Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • குழந்தை பாக்கியம் அருளும் ராமகிரி !

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், நாகலாபுரம் – பிச்சாட்டூர் சாலையில் உள்ளது ராமகிரி. இங்குள்ள வாலீஸ்வரர் கோயிலில், சிவனாருக்கு எதிரில் நந்திக்குப் பதிலாக அனுமன் அருள்கிறார். அடுத்ததாக நந்தி அமைந்துள்ளார். சிவன் எதிரில் நந்தி இல்லாததால் இங்கு பிரதோஷம் நடைபெறுவது இல்லை.

    நந்தி தீர்த்தம்!

    கோயிலுக்கு வெளியே நந்தி தீர்த்தம் அமைந்துள்ளது. இதன் ஒரு கரையில் இருக்கும் நந்தி முகத்தின் வாயிலிருந்து தண்ணீர் குளத்துக்குள் விழுந்துகொண்டே இருக்கிறது. இதில் நீராடிவிட்டு ஸ்வாமியைத் தரிசிப்பதும் வழிபடுவதும் விசேஷ பலன்களைப் பெற்றுத்தரும் என்கிறார்கள்.

    அனுமனின் கதை…

    ராமனின் வழிபாட்டுக்காக காசியிலிருந்து அனுமன் எடுத்துவந்த லிங்கமூர்த்தம் கால பைரவரின் அருளாடலால் இங்கேயே தங்கிவிட, பின்னர் கால பைரவரை வழிபட்டு வேறொரு லிங்கத்தை அனுமன் எடுத்துச் சென்றதாக இந்தத் தலத்தின் புராணம் சொல்கிறது. அனுமன் இங்கு அருள்புரிவதற்கும், இத்தலம் ராமகிரி எனப் பெயர் பெற்றதற்கும் இக்கதையே காரணமாகச் சொல்லப்படுகிறது.
    சந்தான பிராப்தி பைரவர்

    இந்தக் கோயிலில் கால பைரவர், ‘சந்தான பிராப்தி பைரவ’ராக அருள்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கேவந்து இந்தப் பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையைக் கொண்டுவந்து பைரவருக்குக் கொடுத்துவிட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை ஒரு கல்லில் செய்து, அதை குழந்தைக்கு விலையாகக் கொடுத்து, திரும்பவும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள்.

    வேறு பெயரும் உண்டு!

    திருக்காரிக்கரை என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார், தமது தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, ‘கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்’ என்று வைப்புத் தலமாக வைத்துப் பாடியிருக்கிறார். ‘ராமகிரி’ என்ற பெயருக்கு, ராமாயண காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவமே காரணம் என்கிறார்கள்.

    எப்படிச் செல்வது?

    சென்னை – திருப்பதி மார்க்கத்தில், சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில், நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் உள்ளது ராமகிரி. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உண்டு. நடை திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் 11 மணி வரை மாலை 3 முதல் 6 மணி வரை.

  • வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய மந்திரம்

    நம: கமலவாஸின்யை, நாராயண்யை நமோ நமஹ
    க்ருஷ்ண ப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ
    வைகுண்டே யா மஹாலக்ஷ்மீ: யா லக்ஷ்மீ: க்ஷீரஸாகரே
    ஸ்வர்க்க லக்ஷ்மீ ரிந்த்ரகேஹே, ராஜலக்ஷ்மீ: ந்ருபாலயே
    க்ருஹலக்ஷ்மீஸ்ச க்ருஹிணாம், கேஹே சக்ருஹதேவதா
    இதம் ஸ்தோத்ரம் மஹா புண்யம், த்ரிஸந்த்யம்: ய: படேந் நரஹ
    குபேர துல்யஸ் ஸ பவேத் ராஜராஜேஸ்வரோ மஹான்

    பொருள்:

    தாமரையில் வாசம் புரியும் திருமகளே நமஸ்காரம். நாராயணியாய் திகழ்பவளே, கிருஷ்ணருக்குப் பிரியமுள்ளவளே, மஹாலக்ஷ்மியாய் துலங்குபவளே, வைகுண்டத்தில் மஹாலக்ஷ்மியாகவும், பாற்கடலில் ஸ்வர்க்க லக்ஷ்மியாகவும், தேவேந்திரனின் மாளிகையில் ராஜலக்ஷ்மியாகவும், அன்பான குடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் திகழும் தாயே, நமஸ்காரம். முடிந்தால் நாகை மாவட்டம், சீர்காழியில் உள்ள அண்ணன் பெருமாள் (வெங்கடாசலபதிக்கே அண்ணன்!) கோயிலுக்குச் சென்று மஹாலக்ஷ்மி தாயாரை வழிபடுங்கள். அல்லது பக்கத்திலுள்ள வெங்கடாசலபதி கோயிலில் தாயாரை வணங்குங்கள்.

