Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருமலையில் நடக்கும் கல்யாண உற்சவம்

    திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது. அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

    திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள். சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும்.

    ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார். விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும்.
    கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும்.

  • குரு பார்க்க கோடி நம்மை ….

    நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்த பெரிய கிரகங்களாக கருதப்படுவது சனியும், குருவும்தான். அதனால்தான் சனி பெயர்ச்சியும், குரு பெயர்ச்சியும்முக்கியத்துவம் பெறுகின்றன. சனிபோல் கொடுப்பவரும் கிடையாது. கெடுப்பவரும் கிடையாது. சனி கொடுக்க எவர் தடுப்பர் என்ற கூற்று சனிபோல் கொடுப்பவர் எவரும் கிடையாதுஎன்பதை உணர்த்தும்.

    குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்பார்கள். குரு பகவானின் அருள் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் மிக முக்கியமானது, குருபலன் இருந்தால்பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும் எனவும், குருவின் அருள் இருந்தால் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையும்நிலவி வருகிறது. குரு பகவானின் அருள் இருந்தால் தம்பதிகளுக்கு ஆண்குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    குரு என்றும் நலம்மட்டுமே அருள்பவர். அவர் ஒரு ராசிவிட்டு மற்றொரு ராசிக்கு பெயரும்போது கூட தீய பலன்கள் எதுவும் ஏற்படாது.நற்பலன்கள் குறையலாமே தவிர நிச்சயமாக தீய பலன்கள் ஏற்படாது. குருபகவானுக்கென்று தமிழகத்தில் தனி ஸ்தலமே உள்ளது. தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகே இருக்கும் ஆலங்குடி என்ற இடத்தில் குரு ஸ்தலம்இருக்கிறது. இங்கு சென்று குரு பகவானை வழிபடுவது சிறப்பு தரும்.

    சிவ பெருமானின் தட்சிணாமூர்த்தி கோலமும், குரு என்றுதான் அழைக்கப்படுகிறது. தகப்பனுக்கே உபதேசம் செய்த முருகன், குரு ஷேத்திரமானதிருச்செந்தூருக்கு அதிபதி. திருச்செந்தூரில் கோவில் கொண்டிருக்கும் முருகப்பெருமான் ஸ்தலமும் குரு ஸ்தலமாக கருதப்படுகிறது. இங்கு சூரசம்ஹாரத்திற்கான ஆலோசனையில் முருகன்ஈடுபட்டிருந்த போது அங்கு குருபகவான் வந்தார்.

    அப்போது அசுரர்கள் அனைவரைப்பற்றியும், அவர்களது பலம்,பலவீனம் பற்றியும் குரு பகவானிடம் முருகப்பெருமான் கேட்டறிந்ததாகவும்கூறப்படுகிறது. அதன் பின் குருபகவான் முருகனை வழிபட்டு அவர் அருள் பெற்றார். சூரனை, அசுரனை, தீமையை முருகன் அழித்த தலம் திருச்செந்தூர்.

    இங்கு குருவுக்கும் அருள்பாலித்தவர் முருகன். குருவுக்கு அருள்பாலித்த முருகனை வழிபட்டால் குருப் பெயர்ச்சியால் குறைவான நற்பலன்கள் பெற்றவர்களும் நிறைவானநற்பலன்கள் பெறுவார்கள் என்பது திண்ணம்.

  • முத்து அங்கியில் ஏழுமலையப்ப சுவாமி பவனி

    திருப்பதி திருமலையில் நடைபெற்ற ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ம் நாளான நேற்று மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, முத்து அங்கி அணிந்து 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ம் நாளான நேற்று, முத்து அங்கியில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியது. இதில் முதல் நாள் மாலை உற்சவரான மலையப்ப சுவாமி, வைர கவச அலங்காரத்தில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இவ்வாறு வைர கவசத்தில் காட்சியளிக்கும் மலையப்பரை காண திருமலையில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து 2-ம் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை, முத்து அங்கி அலங்காரத்தில் மலையப்பர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவ மூர்த்திகள் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிறைவு நாளான இன்று செவ்வாய்கிழமை, தங்க கவச அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் காட்சி தர உள்ளனர்.

