Category: நவராத்திரி

நவராத்திரி

  • நவராத்திரி விழாவில் பொம்மைகள் வைப்பது ஏன்?

    நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது பொருளாகும்.

    ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார்.

    கொலு வைத்து வழிபடுவது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும் என்பது ஐதீகம். நவராத்திரி கொலுவில் ஒவ்வொரு ஜீவராசிகளும் பெற்றுள்ள அறிவின் அடிப்படையில் கீழ்பகுதியில் இருந்து பொம்மைகளை அடுக்க வேண்டும்.

  • நவராத்திரி …. 9 வடிவில் காட்சித் தரும் அம்பிகை

    நவராத்திரிக்கு துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.

    நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.

    துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.

    துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரஸ்வதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.

  • விஜயதசமி அ,ஆ… எழுதும் நிகழ்ச்சி

    விஜயதசமியையொட்டி கோயில்களில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளுக்கு அ, ஆ.. எழுத கற்று கொடுத்தனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழா கடந்த 2ம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சக்தியை 3 நாள் துர்க்கையாகவும், 3 நாள் லெட்சுமியாகவும், 3 நாள் சரஸ்வதியாகவும் வழிபடுவார்கள். 9வது நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விழா கொண்டாடப்படும். அதன்படி நேற்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. விழாவின் 10வது நாளில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்களில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெரியவர்கள் மடியில் அமர செய்து, அரிசியில் குழந்தைகளுக்கு எழுத்து எழுத கற்று கொடுத்தனர். முதலில் அ, ஆ.. எழுத செய்தனர். ஏடு தொடங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விஜயதசமியில் ஆரம்பிக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியுடன் கைகூடும் என்பது நம்பிக்கை ஆகும். இதே போல் நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகளில் நேற்று குழந்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இந்த விஜயதசமி திருநாளின் போது ஏராளமான குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதும் பெற்றோரின் வழக்கம்.சரஸ்வதி பூஜையன்று பள்ளியில் சேர்ந்தால் தன் குழந்தை நன்றாகப் படிக்கும் என்பது ஒவ்வொரு பெற்றோரின்நம்பிக்கையும் கூட.

  • கொலு பொம்மைகளை எப்படி பராமரிப்பது?

     

    நவராத்திரி திருநாளில் பத்து நாட்களும் , விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து தெய்வத்தின் நாமாவளிகளை பாடி மகிழ்ந்தோம். உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் என பலரையும் அழைத்து உறவுகளையும் மேம்படுத்தும் திருநாளாக அமைந்தது நவராத்திரி பெரு விழா.  இந்துகளின் பண்டிகைகளில் பத்து  நாட்கள் கொண்டாடப்படும் விழாவான  நவராத்திரி கால கட்டத்தில்  நமது  வீட்டில் அனைத்து தெய்வங்களும் குடிபுகுந்து நம்மை காக்கிறது.நம் வீட்டில் வைத்திருந்த கொலு பொம்மைகளை நல்லபடி பராமரித்தால் நமக்கு எல்லா  அனுக்ரஹங்களும் சர்வ நிச்சயமாக வந்து சேரும்.

     நவராத்திரி திருநாளில் போற்றி வைத்திருக்கும் கொலு பொம்மைகளை எப்படி பராமரிப்பது? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழுகிறது. இந்த கேள்விக்கான விடைதான் இந்த பதிவு.

    கொலு பொம்மைகளை பராமரிக்க எளிய வழிகள்

    முதலில் கொலு பொம்மைகளை கொலு படியில் அடுக்குவதற்கு முன் கொலு  படிகளை நன்றாக சரிபார்க்க வேண்டும். கொலு பொம்மைகளை மேல் படியில் இருந்து அடுக்கிகொண்டு வரவும்.  கொலு படிகளை அலங்கரிக்க காட்டன் துணிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். கொலு பொம்மைகளை அழுத்தி துடைக்ககூடாது.தினமும் பூஜை செய்த பிறகு கொலு படிக்கு கீழ் படைத்த  தின்பண்டகளை எடுத்து விட வேண்டும். எலி போன்ற ஜீவ ராசிகள் கொலு படியை தள்ளி விடக்கூடும் என்பதாலேயே இந்த எச்சரிக்கை.

