Category: பரிகாரங்கள்

பரிகாரங்கள்

  • பூஜை செய்வதில் குழப்பமா? முதலில் இதை படிங்க….

    பூஜை அறையில் நாம் செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.
    வீட்டில் பூஜை செய்யும் போது சிலருக்குப் பல குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்? எந்த பழம் எந்த தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எந்தப் பூ கொண்டு ஸ்வாமிக்கு அர்ச்சனைச் செய்வது எனப் பல சந்தேகங்கள் ஏற்படும்.
    வெற்றிலைக்கு நுணியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும்.
    அவல்பொறி, கடலை மற்றும் கல்கண்டு நிவேதனமாகப் படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்து தான் கடவுளுக்குப் படைக்க வேண்டும். மேலும், நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இளந்தை, விளாம்பழம், புளியம்பழம், மாம்பழம் ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையாகும்.
    வாழையில் நாட்டுப்பழம் நல்லது. குடுமி தேங்காயை சீறாக உடைத்து பிறகு குடுமியைப் பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் இருந்தால், அதனை மாற்றி வேறு தேங்காயை உடைக்கலாம். கோணலான, வழுக்கையான தேங்காய் இருக்கக் கூடாது. வழிப்பாட்டிற்கு முன்பாக சாம்பிராணி புகை போடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல் கொண்டது.
    கோலமிட்டு, விக்ரகங்களைச் சரியாக அமைத்துக்கொண்டு, விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி அர்ச்சனை செய்து அதன்பின் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.
    விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளுக்கு அர்ச்சதையால் பூஜிப்பதும் தவறு. சிவபெருமானுக்கு தாழம் பூ ஆகாது. திருமகளுக்கு தும்பை பூ ஆகாது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உகந்தது அல்ல. வில்வம், கொன்றை, தும்பை, வெள்ளேருக்கு, ஊமத்தை சிவனுக்கு உரியது. காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளி பூக்கள் உகந்தவை.
    அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ, ரோஜா, பன்னீர் ரோஜா, சங்குப்பூ, தாமரை, மரிகொழுந்து, சம்பங்கி, துளசி, விரிச்சிப்பூ ஆகியவை பூஜைக்கான மலர்கள் என்று ஆன்றோர்களால் கூறப்படுகிறது.
    சாமந்தி போன்ற மனமில்லாத மலர்கள் பூஜைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால், அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம். அர்ச்சிக்கும் போது முழு மலரால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும். காய்ந்துபோன மற்றும் அழுகிப்போன, வாடிப்போன, பூச்சி கடித்த பூக்களைப் பயன்படுத்த தெய்வ குற்றமாகும். இவையே பூஜை அறையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஆகும்.

  • பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களின் குணங்கள்

    வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள். இவற்றை வைத்து இறைவனை பூஜை செய்தால் முக்தி கிடைக்கும். சிவப்பு வர்ணப் பூக்கள் இராஜச குணம் கொண்ட பூக்கள். இவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தால் இகலோக இன்பங்களைத்தரும். பொன்மயமான மஞ்சள் வண்ணப் பூக்கள் கொண்டு பூஜை செய்து வந்தால் போகத்தையும், மோட்சத்தையும் தரும். மேலும் எல்லாக் காரியங்களிலும் சித்தி அடைய அவை உதவும். நம் பரம்பரை விருத்தி அடைய வைக்கும்.
    கறுப்பு நிறம் கொண்ட பூக்கள் தாமச குணம் கொண்டவை. ஆகவே பொதுவாக இவற்றை உபயோகித்து பூஜை செய்வது கூடாது. எல்லா நிறங்களையும் உடைய பூக்களை பூஜைக்கு உபயோகிக்கலாம். இவ்வாறு செய்வது உத்தமமான பூஜை.

