Category: தொடர்கள்

தொடர்கள்

  • ஜீவகாருண்ய சாயி

     

    உலகில்  உள்ள எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார்  . பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து இருக்கும் அந்த கருணாமூர்த்தி , மக்களிடம் காட்டியதைப் போலவே மாக்களிடமும் கருணை மழை பொழிந்தார்.

    பாபாவின் பார்வையில் அனைத்து உயிரினமும் ஒன்றே என்று நிலைநாட்டியதன் நோக்கம்  , நாம் இவ்வுலகில் காணப்படும் உயிர் அனைத்திடமும்  கருணையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே . பிற உயிரிடத்தில் நாம் காட்டும் அன்பே பாபாவிற்கு செய்யும் சேவை என்பதை தனது  பக்தர் மூலம் மக்களுக்கு உணர்த்திய சம்பவத்தைப் பார்ப்போம் .

    சீரடியில்  பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஒருமுறை, மதிய உணவு தயார் செய்துகொண்டிருந்தார். மும்முரமாக சமையல் செயத்துக்கொண்டிருந்த வேளையில் மிகுந்த பசியுள்ள நாய் ஒன்று அவர் வீட்டு வாசலில்  விடாமல் குரைக்கத் தொடங்கியது. நாய் பசியால் தான் குரைக்கிறது என்பதை உணர்ந்த தர்கட்டின் மனம் உருகியது. தன் கையில் கிடைத்த ரொட்டித் துண்டை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார்.

    காய்ந்த ரொட்டித் துண்டைப் மிகுந்த பரிவோடு நாயின் முன் வீசினார். வாலைக் குழைத்து ஓடிவந்த அந்த நாய், ரொட்டித் துண்டை வாயால் கவ்விக் கொண்டது. தன் பசி தீர அதை ஆவலுடன் உண்ணத் தொடங்கியது. தர்கட்டை நன்றியோடு பார்த்து  வாலை ஆட்டியது . சந்தோஷத்தில் அதன் கண்கள் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன. நாய் உண்பதைப் பார்த்து நிறைவடைந்த தர்கட், சமையலறை நோக்கிச் சென்றார். சமையல் முடித்துச் சாப்பிட்டுவிட்டு, பாபாவை தரிசிக்க  மசூதிக்குச் சென்றார்.

     

    தர்கட்டை அன்போடு பார்த்த பாபா பேசலானார்.அம்மா! நான் மிகுந்த பசியோடு இருந்தேன். நீ கொடுத்த உணவால் பசியாறினேன். என் வயிறு நிறைந்தது. எப்போதும், இன்று நீ நடந்து கொண்ட விதத்தை நினைவில் கொள்.இப்படியே தொடர்ந்து நடப்பாயாக. என் பசிக்கு உணவிட மறந்துவிடாதே! தர்கட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபாவுக்கு அவள் இன்று உணவிடவே இல்லையே? அவள் தயக்கத்தோடு பாபாவிடம் விளக்கம் கேட்டாள்:  சுவாமி! நான் இன்று உங்களுக்கு உணவு வழங்கவே இல்லையே?

    நீ அன்போடு அளித்த மொறுமொறுப்பான காய்ந்த ரொட்டியை நான் தானே அம்மா சாப்பிட்டேன்? நீ என் பசியைக் கண்டு இரக்கத்தோடு அதை எனக்கு வீசிப் போட்டாயே? அதற்குள்ளாகவா மறந்து போனாய்? எல்லா உயிரினங்களிலும் நான் தானே இருக்கிறேன்? எல்லாமாகவும் நான் தானே உலவிக் கொண்டிருக்கிறேன்?பசிக்கும் ஜீவன் எதற்கு உணவளித்தாலும், அது என்னையே வந்து சேரும். நீ அளித்த ரொட்டி என்னை வந்து சேர்ந்துவிட்டது! இதைக் கேட்ட திருமதி தர்கட் மெய் சிலிர்த்தார். பாபா  எங்கும் நிறை ஞானப் பிரம்மம் என்பதை திருமதி தர்கட்டும் , அங்கிருந்த பக்தர்களும் உணர்ந்து கொண்டனர்.

     

    உயிரினங்கள்  மட்டுமின்றி பாபாவின்  சொல்லுக்கு பஞ்ச பூதங்களும் கட்டப்பட்டன என்பதை  குறிக்கும் சம்பவங்களை இப்போது பார்க்கலாம் . இருள் கவியத் தொடங்கியிருந்த ஒருநாள் மாலை நேரத்தில் , திடீரெனக் கடும் புயலும் பெருமழையும் சீரடியை தாக்கியது . அரைமணிநேரத்தில் தெருவெல்லாம் வெள்ளக் காடானது . தாழ்வான பகுதிகளில்இருந்த வீடுகளுக்குள்ளே வெள்ளம் வேகமாய்ப் புகுந்தது.

    மக்கள்  வீட்டுக்குள் வைத்திருந்த கோதுமை மாவும் பிற உணவுப் பொருட்களும் நீரில் கரைந்து ஓடின. கூரைகள்  புயலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பிய்த்துக் கொண்டு காற்றில்பறந்தன. மக்கள்  செய்வதறியாது பரிதவிப்போடு தங்கள் இல்லங்களை விட்டு வெளியே வந்து நின்றார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கும்பல் கும்பலாகக் கொட்டும் மழையில் நனைந்து நின்றார்கள்.

    இப்போது என்ன செய்யப் போகிறோம் ,  இந்தப் புயலிலிருந்தும் மழையிலிருந்தும் எப்படித் தப்பிப்பது? என்று சீரடி மக்கள் கலங்கி நின்றார்கள் . ஆடுமாடுகளோ  கூட்டம் கூட்டமாக தங்கள் நாயகன் பாபாவின் மசூதி நோக்கி ஓடோடிச் சென்றன. அவை மசூதி வாயிலில் பாபாவின் கருணை வேண்டி நின்ற  அற்புதக் காட்சியைப் பார்த்த மக்களுக்கு  அப்போது தான்  புத்தி  எட்டியது . என்ன தான் இருந்தாலும் ஆறறிவு இல்லையா ? .

     

    அந்த பசுக்கூட்டங்களுக்கு இருந்த தற்காப்பு உணர்வும் , தங்களைக் காக்க பாபா இருக்கிறார் என்ற எண்ணமும் இல்லாதது நினைத்து வருந்தினர் . ஆடு மாடுகளைப் பின்பற்றி  தாங்களும் மசூதி நோக்கி ஓடலானார்கள். எல்லோரும்  கூக்குரல் இட்டு பாபா! எங்களைக் காப்பாற்றுங்கள்! என்று அவரிடம் தஞ்சம் புகுந்தார்கள். தன்னிடம் சரண் புகுந்த  மக்களையும், ஆடுமாடுகளையும் பரிவோடு பார்த்தார் பாபா . பின் திடீரெனச் சீற்றத்தோடு எழுந்து மசூதிக்கு வெளியே வந்து ஆகாயத்தை உற்றுப் பார்த்தார்.

     

    இடியும் மின்னலும் பேய்க்காற்றும் சீரடியையே  புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தன . அவரது விழிகள் கோவைப் பழமாய்ச் சிவந்தன. நிறுத்து! போதும் உன் சீற்றம்! என்று வானை நோக்கி உறுமினார் பாபா . எங்கு வந்து யாரிடம்ஆட்டம் போடுகிறாய்? சீரடியில் உள்ள ஆடுமாடுகள்,தாவரங்கள் உள்படஇங்கிருப்பவர்கள் எல்லோரும், என் பாதுகாப்பில் உள்ளது உனக்குத் தெரியாதா?ஜாக்கிரதை என்ற பாபாவின் முழக்கத்தைக் கேட்ட மக்கள் அச்சத்தோடு வியந்து, வாய்பொத்தி நின்றார்கள். இடி சத்தத்தையும்  மீறி  ஒலித்தது பாபாவின் குரல் .

    அடுத்த கணம் ஆகாயத்தில் பெருத்த மாற்றம் தோன்றியது . சட்டென்று மழை நின்றது. புயல் குளிர்ந்த தென்றலாய் மாறியது  , தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பது போல் இருந்தது .  மக்கள் பரவசத்தோடு பாபாவைக் கும்பிட்டார்கள். பின் மெல்லமெல்லக் கலைந்து தங்கள் இல்லம் சென்றார்கள்.

