Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • மகிழ்ச்சி தரும் மயிலம் முருகன்!

    திண்டிவனம் அருகில் உள்ள மயிலம் எனும் கந்தனின் க்ஷேத்திரத்துக்கு வந்து வணங்கினால், மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்தருள்வார் மகேசன் மைந்தன் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது திருமயிலம் திருத்தலம். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகில், கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம் கோயில்.

    தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கே வடக்கு திசை நோக்கித் தவமிருந்து முருகப்பெருமானின் வாகனமாக மாறினார். எனவே, அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்கு உள்ள மயில் வாகனத்துக்குக் கிடைத்திருக்கிறது என்கிறது ஸ்தல புராணம்.

    முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்ஸவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிப்பது வழக்கம்.

    கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மயிலம் கோயிலில்

    பிரதி செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இதனால், கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினை அகலும் என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

    இதேபோல உற்ஸவமூர்த்தி முருகப் பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில், சஷ்டி நாளில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் விரைவிலேயே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்!

    மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்சவராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்ரமணியர்.

    பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக்குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள்பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார். மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது.

    இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வருகிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்ஸவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். ஐந்து நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் ஆறாவது நாளன்று திரும்பி வருவார்.

    மூன்றாவது உற்ஸவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்ஸவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.

  • திருப்பதியில் சிறப்பு தரிசனம் ரத்து

    கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    எனவே மே, ஜூன் மாதங்களில், முதியோர், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் வரும் பெற்றோருக்கு அளிக்கும் சிறப்பு தரிசனத்தை ரத்து செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    மாற்றுத்திறனாளிகள், முதியோர், மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் திருமலைக்கு வரும் பெற்றோர்களுக்கு, மாதம் 2 நாட்கள் தலா 4,000 சிறப்பு டோக்கன்கள் வழங்கி தரிசன ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இந்த சிறப்பு தரிசன முறையை மே, ஜூன் மாதங்களில் ரத்து செய்வதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் நேற்று அறிவித்துள்ளது.

  • வியாபாரத்தில் ஏற்றம் பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை!

    சனிக்கிழமை நாளில், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது துளசி மாலை அணிவித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் எல்லாக் காரியங்களிலும் ஜெயம் உண்டாக்கித் தந்தருள்வார் அனுமன் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    அனுமனுக்கு உரிய சனிக்கிழமை நாளில், அனுமனைத் துதிப்பதும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வது மிகவும் விசேஷம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

    இந்த நாளில், அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும். தடைப் பட்ட காரியங்கள் யாவும் நிறைவேறும். மனதில் உள்ள குழப்பம் விலகும். சங்கடங்கள் யாவும் தீரும்.

    வியாபாரத்தில் ஏற்றம் இல்லையே என வருந்துபவர்கள், தொழிலில் தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டு வருகிறது எனக் கலங்குபவர்கள், அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி, வேண்டிக் கொண்டால், விரைவில் தொழிலில் ஏற்றம் உண்டு. வியாபாரத்தில் வெற்றியைத் தந்தருள்வார் ஆஞ்சநேயர் என்கிறார் திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.

    அனுமன் சாலீசா பாராயணம் செய்வது, மனோதிடத்தையும் மன வலிமையையும் வழங்கும் என்கிறார்கள். மேலும் வெண்ணெய்க் காப்பு சார்த்தி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும்.

  • பூமிக்கு அடியில் சித்ரா பௌர்ணமி

    காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே ஏழு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, ‘ஐயங்கார் குளம்’ எனும் திருத்தலம். இங்குள்ள சஞ்சீவிராயர் சுவாமி கோயிலையொட்டி உள்ள பெரிய குளத்தின் அருகே நடவாவிக் கிணறு என்ற சிறப்பு வாய்ந்த கிணறு உள்ளது.

    இந்தக் கிணற்றுக்குள் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள் வழியாகக் கீழே சென்றால் கருங்கல்லால் ஆன, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். இது ஓர் அபூர்வ கட்டிட அமைப்பு என்று ஆய்வாளர்கள் கூறுவர்.

    எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படும் இந்தப் பெரிய கிணற்றில் ‘சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டும் உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றிவிடுவார்கள். அன்று மாலை பூமிக்கு அடியில் (கிணறு) அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமானை எழுந்தருளப் பண்ணுவார்கள்.

    மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம். அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும். இந்த அபூர்வ காட்சியைத் சுற்றுவட்டாரத்து மக்கள் வந்து தரிசித்து பெருமாளின் திருவருளைப் பெறுகின்றனர்.

  • ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர் பற்றிய வழிபாட்டு குறிப்புகள்

    நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

    நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பானகம் பிடித்தமானவையாகும்.

    கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

    நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.

    நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

    வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

    நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.

    நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக அசைவம் மற்றும் மாமிசம் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

    நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

    நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

    ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.

    நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.

    நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்.

    நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.

  • மாங்கல்ய பலம் தரும் பெரியபாளைம் பவானி அம்மன்

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது, பவானி அம்மன் திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார்.

    தல வரலாறு :
    கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘கம்சா! உன்னுடைய தங்கைக்கு பிறக்கப்போகும் 8-வது ஆண் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும்’ என்றது அந்தக் குரல். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், தங்கையென்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும், பிறந்த மறு கணமே கொடுத்துவிடுவதாக கம்சனிடம் வாக்குறுதி கொடுத்தார்.

    கம்சனும் இதற்கு ஒப்புக்கொண்டான். இருப்பினும், தங்கை தேவகியையும், வசுதேவரையும் தன் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று சிறையில் அடைத்தான். சிறையிலேயே வாழ்க்கை நடத்திய தேவகிக்கும், வசு தேவருக்கும் பிறந்த 7 குழந்தைகளை கம்சன் அழித்து விட்டான். 8-வதாக கண்ணன் பிறந்தார். அது ஒரு நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி ஒலித்தது. ‘வசுதேவரே! உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்’ என்றது.

    மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந்தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது.

    ‘கம்சனே! உன்னைக் கொல்லப்போகிறவன், ஏற்கனவே பிறந்துவிட்டான். அவன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான். உரிய நேரத்தில் உன்னைக் கொல்வான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே அங்கிருந்து இங்குள்ள பெரியபாளையம் தலத்தில் பவானியாக வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.

    வளையல் வியாபாரி :

    முற்காலத்தில் ஆந்திரப்பகுதியில் இருந்த வளையல் வியாபாரிகள் பலரும் இங்குவந்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் தங்களிடம் வளையல் வாங்கும் பெண்களுக்கு, மாங்கல்ய சுகத்துடன் வாழ மஞ்சள், குங்குமமும் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரியபாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் அவர் ஓய்வெடுத்தார். அதிகாலையில் கண் விழித்து பார்த்தபோது, அவர் அருகில் இருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த அவருக்கு, அங்கிருந்த புற்று ஒன்று கண்ணில்பட்டது. சந்தேகத்தின் காரணமாக அந்தப் புற்றை எட்டிப் பார்த்தபோது, அதற்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந்திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்புவாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா’ என்று கூறி மறைந்தார்.

    மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.

    ஆலய அமைப்பு :

    பாளையம் என்பதற்கு படைவீடு என்று பெயர். அம்மன் வீற்றிருக்கும் பெரிய படைவீடு என்பதால், பெரிய பாளையம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

    ஆலயத்திற்குள் நுழையும் போது விநாயகர் வீற்றிருக்கிறார். அவருக்கு பின்புறம் மாதங்கி அம்மன் காட்சியளிக்கிறார். ஆலயத்தின் சுற்று பிரகாரத்தில் பவானி அம்மனின் உற்சவர் சன்னிதி அமைந்திருக்கிறது. பிரகார வீதியில் வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், தாயாருடன் பெருமாள், ஆஞ்சநேயர், பரசுராமர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் பவானி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஓங்கார வடிவமாக, சங்கு சங்கரதாரிணியாக, பாதி திருவுருவத்துடன் அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக்கிறார். நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னையின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இரு கரங்களில் வாள், அமுத கலசமும் தாங்கியிருக்கிறார். அன்னையின் அருகில் கண்ணன், நாகதேவன் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.

    இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அன்னைக்கு எலுமிச்சைப் பழ விளக்கேற்றி வழிபட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும்.

    இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி அன்று 108 பால்குட ஊர்வலம், அபிஷேகம் நடைபெறும். ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் உற்சவமும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் நடை பக்தர் களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமையில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையாக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    சென்னையில் இருந்து 43 கிலோமீட்டர் தூரத்திலும், திருவள்ளூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம்.

  • ஸ்ரீரங்கனின் ஆசிபெற்ற உடையவர் ஆலயம்

    உடையவரான ராமானுஜர் பல நூல்களை இயற்றியவர். குரு பக்திக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். துறவரத்திற்கு பெருமை சேர்த்தவர். விரும்பி இறைவனடி சேர்ந்தவர்.
    காஞ்சியில் இருந்த ராமானுஜர், ஒரு முறை ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கம் வந்தார். ஆலயத்திற்கு உள்ளே சென்று ரங்கநாதரின் திருவுருவையையும், அழகிய கண்களையும் கண்டு மயங்கி நின்றார் ராமானுஜர். ரங்கநாதப் பெருமாள், ராமானுஜரை ஆசீர்வதித்து அவருக்கு ‘உடையவர்’ என்ற நாமத்தை வழங்கினார்.
    120 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்த ராமானுஜர் பல்வேறு துன்பங்களையும் போராட்டங் களையும் சந்தித்தாலும் இறை வழிபாடு மூலம் அனைத்தையும் வென்றார்.
    தனது கடைசி காலத்தில் உடையவர், இறைவனை அடைய எண்ணம் கொண்டார். ஸ்ரீரங்கனை வேண்டினார். ரங்கனும் அவருக்கு அருள்புரிந்தார்.
    ‘உன்னுடைய தொடர்பு யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்கள் அனை வருக்கும் நான் நற்கதியை அளிக்கிறேன்’ என்றார் பெருமாள்.

    மனம் மகிழ்ந்தார் உடையவர். ஆனால் அவருடைய சீடர் களுக்கு அவரை பிரிய மனம் இல்லை. எனவே தன்னைப் போலவே ஒரு விக்கிரகத்தை செய்யச்சொன்னார் உடையவர்.

    சீடர்களும் அவரைப்போலவே ஒரு விக்கிரகத்தை செய்தனர். அதைக் கட்டி அணைத்து தன்னுடைய சக்தியை அந்த விக்கிரகத்தின் உள்ளே செலுத்தினார். அதனை ஸ்ரீபெரும்புதூரில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் எண்ணப்படியே தை மாதம் புஷ்ய நட்சத்திரத்தன்று அந்த விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இத்தனை பெருமைகளுக்கும் உரிய உடைய வருக்கு திருச்சியில் ஓர் ஆலயம் உள்ளது. ‘உடையவர் ஆலயம்’ என்பது தான் ஆலயத்தின் பெயரே.

    சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். எதிரே கருவறையில் உடையவர் எனும் ராமானுஜரின் திருமேனி உள்ளது.

    இங்கு உடையவருக்கு கோடை உற்சவம் 5 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் திருவாதிரை அன்று உடையவர் வீதிவுலா வருவதுண்டு.

    உடையவரை வேண்டுவதால் தடைபட்ட திருமணம் நல்ல முறையில் நடந்தேறும் என்றும், நாள்பட்ட பிணிகள் விலகும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

    யாராவது இறந்துபோனால் 13-ம் நாள் அவருக்காக அவரது உறவினர் இங்கு வந்து உடையவர் சன்னிதியில் ‘ரியல் சாத்து’ என்ற சடங்கை நடத்துகின்றனர். 5 பேர் திவ்ய பிரபந்தம் ஓதுகின்றனர். இதனால் இறந்தவர் வைகுண்டம் செல்வதாக நம்பிக்கை.

    உடையவரின் சன்னிதிக்கு வடதுபுறம் வெங்கடேச பெருமாள் சன்னிதி உள்ளது. கருவறையில் பெருமாள், பத்மாவதி தாயாருடன் சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாள் நின்றுகொண்டிருக்க தாயார் அமர்ந்த நிலையில் சேவை சாதிக்கும் அமைப்பு சிறப்பானது என்கின்றனர் பக்தர்கள்.

    பெருமாளுக்கு எதிரே சக்கரத்தாழ்வார் காட்சி தரு கிறார். இவரும் அமர்ந்த நிலையிலேயே உள்ளார்.

    இங்கு தாயாரிடம் வேண்டியது அனைத்தும் 3 மாதங்களில் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் தாயாருக்கு சேலை வாங்கி சாத்துவதுடன், 18 மூலிகைகளுடன் அபிஷேகம் செய்து தங்கள் நன்றிக்கடனை தெரிவிக்கின்றனர்.

    தைமாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று பெருமாள்- தாயார் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. ஆடி மாதம் ஏகாதசி அன்று பெருமாள்- தாயாருக்கு ஜேஷ்டா அபிஷேகம் நடக்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    இங்கு வரும் பக்தர்கள், பெருமாள் மற்றும் தாயாரை வணங்குவதுடன் உடையவரையும் வணங்கி அருள்பெற தவறுவதில்லை என்பது உண்மையே.

    அமைவிடம்

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம். ஆட்டோ வசதியும் உள்ளது.

  • திருப்பதி லட்டு விலையை குறைக்க பரிசீலனை

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்க பரிசீலனை செய்யப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொவித்து இருக்கிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்ற புட்டா.சுதாகர் யாதவ் திருமலை முழுவதும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்கியிருந்த பக்தர்களிடம் புட்டா.சுதாகர் யாதவ் குறைகளை கேட்டார். திருமலையில் சுவாமி தரிசம் செய்ய அதிக நேரம் தங்க வேண்டி இருப்பதால், விரைவில் சாமி தரிசனத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
    அதற்கு அவர், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களை விரைவில் கோவிலுக்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்குத்தான் நாங்கள் அதிக முன்னுரிமை வழங்குகிறோம் என்றார்.
    மேலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்கவும் நடைபெற உள்ள அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதித்து பரிசீலனை செய்யப்படும், என்றார்.

  • வீட்டு பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

    ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி.
    அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
    பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.
    பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
    முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது. பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
    பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம்.
    இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

  • வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக….

    நமது அன்றாட பழக்க வழக்கங்களைப் பொறுத்தே நமது இல்லங்களில் ஶ்ரீதேவி லட்சுமி தேவி குடிகொள்வதும், மூதேவி குடிகொள்வதும் அமைகிறது. நமது வீட்டில் ஶ்ரீதேவி மட்டும் குடிகொள்ள நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதைப் பார்க்கலாம்.
    தினசரி எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம்.

    வீட்டில் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சாமி கும்பிட வேண்டும்.

    வாரத்திற்கு இருமுறையாவது வீட்டைக் கழுவி, அப்படியே பூஜை அறையையும் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும்.

    பூஜை அறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும்.

    தினந்தோறும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்மையைத் தரும்.

    பூஜை அறையில் ஏற்றப்படும் தீபங்களை நாமாக அணைக்கக்கூடாது. அது தானாக முழுவதும் எரிந்து அணைதல் நல்லது.

    வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால், தீய சக்திகள் வீட்டிற்குள் வராது என்பது ஐதீகம்.

    பூஜை முடிந்ததும் பெண்கள் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் குங்குமம் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும்.

    வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். அந்தச் சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும்.

    வீட்டில் துளசி மற்றும் வேப்ப மரம் வளர்ப்பது நல்லது. தினந்தோறும் அதன் அருகிலாவது நாம் சென்று வருவது சிறப்பு.

    பூஜை அறையிலோ, வீட்டின் முற்றத்திலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைப்பது நல்லது.

    சாமிக்கு இலையில் வைத்துத்தான் உணவு மற்றும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.