Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • உங்கள் குலதெய்வத்தை அறிய…

    குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

    மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது. இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார். யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.

    மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்து வரவும். அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும். அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

  • விபூதி மகிமைகள்

    சிவபெருமானின் அருள் சின்னம் திருநீறு. உலகியல் செல்வங்கள் எல்லாம் அளிக்க வல்ல சிறப்பு கொண்டது விபூதி. விபூதி, சிவபக்திக்கு சாட்சியாகத் திகழ்கிறது. வேதங்கள் இதன் பெருமையைப் பறை சாற்றுகின்றன. வேதம், சிவபிரான் அக்கினி சொரூபம் என்று கூறுகிறது.

    இதனால்தான் நெருப்பைப் போன்ற சிவந்த உடல் கொண்ட சிவபெருமான் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார். இதுதான் நீறு பூத்த நெருப்பு!
    விபூதி அணிவதால் ஒவ்வொரு ரோமக்காலும் சிவலிங்கமாகிறது. இதனால் விபூதி பூசிய சரீரம் சிவாலயமாகிறது.

    பிருஹத்ஜாபாலோபநிஷத், பஸ்ம ஜாபாலோபநிஷத், ஸநாதன ஸம்ஹிதை போன்ற பழைய நூல்கள் விபூதி பற்றித் தெரிவிக்கும் செய்திகள் பிரமிக்க வைக்கின்றன. விபூதி செய்யும் முறையே புனிதமானது. கன்று ஈன்ற பசுவின் சாணத்தைச் சுத்தமான இடத்திலிருந்து சேகரிக்க வேண்டும். பசுவின் சிறுநீரால் அதைக் குழைத்து உருண்டையாகவோ, தட்டையாகவோ செய்து வெயிலில் காய வைக்க வேண்டும். கோமாதாவின் சாணம் உபநிஷத்தாகவும் கோமியம் பிரும்ம வித்தையாகவும் உள்ள மங்கலகரமான பொருட்கள் என்பது உபநிஷத வாக்கு.

    கோமயத்துடன் கோமூத்திரத்தைக் கலந்து பிசையும்போது ‘‘ஸ்ரீர்மே பஜது (திருமகள் எனக்கு அருள்பாலிக்கட்டும்) அலஷ்மீர்: மே நச்யது (இல்லாமை அவலம் கேடு எல்லாம் அழிந்து போகட்டும்)’’ என்று சொல்ல வேண்டும். பிறகு காய வைத்த கோமியத்தை வைதீக முறைப்படி ஹோம குண்டத்தில் யாகம் வளர்த்து மந்திர பூர்வமாக ஹோமம் செய்ய வேண்டும். ‘நிதனபதயே’ என்று ஆரம்பிக்கும் 13 ஹோம மந்திரங்களையும் வியாக்ருதியையும் பஞ்ச பிரும்ம மந்திரங்களையும் ‘நமோ ஹிரண்ய’ என்று தொடங்கும் மந்திரத்தையும் ஓதி ஹோமத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

    இந்த ஹோம அக்கினியை கோமய உருண்டைகள் அல்லது எரு வரட்டிகளின் குப்பலில் சேர்த்து வைக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு தான் அக்கினி மூட்டத்தை பிரிக்க வேண்டும். பரிசுத்தமான நிலையில் ‘ஓம்நத் பிரும்ம…’ என்று தொடங்கும் மந்திரத்தைச் சொல்லி விபூதியாகிய சாம்பலைச் சேகரிக்க வேண்டும். சில சைவச் சான்றோர்கள் உடலின் 32 இடங்களில் விபூதி பூசிக்கொள்வது வழக்கம். தற்கால வசதிக்காக முக்கியமான எட்டு இடங்களிலாவது இட்டுக் கொள்வது அவசியம் என்கிறது சாஸ்திர விதி. நெற்றி, கைகள், தோள்கள், மணிக்கட்டுகள், மார்பு, நாபி, கழுத்து, தலை ஆகிய இடங்களில் கீழ்க்காணும் மந்திரங்களை உச்சரித்த வாறு அந்த வரிசை கிரமமாக விபூதி இட்டுக் கொள்ள வேண்டும்.

