Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • வீட்டில் செல்வம் செழிக்க எளிய வழிபாடு

    குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் ‘லட்சுமி குபேரன்’ என்று அழைக்கப்படுகிறார். குபேரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார். அவரிடம் இருந்து எந்திரத்தை பெற்றார். அந்த எந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்தால் நல்லது கிடைக்கும். பொன், பொருள், செல்வம் நிறையும். வியாபாரம், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.

    தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, நாணயங்களை வைத்து வழிபட வேண்டும். சிவபெருமானின் உற்ற தோழரான குபேரனுக்கு என்று ஒரு மந்திர சதுக்கம் உண்டு. எந்தப்பக்கம் கூட்டினாலும் 72 வரும். இந்த சதுரம் குபேரனுக்கு உரியதாக நெடுங்காலமாக வழிபட்டு வருகிறது.

    வியாழக்கிழமை மற்றும் பூரம் நட்சத்திரம் கூடிய நாளில் இந்த குபேர சக்கரத்தை அல்லது எந்திரத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும்.

    ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் 5 வியாழன் மாலை, குபேர தீபம் ஏற்றி லட்சுமி குபேர நாமம் செய்தால் பலன் கிடைக்கும்.

    இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபேர பூஜையை விரதம் இருந்து செய்ய நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.

    குபேர எந்திரபூஜையை மேற்கொள்ளும் போது ஒரே மாதிரியான நாணயங்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் கோலம் போட வேண்டும். எண்களை வெள்ளை அரிசி மாவினாலும், கட்டங்களை சிவப்பு குங்குமத் தினாலும், வார்த்தைகளை மஞ்சள் பொடியினாலும் போட வேண்டும். ஒவ்வொரு கட்டத்துக்கும் நாம் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள நாணயத்தை வைத்து தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் அல்லது 9 பவுர்ணமி என விரதமிருந்து பூஜிக்க வேண்டும். அதே தினங்களில் 9 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அந்த எண்களின் பக்கத்தில் எழுத்துகள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க வேண்டும்.

    குபேர எந்திர கோலம் போட்டு நாணயங்களை அதில் வைத்து முடித்ததும், எந்திரத்தின் முன் சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜையை தொடங்க வேண்டும். ‘மகாலட்சுமி தாயே! என் கடன்கள் விரைவில் தீர வேண்டும். எனக்கு லாபம் கிடைக்க வேண்டும்’ என கூறிவிட்டு ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள நாணயத்தின் மீதும், பூக்களை போட வேண்டும். அப்படி பூக்களை போடும் போது எழுத்துக்கள் அழிந்து விடாமல் இருக்குமாறு கட்டத்தில் வைத்துள்ள நாணயம் மீதே பூக்களை போட வேண்டும்.

    அப்படி 9 முறை வேண்டிக் கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் பூவை வைத்து பின் எந்திரத்துக்கு கற்பூரம் காட்டிய பின் அந்த கோலத்தை வணங்கி விட்டு பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்த பின்னர் உடனே கோலத்தை அழித்து விடக்கூடாது. மறுநாள் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

    மறுநாள் வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும். கோலத்தை துடைக்கும் முன்னே 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும். ஒன்பது நாட்களும் உபயோகிக்கும் 81 நாணயங்களையும் பத்திரமாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அது லட்சுமி தேவிக்கு பூஜிக்கப்பட்ட நாணயம் ஆகும்.

    அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் தர வேண்டும். 9 நாட்களும் பூஜித்த நாணயங்களை லட்சுமி தேவியின் உண்டியலில் போட வேண்டும். அதை போடும் முன்பு தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக்கைகளை போல் தனக்கும் பல மடங்கு செல்வம் தரவேண்டும் என லட்சுமி தேவியை மனமார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பூஜையை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் உள்ள வாரிசுகள் செய்யலாம். இதை செய்தால் வீட்டில் அமைதி நிலவும். செல்வம் நிலைக்கும்.

  • தென் திருப்பதி பெருமாள் மலை

    திருச்சி மாவட்டம் துறையூர் பெரம்பலூர் சாலையில் துறையூரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது பெருமாள்மலை. இங்கு கொல்லிமலை மற்றும் பச்சைமலை தொடரில் சுமார் 1800 அடி உயரத்தில் பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது.

    இத்திருத்தலம் திருப்பதிக்கு ஒப்பானது. அதனாலேயே தென்திருப்பதி என்ற சிறப்பு பெயர் பெற்றது. திருப்பதியில் உள்ளதுபோல் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி திருமண கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கிறார்.

    இதேபோல் அலமேலு மங்கை தாயார் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். அடிவாரத்தில் கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி, பிரமாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் ஏழுமலைகள் உள்ளது.

    திருப்பதிக்கு அருகில் நாகலாபுரம் என்று ஊர் உள்ளது. அதைப்போல் இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் நாகலாபுரம் என்ற கிராமம் உள்ளது. இவற்றையெல்லாம் ஒத்திருப்பதால் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது.

