Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்

    விளக்கு ஏற்றும் பொழுது :
    விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
    விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை
    விளக்கும் விளக்குடையார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே

    விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :
    இல்லக விளக்கது இருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதி உள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே.

    தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம் :
    பெரும்புலர் காலை மூழ்கிப்
    பித்தர்க்குப் பத்தர் ஆகி
    அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு
    ஆர்வத்தை உள்ளே வைத்து
    விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால்
    இடவல் லார்க்குக் கரும்பினில் கட்டி
    போல்வார் கடவூர்வீரட்ட னாரே.

  • மழலை வரமருளும் மறுகால்தலை சாஸ்தா

    நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகேயுள்ள மறுகால்தலை கிராமத்தில் அருட்பாலிக்கும் ஸ்ரீபூலுடையார் சாஸ்தா, தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு புத்திர பாக்யம் அருள்கிறார். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை சேர்ந்த ஏழு பேர், சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நிமித்தமாக மலையாள நாட்டிற்கு செல்கின்றனர்.

    அங்கிருந்து பொருள் ஈட்டி புறப்படும் தருவாயில் அந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் இவர்களை திருடர்கள் என நினைத்து, இவர்களை தாக்கி பொருட்களை மீட்க முற்படுகின்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டு இவர்களை துரத்த, இவர்கள் அப்பகுதியில் ஓங்கி உயர்ந்து அடர்த்தியாய் வளர்ந்து நின்ற பூலாத்தி செடிகள் நிறைந்த புதருக்குள் நுழைந்து மறைவாக இருக்கின்றனர். துரத்தி வந்தவர்கள் புதர் அருகே வந்து பார்க்கின்றனர். யாருடைய தலையும் தென்படவில்லை.

    அப்போது யானை மிளிரும் சத்தம் கேட்க, வந்தவர்கள் அவ்விடம் விட்டு உடனே அகன்றனர். கூட்டத்தினர் கலைந்ததும் புதர் மறைவிலிருந்து வெளியே வந்தவர்கள் தப்பித்தோம் என்று பெருமூச்சு விடும்போது அவர்கள் கண்ணில் பச்ச மண்ணால் செய்த சாஸ்தா சிலை தென்பட்டது. இந்த சாமி தான் நம்மை காப்பாற்றியது. யானை வாகனத்தான் சாஸ் தாதான். ஆகவே நம்மை காப்பாற்றிய இந்த சாஸ்தா வை நமது ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி, அந்த சிலையை எடுத்துக்கொண்டு ஊருக்கு புறப்படுகின்றனர்.

    மலையாளநாடு விட்டு, நாஞ்சில்நாடு கடந்து அஞ்சு கிராமம், ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம் அடுத்து அமுது உண்ணாகுடி கிராமம் வருகின்றனர். அங்கு சிலையை இறக்கி வைத்து விட்டு, உணவு சமைத்து உண்கின்றனர். உண்டு களித்து ஓய்வு எடுத்த பின் மீண்டும் பயணத்தை தொடர, சிலையை எடுக்க முற்படும்போது அந்தப் பகுதியில் படர்ந்திருந்த சுரைக்காய் செடி தட்டிவிட சிலையின் கால் பாதம் பகுதி உடைந்து விழுந்தது.

    பாதம் உடைந்த சிலையோடு பயணத்தை தொடர்ந்தனர். மதிய உணவுக்காக சமைக்க தென்திருப்பேரை அடுத்த கடம்பாகுளம் கரையில் சிலையை இறக்கி வைக்கின்றனர். மதிய உணவு உண்டுவிட்டு அங்கிருந்து புறப்படுகையில் சிலையை எடுக்கும்போது சிலையின் இடுப்புக்குக் கீழ்பகுதி அவ்விடமே பதிந்து விடுகிறது. சிலையின் தலை மற்றும் மார்புடன் கூடிய பகுதியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்படுகின்றனர். ஸ்ரீ வல்லப ஏரியின் மறுகால் பாயும் தலைப்பகுதியில் (சீவலப்பேரி) உள்ள மலை மேலுள்ள பாறை மீது கொண்டு வந்த சாமி சிலையை வைத்துவிட்டு ஏழு பேரும் தங்கள் ஊரான மணியாச்சிக்கு சென்று விடுகின்றனர். உடைபட்ட சிலையை ஊருக்குள் கொண்டு போகக் கூடாது என்பதால் வனத்தில் வைத்து விட்டு சென்றுவிட்டனர்.

