Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    இலவச தரிசன பக்தர்கள் செல்லும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி வழிந்தன. அதனையும் தாண்டி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரத்திற்கு மேலாகிறது.

    ரூ.300 கட்டணத்தில் 5 மணி நேரத்திலும், நடை பாதை பக்தர்கள் 3 மணி நேரத்திலும் சாமி தரிசனம் செய்தனர். விரைவு தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்துக்குள் சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று முதல் இன்று காலை வரை 86 ஆயிரத்து 744 பேர் சாமி தரிசனம் செய்தனர். 36,455 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று முன்தினம் 3.50 கோடியும் நேற்று 2 கோடியே 78 லட்சம் உண்டியல் வசூலானது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • திருமலையில் தினசரி நடக்கும் சுப்ரபாத தரிசனம் !

    திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.

    பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்தநேரத்தில் “”கௌசல்யா சுப்ரஜா ராம… என்ற சுப்ரபாதம் பாடப்படும்.

    சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் “போக ஸ்ரீனிவாச மூர்த்தி” பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும்.
    சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து “நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும். திருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள்.

    ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணியில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை.

    மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள்.

    பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும். சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும். இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

  • ஒரே பாறையில் உருவான கோவில்

    பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கோவில்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று பல்வேறு தனித்தன்மையுடனும், தன்னுள் பல்வேறு அதிசயங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் பொதுவாகவே நமக்கு தெரியாத பல அதிசய நிகழ்வுகள் புதைந்து இருக்கிறது. அப்படியான அதிசயங்களை அறியும்போது எப்படி இதுபோன்ற அதிசயங்கள் நிகழ்கின்றது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்.

    இவ்வாறு பிரம்மிப்பூட்டும் ஓர் அதிசய ஆலயத்தை பற்றி தான் இங்கு காணப் போகிறோம். கோவில்களை கட்டப்பட்டு கேட்டிருக்கிறோம், ஆனால் பாறையினால் ஒரு கோவில் செதுக்கப்பட்டு உள்ளது என்றால் அது மிகையல்லவா?
    கழுகுமலை வெட்டுவான் கோவில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டியிலிருந்து 22கி.மீ தொலைவில் கழுகுமலை என்னும் பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோவில் ஆகும்.

    தமிழகத்தில் உள்ள மிகச்சிறந்த குகைகோவில்களில் கழுகுமலை வெட்டுவான் கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டதாகும்.
    மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி, அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோவிலைச் செதுக்கி இருக்கிறார்கள். அதுதான், ‘வெட்டுவான் கோவில்” என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கோவில், தமிழகத்திலேயே இது ஒன்றுதான் என்பது, கழுகுமலையின் மாபெரும் சிறப்பு ஆகும்.
    கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோவில் கண்ணுக்குத் தெரியாது. சற்றே தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் இறங்கியே இக்கோவிலுக்குச் செல்ல முடியும்.

    இப்பாறைகளில் எண்ணற்ற புடைப்புச் சிற்பங்களையும், மிகவும் நுணுக்கமான சிற்பங்களையும் கொண்டு இக்கோவில் அமைந்துள்ளது.
    மலையின் நடுவே ஓரிடத்தில், வரிசையாகப் பல சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. சமணர்கள், தங்கள் குரு, தாய், தந்தை ஆகியோரின் நினைவாக, இங்கே சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளைச் செதுக்கி உள்ளனர். இச்சிற்பங்களின் கீழே, அவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்கள் தமிழ் வட்டு எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு உள்ளன.

    இந்தக் கோவிலின் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. இதில், கருவறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. கோவில் கோபுரத்தில், உமா மகேஷ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் காணப்படுகின்றன. விமானத்தின் மேற்குத்திசையில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர்.

    விமானத்தின் நான்கு மூலைகளில் நந்தி சிலைகளும், இவற்றுக்குக் கீழே யாளி வரிகளும், கபோதகமும் உள்ளன.
    கழுகுமலை கடினமான பாறை அடுக்குகளால் ஆனது. இவ்விடத்தில் சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றால் முன்னோர்களின் உழைப்பும், தொழில்நுட்பமும் வியப்புக்குரியதாகும்.

