Category: தொடர்கள்

தொடர்கள்

  • சிவ சிந்தனையோடு இருந்தால் மட்டுமே பேரின்பம்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    திருமந்திரம் 
    எளிய விளக்க உரை- 7 

    மாரி மைந்தன் சிவராமன்
    மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
    நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
    பனையுள் இருந்த பருந்து போல்
    நினையாத வர்க்கில்லை நின் இன்பம்தானே.

    இல்லறத்தில் இருந்தவாறே ஈசனை உள்ளத்தில் நினைத்துக்கொண்டு வணங்கி வாழ்பவர் பெருந் தவம் செய்பவர்களுக்கு சமமாக கருதப்படுவர்.

    எப்போதும் ஈசனை அகத்துள் நிறுத்திக் கொண்டு தவம் செய்து வருபவர் அவனது நேசத்துள் என்றென்றும் நிலைத்து நிற்பர். 

    இதை பின்வருமாறும் சொல்லலாம்.
    ஈசனை அன்பு பிடிக்குள் வைத்திருப்போரை அவன் அன்பே சிவம் எனக் காட்டி அருகிருந்து அருள்வான். 
    இதுபோல் ஈசனின் அன்பை அறியாதவர்கள் பனைமரத்தில் அமர்ந்தும் பனம்பழத்து அருமை அறியாமல் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு பழத்தை உண்ணாமல் பறந்துவிடும் பருந்துக்கு சமமானவர்களே.

    இவ்வுலகிற்கு வந்து இறைவனை நினையாமல் இருந்துவிட்டு ஈசனின் அன்பை உணராமல் வாழ்ந்து வருபவர்கள் கடைசியில் காலன் கையில் அகப்பட்டுக் காலமாகி விடுவர். 

    சுருக்கமாக சொன்னால், இல்லற வாழ்க்கையில் இருப்போர் சிவ சிந்தனையோடு இருந்தால் மட்டுமே பேரின்பம் வற்றாதிருக்கும். இறவாப் பேரின்பம் சித்தியாகும்.
     

  • ஞான வழியே சித்தியைக் காட்டும்

    – "மாரி மைந்தன்" சிவராமன் 

     

    திருமந்திரம் – எளிய விளக்க உரை  – 6

    மாரி மைந்தன் சிவராமன்

    விதிவழி  அல்லதிவ் வேலை உலகம்

    விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை

    துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்

    பதிவழி காட்டும் பகலவனாமே.

    (திருமந்திரம் – கடவுள் வாழ்த்து)

    இறைவன் ஜோதியாக விளங்குபவன் அருட்பெருஞ்ஜோதி அவனே.

    அவன் 
    விதித்த விதி வழி தான் உலகம் சுழல்கிறது.
    தவிர வேறு வகையில் அல்ல.

    மனிதர்கள் அடையும் 
    இன்பமும் 
    துன்பமும் 
    அவன் 
    வகுப்பதே அன்றி வேறு அல்ல.

    எனவே 
    நித்தமும் 
    அவனை உள்ளத்தில் உணர்ந்து துதியுங்கள்.

    அதனால் 
    மட்டுமே 
    ஜோதியாக விளங்கும் 
    ஈசன் 
    சூரியன் போல் இருளகற்றி 
    ஞானம் 
    அடையச் செய்து 
    இறவாப் பேரின்பத்தை நிரந்தரமாக்கி 
    சித்தி எனும்
    பேறை அருள்வான்.

    விதி வழி என்பது கிரியை நெறி.
    துதி வழி என்பது தோத்திர நெறி.
    பதி வழி என்பது ஞானநெறி.
     

  • திருவடியாய் நிற்கும் ஜோதியே போற்றி…

    – "மாரி மைந்தன்" சிவராமன் 

    திருமந்திரம் எளிய விளக்க உரை 5

    போற்றி என்பார் அமரர் புனிதன்அடி

    போற்றி என்பார் அசுரர் புனிதன்அடி

    போற்றி என்பார் மனிதர் புனிதன்அடி

    போற்றி என்அன்புள் பொலிய வைத்தேனே.

    (திருமந்திரம்- கடவுள் வாழ்த்து)

    இன்ப வேட்கை கொண்ட  வானுலக அமரர் இன்பம் பொருட்டு தூயவனாகிய சிவனின் திருவடியைப் போற்றித் துதித்திடுவர்.

    பொருள் வேட்கை கொண்ட கொடியவர்களான அசுரர்களும் பொருளுக்காக அவன் திருவடியைப் போற்றி தொழுதிடுவர்.

    அருள் வேட்கை கொண்ட  மண்ணுலக மனிதர்களும் 
    அருள்
    வேண்டி 
    புனிதன் திருவடியைப் போற்றி வணங்கிடுவர்.

    சித்த வேட்கை கொண்ட 
    நானும் தவநிலையில் அவனைப் 
    போற்றி 
    துதித்து 
    தொழுது 
    வணங்கி 
    என் அன்பெனும் பிடியில் 
    அவனை அகப்படுத்தி
    அவன் 
    திருவடியாய் நிற்கும் 
    ஜோதியைப் போற்றி பொலிவுடன் வைத்திருந்தேனே.

    சிவனது திருவடியை உள்ளத்தில் ஏந்தி அவனை உணர்ந்து
    அளவுகடந்த அன்போடு 
    வணங்க வேண்டும் என்பதே இம்மந்திரம்
    உரைக்கும் தந்திரம்.

  • மெய்ப்பொருள் காண்பது அரிது

    – "மாரி மைந்தன்" சிவராமன் 

    திருமந்திரம் எளிய விளக்க உரை – 4

    பதிபல வாயது பண்டிவ் வுலகம்
     
    விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்

    துதிபல தோத்திரஞ் சொல்ல வல்லாரும்

    மதியிலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே

    ( திருமந்திரம் – கடவுள் வாழ்த்து)

    ஆதியிலிருந்தே இறைவனுக்குப்
    பல பெயர்களைச் சூட்டி வணங்கி மகிழ்வது நமது வழக்கம்.

