Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • அய்யா வைகுண்டர் தேர்திருவிழா

    மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி 10 ம் நாள் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்டர் தர்ம பதி ஆலயத்தில் கடந்த வாரம் பிரமோச்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினம் ஒரு நிகழ்வாக அன்னவாகனம், கருடவாகனம், மயில்வாகனம், ஆஞ்சநேயவாகனம், சர்ப்பவாகனம், மலர்முகசிம்மவாகனம், குதிரைவாகனம், காமதேனுவாகனம், இந்திரவாகனம் என அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யா தர்மபதியை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறது. விழாவின் 10வது நாளன இன்று அய்யா வைகுண்ட பதியில் திருத்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மணலி புதுநகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

  • காளஹஸ்தீஸ்வரர் கோபுரம் அருகில் செல்ல தடை

    காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் செப்பனிடும் பணிகள் காரணமாக, பிக்ஷல கோபுரம் அருகில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    காளஹஸ்தியிலுள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் செப்பனிடும் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக, ரூ. 31 லட்சம் செலவில் கோயிலின் வடக்கு நுழைவாயிலான பிக்ஷôல கோபுரத்தில் உடைந்துள்ள சிலைகள் அகற்றபட்டு, சுதை சிற்பங்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
    கோபுரத்தின் மேல் வளர்ந்துள்ள செடி, கொடிகள் களையப்பட்டு, சிமெண்ட் பூச்சு மூலம் விரிசலை அடைக்கும் பணியும் நடந்து வருகிறது.
    இப்பணிகள் முடிவடையும் வரை கோபுரம் அருகில் செல்ல பக்தர்களுக்கும், வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    இதன்படி, கோயிலையொட்டி செல்லும் கன ரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • அருணாசலேஸ்வரர் ராஜகோபுர சீரமைப்பு பணி நிறைவு

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் ஏற்பட்டிருந்த விரிசல்களை லண்டன் வல்லுநர் குழுவினர் சீரமைத்து முடித்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, கோயில் ராஜகோபுரத்தில் சுமார் 10 டன் எடை கொண்ட பாறையை தாங்கிப் பிடிக்கும் கருங்கல்லில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
    பின்னர், அறநிலையத் துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி, லண்டனைச் சேர்ந்த சின்டெக் என்ற கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்திடம் ராஜகோபுர விரிசலை சீரமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.
    மொத்தம் 6 இடங்களில் ஏற்பட்டிருந்த விரிசல்களை துருப்பிடிக்காத இரும்புக் கம்பிகள், எஃகு ஆகியவற்றை பயன்படுத்தி தைக்கும் பணியில் வல்லுநர் குழுவினர் ஈடுபட்டனர்.
    நிபுணர் குழுவினர் தொடர் முயற்சியால், ராஜகோபுரத்தின் உத்திரக்கல்லில் ஏற்பட்டிருந்த விரிசலும், கோபுரத்தின் வலது மற்றும் இடதுபுறத்தில் ஏற்பட்டிருந்த மேலும் 5 சிறிய அளவிலான விரிசல்களும் சீரமைத்து முடிக்கப்பட்டன.

  • அத்தனை காரியங்களும் வெற்றியில் முடிய….

    தமிழகம் முழுவதிலும் விஜயதசமி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக தொழில் தொடங்க விஜயதசமி தினம் மிகவும் உகந்த தினம் என்பதால், புதிய தொழில் தொடங்க விரும்புவோர், பூஜைகள் செய்து தொழிலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஆதிபராசக்தியை துர்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும்; லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.

    விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகை.

  • “அ” எழுதிய குட்டீஸ்…

    விஜயதசமி விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நெல்லி்ல் அ எழுதும் நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றன. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதேபோல மாநிலம் முழுவதும் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நர்சரி வகுப்புகளுக்கு இன்று மாணவர் சேர்க்கை இடம் பெற்றது. இதேபோல பல்வேறு வகையான படிப்புகளுக்கும், பயிற்சிகளுக்கும் இன்று சேர்க்கை நடத்தப்பட்டது. நெல்லில் அ மற்றும் ஓம் என ஆசிரியர் துணையுடன், பெற்றோர் மடியில் குழந்தைகள் அமர்ந்து எழுதத் துவங்கினர். இதற்கு அட்சராப்பியாசம் என்று பெயர். சென்னையிலும் இன்று பல்வேறு பள்ளிகள், கோவில்கள்ல இந்த அட்சராப்பியாசம் மற்றும் வித்யாரம்பம் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

     

  • திருப்பதி தங்க தேர் ஊர்வலம்….

