Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

    கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 19-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை போன்றவை நடந்தது.

    தொடர்ந்து மலர்கள் மற்றும் மா இலை தோரணங்களால் திருக்கால் அலங்கரிக்கப்பட்டு கிழக்கு வாசலில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கோவிலின் வடக்கு வாசலில் உள்ள நுழைவு பகுதியில் கால்நாட்டப்பட்டது.

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, மேல்சாந்தி மணிகண்டன் ஆகியோர் கால் நாட்டினர். தொடர்ந்து பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

    நிகழ்ச்சியில், கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேரோட்டம்

    வைகாசி விசாக திருவிழா நாட்களில் காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்கிறது. மாலையில் பக்தி சொற்பொழிவு, வாகன பவனி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    27-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 28-ந் தேதி இரவு 9.30 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறும்.

  • வீரராகவ பெருமாள் கோவிலில் ஏகாதசி திருமஞ்சனம்

    திருவள்ளூரில் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று, ஏகாதசி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது.
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக உற்சவர் மாடவீதி புறப்பாடு நடந்தது.திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், உற்சவருக்கு ஏகாதசி திருமஞ்சனம் அலங்காரம் நடந்தது.
    கொண்டமாபுரம் தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், ராமருக்கு ஏகாதசி பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது.பெருமாள் கோவில்களில் நடைபெற்ற திருமஞ்சனம் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

  • விளக்கு துலக்க நல்ல நாள்

    குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

    விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்
    ஞாயிறு – கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
    திங்கள் – மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
    வியாழன் – குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
    சனி – வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.

    தீபத்தை குளிர வைக்கும் முறை பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

    விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன. தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.

  • சபரிமலையில் மே 14-ல் நடை திறப்பு

    சபரிமலை ஸ்ரீஐயப்பன் திருக்கோயிலில், வைகாசி மாத சிறப்பு பூஜைகளுக்காக மே 14 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

    மே 14-ம் தேதி மாலை 5மணியளவில், திருக்கோயிலின் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர், இரவு 10 அளவில் ஹரிவாராசனம் இசைக்கப்பட்டு நடை சாத்தப்படும். மீண்டும், மறுநாள் 15-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனமும் அபிஷேகங்களும் நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சியில் சந்நிதான தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தலைமை தாங்கி நெய் அபிஷேகத்தைத் தொடங்கிவைப்பார். சிறப்பு ஆராதனைகளோடு வைகாசி பூஜைகள் நடைபெறும். மே 19-ம் தேதி வரை வழக்கமான எல்லா பூஜைகளோடு நெய் அபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்மன பூஜைகளும் நடைபெறும். 19-ம் தேதி இரவு 7 மணியளவில் திருக்கோயில் படிகளுக்கு பூஜை நடைபெறும். பின்னர், 10 மணியளவில் திருக்கோயில் நடை சாத்தப்படும்.

    ஐந்து நாள் நடை திறப்பில், 17-ம் தேதி திருக்கோயிலில் ஸ்ரீஐயப்பன் கோயில் பற்றி தேவப்பிரசன்னம் பார்க்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்ற பங்குனி உத்திர ஆராட்டு விழாவின்போது, ஸ்வாமி சிலையைத் தாங்கி பம்பைக்குச் சென்ற கோயில் யானை மிரண்டு ஓடியது. யானையின் மீதிருந்த ஸ்வாமி சிலையும், அர்ச்சகரும் கீழே விழுந்தனர்.

    இந்தச் செயல், தீய சகுனமாகக் கருதப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிவதற்காகத் திருக்கோயில் சார்பாக 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தேவப்பிரசன்னம் பார்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு, பரிகார பூஜைகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏகாந்தமாக ஸ்ரீஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள், வரும் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சபரிமலைக்குச் சென்று தரிசிக்கலாம்.

  • திருநள்ளாறு கோயிலில் பிரமோத்ஸவ கொடியேற்றம்

    திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்று இருக்கிறது.

    ஸ்ரீ சனீஸ்வரபகவான் தலமாகத் திகழும் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் அமைந்திருக்கும் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் வருடாந்திர பிரமோத்ஸவ கொடியேற்றம் முதல் தெப்ப உத்ஸவம் வரை விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது.