    தெய்வ வழிபாட்டிற்கு விதிகளாக 
    சடங்கு 
    சாத்திரம் 
    யாகம் 
    என பலவும் வகுத்து அவற்றில் 
    உழல்வதும் 
    நம் மாந்தர் பழக்கம்.

    இப்பேதங்களே 
    தத்தம் தெய்வம் 
    பெரியதென
    தர்க்கமாய்
    தகராறாய் 
    வம்பாய் வேதனையாய் பகையாய்
    நீடித்துத் தொடர்வது உலகின் இயல்பானது.

    மந்திரங்களும் உபாசனைகளும் தோத்திரங்களும்
    பக்திப் பாடல்களும் மெய்யறிவை வளர்க்காது.

    எத்தனை காலம் ஆனாலும் 
    கிரியை விதிகளால் 'மெய்ப்பொருள் 
    ஒன்றே'
    என்ற 
    உண்மை புரியாது.
    உணரவும் முடியாது.

    எனவே தான் 
    உலக இன்பங்களில் சிக்கி 
    அல்லல் படுகின்றனர் அத்தனைபேரும்.

    எவ்வளவு படித்திருந்தாலும் மெய்ப்பொருள்
    காண முடியாமல் இறைவனை அறியமுடியாமல்  நெஞ்சினுள்ளே  அமைதியின்றி வாடுகின்றனர்.

  • சிவனே சிவம் : திருமந்திரம் எளிய விளக்க உரை

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    திருமந்திரம் – 1

    ஒன்றவன் தானே இரண்டவன் இன்அருள் 
    நின்றனன் மூன்றினுள் நன்கு உணர்ந்தான் ஐந்து 
    வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பர்ச் 
    சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே.

    (திருமந்திரம் –
    கடவுள் வாழ்த்து – 1)

    விளக்க உரை

    ஒன்றாய் 
    ஆதிசிவனாய்
    சிவமாய் 
    உள்ளவன் 
    அவனே.

    அம்மை
    அப்பன் 
    என
    இரண்டானவன் அவனே.

    அருவம்
    உருவம் 
    அருவுருவம் 
    என்று 
    மூன்றாயிருப்பவன் அவனே.

    சரியை
    கிரியை
    யோகம்
    ஞானம் 
    ஆகிய 
    நான்கையும் 
    உணர்த்துபவன் அவனே.

    படைத்தல் 
    காத்தல் 
    அழித்தல் 
    அருளல் 
    மறைத்தல் 
    என்னும் ஐந்தொழில்களையும் ஆற்றுபவன்
    அவனே.

    ஓருயிர் முதல் 
    ஆறுயிர் வரை 
    அனைத்து உயிர்களுக்கும் 
    ஆதார நாயகன் அவனே.

     

    மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிப்பூரகம்
    அனாகதம் 
    விசுத்தி 
    ஆக்ஞா 
    பிரமந்தரம்
    முதலான 
    ஏழு ஆதாரங்களாயிருந்து இயக்குபவனும் அவனே. 

     

    தன்மயமாதல் 
    தூய உடலினன் ஆதல்
    இயற்கை உணர்வு அடைதல் 
    முற்றும் உணர்தல் பற்றற்று இருத்தல் பேரருள் நோக்கு முடிவில்லாமை
    எல்லையில்லாமை ஆகிய 
    எண் குணத்தான் அவனே.

    அவனே சிவன்.

    சிவனே சிவம். 

    ஆம்…
    சிவமே சிவன்.

    திருமந்திரத்தின் மூவாயிரம் பாடல்களின் 
    கருவும் 
    சுருக்கமும் 
    விளக்கமும் 
    இதுவே.

  • வியப்பூட்டும் விரல்களின் ஆற்றல்  – 2

    கழிவு நீக்கும் முத்திரை….

    அண்டத்தில் உள்ளதே, பிண்டத்திலும் உள்ளது என்று சித்தர் பெருமாட்டி ஔவைப்பாட்டிகூறியதில் இருந்து நமது உடல் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

    உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
    உடம்பினுள் உறுபொருள் கண்டேன்
    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

    என்கிறார் திருமூலர் பெருமான்.

    உடல் என்பது ஒரு இழுக்கானது என்று நான் தவறாக எண்ணியிருந்தேன். அந்த உடலுக்குள் ஒரு மிகவும் ஆற்றல் வாய்ந்த, கற்பனை கூடச் செய்து பார்த்திர முடியாத ஒரு பொருள் இருப்பதைக் கண்டு கொண்டேன். எனவே நான் உடலைப் பேணி வளர்க்கிறேன், அதன் மூலம் உயிரையும் பேணி வளர்க்கிறேனே என்கிறார் திருமூலர்.

    எனவே, உடல் என்பதும், அவ்வுடலுக்குள் குடி கொண்டிருக்கும் அந்த இறைப் பொருளை உணர்ந்தவர்களே பேரரறிவாளர்கள் எனும் சித்தர் பெருமக்களாக உள்ளதை நாம் உணர முடிகிறது.

    அப்படிப்பட்ட உடலை நாம் பேணிக்காப்பது என்பது உயிரையும், அந்த உயிருக்குக் காரணமாக இருக்கும் இறை ஆற்றலையும் நாம் உணர்வதற்கான வழி முறையாகவும் சித்தர் கூற்றை நாம் புரிந்து கொள்ளலாம்.

    அது மிக உயர்ந்த ஒரு உணர்வு நிலை எனினும், நமது அன்றாட வாழ்வில் இயன்றவரை ஊசி, மாத்திரை, மருத்துவத்திற்குச் செல்லாமல் நம் உடலைக் காப்பாற்றிக் கொள்ளவும், உடலைப் பாதுகாத்துக் கொள்ளவுமே, சித்தர் பெருமக்கள் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளவை ஓகக் கலைகள்.