    இப்படி கொலுவை பாதுகாத்த நாம் கொலு முடிந்தவுடன் இந்த வருடம் என்ன என்ன பொம்மைகளை எந்த படிகளில் வைத்தோம் என எழுதிவைத்து கொள்வது அடுத்த வருடத்துக்கு கொலு வைக்கும் போது எளிதாக இருக்கும்.கொலுவில் இருக்கும் பொம்மைகளின் பெயர்களை எழுதிவைத்து கொள்வதும் குழப்பங்களை தவிர்க்க உதவும். அடுத்த வருடம் கொலு வைக்கும்போது நம்மிடம்  இல்லாத பொம்மைகளை வாங்க இந்த குறிப்பு பயன்படும்.

    .

    கொலு படிகளை கலைத்து பொம்மைகளை திரும்ப பெட்டிகளில் அடுக்கி வைக்கும்போது எந்த எந்த பெட்டிகளில் என்ன என்ன பொம்மைகள் உள்ளன என்று எழுதிவைத்துகொள்ளவும் .பெட்டிகளில் பொம்மைகளை அடுக்கும்போது காகித பொம்மைகளாக இருந்தால் நிற்கவைக்கவும், காகித பொம்மைகளை படுக்கவைக்ககூடாது.

    எவ்வளவு ஆர்வத்துடன் கொலு வைக்கின்றோமோ அந்த ஆர்வத்துடனே  பொம்மைகளை நன்றாக அடுக்கி முறையாக பராமரிக்கவேண்டும்,

    இந்த பராமரிப்பு அடுத்தாண்டு கொலுவை மேலும் சிறப்பிக்கும்.

  • ஆயக் கலைகளின் நாயகியை போற்றுவோம்

     

    நம்முடைய இந்து மதத்தில்,  கல்விக்குரிய தெய்வமாக சரஸ்வதியைப் போற்றுகிறோம். கலைமகள், சியாமளா என்றெல்லாம் அழைக்கப்படும் கலைவாணி முப்பெருந்தேவியரில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆயகலைகள் 64ல் கல்வி மட்டுமல்லாமல் அனைத்து கலைகளுக்கும் அதிபதி கலைமகள்.

    வெண்ணிறத் தாமரைப் பூவில் உறைபவளான  கலைமகளுக்குரிய வாகனம் வெண்ணிறப் பறவையான அன்னம். அவள் உடுத்தும் ஆடையும் பளிங்கு நிற தூய  வெள்ளைப் புடவை. அழகுத் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் முத்துக்களால் ஆன ஜபமாலையும் வெள்ளை. சரஸ்வதியை மனக்கண்ணில் நிறுத்தி காணும் போது தூய்மைக்கு இலக்கணமாகத் திகழும் வெள்ளை நிறம் தான் நம் உள்ளத்தை நிறைக்கும். இதன் தாத்பரியம் எந்த ஒரு கலையில் நாம் சிறந்து விளங்க வேண்டுமானாலும், நம் உள்ளம் தூய்மையாக  இருக்கவேண்டும் என்பதே. உள்ள அர்ப்பணிப்போடு, கலையை கற்பிப்பவர்கள், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க முடியும் என்பதற்காக தான் ,வெண்மை நிறத்தை சரஸ்வதிக்குரியதாக வைத்தனர். வெண்தாமரையில் வீற்றிருக்கும் கலைமகளும் வெள்ளை மனம் கொண்டவர்களுக்கு தான் வேண்டிய ஞானத்தை வாரி வழங்குகிறாள்.

    சரஸ்வதிதேவி என்றதும்,வெண்மை நிறத்திற்கு அடுத்து அவள்  கையில் இருக்கும் வீணை தான் நம் நினைவிற்கு வரும்.  கல்விக்கு எல்லை என்பதே கிடையாது. மேலும் கல்வியின் சிறப்பே, எடுக்க எடுக்க ஊறும் ஊற்றைப் போல அடுத்தவர்க்கு சொல்லி கொடுக்க கொடுக்க கற்பிப்பவர்களுக்கும் ஞானம் வளரும்.  எந்த ஒரு கலையையும் கற்றுக்கொள்ள விஜயதசமி நன்னாளே சிறந்தது. சரஸ்வதி தேவியை வழிபடுபவர்கள் சரஸ்வதி தேவியின் மூலமந்திரம், அஷ்டோத்ர நாமம் , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ,நாமாவளி ,ஸ்லோகங்கள் ஜெபித்து வழிபட கலைகள் வசப்படும்.

