Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • குழந்தைப் பேறு கிடைக்க கவுமாரி அன்னை மந்திரம்

    கவுமாரன் என்றால் குமரன் என்று பொருள். குமரன் என்பது முருகக்கடவுளைக் குறிக்கும். ஈசனாலும் உமையவளாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர் தான் குமரக்கடவுள். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் அம்சம்தான் இந்த கவுமாரி. இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயிலை வாகனமாக கொண்ட இந்த அன்னை, அஷ்ட திக்குகளுக்கும் அதிபதியாவாள். இவளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    ‘ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
    சக்தி ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ கெளமாரி ப்ரசோதயாத’

    என்ற கவுமாரி காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்து வந்தால், குழந்தைப் பேறு விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  • விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோயிலில் பிரம்மோர்சவ விழா

    விழுப்புரத்தில் வைகுண்டவாச பெருமாள் கோயிலில் பிரம்மோர்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று இருக்கிறது. புஷ்பயாகம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழுப்புரத்தில் உள்ள வைகுண்டவாச பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோஹசவ விழா நடைப்பெறுவது வழக்கம். அதன் படி, இந்தாண்டின் பிரம்மோஹசவ விழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக புஷ்பயாகம் நடைப்பெற்றது. இதனையொட்டி, சிறப்பு யாகம் நடத்தப்பட்டன.

    பின்னர், பூ தேவிக்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு டன் வண்ணமிகு பல்வேறு வகையான வாசனை மலர்களை கொண்டு பூஜிக்கப்பட்டது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

  • திருமலையில் ஜூன் மாத உற்சவங்களின் விபரம்

    ஜூன் மாதம் எந்தெந்த நாட்களில் என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகின்றது என்ற விவரப் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையானுக்கு வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி என உற்சவங்களை பகுத்து வைகானச ஆகம முறைபடி, தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதில் ஆழ்வார்களின் சாத்துமுறை வருட நட்சத்திரம் உள்ளிட்டவை அடங்கும்.

    மேலும், மாதம்தோறும் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் அந்த மாதம் தொடங்குவதற்கு முன் வெளியிடுவது வழக்கம். அதன்படி, தேவஸ்தானம் ஜூன் மாதம் திருமலையில் நடைபெறயுள்ள உற்சவங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    ஜூன் 10-ம் தேதி மதத்ரய ஏகாதசி
    ஜூன் 15-ம் தேதி ஸ்ரீ புத்த ஜெயந்தி
    ஜூன் 23-ம் தேதி ஸ்மார்த்த ஏகாதசி
    ஜூன் 24-ம் தேதி ஆனி திருமஞ்சனம், வைணவ ஏகாதசி, மாதவ ஏகாதசி
    ஜூன் 25-ம் தேதி ஸ்ரீநாதமுனி ஆண்டு திருநட்சத்திரம்
    ஜூன் 26-ம் தேதி ஆனி திருமஞ்சனம் நிறைவு
    ஜூன் 28-ம் தேதி பௌர்ணமி உற்சவம் நடைபெற இருக்கிறது.

  • திருப்பதி ஏழுமலையான் மே மாத உண்டியல் வசூல் ரூ. 86 கோடி

    திருமலை திருப்பதியில் மே மாதம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மே மாதம் மட்டும் ரூ.86 கோடி காணிக்கையை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டும், பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அதன் காரணமாக உண்டியல் வசூலும் அதிகரித்துள்ளது.

    கடந்த மே மாதத்தில் 24 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் திருப்பதியில் சுவாமி தரிசனம் பெற்றுள்ளதாகவும், பக்தர்கள் 86 கோடியை 46 லட்சம் ரூபாயை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளதாகவும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்து இருக்கிறது.

  • கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை ஏற்பட இந்திராணி மந்திரம்

    தன்னை வழிபடுபவர்களின் உயிரைக் காப்பதிலும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவதிலும் இந்த அன்னை சிறப்புக்குரியவள். மேலும் கணவன்-மனைவிக்குள் தாம்பத்ய சுகத்தைத் தருபவளும் இந்த அன்னையே. இவளை முறையாக வழிபாடு செய்யும் திருமணமாகாத ஆண்களுக்கு, குணத்தில் சிறந்த மனைவியும், திருமணமாகாத பெண்களுக்கு குணத்தில் சிறந்த கணவனும் அமைவர்.

    ‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
    வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, இந்திராணியை வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

  • சகல மேன்மைகள் தரும் மும்மூர்த்திகள் கோயில்

    திருச்சி அடுத்த பிச்சாண்டார்கோவிலில் உத்தமர் கோயில் உள்ளது. முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான். வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்துள்ளனர். இங்கு குருப்பெயர்ச்சி மற்றும் லட்சார்ச்சனையில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை நல்கும்.

     

    உலகில் வேறெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக படைப்புக் கடவுள் பிரம்மாவே குரு பகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில், தென்முகமாக அனுக்கிரக மூர்த்தியாக அமர்ந்து, அருகில் தனி சன்னதியில் சரஸ்வதி தேவியை தன்னுடன் கொண்டு அருள் வழங்கி வருகிறார். பிச்சாண்டார்கோவில் என்றழைக்கப்படும் இவ்வூரும், உத்தமர் கோயிலும் சைவ, வைணவ ஒருமைப்பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன. வைணவ புராணத்தின் படி பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான், பிச்சைக்காரன் வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால், பிச்சாண்டார் கோவில் என்ற காரணப்பெயரை இவ்வூர் பெற்றது.

    சிவபெருமானின் புராண வரலாற்றின் படி அவருக்குரிய 63 மூர்த்தங்களில் (வடிவங்களில்) ‘பிச்சாடனர்’ அதிமுக்கியமானது. உலகில் நன்னெறி போதிக்க வந்த முனிவர்களும் அவர்தம் மனைவியரும் கர்வத்தால் அறிவிழந்து நின்ற போது அவர்களை நெறிப்படுத்த சிவபெருமான் பிச்சாண்டவராகத் தோன்றியது இவ்வூரில் தான். பிச்சாண்டார்கோவில் என்ற காரணப்பெயர் மிகப் பொருத்தமானது. இப்பூவுலகில் உயிர்களைப் படைப்பதற்காக பெருமாளின் நாபிக்கமலத்தில் பிரம்மா தோன்றி இக்கோயிலில் குடிகொண்டு விளங்குவதால் பிரம்மபுரி, ஆதிபிரம்மாபுரம், பிரம்மாபுரம் என்று பண்டைய பெயர் கொண்டு விளங்குகிறது.

     

    முன்னொரு காலத்தில் பிரளயத்தின்போது உலகம் முழுவதும் ருத்ரமூர்த்தியிடம் ஒடுங்கிய போது நித்தியமாகிய வேதங்களே தங்களுக்கு இருப்பிடமின்றி தன்னைச் சரணடைந்தபோது சோமேசக்கடவுள் தான் பூலோகத்தில் அவதரிக்கப் போவதாகக் கூறி வேதங்கள் கதம்ப மரங்களாகவும், ஆகமங்கள் புஷ்பங்களாகவும், இதிகாசங்கள் பழங்களாகவும், புராணங்களைப் பறவைகளாகவும் மாறி தனக்கு மனோகரமான நிழலைத் தர உத்தரவிட்டார்.

    அதன்படி, வேதங்கள் கதம்ப மரங்களாக தோன்றியதால் இவ்வூர் கதம்பவனம், திருக்கரம்பந்துறை என்ற பெயர் பெற்றது. பிரம்மா பூஜையைச் சோதிக்க பெருமாள் கதம்ப மரங்களினூடே மறைந்து நின்று பின்னர் தன்னை வெளிப்படுத்தியதால் கதம்பனூர் என்றும், கதம்ப மரங்களின் மற்றொரு பெயராகிய நீபமரங்களின் பெயரால் நீபவனம் என்றும் அழைக்கப்பட்டது. கதம்ப முனிவர் என்ற மகரிஷியின் தவத்திற்கு மனமிறங்கி மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்ததால் கதம்பனூர் என்றும் பின்னர் மருவி கரம்பனூர் என்றும், ‘திரு’ என்ற அடைமொழியுடன் ‘திருக்கரம்பனூர்’ என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. உத்தமர் கோயில் என்று இவ்வாலயம் அழைக்கப்படுவதும் காரணப் பெயர் தான். கோயிலில் படைப்புத் தொழில் புரியும் பிரம்மா தனி சன்னதியில் குரு பகவான் ஸ்தானத்தில் தெற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு வேண்டுவன அனைத்தையும் அருளி வருகிறார். அவரது இடப்புறம் கல்விக் கடவுள் கலைவாணி ஞானசரஸ்வதி குடி கொண்டு கல்வி, கலை, ஞானம், நல்லறிவு ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

