Category: தொடர்கள்

தொடர்கள்

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 7

    அருவியைப் போல் நாங்களும் மலையிலிருந்து சடாரெனக் கீழே இறங்கினோம். மலைப் பாதை முக்கியச் சாலையில் இணையுமிடத்தில் ஒரு பெரிய உணவு விடுதி இருந்தது. உள்ளே ஆளரவமில்லை. ஆனால், மிகப் பெரிய உணவு விடுதி. கைகளைக் கழுவப் போன இடத்தில் பார்த்தால் அது ஒரு மிகப் பெரிய அறைகலன் கடையும்கூட என்று தெரிந்தது. மிகப் பெரிய கட்டில்கள், உணவு மேசை, அதற்கேற்ற நாற்காலி, என விதவிதமான மரச் சாமான்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    எல்லாவற்றின் விலையும் அமெரிக்க டாலரில் குறிக்கப்பட்டுத் தொங்க விடப்பட்டிருந்தது. அதிக விலை என்று சொல்ல முடியாது. ஆனால் வாங்கினால் அதைக் கப்பலில் எடுத்துச் செல்லும் செலவு மிக அதிகமாக இருக்கும். நல்ல வேலைப்பாடமைந்த மாபெரும் கட்டில்கள். நாற்காலிகள் பார்த்துப் பார்த்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. இலேசாக சீன பாணி தெரிந்தது. ஒரு நாற்காலியில் என்னைப் போன்ற இருவர் தாராளமாக அருகருகே உட்கார்ந்து கொள்ளலாம். அவ்வளவு அகலம் ! இதையெல்லாம் வாங்குவோர் வீடு மாறினால் எப்படித் தூக்கிப் போவார்களோ ! அம்புட்டு கனம் !

      

    காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது போன்ற ஒரு பரந்த மேசையைச் சுற்றி உட்கார்ந்தோம். ஒரு பக்கத்துக்கு இருவர் வீதம் எட்டுப் பேர் தாராளமாக அமரலாம். தாகத்துக்கு இளநீர் குடித்தோம். அது உள்ளூர்க்காரர்கள் உணவருந்த வரும் கடை மாதிரித் தெரியவில்லை. வெளிநாட்டுப் பயணிகளை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் கடை போலத் தெரிந்தது. எல்லாவற்றின் விலையும் அமெரிக்க டாலரில்தான்.

    பயணிகளுக்குப் பொதுவாகவே கம்போடியா முழுவதும் புழக்கத்தில் இருப்பது அமெரிக்க டாலர்தான். அந்த நாட்டு ரியல் நாணயத்துக்கு அவ்வளவு மதிப்பில்லை. எனவே, பயணிகள் அனைவரும் டாலரில்தான் பணத்தை மாற்றி வைத்துக் கொண்டு செலவழிக்க வேண்டும். ஆனால் உள்ளூர்வாசிகள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு அதை டாலருக்கு மாற்றி மாற்றித் தலைசுற்றிப் போகிறது.     ஒரு நிலையில் அதைக் கைவிட்டு டாலரில் மட்டும் யோசிக்கத் தொடங்கிவிட்டோம்.

    நல்ல பசி இருந்ததால், இளநீர் போய் விழுந்த இடம் தெரியவில்லை. அசைவம் இருந்தது. ஆனால் அவர்கள் சமைத்த விதம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் காரணமாக சைவ உணவையே தெரிவு செய்தேன். அசைவம் உண்ணும் பழக்கம் இருந்தாலும் பொதுவாக வெளியூர் சென்றால் எனக்குச் சைவம் சிறந்தது. வயிற்றுக்குப் பெரிதாக ஏதும் தொந்தரவு வராது. ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படும் ஆபத்தும் கம்மி. வழக்கம்போல வேகவைத்த காய்கறிகள், பசை போன்ற வெள்ளைச் சோறு, முட்டை ஆம்லெட் என்று சுவையாகவே அமைந்தது உணவு. சுத்தமான சூழல், ஆரோக்கியமான உணவு, நியாயமான விலை.

    அங்கிருந்து தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய நன்னீர் ஏரியாகிய டோன்லே சாப் ஏரியைப் பார்க்கப் புறப்பட்டோம். ஒன்றரை மணி நேரப் பயணம். சாலை மிகத் தரமானதாக இருந்தது. செல்லும் வழியில் ஓடை போன்ற கால்வாய் எங்கள் கூடவே வந்தது. இரண்டு பக்கமும் நெல் வயல்கள். புல் முளைத்துக் கிடந்த தரிசு நிலங்கள். சிறு குட்டைகள். அதில் மேயும் வாத்துகள். மோட்டார் சைக்கிளில் அவ்வப்போது போவோர் வருவோர் தவிரப் பெரிய வாகனங்கள் கிட்டத்தட்ட அந்தச் சாலையில் இல்லை. 

    அந்தக் குளுமை, பசுமை, வயல்வெளியைப் பார்த்ததும் பரணிக்குள் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி மெல்லக் கண்விழித்தான். ஆங்காங்கே வண்டியை நிறுத்தி அந்த ஏகாந்தத்தை அனுபவித்தோம். பழங்காலத் தஞ்சை மாவட்டம் போலிருந்தது. ஆங்காங்கே நல்ல உறுதியான வீடுகள். எல்லாமே கான்கிரீட் தூண்களுக்கு மேல் கட்டப்பட்டிருந்தன. மழைக் காலத்தில் வெள்ளம் பாயும் பகுதிகள் போலும். அந்த வட்டாரத்திலிருந்த பெரும்பாலான வீடுகள் ஒரு ஆள் உயரத்தில்தான் இருந்தன. மரப்படிகளால் வீடு தரையோடு இணைக்கப்பட்டிருந்தது. மரச் சுவர்கள், மரத்தால் ஆன சரிவான கூரை. பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது.

    கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளின் விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் பயிர் செய்து தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகள் ஆலோசித்து வருகின்றன. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னரே தொடங்கிவிட்டன. வருங்காலச் சந்ததிகளுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது அதன் நோக்கம். பயிர் செய்யத் தேவையான மூலதனம், தொழில்நுட்பம், உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் எல்லாவற்றையும் குத்தகைக்கு எடுத்த நாடுகள் தரும். பயிர் விளைந்ததும் அறுவடை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும். இரண்டு தரப்பினருக்கும் லாபம்.

    நாங்கள் பயணம் செய்த விளை நிலங்களைப் பார்த்தபோது அப்போதுதான் நாற்று நட்டுப் பாவி இருந்தார்கள். பரணிக்கு உண்மையிலேயே நிலைகொள்ளவில்லை. எனக்கு ரெண்டு ஏக்கர் இங்க குடுத்தா அப்படியே விவசாயம் பண்ணிக்கிட்டு இங்கேயே பொழுதை ஓட்டிருவேன் என்று புலம்பிக் கொண்டே வந்தார்.

    நீர்வளம் நிறைந்த செழிப்பான பூமியைப் பார்த்ததும் எந்தவொரு விவசாயிக்கும் வரக்கூடிய இயல்பான உணர்வுதான் அது.

    தமது இளமைக் காலத்தில் செய்த விவசாய வேலைகளைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார் பரணி. ராஜுவும் விவசாயக் குடும்பம்தான். அவருக்கும் ஃபிளாஷ்பேக் வந்துவிட்டது. டார்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருளைச் சுற்றாத குறைதான். எல்லாருமே 20, 30 ஆண்டுகள் பின்னால் போய்விட்டோம். நான் வறண்ட ராமநாதபுரம் ஜில்லாக்காரன். டிப்ளமோ படிக்கத் தஞ்சை மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள புத்தூருக்கு வந்தபோது அந்தப் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சுற்றி இருந்த பசுமை எனக்குப் புதிது.

        

    கல்லூரி விடுதிக்குப் பின்னால் குமட்டிப் பழம் பயிரிடுவார்கள். அது நல்ல மணற்பாங்கான இடம். அதில் நெல் விளையாதுபோலும். கல்லூரிக்கு எதிரே பச்சைப் பசேலென நெல் வயல்கள். அவற்றின் பின்னால் ரயில் தண்டவாளம். அவ்வப்போது அதில் ரயில் போகும் காட்சியை மழைக் காலத்தில் பார்த்தால் ஏதோ பெரிய ஐரோப்பிய ஓவியர் வரைந்த தைல ஓவியம்போல இருக்கும்.

    மழைக் காலத்தில் தஞ்சை மாவட்டத்தினூடாகச் சோழன் போக்குவரத்துக் கழகப் பேருந்திலும் தனியார் பேருந்திலும் பயணம் செய்யும் சுகத்தைச் சொல்லில் வடிக்க முடியாது. இரண்டு பக்கமும் வயல்வெளிகள். ஆங்காங்கே சின்னச் சின்ன அய்யனார் கோயில்கள். ஆலமரம், அதன்கீழே உள்ள சதுரத் திண்ணைகள், வெள்ளைப் பள்ளிவாசல்கள், ஆற்றோரம் இடிந்துபோன பழைய மண்டபங்கள் என வரலாற்றுக் காலம் நம்மோடு கூடவே ஓடிவரும். பேருந்தில் ஓடும் இனிய பாடல்கள்தான் இது நவீன காலம் என்ற உணர்வை நமக்குத் தரும்.

    அதிலும் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் போகும் வழியில் பசுபதி கோயிலில் இருந்து பள்ளியக்ரஹாரம் வரையுள்ள 10 கிலோமீட்டர் தொலைவு இருக்கிறதே.. யம்மாடீ ! அப்படி ஒரு பசுமை.                

    தொலைவில் சித்திரம் போலத் தஞ்சைப் பெரிய கோயில் விமானமும், அரண்மனைக் காவல் மாடமும் தெரியும். மாலை மயங்கும் நேரத்தில் அந்தப் பாதையில் அப்போது வெளியான முதல் மரியாதை, இதயக் கோயில், தென்றலே என்னைத் தொடு, கீதாஞ்சலி படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே போகும் சுகம் இருக்கிறதே..        அடடா.. அடடா.. எந்த ஒரு ஹோம் தியேட்டர் சிஸ்டமும் தர இயலாத இன்பம் அது. இந்தப் பயணம் இப்படியே நீண்டுகொண்டே இருக்காதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் பயணம் அது.

    அதே அளவுக்கு உல்லாசமான பயணமாக இருந்தது ஏரியை நோக்கிச் சென்ற எங்கள் பயணமும். படகில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் சென்று ஆறு ஏரியோடு சங்கமிக்கும் இடம் வரை சென்று திரும்புவது எங்கள் திட்டம். ஆங்காங்கே வயல்களைப் பார்த்ததும் இறங்கிப் படம் எடுத்துக் கொண்டே போனோம். சீக்கிரம் போகணும் இருட்டி விட்டால் எதையும் ரசிக்க முடியாது என்று ஓட்டுநர் ரா விரட்டவில்லையென்றால் வயலுக்குள்ளேயே அன்றைய இரவுப் பொழுதைக் கழித்திருப்போம்.

    வழியில் ஒரு பெரிய கிராமம் வந்தது. அதற்குள் வண்டி வளைந்து வளைந்து போனபோது எல்லாரும் எங்களையே பார்த்தார்கள். பயணிகள் அவ்வளவாக வந்து போகாத பாதை போலும் இது. நல்ல மழை பெய்து வெறித்திருந்தது. மண்ணில் நீர் ஊறி இலேசாக ஆவி எழுந்து கொண்டிருந்தது. 

    பெரிய பாதையிலிருந்து விலகி இப்போது ஒற்றையடிப் பாதையை விடக் கொஞ்சம் பெரிய பாதைக்கு வந்திருந்தோம். சற்று நேரத்தில் இறங்கவேண்டிய இடம் வந்தது. எதிரிலேயே கால்வாய் ஓடிக் கொண்டிருந்தது. அது இயற்கையான ஓடையா அல்லது தஞ்சாவூர்ப் புதுவாய்க்கால் போலச் செயற்கையாகப் பாசனத்துக்காக வெட்டப்பட்ட கால்வாயா எனத் தெரியவில்லை. அதிலிருந்து ஏராளமான கால்வாய்கள் வயல்களுக்குள் பிரிந்து செல்வதைக் கண்டோம்.

    ஒரு நீளமான விசைப் படகில் ஏறிக் கொண்டோம். மணி நாலரை இருக்கக்கூடும். நல்ல தெளிவான வானம். மெதுவாக ஊரத் தொடங்கிப் பின்னர் சற்று வேகமெடுத்தது படகு. இரண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தோம். கொஞ்ச தூரம் போனதும் கால்வாய் அகலமானது. அந்தப் பகுதியில் ஒரு ஊரே கால்வாய்க்குள் இருந்தது. நாலு, ஐந்து ஆள் உயரத்தில் கம்புகள் நடப்பட்டு அவற்றின் மேல் மரத் தரை, சுவர் அமைத்து வரிசையாக வீடுகள்.

       

    போகும் வழியில் நிறைய கான்கிரீட் தூண் கொண்ட வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். எல்லாமே உயரமானவை. அந்தப் பகுதியில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருகும்போலும். நாங்கள் பார்க்கப் போகும் ஏரியின் சிறப்பே அதுதான்.                          

    டோன்லே சாப் ஏரி அளவில் மிகப் பெரியது. டோன்லே சாப் நதி, அந்த ஏரியை, மாபெரும் மீகோங் நதியோடு இணைக்கிறது. அந்த நதி 100 கிலோமீட்டருக்கும் மேல் நீளமுள்ளது. ஏரியை மேலிருந்து பார்த்தால், ஒரு பெரிய மீன் மாதிரி இருக்கும். அங்கோர் நாகரிகத்தின் செழிப்புக்கு இந்த நதியும் ஏரியும்தான் முக்கியக் காரணம்.           

    கோடைக்காலத்தின் முடிவில், இந்த நன்னீர் ஏரி 120 கிலோமீட்டர் நீளமுள்ளதாக இருக்குமாம். அகலம் 20 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும். அப்போது இதன் சராசரிப் பரப்பளவு சுமார் 2500 சதுர கிலோமீட்டர். மூன்று சிங்கப்பூரை மொத்தமாக உள்ளே அமுக்கி வைத்துவிடலாம். அதே ஏரி மழைக்காலத்தில் தண்ணீரால் ஊதிப் பெருத்துவிடுமாம். 250 கிலோமீட்டர் நீளமும் ஆக அகலமான இடத்தில் 100 கிலோமீட்டர் அகலமும் கொண்டு ராட்சத ஏரியாகிவிடும். இது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில். இந்த நேரம்தான் புனோம் பென்னிலிருந்து சியாம் ரீப்புக்கு படகில் செல்ல முடியும் காலம்.  

