Blog

  • 2018-02-22-14-07-52

    எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் செய்தாலும் பலனில்லை . எனவே குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும். குலதெய்வத்தை பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும். தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக் கடனை செலுத்திட வேண்டும். ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கீகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் குலதெய்வமாக வருகிறது. குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தராது. குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. கூப்பிடாமல் வந்து உதவி செய்யும் தெய்வம் குல தெய்வம். இஷ்ட தெய்வங்களும் மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும். ஆண்டுக்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும்.

  • 2018-02-21-14-56-37

    இறைவனுக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
    நல்லெண்ணெய் அபிஷேகம்: மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.
    தண்ணீர் அபிஷேகம்: மனசாந்தி ஏற்படும்.
    பஞ்சாமிர்த அபிஷேகம்: அனைத்து செல்வங்களும், தீர்காயுளும் கிடைக்கும்.
    பால் அபிஷேகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆயுள் விருத்தியும் கிடைக்கும். தோஷங்கள் நீங்கும்.
    மஞ்சள் பொடி அபிஷேகம்: அனைவரும் நமக்கு உதவ முன்வருவார்கள். ராஜவசியம் உண்டாகும்.
    தயிர் அபிஷேகம்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    இளநீர் அபிஷேகம்: கஷ்டங்கள் நீங்கும். மன அமைதி, புத்தி தெளிவு பெறும்.
    கரும்புச்சாறு அபிஷேகம்: வியாதிகள் நீங்கும், கல்வியிலும், சாஸ்திரங்களிலும் ஆர்வமும், திறமையும் உண்டாகும்.
    அரிசி மாவுப்பொடி அபிஷேகம்: லஷ்மி வாசம் உண்டாகும். தாராளமாக பணம் புரளும். கடன் தீரும்.
    சந்தன அபிஷேகம்: உடல் குளிர்ச்சி பெறும். மனதிற்கு அமைதி கிடைக்கும். செல்வங்கள் பெருகும்.
    சொர்ண அபிஷேகம்: நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். நினைத்த நல்ல காரியங்கள் அனைத்தும் இனிதாக நடக்கும்.
    இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தால்: கெளரவம் காக்கப்படும்.
    எலுமிச்சை பழம் அணிவித்தால்: ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தை போக்கும். துர்க்கையின் அருளாசி கிடைக்கும். எம பயம் நீங்கும்.
    மலர்களால் அர்ச்சனை செய்தால்: இல்லத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வசந்தமான வாழ்க்கை அமையும்.

  • 2018-02-21-14-51-47

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலில் கிழக்கு திசையில் வடக்கு நோக்கி பிரசித்தி பெற்ற மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் உள்ளது. விராலிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் மெய்கண்ணுடையாள் அம்மன் சிலைக்கு ஆரம்ப காலத்தில் மேற் கூரை அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். வேண்டுவோருக்கு வேண்டியதை கொடுத்து வரும் அம்மனை கிராம காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் அம்மனுக்கு புதிய கோயில் கட்ட முடிவு செய்தனர். அப்போது மூல ஸ்தானத்தை விரிவுபடுத்த அம்மனின் சிலையை நகர்த்த முயன்ற போது அம்மன் சிலையை நகற்ற முடியவில்லை.