  • சகல செல்வங்களையும் தரும் வெள்ளிக்கிழமை விரதம்….

    வெள்ளிக்கிழமையன்று விடியற்காலையிலேயே எழுந்து, மஞ்சள் பூசி குளித்துவிட்டு நெற்றியிலே குங்குமப் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள். பசுஞ்சாணம் கரைத்த நீரால் வாசல் தெளியுங்கள். ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் சுத்தமான நீரை கொஞ்சமாகத் தெளித்து, வழுக்கிவிடாதபடி துடைத்துவிட்டு, அதன்மேல் அழகாக ஒரு கோலம் போட்டு, அதுக்கு செம்மண் பார்டர் போடலாம்.

    வீடு முழுவதும் பெருக்கி, துடைத்து சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். பூஜையறையையும் சுத்தமாக்கி தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே தீபம் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தி வைக்கலாம். சாம்பிராணிப் புகை போடலாம். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்தலாம்.

    ஒட்டுமொத்தமாக வீடு முழுவதும் அன்றைக்குப் பளிச்சென்று இருப்பது நல்லது. அன்று முழுவதும் மஹாலக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பது நலம்.

    லக்ஷ்மி ஸ்லோகங்கள் மட்டுமில்லாமல், தெரிந்த அம்பாள் பாடல்களையும் சொல்லலாம். அன்று முழுவதும் எளிமையாக பால், பழம் என்று மட்டும் சாப்பிட்டு விரதமிருக்கலாம். முடியாதவர்கள் அல்லது அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து பகலில் ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ளலாம். இப்படி விரதம் மேற்கொண்டபிறகு தொடர்ந்து பதினோரு வெள்ளிக்கிழமைகளில் கடைபிடிக்கலாம். நடுவே ஏதேனும் காரணத்துக்காக ஏதாவதொரு வெள்ளிக்கிழமை முடியாமப் போனால், அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலேர்ந்து தொடரலாம்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்தில் பக்கத்துப் பெருமாள் கோயிலில் தாயாரை தரிசிப்பது முக்கியம். இதை முதல் வெள்ளிக்கிழமை விரதத்தன்றாவது செய்யவேண்டும்.

    கோயிலுக்குப் போய் வந்தபிறகு, முடிந்த பிரசாதங்களை தயாரித்து, வீட்டு பூஜையறையில் மஹாலக்ஷ்மிக்கு நிவேதனம் செய்யுங்கள். அவரவர் வசதிகேற்ப சுமங்கலிகளை அழைத்து, அவங்களுக்கு குங்குமம், மஞ்சள், பூ, பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணி என்று அளிக்கலாம்.

    இதே மாதிரி பதினொரு வெள்ளிக்கிழமைக்கும் செய்தால் நல்லது. சில குடும்பங்களில் பரம்பரை வழக்கப்படி எல்லா வெள்ளிக்கிழமைகளிலேயும் இந்த விரதத்தை அனுசரிப்பதுண்டு.

  • கந்தனுக்கு உகந்த செவ்வாய் கிழமை !

    கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக இடம்பிடிப்பது செவ்வாய்க்கிழமை. பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி.

    முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும். செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் அங்காரகனுக்கு முக்கியத்துவம் உகந்த நாளாகும். தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்புகளையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.

    வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம். வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுகற வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும். இந்த விரதத்தை மேற்கொள்ளும்போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வழிபட வேண்டும்.

    முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும். அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம். செவ்வாய்கிழமை பிறந்தவர்களும், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்.

    ரத்த சம்பந்தமான நோய் இருப்பவர்கள், ஒன்பது வாரம் இல்லத்தில் விரதம் இருந்து 10 வது வாரம் பலன் தரும் பரிகார தலத்திற்கு சென்று வழிபட்டால், நிலைமை சீராகும்.

