திருப்பதி திருமலையில் ஏழுமலையானை மே, ஜூன் மாதங்களில் தரிசனம் செய்ய ஈரோட்டில் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஈரோடு, பெருந்துறை சாலை, கிளப் மெலாஞ்ச் வளாகத்தில் உள்ள ஈரோடு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் மூலம் திருப்பதி தேவஸ்தான தரிசன அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதில், வரும் மே, ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கான திருப்பதி ஏழுமலையான் தரிசன அனுமதிச் சீட்டு, தங்கும் விடுதி வசதி ஆகியவற்றுக்கான முன்பதிவு செய்யும் பணி தொடங்கியது. பக்தர்கள் விடுமுறை நாள்களில் அதிக அளவில் திரள்வதால் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையொட்டி , கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களும் இந்த முன்பதிவு தரிசன அனுமதிச் சீட்டுடன் பதிவு செய்து கொள்ளலாம்.
Category: தொடர்கள்
தொடர்கள்
-
குலதெய்வ வழிப்பாடு அவசியமா?
எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் செய்தாலும் பலனில்லை . எனவே குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும். குலதெய்வத்தை பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும். தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக் கடனை செலுத்திட வேண்டும். ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கீகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் குலதெய்வமாக வருகிறது. குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தராது. குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. கூப்பிடாமல் வந்து உதவி செய்யும் தெய்வம் குல தெய்வம். இஷ்ட தெய்வங்களும் மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும். ஆண்டுக்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும்.
-
உலகின் மிகப்பெரிய ஆலயம் – 20
புனோம் பென் தேசிய அரும்பொருளகத்தில், உலோகத் திருமேனிகள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து, கிடந்த கோல விஷ்ணுவைக் கடந்து கல் சிற்பப் பகுதிக்கு நகர்ந்தோம். விதவிதமான முகலிங்கங்கள் இருந்தன அங்கே. பேரழகுடைய புத்தர் சிலைகள் நின்ற கோலத்தில் இருந்தன இந்தப் பகுதியில். அப்படி ஒரு வழவழப்பை எப்படித்தான் உருவாக்கினார்களோ அந்தக் கல்லில். சோழர் காலச் சிற்பங்கள் அளவுக்கு வேலைப்பாடு மிக்க சிலைகள் இங்கே இல்லைதான். ஆனாலும் இங்குள்ள சிலைகள் மாறுபட்ட அழகோடு இருந்தன. இங்குள்ள கற்சிலைகளில் முக்கியமானது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த எட்டுக் கையுள்ள பெரிய நின்ற கோல விஷ்ணு சிலை. கெமர் சிற்பங்களில் இதுவரை கிடைத்துள்ள சிற்பங்களில் இதுவே ஆகப் பழமையானது என்கிறது குறிப்பு. அதன் பக்கத்திலுள்ள ராமர், பலராமர் சிலைகளும் அற்புதமானவை. அசப்பில், எகிப்திய வாயில் காவலர்கள் போல் தோற்றம் தரும் 2.70 மீட்டர் உயரமுள்ள ஆஜானுபாகுவான சிலை விஷ்ணுவுடையது.
இடுப்பிலிருந்து முழங்கால் வரை காட்டப்பட்டுள்ள ஆடைதான் இந்தச் சிலையின் உன்னதம். வரி வரியாக, மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு வலப்பக்கத்தில் வில்லுடன் இராமனின் திருவுரு. இடப்பக்கத்தில் ஏர்க் கலப்பையுடன் இருப்பதால் பலராமராக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். விஷ்ணுவின் எட்டுக் கைகளில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன. அவற்றில் வித்தியாசமான படைக்கலங்களை ஏந்தியிருக்கிறார். வலக் கைகளில் மேலிருந்து கீழாக, அனல், சிறுதடி, உரிக்கப்பட்ட மான்தோல், வளைந்த பெரியதடி ஆகியவை உள்ளன.
இடக் கைகளில், மேலே இரண்டில் இருப்பது தெரியவில்லை. உடைந்துவிட்டன. மற்ற இரண்டில் ஒன்றில் மின்னற்படையும் மூக்குள்ள தண்ணீர்க் குடுவையும் உள்ளன. அமுத கலசமோ ?
இடையின் நடுவே ஆடை முடிச்சிடப்பட்டு தார்பாய்ச்சிக் கட்டப்பட்டுள்ளது. வலப்புறமுள்ள இராமனின் இடக்கை மட்டும் வில்லேந்தியவாறு உள்ளது. இராமனுக்கு வலக்கை இல்லை. பின்னமாகிவிட்டது. இடப்புறமுள்ள பலராமருக்கு இடக்கையில் கலப்பை காணப்படுகிறது. வலக்கை உடைந்து விட்டது. விஷ்ணுவைக் காட்டிலும் இராமனும் பலராமனும் பேரழகோடு திகழ்கின்றனர். இருவருக்கும் ஒரே மாதிரியான அழகு கொஞ்சும் அரையாடை. வழவழப்பான திருமேனிகள் மூன்றும். இராமன், பலராமன் முகங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இந்தப் பகுதியிலுள்ள இன்னொரு வித்தியாசமான சிற்பம் அன்னத்தின் மேலமர்ந்த வருணனின் சிலை. நான்கு புறமும் தலையைத் தூக்கிய தனித் தனி அன்னங்களுக்கு மேல் ஒரு காலை மடித்து ஒரு காலை உயர்த்தி மரபார்ந்த ஜாவானிய பாணியில் உட்கார்ந்திருக்கிறார் வருணன். நான்கு அன்னங்களும் பத்மபீடத்தின் மேல் நிற்கின்றன. மெல்லிய புன்னகையோடு தென்படும் வருணனின் கைகள் உடைந்துள்ளன. இடக் கையைத் தொடைமேல் வைத்திருக்கிறார். வலக்கையில் ஏதோ வைத்திருக்கிறார். தலைப்பாகை போன்ற அலங்கார மகுடம். பூனைமீசை தெரிகிறது. வடிந்த காதுகள். திறந்த மார்பில் அணிகலன்கள் ஏதுமில்லை. இடையாடை விசிறி போல் மடிப்புகளோடு காட்டப்பட்டுள்ளது. அன்னங்கள் நான்கும் இந்தச் சிலையில் அபாரம். விரிந்த சிறகுகளின் வேலைப்பாடும் அவற்றுக்கு அணிவிக்கப்பட்டுள்ள ஆரங்களும் சிற்பியின் மேதமைக்கு நல்ல சான்று.
ஏழாம் ஜெயவர்மனின் உருவம் எனக் கருதப்படும் சிலையொன்றும் இந்தப் பகுதியில் உள்ளது. ஆய்வாளர்களுக்கு இடையே அதுகுறித்துக் கருத்து வேறுபாடு நிலவினாலும் பல்வேறு ஆய்வுகள் தரும் குறிப்பின்படி பார்க்கும்போது இது ஜெயவர்மனின் உருவச் சிலையாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்கிறது கையேடு. கைகள் இரண்டும் உடைந்துள்ளன. காலை மடித்து அமர்ந்தகோலம். அரைக் கண் மூடிய தியான நிலை. திறந்த மார்பு. அணிகலன் இல்லை. வடிந்த காதுகள். சாந்தமான முகம்.
காளை மேல் அமர்ந்த சிவனும் உமையும் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளனர். கெமர் எழுத்தில் எழுதப்பட்ட ஒரு பெரிய செப்பேடு போன்ற கல்வெட்டின் நடுவே ரிஷபத்தில் சிவன் மட்டும் அமர்ந்திருக்கிறார். அதன் இரண்டு பக்கங்களிலும் கருடன் மேல் அமர்ந்த விஷ்ணுவும் நான்முகனும் காட்டப்பட்டுள்ளனர்.
ஆலய நிலைவாசல்படி மேல் வரும் கிடைக்கல் (Lintel) அலங்கார முகப்புகள் பல இங்கே உள்ளன. எல்லாமே புடைப்புச் சிற்பங்கள். அவற்றுள் முக்கியமானது, பீமனும் துரியோதனனும் சண்டையிடும் காட்சி. பத்தாம் நூற்றாண்டுச் சிற்பமான இது முக்கோண வடிவமான மகர தோரணத்துக்குள் செதுக்கப்பட்டுள்ளது.
மகரங்கள் இரண்டும் ஐந்து தலை நாகங்களை விழுங்குவது போல் உள்ளன. இடப் பக்கத்திலுள்ள துரியோதனன் ஒரு தடியை வைத்திருக்கிறான். அவனுக்குப் பின்னே கிருஷ்ணனும் பலராமனும் ஏர்க் கலப்பையோடு காட்டப்பட்டுள்ளனர். எதிரே ஆகாயத்தில் பறந்தவாறு பீமன். பீமனுக்குக் கீழ் பாண்டவர்களில் நால்வர் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். கிருஷ்ணனும் பலராமனும் ஏன் துரியோதனன் பக்கம் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. கம்போடிய மகாபாரதம் மாறுபட்டதோ? இந்தக் காட்சிக்கு மேலே இருவர் பறந்தவாறு சண்டையிடும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. நுணுக்கமான வேலைப்பாடுள்ள சிற்பம்.
இதேபோல், கிடைக்கல் அலங்கார வேலைப்பாடு கொண்ட மற்றொரு சிற்பம், மாரனின் தோல்வி. வழக்கமான மகர தோரண அலங்காரம், ஐந்து தலை நாகமுகப்போடு முடிகிறது. அதற்குள் மூன்று நிலைகளில் சிற்பங்கள். ஆக மேலே, அருளல் முத்திரையோடு புத்தர். வழக்கமான பூமி ஸ்பர்ச முத்திரை இங்கில்லை. நடுவில் உள்ள நிலையில், நான்கு பேர் மாரனை வெற்றிகொண்ட போதிசத்துவரை ஆசிர்வதிக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளனர். அதற்குக் கீழே மாரனின் படைகள். முக்கியத் தளபதிகள் இருபக்கத்திலும் யானைமேல் அம்பாரியிலிருந்து பத்துக் கைகளோடு போரிடுகின்றனர். குதிரை வீரர்களும் உள்ளனர். யானைகளுக்கு நடுவே, பூமித் தாய், இளம் ஆடவரின் வடிவில் தலை முடியைத் திருகிக் கொள்வது போல் காட்டப்பட்டுள்ளது. அதற்கும் கீழே செதுக்கி முடிக்கப்படாத பகுதியில், மாரனின் படைகள் சமுத்திரத்திற்குள் மூழ்குவதுபோல் உள்ளது.