    எனவே சிலையை அப்படியே வைத்து சுற்று புறத்தினை மட்டும் புதுப்பித்துள்ளனர். விராலிமலை அருகில் உள்ள வேலூர் பிள்ளை பண்ணை குடும்பத்தினரே பூஜைகளை செய்து வந்துள்ளனர். பின்னர் விராலிமலையில் அதிகமாக வாழும் இசைவேளாளர் குடும்பத்தினர் பூஜைகளை செய்து பராமரித்து வந்தனர். நுழைவு வாயில ராஜகோபுரம் விராலிமலையை சேர்ந்த நாச்சாரம்மாள் என்பவராலும், அடிதளம் ஊர் மக்களாலும் கோயில் பிரகாரத்தில் மேற்கில் கிழக்கு நோக்கி விநாயகர் கோயிலும் கட்டப்பட்டு சுற்று சுவர் எழுப்பட்டுள்ளது. தற்போது இக்கோயிலை அறநிலைய துறை நிர்வகித்து வருகிறது. விராலிமலை முருகன் கோயிலில் பூஜையை முடித்த பின்னர் தான் அர்ச்சகர்கள் இங்கு வந்து அம்மனுக்கு தினமும் மதியம் மற்றும் மாலை நேரத்தில் பூஜை செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத்தில் பூச்சொரிதல் விழாவும், சித்திரை திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவின் போது பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்தும், அலகு குத்தி, காவடி எடுத்து தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றுவர். மார்கழி மாதம் முதல் வெள்ளி அல்லது செவ்வாய் கிழமைகளில் துவங்கும் குத்து விளக்கு பூஜை தை முதல் நாள் வரை இரு வேளையும் நடைபெறும். இதில் ஆயிரக்கனக்காக பெண்கள் கலந்துகொள்வர். மார்கழி மாதம் இரவு தினமும் ஊச்சாதுறை வழிபாடு நடைபெறும். மேலும் அம்மன் கோயிலில் நடைபெறும் அனைத்து நவராத்திரி மற்றும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தெப்பகுளத்தில் இருந்து புனித நீர் ஊர் வலமாக எடுத்து வரப்பட்டு யாக சாலை பூஜைகள் துவங்கியது. கணபதி ஹோமம். நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தன பூஜை யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை 9.30க்கு மேல் புனித நீர் மங்கள இசையுடன் கோயிலை வலம் வந்து கும்பத்தில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்ற கும்பாபிஷேகம் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மெய்கண்ணுடையாள் அம்மன் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில்ட விராலிமலை மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

  • 2018-02-21-14-42-14

    மேல்மலையனூரில் அருள்மிகு அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
    பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் 13 நாள்கள் நடைபெறும் மாசிப் பெருவிழா பிப்ரவரி 14-ஆம் தேதி மகாசிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தொடர்ந்து, கடந்த 15-ஆம் தேதி மயானக் கொள்ளை திருவிழா, 18-ஆம் தேதி தீ மிதித் திருவிழா நடைபெற்றன.
    விழாவின் ஏழாம் நாளான தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு அங்காளம்மன் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து, உற்சவ அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று பல்வேறு வித பூக்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
    பின்னர் மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன், கோயில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரகோஷத்திடையே தேரில் எழுந்தருளினார். பின்னர், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

  • 26

    திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவிலில் மாசிமாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக வருகின்ற 24-ந்தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 26-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது. மார்ச் 1-ந்தேதி இரவு தெப்பல் உற்சவமும், 3-ந்தேதி மாலை வேடர்பறிஉற்சவமும், 4-ந்தேதி அதிகாலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. தினமும் காலை, மாலை வேளைகளில் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கிளி, பூத, வெள்ளிமயில், தங்கமயில், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வானவேடிக்கையுடன் வீதி உலா வருவார்.

  • 2018-02-20-11-14-05

    அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று மாலை 4.40 மணிக்கு கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. 12ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 4ம்படி, படிசெப்பு ஸ்தலத்தார் கோபாலகிருஷ்ணன் அய்யர் யானை மீது கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். கொடியேற்றத்தையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டம் கொண்டுவரப்பட்டு 5.30 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. திருவிழா மார்ச் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய விழாவான 5ம் திருவிழா 24ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனையும், 7ம் திருவிழாவான 26ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் திருக்கோயிலில் சண்முகப் பெருமான் உருகு சட்டசேவையை தொடர்ந்து சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு தங்கச்சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளுகின்றார். 8ம் திருவிழா 27ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்திலும், பகல் 11.30 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். 10ம் திருவிழாவான மார்ச் 1ம் தேதி காலையில் தேரோட்டம் நடைக்கிறது.

  • 2018-02-19-07-30-46

    எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிராதித்துக் கொள்ள வேண்டும் காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தை பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது
    பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிறமலர்கள் மாலை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை வணங்கவும். முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும். விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யலாம் ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்