     

    தன்னை சுற்றி நின்ற ஆடுமாடுகளைத்  ஆதுரியத்துடன்  தடவிக் கொடுத்தார் பாபா. பிரிந்துசெல்ல மனமே இல்லாமல் தயங்கித் தயங்கி நடந்துசென்ற மக்களையும் , ஆடு மாடுகளையும் ,  இல்லம்திரும்பும் வரை கருணையோடு பார்த்தவாறே மசூதி வாயிலில் நின்று கொண்டிருந்தார் பாபா. வானத்தில் தோன்றிய முழு நிலவு அந்த சூழலை மட்டும் இன்றி மக்களின் உள்ளங்களையும் குளிர்வித்தது .

    மழையை மட்டுமல்ல,நெருப்பையும்  தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பாபா. ஒருநாள் மசூதியில் மக்கள் கூடியிருந்த நேரம் .  மசூதியில் எப்போதும் துனி என்ற நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் . திடீரென அந்த நெருப்பு ஓங்கி எரியலாயிற்று. சடசடவெனப் பற்றிய நெருப்பு, மசூதியின் மேற்பகுதியைத் தொட்டுவிட்டது. இந்த நெருப்பு இப்போது எல்லா இடங்களிலும் பரவும்போல் தோன்ற மக்கள் பதைபதைத்தார்கள்.

    பாபா, தம் கையில் எப்போதும் பயன்படுத்தும்சட்கா என்ற கம்பை எடுத்து , அருகே இருந்த  தூணின் மீது ஓங்கி அடித்தார்  . ம்! நெருப்பே! இறங்கு கீழே! எதற்கிந்த ஆவேசம்? நான் கட்டளையிடுகிறேன். உடனடியாய்க் கீழே இறங்கிவிடு! என்று உரக்க முழங்கினார். தூணில் அவர் அடித்த ஒவ்வோர் அடிக்கும் துனியில் எரிந்த அக்கினி ஜ்வாலை, கட்டுப்பட்டுப் படிப்படியாய்க் கீழே இறங்கியது. பின் எந்த ஆவேசமும் இல்லாமல்,சாதாரணமாய் எரியத் தொடங்கியது. அதுவரை பீதியில் உறைந்து நின்ற அடியவர்கள் பிரமித்தார்கள். பஞ்ச பூதங்களையும் பாபா தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று உணர்ந்து பணிவோடு அவரை வணங்கினார்கள்.

     

    தன்னை சரணடைந்த சீரடி மக்களுக்காக புயலையும் மழையையும் கட்டுப்படுத்திய  நம் சாயி , இப்போது மழையில்லாமல் தண்ணீருக்காக தவிக்கும் தன் பக்தர்களுக்காக கருணை காட்டாமல் போய் விடுவாரா என்ன ? தன் குழந்தைகளின் தாகம் தீர்க்க தன் கருணை மழையோடு அந்த வான் மழையை நமக்கு தந்தருள மாட்டாரா ? நாம் அனைவரும் அவர் பாத கமலங்களை சரண் புகுந்து வான் மழைக்கு பிராத்திப்போம். பாபா மனம் இறங்கினால் அந்த வான் இறங்கும் . வறட்சி நீங்கி பசுமை பூக்கட்டும் .

    ஸ்ரீ சச்சிதானந்த சத் குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய் …..

     

    சாயி சரிதம்  தொடரும்  

  • “என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன் ”- சீரடி சாய்பாபா.

     

     “ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்காக, நான் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் செல்ல வேண்டியவனாக உள்ளேன்.என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.  எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை.  என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன் “- இது பகவான்  சீரடி நாதனின் வாக்கு .

     ஒவ்வொரு  நொடிப்பொழுதும் இதை மெய்ப்பிக்கும் வகையில் தன்னுடைய பக்தர்கள் வாழ்வில் அற்புதங்கள் செய்து வருகிறார் பாபா.

     மனித உருவில் பாபா வாழ்ந்த காலத்தில்  தனது பக்தர் ஒருவர்  வாழ்க்கையில் சாயி செய்த அற்புதத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

     

    சீரடியில், காஷிராம் என்றொரு  அடியவர் இருந்தார் . துணி வியாபாரியான அவர்  பாபாவின் மிகத் தீவிர பக்தர். கண் விழித்த நேரம் முதல் , உண்ணும் போதும், உறங்கும்போதும், கடையில் துணி விற்கும்போதும் எந்த நேரமும் பாபாவின்  நினைவிலேயே  காலம் கழித்து வந்தார் . பாபாவை ஸ்மரித்தார்  என்பதை விட பாபாவை உயிர் மூச்சாகவே சுவாசித்தார் அந்த பக்தர். பாபா மனிதவடிவில் வந்துள்ள தெய்வம் என்பதை முழுமையாக நம்பிய அவர் கிடைத்த நேரத்தில் எல்லாம் பாபாவை  தரிசிப்பதில் சந்தோஷம் அடைந்தார் .

     

    அவரைப் பார்க்க செல்லும் போதெல்லாம் , அந்த கடவுளுக்கு நிவேதனப் பொருள் என எதையேனும் பக்தியோடு எடுத்துச்  செல்வது அவரின் வழக்கம் . அப்படித்தான் ஒருமுறை, பாபாவை தரிசிக்க  ஒரு சிறு துணிப்பையில், கொஞ்சம் சர்க்கரையை  எடுத்துக் கொண்டு, புறப்பட்டார்.

     

    வழக்கம் போல் பாபாவின்  நினைவையே தனக்கு  துணையாக கொண்டு அவர் நடந்தபோது, அவரை சில திருடர்கள் தொடர்ந்தார்கள் . துணி வியாபாரி என்பதால் அவர் கையில்இருந்த பையை  பார்த்த அவர்கள், அந்தப் பையில் அன்றைய துணி வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணம் அல்லது  வேறு எதோ விலை உயர்ந்த பொருள் ஒன்றை வைத்திருப்பதாக  நினைத்தார்கள். அந்தப் பையில் இருந்தது வெறும் சர்க்கரைதான் என்பதை  அந்தத் திருடர்கள் அறியவில்லை.

     

    வெறும் சர்க்கரைப் பையையா, இப்படி ஒருவன் மார்போடு சேர்த்து இறுகக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பான்?சந்தேகமில்லாமல் பையில்ஏதோ விலைமதிப்புள்ள பொருள் இருக்கிறது என்று திருடர்கள் தவறாக முடிவு கட்டினார்கள். காஷிராமை முற்றுகையிட்ட அவர்கள்., மிரட்டலுடன் கடுக்கன்களைக் கழற்றித் தரச் சொன்னார்கள்.பயந்துபோன, காஷிராம் உடனே கடுக்கன்களைக் கழற்றிக் கொடுத்து விட்டார். பின்னர்,கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியைக் கழற்றித் தரச்சொன்னார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கிலியையும் கொடுத்து விட்டார்.

     

    மிச்சம் இருந்த அந்தச் சிறுபையைத் தருமாறு அதட்டினார்கள் . தெய்வத்திற்கான நிவேதனப் பொருளை அவர்களிடம் கொடுக்க மனமில்லை  காஷிராமிற்கு அடுத்த கணம் முற்றிலும் எதிர்பாராத ஒரு  திருப்பம் நிகழ்ந்தது .

     

    அதே சமயத்தில்,சீரடி மசூதியில் பாபாவை தரிசித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஒரு   ஆச்சரியம் காத்திருந்தது . அத்தனை நேரம் கருணையே வடிவாக தங்களுடன் அமைந்திருந்த  திடீரென பாபா ஆவேசத்தோடு எழுந்து நின்றது அவர்களை ஆச்சரியப்படுத்தியது .  ஏன்  பாபா இப்படி திடீரென ஆவேசப்படுகிறார் என்று அவரை சுற்றியிருந்த பக்தர்களுக்கு புரியவில்லை. அவர்களின் ஆச்சர்யம் மேலும், அதிகமாகும் வகையில், பாபா தன் கைகளையும், கால்களையும்  காற்றில் யாருடனோ சண்டையிடுவது போல் வீசத்தொடங்கினார். இதெல்லாம் ஏன் , யாருக்காக நடக்கிறது  என்று பக்தர்கள் திகைப்போடு பாபாவையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் பாபாவோ மிக கோபத்துடன்  காற்றில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். விழிகள் கோபத்தில் செக்கசெவேலன  சிவக்க ,சீற்றத்தில் கொதித்துக் கொண்டிருந்தார் .

     

    அதே நேரம்  அங்கே  கத்தியுடன் இருக்கும் திருடர்கள் முன் நின்றுக் கொண்டிருந்த காஷிராமின் உடல் ஒரு கணம் ஆவேசம் வந்தது போல் குலுங்கியது . தன் ஒரு கையில் பற்றிக் கொண்டிருந்த சர்க்கரைப் பையை இன்னும் இறுகப்பிடித்துக் கொண்டு தன் இன்னொரு கை மற்றும்  கால்களாலும் திருடர்களை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார்.இயல்பிலேயே காஷிராம் ஒற்றைநாடி மனிதர் . அவர் ஒருவரே  பலசாலிகளான . நான்கைந்து திருடர்ககளை புரட்டிப் போட்டதில் திருடர்கள் விக்கித்துப் போனார்கள்.

