Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • தோஷங்களை அகற்றும் வாயுபுத்திரன்

    எடுத்த காரியங்களில் உள்ள தடைகளை அகற்ற, அனுமனுக்கு என்னென்ன வழிபாடுகளை செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    அனுமனுக்கு, வெண்ணெய் சாத்தி வழிபடுவதால், பக்தர்களின் கஷ்டங்களும் வெண்ணெய் போல் உருகும் என்பது ஐதீகம்.

    சனிக்கிழமைகளில் வெற்றிலையை மாலையாக கட்டி, ஆஞ்சநேயருக்கு அணிவிப்பதுடன், அனுமன் கவசம் படித்து வந்தால் எதிரிகள் பயம் நீங்கும்.

    அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்தால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.

    துளசி மாலை சாத்தி ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால், சனி பகவானால் ஏற்படும் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

    அனுமனை சனிக்கிழமை தோறும் வணங்கி வருவதால், புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெறலாம்.

    திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழக்கிழமை தோறும் வெற்றிலை மாலை சாத்தி வழிபடுங்கள்.

    எடுத்த காரியங்களில் உள்ள தடைகளை அகற்ற, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடை மாலை சாத்தி அனுமனை வழிபாடு செய்யலாம்.

  • சங்காபிஷேகத்தை தரிசிப்பதால் கிடைக்கும் பேறுகள்

    சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தினை தரிசிப்பது சிறப்பாகும்.ஒவ்வொரு கோயிலின் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சங்குகளில் புனித நீரினை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை தரிசிப்பதால் பேறுகள் பல பெற்று வளமுடன் வாழலாம்.

    கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய கிருத்திகை நட்சத்திரம் கூடும் வேளையில் இறைவன் அக்னிப் பிழம்பாகத் திகழ்கிறார். ஆதலால் சோமவார சங்காபிஷேகம், ஆராதனை நடைபெறுவதாகச் சொல்வார்கள்.

    திருவண்ணாமலை, திருக்கடையூர், திருவானைக்கா, குற்றாலம் மற்றும் பல திருத்தலங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சங்குகளில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வலம்புரி சங்கு. இந்த வலம்புரி சங்கினால்தான் சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கிடைப்பதற்காக பாற்கடலைக் கடைந்தபோது சில அரிய பொருட்கள் தோன்றின.
    அவற்றில் வலம்புரி சங்கும் ஒன்று. இதனை லட்சுமியின் அம்சம் என்பார்கள்; பூஜைக்குரியதாகும். லட்சம் சங்குகளில் ஒன்றுதான் வலம்புரிச் சங்காக அமையும். இடம்புரிச் சங்கைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தது வலம்புரிச் சங்கு. வலம்புரிச் சங்கு சுபகாரியங்களுக்கு மட்டும் பயன்படும். ஆனால் இடம்புரிச் சங்கு அனைத்துக் காரியங்களுக்கும் பயன்படுகிறது. அதனால் தான், ஆலயங்களில் வலம்புரிச்சங்கைப் பயன்படுத்துகிறார்கள். சில ஆலயங்களில் பூஜை முடிந்ததும் வலம்புரிச் சங்கினை ஏலம் விடுவார்கள். அதை வாங்கி இல்லத்தில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் சுபிட்சம் ஏற்படும்.

