Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • சபரிமலை கோவில் ஜூன் 16ம் தேதி நடை திறப்பு

    ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் ஜூன் 16ம் தேதி மாலை 5.00 க்கு திறக்கப்படுகிறது.

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை நாட்களைப் போல், தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்காக முந்தைய நாள் மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்படும்.

    இந்நிலையில், தற்போது அதே போல் வரும் ஆடி மாதத்தில் முதல் 5 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆங்கில காலண்டர்படி, வரும் 17ம் தேதி ஆடி மாதம் துவங்குகிறது. எனவே, முந்தைய நாள் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறக்கப்படுகிறது. எனவே, 16ம் தேதி முதல் 21ம் தேதி இரவு 10 மணி வரையில் நடை திறந்திருக்கும்.

    இந்த ஐந்து நாட்களும் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகள், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம் பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை் இயக்க கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

  • திருப்பதி சென்று வந்தால் திருப்பம்

    108 திவ்ய தேசத்திலும் பெருமாள் நின்ற வண்ணம், அமர்ந்த வண்ணம், கிடந்த வண்ணம் ஏன் அளந்த வண்ணத்திலும் காணக் கிடைக்கிறார். ஒரு கூடுதல் சிறப்பு திருமலை கோவிந்தனுக்கு உண்டு. மூலவர் கோவிந்தனின் முகவாய்க்கட்டையில் வெள்ளையாக இருக்கும். என்ன காரணம்? ஏன் இவருக்கு மட்டும் இப்படி? இதற்கு ஒரு கதை உண்டு.

    திருமலையில் அனந்தாழ்வான் என்ற பக்தனுக்குத் தோட்ட வேலையில் உதவி செய்யச் சின்னப் பையனாகச் சென்றார் பெருமாள். பெருமாளுக்குத் தான் மட்டுமே பூக்கைங்கரியம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்து இருந்தார் அனந்தன். தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை மட்டும் உதவ அனுமதித்தார். அப்பெண்மணி படும் சிரமத்தைக் கண்டு மனம் பதைத்த பெருமாள், ஒரு சிறுவனாக மாறி உதவச் சென்றார். தன் சபதத்திற்கு இடையூறு செய்வதாக கருதி உதவிக்கு வந்த அந்தச் சிறுவனை விரட்டி அடித்தார் அனந்தன். இரும்பு கடப்பரையைச் சிறுவன் மீது விட்டு அடித்தார். சிறுவன் மறைந்தான்.

    இதே நேரத்தில் திருமலையில் உள்ள ஆனந்த நிலையத்தில் சந்நிதியில் குடி கொண்டிருந்த பெருமாளின் திருமுகமண்டலத்தில் உள்ள முகவாய்க்கட்டையில் ரத்தம் பீறிடுகிறது. அர்ச்சக சுவாமி பெருமாளின் பீதாம்பரத்தால் துடைத்தார். ரத்தம் வெளிவருவது நிற்கவில்லை. தனது அங்கவஸ்திரத்தால் துடைத்தார். ரத்தம் பீறிறிடுவது நிற்கவில்லை. எவ்வளவு துடைத்தாலும், ரத்தம் பீறிடுவது நிற்காததால் திகைத்தார் அர்ச்சக சுவாமி. பெருமாளுக்குத் திருநாமம் இட, அருகில் வெள்ளை நிறப் பச்சைக் கற்பூரம் வைக்கப்பட்டிருந்தது. அவசரத்தில் அதனை எடுத்து ரத்தம் வரும் இடத்தில் அணைத்தாற்போல் வைத்தார் அர்ச்சக சுவாமி. ரத்தம் கொட்டுவது நின்றது. வெள்ளை நிறத்தில் இருந்த அந்தப் பச்சைக் கற்பூரம் அங்கேயே திருக்கோலம் கொண்டுவிட்டது. அவருக்கு ஒரு நிரந்தர அடையாளத்தைக் கொடுத்துவிட்டது.

