Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ராமநாதசுவாமி கோயிலில் அணையா விளக்கு !

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 1400 கிலோ எடை கொண்ட அணையா விளக்கு ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. சன்னிதி முன்பு நந்தி மண்டபத்தில் உள்ள கொடி மரத்தில் அணையா விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கொண்டு வரும் எண்ணையை இதில் ஊற்றி செல்ல அறிவுறுத்தப்படுகிறது. 1400 கிலோ எடையும் 4 அடி உயரமும் கொண்ட அணையா விளக்கில் பக்தர்கள் நெய் மற்றும் எண்ணையை ஊற்றி வழிபடுகின்றனர்.

    முதல் கட்டமாக நந்தி மண்டபத்தில் இந்த அணையா விளக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அம்மன் சன்னிதி கொடி மரம் அமைந்துள்ள பகுதியிலும், நவக்கிரக மண்டபத்திலும் இதேபோன்ற விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. 4 புறமும் கண்ணாடி பொறுத்தப்பட்டு இரும்பு விளக்கில் திரியிட்டு எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்க…

    செங்கல்லில், ‘ராமநாமம்’ எழுதி, தலையில் வைத்துக் கொண்டு படியேறி அனுமனைத் தரிசித்தால், விரைவில் வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவது உறுதி என்கிறார்கள் பக்தர்கள்!

    சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை ஆதிவராக சுவாமி (நித்திய கல்யாணப் பெருமாள்) தலத்தின் ‘பரிவேட்டை’ தலமாகவும் புதுப்பாக்கம் ஆலயம் உள்ளது. எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு என்று ஒன்றைச் சொல்கிறார்கள் பக்தர்கள். அதாவது, வீரஆஞ்சநேயர் திருத்தலத்தில் பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் கொடுப்பது தனிச்சிறப்பு.

    பௌர்ணமி தோறும் இரவு நேரத்தில், ஆஞ்சநேயர் இந்த கஜகிரி மலையை கிரிவலம் வருவதாக ஐதீகம். ஆகவே அப்போது பக்தர்களும் கிரிவலம் வந்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை!

    அமாவாசை நாளில் புதிய செங்கல்லில் ராமநாமம் எழுதி, அதனை தலையில் வைத்துக் கொண்டு, படியேறி வந்து அனுமனை வழிபட்டால் விரைவில் வீடு வாங்கும் யோகம் கூடிவரும் என்கிறார்கள் பக்தர்கள்!

    மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திர நாட்களில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சார்த்தி வழிபட்டால் காரியத் தடைகள் அகலும் திருமணத் தடைகள் அகலும்.

    நல்ல வேலை கிடைக்கவும், வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும், செவ்வாய்க்கிழமை மாலை வேளைகளில் அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, அருகம்புல்லுடன் வெற்றிலை வைத்துக் கட்டிய மாலையை ஆஞ்சநேயருக்கு சூட்டி வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

    பௌர்ணமி கிரிவலமும் இங்கே சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் அருகிலேயே திருவெளிச்சை சிவன் கோயிலும், மாம்பாக்கம் தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோயிலும் உள்ளன. ஆகவே, புதுப்பாக்கம் அனுமனையும் இந்த சிவாலயங்களிலும் சிறப்புறத் தரிசனம் செய்யுங்கள். சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள்!

  • திருப்பதி கோயில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.3.25 கோடி

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 57 ஆயிரத்து 341 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 26 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ.3.25 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

  • கடன் தொல்லை தீர்க்கும் ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்திரம்!

    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவோரும் வீடுவாசல் என பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க முடியவில்லை என்று கலங்குவோரும் காஞ்சி காமாட்சித் தாயை மனதில் நினைத்தபடி, மனதார இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லிவந்தால், வீட்டில் கடன் தொல்லை நீங்கும். பொருள்சேர்க்கை நிகழும்.

    மூக பஞ்ச சதியில் உள்ள ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரம் இது.

    ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்

    ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா

    த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி

    ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே

    அதாவது, காமாக்ஷி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உன்னுடைய கருணையானது தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி, நல்ல குழந்தைகள், மூவுலகிலும் மேன்மையை அடையும் நிலை ஆகியவற்றை விரைவிலேயே வரமாகத் தருகிறது.

    திரிபுரத்தையும் சம்ஹாரம் செய்த பரமேஸ்வரனின் பத்தினியே! பக்தர்களின் பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது? என்று அர்த்தம்!

    பௌர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த நாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும்.

    செல்வம், கல்வி கேள்வி என வித்தை, புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவை கிடைக்கவில்லையே என வருந்தும் பக்தர்கள், இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யுங்கள். வீட்டில் சுபிட்சம் நிலவும் என்பது உறுதி!

  • அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தேரோட்டம்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 11-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    முத்துக்குடைகள் முன்னே செல்ல, காவி உடை அணிந்து, தலைப்பாகை அணிந்த பக்தர்கள் பக்தி கோ‌ஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று பூ, பழம், பன்னீர், வெற்றிலை ஆகிய பொருட்களை சுருளாக படைத்து அய்யாவை வழிபட்டனர்.

    தேரோட்ட நிகழ்ச்சியில் நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தலைமை பதியின் கிழக்கு வாசல் அருகில் அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு காலை, மதியம் உணவு வழங்கப்பட்டது.

  • பழனி முருகன் கோவிலில் மேலும் ஒரு ரோப்கார் வழித்தடம்

    பழநி மலை முருகன் கோயிலில் 2-வது ரோப்கார் வழித்தடம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.

    தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. மலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல ரோப் கார்கள் மற்றும் இரண்டு இழுவை ரயில்கள் செயல்பட்டு வருகின்றன.

    எனினும் விஷேச நாட்களில் ரோப் காரில் பயணிக்க பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு 73 கோடி ரூபாய் செலவில் தற்பொழுது இரண்டாவதாக மேலும் ஒரு ரோப் கார் செல்லும் வழித்தடம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.

    அதற்காக நடைபெற்ற வாஸ்து பூஜையை இணை ஆணையர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். இந்த புதிய ரோப் கார் மூலம் ஒரு மணி நேரத்தில் 1,200 பேர் வரை பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • இடைஞ்சல் அகல நரசிம்மர் விரத வழிபாடு

    அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார்.

    அவரது படத்தை பூஜை அறையில் கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு விரதமிருந்து நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.

    ‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்’.

    இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது.

    இதை முறையாக விரதமிருந்த கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும்.

  • சிவபெருமான் அருள் கிடைக்க நந்தி வழிபாடு

    சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமான் தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும். சிவபெருமானின் வாகனமாக இருப்பது வெள்ளை நிறக்காளை. இதன் சிறப்பம்சங்கள் பல இருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

    ‘ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப…’ என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. ‘சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும், சிறப்பு மிகு பெருமையும் கொண்டது என்பது இதன் பொருளாகும். மாடு என்றால் ‘செல்வம்’ என்று பொருள். நந்தி என்றால் ‘மகிழ்ச்சி’ என்று பொருள். நான்கு மறைகளையும் நந்தியம் பெருமானுக்குத் தான், ஈசன் முதன் முதலில் கூறியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    சிவன் கோவில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தியை, ‘தர்ம விடை’ என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எந்த காலத்திலும் நிலைத்து நிற்பது தர்மம் மட்டுமே. அந்த தர்மம் தான், இறைவனான சிவபெருமானைத் தாங்கி நிற்கிறது.

    கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும், வீழ்ந்து வணங்குவதும் கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் நந்தியின் மூச்சுக் காற்று கருவறை சிவலிங்கம் மீது பட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத் தான் ஈசன் சுவாசிக்கிறார்.

    சிலாத முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது. நந்தியம்பெருமானுக்கு ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன.

    பிரதோஷ காலங்களில் நந்திக்கு தான் முதல் மரியாதை. நந்தியின் காதுகளில் நமது பிரச்சினைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார் என்பது நம்பிக்கை.

    பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக் கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.

    பிரதோஷ பூஜையில் நந்திக்குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

    சிவபெருமானின் வாகனமாக காளை திகழ்வதால் தான், பிரதோஷ காலத்தில் அருகம்புல்லை மாலையாகக் கட்டி அணிவித்து வணங்குகிறோம். எனவே சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும்.

  • திருக்கோயில்களில் நடைபெறும் தீப உபசாரம்

    ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப – தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும்.

    ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷாமிருகம் – கலைமகள்; நாகதீபம்-நாகராஜர்; கஜ தீபம் – விநாயகர்; வியாக்ர தீபம்-பராசக்தி; ஹம்ச தீபம் – பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்-துர்கை; சூல தீபம்-மும்மூர்த்திகள்; துவஜ தீபம்-வாயு; வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்; பிரமா தீபம்-துர்காதேவி; குக்குட தீபம்-கந்தப்பெருமான்; கூர்ம தீபம்-மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்-அக்னி; சக்தி தீபம்-பராசக்தி.

    ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  • திருவிளக்கின் சிறப்பு

    திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

    சிவசக்தி தீபம்

    தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

    நிலைத்த பலனுக்கு விளக்கு வழிபாடு

    கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.

    தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானையே அருணகிரிநாதர்”“தீபமங்களஜோதீ நமோநம” என்று திருப்புகழில் பாடுகிறார்.

    இறையருள் கைகூட தண்ணீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள், தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலியநாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே, மறு பிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்தும்.