     

    காஷிராமிடம் இருந்து பிடிங்கிய  கடுக்கன், சங்கிலி எல்லாவற்றையும்அங்கேயே போட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடலானார்கள்.  அப்படியும் காஷிராம் விடுவதாக இல்லை. மின்னலாக ஓடி, அவர்களை ஒரே  கொத்தாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

     

    பின் சங்கிலி, கடுக்கன் இவற்றோடு, அவரின் தெய்வத்திற்காக எடுத்துச் சென்ற  நிவேதனச் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு மசூதி நோக்கி நடக்கலானார். திருடர்கள் அச்சத்தோடும், காவல்துறையினர் பிரமிப்போடும் அவரைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

     

    காஷிராம்  மசூதியில் நுழைந்து பாபாவின் பாதங்களில் விழுந்து பணிந்தார். நிவேதனச் சர்க்கரைப் பையை அவரிடம் கொடுத்து,  ஏற்குமாறு வேண்டினார்.அதன் பிறகு  தான் பாபாவின் ஆவேசம் தணிந்து சாந்தியடைந்தார் .

     

     “அன்பனே! திருடர்களைக் காவல் துறையினரிடம் ஒப்படைத்து விட்டாயல்லவா?” என்று அமைதியாக, அவர் கேட்டபோது தான் காஷிராமுக்கே, சண்டையிட்டது தான் அல்ல, பாபா என்பது புரிந்தது. பாபாவின் தாமரைப் பூ பாதங்களை நன்றிப் பெருக்கோடு தன்  கண்ணீரால் கழுவினார் . தம் அடியவர்களைக் காப்பாற்ற பாபா எந்த ரூபத்திலும் எந்த இடத்தில் இருந்தாலும் ஓடி வருவார் என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா ?

     

     

     

    சாய் சரிதம் தொடரும் ….

  • “என் குழந்தைகளைத் தந்தையான நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்!”- சத்குரு சாயி

     

    கடவுளை நம்பினோர் கை விடப்படார் என்பதற்கு நம் கலியுகக் கடவுளான சாயி ஒரு மிகச் சிறந்த உதாரணம் . ஒவ்வொரு நாளும் தன்னை சரணடைந்த அடியவர்களுக்கு தான் இருந்த இடத்தில் இருந்தே தன்னுடைய வரம் நல்கும் கரத்தை கொண்டு ஆசீர்வதிக்கும் கல்பக விருக்ஷம் அவர் . அந்த சீரடி மகானின் கருணையை தங்கள் வாழ்நாளில் தினம் தினம் உணரக் கூடிய பேறு பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள் . நிறைய அடியவர்கள் தங்கள் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாபாவின் படத்தின் மூலமே அவரின் அற்புதங்களை கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள் .  தன்  அடியவர்கள் தன்னை நினைக்கும்  நேரம் , நினைக்கும் தருணம்  எதிரே வந்து ஆட்கொள்ளும்  தயாளன் சீரடி சாயி .

     

    சீரடியை அடுத்து இருந்த ஒரு ஊரிலும் பாபாவுக்கு ஒரு அடியவர் இருந்தார் . அவர் வாழ்வில் பாபா நிகழ்த்திய ஒரு அற்புதத்தைப் பார்க்கலாம் .  ஒரு சிறிய பள்ளிக்கூடம் ஒன்றில் பணியாற்றி வந்த மாதவராவ் மல்வந்த் தேஷ் பாண்டே பரம ஏழை . ஆனாலும் தன்னுடைய பூர்வ புண்ணிய பலனில் பணக்காரரான அந்த மனிதர் பாபாவின் பரம பக்தர் . பாபாவை தன்னுடைய  கண்கண்ட தெய்வமாகக் கருதி பூஜித்து வந்தார் . முழு முதற் கடவுளான தன்னுடைய சாயி , தன்னை எந்த தீங்கில் இருந்ததும் காப்பாற்றுவார் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார் . தான் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளை சாயின் மூலம் தீர்வுக் கண்டு , அதற்கு அவருக்கு நன்றியும் செலுத்தி வந்தார் . தன்னுடைய பணிகளுக்கு இடையே , முடியும் போதெல்லாம் சீரடி சென்று பாபாவை தரிசனம் செய்து , அவரது அமுத மொழிகளை கேட்பதில் ஆனந்தம் அடைந்தார் .

     

    ஒருநாள் மசூதிக்கு பாபாவை தரிசிக்கும் பொருட்டு , அவர் நாமத்தை ஸ்மரணம் செய்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார் அப்போது திடீரென்று சாலையின் குறுக்காக ஊர்ந்து வந்த ஒரு கருநாகம்! அவரை  எதிர்பாராதவிதமாக  தீண்டி விட்டு விறுவிறுவென மறைந்துவிட்டது. கொடிய அந்த நாகப் பாம்பின் விஷம் அவரது உடலெங்கும் கிடுகிடுவெனப் பரவத் தொடங்கியது. .  கண் மூடி திறக்கும் நேரத்தில் இவை அனைத்தும் ஒரு கணத்தில் நடந்து விட்டது . அவர் மேனி நீலமாக மாறத் தொடங்கியது .  

     

    வாயில் நுரை தள்ள  மாதவராவுக்கு  என்ன நடந்தது என்பது  அப்போது தான் சுதாரித்துக்கொண்டார் .  சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் அவர் நிலையைப் பார்த்து உதவ ஓடோடி வந்தார்கள். ஆனால் யாருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. அந்தக் கொடிய விஷத்தினால் அவர் முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்தார்கள் .  மற்றவர்கள் பதறினாலும் பாபாவின் மேல் உறுதியான நம்பிக்கை கொண்ட மாதவராவ் தன்னை தன் தெய்வம் காப்பாற்றும் என்று உறுதியாக நம்பினார் .  இதுவரை தன் வாழ்வின் எல்லா சோதனைகளிலும் உடனிருந்த சாயி இப்போது மட்டும் தன்னை விடடு விடுவாரா என்ன என்று பாபாவிடம் சரணடைந்தார் .   

     

    அதற்குப் பிறகு   ஒருகணம் கூடத் தாமதிக்காமல் உடனடியாக பாபா தங்கியிருந்த மசூதிக்கு வாயில் நுரை தள்ளத் தள்ள ஓடி வந்தார். அவருடன் மற்றவர்களும் கவலையோடு அவரைப் பின்தொடர்ந்து வந்தார்கள் .  “ என்னைக் காப்பாற்றுங்கள் பாபா. என்னைக் காப்பாற்றுங்கள்! உங்களையே சரணடைந்திருக்கும் என்னைக் கைவிட்டு விடாதீர்கள்!” என்று கதறியவாறே மாதவராவ் மசூதிப் படிகளில் அந்த நிலைமையிலும்  தன்னால் இயன்றவரை வேகமாக ஏறினார் .  

     

    கொட்டிய கருநாகத்தின் விஷத்தில் இருந்து பாபா எப்படி இவரைக் காப்பாற்ற போகிறாரோ என்று சந்தேகத்துடன் சிலரும் , பாபா நினைத்தால் எத்தகைய அற்புதத்தையும் செய்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் சிலரும்  மக்கள் அவரை பின் தொடர்தார்கள் . தன்னிடம் முழு சரணாகதி  அடைந்து தன்னை நோக்கி மசூதி  படிமேல் ஏறிக் கொண்டிருந்தவரை  தன்னுடைய தீட்சணியமான கண்களால் பார்த்தார் பாபா. வாயில் நுரை தள்ளத் தள்ளப் படிகளில் மேலேறி வரும் தன் அடியவனைப் கொடிய பாம்பு கடித்திருக்கிறது என்பதை அந்த தெய்வம் புரிந்துக் கொண்டது .  