    இன்றும் அனந்தன் விட்டெறிந்த அந்தக் கடப்பரையை திருமலை கோயிலின் பிரதான நுழைவாயிலில் காணலாம். தெய்வம் மனுஷ்ய ரூபேண என்பார்கள். பகவான் எந்த உருவில் வேண்டுமானாலும் வந்து, பக்தர்கள் துன்பம் தீர உதவலாம். அதனால் யாரையும் கடிந்து பேசிக் காயப்படுத்த வேண்டாம் என்பதே இக்கதை கூறும் கருத்தாகக் கொள்ள வேண்டும்.

  • குரு பகவானுக்கு பரிகாரம்

    வியாழக்கிழமைகளில் குருவுக்கு விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபடலாம். தட்சிணாமூர்த்தி சன்னிதி உள்ளகோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். மேலும் முடிந்தவர்கள் தட்சிணாமூர்த்திக்கோ, அல்லது குருவுக்கோ அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, கொண்டைக் கடலையை தானம் செய்வது நல்லது. இந்த தானம் கட்டாயம் கிடையாது. குரு பகவானின் அருள் மேலும், மேலும் வேண்டும் என்பவர்கள் செய்தால் மட்டும். போதும்.

    குருபகவானை வழிபட சில ஸ்லோகங்கள்: 

    குருப்ரம்ஹோ குருவிஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹா
    குரு சாட்சாத் பரப்ரம்ஹா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹா
    குருவே சர்வலோஹானாம் பீஷஷே பவரோஹினாம்
    நிதயே சர்வ வித்யானம் தட்ஷினா மூர்த்தியே நமஹ

  • வீட்டில் அஷ்ட லட்சுமியும் வசிக்க ….

    வீட்டில் வளம் பெருகுவதற்காக சில செடிகளை நட்டு வைப்பதுண்டு. வீட்டில் உள்ள பொருட்களை, சரியான இடத்தில் சரியான திசையில் வைப்பது போன்றவற்றின் மூலம் வாஸ்து பிரச்னைகளை சரிசெய்து கொள்ள முடியும். அதேபோன்று சில பொருட்களை வீட்டுக்குள் வைப்பதன் மூலம், நாம் வாழுமிடத்தில் அஷ்ட லட்சுமிகளையும் நம்முடன் சேர்த்து வசிக்கச் செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.

    புல்லாங்குழல்

    பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான புல்லாங்குழல், மனதுக்கு இனிமையான இசையைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கிறது. புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், பொருளாதாரக் கஷ்டங்கள் தீரும். வீட்டில் லட்சுமிதேவி குடிகொண்டிருப்பாள். அதோடு வீட்டில் இருக்கும் அத்தனை வாஸ்து தோஷங்களையும் தீர்க்கவல்ல சக்திகளையுடையது புல்லாங்குழல்.

    நாட்டிய கணபதி

    வீட்டில் பணக்கஷ்டம் உள்ளவர்கள் கஷ்டத்தோடு கஷ்டமாக, நாட்டிய கணபதி சிலை ஒன்றை வாங்கி வீட்டில் வையுங்கள். அத்தனை பணக்கஷ்டமும் காணாமல் போய்விடும். குறிப்பாக, வீட்டின் வாசலுக்கு நேராக இருக்கும்படி, இந்த சிலையை வைப்பது வீட்டுக்குச் சுபிட்ஷத்தை அள்ளித் தரும்.

    சங்கு

    எத்தகைய வாஸ்து தோஷங்களாக இருந்தாலும் நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி சங்குக்கு உண்டு. லட்சுமி தன்னுடைய கையில் சங்கினை வைத்திருப்பது போன்ற படங்களோ சிலையோ வைத்திருப்பது இன்னும் சிறப்புக்குரியது.

    ஒற்றைக்கண் தேங்காய்

    ஒற்றைக்கண் தேங்காய்க்கு அபரீதமான சக்தி உண்டு. இதை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டித் தொங்கவிட்டு பூஜை செய்து வந்தால், வீட்டில் லட்சுமி கடாட்ஷம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை அதிர்வுகள் அத்தனையும் விலகும்.

