Category: பரிகாரங்கள்

பரிகாரங்கள்

  • அம்மனுக்கு வளையல் அணிவித்தால்

    பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா?

    ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார்.

    இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.

    அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். “நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்.” என்றாள் அம்பாள்.

    தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள்.

    அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள். வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள்.

    அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிக்ஷங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும்.

  • தேவியை ஆராதிப்பவன் குபேரன் ஆவார்

    நறுமணமுள்ள பலவகை மலர்களால் தேவியை பூஜிப்பவர் கைலாய வாசம் அடைவர்.

    வில்வ இலைகளால் தேவியை பூஜிப்பவர் இம்மையிலும் மறுமையிலும் சுகமாக வாழ்வர்.

    ரத்தின ஆபரணங்களைச் சமர்ப்பித்து ஆராதிப்பவன் குபேரன் ஆவார்.

    பால் அபிஷேகம் செய்பவர் ஒரு கல்ப காலத்திற்கு பாற்கடலில் வாழ்வர்.

    பட்டு ஆடைகளை சமர்ப்பிப்பவர் வாயு உலகில் வசிப்பர்.

    லட்சுமி, சரஸ்வதி தேவிக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் செய்தால் நித்தியத்துவம் கிடைக்கும்.

    திராட்சைச்சாறு கொண்டு மகேஸ்வரிக்குப் பூஜை செய்தால், தேவியின் உலகில் தன் குடும்பத்துடன் வாழ்வர்.

    கற்பூரம், அகில், கஸ்தூரி, குங்குமப்பூ, சந்தனத்தை தேவிக்கு அபிஷேகம் செய்தால் பல பிறவிகளில் செய்த பாவம் தொலையும்.

  • சகல செல்வங்களும் தரும் ஆடி கிருத்திகை….

    எல்லா மாதத்திலும் கிருத்திகை வந்தாலும் ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. ஆடி கிருத்திகை தினத்தன்று விரதம் இருந்து, ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

    கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

    அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும். மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலையில் நதிநீராடி திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள் முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம் தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும்.

    இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்ன தானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.

    ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதா மாதம் வரும் கார்த்திகை மாதக் கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.

    கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்.

    அது போல ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. ஆடி கிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.

  • கடன் தொல்லை தீர எளிய பரிகாரம்!

    கடன் தொல்லை தீர பரிகார முறைகளாக முன்னோர்கள் வீடு கட்டும் பொழுது, நிலை வாசலில் மற்றும் கிணறு தோண்டும் சமயம் மற்றும் வேறு சில சூட்சுமமான இடங்களில் ஓட்டை காலணா, வசதி உள்ளோர் வெள்ளி நாணயம், அரச குலத்தோர் தங்க நாணயம் போன்றவை அவ்விடம் புதைத்து வைப்பது வழக்கம். இவை அந்த இடம்/மனை பல காலங்கள் செல்வ செழிப்புடன் இருக்க உதவும் ஒன்று. தற்காலங்களில் இவை காணப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, அதே வீரிய சக்தியை கொண்ட மற்றும் அனைவரும் எளிதாக செய்ய கூடிய ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.20 முதல் 2 மணிக்குள், ஆறு ஒரு ருபாய் பழைய நாணயத்தை வலது கையில் எடுத்து கொண்டு வீட்டின் அல்லது அலுவலகத்தின் / தொழில் செய்யும் இடத்தின் வடகிழக்கு மூலை சென்று வடகிழக்கை நோக்கியவாறு அமர்ந்து ஸ்ரீம் என்ற மந்திரத்தை 60 முறை கூறி பின்பு நாணயங்களை அவ்விடம் புதைத்து விடவும். அடுத்து வரும் 33 நாட்களுக்கு மட்டும் கையளவு மஞ்சள் கலந்த நீரை மேற்கண்ட மந்திரத்தை 6 முறை கூறியவாறு தெளித்து வரவும். இது அவ்விடத்தை வறுமை நீக்கி, செல்வம் வளம் பெருக செய்யும் ஒரு பரிகாரமாகும். அந்த நாணயங்கள் நிரந்தரமாக அந்த மனையில் இருக்க வேண்டும்.