    கடையில் வாங்கும் விபூதியைக்கூட சுத்தமான தண்ணீரில் குழைத்து அங்கங்களில் பூசிக் கொள்ளலாம். இயலாவிட்டால் குறைந்த பட்சம் ‘ஓம் நமசி வாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லியாவது இட்டுக் கொள்வது உத்தமம். ஆதிசங்கரர், ‘‘எல்லா உபாதைகளும் பேய் பிசாசுகளான பீடைகளும் விபூதி உடலில் பட்டவுடனே ஒழிந்துபோகும்’’ என்று உபதேசித்திருக்கிறார். பரமேஸ்வரியின் அருட்கரத்தால் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தில் ‘‘மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, தந்திரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு, சுந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு, செந்தூர் வாய் உமைப்பங்கன் திருவாலயவாயன் திருநீறே’’ என்று கூறியுள்ளார். ஒவ்வொரு சிவபக்தரும் இதை ஓதி வருவது மங்கலகரமாகக் கருதப்படுகிறது.

  • நல்ல காரியங்கள் செய்ய நல்லோரை

    ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.

    இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.

    இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.

    பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.

    ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. எந்தக்கிழமை துவங்கிறதோ (புதன்கிழமை என்றால் புதன் ஓரை, வெள்ளி என்றால் சுக்கிரன் ஓரை) அதற்குரிய கிரகத்தின் ஓரை முதல் ஒரு மணி நேரமாகக் கொள்ளப்படுகிறது.

  • திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இலவச தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    கோடை மற்றும் வாரவிடுமுறையையொட்டி, திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலை வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால், இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தவிர்க்க, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து நேர ஓதுக்கீட்டிற்கான டிக்கெட் பெற்றால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் 300 ரூபாய் கட்டணம் செலுத்திய பக்தர்களும், பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும், மூன்று மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • திருச்செந்தூரில் வைகாசி திருவிழா கோலாகலமாக தொடங்கியது

    திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்த திருவிழா கோலாகலமாக துவங்கியது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று.

    இதை முன்னிட்டு, காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உச்சிக்கால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி ஜெயந்திநாதர், திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபத்தை அடைகிறார்.

    மாலையில் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப் பிறகு 11 முறை வசந்த மண்டபத்தை வலம் வரும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளி கிரிவலம் வந்து கோயிலை அடைகிறார். 10 நாள்களும் தினமும் உச்சிக்கால பூஜைக்குப் பின் சுவாமி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளலும், பூஜைகளுக்குப் பின்னர், தங்கத்தேரில் எழுந்தருளி திருக்கோயிலை அடைவதும் நடைபெறுகிறது.

    இத்திருவிழாவின் 10-ம் நாளான வரும் மே 28-ம் தேதி, வைகாசி விசாகத் திருவிழாவன்று, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன. விசாகத் திருவிழாவை முன்னிட்டு வரும் மே 27 முதல் 29-ம் தேதி வரை, 3 நாள்கள் பூஜைக் காலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

  • குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு

    குலதெய்வம் – குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வ அருள் இல்லாமல் நமது வாழ்க்கையில் ஒரு நொடி கூட வாழ இயலாது. எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.

