Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன் ?

    வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக ஐதீகம். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர்.

    பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையும் பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும்.

    விருந்தினர்களுக்கும் சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது. என்ன கொடுத்தாலும் வெற்றிலையும் பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை.
    வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும் மங்களகரமானதுமான வெற்றிலை வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

    இந்துமதப் பண்டிகைகள் விசேஷம் விரதம் திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில்இ விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

  • பச்சைப் பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

    கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். கள்ளழகரை எதிர்சேவை கொண்டு வரவேற்றார் வீர ராகவ பெருமாள்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 15-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது.
    மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் 25-ந் தேதி பட்டாபிஷேகமும், 26-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடந்தது.
    அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா நிறைவு பெற்றது.
    இந்த நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் ஏப்ரல் 28-ந் தேதி மாலை 6.15 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.
    கள்ளழகரை, அழகர் வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் நிரப்பி இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, வர்ணித்து ஆடிப்பாடி எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கே நடந்த எதிர்சேவை நிகழ்ச்சிக்கு பின் அங்கிருந்து வழிநெடுகிலும் அமைக் கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.
    அங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார்.இன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்கூட்டியே வீரராகவப் பெருமாள் வைகைஆற்றுக்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
    கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வைகை ஆற்றங்கரைகளில் நேற்று இரவு முதலே பக்தர்கள் குவிந்தனர்.
    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பக்தர்கள் மீது பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

     

  • செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி

    சித்ரா பவுர்ணமி சித்திரை மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வின் போது தர்ம தேவதையான எமதர்மராஜனின், உதவியாளரான (கணக்கு பிள்ளை) சித்திர குப்தனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இத்தினத்தில் சிவன் மற்றும் அம்மன் வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
    சித்திரை மாதத்தில் குளிர் முழுவதும் முடிந்து இளவெயில் ஆரம்பமாகிறது. எனவே இவ்விழா வசந்த காலத்தை வரவேற்கும் உற்சாக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக இவ்விழா நாளன்று மக்கள் நீர் நிலைகளில் புனித நீராடலை மேற்கொள்கின்றனர்.
    பொங்கல் வைத்து படையலிட்டும், அன்னதானம் செய்தும் மக்கள் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். சித்ரா பவுர்ணமி அன்று விரதம் மேற்கொள்கின்றனர். இதனால் வாழ்வின் துன்பங்கள் நீங்கி வளம் பெறுவதாகவும், எம பயம் நீங்கி நீண்ட ஆயுள் கிடைப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர்.
    இத்தினத்தன்று இரவு மக்கள் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் கூடி நிலவொளியில் அமர்ந்து சித்ரான்னம் என்று சொல்லக் கூடிய பல வகையான கலவை சாத வகைகளை பகிர்ந்து உண்டு மகிழ்கின்றனர். இவ்வாறு சித்ரா பவுர்ணமி இரவு உணவு உண்ணும் நிகழ்ச்சி பற்றி சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்விழாவிற்கான காரணங்கள்
    சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று தான் சித்திர குப்தன் அவதரித்ததாக கருதப்படுகிறது. எனவே அன்றைய தினம் சித்திர குப்தர் வழிபாடு முக்கியமானதாகிறது. சித்திர குப்தர் தோன்றிய கதை கீழ்வருமாறு.
    முன்னொரு சமயம் பார்வதி தேவி அழகான ஆண்குழந்தை ஓவியத்தை வரைந்தார். அதனைப் பார்த்த சிவபெருமான் அவ்வோவியத்திற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்திலிருந்து தோன்றியதால் அவர் சித்திர குப்தன் என்று அழைக்கப்பட்டார் எனவும்
    இந்திரன் குழந்தை வேண்டி சிவபெருமானை வணங்கும் போது அவர் இந்திரனின் குழந்தை காமதேனு மூலம் கிடைக்கும் என்று அருளினார்.சிவபெருமானின் கூற்றுப்படி காமதேனுவின் கருவிலிருந்து சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரத்தில் சித்திர குப்தன் தோன்றினார் எனவும் கூறப்படுகிறது. அவர் அறிவில் சிறந்து விளங்கினார். எனவே எமதர்மனின் உதவியாளராக உலக உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை கணக்கிட்டு கொடுக்கும் பொறுப்பை ஏற்றார் எனவும் கூறப்படுகிறது.

    இந்திர பூஜை
    முன்னொரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் தேவர்களின் குருவான பிரகஸ்பதிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. அதன் காரணமாக பிரகஸ்பதி இந்திரனுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை ஏதும் வழங்கவில்லை. இதனால் இந்திரன் தீய வழியில் சென்றான்.
    இறுதியில் தன் குற்றங்கள் குறைய வழிகாட்டுமாறு தேவ குருவை வேண்டினான். அதற்கு அவர் பூலோகம் சென்று தீர்த்த யாத்திரை மேற்கொண்டு சிவபெருமானை வழிபடுமாறு வழிகாட்டினார். அதன்படி தீர்த்தயாத்திரை மேற்கொள்ளும்போது தன் தோளில் இருந்து பாரம் இறங்குவது போல பாவங்கள் நீங்கியதாக உணர்ந்தான்.
    உடல் மாற்றத்திற்கான காரணத்தை கண்டறிய முற்பட்ட போது அருகே சிவலிங்கத்தை கண்டான். சிவலிங்கத்திற்கு இந்திரன் விமானத்தை அமைத்து அருகே உள்ள குளத்தில் பூத்திருந்த பொற்றாமரையால் சிவனை வழிபட்டான். இவ்விடமே பின்னாளில் மதுரை என வழங்கலாயிற்று.
    இந்திரன் வழிபட்ட நாள் சித்திரை மாத பவுர்ணமியாகும். இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று இரவு இந்திர பூஜை விழா நடத்தப்படுகிறது. இந்திரன் இவ்வழிபாட்டில் கலந்து கொள்வதாக கருதப்படுகிறது.

    விழா கொண்டாடப்படும் முறை
    சித்ரா பவுர்ணமி அன்று பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். அன்று அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி வாசலில் தெற்கு திசையில் வாயில் போன்ற அமைப்பில் படிக் கோலம் இடுகின்றனர்.
    பூஜையறையில் மாவினால் சித்ர குப்தரின் உருவத்தினை வரைந்து ஏடு மற்றும் எழுத்தாணியை (பேப்பர் மற்றும் பேனா) உருவத்தின் அருகே வைக்கின்றனர். சர்க்கரைப் பொங்கல் மற்றும் பருப்பு பாயாசம் (பால் சேர்க்காமல்) படைத்து விளக்கேற்றி தீப ஆராதனை காண்பிக்கின்றனர்.
    பின் தங்கள் வாழ்வில் செய்த பாவங்களைப் போக்குமாறும் இனி வரும் நாளில் பாவங்கள் செய்யாமல் இருக்க அருள் புரியுமாறும் வேண்டுகின்றனர். நிலையான செல்வம், நீடித்த ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.
    வழிபாடு முடிந்த பின் முறத்தில் அரிசி, பருப்பு, காய்கறி, தட்சிணை ஆகியவற்றை வைத்து எளியவர்களுக்கு தானம் செய்கின்றனர். வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று சித்திர குப்தரின் வரலாற்றை படிக்கின்றனர். வழிபாடு முடிந்த பின் படிக்கோலத்தை அழிந்து விடுகின்றனர்.
    விரத முறையில் மக்கள் உப்பு, பால், மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கின்றனர். காமதேனுவிடமிருந்து சித்திரகுப்தன் தோன்றியதால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன.

    சித்திரகுப்தன்
    சித்திர குப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்திர குப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.
    இவர் இடது காலை மடித்து வலது காலை ஊன்றி சுகாசனம் என்ற நிலையில் உள்ளார். தனது வலது கையில் எழுத்தாணியும் இடது கையில் ஓலைச்சுவடியும் வைத்திருப்பார். இவரிடம் என்றும் வற்றாத கணக்குப் புத்தகம் உள்ளது. அதன் பெயர் அக்கிர சந்தாணி ஆகும்.
    சித்திர குப்தனுக்கு என்று தனிக்கோவில் காஞ்சிபுரத்தில் உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று இங்கு சித்திர குப்தனுக்கு சித்திரலேகாவுடன் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. பின் சித்திர குப்தர் மற்றும் சித்ரலேகா வீதி உலா வருகின்றனர்.
    சித்ரா பவுர்ணமி அன்று மதுரை, மானா மதுரை, பரமக்குடி போன்ற இடங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் கிரிவல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
    மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நமக்கும் மேலான சக்தி ஒன்று நம்மை இடைவிடாது கண்காணிக்கிறது எனவே தீய செயல்களை தவிர்த்து நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்பதே இவ்விழாவின் சாராம்சம் ஆகும்.
    மேலும் ஒற்றுமையுடன் பகிர்ந்துண்ணல், தான தர்மம் ஆகியவற்றையும் இவ்விழா எடுத்துரைக்கிறது. எனவே நாமும் இப்பிறவியில் தீமைகளை தவிர்த்து நன்மைகள் செய்து நன் நிலையை அடைய சித்ரா பவுர்ணமி அன்று வழிபாடு மேற்கொள்வோம்.

