Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா மே 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி, கோயில் நடை அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகின்றன.

    மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. அதையடுத்து, மகா தீபாராதனையாகி, தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்ந்து திருவிழா நிறைவடைகிறது.

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (மே 27), செவ்வாய்க்கிழமை (மே 29) ஆகிய நாள்களில் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

  • கல்விக்கு அதிபதியான பிராம்ஹி தேவியின் காயத்ரி மந்திரம்

    மேற்கு திசைக்கு அதிபதியாக இருப்பவள் பிராம்ஹி. இவள், பராசக்தியின் முகத்தில் இருந்து உருவானவள். கலைவாணி என்று அழைக்கப்படும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் அம்சமாக இவள் பார்க்கப்படுகிறாள். எனவே இவள் அன்னவாகனத்தில் வீற்றிருப்பாள். மான் தோலை தன் மீது அணிந்திருக்கும் இந்த அன்னை, ஞானத்தை வழங்கி அஞ்ஞானத்தை அகற்றுபவள்.

    ‘ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
    தேவர்ணாயை தீமஹி
    தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்’

    என்ற பிராம்ஹி தேவியின் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து வருபவர்களுக்கு ஞாபக மறதி நீங்கும். கல்வி பயிலும் மாணவர்கள், முக்கியமான தேர்வுகளை எழுத உள்ளவர்கள் இந்தக் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை, மேற்கு நோக்கி அமர்ந்தபடி உச்சரித்து வந்தால் பலன் கிடைக்கும்.

  • நரம்பு பிரச்சினைகளை போக்கும் புதன் ஆலயம்….

    புத்தியை இயக்கும் சக்திகளில் மிகவும் முக்கியமானது புதன் கிரகம். ஜாதகத்தில் புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வியும், மனன சக்தியும், கற்பனை

    வளமும் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, நிச்சயம் புதன் பகவானின் அருளைப்பெற வேண்டியது முக்கியம். திருவெண்காடு தலத்தில் புதன் பகவானுக்கு தனிச் சந்நதி உள்ளது. மேலும், மூலவராக ஸ்வேதாரண்யேஸ்வரரும், பிரம்மவித்யாம்பிகை எனும் திருப்பெயரோடு அம்பாளும் திகழ்கிறார்கள்.

    பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்று பழமொழி உண்டு. சூரியக்குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோளான புதன், சுட்டெரிக்கும் சூரியனுக்கு அருகில் இருப்பதாலேயே சாதரணமாக கண்களுக்கு புலப்படுவதில்லை. காலை அல்லது இரவின் தொடக்கத்தில் மட்டுமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.

    சோதிட சாஸ்திரத்தில் புதனை கல்வியின் நாயகன் என்று அழைக்கின்றனர். “மாதுல (மாமன்), கல்விக்காரகர்’ என்று அழைக்கப்படும் புதன் உடலில் நரம்புக்கும், தோலுக்கும் அதிபதி. ஜாதகத்தில் இவரது பலம் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை கை கூடும். திருவெண்காடு நவக்கிரஹ ஸ்தலங்கள். புதன் கிரகத்திற்கான கோவில் சீர்காழி அருகில் உள்ள திருவெண்காட்டில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி துவக்கத்தில் வெள்ளைக்காடாக – வெண் மலர்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. அதனால்தான் இத்தலத்திற்குத் திருவெண்காடு என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.

    இங்கு இறைவன் பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வராக எழுந்தருளியிருக்கிறார். காசிக்கு இணையான சிவ ஸ்தலம் இது. அந்தக் காலத்தில், காசிக்குச் சென்று வரமுடியாதவர்கள், இங்கே சென்று வந்துள்ளனர். கல்வியில் சிறக்க புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், கல்வி மற்றும் கலைகளில் குறைபாடு ஏற்படும். அக்குறைபாடு உடைய குழந்தைகளை திருவெண்காட்டில் உள்ள புதபகவானை தரிசிக்க கூட்டிக்கொண்டு வந்து பிரார்த்தனை செய்தால், அக்குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை..

    படைப்புக் கடவுளான பிரம்மா இந்தத் தலத்தில்தான் அம்பிகையின் முன் தவமிருந்து ஞானம் பெற்றாராம் அதனால்தான் இங்குள்ள அம்பிகைக்கு பிரம்ம வித்தியாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது என்கின்றன தலபுராணங்கள். கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறத் திணறும் குழந்தைகளை இத்தலத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் இறைவியை வணங்கச் செய்வது நன்மையளிக்கும்! இசைக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் மேன்மை பெற வழிபட வேண்டிய ஸ்தலம் இது.

    உடலில் நரம்பு தொடர்பான நோய் உடையவர்கள் புதனை வழிபட்டால் தீர்வு நிச்சசயம் புதன் தசை நடப்பவர்கள் புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. திருவெண்காடு வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம் இருந்து புதபகவானை வழிபட்டால் வெற்றி நிச்சயம்.

    புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். அதனால் பிரதி புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் சுலபமான பரிகாரமாகும். புத பகவான் ஜனவசிய (வியாபார) பிரிவினைச் சேர்ந்தவர்.

    அதனால் வியாபாரிகள் இவரின் அருளைப் பெற ஸ்ரீ மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும். மேலும் மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் வாக்கு வன்மையும், கல்வியில் மேன்மையும் உண்டாகும்.

    இக்கோயில் கல்வி வரமருளும்; புத்தியை வலுவூட்டும். சீர்காழியிலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, புதன் கோயில்.

  • கல்வியில் சிறந்து விளங்க வைக்கும் சரஸ்வதி தேவி கோயில்

    திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் வெண்ணிற ஆடையில் வெண் தாமரையில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் ஞானக் கண்ணுடன் சரஸ்வதி தேவி அருள்பாலித்து வருகிறாள்.

    சரஸ்வதிக்கான பிரத்யேகமான தலங்களில் இது முக்கியமானது. இரண்டாம் ராஜராஜசோழனால் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட கோயில். அதனால் கூத்தனூர் என்று பெயர். கருவறையில் வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள், சரஸ்வதி. வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கியிருக் கிறாள். ஜடா முடியுடன், ஞானச்சஸ் என்கிற மூன்றாவது கண்ணும் கொண்டு, கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். முதன் முதலாக அட்சராப்பியாசம் என்கிற கல்வியைத் தொடங்கும் குழந்தைகள் இங்கு வந்து ஆரம்பிக்கிறார்கள்.

    தேவிக்கு சிவபெருமானைப் போல மூன்று கண்கள் காணப்படுகின்றன. நெற்றியில் உள்ள மூன்றாவது கண் ‘ஞானக் கண்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சரஸ்வதி தேவியை வழிபாடு செய்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம். இத்தலம் மயிலாடுதுறை -திருவாரூர் சாலையில் 20 கி.மீ. தொலை விலுள்ள பூந்தோட்டம் எனும் தலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

     

  • திருமலையில் பக்தர்கள் புகார் அளிக்க டோல் ப்ரீ எண்

    கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    திருமலையில் பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து புகார் அளிக்க 18004254141 என்ற டோல் ப்ரீ எண் மற்றும் 9399399399 என்ற தேவஸ்தானத்தின் வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்டவற்றை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    மேலும் உடனுக்குடன் தீர்வு காண எப்.எம்.எஸ் என்ற ஹெல்ப் லைன் சேவையை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் போன்ற அனைத்து மொழிகளிலும் ஊழியர்கள் உரையாற்றுவர்.

    சிறிய பிரச்சனைகளை ஊழியர்களும், பெரிய பிரச்சனைக்களை அதிகாரிகளும் உடனுக்குடன் அறிந்து தீர்வு காண்பர். அதற்காக பக்தர்கள் 1800425111111 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

    முருக பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி திருத்தலத்தில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை போன்ற பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழா ‘வசந்த உற்சவம்’ என்று வர்ணிக்கப்படுகிறது.

    இதையொட்டி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நேற்று காலை முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜைகளும், 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.

    பின்னர் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரம் சுற்றிவந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு விநாயகர் பூஜை, கொடிமரம் கொடிபட பூஜை, பாத்திய பூஜைகள் நடைபெற்றது, காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம், சுந்தரமூர்த்தி, சிவம், சந்திரமவுலி மற்றும் குருக்கள்கள் செய்தனர்.

    10 நாட்கள் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழாவில் தினசரி காலை தந்த பல்லக்கிலும், மாலை 8 மணிக்கு மேல் தங்கமயில், வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம், வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்க குதிரை, பெரிய தங்க மயில் வாகனம் போன்றவற்றில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் 6-ம் நாளான 27-ந் தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    7-ம் திருநாளான 28-ந் தேரோட்டம் நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் தினசரி மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், வீணை கச்சேரி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

  • குமரியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்

    கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி ஏழுமலையான கோவில் கும்பாபிஷேக விழா ஜூலை மாதம் 11-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.47 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் கருவறையில் உள்ள ஏழுமலையான் வெங்கடாஜலபதி பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை விஷூவை முன்னிட்டு அற்புத சூரியஒளி விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    மேலும், திருப்பதி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், புஷ்கரணி தீர்த்தவாரி, ரத உற்சவம், உள்ளிட்ட பல விழாக்கள் அதே நாட்களில் இங்கும் நடக்கும். கோவிலின் கீழ்தளத்தில் ஸ்ரீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர தேரோடும் 4 மாட வீதி கட்டும் பணி நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் தங்கும் வீடுகள், மூடிகாணிக்கை செலுத்தும் இடம், அன்னதான மண்டபம், கார் பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி, இணைப்பு சாலைகள், அலங்கார தோரண நுழைவு வாயில், கோ சாலை, தெப்பக்குளம் போன்றவை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    கருவறையில் அமைக்கப்பட உள்ள 6½ அடி உயர ஏழுமலையான் சிலை, 3½ அடி உயர பத்மாவதி சிலை, 3½ அடி உயர ஆண்டாள் சிலை, 3½ அடி உயர கருட பகவான் சிலை ஆகிய 4 சிலைகள் திருமலை திருப்பதியில் உள்ள தேவஸ்தான சிற்பகலை கல்லூரியில் வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் முக்கிய பிரசாதமாக வழங்கப்படும் லட்டு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. தற்போது, வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதைதொடர்ந்து கோவில் கட்டுமான பணியை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஜூன் மாதம் இறுதிக்குள் கட்டுமான பணிகள் அனைத்தையும் முடிக்க உத்தரவிட்டப்பட்டது. அதைதொடர்ந்து ஜூலை மாதம் 11-ந்தேதி கோவில் கும்பாபிஷேகம் நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

  • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது. பலத்த மழை பெய்ததால் நம்பெருமாள் வசந்த மண்டபம் செல்வதற்கு பதிலாக கருடமண்டபத்தில் எழுந்தருளினார்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின்போது நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.

    உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தில் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார். வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும்.

    இந்த ஆண்டு நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் வசந்த மண்டபம் செல்ல இருந்த நிலையில், பலத்த மழை பெய்ததால் நம்பெருமாள் வசந்த மண்டபம் செல்வதற்கு பதிலாக கருடமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

  • உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா

    பழமையும், பெருமையும் வாய்ந்தது உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா மே 28-ந் தேதி நடக்கிறது.
    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி அருள் புரிந்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து திரளான பக்தர்கள் இங்கு வருவார்கள். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா மே 28-ந் தேதி நடக்கிறது.

    விழாவையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5 மணிக்கு அபிஷேகம், சிறப்பு உதய மார்த்தாண்ட பூஜை, காலை 11 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால பூஜை, மாலையில் மங்கள இசை, இரவில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை கச்சேரி ஆகியன நடக்கிறது. நள்ளிரவு 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், திசையன்விளையில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

  • சிலிர்க்க வைக்கும் ஏழுமலையான் ரகசியங்கள்

    திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேரும்’ அனைத்து மாநில பக்தர்களையும் தன்பால் இழுக்கும் அபூர்வ சக்தி வாய்ந்தது திருப்பதி ஏழுமலையான் கோயில். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்கு தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவைகளை அறியும்போது நம்மை சிலிர்க்க வைக்கிறது. இதில் சிலா தோரணம் என்று அழைக்கப்படும் பாறைகளால் ஆன தோரண வாயில் 250 கோடி ஆண்டுகள் பழமையானது என்பதும், ஏழுமலையானின் சிலையும் ஒரே விதமானவை.

    இத்தகைய ஏழுமலையான் திருவுருவத்துக்கு பச்சை கற்பூரத்தால் திருநாமம் இடப்படுகிறது. இக்கற்பூரம் தொடர்ந்து பூசப்படும் பாறை வெடித்து விடும். ஆனால், ஏழுமலையானுக்கு 365 நாட்களும் பச்சைக்கற்பூரம் சார்த்தப்பட்டும் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் எந்த சிலையிலும் சிற்பியின் உளிபட்ட அடையாளம் இருக்கும். ஆனால், ஏழுமலையான் சிலையில் அப்படி எந்த அடையாளமும் இல்லை. மேலும் ஏழுமலையான் திருமேனியில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பளபளப்புடன் இயற்கையாய் அமைந்துள்ளன. ஏழுமலையான் மூலவர் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. 3000 அடி உயரத்தில் குளிர்ந்த சீதோஷ்ணத்தில் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்து முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.

    பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளை கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாக கொதிக்கின்றன. இக்கோயிலின் வழிபாட்டு முறைகள், உண்டியல் வசூல், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் வியப்பூட்டுபவை. மேலும் இந்த கோயிலின் மடப்பள்ளி மிக பெரியதாகும். அதேபோல் மூலவருக்கான உடை 21 முழம் நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு அதை அணிவிப்பதற்கு 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும்தான் மேல்சாத்து வஸ்திரம் எனப்படும் இந்த வஸ்திரத்தை அணிவிப்பார்கள்.