    தலவிருட்சம் இலந்தை மரம், ஏழு ஸ்வரங்களின் ஒலி எழுப்பும் கருங்கல் தூண்கள், தசாவதாரங்களை தூண்களில் கொண்ட தசாவதார மண்டபம், வசந்த மண்டபம், ஏகாதசி மண்டபம், எங்கும் இல்லாத நரசிம்மர் அவதாரம் மிக துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட பெருமாள் மலை கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல 1564 படிக்கட்டுகள் உள்ளன.

    தல வரலாறு:

    ராஜராஜ சோழ மன்னனின் சந்ததியர் ஒருவரால் 11ம் நூற்றாண்டில் கட்டபட்டதாக தெரிகிறது. இம்மன்னன் தனது குருவின் உபதேசப்படி தான் இறைவனடி சென்று சேர ஏகாந்தமான இடத்தில் தவம் செய்யக்கருதி தனது ஆளுகைக்கு உட்பட்ட இப்பெருமாள் மலையில் இலந்தை மரத்தடியில் அமர்ந்து தவம் மேற்கொண்டான். இம்மன்னனின் தவத்தை மெச்சி சங்கு சக்கராயுதபாணியாக எம்பெருமாள் காட்சி தந்தருளினார்.

    இம்மன்னனின் வேண்டுதலுக்கிணங்க எம்பெருமாள் தனக்கு வலதுபுறம் பெரியபிராட்டிக்கும் இடதுபுறம் இம்மன்னனையும் தவநாயகராக இருந்து வர அருள்பாலித்ததாக வரலாறு கூறுகிறது. இம்மன்னரே கருப்பண்ணார் என்றும் வீரப்பசுவாமி என்றும் போற்றப்பட்டு இன்றளவும் சிறப்புற வழிபடப்பட்டு வருகின்றனர். வேறெந்த வைணவத் திருத்தலத்திலும் இல்லாத சிறப்பாக கருப்பண்ணசுவாமி சன்னதியில் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    மலைக்கோயிலில் தினமும் நித்தியபடி பூஜை நடத்தப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். பவுர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறும். பெருமாள்மலையில் புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளும் மிகவும் விஷேசமானது. இக்கோயிலில் 8க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வழிபாடு நடத்துகின்றனர். புரட்டாசி ஆரம்பித்தால் இந்த கிராமங்களின் தளுகை வந்த பின்னர்தான் சுவாமிகளுக்கு வழிபாடுதொடங்கும். கிராமமக்கள் தங்கள் விவசாயம் செழிக்க வேண்டி மலைபாதையில் விரித்துபோடப்பட்டிருக்கும் துணிகளில் கம்பு, சோளம் நெல் போன்ற நவதானியங்களை தூவிவருவர்.

    இவ்வாறு செய்தால் விவசாயம் செழிப்படையும் என்பது ஐதீகம்.திருப்பதி ஏழமலையான் தனக்கு செலுத்த வெண்டிய நேர்த்திக்கடன்களை தானே பிரசன்னமாக எழுந்தருளி இத்திருத்தலமான பெருமாள்மலையில் செலுத்த வேண்டும் என திருவுளம் கொண்டார். அதனாலேயே ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சேவார்த்திகள் இங்குவந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர். கோயில் காலை 5 மணி முதல் 12 வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரை யும் நடை திறந்திருக்கும். வாகனங்கள் மூலம் மலைக் கோயிலை சென்றடைய சுமார் 5 கி.மீ. தூரம் தார்சாலையாக மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கோடை திருநாள் தொடங்கியது

    திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கோடை திருநாள் துவங்கி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ரங்கநாச்சியார் சன்னதியில் ஜூன் 8 வரை பூச்சாற்று உற்சவம் நடைபெறுகிறது. ஜூன் 3 ஆம் தேதி வரை வெளிக்கோடை திருநாள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு மாலை 6.30மணிக்கு ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 7 மணிக்கு வெளிக்கோடை மண்டபம் சேர்ந்தார்.

    4ம் தேதி மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். 6.30க்கு வெளிக்கோடை மண்டபம் அடைகிறார். இரவு 7.30க்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பிறகு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்படுகிறார். 7.45க்கு உள்கோடை ஆஸ்தான மண்டபம் வந்தடைகிறார்.

    8.45க்கு உள்கோடை மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 9.45க்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானத்தை அடைகிறார். 9 முதல் 15ம் தேதி வரை ரங்கநாச்சியார் வசந்தம் திருநாள் நடைபெற உள்ளது. 9ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6.30க்கு வசந்த மண்டபத்தை அடைகிறார். இரவு 8.30 மணிக்கு அலங்காரம் வகையாறு கண்டருள்கிறார். விழா காலங்களில் தினமும் இரவு 8.30க்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

  • துன்பங்களை அகற்றும் வராஹி மந்திரம்

    வராஹ முகத்தோடு இருக்கும் இந்த அன்னை, பராசக்தியின் முக்கிய மந்திரியாக திகழ்பவள். இவள் விஷ்ணுவின் வராஹ அம்சமாக தோன்றியவள். இவளுக்கு ஈசனைப் போல மூன்று கண்கள் உண்டு. தவிர அம்பாளிடம் இருந்து உருவானவள். எனவே இந்த வராஹி தேவி, சிவபெருமான், திருமால், பராசக்தி ஆகிய மூவரின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறாள். சப்த கன்னியர்களில் மிகவும் வேறுபட்டவள். மிருக பலமும், தேவ குணமும் கொண்ட இந்த அன்னை, தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களை அகற்றும் ஆற்றல் நிறைந்தவள்.