  • சித்திர குப்தனை வழிபடும் முறை…

    சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன. மாதம் தோறும் வரும் பௌர்ணமி நாளில் மலைக்கோவில்களுக்குச் சென்று மக்கள் கிரிவலம் வருகின்றனர். எனினும், சித்திரைப் பௌர்ணமியன்று கிரிவலம் வருதல், கோவில்களிலும் புனிதத்தலங்களிலும்தம் குடும்பத்தாருடன் பொங்கல் வைத்தல் போன்றன சிறப்பானவையாகும்.
    சித்திரைப் பௌர்ணமியானது, சித்திரகுப்தனாரின் திருமண நாளாகும். அவரது திருமண நாளான சித்திரா பௌர்ணமியன்று பொங்கலிட்டும் கிரிவலம் வந்தும் இறைவனை வழிபடும்போது, சித்திர குப்தனை மனதில் நினைத்து ” நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்” என வேண்டி வழிபட வேண்டும்.
    சித்திரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவதால், அன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை கழித்தும் சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்களாம்.
    சித்ரா பௌர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து ஒரு பேப்பரில் ”சித்திர குப்தன் படியளப்பு” என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை வைத்து படைக்க வேண்டும். படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள் , தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
    இந்த வழிபாட்டின்போது ”சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்” என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

  • நரசிம்மர் பற்றிய  வழிபாட்டு குறிப்புகள்

     
     நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.
     
     நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.
     
    கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.
     
    ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.
     
    பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
     
     நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.
     
    பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க
    நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.
     
    நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.
     
     நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.
     
    நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
     
    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
     
     ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.
     
    நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். 
     
    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.
     
    நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்.
     
    18. நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.
     
     
     
  • நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம்

    நெல்லையப்பர் கோயிலில் 14 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அருள்மிகு நெல்லையப்பர் – காந்தியம்மன் கோயிலில் இன்று காலை 3 மணி முதல் 6 மணி வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    அதன்பின் பரிவார மூர்த்திகள் யாகசாலை பூஜை, நாடிசந்தானம், ஸபர்ஸாகுதி, மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளல் உள்ளிட்ட பூகைகளும் நடைபெற்றன. இதனையடுத்து காலை 9.30 மணி அளவில் நெல்லையப்பர், வேனுவனநாதர், காந்திமதி அம்பாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகள், சமஸ்த வேதமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    மாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள் திருகல்யாணமும் மற்றும் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

  • மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

    மதுரை சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு இன்று திருக்கல்யாணம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அதைத்தொடர்ந்து 4 மாதங்களுக்கு மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்கி விட்டதாக ஐதீ கம்.
    சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடந்தது. இதற்காக வடக்கு ஆடி- மேற்கு ஆடி வீதி சந்திப்பில் திருக்கல்யாண மேடை ரூ.20 லட்சம் செலவில் வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள், திருப்பரங்குன்றம் முருகன்- தெய்வானை ஆகியோர் மணமேடையில் எழுந்தருளினர். அதன் பிறகு மீனாட்சியும், சொக்கநாதரும் மணமக்களுக்குரிய அலங்காரத்தில் திருக்கல்யாண மேடைக்கு வந்ததும் திருமண சடங்குகள் தொடங்கியது.
    குலசேகரபட்டர் வழி சிவாச்சாரியார் சுந்தரேசுவரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும், வேடம்பூண்டு மாலை மாற்றிக்கொண்டனர்.
    அம்மன்-சுவாமிக்கு பட்டுவஸ்திரம் சாத்தப் பட்டது. மணப்பெண் சார்பில் முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்கள் நலுங்கு செய்தனர். சரியாக 9.25 மணிக்கு மிதுன லக்கனத்தில் சுந்தரேசுவரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணை சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் புதுதாலி அணிந்து கொண்டனர்.
    அதன் பிறகு 5 வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டன. திருக்கல்யாணம் முடிந்ததும் அம்மன்-சுவாமி ஆகியோர் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினர். அங்கு அவர்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.