இந்த வருணனை எல்லாம் அரும்பொருளகக் கையேட்டில் உள்ளது. பௌத்த மரபும் புராணமும் தெரிந்திருந்தால், கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம் சிற்பங்களை இன்னும் நன்கு ரசிக்கலாம். இந்தச் சிற்பத்தில் மாரனின் படைகள் அணிந்திருக்கும் நகைகள், யானையின் உணர்ச்சி, வீரர்களின் முகபாவம், ஆயுதங்கள் எல்லாமே சிறப்பாக உள்ளன. யானைகளின் சினம், விறைத்த வாலில் காட்டப்பட்டுள்ளது.
கல் சிற்பக் காட்சிக் கூடத்திலிருந்து அடுத்து வடபுறத்திலுள்ள காட்சிக்கூடத்துக்கு வந்தோம். இங்கே கெமர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் அன்றாட வாழ்வியல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எல்லாம் சுமார் 200 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்பட்ட பொருட்கள். வாள், முத்துப் பதித்த வெற்றிலைச் செல்லம், கின்னரி வடிவப் பெட்டி, கத்தி உறைகள், படையல் கிண்ணங்கள், மூடியுடன் கூடிய மாதுளைப் பெட்டி, அன்னத்தைப் போன்ற கிணற்றுச் சகடம், வேள்விக் கரண்டி போன்ற அன்னக் கரண்டி, நெசவுக் கருவிகள். யக்ஷர்கள், அனுமன் சிலைகள், ஈரத்தால் பாதிக்கப்படாத உறுதியான மரத்தால் செய்யப்பட்ட படகு வீடுகள், அரச குடும்பத்துக்கான பல்லக்குகள், புத்த பிக்குகள் அமரும் வேலைப்பாடு மிக்க சிறுபீடம், அந்தக் காலச் சமையல் பாத்திரங்கள் எல்லாம் இங்கே உள்ளன.
இந்தப் பகுதியில் உள்ள பொருட்களில் முக்கியமானது மறைந்த மன்னர் சிசோவத்தின் ஈமத் தாழி. செம்பால் செய்யப்பட்டு வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டது இது. சுமார் 3 மீட்டர் உயரமுள்ளது இந்தத் தாழி. நெடுக்குவாக்கில் நீட்டப்பட்ட குங்குமச் சிமிழ்போல் இருக்கிறது இது. ஊமத்தம் பூவுக்குக் குமிழ்மூடி போட்ட மாதிரியும் இருக்கிறது தாழி. இது எப்படிப் பயன்படும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், கம்போடிய, தாய்லந்து மன்னர்களின் ஈமச் சடங்கு நடைமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கம்போடிய, தாய்லந்து மன்னர்கள் இறந்துபோனால், இந்தியப் பாரம்பரியத்தில் உள்ளதுபோல் ஒரு சில நாட்களில் உடனடியாகத் தகனம் செய்துவிட மாட்டார்கள்.
மன்னரின் இறுதிச் சடங்கு மாபெரும் விழாவைப் போல் நடத்தப்படும். அதற்குத் தயாராக ஓராண்டுவரை கூட பிடிக்கும். ஆகவே, பழங்காலத்தில் முதலில் மன்னரின் உடலைப் பதப்படுத்தி அதன் மேல் தங்க முகமூடியைப் பொருத்தி வைத்து விடுவார்கள். இப்போது தங்க முகமூடி பொருத்தும் வழக்கம் இல்லை. மன்னரின் உடலுக்கு மக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருப்பார்கள்.
மன்னரின் உடலுக்கு அருகே எப்போதும் பிரார்த்தனை மந்திரம் ஒலித்துக் கொண்டே இருக்கும். இது மூன்று மாதத்திலும் முடியலாம், 300 நாளிலும் முடியலாம். கம்போடியாவில் பொதுவாக 100 நாட்களில் இறுதிச் சடங்கு நடைபெறும்.
ஈமச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்றதும், மன்னரின் உடலை உயரமான இந்தத் தாழிக்குள் கருவிலுள்ள சிசுவைப் போல் மடித்து வைப்பார்கள். மறுபிறவியைக் குறிக்கும் வகையில், தாயின் கர்ப்பத்தில் இருப்பதைப் போல் உடல் மடிக்கப்படுகிறது. உடல் நேரடியாகத் தாழிக்குள் வைக்கப்படாது. முதலில் அது ஒரு சிறிய தாழிக்குள் வைக்கப்பட்டுப் பின்னர் பெரிய தாழிக்குள் வைக்கப்படும். வேலைப்பாடு மிக்க தாழி உயரமான மூடியால் மூடப்பட்டு அலங்காரத் தேரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். தகனத்துக்கு முந்திய நாள் அரண்மனை வளாகத்தில் வாண வேடிக்கை போடப்படும் என்று, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அதைப் பார்த்த பிரெஞ்சுக்காரர் ஹென்ரி மார்ஷல் எழுதுகிறார்.
அரச குடும்பத்தாருக்கான சுடலையில் மன்னரின் தகனத்துக்கென்றே அலங்காரக் கட்டடம் ஒன்று கட்டப்படும். அங்கு, மன்னரின் உடல் தாழியிலிருந்து எடுக்கப்பட்டுத் தகனம் செய்யப்படும். பிறகு மன்னரின் அஸ்தி சேகரிக்கப்பட்டு அது அரண்மனை வளாகத்திலுள்ள வெள்ளி மாடத்தில் நிரந்தர அஞ்சலிக்காக வைக்கப்படும். அஸ்தியில் ஒரு பகுதி, மன்னர்களின் விருப்பப்படி ஆற்றிலோ ஏரியிலோ கரைக்கப்படுவதும் உண்டு.
தாய்லந்தை சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னர் பூமிபோன் அதுல்யதே, சென்ற ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி காலமானார். அவருக்கான இறுதிச் சடங்கு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்காகப் பல மில்லியன் டாலர் செலவில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மன்னரின் ஈமத் தாழியை ஏந்தி ஊர்வலமாகச் செல்லவிருக்கும் “மாபெரும் வெற்றி அரச அலங்காரத் தேர்” மட்டுமே பல நூறு பேரின் உழைப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 1795-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேர் அது.
ஈமத் தாழி வைக்கப்படும் அலங்காரத் தேரை, தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் தகனச் சாலைக்கு இழுத்துச் செல்வார்கள். அப்படிப்பட்ட தாழிதான் புனோம்பென் அரும்பொருளகத்தில் உள்ளது. கம்போடிய மன்னர் நொரோடம் சுராம்ரிட் 1960இல் காலமானபோது அவரது நல்லுடலை இந்தத் தாழியில்தான் வைத்திருந்தார்களாம். அவரது தகனம் முடிந்தபிறகு அதே ஆண்டு தாழியை தேசிய அரும்பொருளகத்துக்கு எடுத்துவந்து காட்சிக்கு வைத்துவிட்டார்கள்.
இந்த வடபுறக் காட்சிக் கூடத்திற்கு அருகிலேயே வரலாற்றுக் காலத்துக்கு முந்திய அரும்பொருட்களின் காட்சிக் கூடமும் இருக்கிறது. இங்கே 2400 ஆண்டுப் பழமையான முரசுகள், மணி, அலங்காரத் தண்ணீர்க் குடுவை, வெண்கலக் கங்கணம் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்த்து முடித்து அரும்பொருளகத்தை விட்டுப் புறப்படுமுன், அரும்பொருளகக் கையேடு ஒன்றை வாங்கிய ராஜூ அங்கேயே அதை எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டார். அந்தக் கையேடு இல்லையேல் கடைசி சில அத்தியாயங்களை இவ்வளவு விரிவாக எழுதியிருக்க முடியாது. நன்றி ராஜூ !
அரும்பொருளகத்திலிருந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். வந்ததும் நினைவுப் பொருட்கள் வாங்க அருகிலுள்ள கடைத் தொகுதிக்குச் சென்றோம். பேங்காக் நகரின் சத்துசாக் போன்ற இடம் இது. எங்கு திரும்பினாலும் சுட்ட இறைச்சியின் கெடுமணம் வருகிறது இங்கேயும். அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான கடைகள் ஒன்று சேர இருக்கும். விதவிதமான நினைவுப் பொருட்கள், துணிமணிகள் வாங்கலாம். ஒவ்வொரு பொருளையும் இரண்டு மூன்று கடைகளில் விலை விசாரித்த பிறகே வாங்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியின்மேல் ஒட்டிக் கொள்வது போன்ற பாயோன் கல்முகங்கள், அங்கோர் வாட் ஆலயம் ஆகியவற்றை நான் வாங்கிக் கொண்டேன்.
இரண்டு ஆள் மட்டுமே நடந்து செல்லக்கூடிய குறுகலான பாதையின் வழியே செல்லும்போதெல்லாம் எனக்கு அச்சமாக இருக்கும். இங்கே ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் என்னாகும்? அதற்கான எல்லாச் சாத்தியங்களும் அங்கே இருந்தன. எப்படி இவ்வளவு நெரிசலாகக் கடைகளைப் போட அனுமதிக்கிறார்கள்? ஏதாவது ஒரு நெருக்கடி என்றால் தப்பிக்கும் வழி எது என்று கூடப் பயணிகளுக்குத் தெரியாது. கடைக்காரர்கள் அங்கேயே புழங்குபவர்கள் என்பதால் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதிகாரிகள் கவனிக்க வேண்டிய அக்கறைக்குரிய அம்சம் இது. சிங்கப்பூரில் இதுபோன்ற நெரிசலான கடைகளைப் பார்க்கவே முடியாது. சாத்தியமான எல்லாவித நெருக்கடிகளும் பரிசீலிக்கப்பட்டு அவற்றுக்கு மாற்றுத் திட்டத்தை முன்வைத்தால்தான் அனுமதி கிடைக்கும். இதையெல்லாம் சொன்னால் பரணி என்னை முறைப்பார்.
அண்ணா அது சிங்கப்பூர். இது புனோம் பென் என்பார். சரிதான். நினைவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பி எல்லாவற்றையும் அள்ளிப் பெட்டியில் திணித்துக் கொண்டு விமான நிலையத்திற்குப் புறப்பட்டோம். சாப்பிட நேரமில்லை. நாலு மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும்.
குளித்தால் தேவலாம் போல இருந்தது அனைவருக்கும். அரண்மனை வளாகத்தில் அடித்த வெயில் எல்லாம் எங்கள் தலையில்தான் காய்ந்தது. கசகசவென்று இருந்தாலும் குளிக்க நேரமில்லை. முக்கால் மணி நேரத்திற்குள் விமான நிலையத்தைச் சென்றடைந்தோம். ஓட்டுநர் ராவுக்கு விடைகொடுத்து உள்ளே சென்று கிடைத்ததைச் சாப்பிட்டுக் குடிநுழைவுப் பகுதிக்குச் சென்று முறைமைகளை முடித்துப் பயணிகள் காத்திருப்பு அறைக்குச் சென்று அக்கடா என்று உட்கார்ந்தோம்.