    இந்த ஆண்டுக்கான உத்ஸவ தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை 8.15 -க்கு மேல் 9.45 மணிக்குள் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.

    முக்கிய நிகழ்ச்சிகளாக 18-ஆம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு, 23-ஆம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் மின் அலங்கார சப்பரப் படலில் வீதியுலா, 25-ஆம் தேதி தேரோட்டம் மற்றும் 26-ஆம் தேதி சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா, 27-ஆம் தேதி தெப்போத்ஸவத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.

    திருவிழாவையொட்டி தேரோட்டத்தில் 5 தேர்கள் பவனிவரும். இவை அலங்காரம் செய்யும் பணிகளும், சப்பரப்படல் அலங்கரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

  • சடாரி வைத்து கொள்வதின் மகிமைகள்

    திருமால் ஆலயங்களுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் எல்லா சந்நதிகளிலும் தீர்த்தம், திருத்துழாய் என்கிற துளசி அல்லது மஞ்சள் காப்பு, குங்குமம் முதலிய பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதுடன் ஸ்ரீசடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான் அந்தந்த சந்நதிகளில் வழிபாடு பூர்த்தியானதாகக் கருதுவார்கள்.

    சடாரி எனப்படுவது என்ன?

    திருவடி அடியார்களைக் காப்பது திருவடி நிலை

    திருவடி நிலையே பாதுகை

    பாதுகையே சடாரி

    சடாரியே நம்மாழ்வார்

    பாதுகை, சடாரி, ஆழ்வார் எல்லாம் ஒன்றே

    வைணவ ஆலயங்களில் எம்பெருமான் திருவடிக்கு முன்பாக இருக்கும் பாதுகைகள் கொண்ட திருவடி ‘மகுடம்’ சடாரி எனப்படுகிறது. அதற்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? ஆழ்வாரும் பாதுகையும் ஒன்றேதான் என்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது. பெருமானுடைய பாதுகை ஆழ்வாருடைய திருநாமமான சடாரி எனும் நாமத்தை வகிக்கிறது. பாதுகையை நம் தலையில் கோயில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாய் பெருமாள் திருவடி சம்பந்தம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.

    இந்த வகையில், நமக்குப் பெருமாள் திருவடியை ஸ்பரிசம் அருளியவர்கள் இருவர். ஒருவர் ஆழ்வார், மற்றது பாதுகை. ஆகவே இருவருக்கும் சடாரி என்ற திருநாமம் இருப்பதில் வியப்பில்லை. ஆழ்வாருடைய அமுதத் திருவாய் ஈரத்தமிழைப் பயின்று எம்பெருமானை அடிபணிவோர்க்குப் பரமனருள் சித்திக்கும்.

    அதற்குப் பாக்கியமில்லாதவர்களுக்கு, பாதுகை அப்பேற்றை அளிக்கிறது. சுவாமி தேசிகனின் பெருமைக்கு உவமை கூறும் திவ்ய ஸுக்தி அவர் வடமொழியில் அருளிச் செய்துள்ள ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் ஸ்தோத்திர மாகும். அதை அருளுவதற்கான காரணம் என்ன? பகவானுடைய திருவடி மகிமையை பக்தர்களாகிய நாம் அறிந்து உய்யும்படி தாய் போன்ற கருணையுடன் ஆயிரம் பாடல்கள் பாடினார் சடகோபன்.

    அந்த இன்தமிழ் ஆயிரத்துக்கு பிரதி சம்பாவனையாக ஆழ்வாருக்கு வட மொழியில் ஆயிரம் சமர்ப்பித்தார் நம் தேசிகன். எவ்வாறு பகவானுடைய திருவடிகளின் பெருமையை அவனுடைய பாதுகையான சடகோபனால் மட்டுமே கூறமுடியுமோ, அங்கனமே அந்த சடகோபனின் பெருமையை அவனுடைய பாதுகைகளான சீடன் மதுரகவியால் தானே கூறமுடியும்? இந்த வகையில் இவர் அருளிச் செய்த ‘கண்ணிநுண் சிறுத்தாம்பின்…’ ஒரு பகுதியைப் பார்க்கலாம். ‘பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்’ சடகோபனின் பெருமையை மிக எளிமையாக ஆனால், விளக்கமாக விவரிக்கும் இரு அடிகள் இவை. பகவானுக்கும் சடகோபனுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் இதுதான். செயல் திருந்தியவரையே பகவான் ஆட்கொள்வான்.