  • திருப்பதியில் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்ய….

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் நாள் தோரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

    கட்டுக்கடங்காத கூட்டத்தால் இலவச தரிசம் செய்ய 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு கூட 4 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இப்படி பல மணி நேரம் கூண்டுகளில் அகப்பட்டு கிடப்பதை விட திருமலையில் ஏழுமலையனை 3 மணி நேரத்தில் தரிசிக்க முடியும். எப்படி என்கிறீர்காள? இதோ எளிய வழி…

    இனி ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு சென்றால் போதும். நீங்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நேரத்தைக் குறித்துத் தந்துவிடுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் ‘நாராயணகிரி கார்டன் நுழைவு வாயிலு’க்குச் சென்றால் போதும். அதிகபட்சம் மூன்று மணி நேரத்தில் பெருமாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிவிடலாம்.

    இந்த இலவச சர்வ தரிசன டோக்கன் முறை கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. திருப்பதி ரயில் நிலையம் அருகிலுள்ள விஷ்ணு நிவாசம், கோவிந்தராஜ சுவாமிசத்திரம், ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ், ஆர்.டி.சி பஸ் ஸ்டாண்டு, அலிபிரி ஆகிய இடங்களில் இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன.

  • கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா

    பிரசித்த பெற்ற அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் மே 20-ந்தேதி வசந்த உற்சவ விழா தொடங்குகிறது.
    கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி மாதம் 10 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்திற்கான விழா மே 20-ந்தேதி மாலை தொடங்குகிறது. இதில் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவல்லி முன் செல்ல அங்குள்ள வசந்த மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார்.

    வருடம் ஒருமுறை இந்த மண்டபத்திற்கு சாமி எழுந்தருள்வது வழக்கம். கோடையின் வெப்பத்தை தணித்து, குளிர்ந்த மழையை பெய்ய வைப்பதற்காக இங்கு பெருமாள் வந்து செல்வது வழக்கம் என ஜதீகமாக கூறப்படுகிறது.

    மேலும் அழகர்மலையின் மூலிகை கலந்த வசந்த காற்றுகள் இந்த காலநிலையில் அதிக அளவு வீசும் என்பதால், கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

    பின்னர் பெருமாள் வந்தவழியாக திரும்பி சென்று இருப்பிடம் சேருகிறார். திருவிழாவின் 10 நாட்கள் தினமும் மாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10-ம்நாள் நிறைவு நாளில் விஷேச பூஜைகள் சாமிக்கு செய்யப்படுகிறது.

  • வாஸ்து பரிகாரத்தில் வலம்புரி சங்கு…

    பொதுவாக வீடுகளில் அமைந்திருக்கும் வாஸ்து குறைகளை நீக்குவதற்கு, மஞ்சள் கலந்த நீரில் துளசியை இட்டு சங்கு தீர்த்தமாக காலை நேரங்களில் தெளித்து விட்டால் அந்த குறைகள் நீங்குவதாக ஐதீகம்.

    பழங்காலத்தில் மக்கள், செல்வ செழிப்போடு இருக்க வீடுகளின் தலை வாசலில் சங்கு பதித்து வைப்பது வழக்கம். அதாவது, ஐந்து வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு உரிய வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை, வீட்டின் கதவு நிலைக்கருகில் வாசல் படியில் பதித்து விடுவார்கள். அதன் மூலம் குறைகள் இல்லாத வாழ்க்கை அமைவதாக அவர்கள் நம்பினார்கள்.

    கோவில் மணி

    பெரும்பாலான கோவில்களில் மணி அடிப்பது மற்றும் சங்கு ஊதுவது போன்ற நடைமுறைகள் இருப்பதை கவனித்திருப்போம். சங்கு ஊதுவது என்பது தற்போதைய சூழலில், அபசகுனம் போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. வேதங்களின் உட்பொருளான ஓம்கார மந்திரத்தை நினைவுபடுத்துவதாகவும், ‘அர்த்தம்’ எனப்படும் பொருள் வளத்தை தருவதாலும் கடவுளுக்கு முன்பு வைத்து வணங்கப் படும் தன்மையை சங்கு பெற்றிருக்கிறது.