    காக்கும் கடவுளாகிய திருமால், புருஷோத்தமர் என்ற திருநாமத்துடன் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டுள்ளார். இவரது இடப்புறம் தனி சன்னதியில், பிச்சாடனரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அவரது பிச்சைப் பாத்திரம் பூரணமாக நிரம்பும் அளவு அன்னமிட்ட பூரணவல்லித் தாயார் குடிகொண்டு சகல ஐஸ்வர்யங்களையும் நல்கி அழிவில்லாமல் சகல உயிர்களையும் காத்து வருகிறார். அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களை புரிந்து வரும் சிவபெருமான் பிச்சாண்டவர் (பிச்சாடனர்) என்ற திருநாமத்துடன் சவுந்தர்யபார்வதியை தென்முகமாகக் கொண்டு விளங்குகிறார். பிச்சாடனராக இத்தலத்தில் அவதரித்த இறைவன், நெறி கெட்டு கர்வத்துடன் இருந்த ரிஷிகளையோ அவர்களது பத்தினிகளையோ அழிக்காமல் அவர்களின் அகம்பாவத்தை மட்டும் அழித்ததால் அவர் உத்தமராக விளங்குகிறார்.

    சகல மேன்மைகள் தரும் மும்மூர்த்திகள்

    ஆரோக்கியம், தொழில் மேன்மை, வேலைவாய்ப்பு, சுயதொழில், உத்யோக உயர்வு, திருமணம், புத்திரபாக்கியம், உயர்கல்வி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, மனநலம், வழக்குகளில் வெற்றி, மனநிம்மதி உள்ளிட்ட அனைத்து பிரார்த்தனைகளும் 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்வதனால் பிரம்மாவினால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. பிரார்த்தனை கை கூடிய பிறகு கோயிலில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை அல்லது தயிர் சாதம் தளிகை செய்து அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவு செய்ய வேண்டும். பக்தர்களுக்கு ஜாதகத்தில் விஷ்ணு தோஷம் இருந்தால் புதன் கிழமையிலும், சிவன் மற்றும் குரு தோஷம் இருந்தால் வியாழக்கிழமையிலும், நாகதோஷம் மற்றும் சுமங்கலி தோஷம் இருந்தால் வெள்ளிக்கிழமையிலும் பிரம்மாவிற்கு உகந்த ஆத்தி இலையில் அர்ச்சனை செய்வது நலம். புத்திரபாக்கியம் வேண்டுவோர் ராமபிரானின் தந்தை தசரதமகாராஜா பூஜித்த தசரதலிங்கத்தை வில்வ இலையால் எந்தநாளும் அர்ச்சனை செய்து பலன் பெறலாம். தசரதலிங்கத்திற்கு தொடர்ந்து 48 வாரங்கள் அர்ச்சனை செய்து குழந்தைப் பேறு பலருக்கு கிடைத்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    திருச்சியில் இருந்து சேலம் நெடுஞ்சாலையில் 5 கி.மீ தொலைவில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உத்தமர் கோயில் அமைந்துள்ளது.

  • கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் நடும் திருவிழா

    கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாக இருக்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெறும். அப்போது கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் விமரிசையாக நடக்கும் நிகழ்வுகளாகும்.

    இந்த ஆண்டு கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 13-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து மூன்று கிளையுடைய வேப்பம் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் பலி பீடம் எதிரே நட்டு வைத்தனர்.

    பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து, வேப்பிலை சூட்டி அலங்கரித்து வைக்கப்பட்டது. இந்த கம்பத்திற்கு பக்தர்கள் தினமும் புனித நீரை எடுத்து வந்து குடம், குடமாக ஊற்றி வழிபட்டனர். கடந்த 18-ந்தேதி கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூத்தட்டுகளை எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து பூஜை செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். மதியம் 1.30 மணி வரை கம்பத்திற்கு புனித நீர் ஊற்ற அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் கோவில் நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை.

    அதன்பின்னர் புனித நீர் ஊற்றி கோவிலை சுத்தம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் பலி பீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    அதைத்தொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நின்றனர். மாலை 5.15 மணியளவில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பூசாரி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது விண்ணதிர மேள-தாளங்கள் முழங்கின. பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் தயார் நிலையில் இருந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்குள் கம்பம் வைக்கப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது.