உடலில் அலுப்பு இருந்தாலும் அது ஆனந்தமாக இருந்தது. நெடுநாட்களாக நினைத்த ஒன்றை நல்லபடியாக நிறைவேற்றி முடித்துவிட்டோம் என்ற நிறைவு. அடுத்தமுறை குடும்பத்தோடு வரவேண்டுமெனப் பேசிக் கொண்டோம். நல்ல நண்பர்கள் அமைந்ததால், எந்தச் சங்கடமும் இன்றி இன்பமாகக் கழிந்தது பயணம். விமானத்தில் ஏறிக் கண்ணை மூடி, மறுபடியும் மழைநீர் வாசனை மிகுந்த அங்கோர் வாட்டுக்குள் நுழைந்தேன்!
– பொன். மகாலிங்கம்
– தொடர் நிறைவுபெற்றது –
பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
-
வேங்கடநாதன் பரிமளாச்சாரியார் ஆன வரலாறு
ராகவேந்திரரின் வாழ்க்கை மற்றும் அவரின் அற்புதங்களை சொல்லும் இத் தொடரின் சென்ற பதிவுகளின் சுருக்கம்.
திம்மண்ணரின் மனைவி கோபிகாம்பாள் திருமலை தெய்வத்தின் கருணையால் கர்ப்பவதியானாள். கி.பி.1595ஆம் ஆண்டு குருவாரத்தில் ,மிருகசீரிஷ நட்சத்திரத்தில் காண்பவர் வணங்கத்தக்க தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.வேங்கடவனிடம் வைத்த வேண்டுதலினால் பிறந்த குழந்தை ஆதலால், குழந்தைக்கு வேங்கடநாதன் எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர். வேங்கடநாதனும் வேதாந்த தர்க்க வியாகரணம், சாஹித்யம் மீமாம்சை முதலிய சாஸ்திரங்களைக் கற்றார். அத்துடன் வீணா கானத்திலும் சிறந்து விளங்கினார்.
மேலும் தன்னுடைய ஞானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த வேங்கடநாதன் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.அங்கு மடத்தில் ஸ்ரீ விஜயேந்திரருடன் ஸ்ரீ சுதீந்திரரும் தங்கியிருந்தார். சாஸ்த்திர ஞானம் ஏற்பட சுதீந்திரரிடம் சிஷ்யனாக வேண்டும் என அவர் முன்பு நமஸ்கரித்து நின்ற வேங்கடநாதனை மிக்க மகிழ்ச்சியுடன் சீடனாக ஏற்றுக்கொண்டு பல சாஸ்திர விஷயங்களைக் கற்பித்து வந்தார் சுதீந்திரர்.
ஸ்ரீமத்வரின் பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு ஸ்ரீ ஜெயதீர்த்தர் கொடுத்துள்ள உரைநூல்’ நியாயசுதா’ என்ற நூலுக்கு விளக்கத்தைக் கூறிக் கொண்டிருந்த சுதீந்திரர் திடீரென்று விளக்கம் சொல்ல இயலாமல் பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.அதையே நினைத்துக் கொண்டிருந்த வேங்கடநாதன் அப்படியே பனியில் படுத்து உறங்கிவிட்டார்.
நடுஇரவு, குரு சுதீந்திரர் சிஷ்யர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வெளியில் வந்தபோது அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க அங்கு வேங்கடநாதனை மட்டும் காணாததால் தேடிக் கொண்டே சென்றார்.
இனி ……
உடல் முழுவதும் பனியில் நடுங்கிக்கொண்டிருக்க ,அந்தக் கொட்டும் பனியில் ஓலைச்சுவடிகளுக்கு மத்தியில் குளிரில் நடுங்கியவாறே உறங்கிக் கொண்டிருந்த வேங்கடநாதனைக் கண்டார் குரு. அவரருகே கிடந்த ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்த்த சுதீந்திரர் விக்கித்து நின்றார். வகுப்பில் தான் சொல்ல இயலாமல் பாதியில் விட்ட ‘நியாயசுதா’விற்கு அனைவருக்கும் புரியும்படியான ,எளிமையான உரையை வேங்கடநாதன் எழுதியிருந்ததைக் கண்டு உள்ளம் உருகினார் குரு சுதீந்திரர். அதை போற்றும் விதமாக ,தன்னுடைய மேல் அங்கவஸ்த்திரத்தை அவருக்குப் போர்த்திவிட்டு வந்துவிட்டார்.
மறுநாள் கண்விழித்த வேங்கடநாதன் ,குருவின் மேலாடை தன் மீது எப்படிவந்தது என அறியாமல் பதறிப்போனான் . அதை மரியாதையுடன் கைகளில் ஏந்திக் கொண்டு குருவின் முன் நின்றார். வேங்கடநாதனை எதிர்பார்த்துக் காத்திருந்த குரு புன்னகையுடன் அவரை வரவேற்று அன்புடன் ,“வேங்கடநாதா,அரிய நூலுக்கு மிகச் சிறப்பாக விளக்க உரை எழுதியுள்ளாய். இந்த உரைநூலுக்கு ‘சுதா பரிமளா’என்று பெயர் சூட்டுகிறேன். இந்த அரியநூல் எழுதிய உனக்கு ‘பரிமளாச்சாரியார்’ என்ற பட்டத்தைச் சூட்டுகிறேன்.”என்று அகமகிழ்ந்து கூறி அவருக்கு மந்த்ராக்ஷதை கொடுத்து ஆசீர்வதித்தார்.
சகல சாஸ்திரங்களையும் தன் குருவிடமிருந்து குறைவற கற்றுணர்ந்த வேங்கடநாதன் மீண்டும் புவனகிரிக்கு வந்தார். தம்பிக்கு சரஸ்வதிபாய் என்ற மங்கை நல்லாளை அண்ணன் குருராஜர் திருமணம் செய்து வைத்தார். வேங்கடநாதனும் சரஸ்வதிபாயும் ஆதர்ச தம்பதிகளாக இனிதே இல்லறம் நடத்தி,தக்க காலத்தில் லக்ஷ்மி நாராயணன் என்னும் புதல்வனைப் பெற்றனர். ஆனால் பூர்வ ஜன்ம பலன் வேங்கடநாதனையும் விட்டு வைக்க வில்லை.
மகானின் சரித்திரம் தொடரும்…..
-
உலகின் மிகப்பெரிய ஆலயம் – 19
அரும்பொருளகத்துக்குள் உறைந்து கிடந்த காலம், சில சிலைகள் வழியாக உயிர்கொண்டு எழுவது போலிருந்தது எங்களுக்கு. நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தாலும் இந்த மண்ணை விட்டுச் செல்ல மனிதர்களுக்கு மனமிருப்பதில்லை. ஏதோ ஒரு வடிவில் தன்னுடைய இருப்பை விட்டுச் செல்லவே ஒவ்வோர் உயிரும் ஏங்குகிறது போலும். இங்கே உள்ள கலைப் பொருட்களை வடித்த கைகள் இன்று இல்லை. அதனால் என்ன ? அவர்கள் உருவாக்கிய பொக்கிஷங்கள் இன்னும் பல நூற்றாண்டுகளைப் பார்க்கும்.
அரும்பொருளகத்தின் கிழக்குப் புறக் காட்சிக்கூடத்திலிருந்து நாங்கள் சுற்றிப் பார்க்கத் தொடங்கினோம். கிடந்தகோல விஷ்ணுவைப் பார்க்குமுன், கண்ணாடிப் பெட்டிகளில் பலவிதமான உலோகத் திருமேனிகள் இருந்தன. எல்லாமே கம்போடியாவின் பல பகுதிகளில் இருந்து திரட்டப்பட்டு இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சில பெரிய திருமேனிகள் தனியான கண்ணாடிப் பெட்டியிலும், சிறிய திருமேனிகள் இரண்டு அடுக்குக் கண்ணாடிப் பெட்டியிலும் வைக்கப்பட்டிருந்தன.

பெரும்பாலான உலோகத் திருமேனிகள் அளவிற் சிறியனவாகவும் நல்ல நிலையிலும் இருக்கின்றன. எஞ்சியவை, பெரிய திருமேனிகளின் உடைந்த பாகங்கள். இடக் கை மட்டும் ஒன்று கிடைத்துள்ளதை வைத்து அந்தத் திருமேனியின் மொத்த அளவை ஊகித்துப் பார்த்தால் அது பெரியதாக இருந்திருக்க வேண்டும். அவ்வளவு பெரிய உலோகச் சிலைகளை வார்த்து எடுக்கும் நுட்பம் பண்டைக் கம்போடியர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
செப்புத் திருமேனிகள் எல்லாமே பலவிதமான வண்ண வேறுபாட்டில் உள்ளன. திருமேனிகளில் கலந்துள்ள உலோகங்களின் விகிதாச்சாரத்தைப் பொறுத்து அவற்றின் வண்ணம் வேறுபடுகிறது. வெண்கலம் என நாம் குறிப்பிடுவது பெரும்பகுதி செம்பு கலந்த கலப்பு உலோகத்தைத்தான். வெண்கலத் திருமேனியைப் பொதுவாக செப்புத் திருமேனி என்றுதான் அழைப்பர். தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், பாதரசம், பியூட்டர் (தகரமும் காரீயமும் கலந்த கலவை) இரும்பு, காரீயம், பிஸ்மத் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தத் திருமேனிகள் வார்க்கப்பட்டுள்ளன.
ஆக அடர்த்தியான வண்ணம் கொண்ட திருமேனியே ஆகத் தூய்மையான உலோகத்தில் வார்க்கப்பட்டது. அந்த அளவுக்குத் தூய்மை இல்லாத உலோகத்தால் வார்க்கப்பட்ட திருமேனிகள் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். வெண்கலப் பொருட்களைப் பார்த்தால் அவற்றைக் கையால் தொட்டு அது எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது என்று பார்ப்பது கம்போடியர்களின் பழக்கம். அதிலிருந்து அந்தப் பொருளில் எவ்வளவு பாதரசம் கலந்திருக்கிறது என்று சொல்லிவிடுவார்களாம் நிபுணர்கள்.
இங்குள்ள மணற்கல் சிற்பங்களுக்கும் உலோகத் திருமேனிகளுக்கும் அதிக ஒற்றுமை உண்டு. கல் சிற்பத்தில் என்னென்ன வேலைப்பாடு உள்ளதோ அதே வேலைப்பாடு உலோகத் திருமேனியிலும் உண்டு. அதேவேளையில், உலோகத்தில் மட்டுமே வார்க்கப்பட்ட திருமேனிகள் எனச் சில இங்கே உள்ளன. அவற்றைப் போன்ற மணற்கல் சிற்பங்கள் வேறு இல்லை. எடுத்துக்காட்டாக, 4 கால்கள், 16 கரங்களுடன் கூடிய நடன ஹேவஜ்ரர், எட்டுக் கரங்களுடன் கூடிய மைத்ரேயர் திருமேனிகளைக் குறிப்பிடலாம்.