     

    அடுத்த கணம் தன்னையே நம்பி வந்த அந்த அடியவரைப் பார்த்து, ஏறாதே! நான் கட்டளையிடுகிறேன். ஏறாதே! நில்! இறங்கு! உடனடியாகக் கீழே இறங்கு! என்று பாபா ஆக்ரோஷமாகக் கூச்சலிட்டார். அவரது உரத்த கூச்சல் அனைவரையும் திடுக்கிட வைத்தது .  கேட்ட மக்கள் அனைவரும் வெலவெலத்தார்கள். அந்த அடியவரோ தான் எந்தத் தவறும் செய்யவில்லையே! பாபா தன்னைக் காப்பாற்றுவார் என்றல்லவோ தேடிவந்தோம்,  ஆனாலும் பாபா ஏன் நம்மிடம் இப்படி நடந்துக் கொள்கிறார் என்று அப்படியே படிகளில் மேலே ஏறாது நின்றார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக  கூப்பியக் கரத்தோடு பாபாவையே பார்த்துக் கொண்டிருந்தார் . கூட்டத்தினரும்  பாபாவின் இந்த செய்கைக்கு காரணம் புரியாமல்  விக்கித்து நின்றனர்.

     

    ஆனால், அடுத்த கணம் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் பாபா சொன்ன வார்த்தைகளின் பொருள் புரியத் தொடங்கியது. பாபா ஏறாதே! இறங்கு! என்று ஆணையிட்டது மாதவராவுக்கல்ல! மாதவராவின் உடலில் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருந்த கடுமையான விஷத்திற்கு! தான் என்பதை புரிந்துக் கொண்டனர் . இந்த உலகை சூழ்ந்துள்ள  பஞ்ச பூதங்களுமே பாபாவின் சொல்லுக்குக் கட்டுப்படும்  போது விஷமா அவரின் ஆணைக்கு அடங்காது ?  பாபாவின் ஆணைக்குப் பணிந்து, அடுத்த கணமே மாதவராவின் உடலில் இருந்து  விஷம் இறங்கத் தொடங்கியது. கொட்டுவாயின் வழியாக விஷம் வெளியேறியதையும், மாதவராவ் உடல் நீல நிறம் மாறிப் பழைய நிறம் பெறத் தொடங்கியதையும் பார்த்துப் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். தன் நிலைக்கு திரும்பிய மாதவராவ் படிகளில் தடதடவென மேலே ஏறிச்சென்று என்னைக் காப்பாற்றிய தெய்வமே! என்று பாபாவின் பாதங்களில் பணிந்தார்.

     

    தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு என்றுமே  அரணாக நிற்கும் அந்தத் தாமரைப்பூம் பாதங்களை நன்றிப் பெருக்கோடு  தன்னுடைய  கண்ணீரால் கழுவினார். அவரை அள்ளியெடுத்த பாபா, “என் குழந்தைகளைத் தந்தையான நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்!” என்றவாறே மாதவராவின் விழிகளில் வழிந்த கண்ணீரைத் தம் விரல்களால் துடைத்து விட்டார்.

    கருணையே மனித உருவெடுத்து வந்ததைப் போன்ற பாபாவின்  வாயில் இருந்து வந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட பக்தர்கள் நெகிழ்ந்தார்கள். ஆள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக தனது பக்தர்களுக்கு தனது கருணை ஊற்றை குறைவின்றி அளித்து வரும்  சாய் மகராஜின்  பாதம் பணிவோம் .

     

    சாயி சரிதம் தொடரும் …

  • பக்தர்களின் பிறவிப் பிணியை தீர்க்க வந்த கலியுக கடவுள்

     

    குழந்தையின் துயரம்  கண்டு துடிப்பது தாயின்  இயல்பு.  தாயினும் சிறந்ததல்லவா சாயிநாதனின் கருணை உள்ளம்!

    தன் குழந்தைகள் ஊழ்வினைப் பொருட்டு  உடல் வேதனையால் துடிக்கும் பொழுது , அதைக் கண்டு தவிக்கும்  கருணாமூர்த்தி, தன்னை சரணடைந்தவர்களின்  வேதனையை தான் ஏற்றுக்கொண்டு அவர்களை  அந்த வேதனையின்  பிடியில் இருந்து நீக்கும்  தயாபரர் .

    அடியவர்களுக்காக  தானே முன்வந்து அவர்களின்  வேதனையைத்  தாங்கும் கருணையும், தவ வலிமையும் கொண்டவர்  பாபா . தன் மீது அளவில்லா பக்தி கொண்ட ஒரு கொல்லனின் மனைவிக்கு உதவ பாபா செய்த கருணையை இந்த பதிவில் பார்க்கலாம் .

     

     நெருப்பில் கையை விட்ட பாபா

     

    பாபா மசூதியில் எப்போதும் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருப்பார். அந்த நெருப்பை பக்தர்  , துனி என்று சொல்வர். துவாரகாமயியில்   பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அந்த நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது. அன்றும் பிரகாசமாக கொழுந்து விட்டுக்கொண்டிருந்த நெருப்பில் பாபா குளிர் காய்ந்து கொண்டிருந்தார் . எரிந்துகொண்டிருந்த துனி நெருப்பில் விறகுகளை ஒவ்வொன்றாக போட்டு தீயை வளர்த்துக் கொண்டிருந்தார். எல்லாம் சரியாக தான் போய்க் கொண்டிருந்தது .

     

     மசூதியின் ஒரு பக்கத்தில் தங்கள் வேலைகளை  பார்த்துக்கொண்டு இருந்த மாதவ், மற்றும் மாதவ்ராவ் தேஷ்பாண்டே ஆகியோரும்  தொலைவில் இருந்தபடியே தங்கள் பணிகளைச் செய்துக் கொண்டு , பாபாவையும் ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தனர்.

     

    யாரும் எதிர்பாராத விதமாக, பாபா  திடீரென விறகை எடுத்துத் துனியில் வைப்பதற்கு பதிலாகத் தம் கரத்தையே துனியின் உள்ளே வைத்தார். பார்த்துக் கொண்டிருந்த மாதவ் மற்றும் மாதவ்ராவ் தேஷ் பாண்டே இருவரும்  பாபாவின் செயலைப் பார்த்துப் பதறினார்கள். அவர் அருகே ஓடோடிச் சென்றார்கள். அதற்குள்  பக்தர்களுக்கு நல்லாசி வழங்கும் பாபாவின் திருக்கரம் முழுவதுமாகக் கருகிவிட்டது .

    நெருப்பில் இருந்த அவரது கரத்தை வெளியே இழுத்து பாபாவைத் தரையில் படுக்க வைத்தார்கள். பாபா அப்போது உணர்வோடு இருக்கவில்லை. மெல்ல அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தபோது அவர் உணர்வு நிலையை அடைந்து கண்களை திருந்து பார்த்தார் .  பாபா! ஏன் இப்படி செய்து விட்டீர்கள் .  உங்கள் கையையே  ஏன் துனிநெருப்பில் நுழைத்தீர்கள்? என்று அங்கு கூடிய பக்தர்கள் கண் கலங்கினார்கள் .

    எல்லோரையும் புன்முறுவலோடு  பார்த்த பாபா, “நெருப்பின் உள்ளே கையை விடாமல் வேறு நான் என்ன செய்திருக்க முடியும்? அந்தக் கொல்லனின் மனைவி என்  தீவிர பக்தை அல்லவா? அவள் குழந்தையல்லவா நெருப்பில் விழுந்துவிட்டது? கணவனுக்கு உதவியாக நெருப்பு நன்கு வளரும் வகையில் துருத்தியை இயக்கிக் கொண்டிருந்தாள் அவள்.  அந்த நேரத்திலும் கண்மூடி என்னையே நினைத்துக் கொண்டு ,  தன் குழந்தை நெருப்பை நோக்கி நகர்வதையோ, அதில் விழுவதையோ அவள் கவனிக்கவே இல்லை.  என் மேல் கொண்ட பக்தியால் தானே தன் குழந்தையை கவனிக்க மறந்தாள்? அப்போது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு ஆகிறதல்லவா? நெருப்பில் கையைவிட்டுக் குழந்தையைச் சடாரென எடுத்துவிட்டேன். நல்லவேளை, குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அதன் உயிர் காப்பாற்றப் பட்டுவிட்டது. என் கரம் கொஞ்சம் கருகிவிட்டது. அதனால்  என்ன பாதகமில்லை!” என்றார்  .

     

     பாபாவின் செயலுக்கு காரணத்தை தெரிந்து கொண்ட அடியவர்கள் உள்ளம் உருகியது . இங்கிருக்கும் பாபாவிற்கு  எங்கோ இருக்கும் தன் பக்தையின் குழந்தையை பற்றி எப்படித் தெரிந்தது ? இது தான்  பாபாவின் எங்கும் நிறை பேரறிவு . “என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.” என்றவர் நம் சாயி . மாதவராஜ் தேஷ்பாண்டேயிடமிருந்து இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பாபாவின் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்கர், “  என் தெய்வமே! ஏன் இப்படி உன்கரத்தையே நீ சுட்டுக் கொண்டாய் ? “ என்று  அவர் உள்மனம் அழுது  அரற்றியது.

