெற்றது. கீழ்விளாகம் தறவாட்டில் இருந்து கண்ணநாகம் வழியாக கோவில் வளாகத்தை ஊர்வலம் வந்தடைந்தது. ஆண்டுதோறும் தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது.

  • 2018-03-22-13-35-28

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜை-வழிபாடுகள் நடைபெறும். இந்த நிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை மார்ச் 14-ந் தேதி திறக்கப்பட்டது. 15-ந் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 5 நாள் நடைபெற்ற பங்குனி மாத பூஜை கடந்த 19-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவை முன்னிட்டு மீண்டும் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் சன்னிதான முற்றத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் திருவிழா கொடியினை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடியேற்ற நிகழ்ச்சியின் போது சன்னிதானத்தில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், “சாமியே சரணம் ஐயப்பா“ என சரண கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். சிகர நிகழ்ச்சியாக 30-ந் தேதி பம்பை ஆற்றில் பகல் 11 மணிக்கு சுவாமி ஐயப்பன் விக்ரகத்துக்கு ஆறாட்டு வைபவம் நடக்க உள்ளது. ஆறாட்டு நிறைவு பெற்றதும் மீண்டும் மேளதாளம் முழங்க சாமி விக்ரகம் சன்னிதானத்துக்கு பவனியாக கொண்டு வரப்படும். பின்னர் கொடி இறக்கப்பட்டு 10 நாள் விழா நிறைவு பெறும்.

  • 2018-03-22-12-54-32

    பூஜை அறையில் நாம் செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.
    வீட்டில் பூஜை செய்யும் போது சிலருக்குப் பல குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்? எந்த பழம் எந்த தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எந்தப் பூ கொண்டு ஸ்வாமிக்கு அர்ச்சனைச் செய்வது எனப் பல சந்தேகங்கள் ஏற்படும்.
    வெற்றிலைக்கு நுணியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும்.
    அவல்பொறி, கடலை மற்றும் கல்கண்டு நிவேதனமாகப் படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்து தான் கடவுளுக்குப் படைக்க வேண்டும். மேலும், நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இளந்தை, விளாம்பழம், புளியம்பழம், மாம்பழம் ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையாகும்.
    வாழையில் நாட்டுப்பழம் நல்லது. குடுமி தேங்காயை சீறாக உடைத்து பிறகு குடுமியைப் பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் இருந்தால், அதனை மாற்றி வேறு தேங்காயை உடைக்கலாம். கோணலான, வழுக்கையான தேங்காய் இருக்கக் கூடாது. வழிப்பாட்டிற்கு முன்பாக சாம்பிராணி புகை போடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல் கொண்டது.
    கோலமிட்டு, விக்ரகங்களைச் சரியாக அமைத்துக்கொண்டு, விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி அர்ச்சனை செய்து அதன்பின் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.
    விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளுக்கு அர்ச்சதையால் பூஜிப்பதும் தவறு. சிவபெருமானுக்கு தாழம் பூ ஆகாது. திருமகளுக்கு தும்பை பூ ஆகாது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உகந்தது அல்ல. வில்வம், கொன்றை, தும்பை, வெள்ளேருக்கு, ஊமத்தை சிவனுக்கு உரியது. காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளி பூக்கள் உகந்தவை.
    அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ, ரோஜா, பன்னீர் ரோஜா, சங்குப்பூ, தாமரை, மரிகொழுந்து, சம்பங்கி, துளசி, விரிச்சிப்பூ ஆகியவை பூஜைக்கான மலர்கள் என்று ஆன்றோர்களால் கூறப்படுகிறது.
    சாமந்தி போன்ற மனமில்லாத மலர்கள் பூஜைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால், அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம். அர்ச்சிக்கும் போது முழு மலரால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும். காய்ந்துபோன மற்றும் அழுகிப்போன, வாடிப்போன, பூச்சி கடித்த பூக்களைப் பயன்படுத்த தெய்வ குற்றமாகும். இவையே பூஜை அறையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஆகும்.

  • 2018-03-22-12-43-44

    இந்தியாவிலேயே அதிக மக்களால் தரிசிக்கப்படும் கோயில்களில் நான்காவது கோயில் எனும் பெருமை குருவாயூரப்பன் கோயிலுக்கு உண்டு. மஹாவிஷ்ணுவே பூமியில் வீற்றிருக்கும் ‘பூலோக வைகுண்டம்’ என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த ஆலயத்தை தரிசிப்பது மிகப்புண்ணியமான ஒன்றாக நம்பப்படுகிறது. முக்கியமான வைணவ திருத்தலம் எனும் ஒப்பற்ற கீர்த்தியையும் இந்த தொன்மையான ஆலயம் கொண்டுள்ளது. இந்த கோயிலில் குருவாயூரப்பனுக்கு காலை முதல் மாலை வரை செய்யப்படும் தரிசனங்கள் இதோ உங்கள் பார்வைக்காக….

  • 2018-03-20-13-01-20

    வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள். இவற்றை வைத்து இறைவனை பூஜை செய்தால் முக்தி கிடைக்கும். சிவப்பு வர்ணப் பூக்கள் இராஜச குணம் கொண்ட பூக்கள். இவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தால் இகலோக இன்பங்களைத்தரும். பொன்மயமான மஞ்சள் வண்ணப் பூக்கள் கொண்டு பூஜை செய்து வந்தால் போகத்தையும், மோட்சத்தையும் தரும். மேலும் எல்லாக் காரியங்களிலும் சித்தி அடைய அவை உதவும். நம் பரம்பரை விருத்தி அடைய வைக்கும்.
    கறுப்பு நிறம் கொண்ட பூக்கள் தாமச குணம் கொண்டவை. ஆகவே பொதுவாக இவற்றை உபயோகித்து பூஜை செய்வது கூடாது. எல்லா நிறங்களையும் உடைய பூக்களை பூஜைக்கு உபயோகிக்கலாம். இவ்வாறு செய்வது உத்தமமான பூஜை.