    ஆனால், சடகோபனோ திருந்தத்தக்க பாங்கற்றவர்களையும் தாமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தண்டித்துத் திருத்தி பகவானின் திருவடிகளை அடையச் செய்வான். இந்தப் பெருமைக்கு மதுரகவியாழ்வாரே பிரதான உதாரணம். அதாவது, நம்மாழ்வாரும் இதர ஆழ்வார்களும் ஆயிரக்கணக்கிலே எம்பெருமானின் பெருமையைப் பாடியதாலேயே ஆழ்வார்கள் எனும் பெருமையைப் பெற்றார்கள். ஆனால், மதுரகவியாழ்வாரோ எம்பெருமானைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடாமல், குருவான நம்மாழ்வார் மீது பத்து பாசுரங்கள் பாடியே ஆழ்வார்கள் வரிசையில் இடம் பெற்றுவிட்டார்.

    சடாரி, பகவானுடையது மட்டுமின்றி, பிராட்டியினுடைய பாதுகைகளையும் குறிப்பதாகும். ஆனால், நம்மாழ்வாருக்குப் பின்னால் வந்த ஆழ்வார்
    ஆச்சார்யர்களுடைய பாதுகைகளும் சடாரி என்றே குறிப்பிடப்படுகின்றன. ஆனால், இது தவறு. நம்மாழ்வார் மற்றும் பிற ஆழ்வாராச்சார்யார்களுக்கு அபசாரம் தோற்றுவிப்பது என்றும் ஒரு வாதம் உண்டு. அப்படியானால் அவர்களுடைய பாதுகைகளை என்ன சொல்லி அழைப்பது? அந்தந்த ஆச்சார்யார்களுடைய பாதுகைகளை அவர்களின் பிரதான சிஷ்யர்களின் திருநாமத்தைக் கொண்டே அழைக்க வேண்டுமென்று பெரியோர்கள் கூறுவர். இதை அடிப்படையாகக் கொண்டு
    ஆழ்வார்கள்-ஆச்சார்யார்கள் பாதுகைகளின் திருநாமங்களுக்குச் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

    கருடபகவான் சடகோபன்
    ஆஞ்சநேயர் ராமதாசர் அல்லது
    கம்பநாட்டாழ்வான்
    சேனை முதலியார் சடகோபன்
    ஆண்டாள் சடகோபன்
    நம்மாழ்வார் மதுரகவிகள்
    மதுரகவிகள்
    பொய்கையாழ்வார்
    பூதத்தாழ்வார்
    பேயாழ்வார்
    திருமழிசைப்பிரான்
    பெரியாழ்வார்
    குலசேகரர்
    தொண்டரடிப்பொடிகள் ராமானுஜன்
    திருப்பாணாழ்வார்
    நாதமுனிகள்
    உய்யக்கொண்டார்
    மணக்கால் நம்பி
    ஆளவந்தார்
    பெரியநம்பி
    திருக்கோட்டியூர்நம்பி
    பெரிய திருமலை நம்பி
    திருக்கச்சி நம்பி
    திருவரங்க பெருமாள் அரையர்
    பாஷ்யகாரர் முதலியாண்டான்
    வேதாந்த தேசிகன் நயினாராசார்யார்
    எம்பார் பட்டர்
    பட்டர் நஞ்ஜீயர்
    நம்பிள்ளை வடக்கு திருவீதிப்பிள்ளை
    வடக்கு திருவீதிப்பிள்ளை – லோகாச்சாரியார்
    லோகாச்சாரியார் – மணவாளமாமுனிகள்
    மணவாளமாமுனிகள் – பொன்னடியாம்
    செங்கமலம்.