  • சங்கடம் தீர வேலனை வணங்குங்கள்

    உரிய சஷ்டி நாளில், முருகப்பெருமானை வணங்குவோம். முந்தைய வினைகளையெல்லாம் தீர்த்துவைத்து அருள்வான் என்கின்றனர் பக்தர்கள்.

    முருகப்பெருமானுக்கு உரிய சஷ்டியில் விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவார்கள் பக்தர்கள். அதேபோல் செவ்வாயிலும் வெள்ளிக்கிழமையிலும் கந்த வழிபாடு கவலைகள் தீர்க்கும் மாமருந்து என்று போற்றுகின்றனர்.

    சஷ்டி. நன்னாளில், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காத அற்புதமான நாளில், சஷ்டியின் நாயகனை, முருகப்பனை தரிசனம் செய்யுங்கள்.

    கந்த சஷ்டி கவசம் படியுங்கள். கந்தவேலனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, வேலவனை வழிபடுங்கள். முந்தைய வினைகளையெல்லாம் தீர்த்து வைப்பான். சங்கடங்களையெல்லாம் காணடித்து, சந்தோஷத்தைப் பெருக்கி அருள்வான் சக்திகுமரன்!

  • நெல்லையப்பர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.
    கல்லிடைக்குறிச்சியில் உள்ள மாணிக்கவாசகர் வழிபாட்டுக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, காலையில் விநாயகர் துதி, நால்வர் துதி, சாத்திர தோத்திர அருளாளர்கள் துதி பாராயணம் நடைபெற்றது.

    பன்னிரு திருமுறைகளில் மூவர் முதலிகள் அருளிய திருக்கடைக்காப்பு, தேவாரம், திருப்பாட்டி ஆகிய ஏழு திருமுறை பதிகங்கள் பாடப்பட்டன.
    பின்னர் திருவாசக முற்றோதுதல் ஞானவேள்வி தொடங்கியது. மழைவளம் பெறுக வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பகலில் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. மாலையில் திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், திருமுக பாசுர பாடல்கள் பாடப்பட்டன.

    வழிபாட்டில் வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், செங்கோல் ஆதீன குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • திருப்பதி மலையப்பசாமிக்கு ஜேஷ்டாபிஷேகம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாதத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி மீது அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்க கவசம் 19-ந்தேதி அகற்றப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து 24-ம் தேதி உற்சவருக்கு ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடத்தப்படுகிறது.

    25-ம் தேதி உற்சவரான மலையப்பசாமிக்கு முத்துக்கவசமும், 26-ம் தேதி தங்கக் கவசமும் அணிவிக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

  • ஸ்ரீசக்கரம் அமைந்து இருக்கும் ஆலயங்கள்

    ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான் அம்பாளின் எந்திரமான ஸ்ரீசக்கரம். நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம்.

    காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.

    பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புணுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.

    கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.

    ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரத்தால் தணிக்கப்பட்டது.

    திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்கர தாடங்கத்தையும் மற்றொரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் அணிவித்துள்ளார். அதன் பின்னரே தேவியின் உக்ரம் தணிந்து சாந்தமானார்.

    கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்கரமே.

  • ஆஞ்சநேயர் வாழும் அதிசய மலை!

    ஆஞ்சநேயர், பாம்பன் தீவில் உள்ள கண்டமதனா மலையில் தற்போதும் வாழ்வதாக கூறப்படுகிறது. ராமேஸ்வரம் அருகில் அமைந்துள்ள பாம்பன் தீவில், கண்டமதனா என்னும் மலை உள்ளது. இங்கு தான் ஆஞ்சநேயர் அடிக்கடி வந்து செல்வதாகவும், குடிகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த மலை ராமேஸ்வரத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கண்டமதனா மலையின் உச்சியில் இருந்து தான் ஆஞ்சநேயர், ராவணன் ஆட்சி செய்த இலங்கையைப் பகுதியை நோட்டமிட்டுள்ளார் என்பது நம்பிக்கை.