    பரமானந்த் என்ற மும்பையைச் சேர்ந்த மருத்துவரை  பாபாவுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக உடனே அழைத்து வந்தார் சாந்தோர்கர். நெருப்புச் சுட்ட கையின் மேல் தடவுவதற்கான களிம்பு, கையைச் சுற்றிக் கட்டுவதற்கான துணி போன்ற மருத்துவ உபகரணங்களோடு மருத்துவர் பரமானந்த், சீரடி  வந்து சேர்ந்தார். பாபாவின் தீய்ந்த கரத்திற்கு மருந்திட வேண்டி கையைக் காட்டுமாறு பாபாவிடம் பக்தியோடு விண்ணப்பித்தார்.  ஆனால், பாபாவிடமிருந்து ஒரு சிரிப்புத்தான் பதிலாக வந்தது.

    அவர் மருத்துவரிடம் கையைக் காட்டவில்லை. பக்தர்களின் பிறவிப் பிணியையே தீர்க்க வந்த கலியுக கடவுளான  பாபாவுக்குத் தன் உடல் ஏற்பட்டுள்ள  பிணி ஒரு பொருட்டாகப் படவில்லை .  “அன்பர்களே! மனித உடல் நிலையில்லாதது. ஆன்மா மட்டுமே நிலையானது. முழு உடலும் ஒருநாள் அழியத்தானே போகிறது! ஒரு கரம் நெருப்பில் கொஞ்சம் காயம் அடைந்தால், அதனால் என்ன இப்போது? நான் வேதனைப் பட்டாலும் அதில் தவறில்லையே.. ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும்போது, இந்தச் சாதாரண உடல் வேதனை பெரிதா என்ன? நிலையற்ற உடலை மறந்து நிலையான ஆன்மாவைச் சிந்தியுங்கள். கடவுளே நம் அனைவருக்குமான மருத்துவர். நம் உடலில் வரும் நோய்கள் ஒன்றுமே இல்லை. உள்ளத்தில் வரும் காமம் , கோபம் போன்ற நோய்களை கடவுள் மேல் கொண்ட பக்தியால் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்!” பாபாவின்  இந்த  அருள்மொழிகளைக் கேட்டு பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள்.

     

     குஷ்டரோகி  பாகோஜி ஷிண்டேக்கு கருணை காட்டிய  பாபா

     

     குஷ்டரோகியான  பாகோஜி ஷிண்டே பாபாவின் அடியவர்களில் ஒருவர். தன்னுடைய  முன்வினை  காரணமாக குஷ்டரோகத்தினால் அவதியுற்றார் . ஆயினும்  பாபாவின் சந்நிதியில்  அவருடைய தரிசனத்தால் தன் வேதனைகளை மறந்து வாழ்ந்து வந்தார். பாபாவை அடிக்கடி தரிசிக்கவும், பாபாவின் அருள் மொழிகளைக் கேட்கவும், அவர் பாக்கியம் பெற்றிருந்தார்.  ஒரு முறை அவர் தன்னால் இயன்ற பணிவிடைகளைச் செய்யும் பொருட்டு பாபாவின் திருக்கரத்தை அணுகினார்.

    வெந்திருந்த பாபாவின் கையில் நெய் பூசி நன்றாகத் துடைத்துவிட்டார். பாபா  எந்தவித  மறுப்பும் சொல்லாமல் மலர்ந்த முகத்துடன் அவர் செய்யும் பணிவிடைகளை ஏற்றுக் கொண்டார். ஒரு வாழை இலையை அந்தக் கரத்தின் மீது வைத்துக் கட்டி  அவருக்குத் தெரிந்த எளிய சிகிச்சை முறையை செய்தார் பாகோஜி .  மருத்துவர் பரமானந்திடம் கையைக் காட்ட மறுத்த  சாயி ,  தம் தீவிர அன்பரான ஷிண்டேயின் எளிய சிகிச்சையை ஏற்றுக் கொண்டது , பாபா தன் அடியவர்கள் மீது கொண்ட பேரன்பின் அடையாளம்.

    பக்தர்களின் உள்ளங்களில் நிறைந்து நின்று வழிகாட்டும் சாயி நாதனின் வரலாற்றை நாமும் தொடர்வோம்…

  • “அடியவர்களின் நலன்களை கவனிப்பதே என் வேலை” – சீரடி சாயி

     

    “என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்   என்பது  பாபாவின் வாக்கு . அந்த வாக்கை தனது சமாதி நிலையிலும் பாபா இன்று வரை காத்து வருகிறார் . அதை அவரின்  பக்தர்கள் இன்றளவும்  உணர்ந்து வருகிறார்கள் . எப்போதும் தன்னுடைய கையை உயர்த்தி ஆசி வழங்கும் நிலையிலேயே காணப்படும் சாயி , நான் எப்போதும் உன்னுடன் தானே இருக்கிறேன் என்று தன்னை நாடி வருபவர்களுக்கு சொல்லாமல் சொல்லி வருகிறார் .  உயர்த்திய அவருடைய கரங்கள் ஆசி வழங்குவது மட்டுமின்றி தீராத வியாதி மற்றும் கவலைகளால் பீடிக்கப்பட்டு தன்னிடம் அடைக்கலமாக வருபவர்களை அரவணைத்து தேற்றவும் செய்கிறது .

    ஏனைய  துறவிகளைப் போல ஊர்ஊராய்ச் சுற்றும் வழக்கம் இல்லாத பாபா தன் வாழ் நாளில் ஷிர்டியை விட்டு எந்த ஊருக்கும்  சென்றதில்லை என்றால்  மற்றவர்களுக்கு நம்ப கஷ்டமாகத்தான் இருக்கும் ,   ஆனால் அது தான் உண்மை . பாபா தான் இருந்த சீரடியில் இருந்துக் கொண்டே  எல்லா இடங்களிலும் உள்ள தன் பக்தர்களுக்கு  காட்சி தரவும்  செய்தார் . அவர் எங்கும் நிறை பரப்பிரம்மம் . பாபாவின் இருப்பே சீரடியின் புனிதத் தன்மையை   மென்மேலும் உயரச் செய்தது .

     

    அடியவர்களின்  வாழ்க்கையை  இனிப்பாக மாற்றும் சீரடி மகான்

     

    ஒரு முறை சீரடியில்  இருந்த  இரண்டு கிணறுகளில்  ஒன்றில் தண்ணீர் வற்றி விட்டது. அதுதான்  மக்களுக்கு அதுவரை நல்ல தண்ணீர் தந்த கிணறு. இருந்த இன்னொரு கிணற்று நீரோ கடல் நீருக்கு சவால் விடும் அளவிற்கு   உப்பு கரித்தது. இது பற்றி பாபாவிடம்  சொல்ல சில பெண்மணிகள்  சென்றார்கள் . பஞ்ச பூதங்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாபாவிற்கு இது எம்மாத்திரம் ?.  ஆனாலும்  தன் குழந்தைகள் தங்களுக்கு வேண்டியதை  தன்னிடம் வாய் விட்டு கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்  என்பது தான்  அந்த தாயின்  அவா .

     

     தம்மை முற்றிலும் சரணடைந்த  அந்தப் பெண்மணிகளின் மேல் பாபாவுக்கு கருணை பொங்கியது.  “பல மூட்டை உப்பை அள்ளி யாரோ கிணற்று நீரில் கலந்ததுபோல் நீர் உப்பு கரிக்கிறதே பாபா? நீங்கள் ஏதாவது செய்யதகூடாதா? ” என்று  வாஞ்சையுடன் அவர்கள்  கேட்க , அவர்களின் அன்பான வேண்டுகோளை பாபா ஏற்றார்.  மசூதிக்கு அருகே உள்ள நந்தவனத்தில்இருந்து கொஞ்சம் மலர்களைப் பறித்துவரச் சொன்னார். மலர்களை தன் கையில் வைத்து கொண்டு கண்மூடிச் சற்றுநேரம் பிரார்த்தனை செய்தார். வாருங்கள்! என்று அவர்களை அழைத்துக்கொண்டு உப்பு கிணற்றை நோக்கிப் புறப்பட்டார். கையிலுள்ள மலர்களை கிணற்று நீரில் அர்ச்சிப்பது போல் தூவினார். இந்த கிணற்று நீரை நன்னீராக மாற்று என்ற பாபாவின்  கட்டளையை  ஏற்ற வருண பகவானும் தன்னுடைய நறுமணத்தை  தண்ணீரில்  பரவ விட்டார் . பாபாவின் கட்டளைக்கு பணியாத பஞ்ச பூதம் ஏது ? பெண்களும்  கண்மூடிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.