    பகவானுடைய திருப்பாதுகைகளுக்கு உரித்தான பெருமைகளெல்லாம் ஆழ்வார் ஆச்சாரியார்களுடைய திருப்பாதுகைகளுக்கும் உண்டு என்பதில் ஐயமேதுமில்லை. எனவே, கோயில்களுக்குச் செல்லும்போது அனைத்துச் சந்நதிகளிலும் சடாரி பெற்றுக்கொண்டு நம்மை புனிதப்படுத்திக் கொள்வது நமக்கு நல்ல கதியை அளிக்கும்.

  • சக்கர செப்புத் தகட்டின் மகிமை

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்மலையில் வெண்ணைப் பெருமாள் பிள்ளை- பாடகவல்லி தம்பதியர் வாழ்ந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்களாகியும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. ஒரு முறை இந்தத் தம்பதியர், குழந்தை வரம் வேண்டி, சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் ஆலயத்திற்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். அதன்பிறகு அவர்களின் பாதயாத்திரைப் பயணம் பவுர்ணமிதோறும் வாடிக்கையானது.

    ஒவ்வொரு பவுர்ணமியிலும் இந்த தம்பதியர் சங்கரன் கோவிலுக்கு வந்துவிடுவார்கள். அங்கே இறைவனை வழிபட்டு, உண்ணா நோன்பும், மவுன விரதமும் இருப்பார்கள்.

    ஒரு நாள் சங்கரன்கோவில் ஆலயத்தில் அமர்ந்திருந்த அந்த தம்பதியரின் அருகில் ஒரு சாது வந்தார். ‘கவலை வேண்டாம்.. தரணி போற்றும் பிள்ளையொன்று, இறைவன் அருளால் உங்களுக்குக் கிடைக்கும்’ என்று கூறி திருநீறு கொடுத்தார்.

    அந்த சாது சொன்னது போலவே சில நாட்களில் பாடக வல்லியம்மாள் கர்ப்பம் தரிசித்தார். அந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தைப் பிறந்தது. தங்களுக்குக் குழந்தை வரம் அளித்த சங்கரநாராயணரின் பெயரையே அந்தக் குழந் தைக்குச் சூட்டினர்.

    பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே சங்கரநாராயணன், வயதுக்கு மீறிய அறிவாற்றல் பெற்றுத் திகழ்ந்தார். பன்னிரண்டு வயது முடிவதற்குள் ‘பிறவாச் சுவடி’யை படித்து முடித்து விட்டார். அடுத்து மூதுரையும் பயிலத்தொடங்கினார்.

    ஒருநாள் பள்ளியில் சங்கரநாராயணன் தன்னுடைய குருவிடம் பாடல் ஒன்று குறித்து சந்தேகம் கேட்டிக்கொண்டிருந்தார். அப்போது வெளியே இருந்து யாரோ தன் பெயரைச் சொல்லி அழைப்பதை உணர்ந்த சங்கரநாராயணன், வெளியே வந்து பார்த்தபோது அங்கே ஒருவர் சடாமுடியுடன் காவி உடை தரித்து நின்றுகொண்டிருந்தார்.

    அவரைப் பார்த்த உடனேயே, சங்கரநாராயணனுக்கு இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது. ‘பெருமானே!’ என்று அழைத்தபடி அவரது காலில் விழுந்தார்.

    வந்தவர் ராமகிரிநாதர்.. இவர் சாட்சாத் அகத்தியப்பெருமானே…

    தன் காலில் விழுந்தச் சிறுவனைத் தூக்கி விட்ட முனிவர், ‘சங்கரநாராயணா! உன்னுடைய நல்வினை பழுக்கும் நாள் வந்துவிட்டது. எனவே கல்லாத நெறியும், துன்பம் இல்லாத நிலையும் உணர்த்த வந்த என்னுடன் சற்று வருவாய்’ என்று அழைத்தார்.

    மறுபேச்சே பேசவில்லை. அவருடன் சென்றார் சங்கரநாராயணன்.

    இருவரும் தென்மலைக்கு மேற்கிலுள்ள குளக்கரை விநாயகர் கோவிலை நோக்கி விரைந்தனர். அந்த ஆலயத்தில் அமரவைத்து, சங்கரநாராயணனுக்கு அனைத்து ஞானங்களையும் புகட்டினார் ராமகிரிநாதர். அந்த இளம் நெஞ்சில் ஞானவிளக்கேற்றி வைத்தார். சங்கர நாராயணனும், அவரை தன் குருவாக ஏற்று அனைத்தும் கற்றுணந்தார்.