    மழைக் காலத்தில் ஏரியின் பரப்பளவு 16,000 சதுர கிலோமீட்டர் அளவுக்குப் பெருகிவிடும். மழைக்காலத்தில் உள்ளே வரும் வெள்ளம், மீகோங் நதியில் நீர்வரத்து குறையும்போது ஏரியிலிருந்து மீண்டும் மீகோங்கிற்குள் புகுந்து வற்றிவிடும். இது இந்த ஏரியின் தனித்தன்மை. இதன் காரணமாகவே இதன் பல்லுயிரிப் பெருக்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. பழங்கால மனிதர்கள் அளவுக்கு இக்காலச் சந்ததியினர் இந்த ஏரியை ஆக்ககரமாகப் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

    கடுமையான சூழியல் பிரச்சினைகளால் இன்று இந்த ஏரி கடுமையான நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறதாம். நாங்கள் பார்த்தவரை அதில் கழிவுகள் ஏதும் கலக்கவில்லை. நாங்கள் படகில் சென்ற கால்வாயிலிருந்து எவ்வித துர்-நாற்றமும் எழவில்லை. கால்வாயும் ஏரியும் இணையும் இடத்திற்கு அருகே ஏராளமான மரங்கள் தண்ணீருக்குள் நிற்கின்றன. பிச்சாவரத்தை நினைவுபடுத்துவதுபோல்.. ஆனால், பிச்சாவரத்திலுள்ள சுரபுன்னை மரங்கள் குட்டையானவை. இங்கிருந்த மரங்கள் பெரியவை.

    என்ன மரம் என்று என்னால் இனங்காண முடியவில்லை. வழியில் படகிலேயே பலர் குடும்பம் நடத்துவதைக் காணமுடிந்தது. படகிலேயே சமைக்கிறார்கள். சிறுவர்கள் சர்வசாதாரணமாகத் தண்ணீரில் குதித்து நீந்திப் பக்கத்து வீட்டுக்குப் (படகுக்கு ?) போகிறார்கள். இவர்களுக்குச் சளிப் பிடிக்காதா ? ராத்திரி நேரத்தில் இயற்கை உபாதையைக் கழிக்க எங்கே செல்வார்கள் ? வழியில் ஒரே ஒரு சிறிய மருத்துவமனை கண்ணில்பட்டது. அது இவர்களின் அவசரத் தேவைகளுக்குப் போதும்போலும்.

    சிறுவர்களின் பற்கள் வெண்மையாக இல்லை. பழுப்பாக இருந்தன அவை. அவர்கள் சிரிக்கும்போது தெரிந்தது. ஆக இவர்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர்தான் குடிநீர் ஆதாரம்போலும். புயல் மழைக் காலத்தில் இந்த வீடுகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் ? எப்படி இவர்கள் தைரியமாக இங்கேயே படுத்துத் தூங்கி, உண்டு வாழ்ந்து முடிக்கிறார்கள் ? நினைத்தால் வியப்பாக இருந்தது. அவர்களுக்குப் பழகி இருக்க வேண்டும். யாரும் அதைப் பொருட்படுத்துவதுபோல் தெரியவில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்.

    கால்வாயிலிருந்து எங்கள் படகை ஏரிக்குள் செலுத்த வேண்டுமா என்று படகோட்டி கேட்டார். ஏன் போகலாம்தானே என்று கேட்டோம். அலைகள் வேகமாக வந்து மோதிப் படகு ஆடும் பரவாயில்லையா என்றார். எதிரே ஒரு பெரிய கடல்போல் கிடந்தது ஏரி. காற்று காதை உரசிச் சென்றது. பரவாயில்லை உள்ளே போங்கள் என்றதும் தண்ணீரைக் கிழித்துப் புகுந்தது படகு.

    கடலில் வருவது போன்ற பெரிய அலைகள் இல்லை. ஆனால் அலை இருந்தது. சளப் சளப் எனப் படகில் மோதியதால் படகு மொத்துண்டு ஆடியது. கொஞ்சதூரம் போனதும் நான்கு பக்கமும் கலங்கலான ஏரி நீர் மட்டுமே இருந்தது.

    காரைக்குடியில் நான் படித்த முனிசிபல் உயர்நிலைப் பள்ளிக்கு அருகே பருப்பூரணி என்று ஒரு ஊருணி இருக்கும். அதன் தண்ணீர் இப்படித்தான் இருக்கும். குடிப்பதற்குப் படு ருசியாக இருக்கும். ஆறாம் வகுப்புப் படிக்கும்போது மதிய உணவை அங்கே எடுத்துச் சென்று சாப்பிட்டு, பருப்பூரணித் தண்ணீரைக் குடித்திருக்கிறேன். 25 ஆண்டுகள் கழித்துப் போய்ப் பார்த்தபோது பருப்பூரணி வற்றிக் காய்ந்து சுற்றிலும் கழிவுகளோடு வானம் பார்க்கக் கிடந்தது. கால்வாய்கள் தூர்ந்து நீர்வரத்து நின்று போயிருக்க வேண்டும்.

    என் மனத்தில் இருந்த ஊருணி எப்போதோ செத்துப் போய்விட்டதுபோலும். மனம் வலித்தது அதைப் பார்த்தபோது. எவ்வளவு இலட்சோப லட்சம் நீர்நிலைகளை நம் தலைமுறையில் சின்னாபின்னப்படுத்தி இழந்திருக்கிறோம் ? நம் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் நம்மைக் காலம் பூராவும் சபிக்கப் போவது உறுதி.

    டோன்லே சாப் ஏரியின் பிரம்மாண்டம் அச்சுறுத்தியது. லேசாக பயம் எட்டிப் பார்த்தது. ஏரியின் ஆழம் குறைவுதான். மூன்று அல்லது நான்கு அடிதான் இருக்குமாம். இருந்தாலும், ஏரியின் அளவை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருந்தது. போதும் திரும்புகள் என்று சொல்லிவிட்டோம். வந்த பாதையிலேயே படகில் திரும்பினோம்.

    இடப் பக்கமாக சூரியன் மேற்குவாயில் விழத் தொடங்கியிருந்தான். மேகங்களுக்கு இடையே வெளிச்சம் கசிந்து வண்ணக் களறியாக இருந்தது வானம். போகும்போதும் வரும்போதும் படகின் முனையில் போய் நின்று கொண்டும் படுத்துக் கொண்டும் தண்ணீரை ரசித்தோம். கைகளை அகலமாக விரித்துப் பொருளற்ற ஓசையெழக் கத்தினோம். படகோட்டிக்கு இதெல்லாம் பழக்கமாகி விட்டது போலும். பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஓட்டுநர் ரா அமைதியாகத் தனது கைத் தொலைபேசியை நோண்டிக் கொண்டே வந்தார்.

    எங்களுக்கு இந்த நிலக் காட்சி புதிது. மனம் கட்டவிழ்ந்து கிடந்தது. இன்றைய நாளில் கிடைத்த அனுபவங்கள் எல்லாமே இனியவை. படகுப் பயணம் முடித்து இரவு உணவுடன் கூடிய அப்சரஸ் நடனம் காணச் செல்வதாக ஏற்பாடு.. அங்கிருந்து சுமார் ஒன்றரை, இரண்டு மணி நேரத்தில் சியாம் ரீப் சென்று சேர்ந்தோம். அவ்வளவு நேரமும் வயல், பசுமை, அருவி, தண்ணீர், ஏரி, கால்வாய் எனப் பார்த்துவிட்டுத் திடீரென நகர்ப் பகுதிக்குள் நுழைந்தபோது வாகனப் புகையும் சந்தடியும் முகத்தில் அறைந்தன. உணவு விடுதிக்குமுன் எங்களை இறக்கி விட்டபின் சற்று நேரம் கழித்து வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி அகன்றார் ரா.

    நாங்கள் ஐந்து பேரும் அந்தப் பெரிய உணவகத்துக்குள் நுழைந்தோம்.

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 6

    அதுவரை அருவியென்றால் எனக்குள் இருந்த அனுபவத்தையும் கற்பனையையும் புரட்டிப் போட்டுக் கொட்டிக் கவிழ்த்ததுபோல் பாய்ந்து கொண்டிருந்தது அருவி. குற்றலாத்திலும் ஹொகனேக்கலிலும் உயரமான அருவிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோல் அகலமான அருவியைப் பார்த்ததில்லை. உயரமும் அதிகம்தான். வழியில் மடிந்தெல்லாம் இறங்கவில்லை. நேரே கீழே குபீரென வாளியில் இருந்து கவிழ்த்துவிட்டதுபோல் கொட்டிக் கொண்டிருந்தது அருவி. ஏதோ சாகசப் படத்தில் வரும் நிலக்காட்சியை நேரில் பார்க்கும் அனுபவம்.

    எங்கள் ஊரில் கொஞ்சம் மழை அடித்துப் பெய்தாலே, மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் அருவிகள் புறப்பட்டுவிடும். நீல மலைகளுக்கு நடுவே வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல் அருவிகளைக் காணக் கண்கோடி வேண்டும். எல்லாவற்றுக்கும் பிரதமானமாக இருக்கும் அருவியின் பெயர் பல்லிளிச்சான் கணவாய் அருவி. மற்ற அருவிகளெல்லாம் இரண்டு மூன்று நாளில் காணாமற் போய்விடும். இதுமட்டும் நின்று பொழியும்.

    மழையற்ற வறண்ட நாட்களிலும்கூட அந்த அருவியின் தடத்தைத் தெளிவாக எங்கள் பாட்டி வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்க்க முடியும். என் பால்யத்திலெல்லாம் மழை அடித்துப் பெய்யும் நாட்கள் குறைவு. முணுமுணுவெனப் பெய்து கொண்டே இருக்கும். குற்றாலத்துச் சாரல் எங்களுக்கும் கொஞ்சம் கிடைக்கும். நல்ல பெருமழை பெய்தால், என் பள்ளிக்கு எதிரிலிருக்கும் சஞ்சீவி மலையிலும் ஓர் அருவி புறப்படும்.

    ஒரே ஒரு முறை எங்களையெல்லாம் அப்பா அழைத்துப் போயிருக்கிறார் அந்த அருவிக்கு. அதற்குக் கழுதைக் கடவு அருவி என்று பெயர். சுற்றிலும் பெரிய பெரிய மரங்களெல்லாம் இருக்க மாட்டா. சப்பாத்திக் கள்ளியும் குட்டை முள் மரங்களும்தான் இருக்கும். சீனிக் கல் மலைதான் சுற்றியிருக்கும். ஆனால் அதற்குள் ஓடிவந்து விழும் அந்தக் குட்டி அருவி. அதில் குளிப்பது ஒரு சுகம்.

    கூட்டம் அதிகம் இருக்காது. பெண்கள் கிட்டத்தட்ட அறவே இருக்க மாட்டார்கள். பெரிய அருவிகளில் குளிக்கப் பெருங்கூட்டம் கூடிவிடும். குற்றாலத்தில் வரிசையில் நின்று குளிக்க எனக்குப் பிடிக்காது. அது எவ்வளவு பெரிய ஒசத்தியான அருவியாக இருந்தாலும் போனோமா குளிச்சோமா வந்தோமா என்று இருக்கணும். இந்த வரிசையில் நிண்ணு குளிக்கறதெல்லாம் நமக்கு ஒத்துவராது சாமியோவ் !

    நல்லவேளை கம்போடிய அருவியில் கூட்டம் அதிகமில்லை. சிறுவயதில் பள்ளிக்கூடம் விட்டு வீடு வரும்போது, நாம் வசிக்கும் தெரு வரையிலும் நடந்து வருவோம். வீடு கண்ணுக்குத் தென்பட்டதும் தெருவுக்குள் ஓடத் தொடங்குவோம். அதுமாதிரி, அருவியைப் பார்த்ததும் எங்களுடைய நடையின் வேகம் கூடியது. ஓட்டமும் நடையுமாய் அருவிக்கு அருகில் செல்லும்போது எங்கள் பேச்சொலியை அருவி அடக்கிவிட்டது. கூச்சல் போட்டுக் கத்தினால்தான் எதிராளிக்குக் கேட்கும். அப்படியொரு பேரோசையில் அருவி கொட்டிக் கொண்டிருந்தது.

     

    கரையில் துண்டு, கேமரா போன்றவற்றை ஓட்டுநர் ராவிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே இறங்கினோம். அம்மாடியோவ்! அப்படியொரு குளிர்ச்சி அருவித் தண்ணீர். உடலே ஒரு கணம் நடுங்கி ஓய்ந்தது. நடந்து வந்ததில் உடம்பு வியர்த்துப் போயிருந்தது. அதில் குளிர்நீர் பட்டதும் முதலில் சுரீர் என்று இருந்தாலும் அதன் பிறகு அருவித் தண்ணீரை விட்டு வெளியே வரவே மனமில்லை. ஈராயிரமாம் ஆண்டில் ஹரித்வார் போனபோதும் அப்படித்தான் இருந்தது.

    அதிகாலையில் கங்கையில் குளிக்க வேண்டுமென்று அம்மா, அப்பா, சித்திகளோடு 5 மணிக்கு கங்கைக் கரையை அடைந்து விட்டோம். நாங்கள் தங்கியிருந்த சத்திரத்துக்கு மிக அருகில்தான் கங்கை ஓடிக் கொண்டிருந்தாள். எழுந்திருக்கும்போதே கடுங்குளிர். பல்லெல்லாம் கிட்டித்துப் போய்விடும்போலிருந்தது. ஒருவழியாக எழுந்து நடந்து கங்கைக் கரையை அடைந்தால் கூட்டம் ஜே ஜே என்றிருந்தது அந்த அதிகாலை வேளையில்.

    கங்கை நல்ல வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. கரையிலிருந்து படிக்கட்டு இறங்கிச் சென்றது. சற்றுத் தொலைவில் ஆட்களை நதி அடித்துக் கொண்டு போய்விடக் கூடாது என்பதற்காக கம்பிக் குழாய்களை நீளமாகப் பொருத்தி இருந்தார்கள். கால் நதியில் பட்டதுமே குளிர் எலும்பை ஊடுருவியது. எங்களோடு அந்தத் தீர்த்தயாத்திரையில் வந்திருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் முதியவர்கள். அத்தனை பேரும் கங்கையைத் தொட்டதும் ஒவ்வொரு விதமாகக் கூச்சல் போட்டனர்.

    பாதம் பட்டதற்கே இப்படிக் குளிருதுண்ணா உள்ள முங்கினா உயிரே போயிரும்போல இருக்கேடா என்றார் என் சித்தி. பரவாயில்லை. உள்ளே இறங்கினா குளிர்விட்டுப் போயிடும் வாங்க சித்தி என்று மெதுவாக அவரை இழுத்துக் கொண்டு இறங்கி ஒரே முங்கு ! அவ்வளவுதான். அதை வார்த்தையில் வருணிப்பது கடினம். செத்தேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படியில்லை. சில விநாடிகளுக்குள் உடம்பு அந்தக் குளிரை ஏற்றுக் கொண்டு நதியை அனுபவிக்க ஆரம்பித்து விட்டது.