    சங்கு பூஜை செய்ய விரும்புகிறவர்கள், வலம்புரிச் சங்கில் நீர் நிரப்பி வைத்து, மலர்களால் அர்ச்சித்து, காயத்ரி மந்திரம் ஜபித்து, காயத்ரி தேவியின் படம் அல்லது சிற்பத்துக்கு அருகே வைத்து விடவேண்டும். பிறகு காலையில் எழுந்தவுடன், காலைக்கடன்களை முடித்துவிட்டு, நீராடியபின், பூஜை அறையில் சங்கில் உள்ள நீரினை முதலில் வீட்டின் வாசற்படி மேல் தெளிக்கவேண்டும். இப்படிச் செய்வதால் லட்சுமியானவள் நிரந்தரமாக இல்லத்தில் தங்கியிருப்பாள். மேலும், வெள்ளிக்கிழமைகளில் பசும்பால், துளசி இலைகளைப் போட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். இதனை அடுத்தநாள், காலையில் எழுந்ததும் நீராடிவிட்டு, பூஜை முறைகளைச் செய்துவிட்டு, சங்கில் உள்ள பசும்பால், துளசி இலைகளை பிரசாதமாகச் சாப்பிட, நாள்பட்ட நோய்கள் குணமாகும்.

  • வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு

    தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டு மல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத் திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன.

    மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாக கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    சங்கின் வகைகள்

    வைணவ ஆகமங்களில் ஒன்றான வைகானஸ (விகனஸ) ஆகமத்தில், ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய சங்குகள் பற்றி குறிப்புகள் இருக்கின்றன. திருமலை வேங்கடவன் கை களில் மணி சங்கும், ரங்கநாத சுவாமியின் கைகளில் துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமியின் கைகளில் பாருத சங்கும், பார்த்த சாரதி பெருமாளின் கைகளில் வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாரது கைகளில் பார் சங்கும், சவுரி ராஜ பெருமாள் கையில் துயிலா சங்கும், கலிய பெருமாளின் கரங்களில் வெண் சங்கும், ஸ்ரீநாராயண மூர்த்தியிடம் பூமா சங்கும் இருப்பதாக வைகானஸ ஆகமம் குறிப்பிடுகிறது.
    வலம்புரிச் சங்கை முறைப்படி இல்லத்தில் வைத்து பூஜித்து வந்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். பில்லி சூன்யம், திருஷ்டி, தீயசக்திகள் எதுவும் அண்டாது.

    பகவான் கிருஷ்ணன் பாஞ்ச ஜன்யம் என்ற சங்கையும் அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கையும் பீமன் பௌண்ட்ரம் என்ற சங்கையும் போர்க்களத்தில் முழங்கியிருக்கிறார்கள். தர்மர், அனந்தவிஜயம் என்ற சங்கையும் நகுல சகாதேவர்கள் ஸுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் முழங்கியதாக பாரதப்போர் வரலாறு தெரிவிக்கிறது. இதற்கு எதிராக கௌரவர்களும் தத்தம் சங்கை முழங்கியுள்ளனர். சங்கும் சக்கரமும் ஏந்தியுள்ள துர்க்கையை விஷ்ணு துர்க்கை என்கிறோம்.

  • அழகர்மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்

    சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை அடுத்து கள்ளழகர் அழகர்மலைக்கு புறப்பட்டார். இதையொட்டி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட இடங்கள் விழாக்கோலத்தில் காட்சியளித்தன.
    மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவிற்காக, அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப்பெருமாள் கடந்த 28-ந்தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி வழியாக சுந்தரராஜன்பட்டியில் உள்ள மறவர் மண்டபத்தில் தங்கி, கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்தார்.

    அவரை மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்து எதிர்சேவை செய்து, வணங்கி வரவேற்றனர். 30-ந்தேதி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்பு, ராமராயர் மண்டபம் சென்று, அங்கிருந்து புறப்பட்டு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் தங்கினார்.

    தொடர்ந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து, கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்தார். பிறது ராமராயர் மண்டபத்தில் தங்கிய கள்ளழகர் பக்தர்களுக்கு தசாவதாரத்தில் காட்சி அளித்தார். அதன்பின்னர் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் புறப்பட்டு, ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் தங்கினார்.

