Category: தொடர்கள்

தொடர்கள்

  • இறைவனை கைகூப்பி வணங்குவதன் காரணம்..!

    இறைவனை வணங்கும்போது இரண்டு கைகளையும் ஒன்றுக்கொன்று அழுத்தமாக சேர்ந்திருக்கம் வகையில் வணங்கக்கூடாது. தாமரை மொட்டு போல குவித்து வைத்தே வணங்க வேண்டும். விக்ரகத்தில் இருந்து ஒருவித காந்த சக்தி வெளிப்படும். அது பாம்பு வடிவத்தில் பக்தனை நோக்கி வருமாம். அவை பஞ்சபூத சக்தியாகப் பிரிந்து விரல்கள் வழியாக மூளையைச் சென்றடைந்து உடல் முழுவதும் வேகமாகப் பரவும். அப்போது புத்துணர்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம்.

    அதன்படி பூமி சக்தி சிறிய விரல் மூலமாகவும், தண்ணீர் சக்தி மோதிர விரல் மூலமாகவும், அக்னி சக்தி நடுவிரல் மூலமாகவும் வாயு சக்தி ஆட்காட்டி விரல் மூலமாகவும், ஆகாய சக்தி பெருவிரல் வழியாகவும் செல்லும் என்பது முன்னோர்கள் வாக்கு. ஆக இத்தகைய புத்துணர்ச்சியுடன்  செய்யப்படும் செயல்கள் யாவும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.

  • ஆன்ம நிலைகளை உணர்த்தும்…கோயில் கொடிமரம்!

    திருக்கோயிலில் கொடிமரம் அமைப்பதன் காரணம் மனிதன் பலிபீடத்தின் முன் தன் இச்சைகளைப் பலிகொடுத்து தான் உடம்பும் அல்ல, தான் இச்சைகளும் அல்ல என்னும் உண்மையை உணர்கின்றான். பின்னர் பலிபீடத்தை அடுத்துள்ள கொடி மரத்தைக் காண்கிறான். அந்தக் கொடிமரம், அந்தரான்ம நிலையில் உள்ளவனுக்கு தத்துவான்ம நிலையை உணர்த்தும் சின்னமாக உள்ளது. பூதான்மா, அந்தரான்மா, தத்துவான்மா, ஆகிய மூன்று ஆன்மாக்களும் கொடி மரத்தின் உச்சியில் அடுத்தடுத்து அமைந்துள்ள மூன்று நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன அந்த மூன்று நிலைகளும், மூன்று ஆன்ம நிலைகளை உணர்த்துவதாகும்.

    பூதான்மா நிலையில் உள்ளோர் மண், பொன், புகழ் போன்றவற்றை இழக்கத் துணிவர். அந்தரான்ம நிலையில் உள்ளோர் மண், பெண், பொன் ஆகிய மூன்றையும் விரும்புவர். ஆனால் அவற்றால் துன்பம் வரும் என்றால் அந்த ஆசையை அடக்கிக் கொள்வர். சமுதாயம் நன்மை, தீமை என்று வகுத்தவற்றை இயன்றவரை பின்பற்றுவர். தத்துவான்ம நிலையில் உள்ளோர் புகழையும், போற்றுதலையும் பெரிதும் விரும்புவர். தான தருமங்களில் ஈடுபடுவார்கள். பெண், பொன் ஆசைகளைக் கைவிடுவர். கொடி மரத்தால் உணர்த்தப்படுவது இத்தத்துவான்ம நிலையாகும்.

  • கோவில் அபிஷேக தீர்த்தத்தின் மகிமைகள்!

    திருக்கோவில்களின் அபிஷேக தீர்த்தம் மிகவும் புனிதமானது. இந்தத் தீர்த்தத்தை இரண்டு கைகளாலும் பெற்று அப்படியே உட்கொள்ள வேண்டும். அப்படிப் பெறும்போது விரல்களில் இடுக்கில் கீழே சிந்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கைகளின் அடியில் துணியை வைத்துப் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    தீர்த்தத்தை உட்கொண்ட பிறகு கைகளில் ஒட்டியிருக்கும் நீரும் கீழே சிந்தாமல் இருக்க வேண்டும் என்பதால் கைகளையே ஒன்றின் மீது ஒன்றாகத் தேய்த்துக் கொள்வதும், கண்களில் ஒற்றிக்கொள்வதும், தலையில் தேய்த்துக் கொள்வதும் ஆகிய பழக்கங்கள் ஏற்படத் தொடங்கின. அபிஷேக தீர்த்தம் சிறிதும் கீழே சிந்தக்கூடாது என்பதே இவற்றின் அடிப்படையான உண்மை.

  • கோபுர தரிசனம்…கோடி புண்ணியம்!

    ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பார்கள். ஒரு கோயிலில் பல்வேறு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். கோயிலில் உள்ள மற்ற கோபுரங்களை விட ராஜ கோபுரம் மிக உயர்ந்து இருக்கும்.