    குருவின் அருளாலும், திருவின் அருளாலும் ஞானப் பெருவெளியில் நடைபயிலத் தொடங்கினார். பசி மறந்து, ஏட்டைத் துறந்து, பற்றற்றுப் பாசமற்று விநாயகர் கோவிலையே இருப்பிடமாக்கிக் கொண்டு தனித்திருந்தார். வருடங்கள் பல ஓடிவிட்டன.

    தன் மகனின் நிலையைக் கண்டு பெற்றோர் வருந்தினர். ‘பிள்ளைக்குத் திருமணம் செய்துவைத்தால் அவனுடைய போக்கு மாறலாம்’ என நினைத்தனர். எனவே வலுக்கட்டாயமாக, சங்கர நாராயணனுக்கு முத்தம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துவைத்தனர்.

    திருமணமானது முதல் மனைவியின் முகத்தைக்கூட சங்கரநாராயணன் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. மனைவியின் கரம், தெரியாமல் தன் மேல் பட்டு விட்டாலும் கூட, தன் அருள் வாழ்க்கைக்கு களங்கம் வந்துவிடுமோ என்று உடல் நடுங்கிப் போவார், சங்கரநாராயணன்.

    சில வருடங்கள் இப்படியேப் போனது. தன்னுடைய குருவான ராமகிரிநாதர், விநாயகர் குளக்கரையில் வீற்றிருப்பதைக் கண்டு, அங்கு சென்று அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார், சங்கரநாராயணன்.

    அவரைப் பார்த்ததுமே, ராமகிரிநாதருக்கு அனைத்தும் விளங்கிவிட்டது. ‘சங்கரநாராயணா! இல்லறம் என்பதும் நல்லறமே! அதனை ஏற்றபின் தட்டிக்கழிப்பது குற்றம். இல்லறநெறியில் இருந்துகொண்டு, மனைவியின் மேல் அன்புகாட்டாமல் இருப்பது பாவம். பெற்றோருக்கும், வாழ்க்கைத் துணைக்கும், வழிபடும் தெய்வத்துக்கும், விருந்தினருக்கும், உறவினருக்கும் பெருந்துணையாக இருப்பதே நல்ல இல்லறம்’ என்றார் ராமகிரிநாதர்.

    அதைக் கேட்ட சங்கரநாராயணன், ‘பெருமானே! தங்கள் பேச்சால் என் மூச்சே நின்று விடும் போல் இருக்கிறது. குருவே! குடும்பம் நடத்தப் பொருள் வேண்டாமா?, பொருள் ஈட்ட ஏதாவது தொழில் வேண்டாமா?, எனக்கு என்னத் தொழில் தெரியும்? எதை வைத்து நான் குடும்பம் நடத்துவது?’ என்று தன் இயலாமையால் கண்கலங்கினார்.

    ராமகிரிநாதர் புன்னகையுடனே கூறலானார். ‘சங்கரநாராயணா! சஞ்சலப்படாதே. மானுடர்களுக்கு வினைவழி ஏற்படும் துயரங்களை, அருள் வழியில் நீக்கும் ஓர் அற்புதச் செப்புத்தகடை உனக்குத் தருகிறேன். அந்தத் தகடு மூலமாக பிணிகள், பீடைகள், துயரங்கள் அனைத்தையும் போக்கிவிட முடியும். நலமும், வளமும், இன்பமும் மக்களுக்கு சேர்க்க வல்ல திருவருள் சக்திகொண்டது, அந்த செப்புத் தகடு. அதனை உபயோகிக்கும் மந்திரத்தை உனக்குச் சொல்லித் தருகிறேன். உன்னைத் தேடி வரும் அன்பர்களை இந்தச் சக்கரம் மூலம் நல்வழிப்படுத்து. அவர்கள் மனமுவந்து தருகின்ற பொருளைக்கொண்டு இல்லற வாழ்வை நல்லறமாக நடத்து’ என்று கூறியவர், மந்திர தகடை உபயோகிக்கும் மந்திரத்தையும் உபதேசித்தார்.