    இந்த ஓகத்திற்கு வடமொழியாளர்கள் யோகம் என்று பெயர் சூட்டிவிட அதுவே பிரபலமானது. ஆனால், நாம் ஓகம் என்றே அழைப்போம்.

    அந்த ஓகக்கலைகளில் ஒன்றுதான் முத்திரை ஓகம். கை விரல்களைக் கொண்டு செய்யப்படும் இந்த முத்திரை ஓகத்தை அழியாது காத்துக் கொண்டு, சந்ததிதோறும் கடத்திக் கொண்டு செல்வதில் பரதநாட்டியம் எனப்படும் சதிர் ஆட்டத்திற்குப் பெரும் பங்கு உள்ளது.

    சரி, இப்போது நாமும் அந்த முத்திரை ஓகத்தைக் கற்றுக்கொள்வோம். மிக எளிய பயிற்சியான இதனை நாம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, பேருந்தில், ரயிலில், விமானத்தில பயணித்துக் கொண்டே, நண்பர்களுடன், குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக் கொண்டே செய்யலாம். அவ்வளவு எளிதான ஓகமே முத்திரை ஓகம்.

    உச்சந்தலையில் தொடங்கி கால்பாதம் வரை அனைத்து உடல் உறுப்புகளுக்குமான ஓகப் பயிற்சிகளைக் கொண்டது முத்திரை ஓகம்.

    முத்திரை ஓகம் என்றவுடன் ஏதோ பெரிய கடினமான பயிற்சி என்று எண்ணிவிடவேண்டாம்.  நாம் கூறியபடியே மிக எளிதான பயிற்சியே.

    சரி…

    முதலில் இந்த ஓகப்பயிற்சியை எப்போது செய்யலாம் ?

    காலை எழுந்தவுடன் உணவுக்கு முன், மதியம் உணவுக்கு முன், மாலையில் உணவுக்கு முன் அல்லது உணவு அருந்திய ஒரு மணி நேரம் கழித்து இப்பயிற்சிகளைச் செய்யலாம்.

    உணவு சீரணம் ஆவதற்கு என்று சில முத்திரைகள் உள்ளன. அவற்றை உணவை அருந்திய சில நிமிடங்களில்கூட செய்யலாம்.

    எனினும், இப்போதைய காலகட்டத்தின் அடிப்படையில், உணவிலேயே ரசாயன நச்சுகள் கலந்துவிட்ட காலத்தின் அடிப்படையில் முதலில் , கழிவு நீக்கும் முத்திரையில் இருந்து தொடங்குவதையே பெரும்பாலான முத்திரை ஓகப் பயிற்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    அது ஒருவகையில் லாஜிக்காகவும் சரியானதே. காரணம், நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுவது முதல்கட்டமாக இருப்பது நல்லதுதானே.

    இந்த கழிவு நீக்கும் முத்திரையை குறைந்தது மூன்று வாரங்கள் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். அதன்பிறகு மாதம் ஒருமுறை செய்தால் போதுமானது.

    இந்த முத்திரை செய்தபின் தண்ணீர் சற்று அதிகம் குடிப்பது நல்லது.  பசி உணர்வில் சில மாற்றங்கள் வரலாம் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது அல்லது வயிற்றுப்போக்குகூட ஒன்றிரு முறை நிகழலாம். இது இந்த முத்திரையைத் தவறாது செய்து வந்தால் சிலருக்குத் தோன்றக்வடிய விளைவுகள். அதுபோன்ற வேளைகளில் எலுமிச்சை சாறு, வெந்நீர், மோர் ஆகியவற்றைக் குடிக்கலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ணலாம்.

    இந்தப் பயிற்சியை காலை 20 நிமிடங்கள், மாலை 25 நிமிடங்கள் செய்யலாம். அல்லது காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களில் தலா 15 நிமிடங்கள் என ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    தரையில் அமர்ந்திருந்தாலும், இருக்கையில் (நாற்காலி) அமர்ந்திருந்தாலும் முதுகெலும்பு நேராக இருக்கமாறும், தலை நிமிர்ந்த நிலையில் இருப்பதும் அவசியம்.

    முத்திரை செய்யும் முறை.

    நமது இரண்டு கைகளையும் குவித்து வணக்கம் செலுத்துவது  போல சில நிமிடங்கள் வைத்து இக்கலையை நமக்கு அளித்த சித்தர் பெருமக்களுக்கு நன்றி கூறியபடி தொடங்கலாம்.

    அதன் பிறகு இரண்டு கைகளையும் நமது தொடை மீது வைத்துக் கொண்டு, பெரு விரலின் நுனியை மோதிரவிரலின் கீழ்ப்பகுதியில் இறுதிக் கணுவில் (கையோடு சேர்ந்திருக்கும் பகுதி) தொட்டுக் கொண்டிருப்பதுபோல வைக்க வேண்டும். மற்ற விரல்கள் விரிந்த நிலையில் இருக்கலாம். அதிக அளவு அழுத்தம் தேவையில்லை.

    இவ்வாறு தொடர்ந்து 45 நிமிடங்களோ அல்லது மேலே குறிப்பிட்டதுபோல 15 நிமிடங்களாக நாளொன்றுக்கு மூன்று முறையோ செய்யலாம்.

    இவ்வாறு மூன்று வாரங்கள் செய்தால் நமது உடலில் நச்சுக்கள் படிப்படியாக வெளியேறி உடல் ஊக்கமும், உற்சாகமும் பெறும்.

    செய்து பார்க்கலாமா?