    குலதெய்வம் என்பது நமது குலத்தில் அதாவது பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வரும் தெய்வம் ஆகும். இத்தகைய தெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

    நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. குலதெய்வ வழிபாடு செய்யும் பலர் வேறொரு தெய்வத்தையோ அல்லது தெய்வங்களையோ வழிபாடு செய்வார்கள். அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

  • தோஷம் நீக்கும் நாகம்மன்

    விருதுநகர் அருகே சூலக்கரை கிராமத்தில் உள்ள வீரபெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் நாகம்மன். நாக தோஷம் நீக்கி நல்லருள் தருகிறாள். சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு சூலக்கரை கிராமத்தில் அந்தணர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். தங்களது நிலங்களில் வேலை செய்யும் பொருட்டு அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களை வரவழைத்து தங்க இடம் கொடுத்து வேலை செய்ய வைத்தனர். இவ்வாறு வந்தவர்களில் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினரும் இவ்வூரில் வாழ்ந்து வந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த முனீஸ்வரன் ஆசாரி, உறவுப்பெண் மாரியம்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது இல்லற வாழ்வு சிறப்புற்று இருந்தது. மாரியம்மா கர்ப்பமுற்றாள். ஏழுமாத கர்ப்பிணியாக மாரியம்மன் இருந்தபோது ஒருநாள் காலை வயல்வெளிக்குச் சென்ற முனீஸ்வரன் வரப்பு மேட்டில் நல்ல பாம்பை கண்டார்.

    அவரது காலடிச் சத்தம் கேட்ட அந்த பாம்பு அவ்விடம் விட்டு நகர்ந்தது. இருப்பினும் கண்ட பாம்பை அடிக்காமல் விடக்கூடாது என்றெண்ணிய முனீஸ்வரன், தனது பின் இடுப்பில் சொருகியிருந்த அரிவாளை எடுத்து பாம்பின் நடு கண்டத்தில் வெட்டினார். வெட்டுப்பட்ட பாம்பு பாதி உடலோடு புதருக்குள் சென்று பதுங்கியது. துடித்த கண்டம் பகுதி சற்று நேரத்தில் உயிரற்றுப் போனது. மாரியம்மாள் குழந்தை பெற்றாள். அந்த குழந்தை பெண் தலையோடும் பாம்பு உடலோடும் இருந்தது. அப்போதுதான் முனீஸ்வரன் தான் செய்த தவறை மனைவியிடத்தில் கூறினார். குழந்தை பிறந்த நாற்பத்தியோராவது நாள் நாகம் தீண்டி முனீஸ்வரன் இறந்தார். கணவன் இறந்த பின் மாரியம்மா தோட்ட காடுகளுக்கும். வயல்களுக்கும் வேலைக்கு சென்று வந்தாள். நாகத்தை பெற்றெடுத்ததால் அவளை நாகத்தின் அம்மா என்று அப்பகுதியினர் அழைத்தனர். அதுவே நாளடைவில் நாகம்மா என பெயராயிற்று.

    நாகம்மா கடைக்குச் சென்றாலும், தண்ணீர் எடுக்க கிணற்றுக்கு சென்றாலும், குழந்தையைப்போல நாகக் குழந்தை அவள் பின்னாலேயே செல்லுமாம். ‘‘நான் வரும் வரைக்கும் வீட்ல இருக்கணும்’’ என்று நாகம்மா கட்டளை இட்டுச் சென்றாலும், தாயின் வருகை தாமதமானால் பதிவாக செல்லும் இடங்களுக்கு சென்று பார்த்துவிட்டு வீட்டுக்கு வருமாம் நாகக்குழந்தை. இதை ஊரார்கள் நாகம்மாளிடம் உன் குழந்தை இப்பதான் தேடி வந்துச்சு என்று கூறுவார்களாம். அந்தளவுக்கு தாய் நாகம்மாள் மீது பாசம் வைத்திருந்தது நாகக்குழந்தை. நாகம்மா வேலைக்கு செல்லும்போது பாம்பு குழந்தையும் தாய்வேலை செய்யும் தோட்டத்தில் சென்று பாத்தியில் படுத்துக் கொள்ளுமாம். இதனால் தோட்ட உரிமையாளர்கள் உனக்கும், உன் பிள்ளைக்கும் என்று கூறி, நாகம்மாளுக்கு கூலியாக இரு மடங்கு தானியம் வழங்கி உள்ளனர். (அந்தக் காலத்தில் கூலியாக தானியங்கள்தான் பெருமளவில் வழங்கப்பட்டது)

