Category: நவராத்திரி

நவராத்திரி

  • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

    அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து, காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு கோவில் பூசாரி காப்பு அணிவித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலத்திலும், 3-ம் நாளில் ரி‌ஷப வாகனத்தில் பார்வதி கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், 5-ம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்திலும், 6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ம் நாளான வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

    12-ம் நாளான 21-ந்தேதி காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

  • நவராத்திரி கொலு… ஒன்பது விதமாக அலங்காரம் ….

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளும், மாலை நேரத்தில், வீட்டில் வைத்திருக்கும் கொலு முன்பாகத் திருவிளக்கேற்றி, அம்மன் படம் வைத்து, அன்னையின் திருமுன் அமர்ந்து பக்திப்பாடல்களைப் பாடி முறைப்படி வழிபட வேண்டும்.

    முதல் நாள்: அம்பிகையைக் குமாரி வடிவமாக அலங்கரித்து, மல்லிகை மலர் மாலை சூடி வெண்பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

    இரண்டாம் நாள்: அம்மனை இராஜராஜேஸ்வரியாக வழிபட வேண்டும். மல்லிகை, துளசி மாலை சாற்றி, புளியோதரை சாதம் படைத்து வழிபட வேண்டும்.

    மூன்றாம் நாள்: அம்பிகையைக் கல்யாணி வடிவமாக வழிபட வேண்டும். சம்பங்கி, மரிக்கொழுந்து முதலிய மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

    நான்காம் நாள்: ரோகிணி தேவியாக அம்மனை வழிபட வேண்டும். ஜாதிமல்லிப்பூ மாலை சூடி, கதம்ப சாதம் படைத்து வழிபட வேண்டும்.

    ஐந்தாம் நாள்: அன்னையைக் காளிகா தேவியாகப் பாவித்து, பாரிஜாத மலர் மாலை சூட்டி, தயிர்சாதம் படைத்து வழிபட வேண்டும்.

    ஆறாம் நாள்: சண்டிகா தேவியாக அம்மனை வழிபட வேண்டும். இந்நாளில், செம்பருத்திப் பூக்களால் அன்னையை அலங்காரம் செய்து, தேங்காய் சாதம் படைத்து வழிபட வேண்டும்.

    ஏழாம் நாள்: தேவியை அன்னபூரணியாகப் பாவித்து, தாழம்பூ மாலை சூட்டி, எலுமிச்சை சாதம் படையல் செய்து வழிபட வேண்டும்.

    எட்டாம் நாள்: அஷ்ட தேவிகளுடன் எழுந்தருளும் அன்னை துர்க்கா தேவியாக அம்மனை வழிபட வேண்டும். ரோஜாப்பூ மாலை சாற்றி, பாயசம் படைக்க வேண்டும்.

    ஒன்பதாம் நாள்: அன்னை காமேஸ்வரி என்னும் சிவசக்தி கோலத்தில், அம்மனை சுபத்திரா தேவியாகப் பாவித்து, செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, திரட்டுப்பால் படைத்து வழிபட வேண்டும்.

    இவ்வாறு ஒன்பது நாட்களும் அன்னையை ஒன்பது விதமாக அலங்கரித்து வழிபடுவதால், இல்லத்தில் செல்வம், கல்வி, வீரம் ஆகியவற்றுடன் சகல சௌபாக்கியங்களும் நிறைந்து விளங்கும்.

  • திருப்பதி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நிரல்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் முதல் நாளான அக்டோபர் 10ஆம் தேதி இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி தனது தேவியர்களுடன் வீதி உலா வருகிறார். 11ஆம் தேதி காலை 9 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா. ஆதிஷேசன் விஷ்ணுவின் வாகனம் என்பதால் முதலில் சேஷ வாகனத்தில் வீதி உலா வருகிறார் பெருமாள்.

    11ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் வீதி உலா வரும் மலையப்பசுவாமி, 12ஆம் தேதி காலை 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு முத்துப் பந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    13ஆம் தேதி காலை 9 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதி உலா, இரவு 9மணிக்கு சர்வ பூபால வாகனத்தில் உலா வருகிறார். 14ஆம் தேதி காலை 9 மணிக்கு மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு பெரிய திருவடி எனப்படும் கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளிலும் உலா வருகிறார்.

    15ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறிய திருவடி என போற்றப்படும் அனுமன் வாகனத்தில் வீதி உலா வருகிறார். அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டமும் இரவு யானை வாகன வீதிஉலாவும் நடைபெறுகிறது.

    16 ஆம் தேதி காலை சூர்ய பிரபை வாகன வீதி உலா, இரவு7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது. 17ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டமும் இரவு7 மணிக்கு குதிரை வாகன வீதி உலாவும் நடைபெறுகிறது.

