ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியலில் காணிக்கையாக ரூ.68.63 லட்சம் கிடைத்தது.
ராமேஸ்வரம் திருக்கோயிலில் 30 நாள்களுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. 30 நாட்களுக்கு பிறகு, நேற்று சுவாமி, அம்மன் சன்னதி, பஞ்சமூர்த்திகள் சன்னதி, கோதண்டராமர் கோயில், நம்பு நாயகி அம்மன் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
கோயில் திருக்கல்யாண மண்டபத்தில், பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் எண்ணினர். இதில் ரொக்கம் 68 லட்சத்து, 63 ஆயிரத்து, 245 ரூபாய் இருந்தது.
உண்டியலில் மேலும் தங்கம் 27 கிராம், வெள்ளி 3 கிலோ 420 கிராம் இருந்தது. உண்டியல் கணிக்கிடும் பணியில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர், பேஷ்கார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Category: ஆன்மீக செய்திகள்
ஆன்மீக செய்திகள்
-
ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வருவாய்
-
காசிவிஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாணம்….
நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் உலகம்மன் கோயிலின் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நாட்களில், தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றன.
இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து வரும் அக்டோபர் 27ம் தேதி காலை 8 மணிக்கு யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு தெற்கு மாசி வீதியில் காசிவிஸ்வநாதர் உலகம்மனுக்கு தபசுக் காட்சி கொடுத்தல், இரவு 7.20 மணிக்கு சுவாமி – அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. -
சுவாமிமலை கோயிலில் நவம்பர் 5ஆம் தேதி சூரசம்ஹாரம்
ஆறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத சுவாமி கோயிலில் அக்டோபர் 30 ஆம் தேதி சஷ்டி விழா தொடங்கவுள்ளது.
அக். 30 ஆம் தேதி மாலை 7 மணியளவில் பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கும் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
அக்டோபர் 31-ம் தேதி காலை 9 மணியளவில் சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.அன்று முதல் காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. நவம்பர் 5-ம் தேதி காலை 8 மணிக்கு படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலாவும், 10.30 மணிக்கு சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேக அர்ச்சனை ஆராதனையும் நடைபெறுகிறது. அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அன்று சூரசம்ஹாரம் நடைபெற்று தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தலும், திருவீதியுலாவும் நடைபெறுகிறது.
நவ. 6-ம் தேதி காலை சண்முகசுவாமி புறப்பாடு நடைபெற்று காவிரியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இரவு 7 மணியளவில் தேவசேனா திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நவ. 7,8 தேதிகளில் இரவு 8 மணிக்கு ஊஞ்சல் திருவிழா நடைபெறுகிறது. நவ. 9-ம் தேதி இரவு 8 மணிக்கு பல்லக்கு திருவீதியுலாவும், 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சண்முக சுவாமி யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
-
திருப்பரங்குன்றம் கோயில் கருவறை குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் 42 லட்ச ரூபாய் செலவில் குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும் கருவறையில் கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக் கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் தனித்தனி சன்னதி அமைந்துள்ளது.
குடவரைக் கோயிலான இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குடவரை கோயில் என்பதால் மலை மீதுள்ள வெப்பம் அப்படியே சன்னதிக்குள் இறங்குகிறது. இதனால் கோயிலுக்குள் அதிகளவில் வெப்பம் இருக்கும். கோயில் கருவறையில் சில ஆண்டுகளுக்கு முன் கருவறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது.
சில மாதங்களிலேயே அது பழுதானது. இதையடுத்து தற்போது கோயில் நிர்வாகத்தின் முயற்சியால் உபயதாரர் மூலம் ரூ.42 லட்சம் செலவில் 30 டன் அளவிலான நவீன வகை குளிர்சாதனங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. -
ஒருகால பூஜை வைப்பு நிதித் திட்டம் விரிவாக்கம்….