    ‘ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.

  • கிரிவலப்பாதையில் அருள்பாலித்த கழுகாசலமூர்த்தி

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, காலசந்தி பூஜை நடந்தது.

    காலையில் கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கிரிவலப்பாதை வழியாக கோவிலுக்கு சென்று வழிபட்டனர். மதியம் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உச்சிகால பூஜை நடந்தது.

    இரவில் சுவாமி- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி, கிரிவலப்பாதை வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நேற்று முன்தினம் மாலையில் திரளான பக்தர்கள் கிரிவலப்பாதை வழியாக கும்பிடுசேவை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கார்த்தீசுவரன் தலைமையில், கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

  • திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழாவும் ஒன்று.

    அந்தவகையில் இந்தாண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா, கடந்த 19-ம் தேதி தொடங்கி, 10 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன.

    மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று, தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்ந்தார்.

    அந்தவகையில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீ£பரதனையும், இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடைபெற உள்ளது.

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து முருகபெருமானை வழிபட்டார்கள்.

  • கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்…..

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7 மணியளவில் தேரோட்டம் நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9.30 மணிவரை குதிரை வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  • தங்க காக வாகனத்தில் சனிபகவான் வீதியுலா

    திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோயில் பிரமோற்ஸவ விழாவின் 16நாள் விழாவாக, நேற்று முன்தினம் இரவு சனிபகவான் தங்க காக வாகனத்தில் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
    காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோயில் உலக புகழ்பெற்றது. இக்கோயிலில் சனிபகவான் தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோயில் பிரமோற்ஸவ விழா கடந்த 11ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, கடந்த 18ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்பபல்லாக்கு செல்லும் நிகழ்ச்சியும், 23ம் தேதி பஞ்சமூர்த்திகள் ருஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா நிகழ்ச்சியும், நடைபெற்றது.

    15 நாள் விழாவாக, 25ம் தேதி கோயில் வாசலில் விநாயகர், சுப்பிமணியர், தியாகராஜர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேர்களின் தேரோட்டம் நடைபெற்றது.16ம் நாள் விழாவாக, நேற்று முன்தினம் இரவு, சனிபகவான் தங்க காக வாகனத்தில் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • தோடர் கோயிலில் கூரை மாற்றும் திருவிழா

    தோடர் இன மக்களின் கோயிலில் கூரை மாற்றும் திருவிழா நேற்று ஊட்டி அருகேயுள்ள பகல்கோடுமந்து பகுதியில் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் உட்பட பல்வேறு வகையான ஆதிவாசி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இதில் ஒவ்வொரு ஆதிவாசி இனமக்களும் தங்களுக்கு என தனி பாரம்பரிய உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்களை கொண்டுள்ளனர். இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் 67 மந்துகளில் வசித்து வருகின்றனர். தோடர் இன மக்களின் தலைமை மந்தாக முத்தநாடு மந்து உள்ளது.

    இந்நிலையில் ஊட்டி அருகேயுள்ள பகல்கோடுமந்து பகுதியில் தோடர் மக்கள் புதிதாக கோயில் கட்டும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
    இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோயிலுக்கு புதிதாக கூரை வேயும் நிகழ்ச்சி நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    இதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் கிடைக்க கூடிய மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் ஒரு வகை புல் ஆகியவற்றை கொண்டு வரப்பட்டிருந்தது. தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த தோடர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய உடையணிந்து வழக்கமான உற்சாகத்துடன் கோயிலில் மூங்கில், பிரம்பு மற்றும் அவில் புற்கள் கொண்டு கூரை வேய்ந்தனர். இதில் பல்வேறு மந்துகளில் இருந்து ஏராளமான தோடர் இன மக்கள் பங்கேற்றனர்.

  • சகல ஐஸ்வரியங்களும் வழங்கும் வைஷ்ணவி மந்திரம்

    செல்வ வளம் தரும் அன்னையாக வைஷ்ணவி தேவி பார்க்கப்படுகிறாள். சகல சவுபாக்கியங்களுடன், செல்வ வளம் பெற விரும்புபவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் இவள். குறிப்பாக தங்கத்தை அளவின்றி கிடைக்கச் செய்பவள். அம்பாளின் கைகளில் இருந்து பிறந்தவள்.

    ‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
    சக்ர ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் உங்கள் இல்லத்தில் குடிகொள்ளும்.