    குறிப்பு : வடகிழக்கில் மண் இல்லாதோர், அடுக்குமாடிகுடியிருப்பில் வசிப்போர், வாடகை வீடு, அலுவலகம் போன்றவற்றிற்கு மேற்கண்ட முறையை சிறு தொட்டியில் மண் நிரப்பி அதில் புதைத்து வைத்து செய்து வரவும். வேறு இடம் மாற்றம் செய்ய நேரின், அதை புது இடத்தில் குறிப்பிட்டு உள்ள பகுதியில் வைத்து விடலாம்.

  • குரு தோஷம் நீக்கும் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள்

    தன் மகன் கசனுக்காக நலம் வழங்கும் நாராயணரை நோக்கி குரு பகவான், தவம் செய்த சறப்பு மிக்க தலம் தான் சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலாகும். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறையில் அமைந்துள்ளது இக்கோவில், சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருத்தலத்தில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். இக்கோவில் வரலாறானது குரு பகவான் தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் தவம் மேற்கொண்டு வந்தார் அப்போது குருவின் தவத்தால் மகிழ்ந்த பெருமாள் சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்த தேரில் வந்து குரு பகவானுக்கு காட்சியளித்து அவர் மகனை மீட்டுத் தந்தார். இதனால் இத்திருத்தலத்தின் எழுந்தருளிய பெருமாள், சித்திர ரத வல்லப பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள பெருமாள் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக வீற்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதனால் இக்கோவிலில் அவருக்கு அபிஷேகம் கிடையாது. இந்ததிருத்தலத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.

    மூலவரான சித்திர ரத வல்லப பெருமாள் சுமார்10 அடி உயரத்தில் கம்பீரமாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இப்பெருமாளை வணங்கினால் குருபகவானின் அருள் தானே வந்தடையும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை மேலும் குழந்தை பாக்கியமும், சகல நன்மைகளையும் கிடைக்கப்பெறும் என்றும் நம்புகின்றனர். இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் நாச்சியார்களுடன் உற்சவ மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.

    குரு பகவானே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதனால், குருதோஷம் உள்ளவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு பரிகாரம் மேற்கொண்டால் தோஷம் நிவர்த்தியாகி பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். குருவிற்கு நன்மையளித்த பெருமாளே இங்கு கோவில் கொண்டுள்ளதால், அப்பெருமாளை வணங்கினாலே குரு பகவானின் அனுக்கிரகம் கிடைக்கப்பெறும் என்பது இத்திருத்தலத்திற்கு நாடி வரும் பக்தர்களின் நம்பிக்கை.

  • திருவருள்புரியும் தரணி பீட நாயகி

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குழல்வாய்மொழி, பராசக்தி என இரு திருவடிவங்களில் குற்றாலநாதருடன் தேவி அருள்கிறாள். தல தீர்த்தங்களாக சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆகியவையும், தலவிருட்சமாக குறும் பலாவும் உள்ளன.

    இந்தப் பலாவில் உள்ள சுளைகள், ‘லிங்க’ வடிவில் இருப்பது கலியுக அதிசயம். அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றியபோது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை, குழல்வாய் மொழிநாயகியாகவும், பூதேவியை, பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு ஸ்ரீசக்கர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள்.

    பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இதற்கு, ‘தரணி பீடம்’ (தரணி பூமி) என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் ‘நவசக்தி’ பூஜை செய்கின்றனர். பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

  • அட்சய திருதியை பூஜை நேரம் ….

    அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.
    இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.
    சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. “அட்சயா” எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்றதால் தங்கம், வெள்ளி, கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
    பஞ்சாங்கம் படி, அட்சய திருதியை திதி ஏப்ரல் 18-ம் தேதி காலை 3:45 மணிக்கு தொடங்குகிறது.
    ஏப்ரல் 18 ம் தேதி காலை 6:19 முதல் 12:34 மணி வரை அட்சய திருதியை பூஜை மேற்கொள்ளலாம்.

