Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • நாகதோஷம் போக்கும் ஆறுமுக நயினார் கோயில்

    தேனிபோடி சாலையில் கோடாங்கிபட்டி கிராமத்தின் அருகில் கொட்டக்குடி ஆற்றின் மேற்கு கரையில் உள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான விருப்பாட்சி ஆறுமுக நயினார் கோயில். மூலவராக ஆறுமுக நயினார் என அழைக்கப்படும் முருகன் சிலை உள்ளது. மயில் மேல் அமர்ந்த நிலையில் 6 முகங்களுடன் முருகன் காட்சியளிக்கிறார். அருகில் 7 தலை நாகம் மற்றும் மயில் வாகனத்துடன் நாக சுப்பிரமணியர் சிலை உள்ளது. மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திரிதளம் என அழைக்கப்படுகிறது. ருத்ராட்ச மூர்த்தி என்ற பெயரில் இங்கு சிவனுக்கு தனி சன்னதி உள்ளது.

    இங்கு சிவன் குருவாக இருப்பதாக ஐதீகம். அவரது சிலையுடன் ருத்ராட்ச மாலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது வேறெந்த கோயிலிலும் காண முடியாத சிறப்பாகும். மேலும் சன்னதியின் முன்பு நந்தி சிலை இல்லாதது குறிப்பிடத்தக்கது. கோயிலில் கொடிமரம் உள்ளது. தலமரமாக வில்வ மரங்கள் உள்ளன. முருகன் சன்னதி முன்பு மயில் சிலை உள்ளது. கோயில் முன்பு முருக தீர்த்தம் எனப்படும் வற்றாத தீர்த்த தொட்டி உள்ளது. தீர்த்த தொட்டியின் சுவற்றில் விநாயகர், முருகன், சிவலிங்கம், வழிபட்ட நிலையில் சப்த கன்னியர் சிலைகள் உள்ளன. இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    தல வரலாறு

    பண்டைய காலத்தில் இப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான் அருகில் உள்ள விளை நிலத்தில் தனது சிலை உள்ளதாகவும், அதனை தோண்டியெடுத்து கோயில் எழுப்புமாறு கூறி மறைந்தார். இதனை அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரிடம் விவசாயி தெரிவித்தார். மன்னர் உதவியுடன் தோண்டியெடுக்கப்பட்ட அந்த சிலைக்கு சிறிய அளவில் கோயில் எழுப்பப்பட்டது. பிற்காலத்தில் கோபுரத்துடன் கோயில் விரிவுபடுத்தப்பட்டது.

    தைப்பூசம், தமிழ் வருட பிறப்பு, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்கள். சித்திரை மாத பிறப்பன்று முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதனால் அன்று விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகளுடன் விழா நடக்கிறது. தினமும் நாகசுப்பிரமணியருக்கு பூஜை செய்த பின்னரே மூலவருக்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் நீங்க வேண்டி இங்குள்ள தீர்த்த தொட்டியில் நீராடுகின்றனர். பின்னர் நாகசுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். குடும்ப நலம், தொழில் முன்னேற்றம், கல்வி சிறக்க பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு பாலாபிஷேகம், சந்தனாபிஷேகம் உள்ளிட்டவையால் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வணங்குகின்றனர். குருப்பெயர்ச்சியால் ஏற்பட்ட தோஷம் நீங்க கோரி இங்குள்ள ருத்ராட்ச மூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலையணிவித்து பக்தர்கள் வேண்டுகின்றனர். ஐப்பசி அன்னாபிஷகத்தின் போது அன்னத்தால் லிங்க வடிவம் பிடித்து வில்வம் மற்றும் சந்தனம் அணிவித்து பூஜை செய்யப்படுகிறது. மறுநாள் அந்த அன்னலிங்கத்தை ஆற்றில் கரைத்து விடுகின்றனர். கோயில் நடை தினமும் காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

  • நினைத்தது நடத்தி வைக்கும் சாய்பகவான் 

    பாபாவை நன்கு புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணர வேண்டும். பாபா இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். மகாசமாதிக்கு முன்னரைவிட இப்போது இன்னும் அதிக சுறுசுறுப்பாக இருக்கிறார். உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தனும் இன்று இப்போதே பாபாவுடன் தொடர்பு கொள்ளக்கூடும்.

    எவ்வளவு முறைகள் பக்தர்களிடம் பாபா தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார்! என்னை எப்பொது எந்த இடத்தில் நினைத்தாலும், அப்போது அந்த இடத்தில் தோன்றுகிறேன்’ என்றும், ‘ என்னுடைய சமாதியிலிருந்தும் நான் இயங்குவேன்’ என்றும் பிறர் எண்ணங்களை அறிவது, பிறர் மனதிலுள்ளதை அறிவது, வெறுங்கைகளிலிருந்து சாமான்களை உண்டு பண்ணுவது, சாயிபாபாவை போன்று ஆடை உடுத்துவது, இவைகளால் மட்டும் பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது.