    நேற்று மலைக்கு செல்லும் விழா நிகழ்ச்சியில், அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் வையாழியாகி அழகர்மலைக்கு புறப்பட்டார். தொடர்ந்து பக்தர்களிடம் பிரியாவிடை பெற்றுச்சென்ற கள்ளழகரை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்து வழியனுப்பி வைத்தனர். பின்னர் அவுட் போஸ்ட்டில் இருந்து தண்டியலில் எழுந்தருளிய கள்ளழகர், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில், மூன்றுமாவடி வழியாக அழகர்மலையை நோக்கி சென்றார்.

    இதையொட்டி வழியில் உள்ள அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளில் கள்ளழகர் மலைக்கு செல்லும் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு கள்ளழகர் வருகையையொட்டி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்கள் விழாக்கோலத்தில் திகழ்ந்தது. அதில் கிராமங்கள் தோறும் திருக்கண், மண்டபங்களில் நாடகம், கரகாட்டம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    கள்ளழகர் மலைக்கு செல்லும் விழா, இந்த பகுதிகளில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து கலந்துகொண்டு கள்ளழகரை தரிசனம் செய்து, சாமியை மலைக்கு அனுப்பி வைத்தனர்.

  • அக்னி நட்சத்திரம் ஏன் சுட்டெரிக்கிறது?

    இந்தியாவில் சடங்கு, சம்பிரதாயங்கள் ஆகியவை பன்னெடுங்காலமாக தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மேலோட்டமாக பார்க்கும்போது வெறும் சம்பிரதாயமாக தெரிந்தாலும் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு காரணமும் அறிவியல் முக்கியத்துவமும் இருக்கும். இந்து மதத்தில் கொண்டாடப்படும் எல்லா பண்டிகைகள், விசேஷங்கள் எல்லாம் பஞ்சாங்கம் பார்த்து தீர்மானிக்கப்படுபவை. பஞ்சாங்கம் என்பது இந்துமத கால அட்டவணை. வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து அங்கங்களே பஞ்ச அங்கம் எனப்படுகிறது. இதில் பூமியை சுற்றி வரும் சந்திரன், குறிப்பிட்ட நேரத்தில் எங்கு இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய நட்சத்திரம் நடப்பதாக கணிக்கப்படுகிறது.

    இதேபோல ஒவ்வொரு கிரகமும் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கிறதோ, அந்த கிரகத்தின் சாரத்தில் செல்வதாக சொல்வார்கள். அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் காலகட்டம் சூரியனின் சஞ்சாரத்தை மையமாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழைந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் இருப்பார். இந்த சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் பிரவேசித்தவுடன் கோடை காலத்தின் ஆரம்பமாக சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டெரிக்கிறது. அதுவும் மேஷ ராசி செவ்வாயின் வீடாக இருப்பதால் அதன் தாக்கம் அதிகமாகின்றது. செவ்வாய் என்பது நெருப்புக் கோளாகும்.

    சூரியன் பரணி நட்சத்திரம் 3&ம் பாதம் முதல் கிருத்திகை நட்சத்திரம் முடிய வலம் வரும் காலகட்டமே அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலாகும். இந்த அக்னி நட்சத்திர காலமான 26 நாட்களும் தோஷ காலமாக கூறப்படுகிறது. இந்த நாட்களில் எந்த விதமான சுப காரியங்களும் தொடங்க மாட்டார்கள். புதிய பேச்சுவார்த்தைகளும் துவக்க மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் இது ‘அக்னி நட்சத்திர தோஷம்’ எனப்படுகிறது.

    புதுமண தம்பதிகள் ஆடி மாதத்தில் சேரக்கூடாது என்பது இங்கு சம்பிரதாயமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆடி சீர் வைத்து புதுப்பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து சென்றுவிடுவார்கள். ஆடி மாதம் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்ற கணக்கு. குழந்தைக்கு அக்னி நட்சத்திர தோஷம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ஐதீகம். பிறந்த குழந்தைக்கும் பிரசவித்த தாய்க்கும் அக்னி நட்சத்திரத்தின் காரணமாக உடல் உபாதைகள், நோய் தொற்றுகள், கிரக தோஷங்கள் ஏற்படக்கூடாது என்பதாலேயே ஆடியில் தம்பதியை பிரித்து வைத்தார்கள். 26 நாட்களுக்கு பிறகு அக்னி நட்சத்திர தோஷம் விலகுகிறது. அன்றைய தினம் கோயில்களில் விசேஷ வழிபாடுகள், சிறப்பு பூஜைகள் நடக்கும்.

