Category: நவராத்திரி

நவராத்திரி

  • ராமர் அனுஷ்டித்த நவராத்திரி விரதம்

     

    ராமாவதாரத்தில்,வனவாசத்தின் போது, சீதையை ராவணன் கவர்ந்து செல்ல தேடி ராமரும் அவரின் சேனைகளும் அன்னையை நாலாபுறம் தேடிக் கொண்டிருந்தனர். இந்த அவதாரத்தின் நோக்கம் ராவணனை வதம் செய்வதே என்றும்  அதனை நிறைவேற்ற அன்னை பகவதி தேவியின் அருள் வேண்டி நவாரத்திரி விரதம் அனுஷ்டித்தால் நல்ல பலன் உண்டு என்றும் சொல்கிறார் நாரத மாமுனி.

    நாரதரின் ஆலோசனைப்படி ,மிகவும் சிரத்தையுடன் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார் ராமர். அஷ்டமி அன்று இரவில் ராமருக்கு,அம்பிகை சிம்ம வாஹினியாக காட்சிதந்து அருளினார். அதோடு, ஸ்ரீ ராமரின், முந்தைய அவதாரங்களான, மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை அவருக்கு  நினைவுபடுத்தி, ‘ தேவர்களின் அம்சங்களை உடைய வானரர்கள் உனக்குத் துணை செய்வார்கள். ஆதிசேஷனின் அம்சமான, உன் சகோதரன் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்வான். இராவணன் உன்னால் கொல்லப்படுவான் என்று அருளினாள்.

    இத்தகைய மகத்துவம் வாய்ந்த நவரத்திரி விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் எண்ணிலடங்காதது.திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்ய சிவ பெருமான் இந்த விரதத்தை கடைப்பிடித்ததாக புராணம் கூறுகிறது. மேலும்  விருத்திராசுரனைக் கொல்வதற்காக, இந்திரனும், மதுராவை சம்ஹாரம் செய்வதற்காக, நாராயணனும், இந்த விரதத்தை  அனுஷ்டித்தனர். சப்த ரிஷிகளும், இந்த விரதத்தை அனுஷ்டித்துப் பலன் அடைந்திருக்கின்றனர்.

    நவராத்திரி நாட்களில் கொலுவீற்றிருக்கும் அம்பிகையின் முன்  சுண்ணாம்பு மாவினால் ஆன கோலம் போடக்கூடாது.அதற்கு பதில் அரிசி மாவைப் பயன்படுத்த வேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமையையும் செல்வமும் பெருகும். நவராத்திரி கோலத்தை சுற்றி காவியால் கோடிட்டு போட்டால் ஐஸ்வர்யம் பெருகும்.

    நவராத்திரி காலங்களில் காலையில் செய்யப்படும் பூஜை சிவனுக்கும், மாலை இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாட்டுக்கு  உகந்தது. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்து துவங்க வேண்டும்.  நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்தால் அம்பிகையோடு அய்யனின் அருளும் கிடைக்கும். . நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று விரதமிருந்து வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். சப்தமி திதியில், ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் கூறுவது  மென்மேலும் பலன்களைத் தரும். விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் நிறைவாகும்.  

  • ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி திருவிழா

    ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா புதன் கிழமை மாலை காப்புக் கட்டுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து திருக்கோயிலின் அம்மன் சந்நிதியில் சிறப்பு அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டு அங்கு பர்வதவர்த்தினி அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி முதல் நாளில் பர்வதவர்த்தினி அம்மன் அன்னபூரணி திருக்கோலத்தில் காட்சியளித்தார். அம்மனுக்கு அருகில் நூற்றுக்கணக்கான பொம்மைகளைக் கொண்டு நவராத்திரி கொலு திருக்கோயிலின் சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. கோயில்கள், பக்தர்களின் இல்லங்களில் கொலுபொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்துவர்.

  • மூடனாயிருந்த காளிதாசனை மகாகவியாக்கிய சியாமளா தேவி

     

    நம் பாரத திருநாட்டில்,நவராத்திரி நான்கு விதமாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி நம் எல்லோர்க்கும் தெரியும். அதேப்போல் ராமநவமி சமயத்தில் பிரதமை திதி முதற்கொண்டு , வடநாட்டில்  தேவி உபாசகர்கள் லலிதா நவராத்திரி விழாவை கொண்டாடுவர். ஆடி மாதப் பிரதமை நாள் தொடங்கி வரும் நவராத்திரியை வாராஹி திருவிழாவாகக்  கொண்டாடுவர். இவை தவிர நான்காவதாக கொண்டாடப்படும் ஒரு நவராத்திரி விழாவும் உண்டு. அதுதான் சியாமளா நவராத்திரி. இது மாசி மாதப் பிரதமை நாளிலிருந்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பான விழாவாகும்.

     ஜெகன் மாதா ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையான சியாமளா தேவி, அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில் தான்,  அறிவு என்னும் அம்பை  கட்டுப்படுத்துகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் அடக்கி , அம்பிகையிடம் நம்மை லயிக்கச் செய்ய முடியும்.