    மேலும், மங்களகரமான பூஜை வேளைகளில் தேவையற்ற பேச்சுகள் காதில் விழுந்து பக்தி மனோபாவத்தை குறைத்து விடாதிருக்க சங்கநாதம் உதவி செய்கிறது. கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கு ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. மகாகவி பாரதியும் ‘சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே..’ என்று வெற்றியை பறை சாற்றும் பொருளான சங்கு பற்றி பாடுகிறார்.

  • பில்லி, சூனியம் பயம் போக?

    தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சார்ந்தவர் வடுகநாதர். இவருடைய மனைவி பொன்னம்மாள். இவர்கள் இருவரும் மணமுடிந்து 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், மதுரை மீனாட்சி அம்மனை மனமுருக வழிபடச் சென்றனர். அப்போது ஒருவர், ‘‘வைகையில் தம்பதியர் சமேதராக நீராடி வந்து அம்பாள் மீனாட்சியையும், அப்பன் சொக்கனையும் வணங்கி செல்லுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறும்’’ என்றார். அதனை தெய்வ வாக்காக கருதி வைகை ஆற்றில் நீராட இருவரும் சென்றனர். அங்கே குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த இடத்தில் அழகான ஓர் ஆண் குழந்தையைக் கண்டனர். அந்த குழந்தையை கையிலெடுத்து வாரி அணைத்துக்கொண்டாள் பொன்னம்மாள். அக்குழந்தையைக் கடவுள் தந்த பரிசாகவே கருதி, குழந்தையுடன் அன்னை மீனாட்சியையும், சொக்கநாதரையும் வழிபட்டு விட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். தும்பைச் செடிகளின் அருகே கண்டு எடுத்ததால் அந்த குழந்தைக்கு ‘தும்பையப்பர்’என்று பெயர் சூட்டினர். அதுவே பையப்பர் என்றாகி ஐயப்பர் என மருவியது. ஏழு வயது நிரம்பியதும் தும்பையப்பரை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி கோயில் திருவிழாவுக்குச் சென்றனர். விழாக்கூட்டத்தில் குழந்தையைத் தவறவிட்டனர். எங்கு தேடியும் காணவில்லை.

    அழுது புலம்பி தவித்தனர். ஏமாற்றத்தோடு ஊருக்குத் திரும்பினர். மதுரையில் தன் தாய்-தந்தையரைத் தேடித்தேடி ஓய்ந்து போன தும்பையப்பர், அங்கு மளிகைக் கடை ஒன்றில் பணியாளராக சேர்ந்தார். பெற்றோர், மீனாட்சி-சொக்கநாதர் பெருமைகளைப் பலவாறாகக் கூறியிருந்ததால், தினமும் கடை திறக்குமுன், கோயிலுக்கு சென்று மீனாட்சி அம்மனை வணங்கி செல்வார். ஒருநாள் அம்பாள் சந்நதியில் செந்நிற பட்டுகட்டி, செந்தூர திலகமிட்டிருந்த ஒரு பெண்மணி நின்றிருந்தாள். அவள், தும்பையப்பரிடம், ‘குழந்தாய், கோயிலுக்கு தினமும் வந்து செல்கிறாயே, என்ன வேண்டுதல் உனக்கு, இந்த சின்ன வயதில்?’ என்று வினவ, தும்பையப்பர், ‘‘தாயே, என் பெற்றோரிடம் நான் மீண்டும் சேரவேண்டும்,’’ என்று கூறி அழுதார். ‘‘அழாதே, மீனாட்சி அம்மனைத் தொடர்ந்து வணங்கி வா,’’ என்றாள் அந்தப் பெண்மணி. இப்படி பல நாட்கள் தும்பையப்பரிடம் பேசி வந்தாள் அந்தப் பெண்மணி. அடுத்த ஆண்டு கோயிலுக்கு வந்த பெற்றோரை, தும்பையப்பர் நேரில் கண்டார். அவர்களும் அவரைக் கண்டு பேரானந்தம் கொண்டனர். குழந்தையைக் கட்டித்தழுவி கண்ணீர் பெருக்கினர்.

