Category: பரிகாரங்கள்

பரிகாரங்கள்

  • அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்

    அட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.

    வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.

    ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும்.

    நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

  • வீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்?

    தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்தத் தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.

    வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை. இந்தக் கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திருவிளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.

    தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்:

    கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.

     பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

     சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

    தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.

    திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.

    மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

    தீபத்தின் வகைகள்:

    தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

    *சித்ர தீபம்*
    வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

    *மாலா தீபம்*
    அடுக்கடுக்கான தீபத் தட்டுகனில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

    *ஆகாச தீபம்*
    வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

    *ஜல தீபம்*
    தீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

    *படகு தீபம்*
    கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும்.

    *சர்வ தீபம்*
    வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகம்.

    *மோட்ச தீபம்*
    முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.

    *சர்வாலய தீபம்*
    கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

    *அகண்ட தீபம்*
    மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.

    *லட்ச தீபம்*
    ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.

    *மாவிளக்கு தீபம்*
    அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்

  • ஐஸ்வர்யங்கள் தரும் கோமாதா…..

    பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும் ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது. மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை கிருஷ்ணன் தூங்கிகொண்டு இருந்தான். கண்ணனின் மேல் பாசம் கொண்டவள் போல நடித்து, குழந்தைக்கு தாய்பால் கொடுத்தாள். அவளின் நோக்கம் பாசம் அல்ல. அது கொடுமையான திட்டம். அது என்னவென்றால், அரக்கியின் தாய்பாலை குழந்தை குடித்தால், அவள் உள்ளத்தில் இருக்கும் விஷம், அவள் உடல் முழுவதும் இருந்த காரணத்தால், தாய்பாலின் மூலமாக அவ்விஷங்கள் குழந்தையான கண்ணனின் ரத்தத்தில் பரவி, கண்ணனி்ன் இரத்தத்தை அட்டைபூச்சியை போல உறிஞ்சி எடுத்துவிடும் என்று நினைத்தாள் அந்த அரக்கி. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். ஆனால் அந்த அரக்கியோ ஒரு தெய்வத்தையே மடியில் வைத்துக்கொண்டு கொடுமை செய்ய நினைத்தாள். தெய்வ குழந்தையான கண்ணனும் அவள் உயிரை எடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தான். அவளாக வந்து மாட்டினாள். பாலுடன் அரக்கியின் உயிரையும் உறிஞ்சினான் கண்ணன். செத்து தொலைந்தாள். அவள் உயிர் பிரிந்த போது பெரும் அலறலுடன் பூமியில் விழுந்தாள். மிக பயங்கரமான அந்த குரலை கேட்ட ஊர் மக்களும், தாய் யசோதையும் ஒடிவந்து பார்த்தபோது, அரக்கி ஒருத்தி மாமிச மலை போல் இறந்து கிடப்பதை பார்த்தார்கள். என்ன நடந்தது என்பதையும் புரிந்துக் கொண்டார்கள். ஒரு கொடூரமான அரக்கியை