    இரவு 7 மணியளவில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடைந்தது. மாவடி ராமசாமியாக அரிவாளுடன் முன்னே மருளாளி செல்ல அதனை பின்தொடர்ந்து கம்பம் ஆற்று பகுதிக்குள் சென்றது. அப்போது ஓம் சக்தி… பராசக்தி… என பக்தர்கள் கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்கினர்.

    பின்னர் அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடித்தனர்.

    அந்த சமயத்தில் பக்தர்கள் மீது அகழியில் இருந்த புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் பக்தர்களும் கூட்டம் கூட்டமாக வந்து கம்பம் சென்ற இடத்தை கண்டு வழிபட்டு சென்றனர். பலரும் காலி பாட்டில்களில் அந்த நீரை பிடித்து எடுத்து சென்றனர். கம்பம் ஆற்றில் விடப்பட்டதும் கண்களை கவரும் வகையில் விதவிதமான வாண வேடிக்கை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • இறை பக்தியே சிறந்தது என்று உணர்த்திய ராகவேந்திரர்

    ஆன்மிக பயணம் மேற்கொண்டிருந்த ராகவேந்திரர், ஒருமுறை மாளவி என்ற ஊரில் உள்ள கோவிலில் தங்கியிருந்தார். ஒரு நாள் மூல ராமருக்கான பூஜைகளை முடித்து விட்டு ஓய்வாக அமர்ந்திருந்தார். ஓய்வு நேரத்தில் ராகவேந்திரருக்கு நூல் எழுதும் பழக்கம் இருந்தது. அதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அந்த ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபன், கோவிலுக்கு வெளியே நின்றபடி ராகவேந்திரரையும், அவரது பணிகளையும் கவனித்தபடி நின்றிருந்தான். இதைப் பார்த்த ராகவேந்திரர், அந்த வாலிபனை உள்ளே வரும்படி அழைத்தார்.

    அவனோ, ‘நான் தாழ்ந்த குடியைச் சேர்ந்தவன். ஆகையால் எனக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது’ என்று கூறினான்.

    ‘இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களில் உயர்வு– தாழ்வு என்பது கிடையாது. நம்மை படைத்த கடவுளின் சன்னிதிக்கு வருவதற்கு, எவரது அனுமதியும் நமக்குத் தேவையில்லை. ஆகவே நீ தாராளமாக கோவிலுக்குள் வரலாம்’ என்றார் ராகவேந்திரர்.

    இதையடுத்து கோவிலுக்குள் வந்து, தன் காலில் விழுந்து தொழுத அந்த இளைஞனை, தூக்கி நிறுத்தி தழுவிக் கொண்டார் ராகவேந்திரர். பிறகு, ‘நான் இங்கு இருக்கும் காலம் வரை மூலராமருக்கு நடத்தப்படும் பூஜைக்கு, உன்னால் முடிந்த பொருட்கள் ஏதாவது கொண்டுவா!’ என்று கூறினார்.

    ‘ஏழையான நம்மால் என்ன தர முடியும்?’ என்று யோசித்தவாறே அந்த இளைஞன் வீட்டிற்கு சென்றான். தன் வீட்டில் சிறிதளவு இருந்த கடுகைக் கொண்டு போய் ராகவேந்திரரிடம் சமர்ப்பித்தான். அதனை பெற்றுக்கொண்ட அவர், தன் சீடர்களை அழைத்து, அன்றைய உணவில் இந்த கடுகை சேர்க்கும்படி கூறினார்.

    கடுகைப் பெற்றுக்கொண்ட சீடர்களுக்கு தயக்கம் ஏற்பட்டது. ஏனெனில் விரத மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த அந்த மாதத்தில் உணவில் கடுகை சேர்க்கக் கூடாது என்ற ஆசார விதி இருந்தது. அதற்காகவே சீடர்கள் தயக்கம் காட்டினர். அதனை ராகவேந்திரரிடமும் தெரிவித்தனர்.

    ஆனால் ராகவேந்திரர் கூறிய பதில் சீடர்களின் தயக்கத்தை விரட்டியது. ‘உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் எந்த பொருளையும் இறைவன் மறுப்பதில்லை’ என்பதே அந்த பதில். அதன்பின்னர் சீடர்கள், சமையலில் கடுகை சேர்த்து உணவு சமைத்தனர்.

    இந்த நிலையில் ராகவேந்திரரை பார்ப்பதற்காக புலவர் ஒருவர் வந்திருந்தார். அவரை வரவேற்று, அவரது புலமையை பாராட்டிய ராகவேந்திரர், தன்னுடன் உணவருந்தும்படி கேட்டுக் கொண்டார்.