     

    கண்களை திறந்து  பார்த்த பெண்கள் , எதிரே நகைத்தவாறு நிற்கும்  பாபாவை பார்த்து ஆச்சரியத்தோடு கிணற்று நீரை குடங்களில் எடுத்தார்கள். நீரை கொஞ்சமாக  வாயில் விட்டு பார்த்தார்கள். என்ன  ஆச்சரியம் …!!! உப்பு நீர் ,இப்போது பாபாவின்  கருணையால்  கல்கண்டை போல் இனித்தது .  ஜெய் சாயிநாத்! என்றவாறே பெண்மணிகள் பாபாவை வணங்கினார்கள். பாபா புன்முறுவல் பூத்தவாறே ,“என் பக்தர்களது இல்லங்களில் உணவு உடை இவற்றிற்கு எந்த வித குறைவும் வராது. உங்கள் மனத்தை என்னிடமே எப்போதும் செலுத்துங்கள். அடியவர்களின் நலன்களை கவனிப்பதே என் வேலை. கீதையில் கிருஷ்ணரும் இதைத் தானே சொல்கிறார்! ”என்று கூறி தாம் தங்கியிருந்த மசூதி நோக்கி நடந்தார் பாபா. அந்தப் பெண்மணிகள் நன்றிப் பெருக்கில் கண்கள் பணிக்க தண்ணீர் குடத்தைத் தூக்கிக் கொண்டு திரும்பித் திரும்பி பாபாவைப் பார்த்தவாறே இல்லம் நோக்கி நடந்தார்கள். இவ்விவரம் கிராமம் முழுவதும் பரவி . அக்கம் பக்கத்து கிராமங்களிலும் கூட இந்தச் செய்தி பரவலாயிற்று.

     

    பாபாவை தியானிக்கும் அவரின் அடியவர்களின்  வாழ்க்கையும் கூட அவரது அருட்கருணையால் என்றென்றும்  தித்திக்கும்  என்பதில் ஐயம் ஏதும் இருக்க முடியுமோ  ? 

     

    சாய்ராம் சரிதம் தொடரும் – படிக்கப் படிக்க நம் வாழ்வின் இருள் அகலும்…..

     

     

  • வார்த்தைகளுக்குள் வசப்படாத சாயி மகத்துவம்

    சீரடி சாய்பாபாவின் மகத்துவத்தை வெறும் வார்த்தைகளாலோ அல்லது எழுத்துக்களாலோ  சிறப்பாக சொல்லி விட முடியும் என்று தோன்றவில்லை . கடலை கைகளால் அள்ளி விட முடியுமா? ஆம் அப்படி ஒரு மகத்தான உணர்வு தான் சாய் பாபாவின் சரிதத்தை சொல்லுவது  . எங்கும் நிறை பேரறிவான அவரின் அருகாமையை  அவரின் பக்தர்களால் மட்டுமே   நன்றாக உணர முடியும்  .  சாய் பாபாவின் கருணை வெளிச்சம் ஒருவர் மீது பட்டால் மட்டுமே அவரை மனத்தால் வரிக்கவோ அல்லது அவரின் நாமத்தை ஜெபித்திடவோ  முடியும். பூர்வ ஜென்ம புண்ணிய பலன் காரணமாக மட்டுமே சாயி நாமத்தை ஒருவரால் சொல்ல முடியும் . அவரைப் புரிந்து கொள்ளவது அவ்வளவு கடினமானதா என்ன …..? இல்லை ,  அதற்காக கடின யோகா பயிற்சியோ , மூச்சை அடக்கும் வித்தையையோ தெரிந்திருக்க வேண்டாம் .  அவரிடம் பொறுமையும் நம்பிக்கையும்  இருந்தால் மட்டும் போதும் . அவருக்காக  பொறுமையோடு காத்திருந்தவர்கள்  தங்கள் வாழ் நாளில் பெற்ற புண்ணியங்கள் ஏராளம். அது இந்த பிறவிக்கும் இனி தொடர இருக்கும் ஏழேழு பிறவிக்குமான  பலன்கள்  தரும் . நம்பிக்கையோடு அவர் முன் நம் தலை தாழ்ந்தால் ,இந்த ஜென்மம் ஈடேற சாயி  நமக்கு துணையாக நிற்பார் என்பதில் ஏதேனும் ஐயம் இருக்க முடியுமா ?

     

    பாபாவின்  யோக நிலை

     

    பாபாவின் தெய்வீக தன்மையை உணர்ந்த பலர் அவருக்கு சீடர்கள் ஆனார்கள் . சத்குருவான பாபா  மக்கள் மனதில் தெய்வமாகவும் , குருவாகவும் உயர்ந்து நின்றார் . இருப்பினும்  அவர் சமாதி நிலை அடையும் வரை ஒரு  யோகியைப் போலவே தான் வாழ்ந்து வந்தார் .  அன்றாடம் தனது உணவுக்காக  பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார். அவரது பாதம் பட்ட தெருக்கள் புண்ணியம் செய்தன . அவருக்கு உணவளித்த பெண்கள்   மகா பாக்கியசாலிகள் . உலகிற்கே  தனது கருணையால் பசிப்பிணியை போக்கும் அந்த  மகானின் குரல் கேட்டு அன்னம் அளித்த அன்னையர்கள் ஆசீர்வசிக்கப் பட்டவர்கள்  அல்லவா .  தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார்.  பாபா  பசியோடு தன்னை நாடி வந்தவர்களை வெறும் வயிற்றுடன் அனுப்பியதே இல்லை  .  எத்தனை பக்தர்கள் தன்னை நாடி வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா. இதனால் அந்த கருணாமூர்தியை தேடி தாய்ப் பசுவை தேடி செல்லும் கன்றுக்களை போல் மக்கள் சீரடியை நோக்கி வரத் தொடங்கினர் .

    பாபாவிற்கு பகவத் கீதையும்   தெரியும் …குர்ஆனில் சொல்லப்பட்ட போதனைகளையும்  அறிவார் . இரண்டிலும் உள்ள  சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து  தேர்ந்த பண்டிதர்களைக் கூட  ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் . பாபாவிற்கு எம்மதமும் சம்மதம் .

     

    நீரிலே விளக்கேற்றிய  அற்புதம்

     

    பாபா தான்  எப்போது தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம் .  அந்த விளக்குகளுக்கான  எண்ணையை அந்த ஊர் இருந்த இரண்டு  எண்ணெய் வியாபாரிகள் கொடுத்து வந்தனர். ஒருநாள் பாபாவின் சக்தியை  சோதிக்க  நினைத்த அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.அன்று பாபா எவ்வாறு விளக்குகளை ஏற்றப் போகிறார் என்று பார்க்க மசூதிக்கு சென்ற அவர்கள் ஒளிந்துகொண்டு பார்த்தார்கள் . பாபா விளக்குகளில் தண்ணீரை விட்டு திரி போட்டு ஏற்றுவதைப் பார்த்த அவர்கள் வெட்கி தலை குனிந்தார்கள் . பாபா நிகழ்த்திய இந்த அற்புதத்தால்  அவர் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. தினந்தோறும் அவரின் அற்புதங்களைக் காண அந்த சீரடி கிராமம் தயாரானது .

     

    நாமும் அடுத்த பதிவில் இருந்து அவரின் அற்புதங்களை அனுபவிக்க தயாராவோம்

     

     

     

  • சாயி சீரடி சேர்ந்த கதை

     

     

     

     

    குருவின் குருவானவர் கோபால்ராவ் தேஷ்முக்

     

    குரு இல்லாத ஆன்மீக தேடல் என்றுமே நிறைவு பெற்றது இல்லை . இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் குரு . மாதா, பிதா , குரு தெய்வம் என கடவுளுக்கும் முன்பே குருவுக்கு மரியாதை கொடுத்து வரும் நம் பாரத தேசத்தில் குருவுக்கு என்றுமே ஒரு மகத்தான இடம் உண்டு .  குரு அடி பற்றி தன் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு என்றுமே  சோதனைகள் வந்ததில்லை . அஞ்ஞானம்  நீங்கி ஞானம்  பெற குருவின் திருவடிகளை தொழுதலை சாலச்சிறந்தது . சீரடி சாய் பாபாவும் சத்குரு  சாயி என்றே தனது சீடர்களால் அழைக்கப்பட்டார் . அத்தகைய மஹா குருவின் ஆன்மீக குருநாதராக அறியப்பட்டவர் கோபால்ராவ் தேஷ்முக் என்ற ஞானி .