    குபேரன் சிலை

    குபேரன் சிலை வீட்டில் மட்டுமல்லாது தொழில் செய்யும் இடத்திலும் வைத்திருத்தல் வேண்டும். அது தொழிலில் லாபத்தைக் கொடுக்கக்கூடியது. குபேரன் சிலையை எப்போதும் வீட்டில் வடக்கு திசை பார்த்து வைத்திருக்க வேண்டும்.

  • வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் வரும் 17 ஆம் தேதி குண்டம் திருவிழா தொடங்குகிறது.

    வன பத்ரகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா வருகிற 17-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

    20-ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை, 21-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராமசாந்தி, 22-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    23-ந் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறத்தல், 24-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதில் மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குகின்றனர். 25-ந் தேதி காலை 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    26-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 27-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகாஅபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 30-ந் தேதி காலை 10 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. 31-ந் தேதி காலை 8 மணிக்கு மறு பூஜையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

  • திருப்பதியில் 5 நாட்கள் சிறப்பு தரிசனம் ரத்து

    திருமலை திருப்பதியில் உள்ள எழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 16-ம் தேதி மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.

    ஏழுமலையான் கோயிலில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அஷ்ட பந்தன மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இதையடுத்து, ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனம், பரிந்துரைக் கடிதங்களுக்கான தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    விஐபிகளுக்கு மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் தரிசனம் வழங்கப்படும். ஆகஸ்ட் 15-ம் தேதி மகாசாந்தி திருமஞ்சனம், 16-ம் தேதி காலை 10.16 மணிக்கு துலா லக்கினத்தில் மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதன்பின், தொடர்ந்து 48 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

    மகாசம்ப்ரோக்ஷண நாள்களில் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஒரு நாளுக்கு 35 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்துள்ளார்.

  • வாழ்வையே வரமாக்கும் வராஹி

    பஞ்சமி திதியில் வராஹிதேவியை வழிபடுங்கள். வாழ்வில் வரம் தருவதிருக்கட்டும். நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை!

    சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால், அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் பொருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

    பஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்!

    வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து மகிழ்ந்து அருள்வாளாம் அன்னை!

    மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹிதேவி!

    மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாகச் செய்து தேவியை வணங்கலாம்.

    வரமெல்லாம் தருவாள் வாராஹி. வாழ்வெல்லாம் துணை நிற்பாள் நம் அன்னை!

    நாளைய பஞ்சமி திதியில் (20.2.18 செவ்வாய்க்கிழமை) வராஹிதேவியை வணங்குங்கள். வளம் பெறுங்கள். நலம் பெறுங்கள்.

     

  • சுயம்பு லிங்கத்தில் வற்றாத நீர் ஊற்றும் அதிசயம்

    மகாராஷ்டிராவில் வீற்றிருக்கும் திரிம்பகேஸ்வரர் கோயில் நாசிக் மாவட்டத்தில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாகத் திகழ்கிறது. இத்தலம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலையின் மீதுள்ள இந்த ஆலயத்தினை சூழ்ந்த பகுதிகள் மிகவும் ரம்மியமான, ஆன்மிக வாழ்வுக்கான அமைதியான சூழலாக இருப்பதால், பல சித்தர்களும், ரிஷிகளும் வாழ்ந்த தபோவனங்கள் நிறைந்த இடமாக உள்ளது.

    இக்கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய நீரூற்று அதிசயம் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இக்கோவில் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தில் எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

    பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆனால், இத்தலத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்கள் போன்ற அமைப்பு அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும்.

    இந்தப் பகுதியில் வாழ்ந்த கௌதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த கங்கையின் சில துளி விழுந்ததாகவும், அதுவே இங்கு எப்போதும் நீரூற்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்பு வடிவில் இங்குத் தங்கியதாகவும், அதனாலேயே இங்கு மூன்று லிங்கங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

     திரியம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்திலிருந்து திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப்பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது. ஆவுடையார் உரல் போன்று நடுவே பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது.

