Category: நவராத்திரி

நவராத்திரி

  • நவராத்திரி கொலு… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் ….

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளும், மாலை நேரத்தில், வீட்டில் வைத்திருக்கும் கொலு முன்பாகத் திருவிளக்கேற்றி, அம்மன் படம் வைத்து, அன்னையின் திருமுன் அமர்ந்து பக்திப்பாடல்களைப் பாடி முறைப்படி வழிபட வேண்டும்.

    முதல் நாள்: அம்பிகையைக் குமாரி வடிவமாக அலங்கரித்து, மல்லிகை மலர் மாலை சூடி வெண்பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

    இரண்டாம் நாள்: அம்மனை இராஜராஜேஸ்வரியாக வழிபட வேண்டும். மல்லிகை, துளசி மாலை சாற்றி, புளியோதரை சாதம் படைத்து வழிபட வேண்டும்.

    மூன்றாம் நாள்: அம்பிகையைக் கல்யாணி வடிவமாக வழிபட வேண்டும். சம்பங்கி, மரிக்கொழுந்து முதலிய மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

    நான்காம் நாள்: ரோகிணி தேவியாக அம்மனை வழிபட வேண்டும். ஜாதிமல்லிப்பூ மாலை சூடி, கதம்ப சாதம் படைத்து வழிபட வேண்டும்.

    ஐந்தாம் நாள்: அன்னையைக் காளிகா தேவியாகப் பாவித்து, பாரிஜாத மலர் மாலை சூட்டி, தயிர்சாதம் படைத்து வழிபட வேண்டும்.

    ஆறாம் நாள்: சண்டிகா தேவியாக அம்மனை வழிபட வேண்டும். இந்நாளில், செம்பருத்திப் பூக்களால் அன்னையை அலங்காரம் செய்து, தேங்காய் சாதம் படைத்து வழிபட வேண்டும்.

    ஏழாம் நாள்: தேவியை அன்னபூரணியாகப் பாவித்து, தாழம்பூ மாலை சூட்டி, எலுமிச்சை சாதம் படையல் செய்து வழிபட வேண்டும்.

    எட்டாம் நாள்: அஷ்ட தேவிகளுடன் எழுந்தருளும் அன்னை துர்க்கா தேவியாக அம்மனை வழிபட வேண்டும். ரோஜாப்பூ மாலை சாற்றி, பாயசம் படைக்க வேண்டும்.

    ஒன்பதாம் நாள்: அன்னை காமேஸ்வரி என்னும் சிவசக்தி கோலத்தில், அம்மனை சுபத்திரா தேவியாகப் பாவித்து, செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, திரட்டுப்பால் படைத்து வழிபட வேண்டும்.

    இவ்வாறு ஒன்பது நாட்களும் அன்னையை ஒன்பது விதமாக அலங்கரித்து வழிபடுவதால், இல்லத்தில் செல்வம், கல்வி, வீரம் ஆகியவற்றுடன் சகல சௌபாக்கியங்களும் நிறைந்து விளங்கும்.

  • புதிதாக கொலு வைப்பவர்களா?…. இது உங்களுக்கு…. 

    புதிதாக கொலு வைப்பவர்களா நீங்கள்? எந்த படியில் எந்த பொம்மை வைக்க வேண்டும் என்று தெரியுமா? இத கொஞ்சம் படிங்க

    முதல் படியில் ஓரறிவு கொண்ட புல், செடி, கொடிகளையும், 2 ஆம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளையும், 3 ஆம் படியில் மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளையும் அடுக்க வேண்டும்.

    4ஆம் படியில் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளையும், 5ஆம் படியில் விலங்குகள், பறவைகளின் பொம்மைகளையும், 6ஆம் படியில் மனிதர்களின் உருவ பொம்மைகளையும் வைக்கலாம்.

    7ஆம் படியில் சித்தர்கள், ரிஷிகளின் பொம்மைகளையும், 8ஆம் படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள் பொம்மைகளையும் அடுக்கலாம். 9 ஆம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் பொம்மைகளை வைக்கலாம். அதன் நடுவில் ஆதிபராசக்தியை கொலுவின் அதிபதியாக வைத்து வழிபட வேண்டும்.
     

  • வெற்றிகளை அள்ளித்தரும் விஜயதசமி!

    வெற்றியைக் கொண்டாடும் விழாவே விஜயதசமி. ஒன்பது நாட்கள் அசுரசக்திகளை எதிர்த்து போர் புரிந்து சம்ஹரித்த ஆதிபராசக்தி, பத்தாவது நாளான தசமியன்று சாந்தமடைந்தாள். தேவியின் வெற்றியை தேவர்கள் கூடி இந்த தசமி நாளில் கொண்டாடி மகிழ்ந்தார்கள். கலைமகளும், திருமகளும், மலைமகளும் இணைந்த சக்தியை இந்த நாளில் வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

    குழந்தைகள் படிப்பு தொடங்கும் நிகழ்ச்சியும் ஏடு தொடங்குதல் என்ற பெயரில் நடைபெறும். மேலும் புதிய தொழில் தொடங்குவது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது எல்லாமே இந்த விஜயதசமி நாளில் நடைபெறும். எல்லா சிவாலயங்களிலும் வன்னிமர வேட்டை எனும் பாரிவேட்டை நிகழ்வும் இரவில் நடக்கும். உலகமே கண்டு வியக்கும் மைசூரு தசரா பண்டிகையும் இந்த விஜய தசமி நன்னாளில் தான் கொண்டாடப்படுகிறது.

    ராவணனை ராமபிரான் வெற்றிகொண்ட திருநாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அஞ்ஞாத வாசம் முடித்த பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களைப்பெற்று அம்பிகையின் அருளைப் பெற்ற சுப நாளும் இதுவே. பண்டாசுரனை அழிக்கத் தொடங்கிய போரில், அம்பிகை அவனை சம்ஹரிக்க முடியாமல் ஈசனை எண்ணி வேண்டினாள். ஈசனும் அம்பிகையை ஆசிர்வதித்து உதவினார். அதன்படி அசுரனை எதிர்த்த அம்பிகையின் சினம் தாங்காமல் பண்டாசுரன் வன்னி மரத்தில் ஒளிந்தான். இதைக்கண்டு கொண்ட அம்பிகை வன்னி மரத்தை வெட்டி, பண்டாசுரனை வதம் செய்தாள். இதுவே வன்னிமர வேட்டை என இன்றும் கொண்டாடப்படுகிறது. அற்புதங்கள் பல கொண்ட இந்த விஜயதசமி நன்னாளில் எல்லாம் வல்ல ஆதிபராசக்தியை வணங்கி நலங்கள் யாவும் பெறுவோம்.

  • விஜயதசமி, கொலு எடுக்க நல்ல நேரம்

    அக்டோபர் 19
    விளம்பி வருடம் – ஐப்பசி 2
    சுபமுகூர்த்த நாள்
    விஜயதசமி, கொலு எடுக்க, காலை 9:00 – 10:30,
    ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
    19-அக்-2018 வெள்ளி ஸபர்9
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி மா 5.54
    நட்சத்திரம் : அவிட்டம் அ.கா 4.03
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பெருமை
    ரிஷபம் – உயர்வு
    மிதுனம் – இரக்கம்
    கடனம் – பரிவு
    சிம்மம் – சோர்வு
    கன்னி – விவேகம்
    துலாம் – அச்சம்
    விருச்சிகம் – நோய்
    தனுசு – சினம்
    மகரம் – பிரிதி
    கும்பம் – தனம்
    மீனம் – போட்டி

  • கல்வி வரம் தரும் கூத்தனூர் சரஸ்வதி தேவி

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் தான் தனிக்கோவில் உள்ளது. ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும், கற்றுணர்ந்த சரஸ்வதி ஒரு முறை தவம் செய்ய நினைத்தார். இதற்காக பூவுலகில் அமைதியும், அழகும், நிறைந்த கூத்தனூரை தேர்ந்தெடுத்தாள். அம்பாளே இங்கு தவம் புரிந்ததால் இந்த ஊர் ‘அம்பாள் புரி’ எனவும் அழைக்கப்படுகிறது.

    கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார்.

    ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.

    சத்தியலோகத்தில் ஒரு முறை சரஸ்வதிக்கும், பிரம்மனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்தொழிலால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று பிரம்மனும் வாதிட்டனர். வாதம் முற்றி, ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர்.

    இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணிய கீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், சிரத்தை என்ற பெயரில் மகளாகவும் பிறந்தனர்.

    அவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் வரன் தேட தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும். இது இயலாத காரியம். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்று கூறி, சரஸ்வதியிடம் நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாய் என்று கூறி அருள்பாலித்தார். அதன்படி சரஸ்வதி தேவி, கூத்தனூரில் தனியாக கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

    சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது.

    குழந்தைகளுக்கு கல்வி தோஷம் போக்கி ஞானப்பால் ஊட்ட, திருவுளம் கொண்ட சரஸ்வதி அமைதியே தவழும் வடிவம் கொண்டாள். வெள்ளை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். கீழ் வலது கையில் சின்முத்திரை, கீழே இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கரத்தில் கலசமும் தாங்கி காட்சி தருகிறாள்.

    ஜடாமுடியுடன் கருணை புரியும் விழிகளும், ஞானசஷஸ் என்ற மூன்றாவது திருக்கண்ணும், புன்னகை தவளும் திருவாயுமாக கிழக்கு முகமாக அருளாட்சி புரிகிறாள்.

    சிவன் கோவிலில் மகா துர்க்கையும், பெருமாள் தலத்தில் மகாலட்சுமியும் தனிக்கோவில் கொண்டு, கூடவே சரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை.

    கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் வசந்த ராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படும். சாரதா நவராத்திரி 12 நாட்களும், அடுத்த 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். இந்த நாட்களில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, மலர் அலங்காரம் என பல்வேறு கோலங்களில் அம்பாள் காட்சி தருவாள். சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம்.

    விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும். இரவு அன்னவாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறும். அன்று நூற்றுக்கணக்கான கார், வேன்களுக்கு ஆயுதபூஜை செய்வார்கள்.

  • சரஸ்வதி பூஜை, விஜயதசமி… கடவுளை வணங்க உகந்த நேரம்…

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும். நாளை அக்டோபர் 18 ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

    ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள், புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

    இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ஆயுதபூஜைக்கு நாளை 

    காலை 7.30 – 9.00

    காலை 10.30 – 12.00

    மாலை 3.00 – 4.30

    மாலை 6.00 – 7.30

    சாமி கும்பிட நல்ல நேரம் உள்ளது.

    இதே போல அக்டோபர் 19ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்று ஒரு சிலர் காலையிலும், சிலர் மாலையிலும் அன்னையை வணங்குவார்கள். பிற்பகல் 2.05 மணி முதல் 2.51 மணிவரை சாமி கும்பிட நல்ல நேரமாகும்.

  • திருப்பதியில் தங்க தேரோட்டம்

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முக்கயி நிகழ்வான தங்க தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 7-வது நாளான நேற்று இரவு சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு தங்க குதிரை வாகனத்தில் மாடவீதிகளில் பவனி வந்தனர்.

    நாளை காலை 7 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தெப்பகுளம் அருகேயுள்ள வராஹி கோவிலில் பூஜைகள் செய்து பின்னர் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

     

  • சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் ஏழாம் நாளில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 10-ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. விழாவின் 6-ம் நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்திலும், மாலை யானை வாகனத்தில் மலையப்பசாமி ராமச்சந்திரமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தார்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் சூரிய நாராயணமூர்த்தியாக நான்கு மாடவீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைதொடர்ந்து, இன்று இரவு சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா வர உள்ளார்.

  • ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமம் தோன்றிய திருமீயச்சூர்

    திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஹயக்கிரீவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமம் இதன் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர்,”லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும்?”என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர்,” ” பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும் ,”என்றார்.

    அகத்தியர் தன்மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது, இவ் லலிதாம்பிகையை தரிசித்து, ” லலிதா சகஸ்ரநாமம் ” சொன்னார்.

    அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர், ” லலிதா நவரத்தின மாலை” என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.

    நெய் குள தரிசனம்

    திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.
    அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம் 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும்.
    சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது. இதுதான் நெய்க்குள தரிசனம்.
    நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி பெற்ற தரிசனம். திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம்.

  • நவராத்திரி பிரம்மோற்சவம்… ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் ஏழுமலையான் வீதி உலா

    திருப்பதியில் நவராத்தி பிரம்மோற்சவத்தில் ஸ்ரீராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதியில் கடந்த 10-ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று இரவு கருட சேவை நடைபெற்றது. இதில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை தரிசிக்க 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர்.

    விழாவின் ஆறாம் நாளில் அனுமன் வாகனத்தில் ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதிகளில் திரண்டுஇ ஆடல் பாடலுடன் ஏழுமலையானை வரவேற்றனர்.