    என் அப்பா எந்தக் கூச்சலும் போடாமல் சிவனே என்று முங்கி முங்கிக் குளித்துக் கொண்டிருந்தார். அங்க பாரு ஒரு ஆளை.. ஏதாவது ரியாக்‌ஷன் காட்டுதான்னு! என்று கேலி செய்து கொண்டே என் அம்மாவும் கங்கா ஸ்நானத்தை ரசித்தார்.

    அதே தண்மை அதே குளிர் கம்போடிய அருவித் தண்ணீரிலும். காலால் தடவித் தடவி உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக இறங்கினோம். இடுப்பளவுக்கு மேல் ஆழம் வந்ததும் குபுக்கென்று முங்கினோம். ஆஹா.. ஆஹா. ஆஹஹஹா.. என்னே ஒரு சுகம். சிறுவயதிலிருந்து எல்லாவிதக் குளியலும் எனக்கு வாய்த்திருக்கிறது. கிணற்றுக் குளியல், குழாய்க் குளியல், ஆற்றுக் குளியல், ஏரிக் குளியல், தொட்டிக் குளியல், வாளியில் இருந்து மொண்டு குளிக்கும் சிக்கனக் குளியல் என்று ஒவ்வொன்றும் ஒருரகம்.

    அவற்றுள் இது ஆகச் சிறந்தது. தண்ணீருக்குள் முங்கியதும் அருவித் தண்ணீருக்கே உரிய வாசனையை என்னால் உணர முடிந்தது. அது உயிர்வாயு அதிகம் கலப்பதால் அருவித் தண்ணீருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய வாசம் என்று நினைக்கிறேன். கடல், ஆறு தவிர மற்ற நீர்நிலைகளில் தண்ணீர் தேமே என்று அசையாமல் கிடக்கும். ஆனால், அருவித் தண்ணீர் ஓடும், அலையும், உருளும், குபீரெனக் குதிக்கும், கும்மாளமிட்டுத் ததும்பும், பாறைகளை அறையும், குத்திக் குடையும், மூலிகைகளை அலசும். அப்போது அதில் ஏராளமான உயிர்வாயு கலப்பதாகக் கூறுவார்கள்.

    அதனால்தான் வேறெந்தத் தண்ணீருக்கும் இல்லாத ருசி அருவித் தண்ணீரில் இருக்கும். அதற்கெனப் பிரத்யேகமான ஒரு வாசனையும் இருக்கும். அதை அறிந்தவர்கள் இப்போது இதைப் படிக்கும்போதுகூடக் கண்டிப்பாக அதை உணர முடியும்.

    தப்பித் தவறித் தண்ணீருக்குள் மூழ்கிக் கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டால் புரையேறித் தண்ணீரை வெளித்தள்ளும்போதும் இலேசாக அந்த வாசனை வரும். அருவி நீருக்குள் விழுந்த கணத்திலிருந்து ஒவ்வொருவரும் சிறுபிள்ளைகளாக மாறிப் போனோம். அடடா.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா ! இறைவா ! இறைவா ! என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது.

    மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் இருக்கும்போது நம்முடைய உடல்மொழி முற்றிலுமாக மாறிவிடுவதை அன்று உணர்ந்தேன். ராஜூ விதவிதமான யோக நிலைகளில் நடனமாடினார். பாறை பாறையாகத் தாவி ரா-வுக்கு பலவிதமாகப் போஸ் கொடுத்தார். சூரிய நமஸ்காரம் செய்வதுபோல ஒற்றைக் காலைத் தூக்கி உச்சியைப் பார்த்தார்.

    நவீன் கொஞ்சம் இறுக்கமான ஆள். அவருடைய முகமும் அருவிக்குள் சிரித்துக் கொண்டே இருந்தது. மகாதேவனோ உடல் முழுவதும் மகிழ்ச்சியை வாரிச் சூடியிருந்தார். பரணியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஏண்ணா என்னண்ணா இது இப்படி இருக்கு இந்த இடம் ? நாம இருக்கிறது நெசமாவே பூமிதானா இல்ல வேறே ஏதாவது லோகத்துக்கு வந்துட்டோமா ? என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    அருவி விழுந்து ஓடும் தடாகத்தில்தான் இன்னமும் நாங்கள் இருந்தோம். சற்றுத் தொலைவில் சடேர் புடேர் எனத் துள்ளி விழுந்து கொண்டிருந்தது அருவி. தடாகத்தில் பெரும்பாலும் பயணிகள்தான். கம்போடிய முகங்கள் சற்றுக் குறைவுதான். ஒரு வெள்ளைக்காரத் தம்பதி கைக்குழந்தையோடு எங்களுக்கு அருகே நீரில் இறங்கியிருந்தது. அந்தக் குழந்தை தளக் புளக் என்று தண்ணீரைத் தப்பளம் கொட்டி மகிழ்ந்து கொண்டிருந்தது பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி.

    மிதமிஞ்சிய கூட்டம் இல்லை. அளவான கூட்டம்தான். மெல்ல மெல்ல நானும் ராஜூவும் அருவி விழும் இடத்துக்கு நேர்கீழே செல்லத் தொடங்கினோம். நடுவே பெரிய பள்ளமிருந்தது. கால்களால் துழாவிப் பார்த்தேன். தரை தட்டுப்படவில்லை. ஒரு ஆள் ஆழத்துக்கும் கூடுதலாக இருக்க வேண்டும். மெதுவாக நீந்தி அகலமான அருவியின் நடுப்பகுதிக்கு முன்னேறினோம். ஏற்கனவே அங்கே இளந்தாரிகள் பலர் நின்று அருவியைத் தலையில் தாங்கிக் கொண்டிருந்தனர்.

    அருவிக்கு அருகிலுள்ள எல்லாப் பாறைகளுமே வழுக்கின. எதையும் பற்றி மேலே ஏற முடியவில்லை. ஓரிடத்தில் உறுதியான திண்ணை மாதிரிப் பாறை கிடந்தது. அதில் ஏற அங்கிருந்தவர்கள் கைபற்றித் தூக்கி உதவினர். அவ்வளவுதான். இது வேறு உலகம். கண்ணெதிரே விழும் அருவிக்கும் பின்னாலுள்ள ஈரப் பாறைக்கும் நடுவே நாங்கள். ஓவென ஓசையிட்டுப் பொங்கும் அருவிக்குப் பின்னால் அந்தத் தண்ணீர்த் திரையைப் பார்த்தபடி பாறையோரத்தில் ஒண்டியவாறு நின்று ரசித்தோம்.

    தைரியம் வரும்போது தலையை முன்னால் நீட்டினால் அருவி மடேர் மடேர் என்று தலையில் அறைந்தது. ஏழெட்டுப் பேர்தான் அந்த இடத்திலிருந்தோம். நீச்சல் தெரியாவிட்டால் அந்தப் பகுதிக்கு வர முடியாது. அந்த இடத்திலிருந்து மேல்நோக்கி அருவியைப் பார்க்க விரும்பினேன். ஆனால் கண்களில் தண்ணீர் விழுந்து கண்ணை மறைத்தது. தண்ணீர் நல்ல உயரத்திலிருந்து விழுவதால் எழும் துமி சுற்றியிருந்த இடத்தைப் புகைபோல் மூடியிருந்தது.

    வானம் தெளிவாக இருந்தபோதும்கூட மழை வரப் போவதுபோன்ற ஒரு மயங்கிய வெளிச்சம். அருவிக்குள் நிற்கும்போது சூரிய வெளிச்சம் உறைக்கவில்லை. நல்ல உணக்கையாக இருந்தது.

    சுற்றிவர மழைக்காடுகளுக்கே உரிய பசுமை. தமிழர்களுக்கு அறிமுகமில்லாத மரங்கள். விதவிதமான இலைகள், கொடிகள். அந்தப் பின்னணியோடு அருவி மேலும் அழகாகத் தெரிந்தது. அருவிக்கு நடந்து வரும் வழியிலேயே ஒரு குட்டி அருவியைப் பார்த்தோம். அதுவும் நல்ல அகலமான அருவிதான். அங்குதான் கூட்டம் அதிகமிருந்தது. ஆனால், உயரம் இரண்டு ஆள் அளவுகூட இல்லை. பெண்களும் சிறுவர்களுமே அங்கு அதிகமாகக் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

    இந்தப் பேரருவியில் இருந்து வெளியே வர எங்களுக்கு மனமே இல்லை. இப்படியே இந்த நாள் உறைந்துவிடாதா என்றுதான் எல்லாருமே ஏங்கினோம். நின்றும் அமர்ந்தும் கிடந்தும் அணுஅணுவாக அருவியை அனுபவித்தோம். ஒருவழியாக மீண்டும் நீந்தி தடாகத்தின் முன்பகுதியை அடைந்து இடுப்பளவுத் தண்ணீரில் நின்று கொண்டு ஒருவர்மீது ஒருவர் தண்ணீரை வாரியிறைத்துப் பிள்ளைகள் போல் விளையாண்டோம். ஆச்சு ஒரு மணி நேரத்துக்கு மேலேயே ஆகியிருக்கும் நாங்கள் உள்ளே இறங்கி.

    ஓட்டுநர் ரா கூப்பிடத் தொடங்கினார். எங்களுக்கும் குளித்ததில் வயிறு காலியாகிப் பசி கிள்ளத் தொடங்கியது. சரி போதுமென்று எழுந்து உடம்பைத் துடைத்து மேலே ஏறத் தொடங்கினோம். பரணி அருவியைத் திரும்பிப் பார்த்தார். சில விநாடிகள் நின்றார். “போயிட்டு இன்னோரு நாள் வரேன்டா செல்லம் !” என்றார்.

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 5

    ஒரு மரத்துக்குக் கீழே நின்று கொண்டு தண்ணீருக்குள் அமிழ்ந்திருக்கும் லிங்கங்களைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பரணி கத்தினார். மகா, சிவன் மேல ஒரு பாட்டுப் பாடுங்களேன் என்று. நானே கிட்டத்தட்ட நெகிழ்ந்து போய், அந்த மனநிலையில்தான் இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ME படிக்கும்போது நானும் நண்பர் சந்துருவும் கோயில் கோயிலாகப் போவோம். கங்கை கொண்ட சோழபுரமும் தாராசுரமும் எங்கள் இருவருக்கும் ஆகப் பிடித்தமான ஆலயங்கள்.

    ஒவ்வொருமுறை போகும்போதும் கருவறைக்கு அருகே நின்று சில பாடல்களைப் பாடுவது எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அதிலும் சந்துரு “இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவயே..நெஞ்சே”” என்ற பாடல் என்னை உருக்கிவிடும். சந்துரு புல்லாங்குழல் வாசிப்பதிலும் கெட்டிக்காரர். நாங்கள் போகும் முன்மாலை வேளையில் பெரும்பாலும் ஆளரவம் இருக்காது பழைய கோயில்களில். நேர்த்திக் கடன் செலுத்தும் பழக்கமுள்ள கோயில்களில்லை என்பதால், பக்தர்கள் யாரும் சீந்தாத கோயிலாகத்தான் இருக்கும் நாங்கள் போகும் கோயில்கள்.

    அந்தக் காலத்தில் எங்களிடம் அதிகக் காசு இருக்காது. முதலில் சாமி கும்பிட்டு தீபாராதனை முடித்து 2 ரூபாய் அல்லது 5 ரூபாய் தட்டில் போட்டாலே பெரிசு எங்கள் இருவருக்கும். அதனால், அர்ச்சகரும் எங்களை அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார். தீபாராதனை முடிந்ததும் ஆச்சு என் கடமை என்று போய் முன்னால் உட்கார்ந்து விடுவார். அதற்கப்புறம், சந்துரு மெல்ல முனகிப் பாட ஆரம்பிப்பார். திடீரென ஊற்றுக்கண் திறந்து கிணற்றில் குளிர்நீர் பீறிடுவது போல சந்துருவின் வெண்கலக் குரல் கர்ப்பக்கிருஹத்தை நோக்கிப் பாயும் அந்தக் கணம்…. ஆஹா.. நான் பேறுபெற்றவன்..

    லிங்கத் திருமேனி சிலிர்த்து வாடிய மலர்களெல்லாம் மீண்டும் புதுசாய்ப் புஷ்பித்து விட்டது போன்ற எண்ணம் உண்டாகும். எண்ணெய் விளக்கின் ஒளியும் அறுபது வாட்ஸ் குண்டு பல்பின் ஒளியும் அந்தகாரத்தைக் கூட்ட, சந்துருவின் குரல் முன்மண்டபத்தில் அலை அலையாய்ப் பரவும். குறுகலான மண்டபம் குரலை வெகு இனிமையாக்கி எதிரொலிக்கும்.

    வெளியே போன அர்ச்சகர் ஓட்டமும் நடையுமாய் உள்ளே வருவார். வந்து அருகில் நின்று கொள்வார். கைகளை மார்பில் கோத்துக் கொண்டு கண்ணாடி வழியே சிவலிங்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு உடல் அசையாமல் பாடுவார் சந்துரு. அந்நேரம் அது வேற சந்துரு. நானறிந்த சந்துரு அல்ல அது.

    அதிகப் பாடல்கள் இல்லை. ஓரிரு பாடல்கள்தான் பாடுவார் சந்துரு. முதல்முறை கேட்கும்போதே கேட்கும் எவரையும் வசீகரித்துவிடக் கூடிய கீர்த்தனைகள் அவை. அவரைத் தொடர்ந்து நான் என்னுடைய ஆஸ்தானப் பாடலான முத்துத் தாண்டவரின் “ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ”” ஆரம்பிப்பேன்.                         

    சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத்தேர் ஆட என்னும் போதே உணர்ச்சிவசப்பட்டுக் குரல் லேசாகக் கமறி உடையும். பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட வரும்போது கிட்டத்தட்ட குரல் நின்றுவிடும். சுதாரித்துப் பாடி முடிக்கும்போது மனம் நிறைந்திருக்கும். திருச்சிறம்பலம் என்று சொல்லி முடிக்கும்போது அர்ச்சகர் உள்ளே ஓடிப்போய் விபூதியும் மாலையும் எடுத்துவந்து கொடுப்பார்.

    அது ஒரு காலம். அந்தணரான என் சந்துரு இப்போது ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு எத்தியோப்பியாவில் ஆசிரியராக வேலை செய்கிறார். காலம் எங்களை விசிறி வீசிவிட்டது. எத்தியோப்பியாவில் அவர் பாட்டைக் கேட்டு மயங்க ஈசன் எந்த வடிவில் இருக்கிறானோ? சந்துரு முறைப்படி சங்கீதம் கற்றவர்.

    அவர் மூலமாக யாருமற்ற ஆலயங்களில் பாடும் பழக்கம் எனக்கு வந்தது. அந்தப் பழக்கம் திருப்பதியில் பெருமாளை அதிக நேரம் தரிசிக்கும் வாய்ப்பையும் எனக்குத் தந்திருக்கிறது. என்னோடு படித்த கலைச்செல்வன், துரை அருள்நேயத்துடன் ஒருமுறை திடீரெனத் திருப்பதி கிளம்பிச் சென்றேன். இரண்டு நாட்கள் தங்குவதாகத் திட்டம். முதல்நாள் பகலில் 3 மணி நேரம் காத்திருந்து பெருமாளைத் தரிசித்தோம்.