     தனது மந்திரியான சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே அம்பிகை ஸ்ரீலலிதா பரமேஸ்வரி எதையும் செய்வாள்.  இதனால் சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்ட சியாமளா தேவி,மன இருளை அகற்றி ஞான ஒளியைத் தருபவள்.

    தேவியின்  ஒன்பதாவது வடிவமான சியாமளா தேவியை  உஜ்ஜயினியில் வணங்கியதால் மூடனாயிருந்த காளிதாசன் மகாகவியானான் என்கிறது புராணம். மூடமாய் முடங்கிக் கிடந்த காளிதாசனுக்கு அன்னை சியாமளா தேவியின் பெருங்கருனை மகாகவியாக மாற்றியது.  மதங்க முனிவரின் மகளாகப் பிறந்ததால் மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறாள். 

    சியாமளா தேவியை தியானிப்பவர்களுக்கு வாக்கு , இசை, கல்வி, கேள்விகளில் நல்ல தேர்ச்சி போன்றவை சித்திக்கும்.

    மாதங்கியின் பதினாறு பெயர்களைப் பற்றி பார்ப்போம்.

    சங்கீத யோகினி, சியாமா, சியாமளா, மந்த்ர நாபிகா, மந்த்ரிணி, சசிவேசானி, ப்ரதானேசி, சுகப் பிரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணி, பிரிய கப்பிரியா, நீபப்பிரியா, கதம்பேசி, கதம்பவன வாசினி, சதாமாதா ஆகியவையாகும்.

    மாதங்கி தேவி எட்டு கரங்களை உடையவள். அவளுடைய ஒரு திருக்கரத்தில்உள்ள சம்பா கதிர், உலகியல் இன்பங்களையும், மற்றொரு கரத்திலுள்ள தாமரை மலர், கலை உள்ளத்தையும்,இன்னொரு கரத்திலுள்ள பாசம் ஈர்ப்பு சக்தியையும்,வேறொரு கரத்திலுள்ள அங்குசம் அடக்கியாளும் திறனையும்; காரிகை உலகியல் ஞானத்தையும்; கிளி ஆத்ம ஞானத்தையும், இரு கைகளில் ஏந்திய வீணை சங்கீத ரசனையையும் அருளுகின்றன. மேற்கண்ட வடிவுடைய தேவியையே காளிதாசனின் சியாமளா தண்டகம் கொண்டாடுகிறது. சியாமளா தண்டகத்தை துதிப்பவர்களுக்கு தேவி பேரருள் புரிகிறாள்.

     காஞ்சி காமாட்சி யம்மன் கோவிலில் சியாமளா தேவியின் திருவுருவத்தை காணலாம். மந்திர சாஸ்திரப்படி மதுரை மீனாட்சியே சியாமளா தேவியாக விளங்குகிறாள் என்பது சான்றோர் நம்பிக்கை. அதனால் தான்  அங்கு எண் கை வடிவமும் சக்கரமும் இதன் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

    சியாமளா தேவிக்கு லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி எனப்படும் மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். அவர்களைப் பற்றி காளிதாசனின் சுலோகங்களையும் அதற்கான விளக்கங்களையும் தெரிந்துக்கொள்வோம்.

     

    லகு மாதங்கி

     

    “மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்

     

    மதாலஸாம் மஞ்சுள வாக்விலாஸாம்

     

    மஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்

     

    மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி.’

     

    மாணிக்கமயமான வீணையை வாசிப்பவளும், அழகான வாக்கு உடையவளும், நீலநிற ஒளி பொருந்திய உடலினளும், மதங்க முனிவரின் மகளுமான இவள் அருள் இருந்தால் அனைத்து கலைகளும் லகுவாகும்.

     

    வாக்வாதினி

     

    “அமலகமல ஸம்ஸ்தா லேகினி புஸ்தகோத்யத்

     

    கரயுகள ஸரோஜா குந்த மந்த்ரகௌரா

     

    த்ருதசதா கண்டோல்லாஸி கோட்ரபீடா

     

    பவதுபவ பவபயானாம் பங்கின பாரதி ந.’

     

    நம் சந்தேகங்களை குருவிடம் கேட்டு அறிய வேண்டும் என்பதே வாக்வாதினியின் பொருள். அடிக்கடி குருவிடம் சென்று நம் சந்தேகங்களைக் கேட்டாலொழிய உண்மைப் பொருளை அறிய முடியாது. சில விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்தால்தான் உண்மையை உணர முடியும்.

     

    நகுலி

     

    ஞானத்தை அடைந்தால்கூட தவறு செய்வதற்கான சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். விஷம் போன்ற அத்தவறுகளால் நாம் பாதிக்கப்படாமல் காப்பாற்றுபவள் நகுலி. நகுலம் என்றால் கீரிப்பிள்ளை. கீரியைக் கண்டு விஷப் பாம்புகள் அஞ்சி விலகு வதைப்போல நகுலியின் அருளால் தவறுகள் நம்மை விட்டு விலகிச் செல்லும் என்பது உட்கருத்து.

    சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றைத் துதித்துப் பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும் மிக அற்புதமானதே. ஆதிசங்கரரின் மீனாட்சி பஞ்சரத்னத்தைத் துதித்தாலும் சிறப்பான பயன் களைப் பெறலாம்.

     

    எனவே இந்த நவராத்திரி நாட்களில் அன்னை சியாமளாவையும், அவளது மறு உருவான  மீனாட்சியம்மனை வணங்கினால் மாணவ மாணவியர் கல்வியில் மேன்மையடைவார்கள்.  

  • வெற்றியை தரும் விஜயதசமி நன்னாள்

     

    நவராத்திரி நாள்களில்,மற்ற நாட்களைக் காட்டிலும் தேவியரை அதிகமாக பூஜிக்க, வேண்டும்.கல்வி, செல்வம், வீரம் என்ற முப்பெரும் செல்வங்களை நமக்கு குறைவில்லாமல் அருளும் தேவியர்களை வழக்கத்தை விட இந்த நாட்களில் இன்னும் அதிகமாக கொண்டாடுவது தான் சிறப்பு. விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான்  துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

     

                                                                  

    இதையே கொல்கட்டா போன்ற வடமாநிலங்களில் துர்கா பூஜையை  விஜயதசமியாகவும்,கொண்டாடுகிறார்கள். தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அன்னையை ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    உலகம் போற்றும்  மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மைசூரூ தசரா பண்டிகையில்,இடம்பெறும்  ரத ஊர்வலத்தைக் காண நம்மூரில் இருந்து  மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு கூடுவது சிறப்பு.

    சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில் ,ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது  ஐதீகம். சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன்,ஆரத்தி காட்டி அன்று சிலவரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

    ஆதிசங்கரர், ஒருமுறை தன்னுடைய சுற்றுப்பயணத்தின்போது மண்டனமிஸ்ரர் என்னும் ஞானியுடன் விவாதம் செய்து, வெற்றி பெற்றார். மண்டனமிஸ்ரர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சங்கரரின் சீடராகி அவருடனே புறப்படுகிறார்.

    அப்போது மண்டனமிஸ்ரரின் மனைவியான சரசவாணி தன்னுடைய கணவரைப் பிரிய மனமில்லாமல் தானும் அவர்களுடன் வருவதாகக் கூற , ஆதிசங்கரர், பெண்களை தன் சிஷ்யைகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்று மறுத்தார். சரசவாணியோ தான் அவர்களுடன் கூடவே வராமல் அவர்களுக்குப்பின்னால் தொடர்ந்து வருவதாகவும், சங்கரரோ மற்ற சீடர்களோ திரும்பிப் பார்க்க வேண்டாம் எனவும், தன்னுடைய கால் கொலுசின் ஒலி கேட்பதை வைத்து, தான் வருவதை அறியலாம் என்றும் கூறுகிறாள்.

    அப்படியில்லாமல் அவர்கள் திரும்பிப் பார்த்தால் அந்தக் கணமே பின் தொடருவது இல்லை என்றும் கூறவே, அதன்படியே பயணம் தொடருகிறது. சிருங்கேரி  மலைக்கு வந்து சேர்ந்த சங்கரர், தன் சிஷ்யர்களுடன் மேலும் பயணத்தைத் தொடரும் முன்னால் அங்கே ஒரு கர்ப்பிணியான தவளை பிரசவித்துக் கொண்டிருக்க, அந்தத் தவளைக்கு வெயில் தாக்காதபடி ஒரு பாம்பு படம் உயர்த்தி குடை பிடிக்கும் அற்புதத்தைப் பார்க்கிறார்.

    அந்தப் புனிதமான இடம் மகான் ரிஷ்யசிருங்கர் இருந்த அதே இடம் எனப் புரிந்து கொண்ட ஆதிசங்கரர் இந்த இடமே தானும் தன் சிஷ்யர்களும் தங்கியிருக்கத் தகுந்த இடம் எனத்தீர்மானத்து திரும்பிப் பார்க்கவே, சரசவாணி அந்தக் கணமே அங்கேயே சிலை வடிவாகி நின்று விடுகிறாள். அத்துடன் அவள் ஆதிசங்கரரிடம் அசரீரியாக, சாரதை யாக தான் இங்கேயே இருப்பதாகவும், இந்தத் தலத்தில் தன்னைப் பூஜித்து வருபவர்களுக்கு, தன்னுடைய அருள் பரிபூரணமாகக்கிட்டும் எனவும் கூறிகிறாள்.

    அப்படி சிருங்கேரியில் சாரதை குடிகொண்டநாள்  தான் விஜயதசமி எனவும், அன்று அவளைப் பூஜித்து குழந்தைகளின் கல்வியை  ஆரம்பித்தால், சாரதையின் அருள் பரிபூரணமாகக்கிட்டும் என்பது ஐதீகம்.

     விஜயதசமி தினத்தன்று பண்டாசுரனுடனான போரில், தேவி அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட, அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சாய்த்து, அசுரனைச் சங்காரம்  செய்தாள். இதனை ஞாபகப்படுத்தும் விதமாக விஜயதசமியன்று சிவன்கோவில்களில் பரிவேட்டை உற்சவம் நடைபெறுகிறது.