    18ஆம் தேதி காலை 7 மணிக்கு சக்கர ஸ்நானம் நிகழ்கிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

  • திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம்

    திருமலை ஏழுமலையான் கோவிலி நவராத்திரி பிரம்மோற்சவ விழா அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி, 18ஆம் தேதி வரை 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 13ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற்றது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் மலையப்ப சுவாமி காலை, மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலம் வருகிறார்.
    இன்றைய தினம் அங்குரார்ப்பணத்தையொட்டி வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

  • நவராத்திரி பூஜை முறைகளும், மந்திரங்களும்

    வீடுகளிலும், கோவில்களிலும் நவராத்திரி பூஜை இன்று முதல் ஆரம்பமாகிறது. வீடுகளில் கொலு வைக்க தூய்மையுடனும் அழகுப் பொலிவுடனும், பூஜைகளுடனும், சங்கல்ப பூர்வமாகவும் முறைப்படி கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும். மண்பரப்பி அதிலே நவதானியங்களிட்டு முளைக்கவிடுவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நவதானியங்களின் செழிப்பைத் தமது குடும்ப வளத்தின் நன்மை தீமைகளை அறியும் சகுனமாகக் கொள்வர்.

    வீடுகளில் கொலு வைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக்கொலு அலங்கரிக்கப்படுகிறது. 5, 7 அல்லது 9 என்ற ஒற்றைப்படையாகப் படிகளின் எண்ணிக்கையை வைத்து கொலு அமைக்கப்படுகிறது. அருகிலேயே கும்பம் வைத்து சுவாமிப்படங்களையும் மாட்டி அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களும் விதவிதமான பட்சணங்களை நைவேந்தியம் செய்து பூஜிப்பது வழக்கத்தில் உள்ளது.

    சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

    நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர். புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் உறைவிடம், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே. அதனால் மஹாநவமி அதாவது 9வது நாள் இவற்றை பூஜையில் வைத்து வழிபடுவர். அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.

    சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

    நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வதி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர். புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் உறைவிடம், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே. அதனால் மஹாநவமி அதாவது 9வது நாள் இவற்றை பூஜையில் வைத்து வழிபடுவர். அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.

    இந்நாளில் மஹா கணபதி பூஜையுடன் தொடங்கி கலச பூஜை செய்து, துர்கையை தியானம் செய்து கலசத்தில் ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம். மஹிஷாஸுரமர்த்தினி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

    முதல்நாள்: சக்தியை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் சாமுண்டா எனவும் அழைப்பர். கோபம் கொண்டவளாக காட்சியளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவே ஆகும்.

    நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.

  • நவராத்திரி பூஜை…. முக்கிய விதிமுறைகள்….

    பூஜை செய்பவரும் சரி, மற்றவர்களும் சரி சந்தனம், குங்குமம் இவற்றினை வலது கை மோதிரவிரலால் மட்டுமே இட்டுக்கொள்ளவேண்டும்.

    வாசனை நிறைந்த மலர்களால் மட்டுமே பூஜிக்க வேண்டும். மலர்களை நாம் முகர்ந்து பார்க்கக் கூடாது. மல்லிகை, ஜாதிமல்லி, செண்பகம், மனோரஞ்சிதம், சிகப்பு மற்றும் வெள்ளை தாமரை, அரளி, பவளமல்லி, ரோஜா, மரிக்கொழுந்து, கதிர்பச்சை, செம்பருத்தி போன்ற மலர்களை மிகவும் சுத்தமான முறையில் பயன்படுத்த வேண்டும். பூக்களின் தண்டுப் பகுதி அம்பாள் பக்கத்தில் இருக்க வேண்டும். படம், விக்ரகங்களில் அணிவிக்கப்படும் பூ மாலைகள் கண், காது போன்ற பகுதிகளை மறைக்காமல் இருக்க வேண்டும். உதிராமலும் இருக்க வேண்டும்.

    தாழம்பூவினை முட்கள் இல்லாது வெட்டி எடுத்து உபயோகிக்க வேண்டும். தாமரை போன்ற பெரிய மலர்களை 1,3,9 என்ற விரிவாக்க முறையில் சமர்பிக்க வேண்டும்.

    அம்பிகை பரத்யட்சமாக இருப்பதனை உணர்ந்து பய பக்தியுடன் நிதானமாய் பாதத்தில் சேர்க்க வேண்டும்.

    குச்சி, காம்பு, காய்ந்த பூ, மண் இவை தவறிகூட இருக்கக் கூடாது.

    நறுமண ஊதுவத்தியினை, தூப சாம்பிராணிகளை பயன்படுத்துங்கள்.