    ஸ்ரீ சரஸ்வதி தேவி பல நாமங்களால் போற்றப்படுகிறாள். பாரதி , சரஸ்வதி, சாரதா தேவி, ஹம்சவாகினி, ஜகதீக்யாதா,மகேஸ்வரி,கௌமாரி, பிரம்மச்சாரிணி, வித்யதாத்ரிணி,வரதாயினி,ருத்ரகண்டா,புவனேஸ்வரி.

    வேத ஸ்வரூபியான பகவான் ஸ்ரீ ஹயக்ரீவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி.எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச்  சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

     

                                                                             

     

    குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில் விளங்கிக்கொள்ளவும் ,விளக்கிச்சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும்  ஸ்ரீ சரஸ்வதி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்களை  நாள்தோறும் சொல்லலாம்.

     

    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

    வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா

     

    தேவி சரஸ்வதி! உனக்கு நமஸ்காரங்கள்.வரம் தருபவளே!வேண்டியவற்றைத் தருபவளே! கல்வித் தொடக்கத்தை செய்கிறேன். அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

    இதனை தினமும் ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.

     

    சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

     

    ‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே

    பீதவர்ணாயை தீமஹி தன்னோ

    பிராம்ஹீ ப்ரசோதயாத்’

    பொருள்: பிரம்ம சக்தியை அறிவோம்.  சரஸ்வதி தேவியை தியானம் செய்வோம். அவள் நமக்கு ஊக்கம் தந்து அருள்புரிவாளாக.

    சரஸ்வதி காயத்திரி மந்திரத்தையும் 108 முறை சொல்லி வந்தால் சிறப்பான  பலன்களை அன்னை நமக்கு தந்தருள்வாள்.

  • அனைவருக்கும் சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை வாழ்த்துக்கள்….

    மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி மந்திரம் இதோ ……
    ஓம்ஹிரீம் ஐம்ஹிரீம் சரஸ்வத்யை நமஹ.

  • ஆற்றல் தரும் கன்யா பூஜை

     

    நவராத்திரி நன்னாளில் ,அன்னை ஆதி பராசக்தியின் அருளை பெற செய்ய வேண்டிய பூஜைகளில்  கன்யா பூஜையும் ஒன்று.  அதாவது பெண் குழந்தைகளை பாலா திரிபுர சுந்தரி அம்மனாக பாவித்து பூஜை செய்வது. இதற்கான வயது வரைமுறையும் உண்டு. இந்த பூஜையில் ,இரண்டு வயது முதல் ஒன்பது வயது வரையுள்ள பெண் குழந்தைகளையே கன்னிகையாக அமர்த்தி கன்யா பூஜை செய்யப்பட வேண்டும்.இந்தப் பூஜைக்கு ஒரு வீட்டு குழந்தைகளைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதில்லை. எப்படிப்பட்ட குழந்தைகளாவும் இருக்கலாம்.

    ப்ராஹ்மணீ ஸர்வ கார்யார்த்தே ஜயார்த்தே ந்ருப வம்சஜாம்.

    லாபார்த்தே வைஸ்ய வம்சோத்தாம்  ஸுதார்த்தே துரீய வம்சஜாம்.

    தாருணே சாந்த்ய ஜாதாநாம் பூஜயேத் விதிநா நர : என்கிறது ஒரு ஸ்லோகம்.

                                       

    இதன் பொருள் , வேதம் கற்று தூய்மையான வாழ்க்கை வாழும் அந்தணர் குலத்தில் பிறந்த குழந்தைகளை பூஜை செய்தால் அனைத்து கார்ய சித்திகளையும் அடையலாம். நீதியுடன் மக்களை வழிநடத்தும் அரச குலத்தினர் மற்றும் அரசாங்க உயர் பதவி வகிப்பவரின் குழந்தைகளை பூஜை செய்வதால் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றியை அடையலாம். நேர்மையான வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் குழந்தைகளை பூஜை செய்வதால் தொழிலில் மிகப் பெரிய லாபத்தையடைந்து செல்வந்தராக ஆகலாம். நம்பிக்கையுடன் செயலாற்றும் வேலைக்காரர்களின் குழந்தைகளை பூஜை செய்வதால் குடும்ப வம்ச விருத்தியை அடையலாம்.

    எனவே குழந்தைகளில் பேதம் இல்லை. அனைவரும் ஜெகன்மாதாவின் குழந்தைகளே! ஆகவே கன்யா பூஜை செய்ய சின்னஞ்சிறிய குழந்தைகள்தான் தேவையே தவிர பாகுபாடுகள் பார்க்கத் தேவையில்லை. எந்த குழந்தையையும் பூஜை செய்யலாம் என்கிறது சாஸ்திரம்.