    நாட்கள் சில நகர்ந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த மணியாச்சி ஜமீன் வீட்டு பசு மாடு ஒன்று தினமும் மலையேறி சுவாமி சிலைமேல் பாலை தானே சொரிந்து சென்றது. வாரம் ஒன்று கடந்த நிலையில் பால் கறந்த கோனார், ஜமீனிடம் குறிப்பிட்ட அந்த பசுமாடு மட்டும் காலையில் பால் கறக்கிறது. மாலையில் மடுவில் பால் இல்லை என்று கூறுகிறார். உடனே ஜமீன் அந்த மாட்டிலிருந்து பாலை யாராவது கறக்கிறார்களா? அல்லது மாடுகள் மேய்க்கும் நபர்கள் இருவரும் பாலை கறந்து விற்கிறார்களா என்று பார்த்து வர, ஐந்து நபர்களை ஜமீன் அனுப்புகிறார். அன்று மாலை வழக்கம்போல அந்தப் பசு, மலைமேலிருந்த சாஸ்தாவின் சிலைக்குப் பால் சொரிந்தது. பார்த்தவர்களும், மாடுகளை மேய்த்தவர்களும் வியப்புற்றனர். இந்தத் தகவலை
    ஜமீனுக்கு தெரிவிக்கின்றனர். அவரும் வந்து மறுநாள் பார்க்கிறார். அவருடன் ஊரார்கள் திரண்டு வந்து பார்க்கின்றனர். அவர்களுடன் சிலையை கொண்டு வந்த ஏழு பேர்களும் பார்க்கின்றனர்.

    பசுவின் செயலும், சுவாமி சிலையின் மகிமையையும் கண்டு மெய் சிலிர்த்து நிற்கையில், கூட்டத்தில் அருள் வந்து ஆடிய ஒருவர், தான் சாஸ்தா என்றும், எனக்கு இங்கே பூரண, புஷ்கலையுடன் சிலை அமைத்து கோயில் எழுப்ப வேண்டும் என்றும் எனது கோட்டைக்கு காவலாய் கருப்பன், சுடலை மாடன் உள்ளிட்ட இருபத்தியோரு பந்தி தெய்வங்களுக்கும் நிலையம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்படியே கோயில் எழுப்பப்பட்டது. ஏரியின் மறுகால் பாயும் தலைப்பகுதி என்பதாலும், ஏரியின் மறுகால் பகுதியில் சுவாமியின் தலை இருந்ததாலும் இந்த ஊர் மறுகால்தலை என்று அழைக்கப்பட்டது. பூலாத்தி
    செடிகளிடையே இருந்து கண்டெடுக்கப்பட்டதால் இவ்விடம் உள்ள சாஸ்தா பூலாத்தி செடி இடை கண்டெடுத்த சாஸ்தா என்றும் பூலாத்தி இடை சாஸ்தா என்றும் அழைக்கப்பட்டார். அது மருவி பூலுடையார் சாஸ்தா என்று அழைக்கப்படலானார்.

    இக்கோயிலில் காவல் தெய்வமாக முதன்மை பெற்று திகழ்பவர் கொம்பு மாடசாமி. இக்கோயிலில் வீற்றிருக்கும் சுடலைமாடன் மீது பக்தி கொண்ட இப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். தோட்டத்துக்காரர் கூலிப் பணமும், தனது தோட்டத்தில் விளைந்த கத்தரிக்காய்கள் கொஞ்சம் கொடுத்து அனுப்பினார். தலையில் காய்ஞ்ச விறகும் முந்தானையில் கத்தரிக்காய்களையும் முடிந்துகொண்டு வீட்டுக்கு நடந்து வருகிறாள். வழியில் எதிரே வந்த அப்பகுதியிலே பெரிய தோட்டப் பண்ணைக்காரர், அந்த பெண்ணின் முந்தானைப்பகுதி பெரிதாக இருப்பதை பார்த்துவிட்டு, ‘‘என்னம்மா ஆளு கொஞ்சம் அசந்தா தோட்டத்தையே இல்லாம ஆக்கிருவீங்களா’’ என்று சத்தம் போட்டார். அதற்கு அந்த பெண், ‘‘ஐயா, இது நான் வேலைப்பார்த்த தோட்டத்தில உள்ளது. பண்ணையாருதான் எனக்கு கூலிய கொடுக்கும் போது கொடுத்து அனுப்பினாரு’’ என்றாள். அதை கேட்க மறுத்த அவர். இல்லை, இல்லை இது என் தோட்டத்து காய்கள் தான். என்கிட்ட பொய்யா சொல்லுத என்று பேசினார்.

    கண்களில் கண்ணீர் மல்க, அந்த பெண் கூறினாள். ‘‘ஐயா, நான் கும்பிடுற பூலுடையார் கோட்டையில் காவல் காக்கிற அந்த சுடலைமாடன் சாமி மேல சத்தியமா சொல்லுதேன். உங்க தோட்டத்திலிருந்து நான் கத்தக்காய களவாங்கல’’ என்று அதற்கு அந்த தோட்டத்துக்காரர் ‘‘உங்க சாமிய கொண்டு சத்தியம் பண்ணினா உட்டுருவினா,’’ அப்போது அந்த பெண் ‘‘எங்க சாமி தப்பு பண்ணினா யாரையும் தண்டிக்கிறவரு, அவர மிஞ்சுன நியாயவான் யாருமில்ல.’’ அப்போது குறுக்கிட்ட தோட்டக்காரர் ‘‘உங்க சாமிக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு’’ என்று கேட்டார். அந்த பெண், ‘‘ஐயா, இன்னத்த பொழுது முடிஞ்சு நாளைக்கு காலையில வந்து சொல்லுங்க நான் உங்க தோட்டத்தில திருடுனேன்னு. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க, என் சாமி உங்களுக்கு நான் திருடலங்கிறதுக்கு அறிகுறி காட்டுவாரு, அப்புறும் நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கிறேன் என்றாள். ஊரு கூட்டத்தில சொல்லி அவமானப்படுத்தினாலும் ஏத்துக்கிறேன்.’’ என்றாள். ‘‘சரி, போ, நாளை விடியட்டும்’’ என்று மிரட்டும் தோணியில் பேசினார்.