    கடவுளுக்கு என்று ஒரு பீடம் இல்லை. அப்படியிருப்பின் அது எப்போதும் காலியாக இருக்காது. அதை போன்றே பாபாவின் பீடமும் ! பாபாவின் பூரண சக்தியும் நிறைந்து வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. ஆத்மாவாக பாபா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

    எங்கே பக்தர்கள் என்னுடைய பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு கண் கொட்டாமல் விழித்துக் கொண்டிருகிறேன். இன்பங்களால் பாபா உயர்ந்து போகவும் இல்லை. துரதிஷ்டங்களால் அவர் தாழ்ச்சியுறவும் இல்லை. அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒன்றே. அவருடைய கடைக்கண் பார்வை ஒன்றே பிச்சைக்காரனையும் அரசனாக்கும் வல்லமை படைத்தது.

  • குறிச்சி சொக்கநாதர் கோயில் வருஷாபிஷேகம்

    குறிச்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர்.

    குறிச்சியில் பழமை வாய்ந்த சொக்கநாதர் சுவாமி, மீனாட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு ஹோமம் முதலான பல்வேறு பூஜைகள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு மூலவர் விமானம், அம்பாள் விமானம், பரிவார மூர்த்தி விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு பஞ்ச மூர்த்திகளுக்கு புஷ்பாஞ்சலி, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர்.

  • திருப்பதி ஏழுமலையான் தரிசன முறை!

    நமது பாரத தேசத்தில் உள்ள எட்டு சுயம்பு மூர்த்த திருத்தலங்களில் ‘வேங்கடாத்ரி’ எனப்படும் திருமலை திருப்பதியும் ஒன்றாகும். இங்கு இறைவன் சிலை வடிவமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.

    ‘திருப்பதிக்கு இணையான க்ஷேத்திரம் வேறொன்று இல்லை..’ என்பது பிரபல சொல்வழக்காக இருந்து வருகிறது. பொதுவாக, திருமலை செல்பவர்கள் சென்றவுடன், திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொள்வதும், அவரை தரிசித்துவிட்டு உடனடியாக வீடு திரும்புவதும் சாஸ்திர சம்மதமானதாக கருதப்படவில்லை.

    அதற்காக ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவற்றை பற்றிய குறிப்பை இங்கே காணலாம்.

    1. முதலில் கீழ் திருப்பதியில் வீற்றிருக்கும் கோவிந்தராஜ பெருமாளை வணங்க வேண்டும்.

    2. அதன் பிறகு, அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து மனமும், இதயமும் ஒருங்கே இணைத்து வணங்க வேண்டும்.

    3. அதன் பிறகு, திருமலையின் மீது ஏறிய பிறகு ‘வராக தீர்த்த கரையில்’ கோவில் கொண்டிருக்கும் ‘வராக மூர்த்தியை’ தரிசித்து வணங்க வேண்டும்.

    4. அதற்கு பிறகுதான் மலையப்பன் என்று சொல்லப்படும், ஏழுமலை வாசனை, கோவிந்தனை, திருவேங்கடவனை பூஜிக்க வேண்டும்… உளமாற சேவிக்க வேண்டும்..

    மேற்கண்ட வழிமுறையானது ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டு, அதன் பிறகு வந்த அனைத்து ஆச்சார்யர்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம் ஆகும்.

  • காலபைரவர் கோயிலில் மகா அஷ்டமி விழா

    சிவகங்கை மாவட்டம் அருகே வைரவன்பட்டியில் உள்ள மூல பாலகால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.
    இக்கோயிலில் மூல பாலகால பைரவர் தங்கக் கவசத்தில் எழுந்தருளி மகா கணபதி பூஜை செய்து தீபாராதனைகளுடன் மகா பைரவ அஷ்டமி விழா தொடங்கியது. பின்பு கோ பூஜை மற்றும் கஜ பூஜை நடந்ததும் மகா பைரவ ஹோமம் 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றது. பின்னர் வஸ்திர யாகமும், மகா பூர்ணாகுதியும் நடந்ததும் தீபாராதனை காட்டப்பட்டது.
    யாகத்தில் வைக்கப்பட்ட புனிதநீர் கோயில் சுற்றுப்பிரகாரம் வழியாக சிவாச்சாரியார்களால் சுமந்து கொண்டு வரப்பட்டது.
    பின்பு மூல காலபைரவருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீர், இளநீர் மற்றும் யாக வேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரால் அபிஷேகங்கள் நடைபெற்றன.
    தொடர்ந்து பால காலபைரவருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  • திருப்புலிவனம் கோவிலில் சிம்ம தட்சிணாமூர்த்தி

    திருப்புலிவனம் கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இவர் ஒரு காதில் குண்டலமும், மறு காதில் தோடும் அணிந்து சிவசக்தி வடிவமாக காட்சியளிக்கிறார்.