ஹேவஜ்ரர் சிலை நமது நடராஜர் சிலையைப் போன்றது எனலாம். ஒற்றைக் காலில் ஒட்டுமொத்த எடையும் குவியும் வண்ணம் உள்ளது. சிற்பக் கலையில் மிகுந்த தேர்ச்சியுள்ளவர்களால் மட்டுமே அப்படிப்பட்ட திருமேனிகளை வடிக்க முடியும். சிலையின் எடையைத் துல்லியமாகக் கணித்து அதன் வடிவ அழகில் சமரசம் செய்துகொள்ளாமல் சமநிலை காண்பது எளிதான பணியல்ல. உள்ளங்காலும் உச்சந்தலையும் நேர்கோட்டில் வந்தால்தான் நடராஜ நர்த்தனம் திருத்தமாக இருக்கும்.
இந்த வடிவச் சிக்கல் காரணமாகத்தான் நம் நாட்டு சிவாலயங்களில் கல் நடராஜர் சிற்பங்களை அதிகம் காண முடியாது. கருவறைச் சுற்றுச் சுவர்களில் நாம் காணும் எல்லா நடராஜர் சிற்பங்களும் கிட்டத்தட்ட சற்றே மேம்பட்ட, எடை பரவலாக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்களே.
ஆடல் வல்லானின் இனித்தமுடன் எடுத்த பொற்பாதத்துக்கு, கீழிருந்து வரும் கல் முட்டுக் கொடுத்திருக்கும். அல்லது அம்பலவாணனின் இடுப்புவரை பின்புறக் கல்லோடு இணைந்தவாறிருக்கும். உலோகத் திருமேனிகளைப் போல், ஊன்றிய வலக்காலில் மட்டும் எல்லா எடையையும் தாங்கிய கல் நடராஜரை இதுவரை நான் கண்டதில்லை.
தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீஸ்வரம் உள்ளிட்ட எல்லா கல் நடராஜர் சிற்பங்களும் இப்படி இருப்பதைக் காணலாம். (இதைப் படிக்கும்போது, நம் கண்ணெதிரே, நமக்குத் தெரிந்து, நம்முடைய அலட்சியத்தால், மிகச் சில மாதங்களுக்கு முன் சிதைந்து இடிந்து விழுந்த மானம்பாடி சிவன் கோயிலில் இருந்த, கொள்ளை அழகுமிக்க நடராஜர் சிலையை நினைத்துப் பார்ப்போம்.)
ஊர்த்துவ தாண்டவர் சிற்பமும் கிட்டத்தட்ட நடராஜர் சிற்பத்தைப் போன்றதுதான். பாண்டியர் காலக் கோயில்களில் எல்லாம் வீரபத்திரரோடு காணப்படும் ஊர்த்துவ தாண்டவர் சிலைகளும் முதுகு, இடக் காலுக்குப் பின்னால் மண்டபப் பெருந் தூண்களோடு சேர்த்துச் செதுக்கப்பட்டிருக்கும். கஜசம்ஹாரமூர்த்தி சிலை, கல்லில் இன்னும் கஷ்டம். உடலைத் திருகிக் கொண்டு நிற்பது போன்ற வடிவத்தில் சமநிலை காண்பது மிகக் கடினமானது. உலோகத் திருமேனிகளில் கூட, உரித்த கரித்தோல், திருவாசியுடன் இணைந்து எடையைப் பரவலாக்கி இருக்கும்.
கம்போடிய அரும்பொருளகத்திலுள்ள முக்கியமான ஹேவஜ்ரர் சிலை, ஊன்றிய இடக்கால்(கள்) நுனி தவிர, இடுப்பிலிருந்து கால்களுக்கு நடுவே இறங்கும் அலங்காரத் துணியால் முட்டுக் கொடுக்கப்பட்டு வடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், 16 கைகள், மூன்று நிலைகளாக உயரும் எட்டுத் தலைகள் உள்ள இந்தத் திருமேனி, கம்போடியச் சிற்பிகளின் கைவண்ணத்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
ஹேவஜ்ரர், வஜ்ரயான பௌத்தப் பிரிவைச் சேர்ந்த போதிச்சத்துவர். நடராஜர் முயலகனை மிதித்து ஆடுவதுபோல் ஒன்றன் மேல் ஒன்றாய்க் கிடைமட்டமாக அண்ணாந்த நிலையில் அடுக்கப்பட்ட குழந்தைகள் மேல் இடக்காலை ஊன்றி ஆடுகிறார் ஹேவஜ்ரர். அந்தக் குழந்தைகளின் சடலம் மனிதர்களை காம, க்ரோத, மோக மாச்சர்யங்களுக்கு ஆட்படுத்தும் மாரனின் குறியீட்டு வடிவம். இரண்டு கால்களுக்குப் பின்னால் மேலும் இரண்டு கால்கள் இருப்பதை உற்றுப் பார்த்தால்தான் தெரியும்.
முதல் அடுக்கில் மூன்று தலை. அடுத்த அடுக்கில் 4 தலை. உச்சியில் ஒன்று என எட்டுத் தலைகள். எல்லாத் தலைகளிலும் நெற்றிக் கண் உள்ளது. வலப்பக்கமுள்ள எட்டுக் கைகளிலும் விதவிதமான விலங்குகளை வைத்திருக்கிறார் ஹேவஜ்ரர். இடப்பக்கமுள்ள எட்டுக் கைகளில் அமர்ந்த கோலத்திலுள்ள பலவித மனிதர்களை உள்ளங்கையில் தாங்கியிருக்கிறார். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று தேடிப் படிக்க வேண்டும். சினமிக்க காக்கும் கடவுள் எனச் சொல்லப்பட்டாலும் எல்லா முகங்களிலும் எல்லையற்ற கனிவும் கருணையும்தான் தெரிகிறது. நெடுங்காலம் மண்ணுக்குள் புதைந்துகிடந்த திருமேனி போலும். முகம் அரித்துப் போயிருக்கிறது. எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காத சிலை. அங்கோர் பாணியைச் சார்ந்த 12ஆம் நூற்றாண்டுத் திருமேனி இந்த ஹேவஜ்ரர். நடுத்தர உயரம்தான் என்றாலும் நுணுக்கமான சிலை.

புனோம்பென் அரும்பொருளகத்தில் அடுத்து நாம் கவனிக்க வேண்டியவை இரண்டு மைத்ரேயர் சிலைகள். ஒன்று ஏழாம் நூற்றாண்டு. மற்றது பத்தாம் நூற்றாண்டு. ஏழாம் நூற்றாண்டு மைத்ரேயர் 35 செ.மீ உயரம். நான்கு கைகள். முழங்கால் வரையுள்ள ஒரே ஒரு துண்டுமட்டும் அணிந்தவாறு காணப்படும் இந்த மைத்ரேயரின் முகத்தில் தென்படும் புன்னகை அபாரமானது. சிரிக்க எத்தனிக்கும்முன் எடுத்த படம் போன்ற நிலையில் பிரியத் தொடங்கும் உதடுகள். முன்கைகள் முழங்கைக்குப் பிறகு இல்லை. பின்னங்கைகள் இரண்டும் வித்தக முத்திரையில் உள்ளன. ஜடாபாரமாகக் கட்டிய முடிக்கு நடுவே ஒரு ஸ்தூபி போன்ற முடிச்சு உள்ளது.
பத்தாம் நூற்றாண்டு மைத்ரேயர், கொஞ்சம் உயரமானவர். 75 செ.மீ. மொத்தம் எட்டுக் கைகள். முன் கை இரண்டும் தான முத்திரையில் உள்ளன. எஞ்சிய ஆறு கைகளும் வித்தக முத்திரையில் உள்ளன. இவரது ஆடை கொஞ்சம் வேலைப்பாடுகளுடன் உள்ளது. இலேசாக முறுக்கிய, அழகான மீசையுண்டு இவருக்கு. மெல்லிய தாடியும் உண்டு. வடிந்த காதுகள். நான்கு நிலைகளாக மகுடம்போல் தலைமுடி கட்டப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு முக்கியமான திருமேனிகளைத் தவிர, உலோகப் பிரிவில், தலையும் கால்களும் இல்லாத ஓர் ஆண் தெய்வத்தின் உடல் மட்டும் கொண்ட திருமேனி ஒன்று உள்ளது. வலப்பக்கக் கால் முழுவதுமாக இல்லை. இடக்கால் முழங்கால் வரை உள்ளது. இடக் கை இல்லை. வலக்கை முழங்கை வரை உள்ளது. 11ஆம் நூற்றாண்டுத் திருமேனி. அரும்பொருளகச் சேகரிப்பு அறையிலிருந்து 2000ஆம் ஆண்டுதான் வெளியே காட்சிக்குக் கொண்டு வரப்பட்டதாம். மடிப்பு மடிப்பாக உள்ள ஆடை இடைக்குக் கீழ் மட்டும் உள்ளது. திறந்த மார்பில் அணிகலன் ஏதும் இல்லை. 11ஆம் நூற்றாண்டின் பாப்புவான் பாணித் திருமேனி என்கிறது அரும்பொருளகக் கையேடு.
சுண்டு விரல்மட்டும் நீண்ட இடக் கரம் ஒன்று உள்ளது ஓரிடத்தில். கட்டை விரல் உள்ளிட்ட அத்தனை விரல்களிலும் மோதிரங்கள் உள்ளன. உள்ளீடற்ற கை. எந்தத் திருமேனியினுடையது என்பதை ஊகிக்க முடியவில்லை. தாவும் நிலையிலுள்ள அனுமன், இரண்டு கை, நான்கு கைகளோடு அமர்ந்த நிலையிலுள்ள கணேசர் விக்கிரகங்கள் ஐந்தாறு உள்ளன. ஒரு விநாயகர் பின்னங்கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தியிருக்கிறார். 13ஆம் நூற்றாண்டுத் தும்பிக்கையாழ்வார் !