  • திருமாலை திங்கட்கிழமை தரிசித்தால் கிடைக்கும் நன்மைகள்

    திங்கட்கிழமையன்று திருப்பதியில் ஏழுமலையால் எழுந்தருளியுள்ள மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும் என்பது ஐதீகம். இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால்தான் அங்கு சென்று வந்தாலே மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.

    திருப்பதி சென்று திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தாலேவாழ்வில் மாபெரும் திருப்பம் உண்டாகும் என்பது ஐதீகம். அதனால் தான் அரசியல்வாதிகளும், விஐபிக்களும், ஏழை, நடுத்தர மக்களும், பணக்காரர்களும் ஏழுமலையானை மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

    இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,திருப்திக்கு செல்ல ஸ்பெஷல் நாட்கள்இருக்கு.அது பற்றி பணவளக்கலை என்ன சொல்கிறது என்பதைபார்க்கலாம். ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை திருப்பதி சென்றால்,நம் வாழ்வில் அனைத்தும் ஐஸ்வர்யம் தானாம். 7 மலையை ஏறி இறங்கும் போது, நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்னை இறங்கு முகமாகிவிடும். நம் வாழ்வோ மேலோங்கி செல்லுமாம் திருப்பதி திருமலை ஏழுமலையானை நாம் தரிசிக்கும் முன் திருச்சானுரில் உள்ள பத்மாவதி தாயாரை தான் முதலில் தரிசிக்க வேண்டும்.

    பத்மாவதி தாயாரை தரிசித்த பிறகு திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிப்பதால் விசேஷ பலன் கிடைக்கும் . திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார். கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை நீங்குவதோடு சந்ததி விருத்தி உண்டாகும். வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

    வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

    திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டடுள்ளனர். அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம். திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு பிடிக்கும் லக்னம். மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் விருச்சிகம் , மகரம், மீனம். வருடம் ஒரு முறை செல்ல வேண்டிய லக்னம் காரர்கள் :சிம்மம் , தனுசு , கும்பம். 7 மலையும் சூட்சமான கிரகங்களுடன் சம்மந்தப்பட்டது. நாம் ஒவ்வொருமலையும் ஏறி இறங்கும் போது தோஷம் பாவங்கள் நீங்கி விடும். திருப்பதி வெங்கடாசலமும்,மகா லட்சுமியும் சர்வ ஐஸ்வர்யம் தருவார் பத்மாவதி தாயார் வாழ்வில் அனைத்து வசதியும் தருவார்.

    ஏழு சக்கரத்தையும் ஆதாரமாக வைத்து, ஏழு சக்கரங்களையும் முழு வீச்சில் இயக்கி,ஏழு மலையிலும் பிரசிக்க வைத்து,அவர் கையில் இருக்க கூடியது சொர்ண முத்திரை,சொர்ணசக்கரம். சொர்ண வைரவர் தான் செல்வத்திற்கு அதிபதி. அதனால் தான் செல்வம் அங்கு வந்து சேருகிறது. கடன் பிரச்னை,தொழில் பிரச்சனை என அனைத்திற்கும் ஒரு நல்ல வழி கிடைக்கும்.செல்வம் பெருகும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும். ஒவ்வொரு தமிழ் மாதம். தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று,காலை நேரத்தில், ஏழுமலையானை வழிபட்டால் கண்டிப்பாக வாழ்வில் நடக்கும் பல அற்புதங்களை கண் கூடாக பார்க்க முடியும்.

    12 மாதங்கள் இதனை கடைபிடிக்க வேண்டுமாம். தை மாதம் தொடங்கி மார்கழியில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் படிப்படியாக சென்று வர கண்டிப்பாக செல்வம் பெருகும் என்பது ஐதீகம். உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள் .

    அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்துள்ளது. ஜாதகத்தில் சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு ஏழுமலையான் ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.

  • ஏழுமலையானுக்கு ஆபரணம் இல்லாத நாள்

    வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும்.

    அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு “சாலிம்பு என்று பெயர்.

    மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.

  • சோதனைகளைப் போக்கி நல் அருள் தரும் சோமவார பிரதோஷம்!

    சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார்; நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை சிக்கெனப் பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்!

    சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

    நம்பிக்கையோடு ’நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். அதிலும், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம்.

    அன்றைக்கு வரும் பிரதோஷம் மிக விசேஷம். சோமவார பிரதோஷத்தில் ஈசனை வணங்கினால், நம்முடைய தோஷங்கள் நீங்கும். சோதனைகள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும். பரமேஸ்வரன் விஷம் உண்டது, ஏகாதசி தினத்தில். அயர்ச்சியில் படுத்து, கண்ணுறங்கியது துவாதசியில். உலகமெலாம் உய்வுற தாண்டவம் ஆடியது திரயோதசி நாளில், அந்தி சாயும் நேரத்தில். இந்தக் காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம். 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள். சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவர், ஆனந்த மிகுதியால் உடல் பருத்தாராம். அதன் காரணமாக, கயிலாயமே மறைந்ததாம்.

    அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள். பிரதோஷ தினத்தன்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம். மல்லிகை, வில்வம், மருக்கொழுந்து மலர்களை ஈசனுக்கு சூடக் கொடுக்கலாம். பச்சரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து, அதோடு வெல்லம் சேர்த்து, காப்பரிசியாக்கி நந்திக்கு நிவேதனம் செய்யலாம். ஈஸ்வரனுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம். இந்த சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார். நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்!

  • நாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்!

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் வரசித்தி விநாயகர். இந்த விநாயகர் கிணற்றில் சுயம்புவாக தோன்றினார். வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது.

    இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றளவும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆனால் கடவுள்களே தங்களை வெளிப்படுத்தி காட்டி, கோயில் கட்ட அற்புதங்களும் நடந்தது உண்டு. காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகரும் ஒரு திருவிளையாடல் மூலம் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி, பிறகு கோயில் கட்ட வைத்தார்.

    விநாயகரின் மகிமை!

    விநாயகரின் மகிமையை அறிந்த ஊர் பொதுமக்கள். பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். இன்றும் விநாயகரைசுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை சற்று கவனித்து பார்த்தால் தெரியும். அது தண்ணீர் மட்டுமல்ல, அவரது அளவிட முடியாத கருணையும்தான். இதை காணும்போது உள்ளம் உருகும், நெஞ்சம் நெகிழும்.

    பக்தர்களுக்கு பேரருள் புரியும் காணிப்பாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறாராம். கொல்லபல்லி கிராமத்தை சேர்ந்த பெஜவாடா சித்தைய்யா என்பவர் ஒரு வெள்ளி கவசம் சுவாமிக்கு வழங்கினார். ஆனால் தொடர்ந்து விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு வருவதால் வெள்ளி கவசம் விநாயகர் சிலைக்கு பொருந்தவில்லையாம். இந்த அதிசயத்தால் பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.

    கோயில் அருகே மணிகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது இங்கிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச்செல்வதாக ஒரு நம்பிக்கை.

    பிரார்த்தனை!

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் ஸ்ரீவரசித்தி விநாயகரை வணங்கி சென்றால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. அவ்வாறு பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், கோயிலுக்கு வந்து பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்கின்றனர்.

    இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. கோயிலில் ஆஞ்சநேயர், நவகிரகங்களும் அருள்பாலிக்கின்றன.

    அதேபோல் தினமும் மாலை “சத்தியப்பிரமாணம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டு சத்தியப்பிரமாணம் செய்யும்போது, அவர்கள் பொய் கூறி இருந்தால் கட்டாயம் விநாயகர் உடனடியாக தண்டனை வழங்கி விடுவாராம்.

    இதனால் உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் நீங்க, வரசித்தி விநாயகரை மனமுருகி வழிபட்டால் குறைகள் நீங்கி நன்மை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

  • ஏழுமலையானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை

    விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது.

    சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு “அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர். காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.

    சகஸ்ர தீப அலங்கார சேவை:
    ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும்.