    சரி இந்த கன்யா பூஜையை  எப்படி செய்யலாம்.

    பூஜையை செய்வதற்காக முதலில்,இல்லத்தை தூய்மைபடுத்தி கோலமிட வேண்டும்.  வீட்டில் நாம் வணங்கும் ஸ்வாமி படங்களைப்  பூக்களால் அலங்கரித்து தீபம் ஏற்றி, வாசலில் மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். 1 3 5 7 9 என்கிற ஒற்றைப்படையில் வரிசையில் பெண்களை கன்யா பூஜைக்கு  அழைக்கப்பட வேண்டும்.

     பூஜைக்காக அழைக்கப்படும் குழந்தைகளை நல்ல முறையில் வரவேற்பு கொடுத்து, அவர்களை தாம்பாள தட்டில் நிற்க வைத்து பாத பூஜைசெய்ய வேண்டும். குங்கும சந்தனம் குடுத்து, அவர்களை கோலமிட்ட மனைப்பலகையில் கிழக்கு முகமாக உட்கார வைக்க வேண்டும் அதன்பிறகு அவர்களுக்கு நலங்கு இட்டு பூ மாலை சாற்றி, வாசனை மலர்களால் அன்னை பராசக்தியாக பாவித்து அர்ச்சிக்க வேண்டும்.  பிறகு தூபம்  தீபம் காட்டி பிரசாதமாக பாயசம் குடுத்து பருக சொல்ல வேண்டும்.பின்னர்   கண்ணாடி  சீப்பு கண் மை  ரிப்பன் வளையல்  சாந்து மஞ்சள் குங்குமம்போன்ற மங்களப் பொருட்களோடு, வெற்றிலை பாக்கு புஷ்பம்  பாவாடை சட்டை மற்றும் தட்சணையை  ஒரு தட்டில் வைத்து ,நமஸ்கரித்து தீபாராதனை காட்டி மீண்டும் நமஸ்கரிக்க வேண்டும் அவர்கள் கையில் மஞ்சள் அட்சதை குடுத்து ஆசீர்வதிக்க சொல்ல வேண்டும் பிறகு அவர்களுக்கு மங்கள ஆரத்தி காட்டி அறுசுவை உணவு கொடுத்து மீண்டும் அவர்களை நமஸ்கரித்து நல்ல முறையில் வழி அனுப்ப வேண்டும்.

    இதுவே கன்யா பூஜை. இப்பூஜை  நவராத்திரி நாட்களில் இதை செய்பவர்கள் அம்பிகையின்  அருளால் அரிய செயல்களையும் எளிதாக முடிக்கும் ஆற்றலைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

  • உப்பிலியப்பன் கோவில் புரட்டாசிப் பெருவிழா

    தமிழகத்தின் திருப்பதி என்று அழைக்கப்படும் கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் புரட்டாசி பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் தொடங்கியதையடுத்து, புரட்டாசி முதல் சனிக்கிழமை உப்பிலியப்பன் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்களில் ஒவ்வொரு நாளின் மாலை நேரத்திலும் வெள்ளிப்பல்லக்கு, யானை வாகனம், கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாட்டு நிகழ்ச்சியும் ஊர்வலமும் நடக்கும். சுவாமி புறப்பாட்டின் மிக முக்கிய நிகழ்ச்சியே ஒன்பதாவது நாள் தான். அந்த நாளில் சுவாமி கோ ரதத்தில் ஏறி ஊர்வலமாக பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். அப்போது ஊர்வலத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்.

  • ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியை தரும் சுவாசினி பூஜை

     

    நலம் தரும் நவராத்திரி நாட்களில் அன்னைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பூஜை செய்கிறோமோ ,அந்த அளவிற்கு  நவராத்திரி பூஜைகளில் மிக மிக முக்கியமானது சுவாசினி பூஜையாகும். சுவாசினி என்பவள் யார்? 50வயதை கடந்த   பெண்களைத்தான் சுவாசினி என்பார்கள். அதிலும் குறிப்பாக மாதத்தீட்டு இல்லாதவர்கள்தான் சுவாசினி. இப்படிப்பட்ட பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களை அம்மனாக பாவித்து பூஜை செய்து சிறப்பு செய்வதுதான் சுவாசினி பூஜை எனப்படும்.