    இந்த மலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு ராம் சரூர்க்கா கோயில் என்று பெயர். இந்த கோயில் மலைப்பகுதியில் உள்ளதால், 3 கிலோ மீட்டர் தொலைவை நடந்தே அடைந்து விடலாம்.

    இந்த கோயிலுக்கு அருகே, ராமர் பாதம் என்னும் இடம் உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இந்த கோயிலுக்கு செல்லும் வழியில், எண்ணற்ற தீர்த்தங்களும், கோயில்களும் உள்ளன.

    அவற்றில் முக்கியமானவை இரட்டைப் பிள்ளையார் கோயில், சுக்ரீவர் தீர்த்தம், அம்மன் கோயில், அங்கதன் தீர்த்தம், ஜாம்பவான் தீர்த்தம், ஷாக்சி ஹனுமான் கோயில் என்பவை ஆகும்.

    மேலும் ராம தீர்த்தம், பீம தீர்த்தம், அர்ஜூன் தீர்த்தம், கண்டமதன தீர்த்தம், தர்மா தீர்த்தம், வீர தீர்த்தம், கிருஷ்ணா தீர்த்தம், பஞ்ச தீர்த்தம், நகுல தீர்த்தம், சகாதேவ தீர்த்தம், பரசுராம தீர்த்தம், குமுதா தீர்த்தம் ஆகியவையும் உள்ளன.

    ராமேஸ்வரத்திற்கு செல்பவர்கள் பெரும்பாலும், கண்டமதனா மலைக்கு சென்று வருவார்கள். இந்த மலையில், சூரிய உதயம் மற்றும் மறைவு காட்சிகளை கண்டு ரசிக்க முடியும்.

    மேலும், ராமேஸ்வரத்தை முழுமையாக காண நினைப்பவர்கள், கண்டமதனாவிற்கு அருகே உள்ள சுக்ரீவர் தீர்த்தத்தின் மீது ஏறி காணலாம்.

    ராம தீர்த்தத்திற்கு அருகில் ராமநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலைச் சுற்றி எண்ணற்ற உணவகங்கள், விடுதிகள், கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டுமே தரிசனம் தரும் அதிசய அம்மன்

    ‘ஏழைகளின் ஊட்டி’ என்று பிரபலமாக அழைக்கப்படும் நகரம்தான் ஹாசன் நகரம் இந்நகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. அங்கே அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயில் வருடத்திற்கு 10நாட்கள் மட்டு மே திறக்கப்படுகிறது. மேலும் இக்கோயில் சிறப்புகளையும் தகவல்க ளையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது. ஆம் ஹாசனாம்பா கோயில் இருப்ப‍தால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என் றே பெயர் பெற்றிருக்கிறது.

    இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகிறது. அக்டோபர் 25-ஆம் தேதியி லிருந்து, ந‌வம்பர் 4-ஆம் தேதிவரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். எனினும்கோயில் 24ஆம்தேதியே திறக்கப்பட்டா லும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடை பெறுவதால் அந்த நாட்களில் பொதுமக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி இல்லை.

    மாமியார்-மருமகள் கல்! :
    பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாம ல்வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒருபெண். ஒருநாள்அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ”வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்” என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள்முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்ல ப்படுகிறது.

    அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயி லில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர் ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகி றது. ஆண்டின் 10நாட்கள் மட்டுமே திறந்திருக்கு ம் அதிசய கோயில்!

    திருடர்கள் கோயில் :

    ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச் செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாகபோகுமாறு சபித்ததாக சொல்லப்படு கிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக ‘ திருடர்கள் கோயில்’ என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருக்கிறது.

    அணையா தீபம் :

    ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாழக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்து கொண் டிருக்குமாம்.

    கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்…:

    கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும்உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்று நம்பப் படுகிறது.