    மறுநாள் காலை எழுந்து தோட்டத்துக்காரர் தோட்டத்துக்கு சென்றார். அங்கே செடியில் முளைத்திருந்த அத்தனை கத்திரிக்காய்களிலும் இரண்டு கொம்பு முளைத்திருந்தது. அதனை கண்டு திடுக்கிட்டவர் ஓடோடி வந்து அந்த பெண்ணிடம் ‘‘உண்மை தெரியாம உன்னை சந்தேக பட்டுட்டேன் தாயி, என்னை மன்னிச்சிடு ஆத்தா’’ என்று கூற, அந்த பெண், ‘‘என் சுடல மாடசாமி … ’’என்று மெய் உருகி கத்திய படி, அந்த பெண், தோட்டத்துக்காரர், ஊர்க்காரர்கள் என எல்லோரும் பூலுடையார் சாஸ்தா கோயிலுக்கு வர, அங்கே சுடலைமாடசுவாமி பீடத்தின் தலையில் இரண்டு கொம்பு முளைத்திருந்தது. தோட்டத்துக்காரர் சாமியின் முன்பு மண்டியிட்டு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். அன்றிலிருந்து இக்கோயில் சுடலைமாடசாமி, கொம்பு மாடசாமி என்று அழைக்கப்படலானார். தளவாய்மாடசாமி தான் கொம்புமாடசாமி என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    சாஸ்தாவின் சிலை உடைய காரணமான சுரைக்காயை, பூலுடையார் சாஸ்தாவை வழிபட்டு வரும் வம்சா வழியினர், பக்தர்கள் உணவில் பயன்படுத்துவது இல்லை. இக்கோயிலில் மூலவர் ஸ்ரீபூலுடையார் சாஸ்தா பூரண, புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். தவசி தம்புரான், லாட சந்நியாசி, வீரபத்திரர், சப்த கன்னியர், தளவாய்மாடன், கொம்பு மாடசாமி, சுடலைமாட சாமி, தளவாய்போத்தி, பேச்சியம்மன், ஆழி போத்தி, சங்கிலி பூதத்தார், மலையழகு அம்மன், மலை விநாயகர் ஆகியோர் மலையிலும், மலையின் கீழே சிவனணைந்த பெருமாள், கருப்பசாமி, பலவேச கருப்பசாமி, தளவாய்மாடன், சப்பாணி மாடன், பட்டவராயன் கொம்பு மாடன், கொம்பு மாடத்தி ஆகிய காவல் தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

    இங்குள்ள சாஸ்தாவுக்கு கோயிலில் இருந்து ஆறு கி.மீ. தொலைவில் ஓடும் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. 1912ம் ஆண்டு முதல் பிச்சை வேளார் மற்றும் அருணாசல வேளார் வம்ச வழியினர் தினமும் ஆறு கி.மீ. தூரம் சென்று தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து பூஜை செய்கின்றனர். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் அருள்கிறார் ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. மேலும் திருக்கார்த்திகை அன்று தீப திருவிழாவும் நடைபெறுகிறது. இக்கோயில் நெல்லை சந்திப்பிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சந்திப்பிலிருந்து புளியம்பட்டி, தவளாப்பேரி பேருந்துகளில் சென்றாஷல் சீவலப்பேரியை அடுத்த ஊர் மறுகால்தலை. இங்கு தான் ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா வீற்றிருக்கிறார்.

  • குடும்பம் சிறக்க வைக்கும் சிறுவாபுரி சிங்காரவேலன்

    சென்னைக்கு வடமேற்கே சென்னை,கொல்கத்தா நெடுஞ்சாலையில் சிறுவாபுரி (சின்னம்பேடு) பாலசுப்ரமணிய பெருமான் ஆலயம் உள்ளது. வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த ராமனின் குழந்தைகளான லவனும், குசனும் ராமனின் குதிரையை கட்டிப்போட்டனர். ராமனே நேரில் வந்து சிறுவர்களுடன் போரிட்டு வென்று குதிரையை மீட்டு சென்றதாக ராமாயணம் கூறுகிறது. இப்படி ராமனிடம் லவனும் குசனும் சண்டை செய்த இடமே சிறுவாபுரி என்பது வரலாறு.

    சிறுவாபுரி கோயில்களின் பெருமைகள் பல. அதில் முருகம்மையார் கை தழைக்கச் செய்தது, தேவர் இருந்து அமுதுண்டது, தேவேந்திர பட்டணம் கிடைத்தது, இந்திரனுக்கு பதவி உயர்வு கிடைத் தது, லவன், குசன் ராமனின் அசுவத்தை கட்டிய இடம், மரகதப் பச்சை கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் அமைந்த தலம் என 12 சிறப்பம்சங்களை கொண்டது இத்திருத்தலம்.