தன் குழந்தை கண்ணன் வீழ்த்தினான் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், ஒரு உயிரை கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாக கண்ணனை பிடித்துக்கொள்ளக் கூடாதே என்று அஞ்சினாள் தாய் யசோதை. உடனே அதற்கான தோஷ நிவர்த்திக்காக பசுவின் வாலில் கண்ணனை சுற்றி, அவன் தலையில் கோமியத்தை தெளித்து தோஷத்தை போக்கினாள் யசோதை. இது, ஸ்ரீவி்ஷ்ணு புராணத்தில் இருக்கிற தகவல். ஆகவே, இறைவனாக இருந்தாலும் இறைவனுக்கே தோஷம் பிடிக்காமல் இருக்க சிறந்த பரிகாரம் பசுதான் என்கிறது சாஸ்திரங்களும் – புராணங்களும். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள் பூமாதேவியே கோமாதாவாக அவதாரம் எடுத்தாள் என்கிறது புராணம். தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து தோன்றியது பசு. கோமாதா என்று போற்றப்படும் அந்த பசுவின் உடலில் தேவர்களும், முனிவர்களும், இறைவனும், இறைவியும் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் முனிவர்கள், தேவர்கள், இறைவனும் பசுவின் உடலில் குடி வந்தார்கள். அப்படியே முப்பத்து முக்கோடி தேவர்கள்களும் பசுவின் உடலில் குடிவந்து விட்டார்கள். கடைசியாக வந்த கங்கையும் – லஷ்மியும், தங்களுக்கு இடம் இல்லாததால் வருந்தினார்கள். இதை கண்ட கோமாதா, “அகில உலகத்தையே பூமாதேவியாக இருந்து சுமக்கும் நான், உங்களை சுமக்க மாட்டேனா?” என்று கூறி தன் பின் பகுதியில் இடம் தந்தாள். இதனால் பின்பாகத்தில் கங்கையும், ஸ்ரீலஷ்மி தேவியும் அமர்ந்ததால், பசுவின் சாணத்தில் ஸ்ரீலஷ்மியும், கோமியத்தில் கங்கையும் இருப்பதாக ஜதீகம். தோஷத்தை போக்கும் கோமாதா கோயிலுக்கு நல்லவர்கள் – கெட்டவர்கள் என்று பல பேர் வருவதால் அவர்களுடைய தோஷம் அந்த கோயிலுக்குள் நிலைத்துவிடாமல் இருக்க அந்த காலத்திலிருந்து இந்த காலம்வரையிலும் சில கோயில்களில், காலையில் பசுவுக்கு கோபூஜை செய்வதுடன், அந்த கோயிலை சுற்றி அந்த பசுவை வலம் வர வைப்பார்கள். கங்கை எப்படி புனிதம் வாய்ந்ததோ அதுபோல், எண்ணற்ற மடங்கு புனிதம் வாய்ந்தது பசுவின் சாணம். பசு சாணத்தை கரைத்து வீட்டின் வாசலில் தெளித்தால் கிருமி நாசினியாகும். பசுவின் சாணத்தால் தயாரிக்கப்படும் திருநீறின் மகிமை அற்புதமானது. திருநீறை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் கண் திருஷ்டி பாதிப்பு, விரோதிகளால் எற்படும் தொல்லை, நோய்கள் போன்றவை நீங்கும். துஷ்டசக்திகளும் அண்டாது. கோமியத்தை வீட்டிற்குள் தேளித்தால், வீட்டில் இருக்கும் தோஷங்கள் விலகியோடும். கங்கையின் அருளாசி கிடைக்கும். ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்வாள். கோ பூஜை வருடத்திற்கு ஒருமுறையாவது நம் வீட்டிற்கு பசுவை அழைத்து வந்து, அதற்கு மஞ்சள் – குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து, அந்த பசுமாடு வயிறு நிறைய சாப்பிட பழங்கள், அகத்திகீரை போன்றவற்றை கொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும். பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வ – குல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிக்ஷம் பெருகும். யாகம் – ஹோமம் வீட்டில் யாகம் – ஹோமம் போன்ற தெய்வ வழிபாடுகளை செய்யும் போது, யாகத்தில் (அ) ஹோமத்தில் பசு வரட்டியை போட்டால் இன்னும் அந்த யாகத்திற்கும் ஹோமத்திற்கும் சக்தி கூடும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். யாகம் – ஹோமம் போன்றவை நிறைவு பெற்றதும் அந்த சாம்பலை ஒரு வெள்ளை துணியில் கட்டி வீட்டின் தலைவாசலில் மாட்டினால் அந்த வீட்டுக்குள் எந்த தோஷமும் நுழையாது. ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிடைக்கும். இப்படி எண்ணற்ற சக்தி வாய்ந்த பசுவை வணங்கி, முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியை பரிபூரணமாக பெற்று, தலைமுறை தலைமுறைக்கும் வளமோடும் – நலமோடும் வாழ்வாங்கு வாழ்வோம். ’கோமாதா நம் குலத்தை காக்கும் குலமாதா’. ஆகவே கோமாதாவான பசுக்களை நன்றாக பராமரித்து – பாதுகாத்து வணங்கினால் நிச்சயம் அனைவருக்கும் சுபிக்ஷத்தை அள்ளி அள்ளி தருவாள் கோமாதா.!