  • காளிகாம்பாள் கோயிலில் கொடிமர கும்பாபிஷேகம்

    சென்னை காளிகாம்பாள் கோயிலில் புதிய கொடிமர கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

    பாரிமுனை அருகே உள்ளது பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வழிபட்டுச் சென்றுள்ளார்

    இக்கோயிலில் 1840-ம் ஆண்டு கோயில் கொடிமரம் அமைக்கப்பட்டது. 178 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் கொடிமரம் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து, இக்கோயிலின் புதிய கொடிமரம் பிப்ரவரி 4-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    சிவாச்சாரியா அறக்கட்டளை நிர்வாக தலைவர் காளிதாஸ் சிவாச்சாரியா தலைமையில், புதிய கொடி மரத்திற்கான கும்பாபிஷேக விழா கோலாகமாக நடைபெற்றது.

    சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க முலாம் பூசப்பட்ட செப்பு தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • அகத்தியரால் உருவான தென்திருமாலிருஞ்சோலை

    தென்திருமாலிருஞ்சோலையில் பெருமாளை அவரது சித்தப்படி, அழகராக தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரதிஷ்டை செய்தார் அகத்திய முனிவர். மகாலட்சுமியும் அந்த இடத்தை வலம் வந்து பெருமாளுடன் சேர, அந்த இடம் ‘ஸ்ரீவலம்வந்த பேரி’ என்று அழைக்கப்பட்டது. தற்போது அந்தப் பெயரே மருவி ‘சீவலப்பேரி’ என்று நிலைத்திருக்கிறது.

    இரண்டாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது இந்தக் கோவில் என்று கூறப்படுகிறது. அகத்தியர் பிரதிஷ்டை செய்த இறைவனுக்கு, கவுதம மகரிஷி கர்ப்பகிரகம் அமைத்து வழிபட்டு இருக்கிறார். ஸ்ரீ வல்லபபாண்டியன் கோவில் எழுப்பியிருக்கிறார். கோவில் கருவறையில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

    தென் தமிழ்நாட்டில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி என்னும் மூன்று நதிகள் கலக்கும் இடத்தில், இந்த விஷ்ணு தலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு முக்கூடல், திரிவேணி சங்கமம் என்ற பெயர்களும் உண்டு. மதுரையில் உள்ள அழகர் கோவிலை வடதிருமாலிருஞ்சோலை என்றும், சீவலப் பேரியில் உள்ள அழகர் கோவிலை, தென் திருமாலிருஞ்சோலை என்றும் சொல்வார்கள். இந்தக் கோவிலின் மூலவர் அலர்மேலுமங்கை சமேத அழகர். உற்சவர் மகாலட்சுமி பூமாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள்.

    இனி இந்த கோவில் வரலாற்றை பார்ப்போம்.
    பூமியை சமநிலைப்படுத்த அகத்தியர் தென்னாடு வந்தார். சிவபெருமானின் கல்யாண கோலத்தை பார்க்க திரிகூடமலையில் இருந்த அழகர் கோவிலின் உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு இருந்தவர்கள், அகத்தியர் சைவர் என்பதால் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.

    உடனே அகத்திய முனிவர் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்த திருமாலை வேண்டி அவரை சீவலப்பேரியில் எழுந்தருள செய்து, அழகர் இருந்த இடமான திரிகூடமலையில் சிவபெருமானை எழுந்தருளச் செய்தார். அழகருக்கு சீவலப்பேரியின் அழகு பிடித்துப்போக இங்கேயே இருந்து விட்டார்.

    திரு மகளும் அழகரை வலம் வந்து அவர் மார்பில் சேர்ந்தாள். அகத்தியருடன் வந்த சிறு பெண்ணான தாம்பரையும் நதியாகி அழகருடன் வந்தாள். அதுவே தாமிரபரணி நதியாகும்.

    ஆலயச் சிறப்பு :
    திருப்பதி கோவிலுக்கு முன்பே ஏற்பட்டுள்ள இந்தக் கோவில், பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் மாறவர்மன் ஸ்ரீ வல்லபனால் கட்டப்பட்டது. பாண்டிய மன்னர்கள் இந்தக் கோவிலுக்கு மானியங்கள் அளித்துள்ளதாக கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. ஸ்ரீ வல்லப பாண்டியனின் சிலையும் கோவிலில் உள்ளது.

    சுடலைமாடசாமி அழகருக்கு காவல் தெய்வமாக அண்ணன் முண்டசாமியுடன் அருகில் கோவில் கொண்டு இருக்கிறார். மற்ற மாடன் கோவில்கள் இங்கிருந்து பிடிமண் எடுத்து கட்டப்பட்டவையாகும். சுடலைமாட சாமியின் பிறப்பிடமும் இதுதான்.

    தங்கையாக துர்க்கை, விஷ்ணு துர்க்கையாக எதிரில் கோவில் கொண்டு இருக்கிறாள். கர்ப்பகிரஹத்தில் விஷ்ணுவும், துர்க்கையும் அருகருகே எழுந்தருளி இருக் கிறார்கள். வேறு எங்கும் இந்த அமைப்பை காண முடியாது.

    அகத்தியர் பூமியை சமன்செய்து திரும்பும்போது இங்கு வந்து அழகரை தரிசித்து விட்டு சிவனை மனதால் நினைக்க சிவனும், காசி விசுவநாதராக, விசாலாட்சியுடன் காட்சி அளித்தார். அந்த கோவிலும் அருகே உள்ளது.

    திருப்பதி வெங்கடாசலபதியும் ஸ்ரீனிவாசராக இங்கே எழுந்தருளி இருக்கிறார். ஆஞ்சநேயர் சிறுகுழந்தை வடிவில் கைகூப்பியபடி இருக் கிறார். அவருக்கு வெண்ணெய் காப்பு, வடமாலை சாத்தி சனிக்கிழமைதோறும் வழிபடு கிறார்கள். நல்ல காரியங்களுக்கு பூக்கட்டி பார்க்கும் பழக்கமும் இந்த சன்னிதியில் இருக்கிறது.

    இங்குள்ள லட்சுமணர் முன்பக்கம் மனித ரூபமாகவும், பின் பக்கம் சர்ப்ப ரூபமாகவும் இருக்கிறார். ராமர், சீதையை தேடி இங்கு வந்தபோது, பக்கத்தில் உள்ள மலைமேல் ஏறி தேடியதாக சொல்கிறார்கள். ராமருடைய பாதம் மலை அடிவாரத்தில் உள்ளது. நாலாயிர திவ்ய பந்தத்தில் பெரியாழ்வார் பாசுரங்களில் இந்த கோவில் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதி நடை பெறும்.

    முன்பு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 24-ந் தேதி இந்த கோவிலில் கொடியேற்றி பத்து நாட்கள் பிரமோற்சவம் நடந்து உள்ளது. 9-ம் நாள் சித்திரை விஷூ அன்று தேர்த்திருவிழா நடந்து உள்ளது. புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் கருட உற்சவம் இன்றும் நடக்கிறது. சித்திரை முதல் நாள் அன்று விசேஷ பூஜைகளும், ஆடி ஸ்வாதி அன்று கருட சேவையும், ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜையும் நடக்கிறது.