    அந்த புலவரும் உணவருந்த அமர்ந்தார். அப்போது பரிமாறப்பட்ட உணவில் கடுகு சேர்க்கப்பட்டிருப்பது கண்டு அவர் முகம் சுளித்தார். ‘ஆஷாட மாதமான விரத காலத்தில் கடுகை உணவில் சேர்ப்பது ஆசாரத்திற்கு எதிரானதே’ என்று நினைத்தவர், அதனை ராகவேந்திரரிடம் கூறி குறைபட்டுக் கொண்டார்.

    ‘இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்! உங்களுக்கு கடுகு சேர்க்காத உணவு தரச் சொல்கிறேன்’ என்று கூறி, புலவருக்கு வேறு உணவை அளிக்கச் செய்தார் ராகவேந்திரர். ஆனால் ராகவேந்திரர், கடுகு சேர்க்கப்பட்ட உணவையே உட்கொண்டார். இது புலவருக்கு பெரும் வருத்தத்தை உண்டாக்கியது. உணவு உபசரிப்பு முடிந்து புலவர் ஊருக்கு புறப்படும்போது, அவருக்கு மந்திர அட்சதையை கொடுத்து அனுப்பினார் ராகவேந்திரர்.

    வீட்டிற்கு சென்றதும் அதனை திறந்து பார்த்த புலவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஏனெனில் ராகவேந்திரர் வழங்கும்போது பொன்னிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த அட்சதையானது, கருமையாக மாறியிருந்தது.

    மறுகணமே புலவர் புறப்பட்டு விட்டார் ராகவேந்திரரை தேடி. அவரது காலில் விழுந்து கதறி அழுதார்.

    ‘இறைவனுக்கு படைக்கப்பட்ட உணவை நீ மனவெறுப்புடன் உண்ண மறுத்து விட்டாய். அதனால் ஏற்பட்ட விளைவு இது. கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை முழுமையானதாக இருக்க வேண்டும். அது அரைகுறையாக இருக்கக் கூடாது. மேலும் இறைவனுக்கு ஆசாரத்தை காட்டிலும், பக்தனின் அளவு கடந்த பக்தியே பிரதானம்’ என்றார் ராகவேந்திரர்.

  • எதிரிகள் பயம் விலக சாமுண்டி மந்திரம்

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய பத்திரகாளியே, தன்னுடைய கோரமுகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனாள் என்று கூறப்படுகிறது. இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அசுரனை அழித்தவள். பதினாறு கைகள், மூன்று கண்கள் கொண்டவள். தனது 16 கரங்களிலும் விதவிதமான ஆயுதங்களை தாங்கியிருப்பவள். செந்நிற மேனியைக் கொண்ட இவள், யானையின் தோலை ஆடையாக அணிந்தவள். சப்த கன்னியர்களில் முதலில் தோன்றியவள் சாமுண்டி. ஏழு பேரில் சர்வ சக்தியையும் பெற்றவள் இந்த அன்னை.

    ‘ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
    சூலஹஸ்தாயை தீமஹி
    தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து, சாமுண்டியை வழிபட்டால், எதிரிகள் பயம் விலகும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும். எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

  • பிரம்மஹத்தி தோஷம் திருக்கண்டியூர்

    தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கண்டியூர். இந்த பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு பெற்ற தலத்தில் பிரம்ம சிரகண்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற தலமாக விளங்கும் இந்தக் கோவிலில் இறைவனாக பிரம்ம சிரகண்டீஸ்வரரும், இறைவியாக மங்களநாயகியும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    இத்தல ஈசனுக்கு பிரம்ம சிரகண்டீசர் என்று பெயர். பிரம்மாவுக்கான தனிக்கோயில் இது என்று சொல்லலாம். ஜீவன் ததும்பி நிற்கும் அற்புதச் சிலை. சரஸ்வதி தேவி தனது கணவனோடு அடக்கமாக, நான்கு கரங்களோடு கல்வியும், ஞானமும் சேர்ந்தி ழைத்துத் தரும் ஞான வாணியாக வீற்றிருக்கிறாள். பிரம்மனின் படைப்பில் தம் சக்தியின் நீட்சியைச் செலுத்தி கலைச் செல்வத்தை வாரி வழங்கும் வெள்ளாடை நாயகி. இந்தக் கோயிலுக்கு எதிரிலேயே ஹர சாபவி மோசனப் பெருமாள் ஆலயமும் உள்ளது. ஈசன் பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷத்தை இப்பெருமாள்தான் நீக்கினார். இந்த ஆலயத்தில், கல்விக் கடவுள் ஹயக்ரீ வருக்கென்று சந்நதியும் அமைந்துள்ளது.