  • அள்ள அள்ளப் பெருகும் அட்சய திருதியை

    தமிழ் மாதத்தில், சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்னால் வரும் வளர்பிறை திருதியை திதி ‘‘அட்சய திருதியை’’ என போற்றப்படுகிறது. ‘‘அட்சயம்’’ என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவகிரகங்களில் தந்தைக்கு உரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திருதியை நாள்.
    சூரியனும் சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திருதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங்கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருட்களும் அழியாது நிலைத்திருக்கும். அட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும்.
    பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர். யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திருதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்! தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள், சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள், ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள், சங்க நிதி பத்மநிதியை குபேரன் பெற்ற நாள், மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள் என பல சிறப்புக்களை உடையது அட்சய திருதியை நாள்.
    இந்த அட்சய திருதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டார். கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திருதியை நாளில்தான். இதனால்தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது. இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட, பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும். ஏழை நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை தானம் தரலாம். ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு, இனிப்புகள் வழங்கலாம்.
    அட்சய திருதியை நாளில் பசு, நாய், பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும். அட்சய திருதியை தினத்தில் தங்கம், வைர, ரத்தின ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்ற வழக்கம் உருவானது சமீபகாலமாகத்தான். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘மகிழ்வித்து மகிழ்’ என்று சொல்வார்கள். எனவே, மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெற்றுக் கொள்ளலாம்.

  • கழுகுமலை கோயிலில் திருக்கல்யாணம்

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 21ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் நடந்தது.
    இதையடுத்து கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானைக்கு திருமண பட்டாடைகள் உடுத்தி மேளதாளத்துடன் வசந்த மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
    12ம் திருநாளான நேற்று சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பெரிய பல்லக்கிலும், சோமாஸ்கந்தர் சிறிய பல்லக்கிலும் வீதியுலா வந்து பட்டினப்பிரவேஷம் சென்றனர். 13ம் திருநாளான இன்று மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெற்றது.

  • சின்ன திருப்பதியில் பங்குனித் தேரோட்டம்….

    கல்லங்குறிச்சி, கலியுகவரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
    தமிழகத்தின் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படுவது, கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த மார்ச் 25-ம் தேதி துவஜாரோகணம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
    7-ம் நாள் விழாவில் திருக்கல்யாணமும், அதை தொடர்ந்து வெண்ணெய்த்தாழி உற்சவமும் மாலையில் வெள்ளிக்குதிரை வாகன வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழாவில் காலை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தேரில் எழுந்தருளினார். முன்னதாகச் சிறிய தேரில் ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று நிலையத்தை வந்தடைந்தது. இதில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • இந்த ஸ்லோகத்தை சொல்லித் தான் பாருங்களேன்….

    இந்த ஸ்லோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம் செய்தால் தோஷங்கள் விலகி நிம்மதியான வாழ்வு பெறலாம். மன நிம்மதி, குடும்ப அமைதி ஆகியவைகள் கிட்டும்.
    மன நிம்மதி, குடும்ப அமைதி தரும் ராம ஸ்தோத்திரம்
    ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
    லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
    ஆர்த்தானா மார்த்தி பீதானாம் பீதி நாசனம்
    த் விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
    ஸன்னத்த: கவசீ கட்கீசாப பாண தரோயுவா
    கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ?மண
    நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச
    கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே
    ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
    ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம
    அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச் வதஸ்ந மஹாபலௌ
    ஆகர்ண பூர்ணதன்வானௌ ரக்ஷதாம் ராமலக்ஷமணௌ

  • பங்குனி உத்திர விரதம் இருப்பது எப்படி?

    பங்குனி மாதம் உத்தர நட்சத்திரத்தன்று (30.03.18) கடைபிடிக்கப்படும் விரதம் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
    மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பனிரெண்டாவது மாதமான பங்குனியும், பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளாகும். நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தை செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த நன்னாளில் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. தெய்வங்களின் திருமணங்கள் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.
    திருமணமாகாதவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்கு சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய நாளாக பங்குனி உத்திர நாள் விளங்குகிறது.
    விரதம் இருப்பது எப்படி?
    பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். நாளை பங்குனி உத்திரம் என்பதால் விரதம் இருப்பவர்கள் இயல்பாக உண்பதைவிட குறைவாக உண்ண வேண்டும். மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் எடுத்துக் கொள்ளலாம். பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடியதுமே விரதத்தை தொடங்கி விட வேண்டும். பகலில் ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும்.
    மாலையில் முருகன், சிவன், பெருமாள் கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். சிவபெருமானுக்கும், உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து முடிக்க வேண்டும். இந்த விரதத்தால், விரைவில் திருமண யோகமும், செல்வச் செழிப்பும் உண்டாகும்.

    பிறகு ஒரு தம்பதியினரை அழைத்து வந்து அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும். சிவபெருமானையும், பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும்.

    அன்று முழுவதும் சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை படிக்கலாம். துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும்.