  • 2018-02-19-05-48-32

    பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 59-வது தலமாக விளங்கும் திருப்பாம்புரம், ஒரு மிகச் சிறந்த ராகு – கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம். ஆதிசேஷன், ராகு, கேது மற்றும் அஷ்டமா நாகங்கள், சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் இத்தல இறைவனை வழிபட்டு தங்கள் சாபம் நிவர்த்தியாகப் பெற்ற தலம். ஆதிசேஷனுடைய மூலவிக்கிரகமும், உற்சவ விக்கிரகமும் கோயிலில் உள்ள தலம். திருப்பாம்பரம் ஒரு ராகு – கேது தோஷத்துக்கான நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன், திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக, அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு – கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. சிவராத்திரி அன்று இரவில், ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம்; இந்திரன் சாபம் நீங்கிய தலம்; கங்கை பாவம் தொலைந்த தலம்; சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்டு திருபாம்புரம் ஒரு சிறந்த தலமாக இருக்கிறது. ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்துக்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்துக்கு 8-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்துக்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி, கோவில் அர்ச்சகர் வழி பரிகாரங்கள் செய்து, தோஷ நிவர்த்தி செய்துகொள்ளலாம். ராகு – கேது தோஷங்கள் நீங்க, கல்லால் ஆன நாக வடிவங்களை இக் கோயிலில் உள்ள வன்னி மரத்தடியில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள்.

  • 2018-02-18-11-53-07

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பெருமைகள் பலவற்றை நாம் அறிந்திருந்தாலும், இக்கோயில் குறித்தும் பெருமாள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள் ஏராளமாக உள்ளன. அதில் சில துளிகள் …
    உலகிலேயே அதிகமான பக்தர்கள் வழிபட செல்லும் இந்து கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும். இங்கு ஒருநாளைக்கு சராசரியாக 50 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். விசேஷ நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
    திருப்பதி ஏழுமலையானின் உண்டியலில் தினந்தோறும் சராசரியாக ரூ. 3 கோடி வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதுவரை ஒரே நாளில் ரூ. 5.73 கோடி உண்டியல் வசூலே சாதனையாக உள்ளது.
    உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் இந்து கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் முதலிடத்தை வகிக்கிறது.
    திருமலையில் ஒரு நாளைக்கு ரூ. 2 கோடி வரை வியாபாரம் நடக்கிறது. இதில், தொப்பி, ஏழுமலையானின் உருவப்படம் போன்றவை மட்டுமே ரூ. 70 லட்சம் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
    கோயிலில் மூலவருக்கு தினந்தோறும் 120 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு 383 வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது. ஏழுமலையானின் தங்க பீதாம்பரம் மட்டும் 40 கிலோ எடை கொண்டதாகும்.
    ஏழுமலையானின் ஆபரணங்களில் குறிப்பிடத்தக்க ஆபரணம் 500 கிராம் எடைகொண்ட பச்சை மரகத கல்லாகும். இதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. இந்த பச்சைக்கல் மரகதத்தை விசேஷ நாட்களில் அலங்காரம் செய்ய பயன்படுத்துகின்றனர்.
    உற்சவரான மலையப்பர் உலா வரும் தங்க ரதம் 74 கிலோ தங்கத்தால் தயாரிக்கப்பட்டதாகும். சுவாமிக்கு உண்டியல் மூலம் தினமும் சராசரியாக 7 கிலோ வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகின்றனர்.
    ஆசியாவிலேயே திருமலை இலவச உணவு மையத்தில் தினமும் 5,000 கிலோ காய்கறிகளில் உணவு தயாரிக்கப்படுகிறது.

  • 2018-02-18-11-32-25

    கும்பகோணத்தில் சோழர் காலத்தில கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கது பெரியநாயகி சமேத நாகேஸ்வர சுவாமி கோயில். கோயிலில் சூரியன் தனது ஒளிமங்கி அமாவாசை சந்திரனை போல கலங்கி நின்ற போது அசரிரீயின் கூற்றுப்படி சூரிய தீர்த்ததை உண்டாக்கி அதில் நீராடி நாகேஸ்வரரை வழிபட்டதால் சாபம் நீங்கப் பெற்றார். அது முதல் ஆண்டுதோறும் சித்திரை 11,12,13 ஆகிய தேதிகளில் சூரியன் தன் கதிர்களை இறைவன் மீது படரச்செய்து பூஜிக்கும் காட்சி கண்கொள்ள காட்சியாகும். இதுவே சூரிய பூஜையாகும். ஆண்டுக்கு குறிப்பிட்ட 3 தினங்களில் மட்டும் சூரிய ஒளிகதிர்கள் மூலஸ்தானம் வரை சென்று சிவலிங்கம் மீது விழும் வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு ஒளி கொடுத்ததால் கும்பகோணம் நகருக்கு பாஸ்கர சேத்திரம் என பெயரும் ஏற்பட்டது.