     

    திருப்பதி வெங்கடாசலபதியாக காட்சியளித்த பால சாயி

     

    சிறுவயதில் சீரடிக்கு வருவதற்கு முன்பு பாபா  , முகம்மதியப் பெரியவர் ஒருவரிடம்  வளர்ந்து வந்தார். தன் கண்ணுக்குள் வைத்து பாபாவை அந்தப் பெரியவர்  காத்து வந்தார் . சிறிது நேரம் கூட பாபாவை பிரிந்து இருக்க முடியாத அளவிற்கு அவர் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருந்தார் .  திடீரென்று ஒருநாள் அந்த முதியவர்  இறந்து விட்ட நிலையில் பாபாவை அந்த ஊர் பெரியவர் ஒருவர் அழைத்துச் சென்று கோபால்ராவ் தேஷ்முக் என்பவரிடம் ஒப்படைத்து, இச்சிறுவனைக் கவனித்துக் கொள்ளுங்கள். இவனுக்கென்று யாரும் இல்லை என்று கூறி ஒப்படைத்தார் .  தீவிர  திருப்பதி வெங்கடாசலபதி பக்தரான கோபால்ராவ் தேஷ்முக்கை மக்கள், மகா ஞானியாகவே போற்றி வந்தனர். கோபால்ராவ் தேஷ்முக்கின் கண்களுக்கு, சாட்சாத் வெங்கடாசலபதியே நேரில் வந்து நிற்பது போன்ற உணர்வை அந்த பிஞ்சு குழந்தையின் முகம்  ஏற்படுத்தியது . தனது குழந்தையைப் போலவே வளர்த்து வந்த கோபால்ராவ் தேஷ்முக்கை தமது ஞானகுருவாக எண்ணி அவரிடம் வளர்ந்து வந்தார் சீரடி மகான் .

     

    பசுவின் மலடை நீக்கிய குரு

     

    குருவும் சீடனும் மிகவும் அன்புடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் மக்களிடையே   பேரும் புகழுடனும் இருந்தது அங்குள்ள சிலருக்குப்

    பொறாமையை ஏற்படுத்தியது .ஒரு சமயம் குருவும் சீடனும் தனிமையில் இருக்கும்போது பொறாமை கொண்ட ஒருவன் கல்லால் அடித்தான். அந்தக் கல் பாபாவின் தலையில் பட்டது. தலையில் அடிபட்டவுடன் ரத்தம் கொட்டத் தொடங்கியது. அந்தக் கொடியவன் அத்தோடு நிற்காமல் மறுபடியும் ஒரு கல்லை எடுத்து அடித்தான்.

     

    இதைக்கண்ட கோபால்ராவ் தேஷ்முக் எங்கே மறுபடியும் கல் , பாபாவின் மீது பட்டுவிடுமோ என்று அஞ்சி, பாபாவை மறைத்து முன்னால் வந்து நின்றார். அந்தக் கல் தேஷ்முக் மீது பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. “என்னால் தானே உங்களுக்குத் தொந்தரவு உண்டாகிறது. அதனால் என்னை தனியே செல்ல அனுமதி கொடுங்கள்” என்று குருவிடம் பாபா கேட்டார்.

     

    இதைக் கேட்ட குரு மிகவும் மனம் கலங்கி ,“பாபா மனம் வருத்தப்படாதே! உன்னால் உலகத்திற்கு பல நன்மைகள் உண்டாகப் போகிறது. நானோ விரைவில் இந்தப் பூமியை விட்டு நீங்கிச் செல்லப்போகிறவன். அதனால் இறையருளால் எனக்குக் கிடைத்த சகல வரங்களையும் சக்திகளையும் உனக்கு தாரை வார்த்துத் தரப்போகிறேன்” என்று கூறினார்.

     

    அவர் அதோடு நிற்காமல், உடனே அதை நிறைவேற்றும் பொருட்டு, அருகே இருந்த பசுவிடம் பாலைக் கறந்து வரும்படி கூறினார். குருவின் கட்டளையைக் கேட்ட பாபா, பசுவிடம் பாலைக் கறந்து தரும்படி பசுவின் சொந்தக்காரனைக் கேட்டார். “ஐயா, இந்தப் பசு மலட்டுப்பசு. இதுவரை கன்று ஈனவே இல்லை.

     

    ஆனபடியால் இது பால் கறக்காது” என்று சொன்னான் பசுவுக்குச் சொந்தக்காரன். இதைக் கேட்ட பாபா அவனையும் அவனது பசுவையும் குருவிடம் அழைத்துச் சென்றார். குரு பசுவின் மடியில் கைவைத்து தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மடியில் கைவைத்தவுடன் பால் அதிக அளவில் சுரந்து வந்தது.

     

    பாபா பாலைக் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தார். பாலைப் பெற்றுக் கொண்ட குரு, “இன்று முதல், இந்த நொடி முதலே எமது எல்லா சக்திகளும் குரு கிருபையும் பரிபூரண மனநிறைவுடன் பாபாவிடம் கொடுக்கிறேன்” என்று கூறி பாபாவிடம் பாலைக் கொடுத்தார். அதே சமயம் பாபாவை கல்லால் அடித்த கயவன் தரையில் வீழ்ந்து இறந்தான்.

     

    இதைக் கண்ட அவனது தோழர்கள் குருவின் கால்களில் விழுந்து, அவனை மன்னித்து உயிர்ப்பிச்சை அளிக்கும்படி வேண்டினார்கள். இதைக் கேட்ட குரு இவ்வாறு சொன்னார். “இனி எந்தச் சக்தியும் என்னிடம் இல்லை. எது ஆனாலும் பாபாவை வேண்டிக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார். அவர்களும் பாபாவை வேண்டி வணங்கி நின்றனர்.

     

    பாபாவும் அவர்களைக் கனிவுடன் பார்த்தார். கருணா மூர்த்தியான பாபா தனது குருநாதரின் காலடிபட்ட மண்ணை எடுத்து பிணமாகக் கிடந்தவன் மேல் தூவினார். என்னே அதிசயம்! இறந்து கிடந்த அவன் உயிர் பெற்று எழுந்தான். எழுந்தவன் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக பாபாவின் கால்களில் விழுந்து தன்னை மன்னித்தருளும்படி வேண்டினான்.

     

    கோபால் ராவ்தேஷ்முக் தமது உயிர் பிரிவதற்கு முன்பாக பாபாவை மேற்குத் திசையில் தேச சஞ்சாரம் செய்ய வேண்டினார். தமது குருவின் கட்டளைப்படி மேற்கு நோக்கி வந்து கொண்டு இருந்த பாபா இப்படி தான்  சீரடி கிராமத்தை வந்தடைந்தார். சீரடி மக்களின் வாழ்வோடு ஒன்று கலந்தார் .

     

     

  • ஏறின எடை குறையும் அதிசய கருடாழ்வார்….

    இந்து மதம் , பல ஆழ்ந்த வாழ்க்கை தத்துவங்களையும் , ஆச்சர்யமான பல நுட்பமான அதிசயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது . கோயில் , கோயில் கோபுரம் , பிரகாரம் , கொடி மரம் , பலி பீடம் , சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் என ஒவ்வொரு படைப்பிலும் நம் முன்னோர்கள் காட்டிய நுட்பங்கள் , இன்றைய நவீன தொழில் நுட்பம் வளர்ச்சிக்கு சவால் விடுபவையே. இன்றைக்கும் எந்த நவீன தொழில் நுட்பமும் இன்னொரு தஞ்சை பெரிய கோயிலை கட்ட முடியாது என்பதே உண்மை.
    நம் நாட்டில் ஒவ்வொரு கோயிலும் ஒரு பேரதிசயமே. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கட்டடக்கலை , இதைத் தாண்டி சூட்சுமமான பல அரிய பொக்கிஷங்கள் நம் கோயில்களில் மறைந்து கிடக்கின்றது. இங்கு சில ஆன்மிக அதிசயங்களை உணர்வோம்.

    ஸ்கேன் கருவிக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை சிற்பமாக்கிய அதிசயம்

    திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, அந்தந்த மாதக்கணக்கில் எந்த வடிவத்தில் , என்ன நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிற்பங்களாக கல்லில் வடித்து வைத்துள்ள நம் முன்னோர்களின் திறன் வியக்க வைக்கிறது . தொடர்ந்து வந்த பல அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்கள் சிதையாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்க முடிகிறது . காலங்களை முன் கூட்டி உணர்வதில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அறிவை கொண்டவர்கள் நம் மூதாதையர் என்பதற்கு நிலைத்திருக்கும் சாட்சியாக நிற்கிறது இந்த சிற்ப காட்சிகள்.