     தேவியின் வெற்றி விழாவான விஜயதசமியில் நாமும் நற்செயல்களை தொடங்கி வாழ்க்கையில் மேன்மேலும் உயர்வை காண்போம்.

     

  • நிலையான வித்தையை அருளும் சரஸ்வதி பூஜை

     

    நவராத்திரியின் ஏழாம் நாளன்று நான்முகன் நாயகி  கலைவாணி ,நாதஸ்வரூபமாக எழுந்தருளி  நமக்கு ஞானத்தை தந்தருளுகிறாள். நவராத்திரியின் ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது,சரஸ்வதி தேவியை முறையாக  ஆவாகனம் செய்ய வேண்டும். கல்வியின் தெய்வமான சரஸ்வதி ஒரு  ஞான சக்தி.

    அதற்கு அடுத்து வரும் எட்டாவது நாளில் வாழ்க்கையில் எட்டாத பல செயல்களையும் செய்யும் திறனை நமக்கு அருளி, நமக்கு ஏற்றத்தை அளிக்கிறாள். பண்டிகையின் ஒன்பதாவது நாளில் அழியாத கல்வி செல்வத்தை அருளுகிறாள். கற்ற வித்தை என்றும் நிலையானது என்பதை நமக்கு உணர்த்துகிறாள் தேவி சரஸ்வதி.

    நவராத்திரியின் பத்தாவது நாள் விஜயதசமி. விஜயம் என்றாலே வெற்றி.தீமைகளில் இருந்து  நன்மையை காப்பாற்றி அருளும், விஜயதசமி  அன்று தொடங்கும் எந்த ஒரு  காரியமும்  வெற்றி பெறும் என்பதே விஜயதசமி கொண்டாடப்படுவதற்கான நோக்கம். நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    கல்வி, தொழில் செழிக்கவும், குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்கவும்  சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். சர‌ஸ்வ‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம். அவ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபாடு செ‌ய்ய‌விரு‌க்கு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். மூலப் பரம்பொருளான விநாயகரை மனதில் நினைத்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதனை சரஸ்வதி பூஜையில் வைப்பதுடன், விநாயகரை வணங்கிய பின்னரே, சரஸ்வதிக்கான பூஜையை தொடங்க வேண்டும். சரஸ்வதி பூஜையின் போது ‘துர்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம’ என்று கூறி பூஜையை தொடங்க அனைத்தும் நன்மையில் முடியும்.

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அன்னையின் முன்பு, புத்தகங்களை  வைத்து சந்தான பொட்டிட வேண்டும். வாழை இலை விரித்து அதில் சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை சரஸ்வதி தேவிக்கு நிவேதனமாக படைக்கலாம். கூடவே அவல், பொரி, கடலை மற்றும் பழங்களும் வைக்க வேண்டும். கலைமகளுக்கு உகந்த  செம்பருத்தி, ரோஜா, வெண் தாமரை போன்ற மலர்களை அன்னைக்கு அணிவிக்கலாம்.  நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினாலே மூன்று தேவியரின் அருளைப் பெற முடியும்.  அன்று நாம் செய்யும் ஆயுத பூஜை வழிபாடும் வாழ்வில் நம் உயர்வுக்கு பெரிதும்  உதவும். ஆயுத பூஜையன்று சிறிய ஆணி முதல் பெரிய இயந்திரங்கள் வரை, இறைபொருளாகப் பாவித்து ,கழுவி சுத்தமாகத் துடைத்து,பொட்டிட்டு, பூ வைத்து,பூஜைகள் செய்வது சிறப்பம்சமாகும்.

     

     

  • குமரி பகவதியம்மன் நவராத்திரி விழா…

    பிரசித்திப்பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் திருவிழா 21-ஆம் தேதி அம்பாள் கொலுமண்டபத்தில் எழுந்தருளலுடன் தொடங்குகிறது. விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள், அம்பாள் வீதியுலா வருதல் ஆகியன நடைபெறும். 10-ஆம் நாள் திருவிழாவான செப். 30ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று தேவி வெள்ளிக் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படுகிறார். அப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். பரிவேட்டை ஊர்வலத்தின் முன் குமரி பகவதியம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் யானை, குதிரை அணிவகுக்க தப்பாட்டம், தையம் ஆட்டம், செண்டைமேளம், தேவராட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், முத்துக்குடை ஊர்வலம் ஆகிய கலை நிகழ்வுகள் நடைபெறும். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அம்மனுக்கு சுருள் வைத்து வணங்குகின்றனர். இந்த ஊர்வலம் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரம் காரியக்கார மடத்தை சென்றடையும். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மன் பாணாசூரன் என்ற அரக்கனை வதம் செய்யும் பரிவேட்டை நடைபெறும். இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். பின்னர் அங்கிருந்து பல்லக்கு வாகனத்தில் பஞ்சலிங்கபுரம், விவேகானந்தபுரம் வழியாக செல்லும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து அம்பாள் கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குள் பிரவேசிப்பார்.