    உலகம் தோன்றிய காலத்திலிருந்து பக்தர்களுக்கு அருள்புரியும் அருமை பெருமை மிக்க திரியம்பகம் திருத்தலத்தை சென்று தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அவர்கள் செய்யும் தொழில் சிறப்புடன் விளங்குகின்றது. இத்தல இறைவனை வணங்கினால் வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

     மேலும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு, சிம்ம ராசியில் வரும் போது கும்பமேளா பெருவிழா இங்கே கொண்டாடப்படுகின்றது.

    இக்கோவிலில் நடக்கும் அதிசயத்திற்கு ஆன்மிக ரீதியாகப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை அறிவியல் ரீதியாகப் புலப்படவில்லை. அறிவியலால் அறிய முடியாத பல ரகசியங்கள் நம் நாட்டில் பல உண்டு என்பதற்கான ஒரு சிறந்த சான்று இந்த நீரூற்று அபிஷேகம் என்பதில் சந்தேகமில்லை.

  • நந்தியின் வாயிலிருந்து வரும் நீர் – அதிசயம்!

    கர்நாடக மாநிலத்திலுள்ள, மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது “தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோயில்”. இந்த கோயில் 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் வெளிவந்தபடியே இருப்பது பெரும் ஆச்சர்யமாகும். 1997 ஆம் ஆண்டுவரை பூமியின் அடியில் புதையுண்டு இருந்த இந்த கோயில் உள்ளூர் அரசியல் வாதி ஒருவர் கட்டிடம் கட்டுவதற்காக பூமியை தோண்டியபோது எந்த சேதமும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சர்யமிகுந்த தகவலாகும்.

    பொதுவாக மற்ற கோவில்களில் சிவ லிங்கத்திற்கு எதிராக நந்தி தேவரின் சிலை இருக்கும் . ஆனால் இந்த கோவிலில் நந்தி தேவரின் சிலை சிவனின் தலைக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. நந்தி தேவரின் வாயிலிருந்து வழியும் நீர் எப்பொழுதும் சிவபெருமானை குளிர்வித்தபடி இருக்கிறது.

    நந்தியின் வாயிலிருந்து வரும் நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவ பெருமானின் மீது வழிந்த பின் இந்த நீர் அருகிலிருக்கும் குளத்தை சென்றடைவது போல் இந்த கோயிலின் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நந்தியின் வாயிலிருந்து எப்பொழுதும் வழிந்தபடியே இருக்கும் நீர் இந்த குளத்தை சென்றடைந்தாலும் குளத்தின் நீர்மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி ஒரு அடி கூட உயர்வதில்லை இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது எப்படி மர்மமோ அதே போல் எங்கே செல்கிறது என்பதும் இந்த கோயிலின் மற்றொரு அதிசயமாகும்.

    சிவபெருமானை அபிஷேகித்த பின் குளத்தில் சேரும் இந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், இதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

    வாழ்க்கையில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோயிலின் வரிசையில் தட்சிண முக நந்தி கோயிலும் ஒன்றேன்றால் மிகையல்ல.

  • திருப்பரங்குன்ற முருகனுக்கு முக்கனி பூஜை

    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி மாதத்தில் நடைபெறும் ஊஞ்சல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான ஆனி ஊஞ்சல் திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது.

    திருவிழா நடைபெற்ற 10 நாட்கள் தினமும் இரவில் உற்சவர் சன்னதியில் இருந்து திருவாட்சி மண்டபத்திற்கு மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் வலம் வருதலும், திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் முருகப்பெருமான் அமர்ந்து ஊஞ்சலாடல் உற்சவம் நடைபெற்றது

    இந்தநிலையில் நேற்று திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக முக்கனிபூஜை நடைபெற்றது. இதனையொட்டி கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான், துர்க்கை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகீரிஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் படைக்கப்பட்டு மகா பூஜைகள் நடைபெற்றது.

    இதேபோல கோவிலுக்குள் உள்ள அனைத்து சன்னதியிலும், சாமிகளுக்கு முன்பாக முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.