    சிங்கத்தின் வாயில் வழியே குளித்தவர்கள்

    வாசல் வழிக்கு தமிழில் வாயில் என்றொரு சொல் உண்டு. சிங்கத்தின் வாயில் வழியே குளித்திருக்கிறார்கள் நம் முன்னோர். ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கிணறு தான் இந்த வரலாற்று அதிசயத்தின் சாட்சி. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் தென்படும் ஒரு கதவின் மூலம் கீழே இறங்கினால் அந்த கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்ப்பவர்க்கு நாம் குளிப்பது தெரியாது. இது அன்றைய ராணிகள் பாதுகாப்பாக நீராட கட்டப்பட்ட கிணறு. அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்கள் மரகதகற்கள் பதிக்கப்பட்டவை . இதன் சிறப்பம்சமே வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். அதே போல வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். இது மட்டுமில்லாமல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் சோழக் குலத் திலகம் ராஜேந்திர சோழர். கங்கை கொண்ட சோழ பெருமக்கள் புகழ் போற்றுவோம்.

    ஏறின எடை குறையும் அதிசயம்

    கும்பகோணம் அருகே , உள்ள நாச்சியார் கோவில் கருட சேவை மிகவும் பிரசித்தி வாய்ந்தது . இங்குள்ள கல் கருடாழ்வாரின் எடை அதிகமாகிக்கொண்டே போவது இன்று வரை அனைவருக்கும் வியப்பை அளிக்கக் கூடியது . காரணம் பெருமாள் புறப்பாட்டின் போது , சன்னதியிலிருந்து வெளியே வரும் வேளையில் கருடன் நான்கு பேர் தூக்கி வரும் அளவிற்கு தான் கனம் இருக்கும் . ஆனால் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் , வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு பேர் என எடை கூடி , தூக்கி வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே போகும் . இதுவே , வெளியே இருந்து பிரகாரங்கள் சுற்றி சன்னதிக்கு உள்ளே திரும்பி வரும் போது ஏறின விகிதத்திலேயே எடை குறைந்து வரும் . காலங்களை கடந்து தொடர்ந்து வரும் இந்த அதிசயத்தின் காரணம் மிகவும் சுவாரசியமானது .

    பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரத்தின் படி , தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் . பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். அன்னத்தை ஒப்பிடும் போது கருடன் பலம் மிகுந்தவர் , வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே தான் கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதாக புராணம் கூறுகிறது . அதனால் இத் திருகோவிலில் இப்போதும் தாயாருக்கு தான் முதலிடம் .
    பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் காட்சி பார்க்கும் பக்தர்களுக்கு எல்லாம் மெய் சிலிர்க்க செய்யும் .
    ஆன்மீக அதிசயங்கள் வளரும் .

  • வழிகாட்டுகிறார் சீரடி சாய் ……

    ஓம் சாய் ராம் – இது வெறும் மந்திரமல்ல வாழ்க்கையை புரட்டிப் போடும் வழிகாட்டும் தந்திரம்
    மகாராஷ்ட்ரா மாநிலம் கோதாவரிக் கரையில் சீரடியில் தன்னை வெளிப்படுத்திய மகான் சாய் . உலகெங்கும் கோடானு கோடி மக்கள் ஒவ்வொரு நொடியும் , மூச்சு விடும்போதெல்லம் ஜெபிக்கும் மந்திரம் சாய் ராம். சாய் ராம் என்று சொல்லும் போதே மனதில் கவலைகள் நீங்கி நம்பிக்கை பிறக்கின்றது. இருள் விலகி வெளிச்சம் தென்படுகிறது. தீராத பல சிக்கல்களின் முடிச்சுகளை தனது சாந்தமான கருணைப் பார்வையினால் களைந்து விடுகிறார் கருணாமூர்த்தியான சாய் மகாராஜ் .இந்த நூற்றாண்டில் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றஞானிகளில் சீரடி சாயி பாபா மகத்தானவர். மதங்களை கடந்து மனிதர்கள் மிகுந்த உரிமையுடன் , நம்பிக்கையுடன் அவரது சமாதியை நாடி , நாள்தோறும் ஓடி வருகிறார்கள்.
    சமாதி நிலையிலும் தன்னை நாடிவரும் தன்னுடைய பக்தர்களை வெறும் கையுடன் என்றும்அவர் அனுப்புவதில்லை . பொறுமை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை தான் பாபா தன்பக்தர்களிடம் எதிர்பார்ப்பது . இவரின் பிறப்பு மற்றும் வயதை இதுவரை யாராலும் அறுதியிட்டுகூற முடியவில்லை . தன்னுடைய பக்தர்களால் சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் ‘சாய் பாபா ‘ ’அவர்கள் இந்தியாவில் உள்ள மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள சீரடிக்கு1854-ம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில் வருகை புரிந்தார்.
    முதன்முதலாக சீரடி கிராமத்து மக்கள் அவரை , மசூதி ஒன்றில் அருகாமையில் அமைந்திருந்த வேப்பமரத்தின் அடியில் தியானத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தரிசித்தார்கள் .வயதில்இளைஞராக காட்சியளித்தாலும் , அவரது முகத்தில் தெரிந்த தேஜஸே முக்காலமும்கற்றுணர்ந்த ஒரு மகானாக மக்களின் கண்முன் தோற்றுவித்தது . அந்த இளம் வயதிலேயே தன்னை நாடிவந்த மக்களுக்கு ஆன்மீக வழியை காட்டினார் . சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை ,மிக எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்ததால் ,அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் கூடஆரம்பித்தனர் .
    வெறும் வாய்மொழி தத்துவங்களோடு நிற்காமல் , உடல் நலம் வேண்டி தன்னை நாடிவருபவர்களுக்கு தன்னுடைய வரம் நல்கும் கரத்தால் ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக்குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், மற்றும் மகத்துவம் மதங்களை தாண்டிஅனைத்து தரப்பு மக்களையும் தேனை நோக்கி கவரப்பட்ட தேனீக்களாக சீரடி நோக்கி செல்லவைத்தது .
    சாய் ராம் . மகானின் வாழ்க்கை சரிதம் நம்மை உயர்த்தும் .
    தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டிய புனித சீரடி சாய் பாபாஅவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகள் , மற்றும் அவரின் போதனைகளை இனிதிங்கள் மற்றும் வியாழன் தோறும் நாம் விரிவாகக் காண்போம்.

  • சோதனையை வென்ற தர்மர்

    மகாபாரதப் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால் அதைத் தடுக்க முடியவில்லை. தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
    அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.
    யாதவர்களும் கிருஷ்ணனும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது. தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான். உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான். அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள். எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் உயிர் வாழப் பிடிக்கவில்லை. அதுவும் தங்களுக்கு ஆருயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணனின் மறைவு அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.
    அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை விட்டுக் கிளம்பினார்கள். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள். உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் அறவே துறந்து மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய பயணத்துக்குத் தேவையான மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள். மரவுரி தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் சென்றார்கள்.
    லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள் தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவுசெய்தபடி கிளம்பினார்கள். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்துவந்த நாயும் உடன் சென்றது.
    பின்தொடர்ந்த நாய் …


    மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.
    பாண்டவர்கள் பல நாட்கள் பயணம்செய்து இமயமலையை அடைந்தார்கள். அதைக் கடந்து சென்று மேரு மலையைத் தரிசித்தனர். மேரு மலையில் பயணம் சென்றபோது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.
    அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், “திரௌபதி ஏன் வீழ்ந்துவிட்டாள்?” எனத் தன் அண்ணனிடம் கேட்டான். தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: “ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.”
    சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் “சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன். “தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்” என்றபடியே தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.
    அர்ச்சுனன் வீழ்ந்தான்…
    சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான். பீமன் மீண்டும் காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன். இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.
    அடுத்து அர்ச்சுனன் விழுந்தான். “தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது” என்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.
    தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான். தள்ளாடி விழும் சமயத்தில் “என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?” என்று கேட்டான். “உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்” என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.
    ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.
    மேரு மலையின் உச்சியை அடைந்தான். அப்போது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்தான். தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது. “நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை” என்று கூறித் தடுத்தான் இந்திரன்.
    விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான் தருமன். “என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்” என்றான்.
    அப்போது நாய் மறைந்தது. அங்கே தரும தேவன் நின்றார். “சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக்கூடக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த சோதனை. முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் சோதனைகளில் நீ தேறிவிட்டாய். மகிழ்ச்சியோடு சொர்க்கத்துக்குச் செல்” என்று கூறி தரும தேவன் மறைந்தார்.