    இந்த தட்சிணாமூர்த்தியின் இடது கால் சிம்ம வாகனத்தின் மீதும், வலது கால் முயலகன் மீதும் ஊன்றியபடி காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியின் அருகில் சனாகதி முனிவர்களும், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள் தங்கள் துணைவியருடனும் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது.

    செங்கல்பட்டுக்கு அருகே, உத்திரமேரூருக்கும், காஞ்சிபுரத்திற்கும் அருகேயுள்ள தலம். இங்கு தட்சிணா மூர்த்தியின் காலடியில் முயலகனுக்கு பதிலாக சிம்மம் உள்ளது.

    இது வேறெங்கும் காண முடியாத ஓர் அம்சமாகும். அதனால் இத்தல குருவிற்கு ‘சிம்ம குரு தட்சிணாமூர்த்தி’ என்றே பெயர். சிம்ம ராசிக்காரர் களுக்கு பரிகாரத் தலமாகவும் இது விளங்கி வருகிறது.

  • சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ?

    திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர். திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார்.

    தாயின் கருவில் இருந்து வராததாலும் , கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர். பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.

    நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.

    சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாளையென்பது நரசிம்மருக்கு கிடையாது . துன்பத்திலிருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும் நரசிம்மரையும் ஒரு சேர வழிபடுவது மிகச் சிறப்பு.

  • துளசிதாசருக்கு உதவிய அனுமன்!

    ஒருமுறை துளசிதாசர் ஆஞ்நேயரிடம் உங்களுக்கு ராம் – லட்சுமணரின் அனுக்கிரகம் கிட்டியது போல் எனக்கும் அவர்களின் தரிசனம் கிட்ட வேண்டும். அதற்கு நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனமுருகப் பிரார்த்தித்தார். துளசிதாசரின் வேண்டுகோளை ஏற்ற அஞ்சனை மைந்தன் அவரிடம், இதுதான் சித்ர கூடம்.

    இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் வனவாசம் செய்த இடம். அங்கே பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து, ராமஜபம் செய்யும். ராம தரிசனம் கிட்டும் என்று கூறினார். அதற்கு துளசிதாசர் நீங்களும் கூட இருக்க வேண்டும் என்றார். நீர் ராமநாமம் சொன்னால் உமது கூடவே நானும் இருப்பேன் எனக்கு வேறு என்ன வேலை? என்று கூறி மறைந்து விட்டார் ஆஞ்சநேயர்.

    துளசிதாசரும் ராமஜபம் செய்ய ஆரம்பித்தார். மனதில் ராமர் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணனுடன் வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடாமுடியுடன் வருவாரா? (அ) வைரக்கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? என்ற பல சிந்தனைகளோடு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண்களை இமைக்காமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.

    மலைப்பாதை, ஒற்றையடிப்பாதை. இருபுறமும் புதர் அங்கிருந்த பாறாங்கல்லில் நின்றுகொண்டு ராம, ராம என்று ஜபித்து நர்த்தனமாடினார் துளசி தாசர். மலை உச்சியில் இருந்து வேகமாக இரண்டு குதிரைகள் வந்தன. அதன் மீது இரண்டு ராஜகுமாரர்கள். துளசிதாசர் எத்தனையோ ராஜாக்களைப் பார்த்திருக்கிறார்.

    ஆனால் குதிரையில் வந்த ராஜகுமாரர்களோ தலையில் தலைப்பாகை, அதைச் சுற்றி முத்துச் சரங்கள் கொண்டை மீது வெண்புறா இறகுகள் என்று வித்தியாசமாக இருந்தனர். குதிரையில் வந்தவர்கள் தாசரைப்பார்த்துச் சிரித்துக் கொண்டே போய்விட்டனர். தாசர் தன் மனதில், ஆமாம், பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, இலட்சுமணனுக்கு ஈடாவார்களா? தலையில் ரத்ன கிரீடமும் மார்பில் தங்கக் கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புறாத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் என் ராமர் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார்.

    சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து ராம லட்சுமணர்களைப் பார்த்தீர்களா? என்று கேட்டார். இல்லையே…. என்றார் தாசர். என்ன இது, உமது பக்கமாகத் தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார் அனுமன். ஐய்யோ! வந்தவர்கள் ராம லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று புலம்பினார் துளசிதாசர். அதற்கு அனுமன், ராமர் உமது இஷ்டப்படிதான் வரவேண்டுமா? அவர் இஷ்டப்படி வரக்கூடாதா? என்று கேட்டார். உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான்.

    ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தர்களை அலட்சியம் செய்து விட்டேன் வாயுகுமாரா. இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன் என்றார். அதற்கு அனுமன், எல்லாம் சரி, நீர் போய் மந்தாகினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயணப் பாராயணம் செய்யும். ராமன் வருவாரா பார்க்கலாம் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடினார். நீராடினார், ராமநாம ஜபம் செய்தார்.

    வால்மீகியின் ராமாயணத்தைப் பாராயணம் செய்தார், இரண்டு நாட்கள் ஓடிவிட்டது. அன்றைய தினம் தாசர், ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்பு ராம, லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்று கட்டத்தைப் படித்துக் கொண்டிருந்தார். எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர்.

    வந்தவர்களில் ஒருவன் நல்ல கருப்பு நிறம், மற்றவன் தங்க நிறம் முகத்தில் பத்துப் பதினைந்து நாள் வளர்ந்த தாடி, சுவாமி, கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது. தருகிறேன் என்றார் தாசர். சந்தனம் கேட்ட இளைஞர்கள், சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள் என்றனர். (வட இந்தியாவில் கங்கை முதலிய நதிக்கரைகளில் பண்டாக்கள் (சாதுக்கள்) உட்கார்ந்து கொண்டு நதியில் நீராடி வருபவர்களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சணை வாங்கிக்கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது).

    அதற்கென்ன, இட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோடு சந்தனத்தைக் குழைக்கிறார். அந்த கருப்பு இளைஞன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். தாசர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் தன்னை மறந்துவிட்டார். அந்த இளைஞன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தைத் தன் கட்டைவிரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்தவனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந்திருந்த படித்துறைக்கு அருகில் ஒரு மாமரம், மரத்தின் மீது இருந்த கிளி கூவியது.

    சித்ர கூடகே காடபரே பகி

    ஸந்தக கீ பீர

    துளசிதாஸமே சந்தந கிஸே

    திலக தேத ரகுபீர.

    பொருள்:

    (சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்). இதைக் கேட்ட துளசிதாசர் திடுக்கிட்டு சுய நினைவிற்கு வந்தார். சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்தக் கருப்பு இளைஞன். ராமா, உனக்கு இதைவிட பொருத்தமான நாமம் ஏது? என்று கதறிக்கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசிதாசர். மறுகணம் ராம, இலட்சுமணரைக் காணவில்லை. கடவுள் தன்னை முழுவதுமாகச் சரணடைந்த உண்மையான பக்தர்களுக்குக் கலியுகத்திலும் எந்த ரூபத்திலும் காட்சி தருவார். இது சத்தியம் என்பதை நிரூபிக்கிறது துளசிதாசரின் சரிதம்.

  • திருப்பதி லட்டு கதை தெரியுமா?

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதமாக கொடுக்கப்படுவது ஏன் தெரியுமா?

    கி.பி.830ஆம் ஆண்டில்தான் முதல் முதலாக பல்லவர் ஆட்சியில் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த காலத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலையேறி செல்ல பல நாட்கள் ஆகும்.

    தரித்த பின்பும் சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்த பிறகு ஊர் திரும்புவது வழக்கம். அவர்கள் திரும்பி வீடுக்குச் செல்லும் வரை தேவையான உணவு அவர்களுக்கு கோயில் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதனால், முதலில் திருப்பொங்கம் என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னால், கி.பி.1445ஆம் ஆண்டு முதல் சுய்யம் என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். 1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.

    1803ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல் படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக விற்பனையானது. 1940ஆம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை அமலானது.

    ஆரம்பத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு ஒன்று எட்டு அணாவிற்கு விற்கப்பட்டது. இது தவிர, கல்யாண உற்சவ லட்டு, கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

  • ஜூன் 27 நெல்லையப்பர் ஆனித் தேரோட்டம்….

    நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.

    10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தேரோட்டத்தைக் கண்டு மகிழ்வர்.

    இந்தாண்டுக்கான ஆனித்திருவிழா ஜூன் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 27-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    நெல்லையப்பர் கோயிலில் உள்ள 5 தேர்களும் சுத்தம் செய்யும் பணி முதற்கட்டமாகத் தொடங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.