    பெற்றோருடன் ஊருக்குச் செல்லும் முன், தும்பையப்பர் அம்பாள் சந்நதி முன்னே வந்து, அங்கிருந்த அதுவரை தனக்கு ஆறுதலளித்தப் பெண்மணியிடம், ‘‘அம்மையே, எங்க அம்மா, அப்பாவ, நான் கண்டுவிட்டேன்,’’ என்று கண்களில் நீர் பெருக நன்றியுணர்வுடன் கூறி வணங்கினார். ‘‘அப்படியா, ரொம்ப சந்தோஷம்!’’ என்று பதில் கூறிய, அப்பெண்மணி தான்தான் மீனாட்சியம்மை என்பதை அவருக்குக் குறிப்பாக உணர்த்தினாள். பின்னர் ஒரு கண்ணாடியையும், எலுமிச்சைக்கனி ஒன்றையும் அவரிடம் கொடுத்து “தும்பையப்பா, கண்ணாடியை பூஜைஅறையில் வை. அதற்குமேல் இந்த எலுமிச்சைக்கனியை வை. கனி அழுகி என்றைக்கு கண்ணாடியில் முகம் தெரியாமல் போகிறதோ அன்று என்னிடம் வா,’’ என்று சொல்லி விடை கொடுத்தாள். பெற்றோருடன் ஊர் வந்த தும்பையப்பர், பூஜையில் ஈடுபட்டார். ஒருநாள் எலுமிச்சைக் கனி அழுகி இருப்பதைக் கண்டார். கண்ணாடியில் முகமும் தெரியவில்லை. உடனே, அன்னையைக் காண மதுரையை நோக்கி சென்றார். அப்போது கோயிலில் யாகம் நடந்து கொண்டிருந்தது.

    அந்தப் பெண்மணியைத் தேடி, ‘அம்மா, அம்மா…’ என்று அழைக்க, எந்த பதிலும் வரவில்லை. பெண்மணியைக் காணாத துயரத்தில் தும்பையப்பர் பளிச்சென்று அந்த யாகத்தீயினுள் பாய்ந்து விட்டார். உடனே அந்தப் பெண்மணி அங்கே தோன்ற, யாக குண்டத்துள்ளிருந்து அனல் வடு எதுவும் இல்லாமல் தும்பையப்பர் வெளியே வந்தார். அவருடைய பக்தியை கண்டு மகிழ்ந்து, அவர் செவியில் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்தாள் அன்னை. பின்னர் ‘‘இந்த லோகத்தில், குறிப்பாகத் தென்னாட்டில் மாய சக்திகளும், மாந்திரீக சக்திகளும் மேலோங்கி வருகின்றன. மாந்திரீகத்தால் தெய்வசக்தியை அடக்க ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கிறது. அவர்களிடமிருந்து மக்களை காப்பாயாக. அதற்காகத்தான் நீ இந்த மண்ணில் தோன்றியிருக்கிறாய். என்னை பூஜை செய், நான் துணை இருப்பேன். தென்திசையை நோக்கிச் செல். எங்கே ஒரு நீர்நிலையில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துகிறதோ அவ்விடமே நீ தங்கி இருக்க ஏற்ற இடமாகும்,’’ என்று கூறி வாழ்த்தி அனுப்பினாள்.

    அன்னையின் வாக்கை சிரமேற்கொண்டு தென்திசை நோக்கி தும்பையப்பர் புறப்பட்டார். உவரிக்கு வந்து, அங்கு குடிகொண்டுள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசனம் செய்து விட்டு செட்டியாபத்து கிராமத்துக்கு வந்தார். அங்கிருந்த ஒரு நீர்நிலையில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துவதைக் கண்டார். அன்னையின் ஆணைப்படி தான் தங்கியிருக்க இதுவே சரியான இடம் என்று முடிவு செய்து அங்கே யோகநிலையில் அமர்ந்தார். அம்மனுக்கு கோயில் எழுப்பி, பூஜை செய்து வந்தார். நாளடைவில் அங்கு வசித்த வைணவர் ஒருவரின் கனவில் தோன்றி, ‘நான் பூஜித்து வந்த அம்பாளுக்கு தினமும் நீ பூஜை செய்து வா, அதோடு என்னையும் கவனி, உன் நிலத்துக்கும், குலத்துக்கும் காவலாய் இருப்பேன்’ என்றார். அந்த வைணவர் அம்பாளுக்கும், தும்பையப்பருக்கும் கோயில் எழுப்பினார். முதன்முதலில் உருவாக்கும் சாமி என்பதாலும், கனவில் பெரிய உருவமாக வந்ததாலும் அவருக்கு பெரியசாமி என்று பெயரிட்டார்.