    பின்னர், ‘உனக்கு நான்கு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பெறும் பாக்கியமுண்டு. அவர்களில் நான்காவது ஆண் குழந்தை, மானுடரின் மனக்கவலை நீக்கவல்ல மகானாக விளங்குவான். உன் அருள் வாழ்க்கைக்கு, அவனே தக்க சீடனாகவும் திகழ்வான்’ என்று அருளினார்.

    தனக்கு வழிகாட்டிய குருநாதரை, வீட்டிற்கு அழைத்து விருந்து படைத்தார் சங்கரநாராயணன். அன்று முதல்தான் தன் மனைவியிடமும் அவர் அக மகிழ்ந்து பேசத் தொடங்கினார்.

    விருந்துண்டு மகிழ்ந்த ராமகிரிநாதர், சிதம்பர சக்கரம் அமைக்கும் நெறிமுறையை, சங்கரநாராயணனுக்கு உப தேசித்து விட்டு, பொதிகைமலைக்கு புறப்பட்டார்.

    சிதம்பர சக்கர செப்புத் தகட்டின் மகிமை தென்மலைப் பகுதியில் பரவியது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நலிந்தோர், நோயால் மெலிந்தோர், கிரக தோஷங்களால் நல் வாழ்வை இழந்தோர் பலருக்கும் அந்த செப்புத் தகட்டால் நன்மைகளைச் செய்தார், சங்கர நாராயணன். எனவே தென்மலையை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாய் வரத் தொடங்கினர்.

    இதனால் சங்கரநாராயணன் சுவாமிகள், வழிபாட்டிற்குரிய அருளாளராக மாறினார். அவரின் இல்லறத்தின் பயனாக, குருநாதர் கூறிய படியே குழந்தைகள் பிறந்து வளர்ந்தனர். நான்காவதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று பெயரிட்டார். குரு கூறியபடியே அந்த மகனை, சீடனாக தம் அருகிலேயே வைத்துக்கொண்டார். மகனின் ஞானச் செறிவைக் கண்டு அக மகிழ்ந்தார்.

    ஒரு நாள் குருநாதரைத் தரிசிக்க விருப்பம் கொண்ட சங்கரநாராயணன் சுவாமிகள், குளக்கரை விநாயகர் கோவிலுக்கு வந்தார். குருநாதர் வரவில்லை. ஆனால் ஒரு அசரீரி ஒலித்தது. ‘சங்கரநாராயணா! உன் புதல்வன் தட்சிணாமூர்த்தியுடன் தென்மலையை விட்டுப் புறப்பட்டுச் செல். பக்கத்திலுள்ள பனையூர் கிராமத்திற்கு சென்று குடில் அமைத்து மக்களின் குறை தீர்த்துச் செயல்படு. உங்கள் இருவரின் அருட்சக்தி மேலும் மேலும் பெருகி வளரும்’ என்றது குருநாதரின் குரல்.

    அதுபோலவே தந்தையும், மகனும் பனையூர் வந்தமர்ந்தனர். காலங்கள் கடந்தது. குருவின் எண்ணம் போலவே எல்லாம் ஈடேறியது.

    தந்தையும் மகனும் ‘பனையூர் ஆண்டவர்கள்’ என்று மக்களால் தொழுது போற்றப் பெற்றனர். சுவாமிகள் இருவரும் வழங்கும் சிதம்பரச் சக்கரத் தகடுகள், துயரக் கடல் கடக்கும் தோணிகளாயின. பனையூர் மருத்துவத் திருத்தலமாகவும், அற்புதத் தத்துவ அருட் தலமாகவும் ஒளிவீசியது.

    வருடங்கள் பல ஓடியது. சங்கரநாராயணன் சுவாமிகள் சமாதி பெறும் நாளும் வந்தது. மகனிடமும், பக்தர்களிடமும் ‘நான் சமாதி நிலை அடையப்போகிறேன். என் சமாதியை இரவுக்குள் மூடிவிடுங்கள்’ என கூறிவிட்டு, 1835-ம் ஆண்டு கார்த்திகை மாதம் 24-ம் நாள் இரவு ஜீவசமாதி அடைந்தார்.