    மேலும், 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

    பலன்கள் :

    பங்குனி உத்திர நாளில் நம்மால் முடிநய்த உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். இந்த நாளில் திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தால் திருமணம் கூடிவரும்.

    கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையையும் பெற முடியும்.

    உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

  • பூஜை காலத்திற்கு ஏற்ற பூக்கள்

    நீலோற்பலமலர் எல்லா பூக்களைவிடவும் சிறந்தது என்பதை எல்லா ஆகமங்களும் தெரிவிக்கின்றன. சில ஆகமத்தில் அலரி சிறந்தது என்றும், வேறு சில ஆகமங்கள் கொக்குமந்தாரை சிறந்தது என்றும், இவ்வாறே மலைப்பூ, தாமரைப்பூ என்ற பலவிதமான பூக்களை ஒவ்வொரு ஆகமமும் சிறந்ததாகக் கூறுகிறது.

    வசந்த ருதுவாகிய சித்திரை வைகாசி மாதங்களில் செங்கழுநீர், கடம்பமலர், புன்னாகமம், தருப்பை, கண்டங்கத்திரி என்றும் இவ்வகையான பூக்களால் சிவபெருமானை பூஜித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும்.

    பாடலி புஷ்பம், நூறு இதழ்களை உடைய தாமரைப்பூ மல்லிகைப் பூக்கள் ஆகியவற்றால் கிரீஷ்ம ருதுவாகிய ஆனி, மற்றும் ஆடி மாதங்களில் சிவபெருமானை அருச்சிக்க அக்கினிஷ்டோமம் செய்த பலன் ஏற்படும்.

    வருஷ ருதுவாகிய ஆவணி, புரட்டாசி மாதங்களில் தாமரை, மல்லிகை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்தால் அசுவமேத யாகம் செய்த பலன்களைப் பெறலாம்.

    சரத் ருதுவாகிய ஐப்பசி, கார்த்திகை, மாதங்களில் ஊமத்தை, செங்கழுநீர், சுஜாதம், நீலோற்பலம் ஆகியவற்றின் புஷ்பங்களினால் சிவபெருமானை பூஜித்தால் சந்திர யாகம் செய்த பலன் கிடைக்கும்.

    அலரி, சுஜாதம், நீலோற்பலம் ஆகியவற்றின் பூக்களினால் ஹேமந்தருதுவான மார்கழி, மற்றும் தை மாதங்களில் பூஜை செய்தால் நூறு யாகங்கள் செய்த பலன்களை அடையலாம்.
    சிசிர ருதுவாகிய மாசி, பங்குனி மாதங்களில் சிவபெருமானை கர்ணிகாரப் புஷ்பத்தினால் அர்ச்சனை செய்தால் எல்லா யாகங்களையும் ஒரு சேரச் செய்தால் எத்தனை பலன் கிடைக்குமோ அத்தனை பலன்களையும் தடையில்லாமல் பெறலாம் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது.

  • கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க நேர்ச்சை

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை அளிக்கப்பட்டது. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தூக்க திருவிழா சிறப்பு வாய்ந்தது. திருமணம் முடிந்து குழந்தை பேறு கிடைக்கப் பெறாத தம்பதியினர், குழந்தை பேறு வேண்டி பத்ரகாளி அம்மனை வேண்டிக் கொள்வார்கள். அந்த வேண்டுதலின் பலனாக குழந்தை பேறு பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளை பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறும் தூக்க திருவிழாவுக்கு அழைத்து வந்து தூக்க நேர்ச்சை செலுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான தூக்க திருவிழாவையொட்டி, அம்மன் திருமுடிகள் வட்டவிளையில் அமைந்திருக்கும் பிரதான கோவிலில் இருந்து திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு கடந்த 12-ந் தேதி மேள தாளம் முழங்க கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து தூக்க திருவிழா தொடங்கியது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் வண்டியோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10-ம் திருவிழாவான நேற்று சிறப்பு வாய்ந்த தூக்க திருவிழா நடந்தது. இதையொட்டி முட்டுகுத்தி நமஸ்காரத்தை தொடர்ந்து, கோவிலில் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் அம்மன் எழுந்தருளினார். அதைதொடர்ந்து தூக்கக்காரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் மேளதாளம் முழங்க நடைபெற்றது. கீழ்விளாகம் தறவாட்டில் இருந்து கண்ணநாகம் வழியாக கோவில் வளாகத்தை ஊர்வலம் வந்தடைந்தது. ஆண்டுதோறும் தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது.