Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • வறுமையை போக்கும் அட்சய பைரவர்

    பொதுவாக பைரவரின் கையில் கபாலம் இருக்கும். ஆனால் காரைக்குடி அருகிலுள்ள இலுப்பைக்குடி தான் தோன்றீஸ்வரர் கோவிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார்.

    சித்தர்களில் ஒருவரான கொங்கனவர், மூலிகைகளைப் பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார்.

    மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கனவர் பைரவரை வழிபட்டு ஆயிரம் மாற்றுகளாக தங்கம் தயாரித்தார்.

    அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்ற போது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு ‘சுயம்பிராசேஸ்வரர்’ என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டன. இத்தலத்தின் பைரவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. சுவர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

    இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.
    பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட ‘நாய்க்கடி பலகை’ இருக்கிறது. நாய்க்கடிபட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,. தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

  • சலக செல்வங்களையும் அருளும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

    தினமும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.
    செல்வம் அருளும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்
    ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம் :
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
    ஞானாயை கமலதாரிண்யை
    சக்தியை சிம்ஹ வாஹின்யை
    பலாயை ஸ்வாஹா !
    ஓம் குபேராய நமஹ
    ஓம் மகாலட்சுமியை நமஹ

    என தினமும் 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

  • பஞ்சபூதங்களை உள்ளடக்கிய மதுரை

    பஞ்சபூத தலங்களில் திருவானைக்காவல் நீர் ஸ்தலம்,

    சிதம்பரம் ஆகாய ஸ்தலம்,

    காஞ்சிபுரம் நில ஸ்தலம்,

    திருவண்ணாமலை நெருப்பு ஸ்தலம்,

    காளஹஸ்தி காற்று ஸ்தலம்

    என்று எல்லோரும் அறிந்ததே

    ஆனால் மதுரையிலேயே

    பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை
    ஆம் …
    மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் ‘நீர் ஸ்தலம்’,
    சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் ‘ஆகாய ஸ்தலம்’,
    இம்மையில் நன்மை தருவார் கோயில் ‘நில ஸ்தலம்’,
    தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் ‘நெருப்பு ஸ்தலம்’,
    தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் ‘காற்று ஸ்தலம்’ ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

    அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை ஊதா பச்சை சிவப்பு மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .
    .அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.
    திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
    காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
    காசியில் இறந்தால் புண்ணியம்,
    சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
    திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .
    மதுரையில் பிறந்தாலும் மதுரையில் வாழ்ந்தாலும் மதுரையில் இறந்தாலும் மதுரையில் வழிபட்டாலும் மதுரையை நினைத்தாலும் புண்ணியம் ….”

  • கடன் தீர்க்கும் இறைவர்

    கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர திருச்சேறை ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரரை சரணடையுங்கள். நோயற்ற வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதே போல கடனில்லாத வாழ்வு வாழ்வதும் மிகவும் முக்கியம்.

    திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.

    இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வமாகவும், எல்லா வகை கடன்களையும் நிவர்த்திசெய்கின்ற கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார்.

    ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.

    தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. கடன்நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை என 3 துர்க்கைகள் அருள்பாலித்து வருகின்றனர்.

    கடன் தீர்க்கும் இறைவர்
    இத்தலத்தில் பரிகார தெய்வமாக ரிண விமோசன லிங்ககேஸ்வரர் விளங்குகிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.

    சிவனுக்கு அபிஷேகம்
    பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.

    அஷ்டமியில் பைரவர்
    தேவார பாடல் பெற்ற பைரவ சன்னதியும் உள்ளது. இங்குள்ள பைரவரை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்.

    எப்படி செல்வது
    மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு. கும்பகோணம் – திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

  • நோய் தீர்க்கும் திருவெற்றியூர் பாகம்பிரியாள்!

    புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் சிவகங்கை மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனை வழிபட்டு தீர்க்காயுள் பெற்று வாருங்கள். ஆவணி மாத ஓணத்திருநாளுக்கும் இந்தக் கோயில் வரலாற்றுக்கும் சம்பந்தம் உள்ளது.

    தல வரலாறு:
    மகாபலி சக்கரவர்த்தி வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கியவன். குடிமக்கள் அவனைத் தங்கள் துன்பங்களை நீக்கவல்லவன் என்று பாராட்டினர். மூவுலகையும் அவன் வென்றான். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களை மதிக்காமல் ஆணவம் கொண்டான். இதனை அறிந்த நாரதர், சிவபெருமானிடம் முறையிட்டார். இதற்கு பதிலளித்த எம்பெருமான், ‘‘முற்பிறவியில் என்னுடைய சந்நிதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டா மணிவிளக்கை எலி உருவத்தில் வந்து தூண்டிவிட்டான். இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல,” என்றார்.

    இதையடுத்து திருமாலிடம் தனது கோரிக்கையை வைத்தார் நாரதர். இதனை ஏற்ற திருமால், வாமன உருவம் கொண்டு மகாபலி மன்னனிடம் யாசிக்க சென்றார். அவனிடம் மூன்றடி மண் கேட்டார். ஆகாயத்திற்கும், பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு, உலகை இரண்டடியால் அளந்து, மூன்றாம் அடி கேட்டபோது வந்தவர் யார் என புரிந்த மன்னன் பணிவுடன் தன் தலையை காண்பித்தான். மகாபலி பிறவிப் பயனை முடித்து அதல பாதாளத்தில் மறைந்தான்.

    தர்மதேவதை:
    இதனை அறிந்த தர்மதேவதை தன் ஒரு மகனை இழந்த துன்பத்தால் துடித்தாள். சிவபெருமானிடம் முறையிட்டாள். மகாபலியின் தலையில் அளந்த மாதவன் காலில் புற்று ஏற்படுமாறு சபித்தார் சிவபெருமான். செருக்குற்றவனை அழித்த தனக்கு, புற்றால் வேதனை ஏற்பட்டது குறித்து சிவபெருமானிடம் புலம்பினார் மகாவிஷ்ணு.

    இது கேட்ட சிவபெருமான் திருமாலிடம், ‘‘18 தீர்த்தங்களில் நீராடி, சிவ ஆலயங்களை வணங்கி, ஆடும் யானையும் தரிசித்த இடத்திலுள்ள ஆதி ரத்தினேஸ்வரரை தரிசித்து, தெற்கிலுள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராட வேண்டும். அங்குள்ள லிங்கத்தை தழுவி வழிபட்டால் புற்று நீங்கும்,” என்று கூறி மறைந்தார்.

    இவ்வூரே திருவெற்றியூர் ஆனது.திருவெற்றியூர் வந்த மகாவிஷ்ணு சிவனை வழிபாடு செய்தார். புற்று மாயமாய் மறைந்துவிட்டது. எனவே இங்குள்ள சிவபெருமானுக்கு ‘பழம் புற்றுநாதர்’ என்றும், அம்பாளுக்கு ‘பாகம்பிரியாள்’ என்றும் பெயர் வழங்கலாயிற்று.

    சிறப்பம்சம்:
    குணப்படுத்த முடியாத புற்றுநோய்க்கு மருந்து தரும் நாயகியாக விளங்குகிறாள் பாகம் பிரியாள். இவளது சந்நிதியில் தரும் தீர்த்தத்தை அருந்தினால், புற்றுநோய் தீரும் என்பது நம்பிக்கை. மரணபயத்துடன் இங்கு வருவோர், புத்துணர்வு பெற்று நம்பிக்கையுடன் செல்கின்றனர். இங்குள்ள தலவிருட்சமான அரசமரத்தை சுற்றி வந்தால் மகப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. இவ்வூர் மக்கள் தங்கள் தாய்வழி சொத்தை அம்பாளுக்குரியதாக கருதி, மகள்களுக்கு எழுதி வைக்கின்றனர். இவ்வூர் அருகிலுள்ள திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் புகழ்மிக்கது.
    திறக்கும் நேரம் : காலை 6 -–- 11, மாலை 4 – – இரவு 8.
    இருப்பிடம்: மதுரையில் இருந்து 140 கி.மீ., தூரம் ராமநாதபுரம். அங்கிருந்து 60 கி.மீ., தூரம் திருவாடானை. இங்கிருந்து டவுன் பஸ்களில் 7 கி.மீ., சென்றால் திருவெற்றியூர்.

  • ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்ட விழா கொடியேற்றம்

    ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் மே 13-ல் நடைபெறவுள்ள சித்திரைத் தேரோட்ட விழா கொடியேற்ற நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது.
    விழாவையொட்டி சனிக்கிழமை அதிகாலை மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு துவஜாரோஹண மண்டபத்தை 3.45-க்கு வந்து சேர்ந்தார்.
    தொடர்ந்து 5.30-க்குள் வேதமந்திரங்கள் முழங்க தங்கக் கொடிமரத்தில் கொடியேறப்பட்டது. அப்போது நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் 6.15-க்கு புறப்பட்டு கண்ணாடி அறை சென்று சேர்ந்தார் நம்பெருமாள்.
    பின்னர் மாலை 6.30-க்கு உபநாச்சியார்களுடன் அவர் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து, சந்தனு மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து இரவு 8.30-க்கு புறப்பட்டு யாகசாலை மண்டபத்தை அடைந்து, திருமஞ்சனம் கண்டருளி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறை சென்று சேருகிறார்.
    இதைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
    முக்கியமாக வரும் 8-ஆம் தேதி தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார்.
    விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்கின்றனர்.

  • பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா 14 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். பழனி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது.வழக்கமாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
    அப்போது மலைக்கோவிலில் உள்ள மூலவரை குளிர்விக்கும் விதமாக பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது தொன்று தொட்டும் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும்.
    அதன்படி கடும் கோடை காலமான அக்னி நட்சத்திர கழு நாட்களாக சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்கள், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்கள் விளங்குகிறது. இந்த 14 நாட்களே பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.
    அக்னி நட்சத்திர கழு திருவிழாவையொட்டி பழனி கோவிலில் வருகிற 8-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 14 நாட்களும் உச்சிக்கால பூஜையில் முருகனுக்கு சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகம் செய்யப்படுகிறது. அக்னி நட்சத்திர கழு திருவிழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

  • காயத்திரி மந்திரம் சொல்வதால் நடக்கும் அதிசயம்…

    தினமும் காயத்ரி மந்திரம் சொல்வதால் நமக்கு நடக்கும் அதிசயம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
    ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு“காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.
    காயத்ரி மந்திரம்:
    ஓம் பூர்: புவ: ஸுவ:
    தத் ஸவிதுர் வரேண்யம்
    பர்கோ தேவஸ்ய தீமஹி
    தியோ: யோந: ப்ரசோதயாத்..!
    இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.
    இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. இதனை ஜெபித்தால் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும்.
    காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி-க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி-க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதி-க்காகவும் ஜபிக்கப்படுகிறது.
    காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.

  • திருமணம் வரம் கைகூட வைக்கும் கோயில்…

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில். இந்த கோயில் கருங்கற்களைக் கொண்டு கற்றளி முறையில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. கோயில்கள் கட்டி முடித்தவுடன் கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். அப்போது கோயிலின் மேல் பகுதியில் கலசங்கள் அமைப்பார்கள்.
    இந்த கலசங்கள் செப்பு, தங்கம், வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டதாக இருக்கும். ஆனால் இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ள மூன்று கலசங்களும் மண் பானைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற மண் கலசங்கள் இப்பகுதியில் உள்ள எந்த கோயிலிலும் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. இங்குள்ள மூல சன்னிதானத்தில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி தாயார், ஆண்டாள் அம்மாள் சமேதராக காட்சியளிக்கிறார்.

    குழந்தை பாக்கியம்:

    இந்த கோயிலில் விநாயகர், ஆண்டாள், கிருஷ்ணர், சச்சிதானந்தாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார் மற்றும் லட்சுமி சிலைகளும் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இந்த கோயிலில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு ரோகிணி நட்சத்திரத்தில், குழந்தையில்லா தம்பதிகள் பால் அபிஷேகம் செய்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இங்கு சனிக்கிழமை தோறும் பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்கின்றனர். இதுபோல் ஒவ்வொரு மாதமும் உபயதாரர்களால் திருவோணம் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடைபெறும். தினமும் காலை, மாலையில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    சொர்க்கவாசல் திறப்பு:

    மேலும் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் பூடாவள்ளி நிகழ்ச்சியும், சித்திரை மாதம் திருக்கல்யாண உற்சவமும் மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழாவின்போது சொர்க்கவாசல் திறப்பும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மரக்காணம் மட்டுமின்றி சென்னை, புதுவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    திருமண யோகம்:

    பழமை வாய்ந்த கோயில்கள் என்றால் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கும் அந்த வகையில் திருமணம் ஆகாதவர்கள் இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை பயபக்தியுடன் வேண்டி வணங்கினால் அவர்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும் என்று கூறுகின்றனர். இதுபோல் திருமணம் நடந்த பின்னர் கணவன்மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து இருந்தாலும் அவர்கள் இங்கு வந்து பூஜை செய்து வணங்கினால் பிரச்னைகள் அனைத்தும் உடனடியாக தீர்ந்து மீண்டும் சமாதானம் அடைவார்கள்.

    செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து வரும் பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தால் பூமீஸ்வரர் கோயில் நிறுத்தத்தில் இறங்கி மரக்காணம் செல்லும் பேருந்தில் வந்தால் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலை அடையலாம். திண்டிவனம், புதுச்சேரியில் இருந்தும் நேரடியாக மரக்காணத்திற்கு பேருந்து வசதி உள்ளது.

  • திருப்பதியில் 2 மணி நேரத்தில் இலவச தரிசனம்!

    இரண்டு மணி நேரத்தில்,திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காட்டினால், சுவாமி தரிசனம் செய்யும் முறை அமலுக்கு வந்தது.
    இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், தங்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டினால் 2 மணி நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கும் முறை கடந்த டிசம்பர் மாதமும், கடந்த வாரமும் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை முதல் புதிய நடைமுறையை தேவஸ்தானம் அமல்படுத்தியது.
    இதற்காக, திருப்பதி மற்றும் திருமலையில் தலா 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பக்தர்கள் தங்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து பயோ மெட்ரிக் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய முடியும்.