    அம்பாளை பெரிய பிராட்டி என்றழைத்தார். அடுத்தடுத்து கோயிலில் வயணப் பெருமாள், அனந்தம்மாள், காவல்தெய்வமான ஆத்திசாமி என சந்நதிகள் உருவாயின. இதனால் இக்கோயில் 5 வீட்டு சாமி என்று அழைக்கப்பட்டது. பிறகு, திருப்புளியாழ்வார், ஆஞ்சநேயருக்கும் சந்நதிகள் அமைக்கப்பட்டன. இப்படி பல சந்நதிகள் இருந்தாலும் ஐந்து வீட்டு சாமி என்றுதான் இப்போதும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. பெரியசாமி சங்கு, சக்கரம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றைப் போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னைகளுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சுகபிரசவம் வேண்டுவோர் பெரியபிராட்டி அம்மையாருக்கு வளையல்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். காலில் உபாதை உள்ளவர்கள் ஆத்திசாமி கோயிலுக்கு நேர்ச்சையாக செருப்பு, கதாயுதம் என காணிக்கை செலுத்துகிறார்கள். பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததன் அடையாளமாக, மறுவருடம் ஆத்திசாமியின் கால் தடங்கள் அந்த செருப்பில் பதிந்திருப்பதைக் காணலாம்!

    கிரக தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் பெரியசாமி, ஆத்திசாமி, பெரியபிராட்டி சந்நதிகளில் முட்டைகளை தம் தலையை சுற்றி காணிக்கை செலுத்துகிறார்கள். ஒரு சிலர் கோழி குஞ்சுகளை அப்படி அர்ப்பணிக்கிறார்கள். வடக்கு வாசல் வழியே கோயிலின் உள்ளே நுழைந்தால் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். அடுத்து பெரியசாமி தரிசனம். அவரருகே பெரிய பிராட்டி. திருப்புளி ஆழ்வார், ஆத்தியப்பன்சாமி, குதிரை வீரன், வயணப் பெருமாள், அனந்தம்மாள் ஆகியோர் அருள் வழங்குகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18ம் தேதி துவங்கி 6 நாட்கள் சித்திரை திருவிழாவும் (இறுதி நாளன்று வழங்கப்படும் அன்னமுத்திரை என்ற பிரசாதம் மகிமை வாய்ந்தது), தை மாதம் 5ம்தேதி துவங்கி மூன்று நாட்கள் தைத்திருவிழாவும் விமர்சையாக நடக்கும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் விசேஷ பூஜைகள் உண்டு. இக்கோயிலில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண்கள் தொட்டு வணங்கிய பிறகே, பூஜைக்குரிய சாமான்கள் ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

  • வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

    வைகாசி மாத பூஜைக் காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள்-வழிபாடுகள் நடை பெறும். எனவே இந்த நாட்களில் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமியை தரிசனம் செய்து செல்வார்கள்.

    அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி (பொறுப்பு) மனு நம்பூதிரி முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, தீபாராதனை காட்டினார். அப்போது சன்னிதானத்தில் கூடியிருந்த திரளான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். நேற்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடை பெற்றது.

    இன்று முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடை பெறும்.

    19-ந் தேதி வரை படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்றவைகளும் நடைபெற உள்ளன. 19-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

  • திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்….

    பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளதால், தரிசனத்திற்கு 25 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.300 மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளதால் நேற்றிரவு தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் கோயில் எதிரிலும் வெட்டவெளியிலும் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டது. எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரே இடத்தில் காத்திருக்காமல் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மூலம் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இதில் உள்ள நேரத்திற்கு தரிசனத்திற்கு வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு வந்தால் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க ஆதார் மற்றும் வாக்காளர் அடையான அட்டை கொண்டு வரும் பக்தர்களுக்கு தரிசன நேரம் குறிப்பிட்ட டிக்கெட் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் கோயிலுக்கு வந்தால் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம். இந்த நேர ஒதுக்கீடு திட்டம் கடந்த 2-ம் தேதி முதல் முழு அளவில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.