  • சபரிமலை ஐயப்பனுக்கு ஆராட்டு

    சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மார்ச் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக் கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறும். எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில், பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, கடந்த 14-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டு தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை-வழிபாடுகள் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற பங்குனி மாத பூஜை நேற்றுடன் நிறைவு பெற்றது. இரவு அத்தாழ பூஜைக்குப் பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 20 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. மார்ச் 21 ஆம் தேதி முதல் திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கோவில் முற்றத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் திருவிழா கொடியினை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைப்பார். திருவிழா நாட்களில் தினமும் மதியம் உத்சவ பலி சிறப்பு பூஜை நடைபெறும். விழாவையொட்டி, சன்னிதானம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு 29-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 30-ந் தேதி பம்பை ஆற்றில் பகல் 11 மணிக்கு ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். ஆராட்டு நிறைவு பெற்று மீண்டும் மேளதாளம் முழங்க புத்தாடை உடுத்தி, யானை மீது வைத்து சாமி விக்ரகம் சன்னிதானத்திற்கு பவனியாக கொண்டு வரப்படும் ஐயப்ப சாமி விக்ரகத்திற்கு சன்னிதானத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் விழா நிறைவு பெறுகிறது.

  • தெய்வங்களுக்கு ஆகாத மலர்கள்

    அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை. செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசரம், குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை. அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்குக் கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.
    விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.
    துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துவது நல்லது. ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது. வில்வம் துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
    சம்பகமொட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை. துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.
    கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதுபோலவே தாழம்பூவை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். பகல் காலங்களில் விலக்க வேண்டும். குருக்கத்தி, ஆனந்ததிகா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை.
    விலக்கப்பட்ட பூக்களை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

  • மகாலட்சுமி மிக விரும்பித் தங்கும் தாமரை மலர்…

    பூக்களுள் சிறந்தது தாமரைப்பூவே. இதனை பூவுக்குத் தாமரையே, பொன்னுக்கு சாம்புநதம் என்கிறது ஒரு பழம்பாடல். வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான். தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ. இதைப்போலவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்கப்பூ. பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாபங்கள் அகலும். முருகப்பெருமானுக்கு பிடித்தமான மலர் கடம்பமலர். கடம்பமலர், காண்டள் பூக்கள், குறிஞ்சிப்பூ, செவ்வலரி ஆகிய பூக்கள் வேலனுக்கு மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

  • சமயபுரம் அம்பாளின் பச்சைப் பட்டினி விரதம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பச்சசைப் பட்டினி விரதம் தொடங்கி உள்ளது. பூச்சொரிதல் தொடங்கியவுடன் அம்பாள் உலக நன்மைக்காக பச்சைப் பட்டினி விரதத்தை தொடங்குவதாக ஐதீகம். அதன்படி அம்மன் விரதத்தைத் தொடங்கினார். இந்த விரதம் 28 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் வழக்கமான நைவேத்தியத்திற்குப் பதிலாக உப்பில்லாத தயிர்சாதம், வெள்ளரிப் பிஞ்சு, தூள் மாவு, பழங்கள், ஊற வைத்த பாசி பருப்பு போன்றவை படைக்கப்படுகின்றன. அம்மனின் பக்தர்களும் அம்மனைப் போல பச்சை பட்டினி விரதத்தைத் தொடங்கினர். விரத நாட்களில் பக்தர்கள் மஞ்சளாடை உடுத்தி, விரத உணவை உண்பர். இந்த விரதம் பங்குனி மாத கடைசி வார ஞாயிற்றுக்கிழமை வரை உள்ள 28 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற தேவஸ்தான புஷ்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாகவும், பல்வேறு வாகனங்களிலும் வந்து கூடை கூடையாக பூ கொண்டு வந்து அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை, கோயில் பணியாளர்கள் செய்தனர். அடுத்தடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் 2-ஆவது வார, 3-ஆவது வார, 4-ஆவது வார பூச்சொரிதல் விழாக்கள் நடைபெற உள்ளன. சித்திரை மாதம் முதல் வார செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

  • பங்குனி உத்திரத்தன்று காவடி எடுப்பதின் மகிமை

    முருகக் கடவுளின் விழாக்களில் பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். முருக பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராண கதைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
    சிவன்-பார்வதி திருமணத்தின் போது, அவர்களது வைபோகத்தை காண தேவர்களும் முனிவர்களும் கயிலைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதன் காரணமாக வடக்கு திசை தாழ்ந்தும், தென் திசை உயர்ந்தும் காணப்பட்டது. பூமியை சரி செய்யும் பொருட்டு சிவபெருமான், அகத்திய முனிவரை தென் திசைக்கு அனுப்பி வைத்தார். அங்கு பொதிய மலையில் தங்கிய அகத்திய முனிவர் தாம் வழிபட சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களைக் கொண்டு வருமாறு தன் சீடனாகிய இடும்பாசுரனிடம் கட்டளையிட்டார்.
    இடும்பாசுரன் மிகப்பெரிய பக்திமான். தன் குருவான அகத்தியர் இட்ட கட்டளையை நிறைவேற்ற தன் மனைவி இடும்பியுடன் கயிலை சென்று முருகப்பெருமானுக்கு உரிய கந்தமலையில் உள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு குன்றுகளையும் பெயர்த்தெடுத்து ஒரு பெரிய பிரமதண்டத்தின் இரு புறங்களிலும் காவடியாகக் கட்டினான். அதனை தனது தோளின் மீது வைத்துக் கொண்டு பொதிய மலைக்குத் திரும்பி வரும்வழியில் திருவாவினன்குடிக்கு மேலே ஆகாயத்தில் பறந்தபோது முருகப்பெருமான் அவ்விரு மலைகளையும் அங்கேயே இறங்குமாறு செய்து அவ்விடத்திலேயே நிலைபெறச்செய்துவிட்டார்.
    தன்னை யறியாமல் தரையில் இறங்கிய இடும்பன் எவ்வளவு முயற்சித்தும் பிரமதண்டத்தின் ஓரங்களில் கட்டிய மலைகளை அசைக்க கூட முடியாததை எண்ணி திகைத்துப்போனார். அப்போது சிவகிரி குன்றின் மீது கோவணத்துடன் அழகிய சிறுவன் வடிவில் நின்று நகைத்துக் கொண்டிருந்ததை இடும்பன் கண்டுள்ளார்.
    அச்சிறுவனால்தான் மலையை அசைக்கக்கூட முடியவில்லை எனக்கருதிய இடும்பாசுரன் அச்சிறுவனை மலையிலிருந்து இறங்கும்படி அதட்டினான். சிறுவனோ மலை தனக்கே சொந்தம் என வாதிட்டான். சினம் கொண்ட இடும்பாசுரன் சிறுவனை தாக்க முயன்றான். தாக்க வந்த இடும்பன் வேரற்ற மரம் போல் சாய்ந்துவிட அவன் மனைவி இடும்பி கணவனை காப்பாற்ற சிறுவனை வேண்டினாள்.
    தன் தவ வலிமையால் நிகழ்ந்தவற்றை அறிந்த அகத்தியர் முருகப்பெருமானை வணங்கினார். அக்கணமே இடும்பாசுரனும் உயிர்பெற்று எழுந்து முருகப்பெருமானின் திருவிளையாடல் அறிந்து மூவரும் முருகப்பெருமானை வணங்கி பக்தி யோடு துதித்தனர். குரு பக்தியை மெச்சிய முருகப் பெருமான் இடும்பனை பழனி தலத்தின் காவல் தெய்வமாக இருக்கும்படி பேரருள் செய்தார்.
    இரு குன்றினையும் காவடிபோல் தூக்கி வந்த இடும்பாசுரன் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றதுபோல் இன்றும் பக்தர்கள் காவடி தூக்கிச்சென்று முருகப்பெருமானின் பேரருளைப் பெறுகின்றனர். இளவரசனாக முருகன் இடும்பனுக்குக் காட்சியளித்ததால் இன்றும் பழனி முருகனுக்கு செய்யப்படும் ராஜ அலங்காரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

  • திருமண வரம் தரும் மாங்காடு காமாட்சியம்மன்

    சென்னை பூந்தமல்லிக்கு அருகே கரையான்சாவடியை அடுத்துள்ளது மாங்காடு. புராணங்களில் சூதவனம் என வழங்கப்பட்ட தலம்தான் இப்போதைய மாங்காடு. இக்கோயிலின் தல விருட்சம் மாமரம். இது 3000 வருடங்கள் பழமையானதாம்.
    விளையாட்டாக ஈசனின் கண்களை மூடியதால் ஈசனால் சாபம் பெற்ற உமையன்னை தவம் செய்த இடம் இது. தவத்தின் முடிவில் ஈசனின் ஆணையால் காமாட்சி காஞ்சிபுரம் சென்றுவிட அன்னை வளர்த்த அக்னியால் இப்பகுதியே தகிக்க, அதைத் தணிக்க, ஆதிசங்கரர் இங்கே அர்த்தமேருவை பிரதிஷ்டை செய்தார். அஷ்டகந்தங்களால் ஆன அர்த்தமேருவிற்கு அர்ச்சனையும் காமாட்சிக்கு அபிஷேகங்களும் நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பு. அர்த்த மேருவிற்கு சந்தனம், புனுகு சாத்தி குங்குமம் இடப்படுகிறது. விஜயதசமியன்று எட்டுவித மூலிகைகளால் ஆன அஷ்டகந்தமும், அதன்மேல் தங்கக் கவசமும் சாத்தப்படுகின்றன. இங்குள்ள அர்த்தமேரு பிரமாண்டமானது. கூர்ம உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் படிக்கட்டுகள் கட்டி 16 இதழ் தாமரையுடன் விளங்குகிறது.
    தவம் செய்யும் நிலையில் இங்கிருந்து காஞ்சி சென்ற தபஸ்காமாட்சியை இன்றும் காஞ்சி காமாட்சியின் கருவறையில் தரிசிக்கலாம். கருவறையில் பேரழகுப் பெட்டகமாய் காமாட்சி தேவி கையில் கிளி ஏந்தி, தலையில் சந்திர கலையோடு தரிசனமளிக்கிறாள். அர்த்த மண்டபத்தில் பஞ்சாக்னியில் நின்று ஒற்றைக்காலில் தவம் புரியும் நிலையில் காமாட்சியை தரிசிக்கலாம். ஆறு வாரங்கள் இந்த அன்னையைப் பாடி வழிபட, ஒரு வாரத்துக்கு ஒன்று வீதம் ஆறு பாடல்கள் உண்டு. வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் ஒரு எலுமிச்சம்பழத்துடன் வந்து காமாட்சியை தரிசித்து அடுத்து ஆறு வாரங்களில் அதே நாளில் தொடர்ந்து வழிபட, நினைத்தது நிறைவேறுகிறது. முதல் வாரம் ஆலயத்திலிருந்து பெற்ற எலுமிச்சம் கனியை, இரண்டாவது வாரம் அன்னையிடம் சமர்ப்பித்து புது எலுமிச்சம் பழத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்க வேண்டும் என்பது இங்கே வழிபாட்டு மரபு.
    திருமணமாகாத காளையரும், கன்னியரும் இத்தல மரத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டி நேர்ந்து கொண்டால் அவர்களுக்கு உடனே திருமண வரம் கிட்டுகிறது.
    கருவறை காமாட்சி, ஸ்ரீசக்ரம், தபஸ் காமாட்சி தவிர கருவறையில் உள்ள காமாட்சி விளக்கும் இத்தலத்தில் காமாட்சியாகவே வழிபடப்படுவதால், இத்தலத்தில் நான்கு காமாட்சிகளை தரிசிக்கும் நிறைவு உண்டு. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தேவியின் முன் உள்ள அர்த்தமேருவிற்கு புடவை சார்த்தியும், எலுமிச்சம்பழ மாலை அணிவித்தும் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர். காமாட்சியின் திருமணத்திற்கு சீராக, கணையாழியைக் கொண்டு வந்த வைகுண்ட பெருமாளும் இந்த ஆலயத்தின் அருகில் கோயில் கொண்டிருக்கிறார். வாமன மூர்த்தியால் கண்ணை இழந்த சுக்கிரனுக்கு அருள்புரிந்த வெள்ளீஸ்வரரும் இத்தலத்தின் அருகே அருள்கிறார். காமாட்சி ஆலயப் பணி எதற்காவது குறிப்பிட்ட தொகை அல்லது பொருள் தேவையானால், அது அப்படியே அந்த வார உண்டியலில் வந்து சேர்ந்துவிடுவது காமாட்சியின் அற்புதம்தான்.

  • முருகனுக்கு உகந்த விரதங்கள்!

    வெள்ளிக்கிழமை, கார்த்திகை, வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டி ஆகியவை முருகனுக்கு உரிய முக்கிய விரதங்கள் ஆகும்.
    கார்த்திகை விரதத்தின் சிறப்பைச் சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருளினார். கார்த்திகைப் பெண்கள் குமரக்கடவுளை வளர்த்த காரணத்தால், அவர்களுடைய நாளான கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து, குமரப்பெருமானை வழிபடுவோர் கல்வி, செல்வம், ஆயுள், தர்மபத்தினி, நன்மக்கள், நிலபுலம் யாவும் பெற்று வாழ்வார்கள் என்று சிவபெருமான் அருள்புரிந்தார்.
    கார்த்திகை மாதம் பரணி நாளில் விரதம் தொடங்கி, வழிபாடு செய்து, அடுத்த நாள் கார்த்திகையில் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்து, அடுத்த நாள் ரோகிணி காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்து அடியார்களோடு கூடி உண்ண வேண்டும். பின்னர் மாதந்தோறும் கார்த்திகையில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
    நாரதர், சப்தரிஷிகளிலும் மேன்மையுற விரும்பி, அதற்கான விரதத்தை அருளுமாறு விநாயக்கடவுளை வேண்டிக் கொண்டார். அவர் அருளியவாறு, பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து மேன்மை அடைந்தார்.
    வெள்ளிக்கிழமை விரதம்:
    வெள்ளிக்கிழமை விரதம், ஐப்பசி மாதம் முதல் சுக்கிர வாரத்தில் தொடங்கி, முறைப்படி விரதம் அனுஷ்டித்து, பின்னர் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை விரதத்தின் சிறப்பை வசிஷ்ட முனிவர், முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு எடுத்துக் கூறினார். அவர் அனுஷ்டித்து மேன்மையுற்றார்.
    பகீரதன் என்னும் மன்னன் வெள்ளிக்கிழமை விரதம் மேற்கொண்டு, கோரன் என்னும் அரக்கனை வென்று இழந்த தன்னுடைய அரசு உரிமையை மீண்டும் பெற்றுப் புகழ் பெற்றான்.
    கந்த சஷ்டி விரதம் :
    கந்தசஷ்டி என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கில் பட்சத்தில் வரும். பிரதமை நாளில் தொடங்கி, சஷ்டி வரை ஆறு நாட்கள் முறைப்படி விரதம் இருக்க வேண்டும். அந்த நாட்களில் காலையில் நீராடி, வழிபாடு வீட்டிலும் கோயிலிலும் செய்து, முருகன் சரிதத்தைக் கேட்டு அல்லது படித்து, முருகன் நாமத்தை ஜெபித்து, ஏழாம் நாள் காலையில் வழக்கப்படி வழிபாடு செய்து, விரதத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி விரதம் இருக்கலாம். சஷ்டி விரதம் இருப்பவர்களின் வினைகள் அகலும், எண்ணிய காரியங்கள் நிறைவேறி, புண்ணியமும் கிடைக்கும்.
    கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்த முசுகுந்தச் சக்கரவர்த்தி எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்புடையவரானார்.
    குமார சஷ்டி விரதம் :
    ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும். கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் ‘சுப்பிரமணிய சஷ்டி’ என்றும், ‘அனந்த சுப்பிரமணிய பூஜை’ என்றும் கூறுவர்.
    அனந்த சுப்பிரமணிய பூஜை:
    ‘சுப்புராயன்’ என்ற பெயர் முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம். திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் அனந்த (நாக) சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும். முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம். அல்லது, இணைந்த இரு பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்த முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும் விலகும். இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும் நம்புகின்றனர்.

  • விரதங்களும், பலன்களும்…

    மாதத்தின் 12 மாதங்களும் முக்கிய தினங்களில் விரதங்கள் இருக்கலாம். அதில் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த விரதங்கள் இருந்தால் பலன் கிடைக்கும் என்ற நெறிமுறை உண்டு. அதன்படி விரதம் இருப்பது நல்லது.

    விரதங்கள்-சித்திரை

    1.வளர்பிறை சப்தமிதிதி- வாழ்வில் வளம்.
    2.பௌர்ணமி-சிவன்- லட்சுமி கடாட்சம், சகல சௌக்யம்.
    3.பௌர்ணமி- சித்திரகுப்தர்-ஆயுள் பலம், புண்ணிய பலம்.
    4.சுக்கிலபட்சத்து சுக்ரவாரம் -வெள்ளி-பார்வதிதேவி -சர்க்கரை நிவேதனம் -இனியவாழ்வு அமைய.
    5.பரணி நட்சத்திரம்-பைரவமூர்த்தி -தயிர்சாதம் நிவேதனம் -எதிரி பயம் போகும். தடைகள் விலகும்.
    6.மூல நட்சத்திரம்-மகாலட்சுமி+நாராயணன் இஷ்டசித்திகள் -விஷ்னுலோகம் அடைய.
    7.சுக்லபட்ச திரிதியை-உமா-மகேஸ்வரர்-தானம் செய்தல்-சிறப்பான வாழ்க்கை,சிவலோகம் அடைய.

    விரதங்கள்-வைகாசி

    1.பௌர்ணமி-சிவன்-சிவனருள்.
    2.விருஷப-ரிஷபவாகனத்தில் இருக்கும் உமாமகேஸ்வரர்-நீண்ட ஆயுள்,பொருள்,தானியம்,கல்வி,வாகன யோகம்.
    3.விசாகம்-முருகன்-முருகன் அருள்,மழலைச் செல்வம்.

    விரதங்கள்-ஆனி

    1.வளர்பிறை சப்தமி திதி-துர்க்கந்தநாசன விரதம்-சருமநோய்கள் நீங்கும்.
    2.ரம்பா த்ரிதியை-த்ரிதியை-விரதம்,சிவன் வழிபாடு-அரம்பையர்கள் வாழ்த்து,அழகு,செல்வம் நிறைந்து வாழ.
    3.பௌர்ணமி-சிவன்-எண்ணியவை கைகூடும்

    விரதங்கள்-ஆடி

    1.வளர்பிறை சப்தமி திதி-அபய சப்தமி விரதம்-சூரிய உலகில் இடம்.
    2.பௌர்ணமி-சிவன்-பகை விலகும்-வரலட்சுமி-செல்வம்சேரவும்,மங்களங்கள் பெருகவும்.

    விரதங்கள்-ஆவணி

    1.வளர்பிறை சப்தமி திதி-சகல பாக்யம் கிட்டும்.
    2.பௌர்ணமி-சிவன்-வேண்டியவை கிட்டும்.

    விரதங்கள்-புரட்டாசி

    1.ஜேஷ்டா-சுக்லபட்ச அஷ்டமி-சிவன்,விநாயகர் பூஜை-சந்ததி சிறப்பாக வளர.
    2.மகாலட்சுமி-துவாதசிமுதல்16 நாட்கள்-லட்சுமி பூஜை-சகல நலமும் வளமும் பெற.
    3.தசாவதார-சுக்லதசமியன்று.
    4.கதளி,கௌரி-சுக்லபட்ச சதுர்த்தசி-உமாமகேஸ்வர பூஜை-இஷ்ட சித்தி.
    5.அந்தந்த-பூர்வபட்ச சதுர்தசி-விஷ்னு பூஜை-காரியம் ஈடேற.
    6.பிரதமை/நவராத்திரி பிரதமை -சுக்லபட்ச பிரதமை (அஸ்த நட்சத்திரம் கூடினால் சிறப்பு) -ஓன்பது நாள் தேவி பூஜை-தீயசக்திகாளின் தாக்கம் விலக.
    7.ஷஷ்டி-சுக்லபட்ச ஷஷ்டி-பரமேஸ்வரி பூஜை-அம்பிகையின் அருளாசி.
    8.வளர்பிறை சப்தமி திதி-அனந்தசப்தமி-கண்ணொளி பிரகாசிக்கும்.
    9.பௌர்ணமி-சிவன்-பெருட்செல்வம் பெருகும்.
    10.அமுக்தா-சுக்லபட்ச சப்தமி-உமாமகேஸ்வரர்-புத்ர,பௌத்ர விருத்தி.