  • கல்விக் கடவுளைப் போற்றும் கூத்தனூர்

     

    நவராத்திரி நாளில்,கல்வி செல்வம் ,வீரம் என மூன்று செல்வங்களை அருளும் நாயகிகளை வணங்கி வருகிறோம். கடைசி மூன்று நாட்களின் கல்வியின் நாயகியான கலைமகளைக் கொண்டாடுகிறோம். அறிவு தரும் அன்னையான கூத்தனூர் மஹா சரஸ்வதி ஆலயத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

    மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள கூத்தனூரில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

    ஒரு முறை படைப்பு தொழிலுக்கு நாயகனான நான்முகனுக்கும், கல்வி,கேள்விகளுக்கு நாயகியான நாமகளுக்கும் இடையே ஒரு வாதம் எழுந்தது. பிரம்ம லோகத்துக்கே தங்களால் தான் பெருமை என்று இருவருக்குள்ளும் வாதம் எழ,ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டனர். இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில்  புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற  மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்த போது பெற்றோர் வரன் தேட  ஆரம்பித்தனர்.  அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. இருவரும் சிவனை வழிபட்டனர். சிவபெருமான் அவர்கள்  முன் தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வது என்பது இயலாத காரியம்.   எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு.  இங்கு வரும் பக்தர்களுக்கு  கல்விச்  செல்வத்தை வழங்கு” என்று சரஸ்வதி தேவிக்கு  அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக கூத்தனூர்  ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள் என்கிறது தல வரலாறு.

     

                                                                                              

    திருத்தலத்தின்  சிறப்பு

    தமிழ்நாட்டிலேயே ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு இத்திருக்கோவில் ஒன்று மட்டுமே உள்ளது.கங்கை, யமுனை, சரஸ்வதி கலக்கும் இத்தலம் தட்சிணதிரிவேணிசங்கம் எனப்  பெயர் பெற்றது. இத்திருக்கோயிலில் குடிகொண்டுள்ள சரஸ்வதி தேவி வெண் தாமரைப் பூவில் வெண்பட்டு உடுத்தி அமர்ந்திருக்கிறார். வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும், வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார் சரஸ்வதி தேவி. கையில் வீணையுடன் கிழக்கு திசையில் காட்சி தருகிறார். இக்கோயிலில் துர்க்கையும், மகாலட்சுமியும், பெருமாளும் வீற்றிருந்தாலும், சரஸ்வதி தேவிக்கேன்றே உள்ள தனிக் கோயிலாகவே அறியப்படுகிறது.

     

    குலோத்துங்க சோழ மன்னனின் அவைப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தரின் . கவிபாடும் ஆற்றலைக் கண்ட குலோத்துங்க சோழன், ஒரு ஊரையே பரிசாகக் கொடுத்தார். அப்படி பரிசாக வழங்கப்பட்ட ஊர்தான், இன்று கூத்தனூர் என அழைக்கப்படுகிறது.  ஒட்டகூத்தர் பரணி நூல் பாட சரஸ்வதி தேவி உதவி புரிந்ததாக கூறப்படுகிறது.

     திருத்தலத்தின் விஷேசங்கள்:

    இத்திருக்கோயிலில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் வரும்  சாரதா நவராத்திரியும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி நவராத்திரி 9 நாட்களும்  ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.குறிப்பாக சரஸ்வதி பூஜை அன்று பாத தரிசனமும், விஜயதசமியன்று புருஷோத்தம பாரதிக்கு அன்னையின் அருள் கிடைத்ததால் பிள்ளைகளை அன்றைய தினம் சரஸ்வதியை தரிசித்து பள்ளியில் சேர்ப்பதும் இத்தலத்தில் மிகவும் விஷேசம்.

     ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று மாலை அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்னையின் மூல நட்சத்திர நாளிலும், கும்பாபிஷேக தினமான ஆனி மாதம் மக நட்சத்திர நாளிலும் ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சரஸ்வதிக்குரிய தினமான புதன் கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் தேனும் பாலும் அபிஷேகம் செய்வித்தால் ஆயக் கலைகளை அன்னையின் அருளால் பெற முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

      இத்தலத்தில் அருள்பாலித்து  வரும் அன்னை சரஸ்வதி தேவியை வழிப்பட்டு கல்வி அறிவு பெற்று மேன்மை அடைவோம்.

     

  • நவராத்திரி தெரிந்ததும்… தெரியாததும்…..

     

    துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிஎன்ற முப்பெரும் சக்தி  ஒன்றிணைந்து மகிஷாசுரமர்த்தினியாக  உருவெடுத்து மகிஷனை அழித்ததே சாரதா நவராத்திரி.

    நவராத்திரி 9 நாட்களும் அன்னையை பூஜிக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி அதாவது 7, 8,9வது  நாட்களில் வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் 8-வது நாளான  அஷ்டமி அன்றாவது  நிச்சயம் தேவியை ஆராதிக்க வேண்டும்.

     நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை அம்பிகையாகவே நினைத்து கவுரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து மரியாதை செய்யலாம்.

    நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பதும் ,தினமும் 9 பெண்களுக்கு நலங்கு வைத்து மஞ்சளிட்டு அன்னதானம் கொடுப்பதும் தேவியை மகிழ்விக்கும்.

    நவராத்திரி முதல் நாளன்று ஒருவர், 2-வது நாள் ரெண்டு பேர் என்று அதிகரித்து 9-வது நாள் 9 பேரை பூஜிப்பது நல்லது.

    மைசூரில் நவராத்திரியுடன் சேர்த்து  10-வது நாளான விஜயதசமியையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள். 10-வது நாள் தசமி என்பதால் அன்றைய தினம் தசராத்திரி என்கிறார்கள். அதுவே சுருக்கமாக தசரா என்று அழைக்கப்படுகிறது.

     மேற்கு வங்கத்தில் நவராத்திரியை துர்க்கா பூஜை, காளி பூஜை என்றும்ம,மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

     உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விஜயதசமி தினத்தன்று ராவணனை ராமபிரான் அழித்ததை நினைவு கூறும் வகையில், “ராம்லீலா” கொண்டாடுகிறார்கள்.

     நவராத்திரி நாட்களில் தேவி மகாத்மியம் தேவி பாகவதம் படிப்பதும், கேட்பதும் நமது பாவங்களை விரட்டும்.

     

                                                                               

    நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம்.அதனால், வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போடும் வழக்கம் உள்ளது.

    ஒரு காலத்தில் ,நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளைப் பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது.

     சங்கீதப் பிரியையான அம்பிகையை மகிழ்விக்க ,நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாடினால் நலம்.

    இந்தியாவில் சரஸ்வதி தேவிக்கு இரண்டே இரண்டு இடங்களில் தான் கோவில் உள்ளது. ஒன்று தமிழ்நாட்டில் உள்ள கூத்தனூர், மற்றொன்று ஆந்திராவில் பாசர் என்னும் கிராமத்தில் உள்ளது.

    தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலுவில், நம்மூர் சரஸ்வதி போல பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரஸ்வதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

     “ஓம் ஸ்ரீமகா சரஸ்வதி சரணம்” என்ற நாமத்தை மாணவ-மாணவிகள் தினமும் 9 தடவையும், வேலையில் இருப்பவர்கள் 18 தடவையும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் 108 தடவையும் சொல்லி வந்தால் பொன்,பொருள் சேர்க்கையுடன் புத்திக் கூர்மை உண்டாகும்.

    சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டதாக அறிகிறோம்.மேலும் அக்பர் காலத்தில் தான்  தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

    காளி வழிபாடு  மேற்கு வங்க மக்கள் மத்தியில் மிகவும் முக்கியம் அம்மாநில மக்கள் சக்தி உபாசகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    குஜராத்தில் நவராத்திரியின்  9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து ஆடும் கார்பா நடனம் சிறப்பு வாய்ந்தது.

    நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால், அம்பாள் மனமகிழ்ந்து நம் இல்லம் தேடி வருவாள்.

     

     

  • பதினாறு பேற்றை அருளும் மகாலட்சுமி தாயார்

     

    அன்னையர் மூவரை தொழும் அற்புத நாளான நவராத்திரி திருநாளில் `மகாலக்ஷ்மியின் 16 பேறுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

     

     ஸ்ரீதனலட்சுமி:

    அறம் ,பொருள் இன்பம், வீடு என்பார்கள். இந்த உலக இன்பங்களை நாம் அனுபவிக்க பொருட் செல்வம் வேண்டும். பொருளோடு சேர்ந்த அறம் வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பும், மனதில்  நேர்மையுடனும்  வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

     

     ஸ்ரீவித்யாலட்சுமி:- 

    பொருளை அடைந்தால் போதுமா?.அதை காக்கவும், அறவழியில் செலவு செய்யவும் அறிவு வேண்டும் அல்லவா?. நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்தி எல்லா உயிரிடத்தும்  அன்பாகவும்,இனிமையாகவும் பேச வேண்டும். புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த ,ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

     

    ஸ்ரீதான்யலட்சுமி:- 

    பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். நம் பசியை மட்டுமின்றி நம்மை சார்ந்தவர்களின் பசியை போக்குவது நம் கடமை. ஸ்ரீயானவள் பசிப் பிணி போக்கும்  தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானம் என்பார்கள்.அன்னதானம் செய்தால், ஸ்ரீ தான்யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

                       

                                                                              

     ஸ்ரீவரலட்சுமி:-

     உடலினை உறுதி செய்வது போல்,நம் மனதையும்  உறுதி செய்ய வேண்டும்.நம் வாழ் நாளில் நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, அந்த சங்கல்பத்தில் உறுதியுடன் இருக்க  ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

     

    ஶ்ரீசவுபாக்கியலட்சுமி :- 

    ஸ்ரீதேவி இருக்கும் இடத்தில்,மகிழ்ச்சிக்கும் ,மங்களதிற்கும் குறைவு இருக்காது.ஆனால் அந்த மகிழ்ச்சியை நம்மோடு மட்டும் நிறுத்திக்கொள்ள கூடாது. நம்முடைய மகிழ்ச்சி ,நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் பரவ வேண்டும்.அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்கு நாம் காரணமாகும் போது  சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

     

    ஸ்ரீசந்தானலட்சுமி:-

    குழலினிது யாழினிதான மக்கள் செல்வத்திற்கு ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு. இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயானவள்  அந்த ஜெகன்மாதா. அவளைப்போலவே தாயற்ற எல்லா குழந்தைகளையும் நம்  குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு நமக்கு வேண்டும்.