    திருப்பதி வெங்கடேஸவரா கோவிலை சுற்றி வரும் நவராத்திரி பிரம்மோத்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க தேர் ஊர்வலம் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது.

    இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் என கோவில் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனுடன் பாரம்பரிய அலங்காரத்துடன் கூடிய தேரில் பல்வேறு ரத்தினங்கள் பதித்த ஆபரணங்களுடன் வெங்கடேஸ்வரா மற்றும் அவரது இரு பக்கமும் ஸ்ரீ லட்சுமி மற்றும் ஸ்ரீ பத்மாவதி ஆகியோரின் பழைமையான சிலைகள் இடம் பெற்றிருந்தன.

    நீண்ட கயிறுகள் கட்டப்பட்ட 32 அடி உயர தேரினை பக்தர்கள் இழுத்தனர்.

  • திருப்பதி ஏழுமலையான் கருடவாகனத்தில் பவனி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருட வாகனத்தில் மலையப்பசாமி மாடவீதிகளில் பவனி வந்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, மாலை இருவேளைகளில் உற்சவர் மலையப்பசாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி 5–ம் நாளான இரவு கருடசேவை நடந்தது. மகா விஷ்ணுவின் வாகனம் கருடன் ஆகும். மகா விஷ்ணுவின் திருவடியை தாங்கி நிற்பவர் கருடன். எனவே கருடனை வழிபட்டால் மக்களுக்கு ஏற்படுகின்ற துன்பத்தை பறந்து சென்று மகா விஷ்ணு காப்பார் என்பதை உணர்த்தவே உற்சவர் மலையப்பசாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என பக்தர்கள் எழுப்பிய முழக்கம் பரவசத்தை ஏற்படுத்தியது.

  • சபரிமலை கோயில் மேல்சாந்தி பதவிக்கு குலுக்கல்….

    சபரிமலை கோயில் மேல்சாந்தி பதவிக்கு வரும் 17-ம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது.
    கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் விரைவில் தொடங்கவுள்ளன. இதற்காக கோயிலின் புதிய மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி பதவிக்கு 15 பேரும், மாளிகைபுரத்தமன் கோயில் மேல்சாந்தி பதவிக்கு 11 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். வரும் 17-ம் தேதி காலை இத்தேர்வு நடைபெற உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர், கண்டரரு ராஜீவரரு ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சிம்ம வாகனத்தில் பவனி வந்த மலையப்ப சுவாமி

    திருமலையில் வருடாந்திரப் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளில் காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பந்தல் வாகனத்திலும் மலையப்ப சுவாமி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    இப்பவனியின்போது வேதபண்டிதர்கள் வேத பாராயணம் செய்தபடியும், மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க, பெண்கள் கோலாட்ட நடனமாடியும், பக்தி பாடல்களைப் பாடியும், கிருஷ்ணர், நரசிம்மர், காலிங்க நர்த்தன கிருஷ்ணர் போன்றும் வேடமணிந்து வந்தனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றன.
    இரவு 9 மணி முதல் 11 மணி வரை அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் தன் உப நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மாடவீதியில் மலையப்ப சுவாமி வலம் வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

  • திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை….

    பொதுவாக, திருமலை செல்பவர்கள் சென்றவுடன், திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொள்வதும், அவரை தரிசித்துவிட்டு உடனடியாக வீடு திரும்புவதும் தான் வழக்கம். ஆனால் சாஸ்திர சம்மதமானதாக இது கருதப்படவில்லை. திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு என ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    முதலில் கீழ் திருப்பதியில் வீற்றிருக்கும் கோவிந்தராஜ பெருமாளை வணங்க வேண்டும்.
    அதன் பிறகு, அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து மனமும், இதயமும் ஒருங்கே இணைத்து வணங்க வேண்டும்.
    அதன் பிறகு, திருமலையின் மீது ஏறிய பிறகு ‘வராக தீர்த்த கரையில்’ கோவில் கொண்டிருக்கும் ‘வராக மூர்த்தியை’ தரிசித்து வணங்க வேண்டும்.
    அதற்கு பிறகுதான் ஏழுமலை வாசனை, கோவிந்தனை, திருவேங்கடவனை உளமாற சேவிக்க வேண்டும்..
    இந்த வழிமுறையானது ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டு, அதன் பிறகு வந்த அனைத்து ஆச்சார்யர்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம் ஆகும்.