    என்ன தோன்றியதோ தெரியவில்லை எனக்குப் பெருமாளைப் பார்த்ததும், பிரபந்தம் பாடத் தோன்றியது. பம்பாய் சகோதரிகள் லலிதா, சரோஜா பாடிய பிரபந்தங்கள் அடங்கிய கேசட் ஒன்று தமிழ் சுப்ரபாதத்துடன் T Series-சில் வெளியாகி இருந்தது. அதைக் கேட்டுக் கேட்டு மனப்பாடம் செய்திருந்தேன். காலையில் சுப்ரபாதமும் மாலையில் பிரபந்தமும் கேட்டுப் பழகி மனப்பாடமாகி இருந்தது.

    அந்த நினைவில், “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே.. நெடியோனே வேங்கடவா “ என்று பாடத் தொடங்கிவிட்டேன். ஜரிகண்டி ஜரிகண்டி என்று கையைப் பிடித்து இழுத்துத் தள்ளாத குறையாய் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருந்த ஆலய ஊழியர் என் மற்ற நண்பர்களைத் தள்ளிவிட்டு என்னை மட்டும், கூட்ட வரிசைக்குப் பின்னால் உந்தித் தள்ளினார். கையால் பாடு என்று சைகை காட்டினார். நான், என் நேர் முன்னே நகரும் வரிசை, அதற்கு அப்பால் பெருமாள்..

    அவ்வளவுதான்… எனக்குத் தெரிந்த பெருமாள் பாடல்கள் எல்லாம் சரக்குத் தீரும்வரை பாடினேன். அதில், திருமாலே சீராளும் மணிவண்ணா, கோபியர் கொஞ்சும் ரமணா உள்ளிட்ட திரையிசைப் பாடல்களும் அடக்கம். எனக்கே போதுமென்று தோன்றும்வரை திகட்டத் திகட்டப் பெருமாளைப் பார்த்துவிட்டு நானே வரிசையில் சேர்ந்து வெளியேறி வந்தால் கிட்டத்தட்ட கால்மணி நேரமாய் எனக்காகக் காத்திருந்த நண்பர்களின் முகத்தில் அனலடித்தது. ஏண்டா ஒனக்குப் பாடத் தெரியுங்கிறதைக் காட்றதுக்கு இதுதான் இடமா? என்று காதில் புகைவராத குறை..

    அதுக்கு நான் என்ன சேறது? அன்று அப்படி அமைந்தது. அதெல்லாம் நினைவு வருகிறது கம்போடியப் பயணத்தை எழுதும்போது. சிதம்பரத்தில் 13 ஆண்டுகள் நாட்டியாஞ்சலி பார்த்ததும் ஒருவிதத்தில் எனக்கு நிறையப் பாடல்களை அறிமுகம் செய்தது. தேடித் தேடி தெரிந்து கொண்ட பருவம் அது. பாட்டைப் பொறுத்தவரை, எல்லாம் கேள்வி ஞானம்தான். முறைப்படியெல்லாம் கற்கவில்லை. இருந்தாலும் கேசட்டில் கேட்டதைத் திருப்பி அச்சுப் பிசகாமல் பாடிவிடுவேன். அது பரணிக்குத் தெரியும். அந்த நினைவில், கம்போடியத் தண்ணீர் லிங்கங்களைப் பார்த்ததும் என்னைப் பாடச் சொன்னதும் நான் பாடினேன்.

    அதே ஆடிக் கொண்டார் கீர்த்தனைதான். மகாதேவன் நான் பாடுவதைப் படத்தோடு பதிவு செய்து கொண்டார். நான் பாடியதைக் கேட்டு உள்ளூர்க் குழந்தைகள் வித்தியாசமாகப் பார்த்தன. இவன் என்ன மொழியில் பாடுகிறான்? எங்கிருந்து வந்திருப்பான்? அவர்களிடம் நான் எப்படிச் சொல்வது, நான் தென்பாண்டி நாட்டான் என்று… அதனாலென்ன எந்நாட்டவர்க்கும் உரிய இறைவனைப் பாடிய பாடல் என்று அந்தக் குழந்தைகளின் ஆன்மா உணர்ந்திருக்கக் கூடும்.

    இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு காட்டுக்குள் வந்து இத்தனை லிங்கங்களைச் செதுக்கிய சிற்பிக்கு எங்களால் முடிந்த நன்றியை மனத்துக்குள் சொல்லிக் கொண்டோம். “எங்கே இருந்து இங்க வந்துருக்கு நம்ம சமயமும் பண்பாடும்” என்று ராஜூ சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.

    உப்புக்கல்லுக்குப் பிரயோஜனமில்லாத கான்கிரீட் குவியலைக் காண்பித்த பாவத்துக்கு ஆயிரம் லிங்கங்கள் மூலம் கழுவாய் தேடிக்கொண்டார் ரா. அடுத்து உங்களை ஒரு பெரிய அருவியில் குளிக்கக் கூட்டிக் கொண்டு போகிறேன் என்றார் ரா. ராஜூ, நவீன் இருவரும் அகண்ட தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். பரணிக்குத் திருச்சி. சின்ன வயதில் அருவிகளை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லாத அப்பாவி ஜீவன்கள்.

    ஆனால் நான் அப்படியில்லையாக்கும். இராஜபாளையத்துக்காரன். என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தாலே ஏழெட்டு அருவிகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கொட்டுவது தெரியும். ஊரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் அய்யனார் கோயில் அருவி. முப்பழபூசை, காது குத்த, முடியிறக்க என்று அவ்வப்போது போய் அருவியில் ஆட்டம் போடும் கொடுப்பினை உள்ள ஆத்மா. போதாக் குறைக்கு, திருக்குற்றாலத்துக்கு எங்கள் ஊரைத் தாண்டித்தான் போயாக வேண்டும். ஆனால், நான் மூன்று முறைதான் திருக்குற்றாலம் போய் வந்திருக்கிறேன் என்பது வரலாற்றுச் சோகம்.. அதை விடுவோம்.

    அருவி எனக்குத் தண்ணிபட்ட பாடு. ஆகவே, என்னத்த பெரிய அருவி, என்னத்த பெரிய தண்ணீர் என்று எகத்தாளமாக ரா-வுடன் வண்டியில் ஏறினேன். ஏறிக் கொஞ்ச தூரம் போனதும் இறங்குங்கள் என்றார். எல்லாத்தையும் இங்கேயே கழட்டி வைச்சுட்டுக் குளிக்கிற மாதிரி வாங்க அப்பு என்றார். வேனுக்கு வெளியே அம்புட்டையும் உருவிப் போட்டு உள்ளாடைக்கு மேல் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு அருவியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

    பரணி சரியான நாட்டுக் கட்டை. கடகடவெனக் காட்டுப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார். எனக்குக் காலில் செருப்பு இல்லாமல் நடக்க முடியவில்லை. அருகிலுள்ள கடைக்குப் போய் சாண்டல்ஸ் இரண்டு இரவல் வாங்கிப் போட்டுக் கொண்டேன். வெறும் துண்டுடன் அங்கிருந்த பெண்களைப் பார்த்துச் செருப்புக் கேட்கக் கூச்சமாகத்தான் இருந்தது. ஆனாலும் கால் நோகுதே ?

    அவர்களும் எதையோ தின்றுகொண்டே முகத்தை மூடிச் சிரித்துக் கொண்டே செருப்பைக் கொடுத்துப் போ போ என்றார்கள். எதிரே கூட்டம் கூட்டமாய்க் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய குதூகலத்தில் ஈடுபட்டால் மட்டுமே வரக்கூடிய மனக்கிளர்ச்சி எல்லார் முகத்திலும் தெரிவதைக் கவனித்தேன். அருவிக் குளியல் அனைவருக்கும் பிடித்தமானதுதான்.                                                   

    ஆனாலும் எதிரே வந்தவர்களின் முகங்களில் அதையும் தாண்டி ஓர் ஆனந்தம். இடுப்பில் உட்கார்ந்திருந்த அம்மணமான கைக்குழந்தைகள் கூட எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தன. பெண்கள் ஈரக்கூந்தலை விரித்துப் போட்டபடி சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தனர். கொஞ்ச தூரம் நடக்கத் தொடங்கியதும் அருவியின் ஓசை கேட்கத் தொடங்கியது. உயரமான ஓரிடத்திலிருந்து மரங்களின் வேர்களைப் பிடித்தவாறு பாதாளத்தில் இறங்க வேண்டியிருந்தது. படியெல்லாம் இல்லை.

    பரணி வெகு லாகவமாக இறங்கினார். ராஜூ யோகா பயிற்சி செய்யும் பார்ட்டி. சொல்லவே வேண்டாம். வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் எப்போதும் ஒரு விரைவு இருக்கும் அவரிடம். நவீன் ஒப்புநோக்க எங்களை விட இளையவர். நானும் மகாதேவனும் கொஞ்சம் தடுமாறிக் கீழே இறங்கினோம். அருவியில் குளித்தவர்கள் நடந்து நடந்து பாதை ஈரமாகிச் சொத சொதவென்றிருந்தது. பிடிமானமில்லாத செருப்பு வழுக்கத் தொடங்கியது.

    ஒருவரையொருவர் பற்றிக் கொண்டு அருவியை நோக்கி நடந்தோம். ஒரு கட்டத்தில் திரைவிலகியதுபோல் திடீரென எங்கள் முன் தொலைவில் அருவி தோன்றியது. கடவுளே !!!…..

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 4

         புத்தர் கோயிலைப் பார்க்கப் படிகளை ஏறிக் கடந்தோம். படியேறும் வழியில் சிறு விற்பனையாளர்கள் சிலரைக் காண முடிந்தது. நம்ம ஊர் என்றால் மலைக் கோயில் வாசல்களில் மலைவாழ் மக்கள் சுத்தமான தேன் என்று கூறி பாட்டில்களில் விற்பார்கள். இங்கு விற்கப்பட்ட பல பொருட்களை எங்களுக்கு அடையாளந் தெரியவில்லை. உள்ளூர்க்காரர்களுக்குத் தெரிந்திருக்கும். சில விலங்குகளின் உடல் பாகங்களை ஒருவர் காதலியோடு விற்றுக் கொண்டிருந்தார்.

         காதலியோடு சரசமாடிக் கொண்டு சற்றுத் தொலைவில் தடுப்புச் சுவரில் உட்கார்ந்திருந்தார். எலும்பு, நகம், தோல் என வகை வகையான உடல் பாகங்கள். ஏதோ ஒருவகைக் குரங்கின் உடல் பாகங்கள்போல் தெரிந்தது. இது சட்டபூர்வமா இல்லையா தெரியவில்லை. அவற்றிலிருந்து ஒருவித வாடை வந்து கொண்டிருந்தது. மாணவர் கூட்டம் ஒன்று பேசிச் சிரித்துக் கொண்டு மேலிருந்து கீழே இறங்கி வந்தது. நவீன் அவர்களோடு படம் எடுத்துக் கொண்டார்.

         ஆண்களும் பெண்களும் பழகுவதில் இங்கு பெரிதாகத் தடை இருப்பதுபோல் தெரியவில்லை. சகஜமாக இருந்தனர். எல்லாருமே பதின்ம வயது மாணவர்கள்தான். அந்த இளமைக்கே உரிய துள்ளலும் குறும்பும். செல்லும் வழியில் சிமெண்ட்டால் செய்யப்பட்ட சில உருவங்கள் இருந்தன. ஒன்றும் மனத்தைக் கவரவில்லை. மேலே பெரிய புத்தர் கிடந்த கோலத்தில் இருந்தார். அவர் ஒருத்தர்தான் கொஞ்சம் பார்க்கும்படி இருந்தார். அதுவும் கல் சிற்பமல்ல. கான்கிரீட் புத்தர்தான்.

         பேங்காக்கில் பார்த்த மிகப் பெரிய புத்தரைப் போன்றதே இதுவும். ஆனால் அதிலாவது ஓரளவு கலைநயம் இருந்தது. இதில் மெச்சும்படி ஏதுமில்லை. கான்கிரீட்டில், சிமெண்ட்டில் செய்யப்பட்ட சிலை என்றாலே எனக்கு ஏதோ ஒவ்வாமை. நம்ம ஊர்க் கோயில் விமானம், கோபுரங்களில் உள்ள சுதை வேலைப்பாடு, கோபுர பொம்மைகள் தனி. அவை சில இடங்களில் கலையழகுடன் மிளிரப் பார்த்திருக்கிறேன்.

         இந்த புத்தருக்கு மஞ்சளாக வர்ணமடித்து மேலே மஞ்சள் துணியில் விதானம் அமைத்திருந்தனர். புத்தரைச் சுற்றிவர இடம் விட்டிருந்தனர். அந்த புத்தருக்கு அருகே வெவ்வேறு சிலைகள். பெரிய புத்தருக்குக் கீழே அவர் உடலைச் சுற்றிவர சின்னச் சின்ன புத்தர் சிலைகள். அருகிலேயே ராஜ அலங்காரத்தில் மரகத புத்தர் சிலை. கண்கள் திறந்த நிலையில் இருந்தது. பேங்காக் அரண்மனை வளாகத்தில் இருக்கும் ராஜ புத்தரின் நகல் வடிவம். அதுவும் காமா சோமாவென்றிருந்தது.

         அந்த வளாகத்துக்குள்ளேயே பௌத்த பிக்குகள் தங்குவதற்கு ஒரு சின்ன மடாலயம். மனத்தில் எதுவுமே ஒட்டவில்லை. நல்ல வெக்கை வேறு. இவ்வளவு உயரம் வந்து இந்த வெக்கை வித்தியாசமாக இருந்தது. வரும் வழியில் கூடக் குளிர் காற்று இருந்தது. நல்லவேளை வெயில் கடுமையாக இல்லை. இலக்கின்றி வெறித்துப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் கீழே இறங்கினோம்.

    வரும் வழியில் வடிவாக இருந்த ஒரு பெரிய சிவலிங்கம் சின்ன ஆறுதல். மொழு மொழுவெனக் கருங்கல்லில் செய்யப்பட்ட சிவலிங்கம். வெட்டவெளியில் சிவனே என்று உட்கார்ந்திருந்தது. சதுரமான ஆவுடையார். மேலே பாணலிங்கம் மாதிரி லிங்கம். கீழே இறங்கியதும் இடப்பக்கமாக நடத்தி அழைத்துச் சென்றார் ஓட்டுநர் ரா. ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப்பட்ட ஆற்றைப் பார்க்க..

         இந்த ஆற்றிலிருந்துதான் தண்ணீர் கீழே போகிறது. இதனுடன் மேலும் சில கிளை நதிகள் சேர்ந்து கொண்டுதான் அங்கோர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வட்டாரத்தை வளப்படுத்துகின்றன என நினைக்கிறேன். கெமர் பேரரசு என்பது ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்த சாம்ராஜ்யம். அதன் ஒரு பகுதியான இந்த லிங்கங்கள் எப்போது வடிக்கப்பட்டன என்பது பற்றித் தெளிவான தகவல் இல்லை.

         ஆற்றுப் படுகையெங்கும் வட்டமாகவும் சதுரமாகவும் ஆவுடையார் விளிம்பு வைத்து உள்ளே வட்ட வட்டக் கல் இட்டலிகள் போல் உள்ளன பெரும்பாலான லிங்கங்கள். சிறுவயதில் நாம் களிமண்ணைப் பிசைந்து கரைத்து ஊற்றி விளையாடிய வட்டங்கள் போலிருந்தன. நாங்கள் போயிருந்த நேரம் தண்ணீர் அதிகம் இல்லை. ஆகவே தெளிவாக லிங்கங்களைக் காண முடிந்தது.

         லிங்கத்தோடு பெரிய விஷ்ணு உருவம் ஒன்றும் நதிப் படுகையில் இருந்தது. உற்றுப் பார்த்தால்தான் தெரியும். விஷ்ணுவையும் லிங்கங்கள் பலவற்றையும் இப்படித் தண்ணீருக்குள் பார்ப்பது ஒரு புது அனுபவம். லிங்க வடிவங்களால் ஆசிர்வதிக்கப்பட்டுப் புனிதமடையும் தண்ணீர் கீழே உள்ள வயல்களில் பாய்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்பது கம்போடியர்களின் நம்பிக்கை.

         நாங்கள் நின்ற இடத்திலிருந்து மேலே போனால், சின்னச் சின்ன அருவிகளும் அவற்றின் ஓரங்களில் மேலும் பல இந்துக் கடவுளரின் உருவச் செதுக்குகளும் இருப்பதாக ஓட்டுநர் சொன்னார். மேலே போக நேரமில்லை. எங்கள் கண்ணுக்கு எதிரிலேயே உள்ளூர்க் குழந்தைகள் லிங்கத்தின் மீது கால்படாமல் ஆற்றைக் கடந்து எதிர்த்திசைக்குப் போயினர்.      

                சலசலவென ஓடும் நதியும் நிழல்தரு மரங்களும் ஏகாந்த உணர்வைத் தந்தன. நம் பாட்டன் முப்பாட்டன் வந்து நின்ற இடம். இதைச் செதுக்கிய சிற்பி பிறவியிலேயே இந்துவாகப் பிறந்திருப்பானா? இங்கு இந்து சமயம் பரவியது எப்படி? அதற்குமுன் இந்த மக்கள் எந்த சமயத்தைப் பின்பற்றினார்கள்? ஏன் இந்து மதத்திற்கு மாறினார்கள்? இந்துப் புராண இதிகாசங்கள் இவ்வளவு தூரம் இவர்களுக்குள் ஊறியது எப்படி? எனப் பலவிதமாக நினைத்துக் கொண்டேன்.

    – பொன். மகாலிங்கம்

    ———-

     பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • சென்னை கோவில்கள் – 1

    சென்னையை காக்கும் காளிகாம்பாள்

     

    சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.

    ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640இல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.


    ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐபி பக்தர்தான் சத்ரபதி சிவாஜி.

    1677இல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார் சத்ரபதி சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் (Streynsham Master). இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர்தான்.

    தனது தென்னகப் படையெடுப்பால் வேலூர், செஞ்சி, ஆற்காடு ஆகிய பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின் அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மெட்ராஸ்வாசிகள் அடுத்து என்ன எனத் தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இப்படி நிமிடங்கள் திக்..திக்.. என கடந்து கொண்டிருந்த நிலையில், 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.

    சத்ரபதி சிவாஜி சில விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை அளித்து விடுவதாகவும் அந்த தூதர் தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் பணம் எதையும் பெறாமல் சிவாஜி கேட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர். 

    சில நாட்கள் கழித்து மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் சிவாஜியின் தூதர். இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர், இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும் பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது.

    காளிகாம்பாள் கோவிலில் உள்ள சிவாஜி பற்றிய குறிப்பு

    இந்த இடத்தில்தான் வரலாற்றில் ஒரு புதிர் அவிழ்க்கப்படாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. சிவாஜி சென்னைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசித்துவிட்டுச் சென்றார் என்கிறார்கள் சிலர். அக்டோபர் 3, 1677இல் சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை.

    மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.

    சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.

    – பார்த்திபன், வரலாற்று ஆய்வாளர் (தினத்தந்தியில் வெளியான கட்டுரையில் இருந்து..)

    —————

    பார்த்திபன் – பத்திரிகையாளர், வரலாற்று ஆய்வாளர். சென்னை மாநகரம் பற்றி மூன்று புத்தகங்களை எழுதி இருக்கிறார். அந்தக்கால சென்னை பற்றி தினத்தந்தி நாளிதழில் 100 வாரங்கள் கட்டுரை எழுதியவர். இந்தியாவின் முக்கியமான மாநகரங்களில் ஒன்றான சென்னையைப் பற்றிய ஏராளமான தகவல்களை தெரிந்துவைத்திருப்பவர். அவற்றை சுவைபட எழுதவும் செய்கிறார் என்பதுதான் கூடுதல் தகவல்.

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 3

    அங்கோர் வாட் ஆலயத்தை மேலிருந்து பருந்துப் பார்வையில் பார்த்ததை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு நினைவிலிருந்து அகற்ற முடியாது. அதன் பரப்பளவும் கம்பீரமும் எண்ணிப் பார்க்கப் பார்க்க பிரமிப்பை ஏற்படுத்தியது. மனிதனால் என்னென்ன சாதிக்க முடியும் என்பதற்கு, இதுபோன்ற கட்டடங்கள் மௌன சாட்சியாக நிற்கின்றன. எகிப்தியப் பிரமிடுகள், கம்போடியாவின் கெமர் பேரரசு காலத்தில் எழுந்த பேராலயங்கள், பிரம்பனான் கோயில் வளாகம், போராபுதூர் பௌத்த ஆலயம், தஞ்சைப் பெரிய கோயில், வட இந்தியக் கோட்டை, கொத்தளங்கள் இவற்றையெல்லாம் உருவாக்க, எவ்வளவு மனித உழைப்பும் திட்டமிடலும் தேவை? யாரோ ஒரு தனிமனிதர் முதலில் தன் மனக் கண்ணில் கண்டு அதை உருவாக்கிவிட்ட பின்னர்தானே அவை தூல வடிவம் பெறுகின்றன? என்னதான் மன்னரின் ஆணைக்கிணங்க அவை கட்டப்பட்டாலும் வெறும் கட்டளைக்கு அடிபணிந்தா இப்படிப்பட்ட அதிசயங்கள் மண்ணில் எழ முடியும்? இதுபற்றிப் பேச்சு எழும்போதெல்லாம், “இப்ப மாதிரி அப்ப பொழுதுபோக்கு வசதியெல்லாம் இல்லை. சோறு போட்டாப் போதும், சனங்க மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சிருப்பாங்க!” என்ற வாதம் முன்வைக்கப்படும். ஆனால், சோற்றுக்காகச் செய்யப்பட்ட பணியில் இவ்வளவு திருத்தம் இருக்க முடியுமா என்ன? அங்கோர் வாட் ஆலயத்தை உருவாக்க 30 ஆண்டுகள் பிடித்ததாக இணையத்தில் படித்தேன். ஒரு தலைமுறைக் காலம்… எவ்வளவு அர்ப்பணிப்பு வேண்டும் இவ்வளவு பெரிய ஆலயத்தைத் திட்டமிட்டபடி கட்டி முடிக்க? எத்தனை இடையூறுகள் வந்திருக்கும் இடையிடையே? கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் கடந்த பின்னரும் நம் முன்னே பழமைப் பாசிப் பிசுக்குடன் ஒளிவிடும் அங்கோர் வாட் மானுட சாதனையின் உச்சங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

    இந்தப் பயணத்திற்காகப் படித்த கட்டுரைகளும், பார்த்த ஆவணப் படங்களும் அங்கோர் மீதான ஆச்சர்யத்தை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. சென்று வந்த ஓராண்டு கழித்து இந்த அத்தியாயத்தை எழுதுகிறேன். இந்த ஓராண்டிலும் அவ்வப்போது கம்போடியா பற்றிப் படித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். எப்பேர்ப்பட்ட இடத்துக்கு நாம் சென்று வந்திருக்கிறோம் என்ற உணர்வு எங்கள் எல்லாருக்குமே எழுந்த வண்ணம் உள்ளது. நாங்கள் சந்திக்கும்போதெல்லாம், கம்போடியா எங்களுக்குள் வந்துவிடுகிறது. “ஆசை தீரத் தின்னவனும் கிடையாது, அலுப்புத் தீரக் குளிச்சவனும் கிடையாது” என்று ஒரு சொலவடை உண்டு. அந்தக் கதைதான் அங்கோர் வாட்டும். ஒவ்வொரு முறை அதைப் பற்றிப் படிக்கும்போதும் ஒழுங்காப் பார்த்தோமா நம்ம அதை? தப்புப் பண்ணிட்டோமோ? ஒரு வாரம் ஒதுக்கி இருக்கணுமோ? இன்னொரு தடவை போக வாய்ப்பு கிடைக்குமா? இப்படி சிந்தனை ஓடுகிறது. இன்னும் இளமையாக இருந்திருக்கும்போதே கம்போடியா போயிருக்க வேண்டும். இப்போது மனம் செல்லும் வேகத்தில் செல்ல உடம்பு ஒப்புவதில்லை. சரி, பரவாயில்லை. எத்தனை பேருக்கு இதைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறது என்று நினைத்து என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.

    வாசல் நிலைப்படியில் ஒருவர் நிற்பதைப் பார்த்த பிறகுதான் யாரோ ஒருவருக்குப் படங்களுக்குச் சட்டமிடும் யோசனை வந்திருக்க வேண்டுமென வண்ணதாசன் எழுதுவார். அதுபோல, அங்கோர் வாட் ஆலயத்தை வானத்திலிருந்து பார்க்கும்போது, அகழிக்குள் கட்டப்பட்டதால் அதன் அழகு மேலும் பொலிவு பெறுவதுபோல் எனக்குத் தோன்றியது. நீரால் செய்யப்பட்ட சட்டம். காலை, மாலை வெயிலுக்கேற்ப அவ்வப்போது நிறம் மாறும் வண்ணச் சட்டம். அங்கோர் வாட்டின் முழுமையான கம்பீரத்தையும் அழகையும் பருந்துப் பார்வையில்தான் நன்கு அனுபவிக்க முடியும். வேறெந்தக் கோணத்தில் பார்த்தாலும் அதை முழுமையாகப் பார்ப்பது அசாத்தியம். ஆலயத்தின் நடுவிலுள்ள மகாமேருவும் அதைச் சுற்றியுள்ள நான்கு முகடுகளும் மட்டுமே ஓரளவு கண்ணுக்குள் நிறையும். அந்தக் காட்சியைத்தான் கம்போடிய தேசியக் கொடியில் பொறித்து வைத்திருக்கிறார்கள். மற்றபடி ஆலயத்தை ஓரிடத்திலிருந்து முழுமையாகப் பார்த்துவிட முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும்போது ஒரு விதமாகவும், அருகே செல்லச் செல்ல வேறுவிதமாகவும் தோற்றமளிக்கின்றன ஆலய முகடுகள்.

    காலம் அதன் சுவர்களை அரித்து விட்டாலும், கம்பீரம் குலையவில்லை. தென் கிழக்காசிய நாடுகளுக்கே உரித்தான பசுமைக் காடுகள். அவற்றின் நடுவே பதித்து வைக்கப்பட்ட கல் நகைகள் போலிருக்கின்றன அங்கோர் ஆலயப் பகுதிகள். பேலூர், ஹளபேடு சிற்பங்களைப் பற்றி எழுதும்போது ஜெயமோகன் இப்படித்தான் கல்லில் செய்த நகைகள் என்பார். அழகான உவமை! கம்போடியர்கள் கல் கட்டுமானத்திலும் சிற்பத் திறனிலும் மட்டுமல்ல நீர் மேலாண்மையிலும் மிகச் சிறந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் அகப்பட்டுக் கொண்டே வருகின்றன. அங்கோர் வாட்டைச் சுற்றி இருக்கும் அகழி அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

    ஆலயம் மேற்குப் பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. மேற்கிலும் கிழக்கிலும் இரண்டு வழிகள் உட்செல்லவும் வெளிவரவும். மேற்கில் உள்ளே நுழையும் இடத்தில் இடப்பக்கத்திலிருந்து அகழியோடு சென்று ஆலயத்தைச் சுற்றித் திரும்ப நாம் நிற்கும் இடத்திற்கு வந்தால், நான்கு திசைகளையும் சுற்றிவரும் மொத்தத் தொலைவு சுமார் 5.5 கிலோ மீட்டராம். அகழியின் அகலம் சுமார் 200 மீட்டர். கற்பனைக்கும் எட்டாத துணிவு. அகழியின் ஆழம் 10 அடிக்கு மேலிருக்கும். எப்போதும் அதில் தண்ணீர் இருக்கும்வகையில் நீர்வரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அகழியில் இருந்து வெட்டி எடுத்த மண்ணைத்தான் மகாமேருவுக்குக் கீழே கொட்டி உயர்த்தியிருக்கிறார்கள் சிற்பிகள் என்கின்றன ஆவணப் படங்கள். இன்றுவரை அகழியில் தண்ணீர் குறைந்ததில்லை.

    உலக மரபுடைமைத் தலமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், இப்போது அகழியும் ஆலயமும் சீராகப் பராமரிக்கப்படுகின்றன. சரி, அங்கோர் வாட் கைவிடப்பட்ட காலத்தில் அகழியை யார் பராமரித்தார்கள்? எப்படி அது தூர்வாரப்பட்டிருக்கும்? தூர்வாராமற் போயிருந்தால் நாளாவட்டத்தில் அகழி தூர்ந்து போயிருக்காதா? அல்லது ஆறுகளைப் போல் தண்ணீரின் இயல்பான ஓட்டத்திலேயே வண்டல்மண் சேராமல் அடித்துச் செல்லப்படுமா? நான் பார்த்தவரை அகழித் தண்ணீர் தேங்கித்தான் நிற்கிறது, ஓடவில்லை. மேற்கு நுழைவாயிலிலும் சரி, கிழக்குப்புற வெளிவாயிலிலும் சரி, கீழே பாலம் போல் அகழி இணைக்கப்படவில்லை. இரண்டு ப வடிவங்களை ஒட்ட வைத்தாற்போல் பிரிந்துதான் இருக்கின்றன. அல்லது கண்ணுக்குத் தெரியாமல் கீழே நீரோட்டத்திற்காக இணைப்புப் பாலங்கள் உள்ளனவா என்று தெரியவில்லை. எங்கோ உள்ள நதியை ஆலயத்தின் பக்கம் திசைதிருப்பி அதிலிருந்து வற்றாத நீர்வரத்துக்கு ஏற்பாடு செய்த பொறியியல் திறனை எவ்வளவு மெச்சினாலும் தகும்.

    ஆலயத்தின் அஸ்திவாரம் உறுதியாக இருப்பதற்கு, அகழியில் நீர் நிறைந்திருப்பது அவசியம் என்று ஓர் ஆய்வாளர் கூறுவதை யூ டியூபில் பார்த்தேன். அதுபற்றிப் படிக்க வேண்டும். மிக எளிமையான கருவிகளை வைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய சாதனையைக் கம்போடியர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இவ்வளவும் ஓடியது மனத்திற்குள் ஹெலிகாப்டர் பயணத்தின்போது. எங்கள் மூவருக்கும் மூச்சு அடைத்துவிட்டது போலிருந்தது மேலிருந்து பார்க்கும்போது. ஒவ்வொருவரும் அவரவருக்குள் ஆழ்ந்து போனோம். கீழே இறங்கியதும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டபோது அதன் அர்த்தத்தை மனத்தால் விளங்கிக் கொள்ள முடிந்தது. எங்களையடுத்து ஹெலிகாப்டரில் பயணம் செல்லக் காத்திருந்த மகாதேவனும் நவீனும் எப்படி இருந்துச்சு ? எப்படி இருந்துச்சு ? என்று கேட்டபோது வாங்க பார்க்கலாம் என்றார் ராஜூ. வேறு ஒன்றும் சொல்லவில்லை. ஓரிரு வரியில் கண்டதைச் சொல்லிவிட முடியுமென அவருக்குத் தோன்றவில்லை போலும்.

    சென்ற பயணத்திற்கு எதிர்த்திசையில் அமர்ந்து ராஜூ இரண்டாவது பயணம் சென்று வந்தார். ஹெலிகாப்டர் பயணத்தின் நினைவாகச் சடசடவெனப் படங்கள் கிளிக்கிக் கொண்டோம். இறங்கி வந்து காத்திருந்த ஓட்டுநர் ரா-வுடன் அடுத்த பயணம் தொடங்கியது. இன்றைய நிகழ்ச்சி நிரலில், மலைமேல் இருக்கும் புத்தர் கோயில், ஆயிரம் லிங்க ஆறு, அருவிக் குளியல், நதியில் படகுப் பயணம் போய் தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய நன்னீர் ஏரியைப் பார்ப்பது, அப்சரஸ் நடனமணிகளின் ஆடலைக் கண்டு ரசிப்பது எனத் திட்டம் வகுத்திருந்தார் ரா. வேனில் ஏறிக் கொஞ்ச தூரம் போனவுடன் மலையேறத் தொடங்கியது வண்டி. உயரமாகப் போகப் போகக் காற்றில் குளிர் கூடிவந்தது. போகிற வழியில் ஆங்காங்கே கம்போடியக் கிராமங்கள். அறியாமை என்னும் அழகு பொதித்த கிராமிய முகங்கள். ஓரிடத்தில் நிறுத்தி இளநீர் குடித்தோம். ஒரு பெரிய குடும்பம். கடை வைத்து அதில் வரும் வருமானத்தை வைத்துக் குடும்ப வண்டி ஓடுகிறது போலும். அக்கடா என்று இருக்கிறார்கள்.

    அங்கோர் வாட் ஆலயத்தைப் பார்க்கவரும் அளவுக்கு இங்கே ஆயிரம் லிங்க ஆற்றைப் பார்க்க யாரும் வருவதில்லை. கூட்டம் இல்லாததால் மலையும் சுத்தமாக இருக்கிறது. அதிக நேரமாகவில்லை. புத்தர் கோயிலை அடைந்து விட்டோம். வாகன நிறுத்துமிடத்தில் வண்டியை விட்டுவிட்டு நடக்கத் தொடங்கினோம். கம்போடியக் கைவினைப் பொருட்களும் தின்பண்டங்களும் விற்கும் கடைகளிருந்தன. மேலே என்ன இருக்கும்? அது எவ்வளவு பழமையானது என்ற தகவல் எதுவும் தெரியாது. ஓட்டுநரை நம்பி இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம்.

    பார்ப்போம்.. மேலே என்ன இருக்கிறது என்று.. – தொடரும்….

    பொன். மகாலிங்கம், சிங்கப்பூர்
     
    ———————————————————————————————————————————
    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 2

    தொடர்ச்சி….
     
    புது இடத்தில் எனக்குத் தூக்கம் வருவது சிரமம். ஆனால், பயணக் களைப்பில் அதெல்லாம் பறந்து போனது. நல்ல தூக்கம். சாப்பிட்டவுடனே படுக்கப் போனதும் ஒரு காரணமாக இருந்திருக்கும். எட்டு மணிக்குத்தான் எல்லாரும் எழுந்தோம். நான், பரணி, ராஜூ மூவரும் ஓர் அறையில் தங்கிக் கொண்டோம். மகாதேவனும் நவீனும் ஓர் அறையில்.  
     
    அறைக்கு நேர் எதிரே, அடக்கமான நீச்சல் குளம். வெளியே எழுந்து வந்து பார்த்தபோது, நல்ல மழை பெய்து துடைத்து விட்டது போல் இருந்தது தோட்டம். நீச்சல் குளத்தைச் சுற்றிலும் அழகான தோட்டம் போட்டிருந்தனர். சின்னச் சின்ன வெள்ளைப் பூக்கள். அரளிசெம்பருத்தி, கல்வாழை என வெப்ப மண்டலத்துக்கே உரிய பூக்கள். அறைக்கு வெளியே வராந்தாவில், கம்போடிய பாணி ஓவியங்கள் தொடர் வரிசையில் வரையப்பட்டிருந்தன. எல்லாமே இராமாயண, மகாபாரதக் காட்சிகள். நகல் ஓவியங்களாக இருந்தாலும் நல்ல ஓவியங்கள்.
     
    விடுமுறை என்று வந்துவிட்டாலே அதற்கென ஒரு மனம் கூடிவிடுகிறது. வழக்கமான வேலையைச் செய்யாமல் மாற்றிச் செய்தாலே மனம் புத்துணர்ச்சி கொண்டு விடுகிறது. தங்கும் விடுதியிலேயே காலை உணவுக்கும் வசதி இருந்தது. அது எவ்வளவு பெரிய வசதி என்று இன்னும் இரண்டு நாள் கழித்துத் தெரிந்தது எங்களுக்கு. விடுதிக் கட்டணம் ஐம்பது அமெரிக்க டாலர்தான். என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை.
     
    இந்தியாவாக இருந்தால் இந்தத் தூய்மைக்கும் விசாலத்துக்கும் பத்தாயிரம் ரூபாய் தீட்டி விடுவார்கள். இங்கே தங்கும் அறை கொள்ளை மலிவுக் கட்டணத்தில் கிடைக்கிறது. மலேசியாசிங்கப்பூரில் கூட இவ்வளவு மலிவான கட்டணத்தில், இவ்வளவு தூய்மையான அறை கிடைப்பது சிரமம். காலை உணவுக்கு முன் நான் போட்ட சட்டையைப் பார்த்து பரணியும் ராஜூவும் ஒரே கிண்டல். இப்படி ஒரு சட்டையைப் போட்டா எங்களையெல்லாம் யாரு பாப்பா என்று கேள்வி. இது கிண்டலா பாராட்டா என்று கேட்டால், அதற்கும் ஒரு வியாக்யானம் வைத்திருப்பார்கள் இருவரும். சரி பாராட்டு என்றே வைத்துக் கொள்வோமே ! போத்தீஸில் எடுத்த நாலு சட்டையில் ஒரு சட்டையை அன்று வெள்ளோட்டம் விட்டேன். தீபாவளி விளம்பரத்தில் கூட ஒரு ஆள் அந்தச் சட்டையைப் போட்டிருந்தார். ஏனோ தெரியவில்லை. சில வாரம் கழித்து வந்த விளம்பரத்தில் ஐந்து சட்டைகளில் ஒன்றாக இருந்த அந்தச் சட்டையை மட்டும் எடுத்து விட்டார்கள். சரி சட்டையை விடுவோம்.
     
    சாப்பாட்டுக்கு வருவோம். சாப்பாடு சராசரிக்குச் சற்று மேல். பெரிய நட்சத்திர விடுதி அளவுக்கு அதிக வகைகள் இல்லை. ஆனால், அன்பாக கவனிக்கும் பணியாளர்கள் இருந்தனர். கேட்டதை உடனே சூடாகச் செய்து கொடுத்தனர். சாப்பிட்டு இரண்டாவது காஃபி அருந்திப் புறப்பட்டோம். எங்கே போவதுன்னு இன்னமும் முடிவாகலையே !
     
    இன்று அங்கோர் வாட் போக முடியாது. அதற்கு ஒரு முழு நாள் வேண்டும். சரியான தூக்கம் இல்லாமல் அதை முழுமையாக ரசிக்க முடியாது என்பதால் மற்ற இடங்களைப் பார்க்கலாம் என்று முடிவானது. என் வீட்டில் வாடகைக்கு இருக்கும் கார்த்தி சொல்லி அனுப்பியிருந்தார். சார் கம்போடியாவில், ஹெலிகாப்டர் பயணம் இருக்காம். நாங்க பார்க்கலை. நீங்க எப்படியாவது போயிட்டு வாங்க ! என்று. அதனால் அதுபற்றி ஓட்டுநர்வழிகாட்டி ரா-வைக் கேட்டோம். பக்கத்தில்தான் அலுவலகம், சென்று விசாரிக்கலாம் என்றார். எட்றா வண்டியை !
     
    உண்மையிலேயே ஹெலிகாப்டர் நிர்வாக அலுவலகம் பக்கத்தில்தான் இருந்தது. நாங்கள்தான் முதல் போணி என்று நினைக்கிறேன். ஒரு ஆளுக்கு 90 அமெரிக்க டாலர். எட்டு நிமிடப் பயணம். அங்கோர் வாட்டை  வலப்பக்கமாகச் சென்று பார்க்கலாம். பருந்துப் பார்வையில் சுற்றியுள்ள அகழியோடு சேர்த்து ஆலயத்தைப் பார்ப்பது, ஒரு தனி அனுபவம். விமானி தவிர, ஒரு பயணத்தில் குறைந்தது மூவராவது செல்ல வேண்டும். அதற்குக் குறைந்து வண்டி புறப்படாது. நாங்களோ ஐந்து பேர்.. ஒரு தடவைக்கு மூன்று பேர் என்றாலும் இரண்டாவது தடவைக்கு ஒரு ஆள் குறைந்தது. என்ன செய்யலாம் ?
     
    ராஜூ நான் ரெண்டு வாட்டி பறக்கிறேன் என்று முடிவெடுத்தார். உலங்கு வானூர்திப் பயணம் உறுதியானது. (அதுதாங்க ஹெலிகாப்டருக்குத் தமிழ்ப் பதம்..) பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு நேரே சியாம் ரியெப் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தோம். இது எனக்கு இரண்டாவது ஹெலிகாப்டர் பயணம். 1984-ல் என் அப்பா தஞ்சாவூரில் வருவாய்க் கோட்டாட்சியராகப் (RDO) பணியாற்றியபோது தஞ்சை மாவட்டத்தில் வெள்ளம் வந்தது. அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவுப் பொட்டலம் விநியோகிப்பதற்காக இராணுவத்தில் இருந்து ஹெலிகாப்டர் வந்தது. அதில் போய்ரொட்டி, புளிசாதப் பொட்டலங்களைப் போட்டு வந்தோம். அது அரை மணி நேரப் பயணம். பதின்ம வயதில் அந்தப் பயணத்தை முழுமையாக அனுபவித்தேனா தெரியவில்லை. ஆகவே, இம்முறை தவற விடக்கூடாது. சும்மா அசத்திரணும் என்ற முடிவோடு போனேன்.
     
    நிக்கான் படக்கருவியைத் தொட்டுத் தடவி, மின்கல நிலையைச் சோதித்து உறுதிப்படுத்தி நாலு படமும் எடுத்துப் பார்த்து விட்டேன். விமான நிலையக் கம்பி வேலிக்கு வெளியே வாகனத்தை நிறுத்திக் காத்திருந்தோம். சிவப்பு நிற ஹெலிகாப்டர் தொலைவில் ஒரு தட்டான்பூச்சி மாதிரித் தெரிந்தது.  டப டப டப டப என்ற சத்தத்துடன் ஒய்யாரமாக வந்து இறங்கி நின்றது. முதல் பயணத்தில், நான், பரணி, ராஜூ மூவரும் ஏறிக் கொண்டோம். அதற்கு நடக்கும்போதே படம் எடுத்துக் கொண்டோம். உள்ளே வெள்ளைக்கார விமானி இருந்தார். சிறுவயது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, இங்கே வந்து இதை ஓட்ட வேண்டுமென்று இவருக்கு எம்பெருமான் விதித்திருக்கிறார். நல்ல நட்பான மனிதர். பேச்சில் உண்மையான சிநேகம் தெரிந்தது. 
     
    வலப்பக்க சன்னல் ஓரத்தில் ராஜூ. இடப்பக்க சன்னலோரம் எனக்கு. எனக்கு எதிரே, விமானிக்கு இணையாக உள்ள இருக்கையில் பரணி. உள்ளே உட்கார்ந்து காதில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டோம். இல்லாவிட்டால்,ஹெலிகாப்டர் புறப்பட்டு விட்டால், அது போடும் சத்தத்தில், விமானியின் உத்தரவும் விளக்கமும் எங்களுக்குக் கேட்காது. அது வழியாகத்தான் தொடர்பு சாத்தியம்.
     
    உட்கார்ந்து இருக்கை வார்களை மாட்டிக் கொண்டதுமே, ஜிவ்வென்று மேலே புறப்பட்டது ஹெலிகாப்டர். ரங்க ராட்டினம் சுற்றும்போது, அடிவயிற்றில் குபீரென்று ஒரு அசைவு வருமே ! அப்படி வருமென்று எதிர்பார்த்தேன். ஒன்றும் வரவில்லை. சாதாரணமாகத்தான் இருந்தது. விமான ஓடுதளத்தில் சின்னச் சின்ன இலகு ரக விமானங்கள் சில நின்று கொண்டிருந்தன. சட்டென வளைந்து திரும்பியதும், தொலைவில், அங்கோர் வாட் ஆலயத்தைச் சுற்றியுள்ள அகழியின் நீரில் சூரியன் பிரதிபலிப்பது தெரிந்தது. அங்கோர் வாட்டை நெருங்கும் முன், மலைக்கு நடுவே இருந்த இன்னோர் ஆலயத்தைக் காண்பித்தார் விமானி. தெளிவாகத் தெரியவில்லை என்றபோதும் ஒரு பாசிபடர்ந்த கற்குவியல் தெரிந்தது. அங்கோர் வாட்டும் அப்படித்தான் இருந்தது.    
     