  • மதுரை சித்திரை திருவிழாவில் அம்மனின் திக்விஜயம்

    மதுரை சித்திரை திருவிழாவில் அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை அம்மன் மூவரும் இந்திர விமானத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வருவர். அப்போது மீனாட்சி அம்மன் திக்விஜயம் நடைபெறும். மீனாட்சி அம்மன் மலையத்துவசன்காஞ்சமாலைக்கு அக்னியில் இருந்து தோன்றிய மகள்.
    பிறக்கும்போதே, மூன்று மார்பகங்களோடு பிறக்கிறாள். அதைக் கண்டு பெற்றோர் கவலையுறும் போது அசரீரி, ‘தனக்கு ஏற்ற துணையை அவள் பார்க்கும்போது சரியாகி விடும்’ எனக் கூறுகிறது. மீனாட்சி அம்மன் மூன்று மார்பகங்களோடு இருக்கும் சிலையை இன்றும் புது மண்டபத்தில் காணலாம்.
    மலையத்துவசன் காலத்திற்கு பிறகு, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் முடிந்து, மதுரையின் அரசியான பின்னர், ஈரேழ் உலகத்தையும் ஆட்சி செய்ய நினைக்கிறாள். எட்டு திக்குக்கும் அதிபதிகளான அஷ்டதிக் பாலர்களை வென்று, தனக்கு அடிபணியச் செய்கிறாள்.
    இந்நிகழ்ச்சி வடக்குமாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பில் இருக்கும் லாலா ஸ்ரீரெங்க சத்திர மண்டபத்தில் நடைபெறும். அந்நிகழ்ச்சியின் போது, இரண்டு பட்டர் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு அம்பாள், சுவாமி வேஷம் போட்டு, நிகழ்ச்சியை நடத்துவார்கள்.
    அதன்படி, கிழக்கில் (கீழமாசி வீதி) இந்திரனையும், அக்னி மூலையில் (தெற்குமாசி வீதிகளில் சந்திப்பில் விளக்குத்தூண் அருகில்) அக்னியையும், தெற்கில் (தெற்குமாசி வீதியில்) எமனையும், நிருதிதிசையில் (தெற்குமாசிமேலமாசிவீதி சந்திப்பு) நிருதியையும், மேற்கில் (மேலமாசி வீதி) வருணனையும், வாயு திசையில் (வடக்கு மாசி வீதி) வாயுவையும், வடக்கில் (வடக்கு மாசி வீதி) குபேரனையும், ஈசானி திசையில் (வடக்குமாசி வீதி, கிழக்கு மாசி வீதி சந்திப்பு) ஈசனையும் வெற்றி கொள்கிறாள். பின்னர் நந்திதேவரையும் வெல்கிறாள்.
    ஈசான்ய மூலையில் சுவாமியை (சிவனை) காண்கிறாள். சுவாமியை கண்டவுடன், மீனாட்சியின் மூன்றாவது ஸ்தனம் மறைந்து விடுகிறது. அவள் சுவாமியை பார்த்து, வெட்கப்படுகிறாள். இந்நிகழ்ச்சியில் ஈசனுடன் அவள் மாலை மாற்றிக்கொள்வாள்.

  • கிரிவலம் செல்பவர்கள் வாகனம் நிறுத்த சிறப்பு ஏற்பாடு

    திருவண்ணாமலையில் வரும் 30ம் தேதி சித்திராபவுர்ணமி கிரிவலத்தில் பங்கேற்க வரும் பக்தர்களுக்காக ஆன்லைன் கார்பார்க்கிங் முன்பதிவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    29ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் 190 வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் www.tvmpournami.in என்ற இணையதளத்தின் மூலம் 5 மணி நேரம் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்காக முன்பதிவு செய்யலாம்.
    இணையதளத்தில் வழிமுறைகளை பின்பற்றி பார்க்கிங் செய்வதற்கான இடங்களை தேர்வு செய்த பின்னர், வாகன விபரம் மற்றும் உரிமையாளரின் ஆதார் விபரங்களை பதிவிட்ட பின்னர் பார்க்கிங் இடத்தை தேர்வு செய்யலாம்.
    சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் அடுத்த விழாக்காலங்களில், முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என மாவட்ட எஸ்.பி. பொன்னி கூறியுள்ளார்.