    இதுகுறித்து சுற்றுப்பகுதியில் செய்தி பரவியதும், மக்கள் ஓடி வந்து சுவாமிகளைத் தரிசித்து நின்றனர். நாழிகை செல்லச் செல்ல பக்தர் கூட்டம் பெருகியது.

    சங்கரநாராயணன் சுவாமிகளின் பொன்னுடலுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அது முடிந்ததும் சுவாமிகளின் பொன் உடலை விடியும் முன்பே பூமிக்குள் இறக்கி அருட்சமாதி வைக்கப்பட்டது.

    ஆனால் அந்த அருட்சமாதிக்கு, அந்தப் பகுதி ஜமீன் சார்பில் ஒரு பெரும் பிரச்சினை வந்து நின்றது.

    சீடனுக்கு அருள்பாலிக்கும் குருநாதர்

    தன்னுடைய குருவை காண வேண்டும் என்ற ஆவலில் சங்கரநாராயண சுவாமிகள் ஒவ்வொரு சித்திரை மாதம் 20-ந் தேதியும் குற்றாலத்துக்கு சென்றுவிடுவார். அங்கு மனாசீகமாக குருவை தரிசித்து விட்டுத் திரும்புவார். அவரது இந்த வழிபாட்டிற்கு ஒரு நாள் குருநாதரிடம் இருந்து பதில் கிடைத்தது.

    ‘என்னைத் தேடி, நீ எங்கும் அலைய வேண்டாம். சித்திரை 20-ந் தேதி உன்னைத் தேடி பனையூருக்கே வருவோம்’ என்று அசரீரியாக சொன்னார், ராமகிரி நாதர்.

    சித்திரை 20-ம் நாள் குருநாதர் அருளியபடியே, நிட்சேப நதிக்குச் சென்று குருநாதர் அருளை எதிர்பார்த்து காத்திருந்தார் சங்கரநாராயண சுவாமிகள். வாக்களித்தபடியே நிட்சேப நதிக் கரையில் இருந்து குருநாதர் எழுந்தருளி பனையூருக்கு வந்தார். மங்கல வாத்தியங்கள் முழங்க, தந்தையும் மகனும் பாத பூஜை செய்து பனையூர் குடிலுக்கு ராமகிரி நாதரை அழைத்து வந்தனர். அந்த சிறப்புமிகுந்த நாளை ‘அன்னதான பெரு விழா’வாகக் கொண்டாடினர்.

    தற்போதும் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் 20-ந் தேதி சப்பரத்தில் சங்கரநாராயண சுவாமியின் படமும் வெள்ளிக் கும்பமும் வைத்து, நிட்சேப நதிக்கு பக்தர்கள் பலரும் செல்வார்கள். அங்கு அவரது குருநாதரை, கும்ப தீர்த்தமாக அழைத்து வருகிறார்கள். மதியம் பனையூரில் சிறப்பு வழிபாடும் அன்னதானமும் நடைபெறும். அன்று பக்தர்களின் நோய் போக்க யந்திரம் கட்டுதல் நிகழ்ச்சி நடை பெறுகிறது. ஆண்களும் பெண்களும் வரிசையாக நின்று, சிதம்பரச் சக்கரம் பெறுவர்.

    பின்னர் இரவு புஷ்ப விமானத்தில் சுவாமிகள் எழுந்தருளுவார். மறுநாள் காலையில் குருநாதரை நிட்சேப நதிக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஐதீகமாக நடைபெறுகிறது.

  • சனி தோஷம் விலக என்ன விளக்கு ஏற்ற வேண்டும்…

    நீங்கள் ஏற்றும் விளக்கின் தன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? எந்த விளக்கில் தீபம் ஏற்றினால் தோஷம் விலகும். எந்த விளக்கில் தீபம் ஏற்றினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற தகவல்கள் இதோ உங்களுக்காக….

    மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்
    வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும்
    பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும்
    வெண்கல விளக்கு – ஆரோக்கியம் உண்டாகும்
    இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.