ஒருகால பூஜை நிதித் திட்டத்தை விரிவுபடுத்த தமிழகஅரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டில் 241 கோயில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
திருக்கோயில்களில் ஒருகால பூஜையாவது நடைபெற வேண்டும் என்ற நோக்கில், ஒருகால பூஜை வைப்பு நிதித் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறிய அவர், இந்தத் திட்டம் நிகழாண்டில் 241 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும், பக்தர்களின் வசதிக்காக அனைத்து திருக்கோயில்களிலும் நவீன கழிவறை, குளியல் அறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் அதிக அளவு பக்தர்கள் வருவதால் விழாவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். -
அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.83 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்ததும் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இப்பணியில் சுமார் 150 பேர் ஈடுபட்டனர். இதில் ரூ.83 லட்சத்து 29 ஆயிரத்து 700மும், 130 கிராம் தங்கமும், 599 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஹரிப்பிரியா, உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது. -
திருப்பரங்குன்றத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி கொடியேற்றம்….
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆக்டோபர் 31 ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது.
அக்டோபர் 31 ஆம் தேதி அன்று காலை சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டு, விரதம் மேற்கெள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். காப்பு கட்டிக் கொள்ளும் பக்தர்கள் ஆறு நாட்கள் கோயில் மண்டபங்களில் தங்கி பால், பழம், துளசி, மிளகு உள்ளிட்ட பல்வேறு விரதங்கள் மேற்கொள்வர். தேன், சர்க்கரை கலந்த தினை மாவு கோயில் சார்பில் வழங்கப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவம்பர் 4ல் வேல் வாங்குதல், நவம்பர் 5ல் சூரசம்ஹாரமும், நவம்பர் 6 ஆம் தேதி காலையில் தேரோட்டம், மதியம் பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.
சஷ்டி விழா நடக்கும் நாட்களின் தினம் காலை 11:00 மணி, மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர்க்கு சண்முகார்ச்சனை நடக்கும். -
ரங்கநாதர் ஊஞ்சல் உற்சவம்…..
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ஊஞ்சல் உற்சவம் இரவு 7.15க்கு தொடங்கி 8க்கு நிறைவடைகிறது. முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாள் அக்டோபர் 24ம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6க்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின், இரவு 7க்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருள்கிறார். நிறைவு நாளான அக்டோபர் 26ம் தேதி நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். மற்ற நாட்களை விட அன்றைய தினம் நம்பெருமாள் ஊஞ்சலாட்டம் அதிக நேரம் நடைபெறும். ரங்கம் சார்பு கோயிலான திருவெள்ளறை பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவமும் நேற்று தொடங்கியது. -
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. நவம்பர் 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு திருக்கோயிலில் உள்ள அருள்மிகு கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி சண்முகார்ச்சனை நடைபெறும்.
நவம்பர் 14 ஆம் தேதி உச்சிக்காலத்தில் அருள்மிகு சுந்தரேசுவரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். உபயதாரர் நிகழ்ச்சி ரத்து: அக்டோபர் 29 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை திருக்கோயிலில் உபயதாரர்களின் சார்பில் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகியவை நடத்தப்படாது என கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஊர் நன்மைக்காக ஒரு திருவிழா…
நாமக்கல் மாவட்டம், ஈச்சம்பட்டி என்ற கிராமத்தில் ஊர் நன்மைக்காக நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வீரகாம பெருமாள் கோவில் திருவிழா நடத்தப்பட்டது.
இந்த கோவிலில், 14 வருடங்களாக திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று, பாரம்பரிய முறையில் வீரகாமபெருமாள் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. மனிதர்கள் மண்டியிட்டு செல்லக்கூடிய 4 அடி உயரம் கொண்ட இடைவெளியில், மாடு பிடித்தவர் மண்டியிட்டு குனிந்து செல்ல, அவரை பின்பற்றி கோவில் காளையும், சிறிய இடைவெளியில் நுழைந்து வந்ததை கண்ட கிராமமக்கள் மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்தனர்.
இந்நிகழ்வை தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட ஆண்கள் பாரம்பரிய முறையில் நடனமாடியது பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது.