Category: பரிகாரங்கள்

பரிகாரங்கள்

  • குலதெய்வங்கள் என்றால் என்ன…?

    நமது குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

    குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தி அளவிடமுடியாதது ..!
    எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் “குலதெய்வங்கள்” என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளையும் கூட நீக்க வல்லவை.

    இன்று நம் அவசர வாழ்க்கையில் , இரண்டு தலைமுறை பாட்டன், பாட்டியின் பெயர்களுக்கு மேல் நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது .
    நம் முன்னோர்கள்…
    அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை. இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

    இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்..! இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே..! நாம் அங்கே போய் நின்று , அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

    இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம் தெரியுமா ..!
    விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே ..! ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரோமோசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் நாம் அறிவோம்.

    இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தந்தையின் குரோமோசோம் தான் முடிவு செய்கிறது. பெண்ணுக்கு xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. ஆணுக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. பெண்ணின் x உடன் ஆணின் y சேர்ந்தால் ஆண் குழந்தையும் ; இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது…

    வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு, தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்..!
    பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்..!

    பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை… ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஏற்கனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடையக் கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது…

    பெண்களுக்கு, பிறந்த வீட்டில் ஒன்று ; புகுந்த வீட்டில் ஒன்று என இரண்டு தெய்வங்கள். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது… அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். இதுவரை பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் யாரேனும் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

    எல்லாம் சரி , ஆனால் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் என்ன செய்வது ..?

    குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பு. மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலம் எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

    ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும். இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

    ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிகமிக அவசியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

    எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி செல்லுங்கள் ..! (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள் ..! அக்கோவிலுக்கு உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..!!!

  • மனநோய்கள் தீர்க்கும் திருமுருகன் பூண்டி…

    நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார கோயில்கள் உள்ளன. அதில் கோவை மாவட்டத்தில் உள்ள திருமுருகன் பூண்டியும் ஒன்று.
    கோவை மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது திருமுருகன் பூண்டி. சிறப்பு வாய்ந்த முருகன் கோவில் இது. பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும்.

    இக்கோவிலில் மட்டும், முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்கள் அமைந்துள்ளன. ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம் என அழைக்கப்படுகிறது.
    இம்முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுவாமி அமர்ந்திருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.
    மேலும், திருச்செந்தூரில், வதம் செய்துவிட்டு, செந்தில் வேலவன் திருமுருகன்பூண்டிக்கு வந்து விட்டதால், திருச்செந்தூர் கோவில் மூல ஸ்தானத்துக்கான மூலவர், இங்கு அமைந்துள்ளதாகவும் வரலாறு உள்ளது.

    வள்ளி, தெய்வானையுடன் ஒரே சன்னதியில் அமைந்துள்ளதும், முருகன் பிடித்த லிங்கமும் சுப்ரமணியர் கருவறையில் உள்ளது.

    மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, தீர்த்தங்களில் தினமும் குளித்து, 48 மண்டலங்கள் வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால் போதும் மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மருந்து தேவையில்லை சுவாமி தரிசனமும், பிரசாதமும் மட்டுமே மருந்து என நம்பப்படுகிறது.

  • வரம் தரும் வயலூர் முருகன்

    குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம். அப்படி ஒரு குன்றுமீதுதான் ஏற இருக்கிறோம் என்ற எதிர்பார்ப்போடு எங்களின் வயலூர் பயணம் இருந்தது. திருச்சியில் இருந்து மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது வயலூர். அந்த ஊருக்கு இட்டுச் செல்லும் பாதையும் வயல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. நெல்லும், வாழையும், தென்னையுமாக செழித்து நிற்கிறது ஊர்.. நாங்கள் காரில் சென்று கொண்டிருந்தோம். போகப் போக…. பசுமை கண்களை குளிர்வித்துக்கொண்டே வந்தது. ரசித்துக்கொண்டே சென்றபோது …என்ன இன்னும் எந்த குன்றையும் காணவில்லையே தப்பான வழியில் போகிறோமோ என்று சந்தேகம் வேறு.. இதோ வந்தேவிட்டது வயலூர்..

    வழக்கமாக குன்றின்மேல் குடியிருக்கும் முருகன் இங்கு குன்றில்லாத சமவெளியில் குடியிருக்கிறான். அழகான ஆலயம். 