    பலன்கள் :

    உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதால் அவை ஏற்படுத்தும் விளைவுகளும் நம்மைவிட்டு வெளியேறும். குறிப்பாக மது அருந்தும் வழக்கமுடையவர்கள், காபி, தேநீர் போன்றவற்றை குடித்தே ஆகவேண்டும் என்ற உணர்வு பெறுபவர்களுக்கெல்லாம் அதைத் தேவைப்பட்டால் அருந்தலாம் அல்லது அருந்த வேண்டிய கட்டாயம் இல்லை எனும் நிலை ஏற்படும். தேவையற்ற கொழுப்புகள் கரைய வாய்ப்புண்டு. உடல் தூய்மை பெறுவதால் மனதும் ஊக்கம் பெறும். 

    குறிப்பு : இது ஒரு உடல் பயிற்சிக் கலையே. இதனைச் செய்யும்போது வழக்கத்துக்கு மிக மாறாக உடலில் ஏதும் மாற்றங்கள் நிகழ்ந்தால் பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். எனினும் எந்தவிதமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் தவறான பயிற்சி அல்ல இது. பயிற்சிகள் செய்து பார்த்து பலன் இருந்தால் மட்டும் தொடர்ந்து செய்யலாம். 

    -விஷ்வா விஸ்வநாத்

  • வியப்பூட்டும் விரல்களின் ஆற்றல் ! – உடலையும், மனதையும் காக்கும் முத்திரை ஓகம்.

    மானுட சமூகத்தின் உடல், மனம் சார்ந்த நலனுக்கும், அவை சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் தமிழர்கள் தீர்வு கண்டதைப்போல உலகில் வேறு எவரும் தீர்வு கண்டிருக்க மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம்.

    வாழும் முறையான வாழ்வியலிலேயே நோய் நீக்குதல், வாழ்வியல் கொண்டே நலமுடனும், வலிமையுடனும் வாழ்ந்து என்ன சாதிக்க விரும்புகிறோமோ அதனைச் சாதிக்க அனைத்து வழிகளையும் கண்டுபிடித்து இந்த உலகிற்குச் சொன்னவர்கள் நமது முன்னோர்கள் அதிலும் குறிப்பாக சித்தர் பெருமக்கள்.

    யோகம், யோகாசனம் என வடமொழியில் குறிப்பிடப்பட்டாலும் ஓகம் என்பதே சரியான தமிழ்ச் சொல். இதனைக் கண்டறிந்தவர்கள் நமது முன்னோர்கள், பேரறிவு படைத்த சித்தர் பெருமக்கள். ஆனால் அவர்களோ, இது நாங்கள் கண்டறிந்தது அல்ல எங்களுக்கெல்லாம் தலைமையானவர் சிவபெருமானும் அவரது சீடர்களுமே என்கின்றனர். 

    சித்தபெருமக்கள் பல்வேறு மருத்துவ முறைகளைக் கூறியிருந்தாலும், வேகமான இந்த மின்னணு உலகிலும் எளிமையாகச் செய்து நலன் பெறுவதற்கும் மருத்துவ, ஓக முறைகளை நமக்கு அளித்துள்ளன.

    அப்படிப்பட்ட ஒரு ஓக முறைதான் முத்திரை ஓகம்.

    கை விரல்களைக் கொண்டு செய்யப்படும் ஓகமே, முத்திரை ஓகம்.

    இதற்கு அறிவியல் அடிப்படை என்னவென்று உடனே நமக்குள் கேள்வி எழுவது இயல்பு.

    இதற்கு முதலில் உடலியல் பற்றிய அடிப்படை அறிதல் மிக முக்கியமானது.  உடலியல் இதையே மெய்யியல் என்றும் அழைக்கிறோம். மெய் இயல் என்பது உண்மையான இயல் என்று ஒரு பொருள் இருந்தாலும் மெய் என்றால் உடல் என்ற ஒரு பொருளும் உள்ளது. எனவே மெய்யியல் என்பது உடலியல் என்றும் பொருள் கொள்ளலாம்.

    இந்த உலகமும், நமது மனித உடல் உள்பட எல்லா உயிர்களும் ஐம் பூதங்கள் என்று சொல்லப்படும் ஐந்து விதமான இயற்கைப் பொருளால் உருவானது என்பது அடிப்படை.

    நாம் எளிதாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்றால், நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் என்ற ஐந்து பொருட்கள் அல்லது ஐந்து பூதங்கள் என்று அழைக்கிறோம்.

    நாம் வாழும் இந்த பூமி என்பது நிலம். அந்தப் பூமியின் மத்தியிலும், சூரியனிலும் இருப்பது நெருப்பு. கடல் உள்பட நீர் நிலைகளில் இருப்பது நீர், எப்போதும் சிலு சிலுவென, சில நேரங்களில் கடுமையாக வீசுவது காற்று. இதில் ஆக்சிஜன் எனப்படும் காற்று இல்லையெனில் நாம் உட்பட எந்த உயிரும் வாழ இயலாது. இதற்கு அடுத்ததாக ஆகாயம். அதாவது பூமியைச் சுற்றியுள்ள எல்லா வெற்றிடங்களுமே ஆகாயம் அல்லது புரியும்படியாக வானம் என்று வைத்துக்கொள்ளலாம். இந்தியாவில் இருப்பவர் ஒருவர் மேல் நோக்கிப் பார்த்தால் தெரிவதும் ஆகாயம்தான், அமெரிக்காவில் இருந்து ஒருவர் மேல் நோக்கிப் பார்த்தாலும் ஆகாயம்தான்.

    ”அண்டத்தில் உள்ளதே
    பிண்டத்திலும் உள்ளது”

    என்கிறார் சித்தர் பெருமான் ஒளவைப் பிராட்டி.

    அண்டம் என்பது ஆங்கிலத்தில் Universe என்று பொருள். பிண்டம் என்றால் உடல் என்று பொருள். இந்த அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்ற ஒரு மாபெரும் அறிவியல் உண்மையை நான்கு சொற்களில் சொல்லும் திறன்தான் சித்தர் பெருமக்களின் பேரறிவுத் திறன். 

    அந்தவகையில் அண்டத்தில் பார்த்த அதே நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம்தான் மனிதனின் பிண்டத்திலும் அதாவது உடலிலும் உள்ளது என்கிறார் ஔவையார்.

    சதைப் பிடிப்போடு இருக்கும் இந்த உடல் நிலம். ரத்தம் உள்பட உடலில் உள்ள நீர்மப் பொருள் நீர். உடலை வெப்பமாக வைத்திருந்து ரத்தம் உறையாது இருக்கவும் உடல் தட்ப வெப்ப நிலையைச் சீராக வைத்திருக்கவும் வெப்பம் அவசியம். அதை உருவாக்குவது நெருப்பு. நாம் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதே காற்று. காற்று இல்லையெனில் ஒரு விநாடிகூட நாம் உயிர் வாழ இயலாது. இவற்றுக்கெல்லாம் தலையாயதாக இருப்பது ஆகாயம். 

    அண்டத்திற்கும், பிண்டத்திற்குமான இப்படி ஒரு ஒப்பீட்டின் அடிப்படையிலேயே நாம் முத்திரை ஓகத்தைப் புரிந்து கொள்வது எளிது.

    சொன்னால வியப்பாக இருக்கும். பிண்டம் எனும் உடலில் உள்ள இந்த ஐந்து பூதங்களின் பிரதிநிதியாக, சுவிட்சுகளாக இருப்பவைதான் நமது இரண்டு கைகளில் உள்ள விரல்கள். 

    இந்த விரல்களை வைத்துதான் முத்திரை ஓகம் செய்யப்போகிறோம்.  உடல் நலன், மன நலன் பெறப்போகிறோம். உடல் ஆற்றலை, உயிர் ஆற்றலை மிகச்சரியாக பயன்படுத்தப்போகிறோம்.

    எப்படி….. அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

    – விஷ்வா விஷ்வநாத், இதழியலாளர்

  • கடவுளின் பெயரால் – 3

    கடவுளைப் புகழ்ந்து பெறுவது

    யாரிடமாவது எதையாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் அவரது அருமை பெருமைகளைப் போற்றிப் புகழ்வோம். நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு, மிகுந்த பணிவோடு வேண்டியதைக் கேட்போம். இதைத்தான் கடவுளின் விஷயத்திலும் நாம் செய்கிறோம்.

    அவர் புகழ்ச்சிக்கு மயங்குபவரா? என்பதைப் பற்றி நமக்குத் தெரியாது. ஆனாலும் புகழ்ந்தால்தானே ஏதாவது கிடைக்கும் என்ற நமது பொதுப் புத்தியானது கடவுளையும் விட்டு வைக்கவில்லை.

    விநாயகர் அகவல் எனும் அவ்வையின் பாடலில்,

    “பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

    வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்

    அஞ்சு கரமும் அங்குச பாசமும்

    நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்…….”

    என்று விநாயகரின் தோற்றத்தை வர்ணிக்கிறார்.

    அதன்பிறகு

    “தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி

    மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே…….“

    “………வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்

    கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே….”

    என்று தனது விண்ணப்பங்களை அடுக்குகிறார்.

    உண்மையில் கடவுள் புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்ற கருத்தும் உண்டு.

    “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்தல்” என்கிறார் வள்ளுவர்.

    அதாவது வள்ளுவரின் பார்வையில் விருப்பு வெறுப்பு அற்றவன் கடவுள்.

    படையலையும் நெய்வேத்தியத்தையும் புகழ்ச்சிப் பாடலையும், நேர்த்திக் கடன்களையும் அவர் உண்மையில் விரும்புகிறாரா? அப்படிச் செய்தால்தான் அவர் நாம் வேண்டுவதைக் கொடுப்பாரா? என்றால் மனிதனுக்கும் அவருக்கும் என்ன வேறுபாடு? அவர் அனைத்தும் அறிந்த கடவுள் அல்லவா? நாம் கேட்டால்தான் நமக்கு வேண்டியது என்ன என்று அவருக்குத் தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. எதையும் கேட்காத பற்றற்ற துறவிகளின் ஆன்மீகம் இதுதான்.

    இன்னொரு குறளில்,

    “பற்றற்றான் பற்றினைப் பற்றுக” என்கிறார் வள்ளுவர்.

    “அதாவது ஆசை இல்லாதவன் மீது ஆசை கொள்க.”

    அடுத்த வரி,

    “பற்றுக அப்பற்றை பற்று விடற்கு”

    அதாவது “அந்த ஆசையும் ஆசையை விடுவதற்காகத்தான்.”

    உண்மையில் விருப்பு வெறுப்பற்ற நிலைக்கு ஒருவன் சென்று விட்டால், அவன் கடவுளின் தன்மையை அடைந்து விட்டான் என்று பொருள். பிறகு அவனுக்குப் பிரார்த்தனை தேவை இல்லை.

    விருப்பு வெறுப்பற்ற மனநிலை என்பது ஒன்றுமற்ற நிலை.

    ஒன்றுமற்ற நிலைதான் கடவுள் நிலை என்று ஏராளமான ஆன்மீகவாதிகள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    இசைஞானி இளையராஜா மேஸ்ட்ரோ பட்டம் பெற்ற போது, அவருக்கு ஒரு பாராட்டு விழாவை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சில் இளையராஜா இப்படிப் பேசினார்:

    "தமிழ் மொழியில் உள்ள கடவுள் என்ற வார்த்தை கடவுளின் தன்மையை அப்படியே பிரதிபலிக்கிறது. கட உள் என்றால் உள்ளுக்குள் உள்ளத்துக்குள் கடந்து செல் என்று அர்த்தம். அப்படிக் கடந்து சென்று கொண்டே இருந்தால், அங்கே கடைசியாக ஒன்றுமற்ற நிலை வரும். இதைத்தான் ஒருவேளை பெரியார் பார்த்து விட்டு கடவுள் இல்லை என்று சொல்லி விட்டாரோ"

    ஒரு கவிஞர் எழுதி இருந்தார்:

    “கடவுளைக் கண்டேன்

    எதுவுமே கேட்கத் தோன்றவில்லை.”

    இத்தகைய பரவச நிலையை அடைபவன், கடவுளிடம் எதுவுமே கேட்கத் தேவை இல்லை. அவரைப் பிரார்த்தனை செய்யத் தேவை இல்லை. அவரைத் துதிக்கத் தேவை இல்லை. அவர் விரும்பினால் நமக்குத் தேவையானதைக் கொடுக்கப் போகிறார். இல்லையெனில் இல்லை என்ற பக்குவம் அவனுக்கு இருக்கும்.

    ஆனால் லௌகீக வாழ்க்கையில் உள்ள யாரும் கடவுளை இப்படிப் பார்ப்பதில்லை. தனக்கு விருப்பமானதைக் கொடுப்பவர் என்றே நினைக்கிறார்கள். கேட்டால் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

    இங்கே நம்பிக்கைதான் மிகவும் முக்கியம். தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் கடவுளை நம்புவார்கள் என்பது பொதுவான கருத்து. “கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தன்னம்பிக்கை அவசியம்” என்கிறார் விவேகாநந்தர். “தன்னம்பிக்கை இல்லாதவன் எத்தனைதான் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருந்தாலும் பயனில்லை” என்கிறார் அவர்.

    ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சில நேரங்களில் தன்னம்பிக்கையை வளர்க்க உதவவும் செய்கிறது.

    இதை விரிவாகப் பார்க்கலாம்…..

    கடவுளின் பெயரால்….

    தொடரும்….

  • கடவுளின் பெயரால்… 2

    பிரார்த்தனை

    பிரார்த்தனை இல்லை என்றால் கடவுள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் பிரார்த்தனைக்காகத்தான் கடவுளே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறார்

    முதலில் எஜமான் உருவாகி பின்னர் அவரிடம் கேட்பது என்றில்லை. கேட்பதற் காகவே படைக்கப்பட்ட எஜமான்தான் கடவுள்.

    மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஆற்றாமையைக் கொட்ட, துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள அவனுக்கு ஒரு ரகசியமானஅதே சமயத்தில் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டநண்பன் தேவை. அப்படிப்பட்ட நண்பன்தான் கடவுள்.

    ஒரு சில நண்பர்கள் பகிர்ந்து கொள்ள மட்டும் உதவுவார்கள். ஒரு சில நண்பர்கள் பகிர்ந்து கொள்வதோடு கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைப்பார்கள். கடவுள் இதில் இரண்டாவது வகை.

    அப்படிப் பகிர்ந்து கொள்வதும் கோரிக்கை வைப்பதும்தான் பிரார்த்தனை. பிரார்த்தனையின் அடிப்படை இதுதான்.

    பிரார்த்தனை என்பது துன்பச் சுமையை இறக்கி வைப்பது

    பிரார்த்தனை என்பது வேண்டுவதைக் கேட்டுப் பெறுவது

    யாரிடமும் சொல்ல முடியாத துயரத்தை எங்கே போய்ச் சொல்வது? சுற்றியிருக்கும் நண்பர்கள் உறவினர்களிடம் சொன்னால், அதை அவர்களால் தீர்த்து வைக்க முடியாது என்பது மட்டுமல்ல. நம்மை ஏளனமாக வேறு பார்ப்பார்கள் என்ற அச்சம் தோன்றும் போது, நமது துயரத்தை எங்கே போய்ச் சொல்வது?

    இங்கேதான் கடவுள் வருகிறார். இங்கேதான் பிரார்த்தனை வருகிறது.

    சரி துயரத்தைச் சொல்லியாயிற்று. அதற்குத் தீர்வு?

    அவர்தான் எல்லாம் வல்லவராயிற்றே. தீர்த்து வைப்பார்.

    இங்கே நம்பிக்கை மிகவும் முக்கியம். எல்லா மதங்களும் கடவுளிடம் சந்தேகப்படக் கூடாது என்றே போதிக்கின்றன. பாஞ்சாலியைத் துச்சாதனன் துயிலுரிக்கும் போது, மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு கண்ணனை உதவிக்கு அழைத்த போது அவன் வரவில்லை. அவன் வருவான் என்ற நம்பிக்கையில் கைகளை உயரத் தூக்கி வணங்கிய போது மட்டுமே வந்தான் கண்ணன்.

    நம்பிக்கை வேண்டும். ஒரு சிறு சந்தேகம் கூட இல்லாத நம்பிக்கை.

    இந்தக் கதையின் மூலம் சொல்லப்படும் உண்மை இதுதான்.

    பிரார்த்தனை என்பது வேண்டுவதைக் கேட்டுப் பெறுவதுதான். ஆனால் வேண்டும் போது விசுவாசத்தோடு வேண்டிக் கேட்க வேண்டும் என்கிறது கிறிஸ்துவம்

    தன் மீதும், பிறர் மீதும், உலகின் மீதும், நம்பிக்கை இல்லாத போது, அல்லது நம்பிக்கை அற்றுப் போகும் போது, கடவுள் நம்பிக்கை மனித மனத்திற்கு தேவைப்படுகிறது

    நடக்குமா? நடக்காதா? என்ற அச்சத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கும் மனிதனால் அதை முழுமையாக சரியாக முடிக்க முடியாது. நடக்கும் என்ற நம்பிக்கையில் கிடைக்கும் ஆசுவாசம், அவனது மனதைச் சமநிலைப்படுத்தும். பதற்றம் தணியும். அமைதி நிலவும். அந்த நேரத்தில் பதறாமல் செய்யும் அவனது காரியம் சிதறாது.