    ஸ்தல வரலாறு :

    ஒரு சமயம் பிரம்ம தேவர், தான் படைத்த ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டார். உடனே அந்த பெண் அம்பாளிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டார். அம்பாள், சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டு, உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்தார். பின்னர் பிரம்மாவின் ஒரு தலையை நகத்தினால் கொய்து கண்டனம் செய்தமையினால் இந்த ஊர் கண்டியூர் என்று பெயர் பெற்றது.

    தன் தவறை உணர்ந்த பிரம்மதேவர், சிவனிடம் மன்னிப்பு கேட்க தவம் மேற்கொண்டார். சிவனும், பிரம்மாவின் தவறை மன்னித்து அருளினார். பிரம்மாவின் தலையை கொய்தவர் என்பதால் இவருக்கு பிரம்ம கண்டீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

    பிரம்மஹத்தி தோஷம் :

    மேலும் சிவபெருமான் துண்டித்து பிரம்மதேவரின் தலை, அப்படியே ஈசனின் கையில் ஓட்டிக் கொண்டு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அறநெறியை உலகத்தவரும் உணர்ந்து கடைபிடிக்குமாறு தாமே அதனை கடைபிடித்து காட்ட சிவபெருமான் எண்ணினார். அதன்படி, பைரவரை பார்த்து இத்தீவினை தீர நீயும் பிச்சை ஏற்க வேண்டும் என்று கூறினார். பைரவர் பல சிவ தலங்களுக்கும் சென்று பிச்சை கேட்டு திரிந்தார்.

    கண்டியூருக்கு வந்து இந்தக் திருக்கோவிலை அடைந்தவுடன் அத்தலை, சிவபெருமானின் கையை விட்டு போனது. பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. இதனையடுத்து பிரம்மதேவர் ஆணவமின்றி தன் துணைவியும் தானுமாய் இக்கோவில் இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்பு தொழிலை பெற்றார் என்கிறது தலவரலாறு.

    பிரம்மனுக்கு தனிக் கோவில் :

    ஆணவமுற்றோர் அழிவர் என்னும் உண்மையை உணர்த்தும் நிகழ்ச்சி நடந்த இடம் கண்டியூர் ஆகும். எத்தலத்திலும் பிரம்மனுக்கு தனிக் கோவில் கிடையாது. ஆனால் திருக்கண்டியூரில் பிரம்ம தேவருக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது. இதில் பிரம்மன், தன் பிழையை உணர்ந்து வருந்தி, பூ ஜடமாலை ஏந்தி இருகைகளும் வேண்டுகின்ற அமைப்பில் வைத்து வலப்பக்கத்தில் சரஸ்வதியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் அழகுடன் காட்சி அளிக்கிறார்.

    பிரம்மா அன்னப்பறவையாக சென்று சிவபெருமானது முடியை கண்டதாக பொய் கூறிய காரணத்தால் ‘உனக்கு எங்கும் கோவில் இல்லாமல் போகக்கடவாய்’ என்று சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்திற்கு ஏற்ப இங்கு பிரம்மனுக்கும் பெரிய கோவில் இருந்தும், இடிபாடுகளுடன் வழிபாடில்லாது இருப்பது சிவ சாப வன்மை போலும்.

    பிரம்மனது கோவிலுக்கு பக்கமே அரன் சாபம் தீர்த்த பெருமாள் கோவில் உள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை புரியும் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மிகப்பெரிய கோவில்கள் உள்ள தலம் இதுவே.

    நவக்கிரக சன்னிதியில் சூரியன் தனது மனைவியரான உஷா, பிரத்யூஷாவுடன் வீற்றிருக்கின்றார். மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனை பார்த்த படி உள்ளன. தவறு செய்து விட்டு மனம் வருந்துவோர் மன நிம்மதிக்காகவும், திருமண தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

    திருமணம் தடை உள்ளவர்கள் வாழைக்கன்றில் மஞ்சள் கயிற்றை கட்டி இங்குள்ள இறைவனை வேண்டினால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக ஐதீகம்.