     

    ஸ்ரீகாருண்யலட்சுமி:- 

    வாடும் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல ,அனைத்து எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதையை தவிர்த்து, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

     

     ஸ்ரீமகாலட்சுமி:- 

    அள்ளி அள்ளிக் கொடுப்பது தான் அன்னை மகாலட்சுமியின் இயல்பு. நாமும், நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தாலே அந்தஅன்னையின் கருணை நமக்கு எப்போதும் இருக்கும். மேலும் ஸ்ரீ மகாலட்சுமி பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை நமக்கு வழங்குவாள்.

     

    ஸ்ரீ சக்திலட்சுமி:- 

    எந்த வேலையும் செய்ய நமக்கு ஆன்மீக பலத்தையும்,சக்தியையும் கொடுப்பவளே ஸ்ரீசக்தி லட்சுமி.அவளை வணங்கினால்,நமக்கு சக்தியை என்றும் கொடுப்பாள்.

     

    ஸ்ரீ சாந்திலட்சுமி:- 

    எவ்வளவு தான் பணமும் புகழும் இருந்தாலும்,மனதில் நிம்மதி இல்லையென்றால் பிரயோசனம் இல்லை. நிம்மதி என்பது நம் மனம்சார்ந்த ஒன்று. ஸ்ரீசாந்தி லட்சுமியை மனதில் இருத்தி தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

     

    ஸ்ரீ சாயாலட்சுமி:- 

    சம்சார பந்தம் நம்மை முழுமையாக ஆட்கொள்ளாமல்,மனதை பக்தி மார்க்கத்தில் செலுத்தி ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அவள் அருளைப் பெற வேண்டும்.

     

     ஸ்ரீ த்ருஷ்ணாலட்சுமி:- 

    ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதிப்பதினால், எப்போதும் நம் மனதில் பக்தியும், பிறருக்கு உதவ வேண்டும்,என்ற  ஞானமும்,பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையும் கிடைக்கும்.

     

     ஸ்ரீ சாந்தலட்சுமி:- 

    தன்னை மிதிப்பவரையும் பொறுத்துக் கொள்ளும் நிலம் போன்று பொறுமையுடன் இருப்பவர்களை சாந்தலட்சுமியின்  அருள் கிடைக்கும்.

     

     ஸ்ரீ கீர்த்திலட்சுமி:-

     நாம் செய்யும் எந்த ஒரு  செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால்,புகழுடன் ,ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

     

     ஸ்ரீ விஜயலட்சுமி:- 

    விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

     

     ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி:- 

    கோபம், பொறாமை, காமம், பேராசை போன்றவை நம் மனதை கெடுக்கா வண்ணம்,மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு  ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.

     

    இந்த பதினாறு பேற்றை அருளும் லக்ஷ்மி தேவியை இந்த நவராத்திரி காலத்தில் தினம் தினம் வணங்கி நலமும் வளமும் பெறுவோம்.

     

  • ‘கோலாஸுர பயங்கரீ…’ யான கோலாப்பூர் மகாலட்சுமி தாயார்

     

    அகில உலகிற்கும் அன்னையாக விளங்கும் தேவி பராசக்தியை  நவராத்திரியின் ஒன்பது நாட்களும், துர்கை,லக்ஷ்மி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் வணங்குகிறோம்.அவர்களை நவராத்திரி ஒன்பது நாட்களிலும் பக்தி சிந்தனையுடன்,முழுமனதோடு வழிபட்டால்,நாம் கேட்டதையும்,கேட்காத பலவற்றையும் பெறலாம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கும்,அடுத்த மூன்று நாட்கள் மஹா லட்சுமிக்கும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியன.

    இன்றைய பதிவில் உலகத்தை காக்கும் ஜகத்ரட்சகனான அந்த மகாவிஷ்ணுவின் திரு மார்பில் உறையும் லட்சுமி தேவியின் சிறப்பு பெற்ற தலங்களுள் ஒன்றான கோலாப்பூர் மகாலட்சுமி ஆலயம் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

                      

    நவராத்திரி கோலாகலமாக திருவிழாவாக கொண்டாடப்படும் ஆலயங்களுள் ஒன்று, மஹாராஷ்டிரத்தில் உள்ள கோலாப்புரி. எத்தனையோ திருவிழாக்கள் வந்தாலும், நவராத்திரி திருவிழாவே இந்த ஆலயத்தில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.இன்று வரைக்கும் நவராத்திரிக்கு கோலாப்பூர் மகாலட்சுமியை அலங்கரிக்க திருப்பதி திருத்தலத்திலிருந்து பெருமாளின் பரிசாக பட்டுப்புடவைகள் வந்து சேர்வது சிறப்பு.