    காய்கனிகள் காய்க்கும் தோட்டத்தில் நாகம் சென்று விட்டால், உடனே அந்த தோட்டக்காரர் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய், கனிகளில் ஒரு பகுதியை நாகம்மாவிடம் கொடுப்பதுண்டு. இதனால் நாகம்மா வீட்டில் தானிய வகைகளுக்கும், காய், கனிகளுக்கும் குறைவில்லை. அக்கம்பக்கத்தினர் இரக்கப்பட்டு வழங்கி வந்ததை, நாகம்மாளின் கணவர் வழி உறவினர்கள் இரக்கமின்றி தடுக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.

    இதனால் பொறாமை கொண்ட அவர்கள், குழந்தை நாகத்தை கதிர் அரிவாளால் துண்டு, துண்டாக நறுக்கி, வறட்சியால் வெடித்து நின்ற வயலில் அந்த வெடிப்புப் பகுதியில் துண்டுகளை வைத்து களிமண் கொண்டு அதன் மேல் பூசிவிட்டனர். நாகம்மாள் குழந்தை நாகத்தை தேடி வனத்திலும், வயல் வெளிகளிலும் அலைந்தாள். மூன்றாவது நாள் இரவில் நாகம்மாள் கனவில் தோன்றிய பாம்புக் குழந்தை, உறவினர்கள் தன்னை நறுக்கிப் போட்டதையும், தன்னை புதைத்து வைத்த இடத்தையும் கூறியது.

    மனம் வருந்திய நாகம்மாள், மறுநாள் காலை கனவில் நாகக் குழந்தை கூறிய வயல் பகுதிக்குச் சென்று நறுக்கிக் கிடந்த பாம்புத் துண்டுகளை எடுத்து கற்றாழை நாரில் கோர்த்து வைத்து, கையில் ஏந்தியபடி ஊருக்குள் கொண்டு வருகிறாள். மாலைப் பொழுதில் ஊர் பெரியோர்கள் கூடியிருந்த ஆலமரத்தடிக்கு வருகிறாள்.
    ஐயா, பெரியோரே, ஆன்றோரே, சான்றோரே, தனக்கு இருந்த பிள்ளையை கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். எனக்கு நியாயம் சொல்ல வேண்டும் என்று கதறி அழுதாள். கூடியிருந்த பெரியோர்கள், ‘‘பெற்றது பாம்பு பிள்ளை, அதைப்போய் பிரச்னைன்னு கொண்டு வந்து நிக்கிறியே, போம்மா, இனி எப்படி பிழைக்கலாமுன்னு பாரு’’ என்று பதிலுரைத்து அனுப்பினர். இதனால் மனமுடைந்த நாகம்மாள், தனக்கு நியாயம் கிடைக்காமல் சூலக்கரையில் யாரும் வசிக்க முடியாது என சாபமிட்டாள். வேகத்தோடும், கோபத்தோடும், தலைவிரி கோலத்தோடும் அங்கிருந்து விரைந்து வந்தாள்.

    ஊர் எல்லையில் உள்ள வீரப்பெருமாள் கோயிலுக்கு வந்து கதறி அழுது உயிரை மாய்த்தாள். நாகம்மாள் சாபத்தை தொடர்ந்து, ஊரில் வறட்சி ஏற்பட்டது. வீடுகள், தோட்டங்கள், வயல்வெளிகள் என எல்லா இடங்களிலும் பாம்புகள் அட்டகாசம் அதிகரித்தது. பாம்பு தீண்டி இறப்பு அதிகம் நேர்ந்தது. இந்தக் கொடுமைகளை தாங்க முடியாமல் அங்கிருந்த அக்ரஹாரமே தேவகோட்டைக்கு இடம் பெயர்ந்தது. ஊர் வாசிகள் ஒன்று கூடி நாகம்மாவுக்கு சிலை நிறுவி, பூஜை செய்தனர். பிரச்னைகள் ஓய்ந்தது.