ஆவுடையார் மீது நிற்கும் நிலையில் மூன்று திருமேனிகள் உள்ளன. சிவா, விஷ்ணு, லட்சுமி என்கிறது கையேடு. விஷ்ணுவுக்கு சங்கு, சக்கரம் ஏந்திய நான்கு கரங்கள். சிவனுக்கு இரண்டு கரங்கள். ஒன்றில் திரிசூலம். மற்றொன்று என்னவென்று அடையாளங்காண முடியவில்லை. இதே போல் பௌத்தத் திருமேனிகள் மூன்று உள்ளன ஒரே பீடத்தில். நடுவே நாகபுத்தர். பாம்பணை மேல் பத்மபீடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம். புத்தருக்கு வலப்பக்கத்தில் லோகேஸ்வரர் நான்கு கரங்களோடு. இடப்பக்கத்தில் பிரஜ்னபரம்பிதா. இவர் நமக்குப் புதியவர். மஹாயான பௌத்தத்தில், முழுமை பெற்ற விவேகி என்ற பொருளாம் இந்தப் பெண் தெய்வத்துக்கு. இந்தத் திருமேனி வலக்கையில் சுவடிக்கட்டும் இடக் கையில் தாமரை மொக்கும் வைத்திருக்கிறது. வாக்தேவி ??? 13ஆம் நூற்றாண்டுத் திருமேனி இது. வித்தியாசமானது நமக்கு. தனித் தனியாகச் செய்து பொதுவான பீடத்தில் அமர்த்தியுள்ளனர் இந்தத் திருமேனிகளை.

இந்து ஆலயங்களில் பயன்படும் திருவாசியைப் போன்ற வடிவத்தில் ஒன்று இருந்தது. மகர தோரணத்தின் முடிவில் நாக முகப்புடன் இருந்தது அது. இத்துடன் சில புத்தர் சிலைகள், கருடன், சிங்கச் சிலைகள் என நிறைவாக இருந்தது உலோகப் பகுதி.
பொன். மகாலிங்கம்
பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
-
மக்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காக பிறவி எடுத்த வேங்கடநாதன்
மக்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காக பிறவி எடுத்த வேங்கடநாதன்
சென்ற பதிவின் தொடர்ச்சி…….
திம்மண்ணரின் மனைவி கோபிகாம்பாள் திருமலை தெய்வத்தின் கருணையால் கர்ப்பவதியானாள். கி.பி.1595ஆம் ஆண்டு குருவாரத்தில் ,மிருகசீரிஷ நட்சத்திரத்தில் காண்பவர் வணங்கத்தக்க தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.
வேங்கடவனிடம் வைத்த வேண்டுதலினால் பிறந்த குழந்தை ஆதலால், குழந்தைக்கு வேங்கடநாதன் எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர் பெற்றோர்.குழந்தையின் முகப் பொலிவைக் கண்டு பெற்றோர் மட்டுமின்றி ஊர் மக்களே பிரமித்தனர். அந்த தெய்வீகக் குழந்தைப் பிறந்ததினால் புவனகிரியும் புனிதமடைந்தது.
உரிய நேரத்தில் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்து வைத்து மூன்று வயதில் அக்ஷராப்யாஸமும் செய்து வைத்தார் திம்மண்ண பட்டர். தாயாரின் ஹரி கீர்த்தனைகளையும் ,தந்தையார் இறைவன் முன் அனுதினமும் பாராயணம் செய்வதையும் தன் தாயின் கருவறையில் இருந்து கேட்டுக் கொண்டே வளர்ந்திருந்தான் வேங்கடநாதன்.
குடும்பம் வறுமையில் சுழல, சுசீந்திரரின் கட்டளையை ஏற்று மீண்டும் கும்பகோணம் வந்து சேர்ந்தார் திம்மண்ணர். ஸ்ரீமடத்தில் வித்வத்சபையில் தான் கலந்துகொள்ளும்போது வேங்கடநாதனையும் தவறாது உடன் அழைத்துச் செல்வார் திம்மண்ணர். சிறுவனின் தேஜஸைக் கண்ட சுசீந்திரருக்கு அவர் மீது மிகுந்த பற்று உண்டாயிற்று. திம்மண்ணரின் இறுதிக் காலத்தில்,வேங்கடநாதன் தமையன் குருராஜனிடம் ஒப்படைக்கப்பட்டான்.
தமையன் குருராஜன், தந்தையாரின் மரணத்திற்கு பின்,தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வேங்கடநாதனுக்கு உபநயனம் செய்வித்து வித்யாப்யாசத்தின் பொருட்டு மதுரை லக்ஷ்மிநரசிம்மாச்சாரிடம் அனுப்பிவைத்தார்.அவரிடம் வேங்கடநாதனும் வேதாந்த தர்க்க வியாகரணம், சாஹித்யம் மீமாம்சை முதலிய சாஸ்திரங்களைக் கற்றார். அத்துடன் வீணா கானத்திலும் சிறந்து விளங்கினார்.
மேலும் தன்னுடைய ஞானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த வேங்கடநாதன் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.அங்கு மடத்தில் ஸ்ரீ விஜயேந்திரருடன் ஸ்ரீ சுதீந்திரரும் தங்கியிருந்தார். இவர்கள் முன் சென்று பணிந்து நின்ற வேங்கடநாதனின், முக தேஜஸையும், லட்சணங்களையும் பார்த்து, இவர் சாதாரண பிறப்பல்ல என்பதை அறிந்து இருவரும் பரவசப்பட்டனர். இவர் மக்களின் நன்மைக்காகவும் அவர்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காகவும் பிறவி எடுத்துள்ளதை புரிந்துகொண்ட இருவரும் வேங்கடநாதனை ஆசீர்வதித்தனர்.
சாஸ்த்திர ஞானம் ஏற்பட சுதீந்திரரிடம் சிஷ்யனாக வேண்டும் என அவர் முன்பு நமஸ்கரித்து நின்ற வேங்கடநாதனை மிக்க மகிழ்ச்சியுடன் சீடனாக ஏற்றுக்கொண்டு பல சாஸ்திர விஷயங்களைக் கற்பித்து வந்தார் சுதீந்திரர்.
ஒருநாள் குரு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே இன்று பாடம் போதும் என்று சொல்லி எழுந்து விட்டார்.அனைவரும் படுக்கச் சென்று விட்டனர். ஆனால் வேங்கடநாதனோ தனிமையில் அமர்ந்து கொண்டு குரு சொன்னவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அன்றைய பாடம் ஸ்ரீமத்வரின் பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு ஸ்ரீ ஜெயதீர்த்தர் கொடுத்துள்ள உரைநூல்’ நியாயசுதா’ என்ற நூலுக்கு விளக்கத்தைக் கூறிக் கொண்டிருந்தார். திடீரென்று விளக்கம் சொல்ல இயலாமல் பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.அதையே நினைத்துக் கொண்டிருந்த வேங்கடநாதன் அப்படியே பனியில் படுத்து உறங்கிவிட்டார்.
நடுஇரவு, குரு சுதீந்திரர் சிஷ்யர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வெளியில் வந்தபோது அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க அங்கு வேங்கடநாதனை மட்டும் காணாததால் தேடிக் கொண்டே சென்றார்.
மகானின் சரித்திரம் தொடரும்…..
-
உலகின் மிகப்பெரிய ஆலயம் – 18
நாலே நாலு ஆண்டுகள் நீடித்த கம்யூனிஸ்ட் ஆட்சி கொன்று குவித்த கம்போடியர்களின் எண்ணிக்கை சுமார் 17 இலட்சம் !… இது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட எண்ணிக்கை. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் என்கின்றன மனித உரிமைக் குழுக்கள். பல்வேறு நம்பகமான இணையப் பக்கங்களில் படித்த தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கம்யூனிஸ்ட் அரசால் மடிந்தவர்கள் எண்ணிக்கை 20 இலட்சத்திலிருந்து 35 இலட்சம் வரை வேறுபடுகிறது. மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்பங்கினர் கொன்றொழிக்கப்பட்டனர். வதை முகாமில் உறுப்பினர் ஒருவரையாவது பலி கொடுக்காத கம்போடியக் குடும்பம் ஒன்றுகூட இல்லை என்று சொல்லிவிடலாம்.
பசி, பட்டினி, மிதமிஞ்சிய உடலுழைப்பு, சித்திரவதை, தொற்று நோய்கள், கொலை ஆகிய காரணங்களால் மடிந்தது மக்கள் கூட்டம். இலங்கை போல் இது இனப் பகைமையால் விளைந்த அழிவல்ல. சிங்களர், தமிழர் என்ற பிரிவினைபோல் கம்போடியாவில் இனப் பிரிவினை ஏதுமில்லை. கொன்றதும் கம்போடியர்களே… மாண்டதும் கம்போடியர்களே. சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவிக்க அப்படி என்ன காரணம் இருந்திருக்க முடியும் ?

கொலைக்குக் காரணமான கெமரூஷ் ஆட்சி நாயகன் போல் போட். அவருக்குத் துணையாக இன்னும் இருவர். கியூ சம்ஃபான், நுவோன் சியா. மூவருமே ஃபிரான்சில் கல்வி கற்ற கம்யூனிஸ்ட்டுகள். 1960-களில் தொடங்கியது கம்யூனிஸ்ட்டுகளின் ஆயுதக் கிளர்ச்சி.
நாட்டின் வட-கிழக்கில் அடர்ந்த காட்டுப் பகுதியைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட அது தொடக்கத்தில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், 1970-இல் வலதுசாரி இராணுவம் அமெரிக்க ஆதரவாளர்களோடு மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பில், நாட்டுத் தலைவர் இளவரசர் நொரோடம் சிஹானூக் வீழ்த்தப்பட்டார். அப்போது சிஹானூக்கிற்கு ஆதரவாக அரசியல் அரங்கில் நுழைந்தது கெமரூஷ். மெல்ல மெல்ல அதன் ஆதரவுத்தளம் விரிவடைந்தது.
சுமார் ஐந்து ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் விளைவாக, கிராமப் புறங்களில் கெமரூஷ் செல்வாக்குப் பெற்றது. முதலில் தலைநகர் புனோம் பென்னைக் கைப்பற்றிய கெமரூஷ் படை, 1975-இல் நாடு முழுவதையும் கைப்பற்றியது. தலைவர் போல்போட் மலைப்பகுதியில் வசித்தபோது அங்குள்ள பழங்குடியினம் பணம் என்றால் என்னவென்றே அறியாமல் தன்னிறைவோடு வாழ்ந்து வந்தது அவருக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த மலைவாழ் மக்களிடம் பௌத்த சமயமோ வேறெந்த சமயமுமோ பரவியிருக்கவில்லை.
கம்யூனிச சித்தாந்தங்களோடு மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையையும் சேர்த்துக் கலக்கி, தமக்குள் ஒரு கொள்கையை உருவாக்கிக் கொண்டார் போல்போட். சகாக்களுக்கும் அதை போதித்து ஏற்றுக்கொள்ளச் செய்தார். கம்போடியாவில் விளைந்த எல்லா அனர்த்தங்களுக்கும், இந்தத் தவறான புரிதல்தான் மூலகாரணம்.