    ஊதுவத்தியினை ஆள்காட்டி, கட்டைவிரலால் பிடித்து இடமிருந்து வலமாக முழு வட்டமாக மூன்று முறை சுற்ற வேண்டும்.

    ஆரத்தி காண்பிப்பது நெய்தீபமாக ஏக முகமாகவும், பஞ்ச முகமாகவும் காண்பிக்க வேண்டும். இரண்டு வரிகளாவது அப்போது பாட வேண்டும். அம்பிகை கானப்பிரியை.

    வீணை போன்று அனைத்து வாத்தியங்களும் அம்பிகைக்கு பிரியம் தான். அதனால்தான் நவராத்திரி காலங்களில் பாட்டு, நடனம், வாத்திய கச்சேரிகள் நடைபெறுகின்றன.

    அம்பாளுக்கு புடவை, சட்டை துணி, வளையல் குங்குமம் வைத்து உபசாரம் செய்து வழிபடுங்கள்.

    சித்திரை மாதத்தில் வருவது வசந்த நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் வருவதுசாரதா நவராத்திரி. அதிக சிறப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியே வட இந்தியாவில் தசராவாகவும் தென் இந்தியாவில் நவராத் திரியாகவும் கொண்டாடப்படுகிறது.

  • நவராத்திரி பூஜை முறைகள்

    மூன்று மாபெரும் சக்திகளான அன்னை துர்க்கை, அன்னை லெட்சுமி, அன்னை சரஸ்வதியினை போற்றி 9 நாட்கள் கொண்டாடும் விழா தான் நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் மாலை அம்மாவாசையில் ஆரம்பித்து 10-வது நாளான விஜயதசமி வரை இந்த விழா நடைபெறும்.

    முதல் மூன்று நாட்களில் அம்பிகையை துர்க்கை ரூபமாகவும் இரண்டாவது மூன்று நாட்கள் அம்பிகையை லெட்சுமியாகவும், மூன்றாவது மூன்று நாட்கள் அம்பிகையை சரஸ்வதியாகவும் வழிபடுவது தொன்று தொட்டு வரும் பழக்கம். இக்காலகட்டத்தில் காலை, மாலை இருவேளையும் அம்பிகை வழிபாடு நடைபெறும்.

    கொலு வைக்கும் பழக்கம் உடையவர்கள் ஒற்றை படை கணக்கில் 3,5,7,9 போன்ற எண்களில் படிக்கட்டுகள் அமைத்தும் கலசம் வைத்தும் கொலு பொம்மைகளை வைத்தும் வழிபடுவர். அழகான கோலங்கள், தோரணங்கள், பூ அலங்காரம் இவையால் அம்பிகை இருக்கும் பூஜை அறையினை அவரவர் வசதிக்கேற்ப பக்தியோடு அலங்கரிப்பர்.

    அந்தந்த நாட்களில் வழிபட்டு அம்பிகைக்கு ஏற்ற சகஸ்ர நாமம், அஷ்டோத்திரம், மஹிஷாசுர மார்த்திரி ஸ்லோகம், தேவி பாகவதம் படித்தல் போன்றவற்றினை செய்ய வேண்டும்.

  • நவராத்திரி பற்றிய அரிய தகவல்கள்

    சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

    தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.

    நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.

    நவராத்திரி விழாவை பெரிய அசுரர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.

    நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

    நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

    விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

    நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

    ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

    நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

    பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

    பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நவராத்திரி விழா

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு அக்டோபர் 10-ஆம் தேதி முதல் அக்.19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    வரும் 10-ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

    நிறைவாக 19-ம் தேதி விஜயதசமி அன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெறுகிறது.

  • புதிதாக கொலு வைப்பவரா நீங்கள்…. எந்த படியில் எந்த பொம்மை வைக்க வேண்டும்?

    முதல் படியில் ஓரறிவு கொண்ட புல், செடி, கொடிகளையும், 2 ஆம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளையும், 3 ஆம் படியில் மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளையும் அடுக்க வேண்டும்.

    4ஆம் படியில் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளையும், 5ஆம் படியில் விலங்குகள், பறவைகளின் பொம்மைகளையும், 6ஆம் படியில் மனிதர்களின் உருவபொம்மைகளையும் வைக்கலாம்.

    7ஆம் படியில் சித்தர்கள், ரிஷிகளின் பொம்மைகளையும், 8ஆம் படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள் பொம்மைகளையும் அடுக்கலாம். 9 ஆம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் பொம்மைகளை வைக்கலாம். அதன் நடுவில் ஆதிபராசக்தியை கொலுவின் அதிபதியாக வைத்து வழிபட வேண்டும்.