     
    முந்திய இரவில் மழை பெய்திருந்தது எங்கள் பாக்கியம். எல்லா இடங்களும், குளித்து விட்டு வந்து அம்மணமாய் நிற்கும் குழந்தைபோல் தெய்வீக அழகுடன் இருந்தன. அங்கோர் வாட்டைச் சுற்றிப் பெரிய அகழி. அதுவே ஒரு பிரம்மாண்டம். ஒன்றரை கிலோமீட்டருக்கு 1 புள்ளி 3 கிலோ மீட்டர் நீள, அகலம் கொண்ட அகழி. அகலம் 190-மீட்டராம். மேற்குப் பார்த்த ஆலயம் அங்கோர் வாட். அதன் தென் பகுதி அகழிக்கு மேலே சற்றுத் தள்ளிப் பறக்கிறது ஹெலிகாப்டர். ஆலயத்துக்கு நேர் மேலேயோ குறுக்கேயோ பறக்க அனுமதியில்லை. ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழுந்தால், ஆலயம் சேதமுற்றுவிடும் என்பதால், நேர்மேலே பறக்க அனுமதியில்லையாம். சரிதான். தேவையான நிபந்தனைதான் என்று நினைத்துக் கொண்டேன்.
     
    படம் எடுக்கும் மும்முரத்தில் இயற்கையின் அழகைத் தவற விட்டுவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். சில படங்கள் எடுத்து விட்டுப் படக் கருவியை மூடி விட்டேன். சூரியனின் பொற் கிரணங்கள் அகழியில் பட்டுப் பிரதிபலிக்கையில், அதன் நடுவே ஆலயத்தைப் பார்த்தபோது சொல்லின்மை கைகூடியது. இதைக் கட்டிய மன்னனுக்குக்கூட கிடைக்காத வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். தங்க ஜரிகைக்கு நடுவே மரகதக் கற்களைக் குவித்துப் போட்ட மாதிரி எனக்குள் ஓர் உணர்வு. ஆலயத்தின் முகடுகள் ஏதோ கனவு லோகத்தில் கட்டப்பட்ட கட்டங்களைப் போல் தெரிந்தன. இந்த கட்டட பாணி நான் இதுவரை என் வாழ்நாளில் அதிகம் பார்த்திராத முற்றிலும் புதிய பாணி. தென்னிந்திய திராவிடக் கட்டடக் கலைக்கும் இதற்கும் அதிகத் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஒரிசாவிலும் அதன் பக்கத்து வட்டாரங்களிலும் உள்ள வாழைப் பூ போன்ற வடிவமுள்ள கோபுரங்களை ஒத்திருந்தன அங்கோர் வாட் ஆலய முகடுகள்.
     
    அகழிக்குத் தண்ணீர் வழங்கும் நீர்ப் பாதை, தொப்பூழ் கொடி போலத் தெரிந்தது மேலிருந்து பார்க்கையில். ப வடிவ சூலாயுதத்தை மேலிருந்து பார்ப்பதுபோல் இருந்தது. சுற்றிலும் திகட்டத் திகட்டப் பசுமை. தண்ணீர். மரங்கள். நல்லவேளை. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தோமே என்று நினைத்துக் கொண்டோம். கார்த்திக்கு நன்றி. இல்லாவிட்டால் இப்படி ஒரு பயணம் இருப்பதே தெரியாமல் போயிருக்கும். போன சுருக்கிலேயே ஹெலிகாப்டர் வளைந்து திரும்பி, விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. ஒன்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. ஏதோ ஒரு கனவுக்குள் புகுந்து வெளிவந்தது போல் உணர்ந்தேன்.
     
     
    ஆச்சு. என் ஆயுளில் நான் காண விரும்பிய இடங்களில் இரண்டில்  ஒன்றை,  எளிதில் பார்க்க முடியாத கோணத்தில் பார்த்து விட்டேன். நாளைஇதை அணு அணுவாகப் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும். அடுத்த கனவான எகிப்தியப் பிரமிடுகளை எப்போது காண்பேன் ? எப்போது அதுபற்றி இப்படி ஒரு கட்டுரை எழுதுவேன் 
     
    பொன். மகாலிங்கம், சிங்கப்பூர்
     
    ———————————————————————————————————————————
    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
  • உலகின் மிகப்பெரிய ஆலயம்

    உலகின் ஆகப் பெரிய இந்துக் கோயில் இந்தியாவில் இல்லை.இந்த ஒரு வரி, எல்லா இந்துக்களையுமே கொஞ்சம் ஆச்சர்யப்பட வைக்கும். திடுக்கிடக் கூடச் செய்யும். ஆனால் அதுதான் உண்மை. அது கம்போடியாவில் இருக்கிறது. சியெம் ரீப் என்னும் அழகான ஊருக்குள் இருக்கிறது அந்த ஆலயம். நாலாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில்,ஒரு கோட்டோவியமாக அங்கோர் வாட் என்னும் அந்த ஆலயத்தின் அறிமுகம் கிடைத்ததாக நினைவு.
    அதைக் காண வேண்டுமென்ற ஆவல், நினைவு தெரிந்த நாளிலேயே தொடங்கிவிட்டது எனலாம். எனக்குக் கொஞ்சம் வரலாற்றுப் பைத்தியம் உண்டு.கோயில், சிற்பம், சிலை, அரும்பொருளகம் என்றால், ஐயாவுக்கு சோறு தண்ணி வேண்டாம்.
        
    ஆகவே, எந்தத் திசையில் இருக்கிறது என்ற ஞானம் கூட இல்லாத வயதிலேயே அங்கோர் வாட் மீதான பிரேமை கனிந்து விட்டது. 1995-ல் சிங்கப்பூர் வந்ததும், அந்த ஆசை கிடுகிடுவென புது HDB வீட்டுக் கட்டுமானம் மாதிரி வளர ஆரம்பித்தது. “பக்கத்துலதான் மகாலிங்கம், மூணு நாள் போதும், 800-வெள்ளி எடுத்து வைச்சுக்க, போயிட்டுப் பார்த்துட்டு வந்துர்லாம்” என்று உள்ளூர் நண்பர்கள் அவ்வப்போது ஆசை காட்ட, அது காடாய் வளர்ந்தது. 
     
    நந்தனார், சிதம்பரம் போய் நடராஜர் தரிசனம் செய்ய, நாளைப் போவோம் நாளைப் போவோம் என்பாராம். அதனால் அவருக்கு திருநாளைப் போவார் என்றே ஒரு பெயருண்டு அல்லவா ? அதுமாதிரிதான் நானும். இப்ப போவோம், பிறகு போவோம் என்று நாளைக் கடத்திக் கொண்டே வந்தேன்.
     
    என் நெருக்கமான நண்பர்களுக்கு இதுபற்றி நன்றாகவே தெரியும். அங்கோர் வாட் பற்றி நான் வருணித்த வருணிப்பில், என் நண்பர்கள் சிலரே அதைக் குடும்பத்தோடு சென்றுபார்த்துவிட்டு வந்து என்னிடம் வருணித்த அனுபவமும் எனக்கு உண்டு. போகலாம் என்று யோசிக்கும்போது ஏதாவது வந்துவிடும். அல்லது துணைக்கு ஆள் கிடைக்காது. புள்ளையும் குட்டியுமாய் அலைய என் பாகம்பிரியாளுக்கு ஒப்புதல் இல்லை. நீங்க வேணாப் போயிப் பார்த்துட்டுவந்து சொல்லுங்க.  இப்போதைக்கு என்னை ஆளைவிடுங்க என்று சொல்லி விடுவார்.
     
    இந்தக் கதையை நண்பர் பரணியிடம் ஒரு நாள் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே அவர். “அண்ணா, அடுத்த பள்ளி விடுமுறைக்குக் கிளம்புறோம். நான் வரத் தயார் ! நீங்க தயாரா ?” என்று கேட்டு என்னை உசுப்பேற்றினார். சரி. கிடைத்து வாய்ப்பு. வசமா ஒரு ஆளு சிக்கியிருக்கு என்று நினைத்துக்  கொண்டேன். அப்புறம் ஒரு நாள், நண்பர் ராஜகோபால் வீட்டுக்குப் போயிருந்தபோது அவரிடமும் இதுபற்றிச் சொன்னேன். சோழர்கள் பற்றியும் அவர்கள் எடுப்பிச்ச கற்றளிகள் பற்றியும், புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் நடமாடும் கலைக் களஞ்சியமான குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், ராஜூவின் சொந்தச் சித்தப்பா. அந்த வகையில், ஒரு முறை சித்தப்பாவை சிங்கப்பூருக்கு வரவழைச்சு அப்படியே கம்போடியாவுக்கு அள்ளிக்கிட்டுப் போயிடுவோம் மகா என்று அவரும் எனக்குத் தூபம் போட்டார்.
     
    ராஜூவின் சித்தி பையன் நவீன், என்னைப்போல் ஒரு வரலாற்றுப் பிரியர் என்றும் தெரியவந்தது. ஆனால், ஆசைப்படுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வப்போது ஒரு பையைத் தூக்கிக் கொண்டு, கம்போடியா, பாலி, போராபுதூர், பிரம்பனான் என்று கிளம்பிவிடும் செயல்வீரர். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். ஒரு பொது விடுமுறையோடு கூடிய வார இறுதியில் கிளம்பி விடுவோம் என்றார் ராஜூ. சரி. வேளை வந்துவிட்டது போலும் என்று நினைத்துக் கொண்டேன். அவரிடம் பேசி ஆசையை வளர்த்துக் கொண்டேன்.
     
    இப்படியாகத்தான் ஒரு சுபயோக சுபதினத்தில், கம்போடியா புறப்படலாம் என்று முடிவானது. நோன்புப் பெருநாளை ஒட்டிய வார இறுதி தோதாக உள்ளது. போகவர ரெண்டு நாள் தவிர, அங்க மூணுநாள். ஓகேயா என்றார் ராஜூ. உடனே உம் கொட்டிவிட்டேன். அப்புறம் நடந்ததெல்லாம் வேகம் வேகம் வேகம்தான்.
     
    சியெம் ரீப்புக்கு நேரடி விமானம் குறைச்சல்தான். துட்டும் கொஞ்சம் கூட… ஆனால், புனோம் பென்னுக்கு அப்படியில்லை. சியெம் ரீப்புக்கு சில்க்ஏர் நேரடியாகப் போகிறது. ஆனால், இருவழி விமானச் சீட்டு வெறும்         620 வெள்ளிதான் பிரதர் என்றார் ராஜூ. வாலட் இருந்த ஜூன்ஸ் பாக்கெட் பொசுங்கும் வாடை வந்தது. சியெம் ரீப்புக்கு எம்புட்டு தோழரே என்று கேட்டுக் கொண்டு இணையத்தில் தேடத் தொடங்கின விரல்கள்..     அடடே.. பேஷ் பேஷ்.. ரொம்ப சகாயமா இருக்கே என்று நினைப்பதற்குள், பாஸ்போர்ட் முதல் பக்கத்தை வாட்ஸ்அப் பண்ணுங்க அப்பு என்று     ராஜூ கூறி(வி)னார். நவீன் மூலம் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டு      மறுநாள் மத்தியானம் மூவருக்கும் டிக்கெட் தயார். மூணு பேருக்கும்  போக வர 750 வெள்ளிதான். வாழ்க டைகர் ஏர்வேஸ் !
     
    பேருந்தில் அமர்ந்தவாறு டிக்கெட்டில் என் பெயரைப் பார்த்ததும், கண்ணில் ஆனந்தபாஷ்பம் துளிர்க்க, உடனே பரணியை அழைத்தேன். தம்பி, இப்படிக்கா இப்படி.. பய புள்ளைக உடனே டிக்கெட்டை எடுத்துப்புட்டாய்ங்க. அங்க எப்படின்னு கேட்டேன். அவரு அலுவலகத்துல லீவு சொல்லிட்டு அப்புறமா டிக்கெட் போட்டுர்றேன்னுட்டு போனை வைச்சுட்டாரு. அடுத்தநாள் ராஜூவின் மற்றொரு நண்பர் மகாதேவன், தலைவா நானும் வர்றேன் போலாம் என்று இணைந்து கொள்ள, இப்போது எண்ணிக்கை மூன்றிலிருந்து நாலானது. நான்கு பிரம்மச்சாரிகள் சேர்ந்ததும், பரணி வீட்டுக்காரம்மா ஜகா வாங்கிவிட்டார். நீங்க நல்லாப் போயிட்டு வாங்க. இந்தக் கூட்டத்துல என்னாலயும் பிள்ளைகளாலயும் முடியாது சாமின்னு சொல்லி, நல்ல மனசோடு வீட்டுக்காரரை நாலுநாள் தனியாகச் சென்று வர அனுமதித்து விட்டார். பரணி நின்னொடு இப்போது ஐவரானோம் என்று நினைத்துக் கொண்டேன். அவரும் அடுத்தநாளே டிக்கெட் போட்டார்.
     
    நேரே புனோம்பென் போய், அங்கிருந்து ஒரு வேனில், ஐந்து மணி நேரம் பயணம் செய்து, சியெம் ரீப்பைச் சென்றடைவது என்று ஏற்பாடானது. பதினைந்து நாட்களுக்கு முன்னரே டிக்கெட் போட்டு விட்டதால், நாளொற்றித் தேய்ந்தன விரல்கள். ஒருவழியாக அந்த நாளும் வந்தது. ராஜூ வீட்டிலிருந்து நால்வர் புறப்பட்டோம். பரணி நேரே விமான நிலையத்துக்கு வந்துவிட்டார். ஜமா சேர்ந்ததுமே, உற்சாகம் ஊற்றெடுக்கத் தொடங்கி விட்டது. ஐவருக்கும் கைப்பெட்டிதான். சரக்குப் பெட்டி ஏதுமில்லை. பயணிகள் முகப்பில் சென்று பதிந்துஇருக்கை உறுதிச் சீட்டு வாங்கிக் கொண்டு ஆனந்தபவனில் மதிய உணவை முடித்தோம். அங்கேயே ரெண்டு மூணு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிந்து உலகுக்கு எங்கள் பயணத்தைப் பறைசாற்றினோம்.
     
    ரெண்டே மணி நேரம்தான். எடுத்தது கண்டனர். இற்றது கேட்டனர் என்று கம்பன் பாடியது போல, ஏறினோம்இறங்கிவிட்டோம். பிற்பகல் ஒன்றே காலுக்குப் புறப்பட்டு மூன்று மணிக்கு இறங்கிவிட்டோம். மேலே இருந்து பார்க்கும்போதே கம்போடியா பச்சைப் பசேல் என்று மரகதப் போர்வை போல இருந்தது. பகல் பயணத்துக்குக்கிடைத்த பரிசு அது.  
     