    திருவிளக்கின் சிறப்பு திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

  • சங்கு பூஜை செய்ய விரும்புகிறவர்களுக்கு…

    தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கிடைப்பதற்காக பாற்கடலைக் கடைந்தபோது சில அரிய பொருட்கள் தோன்றின.
    அவற்றில் வலம்புரி சங்கும் ஒன்று. இதனை லட்சுமியின் அம்சம் என்பார்கள்; பூஜைக்குரியதாகும். லட்சம் சங்குகளில் ஒன்றுதான் வலம்புரிச் சங்காக அமையும். இடம்புரிச் சங்கைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தது வலம்புரிச் சங்கு. வலம்புரிச் சங்கு சுபகாரியங்களுக்கு மட்டும் பயன்படும்.

    ஆனால் இடம்புரிச் சங்கு அனைத்துக் காரியங்களுக்கும் பயன்படுகிறது. அதனால் தான், ஆலயங்களில் வலம்புரிச்சங்கைப் பயன்படுத்துகிறார்கள். சில ஆலயங்களில் பூஜை முடிந்ததும் வலம்புரிச் சங்கினை ஏலம் விடுவார்கள். அதை வாங்கி இல்லத்தில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் சுபிட்சம் ஏற்படும்.

    சங்கு பூஜை செய்ய விரும்புகிறவர்கள், வலம்புரிச் சங்கில் நீர் நிரப்பி வைத்து, மலர்களால் அர்ச்சித்து, காயத்ரி மந்திரம் ஜபித்து, காயத்ரி தேவியின் படம் அல்லது சிற்பத்துக்கு அருகே வைத்து விடவேண்டும். பிறகு காலையில் எழுந்தவுடன், காலைக்கடன்களை முடித்துவிட்டு, நீராடியபின், பூஜை அறையில் சங்கில் உள்ள நீரினை முதலில் வீட்டின் வாசற்படி மேல் தெளிக்கவேண்டும். இப்படிச் செய்வதால் லட்சுமியானவள் நிரந்தரமாக இல்லத்தில் தங்கியிருப்பாள். மேலும், வெள்ளிக்கிழமைகளில் பசும்பால், துளசி இலைகளைப் போட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். இதனை அடுத்தநாள், காலையில் எழுந்ததும் நீராடிவிட்டு, பூஜை முறைகளைச் செய்துவிட்டு, சங்கில் உள்ள பசும்பால், துளசி இலைகளை பிரசாதமாகச் சாப்பிட, நாள்பட்ட நோய்கள் குணமாகும்.

  • திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் மே 20-ஆம் தேதி கொடியேற்றம்

    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை அடுத்து மே 20 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. மே 21-ஆம் தேதி முதல் 29 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருக்கிறது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயில்களில் ஆண்டுதோறும் தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் மே 21-ஆம் தேதி முதல் 29 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதற்கான சுவரொட்டியை புதன்கிழமை காலை தேவஸ்தானம் வெளியிட்டது.
    திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான திருப்பதி செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் சுவரொட்டியை வெளியிட்டார்.
    பிரம்மோற்சவ நாள்களில் காலை, இரவு என இரு வேளைகளில் வாகன சேவை நடைபெற உள்ளது. மேலும், அந்நாள்களில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு, தர்ம தரிசனம் மட்டுமே அமல்படுத்தப்பட உள்ளது.
    பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, மே 16-ஆம் தேதி அங்குரார்பணம், 20-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் கோயில் அருகில் பல ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

     

    உண்டியல் காணிக்கை ரூ. 2.91கோடி
    திருப்பதி, மே 9: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.91 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
    திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி, திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ. 2.91 கோடி வசூலானது.
    ரூ. 18 லட்சம் நன்கொடை
    ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 12 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ. 3 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 18 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

    74,472 பக்தர்கள் தரிசனம்
    ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 74,472 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 31,707 பேர் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர்.
    திருமலை, திருப்பதி, நடைபாதை மார்க்கங்களில் தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டதால் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
    நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானைத் தரிசித்தனர்.
    டோக்கனில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்றால், அவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பலாம். 20 ஆயிரத்துக்கு மேற்பட்டு வரும் பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.