    இனி கோயிலை பற்றி…

     

    இந்த திருத்தலத்தின்பெருமை ஞானம் விளையும் திருத்தலம் என்பது.  ஆ என்ற காமதேனுவும், சோமன் வழிபட்ட சோமரசம்பேட்டையும் சூழ இருக்கிறது வயலூர். இங்கு கந்தன் தனது வேலால் குத்தி ஒரு திருக்குளத்தை உருவாக்கி தந்தையாகிய சிவபெருமானை வழிபட்டதாக கூறுகிறது புராணம்.  அக்னித்தீர்த்தம் என்று அழைக்கப்படும் அந்த தீர்த்தம் அக்னித்தேவனும் வழிபட்டதால் ஆலயத்தின் சிவபெருமான் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவி முன்னிலை நாயகி என்று அழைக்கப்படுகிறார்.

    உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது.. வேட்டைக்குச்சென்ற சோழ மன்னன் தாகத்தோடு ஓரிடத்தில் அமர, அங்கு 3 கிளைகளுடன் காட்சி தந்ததாம் ஒரு கரும்பு. அதனை ஒடித்தபோது ஒரு கரும்பில் இருந்து ரத்தம் கொட்ட பதறிப்போனான் மன்னன். உடனடியாக அந்த இடத்தைத் தோண்ட அங்கு லிங்க ரூபத்தில் எழுந்தருளினார் சிவபெருமான். அவருக்கு கோயில் கட்ட நினைத்த மன்னனின் ஆசை ஈடேறவில்லை. அதன் பின்னர் சிறு கோயிலாக எழுந்தது இந்த ஆலயம்..

    ‘அருளில் சீர் பொய்யாத கணபதி

    திருவக் கீசன் வாழும் வயலியில்

    அழகு கோயில் மீதில் மருவிய பெருமானே ’

    இந்த பாடலின் அழகும் அருணகிரி நாதரின் வாக்கும் இனிமையே இங்குள்ள முருகனைப்போல. வயலூரின் சிறப்பே, அருணகிரிநாதருக்கு முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். சும்மா இரு. சொல்லற என்று சொல்லி, வா என் புகழ் பாடு என அருள் சுரந்து அருணகிரிநாதருக்கு முன்மொழிந்து தந்த இடம் வயலூர் என்கிறது இந்த கோயிலின் தல வரலாறு. அவர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர்.

    அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7 ஆவது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.

    தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறான் இந்த வயலூர் முருகன்.  அதனால் கோயிலுக்குள் சென்றதும் நாம் எதிர்கொள்வது சிவ சொரூபமே.

    .பிள்ளையாரப்பாவுக்கு இல்லாத முதல் வணக்கமா? இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி பொய்யாக்கணபதியாக பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சந்நிதிக்கு அருகே அருணகிரி நாதருக்கு பீடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    எதிர்புறம் கல்லால மரத்தடியில் தட்சிணாமூர்த்தியின் தவக்கோலக்காட்சி. பொய்யாக்கணபதி சந்நிதியை அடுத்து முத்துகுமார சாமி. மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகனைக்காண கண் கோடி போதுமோ? இந்த ஜென்மம்தான் தீருமோ?

    அடுத்து முத்துகுமார சுவாமியை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாக காட்சியளிக்கிறார். வடபுற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். வயலூர் முருகனை தரிசிப்பவருக்கு எனது அருள் கண்டிப்பாக உண்டு என்பதுபோல காட்சி தருகிறாள் மகாலட்சுமி..

    கோயிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை இடும்பன் கோயில் என்றும், கிராம தேவதைக்கோவில் என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோயிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது.

    வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்கு சான்று. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.

    தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் இந்த கோயிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள்.

    திருமண பரிகார தலமாகவும் வயலூர் இருக்கிறது. வரம் தருவான் வயலூரான் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவும், பெரும்பாலான நேரங்களில் நிஜமாகவும் இருக்கிறது. இந்த கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா, சஷ்டி விழா என  வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.

    இந்த கோயிலுக்கும், கிருபானந்த வாரியருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்த கோயில் கோபுரம் அமைக்க வாரியார் நிதி திரட்ட பெரும் முயற்சி செய்தார். இதனால் கோயில் அறக்கட்டளைக்குழுவில் கிருபானந்தவாரியார் இருந்தார்.

    கடன்தொல்லையோ, பிள்ளைகளுக்கான வேண்டுதல்களோ, திருமண பரிகாரங்களோ எதுவானாலும் வந்தவர்களின் மனம் குளிர வைக்கிறான் இந்த வயலூர் முருகன். வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கும் இந்த வடிவேலனை, வயலூர் நாயகனை கண்குளிர பார்த்துவிட்டு வந்தவர்களின் மனங்களையும் இவர் ஆட்சிகொண்டு விடுகிறான். அந்த அனுபவம் பெற்றது பெரும் பேறு.