     

    கோலாப்பூர் என்றதுமே நமக்கு ‘கோலாஸுர பயங்கரீ…’ என்ற மஹாலக்ஷ்மி அஷ்டகத்தில் வரும் வரிகள் தான் நினைவிற்கு வரும். ஆம் கோலாசுரன் என்ற அரக்கனை சிம்ம வாகினியாக வந்து தேவி மகாலட்சுமி அடக்கி அருளிய தலம் என்று ‘கர வீர மகாத்மியம்’ கூறுகிறது. பயங்கரி என்ற வார்த்தையில் தான் பயங்கரம் இருக்குமே தவிர அன்னையின் முகத்தில் இருக்காது. தவிர, தன்னை அணுகும் பக்தர்களுக்கு அவள் செல்வத்தை வாரிவாரி வழங்கும் தயாபரி.  தன்னை உள்ளன்போடு நாடி வரும் பக்தர்களுக்கு எப்போதுமே அவள் வரப்ரசாதி தான்.

    இது மட்டுமின்றி சரஸ்வதி, சிவாநதி, கும்பி நதி, பாக்வதி, பத்ரா நதி என்ற ஐந்து புண்ணிய நதிகள், கூடும்“பஞ்சகங்கா’ என்ற தனிச் சிறப்பும் கோலாப்பூருக்கு உண்டு. இது சக்தி பீடங்களுள் ஒன்று.

     

                                                                                                                                                     

     

    ‘கர்வீர் நிவாஸிநி’ என்றும் ‘அம்பாபாய்’ என்றும் போற்றப்படும் கோலாப்பூர் ஸ்ரீதேவி மஹாலட்சுமி ஆலயம் கிட்டத்தட்ட 6000 ஆண்டு பழமையானது. இந்த ஆலயத்தில், 40 கிலோ எடையுள்ள, மிக உயர்ந்த ஒளி பொருந்திய கல்லும், வைரமும் கலந்து செய்யப்பட்டு சிலா ரூபத்தில் ஒரு சதுரமான கல்லின் மீது நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ மஹாலட்சுமி அருள் பாலிக்கிறாள். தேவியின் சிரத்தின் மேல் ஆதிசேஷன் குடையாக விளங்க, பின்னால் சிம்ம வாகனமும், நான்கு கரங்களும் கொண்டு தாமரையின் மேல் நிற்கிறாள்.

     

    கோலாசுரன் என்ற கொடும் அரக்கனை மஹாலட்சுமி நவ துர்க்காக்களின் உதவியுடன், எதிர்த்து அழித்ததால்,இவ்வூர் கோலாப்பூர் எனப் பெயர் பெற்றது. நவராத்திரியின் ஒன்பது நாளூம் ஒவ்வொரு விதமான அலங்காரத்துடன் அம்மன் காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சி.

     

    ஒருமுறை அகத்தியர் தென்பகுதி யாத்திரை முடிந்து காசிக்குச் செல்லும் சமயம் களைப்பு ஏற்பட,ஈசன் அவருக்கு  காட்சியளித்து கோலாப்பூரை ‘தட்சிண காசி’யான கோலாப்பூரில் தங்கினாலே அது, உத்தர காசியில் வாழ்ந்ததற்குச் சமம் என்று அருள் புரிய அகத்தியரும், அவர் மனைவி லோபா முத்திரையும் இத்தலத்திலேயே வாழ்ந்ததாக புராண வரலாறு ஒன்று உண்டு.

     

    இக்கோவிலின் சிறப்பே தாயாருக்கு செய்யப்படும் ஆரத்தி தான். தினமும் ஐந்து முறை ஆரத்தி நடத்தப்படும். நவராத்திரியின் முதல் நாள் கலச பூஜையுடன் ஆரம்பிக்கப் பட்டு ஒவ்வொரு நாளும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அஷ்டமி அன்று இரவு அம்மன் தூங்காமல் ஊர் முழுவதும் சுற்றி வருவதாக ஐதீகம். மறு நாள் விடியற் காலை ‘தேவி ஸப்தஸதி’ பாராயணத்துடன் ஹோமம் செய்யப்பட்டு பூரணாஹூதியுடன் நவராத்திரி உற்சவம் முடிவடைகிறது.

     

    இந்தக் கோவிலின் இன்னுமோர் சிறப்பு,வருடத்தில் மூன்று நாட்கள் சூரியன் மஹாலட்சுமியை தனது ஒளி கதிர்களால் வழிபடுவது. திருமணம், புத்திரப் பேறு என தாயாரிடம் வேண்டுதலை வைப்பவர்கள், வேண்டுதல் பலித்தவுடன், அபிஷேகம் செய்து புடவை சாற்றுவது வழக்கம்.

     

    இத்தகைய பெரும் சிறப்பு வாய்ந்த கோலாப்பூர் சென்று மஹாலட்சுமி தாயாரை வணங்கி சகல ஐஸ்வர்யங்கள் பெறுவோம்.