  • அட்சய திருதியை – ஐஸ்வர்யம் தேடி வர…

    ஐஸ்வர்யம் தேடிவரும் அட்சய திருதியை நன்னாளில் மக்கள் அனைவரும் தங்கம் வாங்க, தங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பு.
    தங்கம் வாங்கும் முன் கவணிக்க வேண்டியவை..
    தங்க நகைகளை வாங்கும் போது, அதன் உண்மையான மதிப்பைத் தீர்மானிக்கும்போது, அதன் தூய்மைக்காக அதை சரி செய்ய வேண்டும்.
    இந்திய தரநிலைகள் (பி.ஐ.எஸ்.இ.) என்பது தங்க நகைகளுக்கு அடையாளமாக இருக்கும் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஆகும் மேலும் அதன் தூய்மை அடங்கும்.
    எனவே, ஒவ்வொரு நகைப்பகுதியும் ஒரு பி.எஸ்.ஐ. முத்திரை, பெற்றிருக்க வேண்டும்.
    தங்க நகைகள் எந்த ஒரு விலையில் இருந்து ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு மாறுபடுகிறது என்பதை சரி பார்ப்பது நல்லது.
    மாறுபட்ட தயாரித்தல் விலை மற்றும் அவற்றின் மீது வழங்கப்பட்ட தள்ளுபடிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தெரிந்த முடிவுகளை எடுக்கவும்.
    தங்க நகைகள் பொதுவாக வழக்கமான தங்க துண்டுகளைவிட அதிக விலை உயர்ந்தவை, மற்றும் விலையுயர்ந்த கற்கள் நகைகள் அழகு சேர்க்கின்றன போது, அவர்கள் ஒரு ஆபரணம் மதிப்பு குறைக்கின்றன.
    பதிக்கப்பட்ட கல் விலைமதிப்பற்றதாக இருந்தாலும், தங்கம் மட்டுமே பரிமாற்ற மதிப்பைப் பெறுவீர்கள். எனவே கல் நகைகளை தவிர்ப்பது நல்லது.

  • மங்கள வாழ்வருளும் மங்களநாயகி

    அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் விஷ்ணு சக்தி பீடமாகத் திகழ்கிறது கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலய மங்களாம்பிகை சந்நதி. கல்வியில் சிறந்து விளங்க விரும்புவோர், தொழில் துவங்குவோர், திருமணத்தடை உள்ளோர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், குபேர வாழ்வு விரும்புவோர் மங்களாம்பிகைக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்திப் பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோயிலின் முன்பு பொற்றாமரைக் குளம் இருக்கிறது. மகாமகத்திற்கு வருபவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரைக் குளத்திலும் நீராடுவர். இத்தலத்தின் தலவிருட்சமாக வன்னிமரமும், தல தீர்த்தங்களாக மகாமகக் குளமும், காவிரியாறும் உள்ளன. மங்களநாயகிக்கு ‘மந்திரபீட நலத்தாள்’ எனும் திருநாமமும் உண்டு. சம்பந்தர் இவளை ‘வளர்மங்கை’ என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக ‘மந்திரபீடேஸ்வரி’ என்ற திருநாமமும் பெறுகிறாள்.

  • அட்சய திருதியை சிறப்பு என்ன?