    வாடா மலர்கள் :

    ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்கு மென்றும் பக்தர்கள் நம்புகி றார்கள். அதுமட்டு மல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப் பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறா ர்கள்.

    வரலாறும், புராணமும்! ஹாசனாம்பா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்ட ப்பட்டது. இக்கோயில் பாம்பு புத்து வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதோடு, கர்நாடககட்டிடக் கலை யின் சிறந்த உதாரணமாகவும் திகழ்கிற து. இது கட்டப்பட்ட பிறகே ஹாசன் நகரம் அப் பெயரை பெற்றதாக சொல்ல ப்படுகிறது.

    அதாவது அதற்கு முன்பு சிம்ஹாசனபுரி என்று அழைக்கப்பட்டுவந்த ஹாசன்நகரம் ஹாசனாம்பாவின் (சப்த கன்னியர் கள்) வருகைக்குபிறகு ஹாசன் என்று அழைக்கப்படலாயிற்று. ஆண்டின் 10நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்! புராணக் கூற்றின்படி சப்த(ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திரா ணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலி ருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர். அதன்பின்னர் 3கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் 3 கிணறுகளாக 3 கன்னியர்க ளும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.

    ஹாசனாம்பா கோயில் திறப்பு!

    ஹாசனாம்பாகோயில் ஒவ்வொருஆண்டும் தளவார் குடும்பத்தினர்கோயில் நுழைவாயி லில் கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தை வெட்டிய பிறகு திறந்து விடப்படுகிறது. ஆண் டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசயகோயில்! அதோடு ஹாசன் மாவட்ட கருவூலத்திலிருந்து எடுத்து வரப்படும் ஆபர ணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். அதன் பிறகு அம்மன் நகைகள் 10 நாட்களின் முடிவில் மீண்டும் கருவூலத் துக்கே எடுத்துச் செல்ல ப்படுகின்றன.

  • திருப்பதி கோவிலில் 2 மணி நேரத்தில் தரிசனம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஆந்திர சுற்றுலாத் துறை புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். இந்த காத்திருப்பு நேரத்தை குறைக்க ஆந்திர அரசும், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மூலம் புதிய திட்டத்தை அமல்படுத்த ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது. திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக ஏ.சி., டி.வி., வைபை வசதியுடன் கூடிய அதிநவீன சொகுசு பஸ்களை ஆந்திர சுற்றுலா துறை இந்த மாத இறுதியில் இருந்து இயக்க உள்ளது. சோதனை அடிப்படையில் இந்த திட்டம் முதல் கட்டமாக விசாகப்பட்டினத்தில் இருந்து தொடங்குகிறது.

    இந்த சொகுசு பஸ்சில் 43 பேர் பயணம் செய்யலாம். இந்த பஸ் தினமும் விசாகப்பட்டினத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திருப்பதி வந்தடையும்.

    பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு மாற்று பஸ்சில் பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். அவர்களுக்கு சிறிது நேரம் தங்கும் இடம், தலைமுடி காணிக்கை செலுத்தும் வசதி, குளியல் வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.

    பின்னர் அவர்கள் தரிசனத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவர்களுக்காக முன் கூட்டியே தரிசன டிக்கெட்டுகளை சுற்றுலா துறை ஏற்பாடு செய்து தயாராக வைத்திருக்கும். அவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். அவர்களுக்கு தேவையான லட்டு பிரசாதங்களும் வழங்கப்படும்.

    பின்னர் அவர்கள் திருமலையில் இருந்து திருப்பதி அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து சொகுசு பஸ் மூலம் காளகஸ்தி கோவிலுக்கு செல்வார்கள். அங்கு தரிசனம் செய்த பின்பு விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்வார்கள்.

    இது 3 நாள் சுற்றுலா ஆகும். இதற்கான கட்டணம் ரூ.4 ஆயிரம். இந்த திட்டம் வெற்றி பெற்றால் படிப்படியாக விஜயவாடா, குண்டூர், பிரகாசம், கோதாவரி மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர சுற்றுலாத் துறை இந்த திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.