    வருவது வரட்டும். சமாளிப்போம் என்று நினைக்கும் துணிவு எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. பெரும்பாலானவர்கள் அப்படி இருப்பதில்லை. அவர்களுக்கு கடவுளைத் தவிர வேறு கதி இல்லை.

    எனவே நடக்குமா நடக்காதா என்ற அச்சமில்லாமல், நடக்கும் என்ற நம்பிக்கையுடன் காரியத்தைத் தொடங்க அவர்களுக்கு கடவுள் தேவைப்படுகிறார்.

    கடவுள் நடத்தி வைப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஆசுவாசத்தைக் கொடுக்கிறது. பதற்றத்தைத் தணிக்கிறது. காரியத்தில் வெற்றி சித்திக்கிறது. ஒருவேளை அது நடக்காமல் போனாலும் இப்போது கடவுளுக்குச் சித்தமில்லை போல என்று ஆற்றுப்படுத்தவும் கடவுள் உதவுகிறது.   

    ஆக அடிப்படையில் பிரார்த்தனை என்பது கேட்டுப் பெறுவதுதான்.

    அதுமட்டுமல்லாமல் எல்லாம் வல்ல இறைவனை எல்லா வகையிலும் போற்றிப் புகழ்வதும் கூட. பிரார்த்தனைதான்.

    யாரிடமாவது ஒரு காரியம் ஆக வேண்டுமனால் நாம் என்ன செய்வோம்? அவரைப் புகழ்வது இயல்புதானே. இந்த இயல்புதான். கடவுளிடம் நடக்கும் பிரார்த்தனையிலும் வெளிப்படுகிறது.

    அப்படிப் புகழும் போது தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வதும் உண்டு.

    நாயேனை நானும் நல்லவனாக்க

    ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்

    என்ற பிரார்த்தனை அத்தகைய வகைதான்.

    புகழ்ச்சி மட்டுமல்ல. எதையேனும் உனக்கு நான் தருகிறேன் அதற்குப் பதில் நீ எனக்கு இதைத் தா என்று கேட்பதும் பிரார்த்தனைதான்.

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

    நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்

    கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே

    நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா என்று கேட்பது அந்த வகையைச் சேர்ந்தது.

    புகழ்தல், தருதல், வேண்டுதல் என்பது மட்டுமல்ல. இவை எதையுமே செய்யாமல் எல்லாம் நீயே என்னை ஆட்டுவிப்பவன் நீயே. எனக்கென்று கேட்பதற்கு எதுவுமில்லை. எல்லாவற்றையும் நீயே பார்த்துக் கொள்வாய் என்று முழுமையான சரணாகதி அடைவதும் பிரார்த்தனையே.

    அது பற்றி அடுத்துப் பார்ப்போம்.

    கடவுளின் பெயரால்…

    தொடரும்

  • கடவுளின் பெயரால்…

    மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு கடவுள்தான். அனைத்தையும் படைக்கும் கடவுள். அத்தனைக்கும் மேலான கடவுள். அவனால், அவளால் அல்லது அதுவால் முடியாதது எதுவுமே இல்லை. கடவுள் அவனா அவளா அதுவா?

    எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். கடவுள் அவருடைய சாயலில் மனிதனைப் படைத்தார் என்கிறது பைபிள். உண்மையில் மனிதன்தான் அவனது சாயலில் கடவுளைப் படைத்திருக்கிறான். அவனவன் அவனவன் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப வாழும் சூழலுக்கு ஏற்ப கடவுளைப் படைத்திருக்கிறான்.

    சைவ உணவு உண்பவர்கள் சைவக் கடவுளையும் அசைவ உணவு உண்பவர்கள் ஆடு கோழி பலி கேட்கும் கடவுளையும் படைத்திருக்கிறார்கள். இரு மனைவி கட்டிய கடவுள், கட்டிய மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத கடவுள் என்று ஆண் கடவுள்கள் இப்படிப் பெண்களின் துணையோடு வாழ, பெண் கடவுள்கள் தனித்து நிற்கின்றன. பிரம்மச்சாரிக் கடவுள்களும் உண்டு ஐயப்பனைப் போல.

    பெண்ணுக்கு கற்பு அவசியம் என்று கற்பிதம் செய்துள்ள ஆண்கள் இங்கே படைத்து வைத்திருக்கும் பெண் கடவுள்களும் கற்பரசிகளாகவே இருக்கின்றனர். ஆண் கடவுள்களுக்கு இருப்பதைப் போல ஒன்றுக்கு மேற்பட்ட இணையர்களோடு பெண் கடவுள்கள் இருப்பதில்லை. 

    இந்து மதம் இப்படிப் பற்பல கடவுள்களைப் படைத்து வைத்திருக்க, இஸ்லாம் ஒரே கடவுள் என்கிறது. அல்லா ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை என்கிறது. அவரும் உருவமற்றவர் என்கிறது.

    கிறிஸ்தவ மதமும் ஒரு கடவுளைத்தான் சொல்கிறது. அவரும் உருவமற்றவராகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் யேசு கிறிஸ்து பிரார்த்தனை அல்லது ஜெபம் செய்வது குறித்துச் சொல்கையில், அறையின் கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தி வைத்து விட்டு அந்தரத்தில் உள்ள பிதாவை ஜெபிக்குமாறுதான் கூறுகிறார். அந்தரத்தில் உள்ள பிதா என்பவர் உருவமற்றவர்தானே.

    பிறகு யேசுவே கடவுளாகவும், அவரது அன்னை மேரியும் கடவுளாகவும் உருவங்கள் வந்தன. 

    மனிதர்களின் உள்ளத்துக்குள்தான் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள் சிலர். உடலே கோவில் உள்ளமே தெய்வம் என்கிறார்கள். 