    சுவாசினி வழிபாடு செய்பவர்கள் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்  என்கிறது தேசி பாகவதம். ஒருமுறை நவராத்திரி வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, லலிதா பரமேஸ்வரியே பக்தர்களின் பூஜைகள் சரியாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்க பூவுலகம் வந்தாள்.

    ஏழைப்பெண்ணுருவில் சென்ற தேவியை யாருமே கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர். ஆனாலும், வறுமையில் இருந்த ஒரு பெண் மட்டும் பழையசாதமும், பயிறு சுண்டலும் தந்தாள். அதற்கு மறுநாள் கழுத்து நிறைய பொன் ஆபரணங்களை அணிந்தபடி பட்டுப்புடவையோடு சென்றாள் தேவி.

    முன் தினம் தனக்கு பழைய சாதம் கொடுத்த ஏழைப்பெண் வீட்டிற்கு சென்றாள். எல்லா பெண்களையும் அழைத்து இறைவழிபாட்டில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் கூடாது. மனிதர்களுக்கு உரிய எட்டு குணங்களை அறிவுருத்தவே  எட்டு தினங்களும் வந்து , ஒன்பதாம் நாள் காட்சி தந்து செல்கிறேன் என்று கூறி மறைந்தாள்.

    கோலம் போட்ட மனை மீது சுவாசினி பெண்களை அமர செய்ய வேண்டும். அவர்களை அம்பிகையாக பாவித்து அர்ச்சனை செய்து நாமவளிகளை சொல்ல வேண்டும். அனைத்து வகை பூஜைகளும் முடிந்த பிறகு புடவை, ரவிக்கை மற்றும் தாம்பூலம் ஆகியவற்றை சுவாசினிகளுக்கு தானம் கொடுக்க வேண்டும்.

    அப்போது இந்த பூஜையை மேற்கொள்ளும் தம்பதிகள் சுவாசினிகளிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பிறகு சுவாசினிகளுக்கு அன்னமிடவேண்டும். இந்த சுவாசினி பூஜையை நவராத்திரி 9 நாட்களில் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். சுவாசினிகளுக்கு அணிவிக்கப்படும் மாலையை திருமணமாகாத பெண்கள் வாங்கி அணிந்து கொண்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    லலிதா விரதமும் சுவாசினி பூஜையும் செய்கிற வீட்டுக்கு விரும்பி வந்து அருள்கிறேன் என்று தேவியே கூறியருளுகிறாள். நவராத்திரி பூஜையில் எல்லாப் பெண்களையும் சமமாகவே கருதி  தாம்பூலம், குங்குமம் கொடுத்து சக்தி தேவியாக நினைத்து வணங்குபவர்கள் தேவியின் அருளைப் பெறுவார்கள். அம்பிகையையே சுவாசினியாகச் சொல்லப்பட்டுள்ளது. அம்பாளின் நெற்றியிலே குங்கும திலகமும், வாக்கிலே தாம்பூலம் கமழுவதாக  சிவானந்த லஹரி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் கூறியுள்ளார். பெண்கள் நெற்றியில், மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கைகளில் கண்ணாடி வளையலும், கால்களில் சலங்கையுடன் கூடிய கொலுசும் அணிந்தால்,தேவி மகிழ்வாள். கையில் அணிந்துள்ள கண்ணாடி வளையல் சப்தமும், கால்களில் உள்ள கொலுசின் சலங்கை சப்தமும் கேட்டு, அம்பாள் மகிழ்ந்து, நம் கூடவே இருப்பாள் என்பது நம்பிக்கை.

  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலு

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. கோயிலில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் இந்த பிரமாண்டமாக கொலு வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவை முன்னிட்டு நூற்றுக்கால் மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 22 அடி உயரத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமாக கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய பொம்மைகள் முதல் பெரிய பொம்மைகள் வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் அலங்காரமாக வைக்கப்பட்டுள்ளன. 9 தினங்கள் நடக்கும் இந்த நவராத்திரி விழாவில் கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் உள்ள ஊஞ்சலில் சிவகாமசுந்தரி அம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் மற்றும் தீபாராதனை நடப்பது வழக்கம். இளம் தலைமுறையினர் புராணங்களை மறந்து வரும் நிலையில், மனிதனின் பரிமாண வளர்ச்சிகளை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த கொலு அனைவரையும் பிரமிக்கச் செய்தது.