எல்லாருக்கும் எல்லாமும் சொந்தம். பணம் கூடாது. சமயம் கூடாது. தனிமனிதச் சொத்துரிமை கூடவே கூடாது. கல்வி வேண்டாம். அறிவு வேண்டவே வேண்டாம். அறிவாளிகளைக் கொன்று புதைத்துவிட்டுத்தான் மறுவேலை. வெளிநாட்டு உறவுக்குத் தடை. அந்நிய மொழிகளைக் கற்கக் கூடாது, பேசக் கூடாது. அந்நியரோடு உறவாடக் கூடாது. விவசாயம் செய்யத் தெரியாதவன், விவசாய வேலை செய்யாதவன் உயிர் வாழவே அருகதையற்றவன், முதல் குற்றவாளி.. இவைதான், கெமரூஷ் அரசின் ஆதாரக் கொள்கைகள். இதற்கு உடன்படாத எல்லாரும் எதிரிகளே..
1975-இல் ஆட்சியைப் பிடித்ததும் போல்போட்டும் சகாக்களும் நடைமுறைப்படுத்திய கொள்கைகளால் கம்போடியா சின்னாபின்னமானது. கல்வியாளர்கள், நிபுணர்கள், அறிவுஜீவிகள் அடையாளங் காணப்பட்டு முதலில் கொல்லப்பட்டனர். இதனால், தனது தேசிய முன்னேற்றத்தில் இன்னமும் ஒரு தலைமுறை பின்தங்கிப் போனது கம்போடியா. கம்போடியாவை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்திய போல்போட், புனோம் பென் போன்ற பெரிய நகரங்களில் இருந்து குடிமக்களைக் காலிசெய்து கிராமங்களை நோக்கி ஓட வைத்தார். தனது கொள்கைகளை, நடவடிக்கைகளை விமர்சித்தால் சித்திரவதை, கொலை என்று பேயாட்டம் ஆடினார் போல்போட்.
போல்போட்டின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவர்களில் பெரும்பாலோர், கிராமப்புறங்களைச் சேர்ந்த பதின்ம வயதினர். வதை முகாம்களில் சக கம்போடியர்களை இவர்கள் வதைத்த கதை பக்கம் பக்கமாக நீள்கிறது. S-21 சிறைச்சாலை அப்படிப்பட்ட ஒரு சித்திரவதை முகாம். அதைப் பார்க்க எங்களுக்கு நேரமில்லாமற் போனது பெரிய சோகம். உண்மையில் அது ஓர் உயர்நிலைப் பள்ளி. அங்கு நேர்ந்த கொடுமைகளை முழுமையாக விவரித்தால் உங்களில் பலரால் இதைப் படித்தபின் தூங்க முடியாது.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று. ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொல்ல, துப்பாக்கி ரவையை வீணடிக்க விரும்பாமல் கையில் கிடைத்த கனமான பொருட்களைக் கொண்டு தாக்கியே கொல்வார்களாம். பிள்ளைகளின் கால்களைப் பிடித்துக்கொண்டு தலையை அறைந்து மோதிக் கொல்வதற்கென்றே அங்கு ஒரு மரம் உண்டு. இப்போதும் அந்த மரம் அங்கே இருக்கிறது.

அந்தப் பள்ளிக்கூடம், நடந்த கொடுமைகளின் சாட்சியாக இன்னமும் பாதுகாக்கப்படுகிறது. அங்கும் மற்ற பல வதை முகாம்களிலும் கொல்லப்பட்டு கூட்டம் கூட்டமாகப் புதைக்கப்பட்டனர் கம்போடியர்கள். ஆழமாகக் குழிவெட்டிக் கூடப் புதைக்க நேரமில்லை கொடுங்கோலர்களுக்கு. கொல்லப்பட வேண்டிய கூட்டம் காத்திருக்கிறதே… குறைந்த ஆழத்தில் புதைத்ததால் இலேசான மழை பெய்தால் கூட இப்போதும் ஆங்காங்கே எலும்புகளும் மண்டையோடுகளும் வெளிக் கிளம்பும்.
நான்கு ஆண்டுகள் நீடித்தது இந்தக் கெமரூஷ் ஆட்சி. 1979-இல் கம்போடியாவை ஊடுருவிய வியட்நாமியப் படைகளால் ஒருவழியாக கெமரூஷ் ஆட்சி முடிவுக்கு வந்தது. கெமரூஷ் தலைவர்கள், காட்டுப் பகுதிக்குள் ஓடிப் பதுங்கிக் கொண்டனர். நாளடைவில் அவர்களின் செல்வாக்கு மறைந்து, கம்போடியா வெளி உலகத் தொடர்புக்கு வந்தபோதுதான், 1975-முதல் 1979-வரை அங்கு நடந்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்தன. சித்திரவதை முகாமில் இருந்தவர்களைப் படம் எடுத்துப் பதிவு செய்தவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார். அந்தப் படங்கள் பல கதைகளைச் சொல்லாமல் சொல்லின.
வதை முகாமில் தப்பிப் பிழைத்தவர்கள் சொன்ன கதைகளைக் கேட்டு விக்கித்துப் போனது அனைத்துலக சமூகம். கில்லிங் ஃபீல்ட்ஸ் என்றொரு ஹாலிவுட் திரைப்படம், நடந்த கொடுமைகளை ஆவணமாகப் பதிவு செய்தது. பின்னர் வந்த அரசாங்கம், போல்போட்டை அவரது வீட்டிலேயே சிறை வைத்தது. 1998-இல் அவர் எந்தத் தண்டனையும் அனுபவிக்காமல் மாண்டுபோனார்.
கெமரூஷ் ஆட்சியில் அதிபராகப் பதவி வகித்த கியூ சம்ஃபானுக்கும், மற்றொரு முக்கியப் புள்ளியான நுவோன் சியாவுக்கும் ஐக்கிய நாட்டு நிறுவன ஆதரவோடு இயங்கும் கம்போடிய நீதிமன்றம் 2014-இல் ஆயுள்தண்டனை விதித்தது. இன அழிப்பு, மனித குலத்துக்கு எதிரான குற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இப்போதும் அந்த இருவர் மீதும் விசாரணை நடந்து வருகிறது.
“எல்லாமே வியட்நாமியச் சதி” என்று சாதித்துவரும் இருவரும், இன அழிப்பு என்று சொல்வதே தவறு என்கின்றனர். “பசிப் பிணியைப் போக்க, உடனடியாக மக்கள் தொழிலாளர் முகாம்களில் உழைக்குமாறு பணிக்கப்பட்டனர். இது ஒரு குற்றமா ஐயா?” என்று கேட்கிறார் கியூ சம்ஃபான்.
கம்போடியாவின் இப்போதைய பிரதமர் ஹுன் சென்னே கெமரூஷின் அந்நாளைய உறுப்பினர்தான். வியட்நாமுக்குத் தப்பிச் சென்ற அவர், பின்னர் வியட்நாமிய ஆதரவோடு அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். ஆகவே இது வியட்நாமியச் சதி என்கின்றனர் கெமரூஷ் முன்னாள் தலைவர்கள். கெமரூஷ் ஆட்சிக் காலத்தில்தான் கம்போடியக் கலைப்பொருட்கள் பெரிதும் சிதைக்கப்பட்டன, களவுபோயின. கழுத்தில்லா புத்தர் சிலை எல்லாம் கெமரூஷின் கைங்கர்யம்தான். இத்தனை களேபரத்தையும் தாண்டி இவ்வளவு மிஞ்சியிருப்பதே கூட நமது நல்லூழ் என்றுதான் சொல்ல வேண்டும்.
கெமரூஷ் படையினருக்கும் வியட்நாமியப் படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையின் சாட்சியாக அங்கோர் வாட் ஆலயத்தில் இன்றும் சில துப்பாக்கிச் சூட்டுத் தடயங்களைப் பார்க்கலாம். கெமரூஷ் ஆட்சிக் காலத்தில் களவுபோன பல அரும்பொருட்கள் சோத்பி, கிறிஸ்டிஸ் போன்ற உலகின் முன்னணி ஏல நிறுவனங்களால் ஏலம் விடப்பட்ட சம்பவங்கள் உண்டு. கம்போடிய அரசாங்கம் இப்போது அதைத் தடுத்து நிறுத்தி அவ்வாறு அடையாளம் காணப்படும் சிலைகளைத் திரும்பிப்பெறப் போராடி வருகிறது.
2014-இல் அமெரிக்கா இரண்டு திருட்டுச் சிலைகளைத் திருப்பித் தந்தது. உலகெங்கும் உள்ள அரும்பொருளகங்களும் கலைப்பொருள் சேகரிப்பாளர்களும் கம்போடிய அரும்பொருட்களைத் திருட்டுச் சந்தையில் வாங்கியிருந்தால், அன்புகூர்ந்து அதைத் திருப்பித் தந்துவிடுங்கள் என்று வலியுறுத்தி வருகிறது கம்போடியா. இந்தியப் பாரம்பரியச் செல்வங்களைக் கொள்ளையடித்து விற்பதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த சுபாஷ் சந்திர கபூர் போன்ற பணக்காரத் திருடர்கள் விற்பனை செய்த அரும்பொருட்கள் உலகெங்கும் உள்ள தனியார் அரும்பொருளகங்களை அலங்கரித்து வருகின்றன.
அண்மைக் காலமாக அதுபற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், சிலைகளின் ரிஷிமூலம், நதிமூலம் கேட்காமல் எந்தக் கலை நிறுவனமும் எதையும் வாங்குவதில்லை. கம்போடியாவுக்கு நேரில் சென்ற பிறகுதான் அங்கே இவ்வளவு கலைச் செல்வங்கள் இருக்கின்றன என்பதே எங்களுக்குத் தெரியவந்தது. அதுவரை அங்கோர் வாட் பற்றி மட்டும்தான் படித்திருந்தோம். ஆனால், புனோம் பென்னிலுள்ள அரும்பொருளகத்துக்குள் நுழைந்ததும்தான் தெரிந்தது, கல்லில் மட்டுமல்ல, உலோகத் திருமேனி வார்ப்பிலும் கம்போடியர்கள் வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள் என்று.

அரும்பொருளக நுழைவுக் கட்டணம் 5 டாலர்தான். உலகின் உண்மையான பொக்கிஷங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் அரும்பொருளகங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். என்னைப் பொறுத்தவரை புத்தகங்களுக்கும் அரும்பொருளகங்களுக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கத் தயார்.