    கும்பமேளா சமயங்களிலும், அமாவாசை, மாதப்பிறப்பு சமயங் களிலும் மக்கள் இந்த ஊர் ஆற்றில் நீராடி பித்ருக்களுக்கு சடங்குகள் செய்கிறார்கள். காசியில் உள்ள திரிகூட சங்கமத்திற்கு இணையாக இந்த முக்கூடலை கருதுகின்றனர்.

  • மரண பயம் போக்கும் சக்கரத்தாழ்வார்

    வைஷ்ணவ ஸ்தலங்களில் குறிப்பாக ஸ்ரீரங்கம், திருமோகூர், திருக்கோவிலூர், திருவல்லிகேணி, காஞ்சிபுரம் போன்ற அனைத்து ஸ்தலங்களிலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி கொண்டாப்படுகிறது. பெருமாளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார்.

    சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர்.

    திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர். பெரியாழ்வார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.

    மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர். இராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களை தண்டிக்க கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான், சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார்.

    காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, “நானே உண்மையான வாசுதேவன்’ என்று பௌண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன்மேல் ஏறிச்சென்ற கண்ணன் ஆழியினால் அவனைக் வென்றான். தேவர்கோன் முதலான சகல தேவர்களும் பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு திருவருளைப் பெற்றார்கள்.

    கஜேந்திர மோட்ச வைபவத்தில் சக்கரத்தைக் கொண்டே கஜேந்திரனைக் கவ்விப் பிடித்திழுத்த முதலையை அழித்து, யானையைக் காப்பாற்றுகிறார் சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்: சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை. இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம்

    ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்பு துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேஷம் – விருச்சிகம் ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார். சுதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. பக்தர்களுக்கு சந்தோஷம் பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர்.

    மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை.

    செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட ஸ்ரீ சக்கரத்தாழ்வார் விஷ்னுவின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் புதனின் காரகத்தையும் கொண்டிருக்கிறார். சுதர்சன ஹோமம் ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்சனைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபடுவது, சுதர்சனாஷ்டகம் பாராயணம் செய்வது, சுதர்சன ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும்.

    மேலும் புற்று நோய் போன்ற உயிர் கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும். சித்திரை நட்சத்திரம் செவ்வாயின் சித்திரை நக்ஷத்திம் புதனின் வீடான கன்னி மற்றும் துலா ராசியில் வருவதால் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, விரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு தாரித்ரியத்தை போக்கி சகல செல்வங்களும் அளிக்கும் என்பது நிதர்சனம்.

  • ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்….

    ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.

    ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

    ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.

    ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.

    வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.

    எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.

    வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.

    பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும். வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.

  • தேவியருடன் நவகிரக நாயகர்கள் உள்ள கோயில்

    திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் கருங்குளம் என்னும் சிற்றூர் உள்ளது. ஊரின் முகப்பில் சிறுகுன்றின்மீது திருமால் கோயில் உள்ளது.

    அடிவாரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இக்கோயிலில் புகழ்பெற்ற நவகிரகங்களின் சந்நதி உள்ளது. வழக்கமாக கோயில்களில் நவகிரகங்கள் மட்டுமே இருக்கும்.

    ஆனால், இத்திருக்கோயிலில் தத்தமது தேவியருடன் நவகிரக நாயகர்கள் காட்சி தருகின்றனர். அதாவது, சூரியன் – உஷாதேவி, சந்திரன் – ரோகிணிதேவி, அங்காரகன் – சக்திதேவி, புதன் – இனாதேவி, குரு – தாராதேவி, சுக்கிரன் – சுகீர்த்தி தேவி, சனீஸ்வரன் – நீலாதேவி, ராகு – சிம்கீதேவி, கேது – சித்ரலேகாதேவி.

    இவ்வாறு தம்பதி சமேதராக வீற்றிருக்கும் நவகிரகங்களை தரிசித்து வரும் தம்பதியினருக்கு கவலைகள் தீரும்.