    நாக தோஷம் விலகியது. நாகம்மாள் இறந்த இடத்தில் வீரபெருமாள் கோயில் வளாகத்தில் நாகம்மாள் சிலை உள்ளது. நாகம்மாள் கையில் பாம்புக் குழந்தையை வைத்தபடி அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறாள். இக்கோயில் விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் ரயில்வே கேட் அருகேயுள்ள வீரபெருமாள் கோயில் வளாகத்தில் உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

  • வால் இன்றி காட்சி தரும் அதிசய அபய ஆஞ்சநேயர் ….

    ராமேஸ்வரத்தில் உள்ள இந்த அதிசய ஆஞ்சநேயர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்ததும், சக்தி வாய்ந்ததும் ஆகும். இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் சுயம்புவாக கடல் மண்ணினால் கடல் சிப்பிகள் கலந்த உருவத்துடன் ஆன சிலையாக இருக்கின்றார். அவருடைய பலம் வாய்ந்த வால் இன்றி காட்சி தருகின்றார்.
    இங்கு இவரே பிரதானம் என்பதால், பரிவார மூர்த்திகள் எவரும் இல்லை. இந்த பிரம்மச்சாரியிடம் வேண்டினால், புத்திர பாக்கியம் கிட்டும் என்பதும், பாதுகாப்பு கிடைக்கும் என்பதும் மனக்குழப்பங்கள், குடும்ப ஒற்றுமை சீரடையும் என்பதும் நம்பிக்கை.
    மூலஸ்தானத்தில் வால் இன்றி ஒரு ஆஞ்சநேயரும், மற்றொரு ஆஞ்சநேயர் முழு உருவத்துடன் கம்பீரமாக காட்சி தருகின்றார். இவருக்கு அபய ஆஞ்சநேயர் என்ற பெயர் சூட்டி அழைக்கின்றனர்.
    இவரது சிலையின் அடியில் ஒரு கோடி ராம ரஷ மந்திர எழுத்துக்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது மிகவும் அற்புதமானதாகும். இவர் பக்தர்களின் பயத்தை போக்கி, பலத்தைக் கொடுப்பதால், அபயம் கொடுக்கும் அபய ஆஞ்சநேயர் என்று பெயர் பெற்றார்.
    இந்த தலத்தின் வரலாற்றை ஆராயும் பொழுது, சுவாரஸ்யமான தகவல்கள் அறியப் பெறுகின்றோம்.
    ராவணன் சீதையைக் கவர்ந்து இலங்கைக்கு எடுத்துச் சென்றான். பின்னர் ராமபிரான் அவனுடன் சண்டையிட்டு அவன் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுத்து, ‘இன்று போய் நாளை வா’ என்று வாய்ப்பு கொடுத்தும் உயிரைவிட்டான். ராவணன் சிவபக்தன் என்பதால், ராமபிரானுக்கு சிவ பக்த தோஷம் பிடித்தது. அதை நிவர்த்தி செய்ய, ராமேஸ்வரத்தில் சிவலிங்க பூஜை செய்ய உத்தேசித்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார்.
    ஆஞ்சநேயரை வேண்டி அனுபவம் பெற்று அருள் பெற்றவர்கள் வெற்றிலை, வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்கின்றனர். கோவிலின் பின்புறம் ஆஞ்சநேயர் உருவாக்கிய தீர்த்தக் குளம் உள்ளது. அதன் அருகில் தல விருட்சமாகிய அத்திமரம் இருக்கின்றது. அதில் இளநீரை கட்டி தங்கள் வேண்டுகோளை ராம பக்தர்கள் என்றும் சிரஞ்சீவியாக இருக்கின்ற அநுமனிடம் வைத்து செல்கின்றனர். அதிகபட்சமாக, ஒரு பௌர்ணமி முடிவடையும் முன்பு, அவர்களது இன்னல்கள் தீருகின்றன. நோய்கள் ஓடிப்போகின்றன. மனதிற்கு அமைதி கிடைக்கிறது. குடும்ப வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமைகின்றது. இது இத்தலத்தின் ஆஞ்சநேயரின் சக்தி என்கின்றனர்.
    பின்னர் அடுத்த முறை இத்தலம் வரும்பொழுது புதிய இளநீரால் இந்த தலத்தின் மூர்த்தியாகிய ஆஞ்சநேயரை அர்ச்சனை செய்து வணங்கி செல்கின்றனர். இந்த தலத்தில் சற்று உக்கிரத்துடன் முதலில் சிவபெருமான் சிலையை எடுக்க முயன்றதால், உக்கிர மூர்த்தியாக இருந்ததால், அவரை குளிர்விக்க இந்த இளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கின்றனர்.
    இங்கு ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் தொடர்ந்து மூன்று வாரம் அர்ச்சனை செய்ய அதிக அளவு பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.
    இந்த தலத்தில் முக்கிய விழாவாக அனுமன் ஜெயந்தியும் ராமநவமி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது.
    புரட்டாசி கடைசி சனிக்கிழமை, ஆனி ரேவதி நட்சத்திரம் மற்றும் அனுமன் ஜெயந்தி தினங்களில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. தினமும் காலை 7 மணி முதல் பகல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு கோவில் திறந்து இருக்கும்.
    புத்திர்பலம் யஸோதைர்யம் நிர்பயத்வ!
    மரோஹதா அஜாட்யம் வாக்ப டுத்வம்ஸ
    ஹநுமத் ஸ்மரணத் பவேத் ஹயக்ரீவ அக்ரீவ
    யோவதேத் தஸ்ய நிஸ்ரதே வாணு ஜன்னு கன்யா பிரவாஹத் !
    ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் மேற்கு வாசலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து செல்ல வாகன வசதி உள்ளது.

  • திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம்….

    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருகிற 21ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி 29ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி நேற்று காலை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. காலை 6 மணியளவில் சுவாமி துயில் எழுப்பப்பட்டு, முக்கிய சேவைகள் நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளும், விமான கோபுரம், கொடிமரம் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி 6 மணி முதல் 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    பின்னர் கஸ்தூரி மஞ்சள், குங்குமம், கிச்சலிக்கட்டை, திரிசூணம் உட்பட பல்வேறு திரவியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, 8.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

  • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அணையா விளக்கு

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறார்கள். நெய் விளக்கு விற்பனை உரிம ஏலத்தை தனியார் ஏற்றிருந்த நிலையில் 2013-ம் ஆண்டில் இருந்து கோவில் நிர்வாகம நேரடியாக மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நெய் விளக்கு விற்பனையை செய்து வந்தது. இதன் மூலம் கோவிலுக்கு பல மடங்கு வருமானம் கிடைத்ததோடு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது.

    இந்த நிலையில் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து திருப்பரங்குன்றம் கோவிலில் நெய் விளக்கு விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவுப்படி கோவிவில் அணையா விளக்கு அமைக்கப்பட்டு அதில் பக்தர்கள் நெய் விட்டு வழிபட ஏற்பாடு செய்யப்படுகிறது.

    25 லிட்டர் கொள்ளளவு கொண்ட அணையா விளக்குகள் 7 இடங்களில் வைக்கப்பட உள்ளது. இதற்காக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் வாடா விளக்குகள் வைக்கப்படும் இதே போல சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவிலிலும் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அணையா விளக்குகள் பயன்படுத்தும் பட்சத்தில் அகல் விளக்கில் நெய் விளக்கு ஏற்றுவது முழுமையாக தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.