புனோம் பென்னிலுள்ள அரும்பொருளகம், பாரம்பரியக் கெமர் கலை பாணியில் கட்டப்பட்ட மிக அழகான கட்டடம். அந்தக் கட்டடத்தின் அழகே நம்மை அசத்திவிடுகிறது. பசுமையான, இதமான, கம்பீரமான முகப்பு. எந்தவொரு நாட்டின் அரும்பொருளகமும் அந்தந்த நாட்டுப் பாரம்பரியக் கட்டட வடிவமைப்போடு இருக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் மிக அழகான பிரிட்டிஷ் கட்டடத்தில் அமைந்திருக்கும். அது உள்நாட்டுப் பாரம்பரியக் கட்டடம் இல்லையென்றாலும்கூட சிங்கப்பூரின் தட்ப-வெப்பச் சூழலுக்கேற்ற அதன் பழமையும் வடிவமைப்பும் அற்புதமாக இருக்கும். மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது அது.
சென்னை அரும்பொருளகமும் பிரிட்டிஷார் அமைத்ததுதான். சொல்லப் போனால், இந்தியாவின் இரண்டாவது ஆகப் பழமையான அரும்பொருளகம் நமது சென்னை அரும்பொருளகம்தான். இந்தியாவில், கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷார் அரும்பொருளகம் கட்டியது சென்னையில்தான். இந்தியாவைச் சுற்றி அப்போது பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட கலைச் செல்வங்கள், கொல்கத்தாவிலும் சென்னையிலும்தான் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? எந்த வரலாற்று ஆசிரியராவது நமக்கு இதைக் கற்பித்து அதன் அருமையை உணர்த்தியிருக்கிறாரா? சென்னை அரும்பொருளகத்தின் அருமை, பிற்காலத்தில் அங்கு செப்புத் திருமேனிகளுக்கான தனிக் கட்டடம் உருவாக்கப்படும்போது அதைத் திட்டமிட்டு வடிவமைத்த அதிகாரிகளுக்கும் பொறியாளர்களுக்கும் தெரிந்திருந்ததா? போய்ப் பாருங்கள். எவ்வித ரசனையுமின்றி ஒரு மாபெரும் சரக்குக் கிடங்குபோல் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.
உள்ளே இருக்கும் திருமேனிகள் எல்லாம் நம் மூதாதையரின் ரசனையும் திறமையும் மேதமையும் வெளிப்படும் பொக்கிஷங்கள். அதைக் காட்சிப்படுத்தும் இடமோ மிகச் சாதாரணமானது. சிங்கத்தின் பாலைத் தங்கக் கிண்ணத்தில் அல்லவோ வைக்க வேண்டும்? சும்மாவா வைரத்தை நீல வெட்வெட் துணியில் பொதிந்து காட்சிக்கு வைக்கிறார்கள் ?
இந்தியாவும் பொருளாதாரத்தில் உயரும்போது தனக்கான அழகிய அரும்பொருளகங்களை வடிவமைத்துக் கட்டிக்கொள்ளும் என்று நம்புவோம். கம்போடிய அரும்பொருளகம் வெளியிலிருந்து பார்க்கும்போதே எங்கள் எதிர்பார்ப்பைத் தூண்டியது. உள்ளே இருந்த கலைப் பொருட்களோ எங்கள் எதிர்பார்ப்பையும் மிஞ்சிவிட்டன. விவரம் தெரிந்த நாள்முதல் எத்தனையோ சிலைகள், புடைப்புச் சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், ஆலய வழிபாட்டிலுள்ள விக்கிரகங்களைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு. செப்புத் திருமேனிகளில் சோழர்காலச் சிலைகளை எவராலும் மிஞ்சமுடியாது என்றே இறுமாந்து போயிருந்தேன் நான்.
அதற்கு எடுத்துக்காட்டாக, தஞ்சை அரண்மனை வளாகக் கலைக் கூடத்திலுள்ள அம்மையுடன் ரிஷப வாகன தேவர், வள்ளி-தெய்வானையோடு கூடிய முருகன், பிக்ஷாடனர், கல்யாண சுந்தரர், சந்திரசேகரர் சிலைகளைச் சொல்லலாம். திருவெண்காட்டில் கிடைத்த திருமேனிகள் அவை. மாயூரம் திரிபுராந்தகர், தஞ்சையில் கிடைத்த வீணாதர தக்ஷிணாமூர்த்தி, திருவாலங்காடு நடராஜரும் காளியும்.. என்று சொல்லிக் கொண்டே போகலாம். உலோகத்தில் அவைதான் உச்சம் என்பேன் நான். அதேபோலத்தான் பல நடராஜர் சிலைகளும். இவற்றை விட வேறு எந்தக் கொம்பனால் சிறப்பாகத் திருமேனிகளை வடித்துவிட முடியும் என்ற கர்வமேகூட எனக்குண்டு.
ஆனால் அந்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்துவிட்டது, புனோம் பென் அரும்பொருளகத்திலுள்ள ஒரு விஷ்ணு சிலை. இத்தனைக்கும் அதில் வேலைப்பாடு அதிகம் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் அதில் சொல்ல முடியாத என்னமோ இருக்கிறது. அது என்னைச் சுற்றிச் சுற்றி வர வைத்தது. இராவணன் திரைப்படத்தில், காட்டாற்றை மறித்தவாறு கிடக்கும் விஷ்ணு சிலையின் மூலம், இந்தச் சிலையாகத்தான் இருக்க முடியும். படத்தின் கலை இயக்குநர் புனோம் பென் வந்து இந்தச் சிலையைப் பார்த்தாரா அல்லது படத்தில் இதைப் பார்த்து மயங்கினாரா தெரியவில்லை.

புனோம் பென் விஷ்ணு சிலை 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மார்பளவுச் சிலைதான் கிடைத்திருக்கிறது. அதன் கீழே உள்ள பகுதி கிடைக்கவில்லை. முதலில் வடிக்கப்பட்டதே மார்பளவுக்குத்தானா அல்லது முழுமையாகவே பள்ளி கொண்ட பெருமாளாக வடிக்கப்பட்டதா என்பதை ஊகிக்க முடியவில்லை. மார்பளவிலேயே முழுமையான சிலையாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை முழுமையான சிலையாக இருந்து முழுமையாகவே அது கிடைத்தும் இருந்தால், உலகின் ஒப்பற்ற சிலைகளில் ஒன்றாக அது இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
1936-ஆம் ஆண்டு சியெம் ரீப்பில், மேற்குப்புற மெபோன் ஆலயத்தில் புதையுண்டு கிடந்த இந்தச் சிலை எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1950-இல் அரும்பொருளகத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிடுகிறது அரும்பொருளகக் கையேடு. சிதிலமடைந்த சிலைதான்.
நான்கு கைகளில், வலப்பக்கக் கைகள் இரண்டுதான் உள்ளன. அவையும் முழுமையாக இல்லை. தலையின் பின்பகுதி அரித்துப் போயிருக்கிறது. ஆனால் முகம் முழுமையாகக் கிடைத்திருக்கிறது. சதுர வடிவிலான அப்பட்டமான கெமர் முகம். பார்த்தசாரதி கோயில் பெருமாளைப் போல மீசையுள்ள விஷ்ணு. தடித்த உதடுகள். பெரிய காதுகள். மீசை, புருவம், கண்களில் இலேசான பள்ளம் உள்ளது. அந்த இடத்தில் அருமணிகள் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இங்குள்ள சில சிவன் சிலைகளிலும் இதுபோன்ற பள்ளம் உள்ளது.
மார்பில் அழகான இரத்னாஹாரம் துலங்குகிறது. நடுவிலுள்ளது பெரிய இரத்தினக் கல். அதைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் நான்கு சிறிய கற்கள். உள்ளீடற்ற உலோக வார்ப்புச் சிலை. உட்கூடு தெளிவாகத் தெரிகிறது. இரண்டு கைகளிலும் கடகவளையும் கங்கணமும் உள்ளன. இரத்னாஹாரத்தின் பின்பகுதியில் 11 முத்துத் தொங்கல்கள் உள்ளன. தலை அலங்காரம் எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. அநேகமாகத் தலைக்குத் தனியான மகுடம் செய்து பொருத்தியிருக்க வேண்டும்.
தலைக்கும் அணை கொடுக்கும் கைக்கும் இடையே சிறிய இடைவெளி உள்ளது. அருமணிகள் பதித்த பெரிய கெமர் மகுடம் தனியாகப் பொருத்தப்பட்டிருக்கலாம். மிக ஒயிலாகப் படுத்திருக்கிறது சிலை. அரும்பொருளகத்தின் உள்ளே நுழைந்தவுடன் இடப்பக்கத்தில் கடைசியில் கிடத்தப்பட்டிருக்கிறார் விஷ்ணு.
ஆனால் உள்ளே போனது முதல் வெளியேறும் வரை என்னால் அந்தச் சிலையை விட்டுக் கண்ணையே எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு அபார ஈர்ப்பு அதனிடம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வெண்கலச் சிலையை வடிக்கும் உலோகவியல் தொழில்நுட்பம் கெமர் கலைஞர்களிடம் இருந்திருக்கிறது. உலோகத் திருமேனிகளுக்குள் அருமணிகளைப் பதிக்கும் தொழில்நுட்பமும் இவர்களுக்குக் கைவந்திருக்கிறது.
புனோம் பென் அரும்பொருளகத்துக்குள் கேமராவுக்கு அனுமதியில்லை. அதனால் நல்ல படங்களை எடுக்க முடியவில்லை. ஆனாலும் கைத் தொலைபேசியில் படம் எடுப்பதை அங்கிருந்த ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. மற்றவர்களும் எடுத்ததால் நாங்களும் ஐஃபோனில் படம் எடுத்துக் கொண்டோம். உலோகம், கல், மரம், எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அரும்பொருட்கள் அழகாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எல்லாமே, இந்து, பௌத்த சமயத் திருவுருவங்கள்தான். ஆனால், அந்தச் சிலைகளின் படைக்கலங்களை வைத்துத்தான் அவற்றை சிவன், விஷ்ணு, பிரம்மா, இலக்குமி என்று நம்மால் அடையாளங்காண முடிகிறது. கெமர் முகமுள்ள சிவனை நம் உள்மனம் ஏற்க மறுக்கிறது. ஆனால், சற்று நேரம் அரும்பொருளகத்தைச் சுற்றிவந்ததும் அந்த வேறுபாடு மறையத் தொடங்குகிறது.
இந்த அரும்பொருளகத்துக்கு வந்ததற்கு, இந்த விஷ்ணு சிலை ஒன்றுபோதும். மற்ற எல்லாமே போனஸ்தான் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். எங்களைத் தவிர ஓரிரு சீனர்கள் வந்திருந்தார்கள். உள்ளூர் ஆட்கள் கிட்டத்தட்ட இல்லை எனலாம். இங்கே ஓரிரு மணி நேரம் செலவிட எங்களுக்கு நேரமிருந்தது. உலோகச் சிலைகள் பகுதியில்தான் நான் அதிக நேரத்தைச் செலவிட்டேன். இது ஒரு பயனுள்ள, முழுமையான நாள் எங்களுக்கு. இன்று நாங்கள் வாழ்ந்தோம்.