  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி வருசாபிசேகம்

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆனி வருசாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரையோரத் தலமுமானது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

    இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிக முக்கியத் திருவிழாக்களில் ஆனி வருஷாபிஷேகம் மற்றும் தை உத்திர வருஷாபிஷேக விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இன்று ஆனி வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்குத் திருக்கோயில் நடை திறக்கப்பட்டது.

    தொடர்ந்து, 3.30 மணிக்கு விஸ்வரூப ஆராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் மகா மண்டபத்தில் உள்ள மூலவர் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை கும்பக் கலசங்களுக்கும், குமரவிடங்கப் பெருமான் சந்நிதியில் சுவாமி சண்முகர் கும்பத்துக்கும் பெருமாள் சந்நிதி முன்பு வெங்கடாஜலபதி கும்பக் கலசத்துக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

    காலை 8 மணிக்குக் கும்பக் கலசங்கள் விமான தளத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. 8.30 மணி முதல் 9 மணிக்குள் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சந்நிதிகளின் விமானங்களுக்குப் போத்திமார்கள் மூலமும் சுவாமி சண்முகர் விமானத்துக்குச் சிவாச்சாரியார்கள் மூலமும் வெங்கடாஜலபதி சந்நிதி விமானத்துக்குப் பட்டாச்சாரியார்கள் மூலமும் புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள்மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    வருஷாபிஷேகம் நடைபெற்றதால், இந்த நாளில் இரவில் மூலவருக்கு அபிஷேகம் (ராக்கால அபிஷேகம்) நடைபெறாது. தொடர்ந்து, மாலையில் சுவாமி குமரவிடங்கப் பெருமாள், வள்ளி அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருஷாபிசேக விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மற்றும் கோபுர தரிசனம் செய்தனர்.

  • மலைக்கொழுந்தீஸ்வரரின் அதிசய ஆலயம் !

    சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ளது மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம். புராண மற்றும் புராதனச் சிறப்பு வாய்ந்த இந்த ஆலயம் ஓர் அதிசய குடைவரைக் கோயிலாகும்.
    ராமரும் சீதையும் தங்களது பயணத்தின்போது இந்த மலையில் ஒரு நாள் தங்கிவிட்டுச் சென்றதாக தலபுராணம் கூறுகிறது. கருவறையில் மலைக்கொழுந்தீஸ்வரரும் வெளியே வலப்புறமாக அம்பாள் பாகம்பிரியாளும் வீற்றிருக்கின்றனர். மன்னர் காலத்தில் இந்தக் கோயிலைப் பாதுகாத்து வந்த மாவீரன் கருவபாண்டியனுக்குக் கோயில் வாசலிலேயே சிலை வைத்திருக்கிறார்கள். இந்தக் கோயிலை வணங்க வருபவர்களை இரு கைகூப்பி வணங்கி வரவேற்கும் வடிவில் அமைந்துள்ளார் அவர்.

    இங்கு வற்றாத சுனை ஒன்று உள்ளது. இந்தச் சுனை நீரால்தான் மலைக்கொழுந்தீஸ்வரர் மற்றும் அம்பாள் பாகம்பிரியாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்தக் கோயில் பகுதி, மூன்று அடுக்குகள் கொண்டது. மலையின் மேற்புறம் 2-வது அடுக்கில் பம்பர வடிவில் ஒரு மலை உள்ளது.

    இதை ஒட்டி வளர்ந்துள்ள புளிய மரத்தின் கீழே புளியமரத்து முனீஸ்வரர் இருக்கிறார். அதன் முன்புறம் சமணர்களால் நடப்பட்ட நடுகல் ஒன்று உள்ளது. மூன்றாம் அடுக்கில் கார்த்திகை தீபம் ஏற்றும் கம்பம் உள்ளது.

    இங்குள்ள தெப்பக்குளத்தில் குளித்தால் காசியில் உள்ள கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்றும், கோயிலுக்கு வந்தால் மனக் கஷ்டங்கள், குடும்பப் பிரச்னை நிவர்த்தி ஆகி விடுகிறது என்கின்றனர் பக்தர்கள்.

    இந்தக் கோயிலுக்கு சிவகங்கையிலிருந்தும், திருப்பத்தூரிலிருந்தும் வரலாம். செவ்வாய், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் உண்டு.