    கோயிலின் முகப்பில் உள்ள இக்கோபுரம் ‘ஸ்தூல லிங்கம்’ எனப்படும். இது தொலைவில் இருப்பவர்களும் கண்டு வழிபடும்படியாக அமைந்துள்ளது.

    இந்த வகை ராஜ கோபுரங்கள் 3, 5, 7, 9, 11 என்னும் எண்ணிக்கையில் அமைந்த நிலைகள் உடையதாக அமையும்.

    இக்கோபுரத்தில் பல்வேறு வகையான வடிவங்களும் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கும். ராஜ கோபுரம் நம் கண்ணில் பட்டதும் கைகூப்பி வணங்க வேண்டும்.

  • விநாயகரை…முதலில் வழிபடுவது ஏன்?

    வாழ்க்கையில் முக்கிய தேவையாக இருக்கும் நலத்திற்கும், வளத்திற்கும், சித்திக்கும், புத்திக்கும் க்ஷேம லாபத்திற்கும் விநாயகப் பெருமான் தான் அதிபதி. அவரை வணங்கினால் எந்த விக்கினத்தையும் எளிதில் தீர்த்துவைத்துக் காப்பார் என்பது ஜதீகம்.

    விநயாகப் பெருமான் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் உட் பொருளும் வடிவமுமாய்த் திகழ்கின்றார்.

    ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் அகரம், உகரம், மகரம் என்னும் மூன்று எழுத்துகளால் ஆனது – அவற்றுள்

    ‘அ’ என்பது படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவைக் குறிக்கும்.

    ‘உ’ என்பது காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணுவைக் குறிக்கும்.

    ‘ம’ என்பது அழித்தல் தொழிலுக்குரிய சிவனைக் குறிக்கும்.

    இவை மூன்றிற்கும் மூலமாக விளங்குபவரும், முத்தொழில்களின் அம்சமாகவும், மும்மூர்த்திகளின் சொரூபமாகவும் விளங்குபவருமான விநாயகரை முதலில் வழிபட்ட பின்பே மற்ற தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு பூர்த்தியாகும்.

  • திருவருள்புரியும் தரணி பீட நாயகி

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குழல்வாய்மொழி, பராசக்தி என இரு திருவடிவங்களில் குற்றாலநாதருடன் தேவி அருள்கிறாள். தல தீர்த்தங்களாக சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆகியவையும், தலவிருட்சமாக குறும் பலாவும் உள்ளன. இந்தப் பலாவில் உள்ள சுளைகள், ‘லிங்க’ வடிவில் இருப்பது கலியுக அதிசயம். அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றியபோது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை, குழல்வாய்
    மொழிநாயகியாகவும், பூதேவியை, பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு ஸ்ரீசக்கர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இதற்கு, ‘தரணி பீடம்’ (தரணி பூமி) என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் ‘நவசக்தி’ பூஜை செய்கின்றனர். பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

  • சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    சித்திரை விஷுவையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஐயப்பனை தரிசனம் செய்ய 4 மணிநேரம் வரை அவர்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது.
    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை சித்திரை விஷு காக கடந்த 10-ந்தேதி திறக்கப்பட்டது.
    சபரிமலையில் வழக்கமாக மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது அதிகளவு பக்தர்கள் குவிந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். அதற்கு அடுத்தபடியாக சித்திரைவிஷுவுக்குதான் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
    இந்த ஆண்டும் சித்திரை விஷுவையொட்டி கோவில் நடை திறந்த முதல்நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி ஐயப்பனுக்கு தினமும் நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    தமிழகத்தில் நாளை (14-ந்தேதி) சித்திரை மாத பிறப்பு கொண்டாட்டப்படுகிறது. ஆனால் கேரள பஞ்சாங்கத்தின்படி சித்திரை விஷு கொண்டாட்டம் சபரிமலையில் நாளை மறுநாள் (15-ந்தேதி) நடக்கிறது.
    இதையொட்டி 15-ந்தேதி அதிகாலை 4.30 மணி முதல் 7 மணி வரை சித்திரை கனி காணுதல் நடக்கிறது. அன்று சபரிமலை சுவாமி ஐயப்பன் சன்னதியில் காய், கனிகள் மற்றும் புத்தாடைகள் படைக்கப்பட்டு சாமி தரிசனம் நடைபெறும். மேலும் சாமிதரிசனம் செய்யும் பக்தர்களுக்கு கோவில் மேல்சாந்தி சில்லரை நாணயங்களை கைநீட்டமாக வழங்குவார். தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
    சித்திரை விஷுவையொட்டி சபரிமலையில் பக்தர்கள் அதிகளவு குவிந்து உள்ளனர். இதனால் சாமி தரிசனம் செய்ய 4 மணிநேரம் வரை அவர்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது. பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதை தொடர்ந்து சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • கருணை தெய்வம் கன்னியாகுமரி

    முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியாக திருவருள் புரிகிறாள் அம்பிகை. 51 சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். தல தீர்த்தமாக பாபநாச தீர்த்தம் துலங்குகிறது. இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தலும் பக்தர்கள் செலுத்தும் முக்கிய நேர்த்தி கடன்கள். பாணாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி இங்கே குமரியாக நிலை கொண்டாள். அம்பிகையின் தோழிகளான தியாகசுந்தரி, பாலசுந்தரி இருவரும் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டருள்கின்றனர். தேவியின் மூக்கில் ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் மூக்குத்தி நாகரத்தினத்தால் ஆனது என்பார்கள். தாணுமாலயனுக்கும் தேவிக்கும் நடக்க இருந்த திருமணம் நாரதரின் கலகத்தால் நின்றது. திருமணத்திற்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரி கடற்கரையில் அரிசி போன்ற வெண் சிறுமணலையும், பலவண்ண மணல்களையும் காணலாம்.

  • மங்களங்கள் அருளும் மரகதாம்பிகை

    மரகதாம்பிகை, லலிதா எனும் திருப்பெயர்களோடு ஈங்கோய்நாதர் எனும் மரகதாசலேஸ்வரரோடு அம்பிகை அருளாட்சி புரியும் தலம், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும். யோகினிகளால் பூஜைகள் நடத்தப்பெறும் திருத்தலம் இது. இங்கு அவர்களே நான்கு வேதங்களை தினமும் ஓதி சண்டி யாகம் போன்றவற்றையும் செய்து வருகிறார்கள். ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களுள் யார் பெரியவர் என போட்டி வந்தது. வாயுபகவான் தன் பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசினார். ஆதிசேஷன் மந்தார மலையை இறுகப் பற்றிக்கொண்டார். அப்போது அம்மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த ஒரு பகுதிதான் இம்மலை என்கிறார்கள். சிவபெருமான், அவர்களைச் சமாதானம் செய்து, மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார். மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், ‘மரகதாசலேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். இவருக்கு “திரணத்ஜோதீஸ்வரர்’’ என்ற பெயரும் உண்டு.

  • கிழமையும்… கடவுளும்….

    ஞாயிற்றுக்கிழமை : சூரிய பகவானுக்கு உரிய நாள். இந்த நாளில், காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்திய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபடலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் பலனைத் தரும்! திங்கட்கிழமை : சிவபெருமானுக்கு உரிய அற்புதமான நாள். இதை சோமவார விரதம் என்பார்கள். கார்த்திகை மாத சோமவாரத்தில் விரதம் மேற்கொள்வது நற்பலன்களை வாரி வழங்கும்! செவ்வாயக்கிழமை : அங்காரக விரதம் மேற்கொள்வதற்கான அருமையான நாள். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இந்த நாளில் விரதம் இருப்பது, கூடுதல் பலன்களை வழங்கும்! மேலும், சிவாலயங்களில் உள்ள முருகன் சந்நிதிக்குச் சென்றோ அல்லது முருகப்பெருமான் தனியே கோயில் கொண்டிருக்கும் தலத்துக்கோ சென்று கந்தக் கடவுளை வழிபடலாம்! புதன்கிழமை : இந்த நாளில் விரதம் அனுஷ்டித்தால் கல்வி, புகழ், ஞானம், தனம் பெருகும். இந்த நாளில், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஸ்ரீஹயக்ரீவ வழிபாடு சிறந்தது. ஸ்ரீநரசிம்மரை பானகப் பிரசாதம் வழங்கி தரிசிக்கலாம்! வியாழக்கிழமை : குரு பகவானுக்கு உரிய நாள். இந்த நாளில் விரதமிருந்தால் குருவின் அருளால் திருமணம் கைகூடும். நல்ல குழந்தைகள் பிறக்கும். சகல காரியங்களும் கைகூடும். காலை அல்லது மாலை வேளையில், நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்கலாம்! வெள்ளிக்கிழமை : சுக்கிர வார விரதம் மேற்கொள்வதற்கான அருமையான நாள். அம்பாளை பூஜை செய்து பாயசம், வடை நைவேத்யம் செய்து வழிபடலாம். ஸ்ரீலலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்யலாம்! காலையும் மாலையும் சிவாலயத்தில் உள்ள அம்பாளையும் பெருமாள் கோயிலில் உள்ள தாயாரையும் வணங்கி வளம் பெறலாம்! சனிக்கிழமை : சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோயிலுக்குச் சென்று, ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது, மிகுந்த பலனைத் தரும். முடிந்தால், கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுங்கள். மேலும், சனிக்கிழமை திருமாலுக்கு உரிய அருமையான நாள். திருப்பதி வேங்கடாசலபதிக்கு உகந்த நாள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களும் பெறலாம்!