– பொன். மகாலிங்கம்
பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
-
மந்திராலய மகானை தரிசிப்போம்
“பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருட்சாய நமதாம் காமதேனவே”
“சத்தியமும், தர்மமும்,பக்தியும் உண்மையானால் ,ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளிடம் கேட்பது கிடைக்கும்”
உலக ஷேமத்தின் பொருட்டு யுகங்கள்தோறும் மகான்கள் அவதரிக்கிறார்கள்.இறைவனே தன்னுடைய அடியவர்களுக்காக மகான்களாக அவதரிக்கிறார்.
அப்படியாக, கலியுக கல்பக விருட்சமாகவும்,கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அருளும் காமதேனுவாக ராகவேந்திர சுவாமிகள் அவதரித்தார். தன்னை நோக்கி வரும் அபயக் குரலுக்கு ஓடோடி வந்து அருள் புரியும் அந்த மந்திராலய மகானைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டாமா?.
தான் பெற்ற எண்ணிலடங்கா வரத்தினால் மக்களை வாட்டி வதைத்த , இரண்ய கசிபுவை சம்ஹாரம் செய்ய பகவான் எடுத்த அவதாரம் தான் நரசிம்மாவதாரம். இந்த அவதாரத்திற்கு முக்கிய காரணகர்த்தாவான பிரஹ்லாத ராஜனின் மறுபிறவியே ஸ்ரீ வ்யாசராஜர் எனப்படுகிறார். அவரின் மறுபிறவியே ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள். துங்கபத்ர நதிக்கரையில் அமைந்துள்ள புண்ய க்ஷேத்ரமான மந்திராலயத்தில் இந்த மகானின் ஜீவசமாதி அமைந்துள்ளது.
விஜயநகர சாம்ராஜ்யத்தில் சிறந்த வீணா வித்வானாகவும், சிறந்த கவிஞராகவும் விளங்கியவர் கிருஷ்ண பட்டர். கர்நாடக மாநிலத்து மாத்வ பிராமணரான இவரது மகன் கனகாசலபட்டரும் ,சங்கீதத்திலும் சாஸ்திர ஞானங்களிலும் சிறந்து விளங்கியவர்.
தன்னுடைய மூதாதையரைப் போலவே ,கனகாசல பட்டர் தம்பதிகளுக்குப் பிறந்த திம்மண்ண பட்டரும் கல்வி கேள்விகளிலும் வீணை வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார்.
ஆனால் தன் மூதாதையரைப் போல் இல்லாமல் ,திம்மண்ண பட்டரால் அரசவையில் சிலகாலமே இருக்க முடிந்தது. 1565-ல் நிகழ்ந்த தலைக்கோட்டைப் போரினால் ஏற்பட்ட அழிவினால் விஜயநகரத்தை விட்டு திம்மண்ண பட்டர் குடும்பத்துடன் நகரத்தை விட்டு வெளியேறி கும்பகோணம் ஸ்ரீமடத்தில் சேர்ந்தார். தனது மகளின் திருமணம் மற்றும் மகன் குருராஜனின் உபநயனம் முடித்து தம்பதிகள் இருவரும் ஸ்ரீனிவாசனை தரிசிக்க திருமலை சென்றனர். தங்களின் இந்த தனிமைத்துயர் நீக்க ஒரு மகன் வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தித்தனர்.
இவர்களின் கனவில் தோன்றிய மலையப்ப தெய்வம்,உலகமே போற்றும் உத்தமனே அவர்களுக்கு மகனாகப் பிறப்பான் என்று வரமருளினார் .
திம்மண்ணரின் மனைவி கோபிகாம்பாள் கர்ப்பவதியானாள். கி.பி.1595ஆம் ஆண்டு குருவாரத்தில் ,மிருகசீரிஷ நட்சத்திரத்தில் காண்பவர் வணங்கத்தக்க தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.
மகானின் சரித்திரம் தொடரும்…..
-
சீரடியில் உள்ள சாயிபாபாவின் பளிங்கு சிலையின் வரலாறு
இன்று சீரடியில் இருக்கும் பாபாவின் சிலை வெறும் பளிங்குக்கல்லால் ஆனா சிலை இல்லை. அது பல லட்சோபலட்ச அடியார்களின் அன்பு தெய்வம். தன்னை நாடி வரும் பக்தர்களுடன் ஆத்மார்த்தமாக சிலை வடிவில்,பேசும் தெய்வம்.தங்களைக் காக்க மனித உரு தரித்து வந்த தெய்வம் சமாதியில் இருந்துக் கொண்டும் தங்களுடன் பேச முடியும் என்று ஒவ்வொரு நிமிடமும், சாய் பக்தர்கள் உணரும் அந்த இடத்திற்கு அந்த சிலை வந்த கதையே ஒரு அற்புத நிகழ்வு.
1918- ம் வருடம் விஜயதசமி அன்று, சாயிபாபா மஹாசமாதியடைந்தார். நாக்பூரை சேர்ந்த செல்வந்தரும், பாபாவின் அடியவருமான ஸ்ரீமான்புட்டி அவர்களால் கட்டப்பட்ட வாதாவில், முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, நான்கு கால ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், கிரமமாக நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன.
முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து வந்த நிலையில், ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு அங்கு வந்தது, ஏன் வந்தது, யார் அனுப்பியது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இந்த விஷயம், சீரடி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சீரடி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் போட்டியிலிருந்து விலகினார்கள். சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள்.
பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சிலை செய்ய மாதிரியாக, சாயி சமஸ்தான் அதிகாரிகளால் சிற்பிக்கு கொடுக்கப்பட்டது. அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் மிகவும் சிரமப்பட்டார். அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல், அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார்.
பின்னர் அந்த சிலை 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலை தான் இன்றளவும் தினமும் பல லட்ஷக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் சாயி …சாயி என்று மன உருகி வணங்கி வழிபடப்பட்டு வருகின்றது.
‘சீரடி மண்ணை எவனொருவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பங்கள் முடிவுற்று மிகுதியான ஆனந்தத்தை அடைகிறான்.‘ – பாபா
-
சீரடி செல்வோம் வாருங்கள் …….
சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டுள்ளது.
தம் வாழ் நாளில் எளிமையைக் கடைபிடித்த பாபாவின் கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் இருக்கிறது.
கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. சீரடியில் சாதாரண நாட்களை விட வியாழக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் கூட்டம் இரட்டிப்பு மடங்கு இருக்கும்.
சமாதி மந்திரில் உள்ள சாய்பாபா சிலை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. நாம் எங்கு நின்றாலும் பாபா நம்மை பார்ப்பது போலவே இருக்கும். மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான வெள்ளிக் குடையின் நிழலில் இருக்கிறது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான இந்தத் திருவுருவச் சிலை பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டது.
பாபா சன்னிதானத்தில் இருபக்கமும் நாங்கு வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை பஜன் ஆரத்தி எல்லாம் ஆகிறது. க்யூவில் வந்து சந்நிதானத்துக்கு உள்நுழையும் போது, சற்றே முன்பாகவே நின்று கொண்டு விட்டால் நல்ல தரிசனம் கிடைக்கும்.
மூன்றாம் எண் நுழைவாயில் வழியாக சென்றால் குருஸ்தானுக்கு முன்பு சமாதி மந்திர் ஜன்னல் வழியாக பாபாவை மிக எளிதாக பார்த்து தரிசனம் செய்யலாம்.
சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கலாம். . பாபாவை தரிசனம் செய்து முடித்ததும் மூன்றாம் எண் கேட் வழியாக வெளியே வந்தால் பாபா வசித்த துவாரகமாயிக்கும், சாவடிக்கும் மிக எளிதாக செல்லலாம்.
சீரடியில் பாபாவுக்கு நடக்கும் 4 ஆரத்தியில் ஏதாவது ஒரு ஆரத்தியை கண் குளிர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலே அது புண்ணியமாக கருதப்படுகிறது.
பக்தர்கள் கொண்டு செல்லும் மாலைகளை பாபாவுக்கு போட்டுவிட்டு, ஏற்கனவே சாத்தி இருக்கிற மாலைகளில் ஒன்றை உருவி பிரசாதமாக தருகிறார்கள்.
கோயிலுக்குள் நடக்கும் சாயிபஜன், கோயில் முழுக்க ஒலிக்கும் வண்ணம் ஆங்காங்கே ஒலி பெருக்கிகள் வைத்து இருக்கிறார்கள்.
விருப்பம் இருந்தால் வெளியே உண்டியலில் பணம் போடலாம். கோவிலுக்குள் யாரும் பணம் கொடுவென்று கேட்பதில்லை. சிறப்பு தரிசனமும் கிடையாது.
ஆலயத்திற்குள் உண்டியல் தவிர பெரிய அளவில் ரொக்கம், தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்த வசதி உள்ளது.
சீரடி தேவஸ்தானம் சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் அந்த திட்டத்திற்கு பணம் கொடுக்கலாம்.
பக்தர்கள் உதி அக்னியில் போட தேங்காய் வாங்கி கொடுக்கலாம். அந்த தேங்காயைப் பெற்றுக் கொள்ள ஆலயத்திற்குள் தனி இடம் உள்ளது.
கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் (லென்டித் தோட்டம் அருகில்) புத்தக விற்பனை நிலையம் உள்ளது. தமிழ் உள்பட எல்லா மொழி புத்தகங்களும் இங்கு கிடைக்கும். வெளியில் வாங்குவதை விட மிக, மிக, குறைந்த விலையில் இங்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
சீரடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை துவாரக மாயியில் இருந்து சாவடிக்கு பாபா படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. நாடெங்கும் உள்ள சாய்பாபா ஆலயங்களில் வியாழந்தோறும் இத்தகைய வழிபாட்டை கடைபிடிக்கிறார்கள்.
சீரடியில் பொது மக்கள் கண் எதிரிலேயே தினமும் உண்டியல் பணம் எண்ணப்படுகிறது. உண்டியல் பணத்தை எண்ணி சேவை செய்ய விரும்பும் பொது மக்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
கோவில் உள்பகுதியில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
சீரடிக்கு நினைத்தவுடன் போய் விட முடியாது. சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் என்று மனம் சொல்லி, சொல்லி பக்குபவப்பட்டவர்களை பாபா உடனே அழைத்து தரிசனம் கொடுத்து விடுவார்.
எனவே சர்வம் சாயி என்று சாயி நாமம் ஸ்மரிப்போம்….அவர் பாதம் பணிவோம் …
ஓம் சாய்ராம்..!