    சிறுவாபுரிக்கு வரும் பக்தர்கள் வேண்டியபடி வீடு, வாகனம், தொழில், திருமணம் என குடும்பம் சிறக்க சிங்காரவேலன் அருள்பாலிக்கிறார். 6 வாரங்களுக்கு செவ்வாய் தோறும் சிறுவாபுரி முருகனை வணங்கினால் நினைத்த காரியம் ஈடேறுமென பக்தர்கள் கூறுகின்றனர்.

    சென்னை-நெல்லூர் சாலையில் அமைந்துள்ள திருத்தலம் ‘சிறுவாபுரி’. இத்தலத்தில் உள்ள முருகன் கோயிலில் முருகப்பெருமான் வள்ளியம்மையுடன் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். முருகன் திருத்தலங்கள் யாவற்றிலும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சியாகும் இது.

  • எங்கும் நிறைந்த நரசிம்மர்

    இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்பதையும், தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும், அவர்களைக் காப்பது இறைவனின் கடமை, அப்படி தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம், நரசிம்மர் அவதாரம் ஆகும்.

    யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் முக்கியமான ஒன்பது வடிவங்கள் இருக்கின்றன. இவைத் தவிர பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர் போன்ற பல வடிவங் களிலும் விஷ்ணுவின் ஆலயங்களில் நரசிம்மர் அருள்பாலிப்பதைப் பார்க்கலாம்.

    நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். அதிலும் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நரசிம்ம ஜெயந்தி (28-4-2018) அன்று இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    நரசிம்மருக்கு செவ்வரளி போன்ற சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.

  • விரும்பும் துறையில் வேலை கிடைக்க…

    ஸ்ரீதேவி…

    அம்ருதோத்பூதா கமலா சந்த்ரசோபனா
    விஷ்ணுபத்னீ வைஷ்ணவீ ச வராரோஹாங்க சார்ங்கிணீ
    ஹரிப்ரியா தேவ தேவீ மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ
    ஸ்ரீ மஹாலக்ஷ்மி துதி

    இந்தத் துதியை மஹாலக்ஷ்மி படத்தின் முன் அமர்ந்து விளக்கேற்றி, தினமும் 16 முறை பாராயணம் செய்து வர தேவியின் அருளால் அவரவருக்குப் பிடித்தமான துறையில் நல்ல வேலை கிடைக்கும்.

    பொதுப்பொருள்:
    செல்வங்களுக்கெல்லாம் அதிதேவதையானவளே. அமிர்தம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது திருப்பாற்கடலில் தோன்றியவளே, தாமரை மலரை விரும்பி ஏற்பவளே, சந்திரனுக்கு சகோதரியே, திருமாலின் மனைவியே, வைஷ்ணவியாய் அருள்பவளே, பக்தர்களின் நல் வாழ்வில் ஏற்படும் தடைகளை உன் கையில் உள்ள சார்ங்கம் எனும் வில்லால் அழிப்பவளே, தேவர்களுக்கெல்லாம் தேவியே, மஹாலக்ஷ்மியாய் பேரழகுக் கோலத்தில் திகழ்பவளே, உன்னை வணங்குகிறேன்.

  • சர்க்கரை நோய் நீக்கும் தலம்….

    நீடாமங்கலம் அருகேயுள்ள சிவாலயத்தில் சிவபெருமான் கரும்பு கட்டிணைப்போல கட்டுக்கட்டாக தோற்றம் அளிக்கிறார். இதனால் இந்த கோயிலில் சிவபெருமான் கரும்பேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சர்க்கரை நோயாளி களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே போவது கவலை தந்தாலும், அந்த நோயைத் தீர்க்கும் ஈஸ்வரனும் இங்கேதான் குடிகொண்டிருக்கிறான் என்பது இனிப்பான சேதி.