     
     
    எங்கு பார்த்தாலும் பாம்புபோல் ஆறுகள் ஓடின. வெயிலில், ஆற்றின் நீர்ப்பரப்பு ஜொலித்தது. நல்ல மழை பெய்து, விமான நிலையம் துடைத்து வைத்தது போலிருந்தது. எங்களோடு விமானத்தில் வந்தது, கிட்டத்தட்ட எல்லாருமே சுற்றுலாப் பயணிகள்தான். முகத்திலேயே அந்தக் களை தெரிந்தது. எங்கள் குழுவில் இருவர் சிங்கப்பூரர்கள். ஆகவே அவர்களுக்கு விசா தேவையில்லை. சும்மா ஒரு ச்சாப். அம்புட்டுத்தான். மற்ற மூவருக்கும் 20 அமெரிக்க டாலர் கொடுத்து விசா பெற்று வெளிவந்தோம். (20 டாலர் மீது கம்போடிய அரசுக்கு என்ன மோகமோ தெரியவில்லை. எல்லா இடங்களிலும், வெளிநாட்டவர் அனுமதிக்கு 20 டாலர் கட்டணம்தான். தாஜ்மகாலுக்குக் கூட இந்தியாவில்,வெளிநாட்டவருக்கு, பத்து டாலர்தான் கட்டணம்..) இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு, விமான நிலையத்திலேயே விசா கொடுக்கிறார்கள். புண்ணியமாகப் போயிற்று. இல்லாவிட்டால், இதற்குவேறு இரண்டு நாட்கள் அலைய வேண்டும்.
     
    ராஜூ, மகாதேவன், நவீன், பரணி, மகா என்று ஐவர் குழாம் அட்டகாசமாக புனோம் பென் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தது. எங்களுக்காக உள்ளூர் சாரதி ரா காத்திருந்தார். ஆமாங்க,      முழுப் பெயரே ரா மட்டும்தான். நாங்க சுருக்கலை. அவரைப் போல், ஆங்கிலம் பேசத் தெரிந்த வாகன ஓட்டுநர்கள் கம்போடியாவில் அரிது. வழிகாட்டிகளும் ஆங்கிலத்தில் கிடைப்பது சற்று சிரமம். ஆனால்சியெம் ரீப்பில் அதிகமானோருக்கு அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருக்கிறது. தலைநகர் புனோம் பென்னும், சியெம் ரீப்பும்தான் கம்போடியாவின் அந்நியச் செலாவணியின் மிக முக்கிய ஆதாரங்கள். ஆகவே இரண்டு நகரங்களும் மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு வரை உள்நாட்டுப் போரில் சின்னாபின்னமாகிக் கிடந்த நாடு என்பதற்கான எந்தத் தடயமும் இந்த இரண்டு ஊர்களில் இல்லை.
                
    பொன்னிற மாலை ஒளியில், புனோம் பென் தகதகவென ஜொலித்தது. கிட்டத்தட்ட சென்னை போலத்தான் இருந்தது. ஆனால், சுத்தமாக இருந்தது சாலை. இந்த நாட்டில், வலப்புற வாகனமோட்டும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அது தொடக்கத்தில் வித்தியாசமாக இருந்தது. இரண்டு நாளில் பழகி விட்டது. ஒரு கடையில் நுழைந்து பயணத்துக்குத் தேவையான நொறுக்குத் தீனிப் பொட்டலங்கள், தண்ணீர், குளிர்பானம் வாங்கிக் கொண்டோம்.
        
    புனோம் பென்னிலிருந்து சாதாரணமாக சியெம் ரீப் செல்ல, ஐந்து மணி நேரம் போதும். ஆனால், நாங்கள் போயிருந்தபோது, சாலை செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தது. உலக வங்கி உதவியோடு சாலை அகலப்படுத்தப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால், ஒன்பது மணி நேரத்துக்கு மேல் பயணம். முதுகு ஒடிந்து விட்டது. இந்தப் பயணத்தின் ஒரே வில்லன் இந்தப் பயணம்தான். பாதிவரை சாலை பரவாயில்லை. அப்புறம் நாலு மணி நேரம் நரகம்தான். முதலிலேயே ஓட்டுநர் இதுபற்றிச் சொல்லி இலவச உடல் பிடிப்புக்குத் தயாராகிக் கொள்ளுங்கள் என்று எச்சரித்து விட்டார்.
        
    புனோம் பென் நகருக்குள் மிகப் பெரிய மீகோங் நதி ஓடுகிறது. மழைக் காலத்தில் அந்த நதியில் போகும் விரைவுப் படகிலேயே சியெம் ரீப் போக முடியுமாம். ஆனந்தமான பயணமாக இருக்க வேண்டும் அது. எங்களுக்கு அது லபிக்கவில்லை. ஒரு சுற்று வந்தோம் ஊரை. போகும் வழியில்தான் அரண்மனை வளாகம். அண்மையில்தான் அதைத் தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன்.
                     
    கம்போடிய மன்னர் இறந்து அவருடைய அஸ்தியை, வெள்ளி மாடத்தில் வைக்கும் சடங்குக்காக, அந்த இடத்தில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதை, ஊர்வலம் எல்லாம் நினைவுக்கு வந்தது. நான்தான் அந்தச் செய்தியைச் செய்தேன். இவ்வளவு விரைவில் அந்த இடத்தை நேரில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லைதான். மீகோங் நதியை நேரில் பார்த்தது பரவசமாக இருந்தது. ஓரிடத்தில் கூட நதியில் பிளாஸ்டிக் பையைப் பார்க்கவில்லை. சுத்தமாக இருந்தது. எங்கும் சாக்கடை கலக்கவில்லை.
        
    இப்படித்தானே இருந்திருக்க வேண்டும் நம்ம சென்னைக் கூவமும். ஒரு நகருக்குள் நதி வருவது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்.        அதைப் பேணிப் பாதுகாக்கும் கம்போடியர்களைப் பாராட்ட வேண்டும். மாலை ஐந்து மணிக்கு மேல், நகர் நீங்கு படலம் தொடங்கியது.      சின்னச் சின்ன வேன்களுக்குள் ஆட்களை நெருக்கமாக  நிற்க வைத்து, அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். பொதுப் பேருந்து வசதி இருப்பது போல் தெரியவில்லை. எல்லாமே தனியார் வாகனங்கள்தான். மக்கள் முகத்தில் ஒரு அறியாமையும் அந்நியோன்னியமும் தெரிந்தது.
        
    நம்மைக் கண்ணுக்குக் கண் பார்த்து சிரிக்கிறார்கள். பெண்கள் பெரிதாக வெட்கப்படுவதுபோல் தெரியவில்லை. சிநேகமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், வறுமை முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது. புனோம் பென்னை விட்டு அகன்றதும், வீடுகள் மறையத் தொடங்கின. ஒரே அத்துவானமாக இருந்தது. சாலை விளக்குகள் இல்லை. எப்போதாவது ஒரு பெரிய கண்டெயினர் லாரி கடந்து போகும். பயணிகள் பேருந்துகள் எல்லாமே பாதுகாப்புக் காரணங்களுக்காகக் காலையிலேயே சியெம் ரீப்புக்குப் புறப்பட்டு விடுமாம். இருவழிகளிலுமே, மாலையில் பேருந்துச் சேவை கிடையாது.
              
    விமானத்தில் வந்த களைப்புத் தீர எல்லாருமே சற்று நேரம் கண்ணயர்ந்து விட்டோம். பின்னர் ஜமா களைகட்டத் தொடங்கியது. பரணியின் சொந்தப் பாடல் தொகுப்பு ஒலிக்கத் தொடங்கியதும், வேனுக்குள் உற்சாக அலை ஓடியது. பரணி தேர்ந்த இசைப்ரியர் என்பது எனக்குத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு பாடல் ஓய்ந்து,அடுத்தபாடல் தொடங்கியதும், ஆஹாகாரம் எழும். எல்லாமே இளையராஜா பாடல்கள்.. கேட்க வேண்டுமா ?
        
    ராஜூ தன்னிலை மறந்து விட்டார். எனக்கு இப்பவே இது ஒரு காப்பி போட்டுக் கொடுங்க பரணி என்று ஆர்டர் கொடுத்து விட்டார். ஒவ்வொரு பாடலும் அவரவர் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்க வேண்டும். சாலையின் இருமருங்கும் இருள் கப்பியிருந்தது. அந்த அந்தகாரம், பாடல்களுக்கு போதையேற்றியது. கிட்டத்தட்ட நவீனையும் ஓட்டுநரையும் தவிர, நாங்கள் நால்வருமே, பாடல்களை வாய்விட்டுப் பாடினோம். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்த பாடல் வரிகூட மெல்ல மெல்ல நினைவின் ஆழத்திலிருந்து எழுந்து வந்தது.
        
    ஆனந்தக்கும்மியில் வரும் ஓ வெண்ணிலாவே பாடல் வரி அட்சர சுத்தமாய் நினைவுக்கு வந்தது. அடேயப்பா.. மனித மூளைதான் எவ்வளவு பெரிய அதிசயம். நாம் விரும்பிய பாடலை, உயிருள்ளவரை நம்மால் மறக்க முடியாது போலும். ஒன்றன்பின் ஒன்றாகப் பாடல்கள் வழிந்து, பயணத்தை ரம்மியமாக்கின. இது ஒரு அற்புதக்கணம். இதுபோல் இனி அமைய நெடுநாட்களாகும் என்ற எண்ணம் எல்லாருக்குமே வந்திருக்க வேண்டும்.  சட்டென எல்லா மன இறுக்கமும் தளர்ந்து விட்டு விடுதலையான உணர்வு..
        
    பரணியோடு திடீரென மற்ற மூவரும் நெருக்கமானதுபோல் எனக்கு ஓர் உணர்வு.  சில மணி நேரத்துக்கு முன்னர்தான் அறிமுகமானோம் என்ற எண்ணமே இல்லாத அளவுக்கு, ஒரு சகஜம் வந்துவிட்டிருந்தது அதற்குள்.. ஒருவரையொருவர் சிலேடையாகக் கிண்டல் செய்வதும், பாராட்டுவதும் அதை உறுதி செய்தது.
        
    பயணங்கள் எவ்வளவு மகத்தானவை என்பதை மீண்டும் நான் உறுதி செய்து கொண்டேன். போகும் வழியில் எங்கே அடுத்த ஊர் வருகிறது என்றே தெரியவில்லை. ஆங்காங்கே ஒரு டியூப்லைட் வைத்துக் கீழே வலை மாதிரி ஏதோ விரிக்கப்பட்டிருந்ததை வழி நெடுகக் கண்டோம். என்னவென்று விசாரித்தபோதுஎல்லாம் ஈசல் பிடிக்கும் வலைகள் என்று தெரியவந்தது.
        
    ஒரு பெரிய ஊர் வரும் அங்கே இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்றார் ஓட்டுநர். ஆனால், அங்கு செல்லும்போது மணி பதினொன்றைத் தாண்டி விட்டதால் கடை மூடிவிட்டது. அருகிலிருந்த கடைகளில் பழமும் உருளைக் கிழங்கு வறுவலும் வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் நிறுத்தி நிறுத்தி, காற்றாட, இயற்கை உபாதையைத் தணித்துக் கொண்டோம். 1980-களில், தஞ்சை மாவட்டம் இப்படித்தான்இருக்கும். எங்கு பார்த்தாலும் தண்ணீர். பசுமை. சிள்வண்டின் சுகமான ரீங்காரம். பழைய நினைவுகள் கிளர்ந்து எழுந்தன அனைவருக்கும். அவரவர் அனுபவம் பகிரப்பட்டுக் கொண்டே வந்தது.
        
    ராஜூவின் ஐஃபோன், நாங்கள் இருக்கும் இடத்தை ஒளிர்ந்து ஒளிர்ந்து காட்டியது. திசையைப் பார்த்துச் சொல்வார். இன்னும் இவ்வளவு நேரம்இருக்கு என்று. பின்னிரவு 2 மணியளவில் சியெம் ரீப் வந்து சேர்ந்தோம். அந்த நேரத்தில் அங்கு அவ்வளவு ஆரவாரத்தை எதிர்பார்க்கவில்லை. இரவுக் கேளிக்கைக் கூடங்களில் இசை பீறிட்டுக் கொண்டிருந்தது. ஒரு பழைமையான ஆலயம் உள்ள ஊரில், அந்த இசையும், கொண்டாட்டமும் பொருத்தமாக இல்லை. அனைத்துலகப் பயணிகளை வரவேற்று உபசரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கைகள். காலத்தின் கட்டாயம். ஒன்றும் சொல்வதற்கில்லை.
        
    இரவு உணவுக்குச் சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். ஓட்டுநர் எங்களை விடுதியில் விட்டுவிடுவதாகச் சொன்னார். உணவு தயாராக அரை மணி நேரம் பிடிக்கும். அருகில்தான் விடுதி என்பதால் முதலில் அங்கே போகலாம் என்றார். அதுவும் சரிதான் என்று போய் கால் கை கழுவி ஓய்வெடுத்தோம். ஓட்டுநரே சற்று நேரத்தில் உணவை வாங்கி வந்துவிட்டார். அற்புதமான உணவு. ஐந்து அமெரிக்க டாலருக்கு, ஒரு நுரைப்பஞ்சுப் பெட்டியில், நிறையக் காய்கறியோடு கூடிய சுத்தமான அரிசிச் சோறு. பசிக்கு ருசியாக இருந்தது. காய்கறிகளில் கஞ்சத்தனம் காட்டவில்லை கடைக்காரர்கள். பலவிதமான காய்கறிகள், அழகியல் உணர்வோடு நறுக்கி அரை வேக்காட்டில் இருந்தன.
       
    உணவு உள்ளே போனதும், தூக்கம்வந்தது. காலையில் எழும்போது எழுவோம் என்று படுத்துவிட்டோம். அதிகாலையில் எழுந்து அங்கோர் வாட்டை உதயவேளையில் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். ஆனால்,    3 மணிக்குப் படுத்து 5 மணிக்கு அங்கே போக முடியாது என்பதால், இன்று அங்கு வேண்டாம் என்று முடிவானது. காலையில் சீக்கிரம் எழ வேண்டாம் என்ற இன்ப நினைவோடு தூங்கிப் போனோம்.. ( தொடரும்…)
     
    பொன். மகாலிங்கம், சிங்கப்பூர்
     
    ————————————————————————————————————————————————————————–
     
    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
     
  • காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை…

    காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை…

    தாய்க்கு சமமான தெய்வம் இல்லை
    காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை
    ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை

    இது சான்றோர் வாக்கு.

    ஏகாதசி என்றால் என்ன?

    சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள்.ஏகாதசி என்பது ஒரு மாதத்தில்  அமாவாசையிலிருந்து 11வது நாளையும்,பவுர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும்ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். 

    ஏகாதசி திதி அன்று விரதம் மேற்கொள்வதை நம்  இந்து மத சாஸ்த்திரங்களும் வலியுறுத்துகின்றனர் “. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.