    சித்தர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்.
    நட்ட கல்லை தெய்வமென்று
    நாலு புஷ்பம் சார்த்தியே
    சுற்றி வந்து மொணமொணன்று
    சொல்லும் மந்திரம் ஏதடா?
    நட்ட கல்லும் பேசுமோ
    நாதன் உள்ளிருக்கையில்..

    என்ற சித்தர் பாடலில் அவர் சொல்ல வருவது இதுதான். கடவுள் உள்ளத்துக்குள் இருக்கையில், கற்சிலையாக இருக்கும் கடவுள் எப்படிப் பேசும்? என்று கேட்கிறார்.

    இப்படிக் கடவுள்கள் குறித்து ஆளுக்கொரு விதமாய் பகுதிக்கொரு விதமாய் பேசி வருவதைப் பார்த்தால் எதுதான் கடவுள்? என்று அலுப்பு மேலிடுகிறது.

    கடவுள் ஒரே இடத்தில் ஒரே மாதிரிப் பிறக்கவில்லை. அங்கங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்திருப்பவர் கடவுள். நேற்றும் இன்றும் என்றும் மாறாதிருப்பவர் கடவுள் என்று பல்வேறு விதமாக வரையறைப் படுத்தப்படும் கடவுள்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகக் கற்பிதம் செய்யப்படுகின்றனர்.

    கடவுள் எப்படி இருப்பார் என்பதில் குழப்பம் இருந்தாலும், அவர் எப்போது பிறந்திருப்பார் என்று நம்மால் அனுமானிக்க முடிகிறது. காட்டுமிராண்டியாக மனிதன் வாழ்ந்த காலத்தில், திடீரென்று வந்த காட்டாற்று வெள்ளமும், பற்றிப் படர்ந்த காட்டுத் தீயும் அவனை அச்சப்படுத்தியிருக்கும். பெய்த மழை அவனை ஆச்சரியப்படுத்தி இருக்கும். வீசிய காற்று அவனை அதிசயப்பட வைத்திருக்கும். நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது என்று அவனால் கண்டு கொள்ள முடிந்திருக்கும். அந்தச் சக்திக்கு அவன் கடவுள் என்று பெயர் வைத்திருக்கக் கூடும். 

    அப்போதிருந்து சர்வ வல்லமை படைத்தவர் கடவுள் என்ற கருத்தாக்கம் விடாப்பிடியாக மனித சமூகத்துடன் வந்து கொண்டே இருக்கிறது. அதில் விதவிதமான வியாக்கியானங்கள் சொல்லப்பட்டாலும், அதன் மூலப் பொருள் ஒன்றுதான். 

    "சர்வ வல்லமை படைத்தது கடவுள்"

    "அனைத்தையும் படைத்தது அவரே"

    கடவுள்தான் அனைத்தையும் படைத்தார் என்று நமது சிந்தனை முடிந்து போய் விட்டால், விஞ்ஞானம் வளருமா? கடவுள் விஞ்ஞான வளர்ச்சிக்குத் தடையாக இருக்க மாட்டாரா?  

    இரவைப் படைத்தது அவர்தான் என்ற முடிவுக்கு மனிதன் வந்திருந்தால், அந்த இரவை வெளிச்சமாக்கும் விளக்கை மனிதன் கண்டுபிடித்திருப்பானா? 

    மழை பொழிவது அவன் செயல். அதை மறிப்பது பாவம் என்று மனிதன் நினைத்திருந்தால் குடை வந்திருக்குமா? 

    புயலும் பூகம்பமும் நம்மை அழித்துப் போட கடவுள் செய்து வைத்த விதி என்று மனிதன் முடிவு செய்திருந்தால், அவற்றை முன்கூட்டியே அறியும் கருவிகளைக் கண்டுபிடித்திருப்பானா? 

    பறவைக்குப் பறக்கும் சக்தியைக் கொடுத்த கடவுள், மனிதனுக்கு அதைக் கொடுக்காமல் விட்டது ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான். அதை மீறி நாம் பறக்க ஆசைப்படுவது பாவம் என்று மனிதன் நினைத்திருந்தால் விமானமும் ராக்கெட்டும் வந்திருக்குமா? 

    எங்கோ ஒருவர் பேசுவதை ஆடுவதை பாடுவதை பேசுவதை வேறு ஒரு இடத்திலிருந்து பார்க்க கடவுளின் அருள் பெற்ற ஞான திருஷ்டி படைத்த ஒருவனால்தான் முடியும் என்பதை மனித குலம் நம்பிக் கொண்டிருந்திருந்திருந்தால், இன்றைய தொலைக்காட்சிகளும் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்குமா?

    உடல் உறுப்பு பழுதடைந்தால், அது கடவுளின் கட்டளை என்று மனிதன் நம்பி இருந்தால், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை விஞ்ஞானம் வளர்ந்திருக்குமா?

    இதுதான் இயற்கை விதி இதை மாற்ற முடியாது என்பதைத் தாண்டி, எப்படிப்பட்ட விதியானாலும் அதை மனிதனின் வசதிக்காக மாற்றிக் கொள்ள முடியும் எனும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. 

    இத்தனை விஞ்ஞானம் வளர்ந்ததற்குப் பிறகும் கடவுள் அவசியமா?
    அது அவசியமா இல்லையா என்பது இருக்கட்டும். இன்னும் நீடிக்கிறதே ஏன்?
    மனிதனுக்கு கடவுள் என்னதான் செய்கிறார்?
    கடவுளைப் பற்றி வெவ்வேறு விதவிதமான வியாக்யானங்கள் சொல்லப்படுகிறதே. 
    உண்மையில் எதுதான் கடவுள்?
    எப்படி இருந்தால் கடவுள்?
    கடவுளிடம் நாம் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மட்டும்தான் அவரது வேலையா?
    மனிதனின் மனத்தில் கடவுள் விளைவிக்கும் அற்புதங்கள் என்ன?

    இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண முயற்சிப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

    கடவுளின் பெயரால்… தொடரும்….