    தஞ்சையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலை வில் உள்ளது கோயில்வெண்ணி. கரிகால் சோழப் பேரரசர் வெண்ணிப் போர் நடத்தி, எதிரிகளை வென்ற புகழுடைத்த ஊர் என்று சரித்திரத்திலும் பெரிதும் பேசப்படுகிறது இவ்வூர். புலவர் வெண்ணிக் குயத்தியார் பிறந்த ஊர் எனும் தகவல் மூலம் சங்க காலத்துடன் ஒப்பிட்டு இதன் தொன்மையை அறிய முடிகிறது. சுமார் 2,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம், கோயிலுக்கு எதிரே சூரிய புஷ்கரணி என்ற தீர்த்தம் (குளம்), கோயிலுக்கு வலதுபுறம் சந்திர புஷ்கரணி என்ற தீர்த்தம். இப்படி கோயிலுக்கு அருகே சூரிய, சந்திர தீர்த்தங்கள் அமைந்திருப்பதே வெகு சிறப்பாகக் கருதப்படுகின்றன.

    மிகச் சிறிய கோயில்தான். ஆனால், உள்ளே நுழைந்ததும், அந்த அழகும் அமைதியும் பிரமாண்டமாகத் தெரிகின்றன. ராஜ கோபுரத்தைத் தாண்டியதும், பலிபீடமும் நந்ததேவரின் திருவுருவமும் இருக்கின்றன. ஒரே ஒரு பிராகாரம்தான். உள்ளே மகா மண்டபம். வலதுபுறம் விநாயகர். பிறகு, நர்த்தன கணபதி. கருவறையைச் சுற்றி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் காட்சி தருகின்றனர். கோயில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதால், கன்னிமூல விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணி யர், மகாலட்சுமி ஆகிய திருமூர்த்தங்கள் தற்காலிகமாக மகா மண்டபத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பிராகாரத் தில், பைரவர் சந்நிதியும் நவகிரகங்களும் அமைந்துள்ளன. ஈசான்ய மூலையில், இந்த ஆலயத்தின் தல விருட்சமான நந்தியாவர்த்தம் பசுமையாகக் காட்சி தருகிறது.

    சுவாமி சந்நிதியில், கருவறைக்கு வெளியே அனுக்ஞை விநாயகரும், உபநந்தியும் காட்சியளிக்கின்றனர். கருவறையில் கரும்பே உருவாய் காட்சி தருகிறார் மூலவர். ஆம்… ‘திருமேனி கரும்புக் கட்டுடைத்து’ என்று திருமூலர் பாடியுள்ளபடி, கரும்பேஸ்வரர் என்னும் பெயருக்கேற்றாற்போல், கரும்புக் கட்டுகளைச் சேர்த்து வைத்தாற்போன்ற பாண அமைப்பைக் கொண்டவர் இந்த மூலவர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது, அந்த வடிவம் நமக்கு நன்றாகப் புலப்படுகிறது. பாணம் அமைந்திருக்கும் ஆவுடை, சதுர் அஸ்த்ர வடிவமுடையது. இதுபோன்ற திருவடிவம் அபூர்வமானது.

    சிவலிங்கத் திருமேனியின் வலது மேல்புறத்தில், சற்றே வெட்டுப்பட்டது போன்ற அடை யாளம் உள்ளது. திருவாரூரில் ஸ்ரீதியாகராஜ சுவாமியைப் பிரதிஷ்டை செய்த பெருமைக்குரிய முசுகுந்த சக்கரவர்த்தி, ஒருமுறை திருவாரூரில் இருந்து தஞ்சைக்குச் செல்லும்போது, வழியில் ஓரிடத்தில் இரு முனிவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார். ஒரு முனிவர், ‘இந்த இடம் கரும்புக் காடாக இருப்பதால், இதன் தல விருட்சம் கரும்பு’ என்றும், மற்றொருவர், ‘இல்லையில்லை; இது நந்தியாவர்த்தம் நிறைந்த இடம். எனவே, நந்தியாவர்த்தம்தான் தல விருட்சம்’ என்றும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