    அதேபோல் உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் அணிவிக்க சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் அணிவிக்க 10 ஆண்டுகள் பக்தர்கள் காத்திருக்க வேண்டும். இதுதவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இருமுறை சாத்தப்படுகிறது. அத்துடன் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு கட்டணம் செலுத்தி விட்டு 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். மூலவரின் அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவிலிருந்து புனுகு, பாரீசில் வாசனை திரவியங்கள் வரவழைக்கப்பட்டு, தங்க தாம்பாளத்தில் சந்தனத்துடன் கலந்து, 51 வட்டில் பாலாபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரியுடன் சேர்த்து புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை அபிஷேகம் நடைபெறுகிறது.

    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. அலங்காரத்துக்காக ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ரோஜா மலர்கள் பக்தர்களால் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் சீனாவிலிருந்து சீன சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போண்ற வாசனை பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்துமுறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் ‘வேங்கடமெனப்பெற்ற’ என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை காட்டப்படும். பிறகு தென்கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணை பறிக்கும் அழகோடு இருப்பார்.

    சுவாமி புஷ்கரணி

    திருமலையில் ஆயிரக்கணக்கான புனித தீர்த்தங்கள் இருந்தாலும், வராக புஷ்கரணி என்ற சுவாமி புஷ்கரணி, தும்புரு, குமாரதாரா, சுப்பிரமணியா, பசுபுதாரா, கபில தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் பக்தர்கள் அணுகக்கூடியவையாக உள்ளன. இதில் சுவாமி புஷ்கரணியில் ஏழுலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் கலக்கிறது. ஆகவே இது மிக புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

    வெறுங்கை வேடன்

    எந்த தெய்வத்தின் சிலையிலும் கையில் ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவ சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் சங்க இலக்கியங்களில் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். அதேபோல் திருப்பதி கோயில் ஓவியங்களும் 300 ஆண்டுகள் பழமையானவை. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.

    வாடாத ஆண்டாள் மாலை

    திருவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த மாலைகள் அதுவரை புதிய மாலைகளாகவே இருப்பது வியப்புக்குரியது.

    அரியும், சிவமும் ஒன்று

    ஏழுமலையானை சிவனாகவும், பிரம்மவாகவும், சக்தியாகவும் கருதி அன்னமய்யா, அருணகிரிநாதர் உட்பட பலரும் வழிபட்டுள்ளனர். அதற்கேற்ப அரியும், சிவனும் ஒன்று என்பதை விளக்க வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு பயன்படுத்தப்படுகிறது. மார்கழி மாத அர்ச்சனைக்கும் பயன்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று நடைபெறும் ஷேத்ர பாலிகா உற்சவத்தில், உற்சவ மூர்த்திக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை அணிவிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது.

    ஏழுமலையான் நகைகள்

    ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ₹1,000 கோடி, இவருடைய நகைகள் வைத்துக்கொள்ள இடமும் இல்லை, அணிவிப்பதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டுக்கு ஒருமுறை உபரி நகைகள் ஏலம் விடப்படுகிறது. ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை. சூரிய கடாரி 5 கிலோ எடை, பாதக் கவசம் 375 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றை கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ₹100 கோடி. தொண்டைமான் தொடங்கி ராசேந்திர சோழன், கிருஷ்ணதேவராயர், அச்சுததேவராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். மூலவர் ஏழுமலையானை போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய வெள்ளி விக்கிரகம் கி.பி 966ம் ஆண்டு செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்திவிடங்கனின் அரசி காடவன் பெருந்தேவி நகைகளை தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் ஏற்படுத்தியுள்ளார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கை செலுத்தியுள்ளார்.

    ஆங்கிலேய பக்தர்கள்

    கி.பி 1781ம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33வது பிரிவை சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுலையானை வேண்டி குணமடைந்ததும் ஒரு இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார். ஆங்கிலேயர்கள் சர் தாமஸ்மன்றோ, கலெக்டர் ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள். திருமலையின் புனிதம் கருதி கி.பி 1759 முதல் கி.பி 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கில பாதிரியார்கள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவையை நிறுவ விரும்பினர். ஆனால் அதற்கு ஆங்கிலேய ஆட்சி அனுமதிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள்.

    பொங்கல், தயிர்சாதம், புளி சாதம், சித்ரான்னம், வடை, முருக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயாசம், தோசை, ரவா கேசரி, பாதாம்கேசரி, முந்திரிபருப்பு கேசரி போன்ற பிரசாதங்கள் தயார் செய்யப்படுகின்றன. ஆனால், தினமும் ஒரு புதிய மண் சட்டியில் வைக்கப்பட்ட தயிர் சாதம் மட்டுமே கர்ப்பக்கிரக குலசேகரப்படியை தாண்டி செல்கிறது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண் சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்கு கிடைக்க பெற்றால், அது மிகப்பெரிய பாக்கியமாகும்.