    அட்சய திருதியை பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கிருஷ்ணரும், குசேலரும் தமது குருகுலவாசத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கிருஷ்ணர் கோகுலத்தை விட்டு நீங்கி துவாரகாபுரியின் மன்னரானார். ஆனால், குசேலரோ பரம ஏழையாக இருந்தார். அவருக்குத் திருமணமாகி 27 குழந்தைகள் இருந்தனர். தனது குழந்தைகளுக்கு அனுதினமும் உணவு அளிக்கவே அவர் பெரிதும் அவதிப்பட்டார். அவர் கொண்டு வரும் சிறு பொருளையும் சிக்கனமாக இருந்து குடும்பத்தை கவனித்தாள் அவரது மனைவி சுசீலை.
    இந்த சூழ்நிலையில் ஒருநாள் குசேலர் வாழ்ந்துவந்த கிராமத்தில் கிருஷ்ணர் தன்னிடம் உதவி வேண்டி வருவோர்க்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதாகக் கேள்விப்பட்டாள் சுசீலை. தங்களுடைய இந்த வறுமை நிலையைப் போக்க எண்ணிய அவள், குசேலரிடம் விபரத்தைக் கூறி, பால்ய நண்பரான கிருஷ்ணரை சந்தித்து உதவி கேட்குமாறு கூறினாள்.
    முதலில் அதை ஏற்றுக் கொள்ளாத குசேலர், பிறகு மனைவியின் வற்புறுத்தலின் பேரில் கிருஷ்ணரை சந்திக்கச் சென்றார். கிருஷ்ணருக்குப் பிடித்த அவலை ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டிஎடுத்துச் சென்றார். குசேலர் வருவதை கேள்விப்பட்ட கிருஷ்ணர் அரண்மனை வாசலுக்கே ஓடி வந்து அவரை வரவேற்றார். சிறப்பான உபசரிப்பு வழங்கினார். கிருஷ்ணரின் செல்வவளத்தைக் கண்ட குசேலர் மிக்க மகிழ்ச்சிகொண்டார். ஆனால், இவ்வளவு பெரிய அரண்மனையில் உயரிய விருந்துண்ணும் கிருஷ்ணருக்கு, தான் கொண்டுவந்த அவலை எப்படி கொடுப்பது என தயங்கினார். அதை அறிந்த கிருஷ்ணர் குசேலர் வைத்திருந்த அவலை நட்பு உரிமையுடன் வாங்கி ஒவ்வொரு பிடியாக எடுத்து உண்டார். முதல் பிடி அவலை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டதும் அட்சயம் என்றார் கிருஷ்ணர்.
    அடுத்த நொடியே, கிராமத்தில் இருந்த குசேலரின் வீடு பெரிய மாட மாளிகையாக மாறியது. இரண்டாம் பிடி அவலை எடுத்ததும் அவ்வாறே கூற குசேலரின் மாளிகையில் அத்தனை விலை உயர்ந்த பொருட்களும் தோன்றின. குசேலர் குபேரரானார். குசேலருக்கு கிருஷ்ணர் அருள்புரிந்தது ஒரு அட்சய திருதியை நன்நாளில்தான். அமாவாசைக்கு பிறகு வரும் 3ம் நாள் திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் 3ம் நாள் அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. எப்படி அட்சயப்பாத்திரத்திற்கு பெருமை உள்ளதோ அதுபோல் தான் அட்சய திருதியைக்கும் உண்டு. இந்த நாளில் செய்யும் எந்த நல்ல காரியமும் நற்பலனை தரும்.
    * இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் குறையாமல் நிறைந்து இருக்கும். அட்சய திருதியையன்று மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அந்நாளில் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு பொருளை தானம் செய்து நாம் வாங்கும் எந்த பொருளும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.
    * அட்சய திருதியை நாளில் லட்சுமி குபேர பூஜை நடத்துவது அதிக பலன்களை தரும்.
    * அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்கள் வாங்குவது என எல்லாவற்றையும் தாண்டி 4 ஏழைகளுக்கு தானம் வழங்குவது அதிக சிறப்பு.
    * அட்சய திருதியை புனித ஸ்தலங்களில் நீராடி இறைவனை வணங்கினால் பாவங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம்.
    * அட்சய திருதியை நாளில் ஏழைகளுக்கு தானம் வழங்குவது மட்டுமின்றி கால்நடைகளுக்கும் உணவு வழங்கலாம். அதுவும் பசு மாட்டுக்கு வாழைப்பழம் வழங்கி வணங்கினால் நல்லது. பசுமாட்டில் அனைத்து தெய்வங்களும் இருப்பதாக நம்புவதால், வாழைப்பழம் வழங்குவது அனைத்து இறைவனுக்கு படைப்பதற்கு சமம்.
    * அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமின்றி. ஒருபடி உப்பு வாங்கி வீட்டில் வைத்தாலும் பலன் கிடைக்கும்.
    * ஜைன மதத்திலும் அட்சய திருதியைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஜைனர்கள் அட்சய திஜ் என்று அழைக்கின்றனர். இதை மிக புனிதமான நாளாகவே கருதுகின்றனர். தானம் செய்வதற்கு ஜைனர்கள் இந்த நாளையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
    * அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மட்டுமின்றி வீடு கட்டுதல், வியாபார நிறுவனங்களை தொடங்குதல், புனித சுற்றுலா செல்வது போன்றவற்றையும் செய்யலாம்.
    * பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகம் வசிக்கும் யாதவர்கள், இந்நாளை விளைபொருட்கள் விதைப்புக்கு உகந்த நாளாக கருதுகின்றனர்.