    இவர்களுடைய விவாதத்தைக் கேட்ட மன்னர், ‘இந்த இடத்தில் ஆலயமே இல்லையே… இவர்கள் இருவரும் தல விருட்சம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே!’ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். முனிவர்களின் பேச்சுக்கிடையில் குறுக்கிட்டால் சாபத்துக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்தில், அமைதியுடன் அவர்களை நோக்கிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் திடீரென ஓர் அசரீரி ஒலித்தது. ‘கரும்புக் கட்டுகள் சேர்ந்த கரும்பின் சொரூபமாக நான் இங்கே இருக்கிறேன். இங்கே தல விருட்சம் நந்தியாவர்த்தம்!’ என்று இறைவனின் குரலே, உண்மையை ஓங்கி ஒலித்தது.

    உடனடியாக அந்த இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது, லிங்க பாணம் வெளிப்பட்டது. அப்படித் தோண்டும்போது மண்வெட்டியால் விழுந்த வெட்டுத் தழும்புதான் இப்போதும் அவருடைய திருமேனியில் காணப்படுகிறது. சிவலிங்கம் கிடைத்த இடத்தில் உடனே கோயில் கட்ட முடிவு செய்தார் சக்கரவர்த்தி. லிங்கம் இருந்த இடத்தில், அடியில் தோண்டத் தோண்ட அந்த பாணம் போய்க்கொண்டே இருந்ததாம். எனவே, சிறிது உயரமாகவே கட்டலாம் என நினைத்து, 20 அடி உயரத்தில் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார். சொல்லப்போனால், சூரிய புஷ்கரணியில் இருந்து லிங்கம் இருக்குமிடம் 40 அடி உயரம் இருக்கும். மொத்தம் 12 படிகளைத் தாண்டித்தான் சிவனைத் தரிசிக்க வேண்டும். ‘மாடக் கோயில்’ என்று கூட சொல்லலாம்.

    ‘‘இங்கே பிரார்த்தனை செய்து கொண்டால் சர்க்கரை நோய் தீருகிறது. சர்க்கரை அதிகமா இருக்கிறவங்க கும்பிட்டா, அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை அவர் எடுத்துக்கொள்கிறார் என்பது நம்பிக்கை.

    சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை…

    சித்தர்கள் பாடல்களில் இந்தக் கோயிலில் சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பாட்டி சித்தரும் கோயில்வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது குறித்துப் பாடியுள்ளார். ‘ரசமணியோடு வெல்லம் கலந்து, கோயிலை வலம் வந்து, சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால், குருதியில் சர்க்கரை குறையும்’ என்று காகபுஜண்டர் பாடியுள்ளார். ஆனால், இன்றைய விலை வாசியில் ரசமணியை வாங்கிப் படைப்பது என்பது சாத்தியமல்ல. எனவே, மக்கள் தங்களால் இயன்றளவு ரவையை வாங்கி, வெல்லம் கலந்து, படைத்து வழிபடுகின்றனர். எறும்புகளுக்கு அது உணவாகிறது. இறைவன் அதை ஏற்று, சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக நம்பிக்கை.
    இங்கே மூலவரையும் அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம். கிழக்கு நோக்கி கரும்பேஸ்வரரும் தெற்கு நோக்கி அம்பாளும் அருள்பாலிக்கிறார்கள்.

    அம்பாள் சௌந்தரநாயகி, பெயருக்கேற்றபடி மிக அழகிய திருக்கோலத் துடன் காட்சி தருகிறாள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு, மழலைப் பேறு அருளும் மகா சக்தி படைத்தவள். குழந்தைக்காகப் பிரார்த் திக்கும் பக்தர்கள், வளையல்களை வாங்கி வந்து அம்பாள் சந்நிதியில் கட்டிவிடுகின்றனர். பெண்கள் வளையல் சார்த்தி வேண்டிக் கொண்டால் கண்டிப்பாகக் கருத்தரிப்பர் என்பது பலர் வாழ்வில் கண்ட உண்மை. இத் தலம் திருக்கருகாவூருக்கு மிக அண்மையில் உள்ளது.

  • ஸ்ரீ ரங்கத்தில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்…

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் சித்திரை ரேவதி நட்சத்திர விழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.

    கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் 9வது நாளான இன்று அதிகாலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மக்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

  • வாழ்க்கையில் முச்சங்கு ஒலி

    பழங்காலங்களில் ஒரு மனிதருடைய வாழ்வில், மூன்று முறை சங்கநாதம் ஒலிக்கப்பட்டது. அதன் மூலமாக எழக்கூடிய சுப நாதமானது, சம்பந்தப்பட்ட மனிதருக்கு நற்பலன்களை உண்டாக்குவதாக நம்பப்பட்டது. தற்போது நடைமுறையில் அவ்வளவாக இல்லாத அந்த பழக்கத்தில் பல்வேறு உள்ளர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வில் ஒலிக்கப்பட்ட மூன்று சங்கநாதங்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

    முதல் சங்கு

    ‘முதற்சங்கம் அமுதூட்டும், நடுச்சங்கம் நல்வழி காட்டும், கடைச்சங்கம் காதவழிபோம்’ என்று நமது முன்னோர்களால் குறிப்பிடப்பட்டது. முதல் சங்கு என்பது ஒரு குழந்தை பிறந்தவுடன் ஒலிக்கப்படுவதோடு, முதன்முதலாக சங்கில் பாலூட்டுவதும் மரபாக இருந்து வந்தது. அதிலும் வலம்புரி சங்கு மூலம் பாலூட்டப் படும் ஆண் குழந்தை வீரமும், நன்னெறியும் கொண்டதாக வளருவதாக கருதப்பட்டது.

    இரண்டாவது சங்கு

    இரண்டாவது சங்கு என்பது ஒருவரது திருமணத்தின்போது ஒலிக்கப்படும். அதாவது இரண்டு உள்ளங்களை ஒருங்கிணைக்கும் சம்பிரதாய நெறிமுறையாக இருந்து வந்தது. காதில் சங்கை வைத்து கேட்டால் மட்டுமே ஓம்கார ஓசை கேட்கும். அதேபோல ஒருவருக்கு ஒருவர் அவரவர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து கேட்பதன் வாயிலாக, பிரச்சினைகளை காதோடு காது வைத்ததுபோல சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் சங்கநாதம் ஒலிக்கப்பட்டது.

    மூன்றாவது சங்கு

    இது ஒருவரது மரணத்தின் பின்பு ஒலிக்கப்படுவதாகும். இறந்தவர், இறைவனுக்கு சமமாக சொல்லப்பட்டது. இனம், மதம், உயர்வு, தாழ்வு, ஜாதி வேற்றுமைகள் ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டு எல்லோரும் கூடும் இடங்கள் மூன்று உண்டு. அவை ஆலயம், பள்ளிக்கூடம், மயானம் ஆகியவை. ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் இறுதியில் அனைவரும் ஒன்றுகூடும் மயான பூமிக்கு அவர் கொண்டுவரப் படும்போது, புனிதம் பெற்றவராக வரவேண்டும் என்ற கருத்தில் ஒலிக்கப்படுவது மூன்றாவது சங்கநாதம் ஆகும்.

  • எண்ணிய காரியம் நிறைவேற்றும் சாய்பாபா விரதம்

    எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.

    எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிராதித்துக் கொள்ள வேண்டும் காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தை பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.

    பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிறமலர்கள் மாலை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை வணங்கவும். முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாய் விரத கதை, சாய் பாமாலை, சாய் பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

    விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும் ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும்.

    உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும். சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும்.விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும் மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.

  • சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருப்பது ஏன்?

    சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.

    சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும்.

     

    மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும்.

     

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.