Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • புரட்டாசியில் ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவுக்கான தரிசன டிக்கெட் முன்பதிவு வரும் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது.

    இந்தாண்டு அக்டோபர் 10-ல் துவங்கி அக்டோபர் 18 வரை புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. அக்.18-ல் கருட சேவை நடைபெறுகிறது.

    அக்டோபர் மாதத்துக்கான தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் விடுதி வசதி முன்பதிவு ஜூலை 10-ம் தேதி முதல் துவங்குகிறது.

    முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்து இருக்கிறது.

  • திருநள்ளாறில் குடமுழுக்கு திருப்பணிகள் தீவிரம்….

    திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு, திருப்பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெறும் பாலஸ்தாபன பூஜை நடைபெற்று உள்ளது.

    காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னிதி கொண்டு அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    இக்கோயிலுக்கு 2006-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. மேலும் இக்கோயிலுக்கு சுற்றுக் கோயில்களாக விளங்கும் ஸ்ரீ ஆனந்தவிநாயகர் மற்றும் 4 வீதிகளிலும் அமைந்துள்ள விநாயகர்கள், நளன் குளம் அருகே உள்ள ஸ்ரீ நளன் கலிதீர்த்த விநாயகர், சுரக்குடி ஐயனார் கோயில், ரயில்வே பகுதியில் ஸ்ரீ பிடாரியம்மன், மாரியம்மன் கோயில்களுக்கு 2004-ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.

    இத்திருத்தலங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்டதையொட்டி, திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

    கடந்த மாதம் 22-ஆம் தேதி சுற்றுக் கோயில்களுக்கான பாலஸ்தாபன பூஜை நடைபெற்றது. பிரதான கோயிலாக விளங்கும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் பாலஸ்தாபன பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை முதல் கால பூஜையுடன் தொடங்கியது.

    கோயில் வெளிப் பிராகாரத்தில் ஸ்ரீ சொர்ணகணபதி, ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ பிரணாம்பிகை, ஸ்ரீ சனீஸ்வரர், ஸ்ரீ சண்டிகேசுவரர், ஸ்ரீ நடராஜர், ராஜகோபுரம் என 9 யாக குண்டங்கள் அமைத்து சிவாச்சாரியார்கள் முதல் கால பூஜை செய்தனர். தொடர்ந்து வியாழக்கிழமை காலை 7.30 முதல் 9 மணிக்குள்ளாக 2-ஆம் கால பூஜையாக மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.

    தர்பாரண்யேசுவரர் கோயில் பணிகள் தொடக்கம் அடுத்த 15 நாள்களில் தொடங்கும் எனவும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குடமுழுக்கு செய்யும் திட்டத்தில் பணிகள் முழு வீச்சில் செய்யப்படவுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

  • திருப்பதி கோவிந்தராஜபெருமாள் திருமஞ்சன சேவை

    திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன் கீழ் திருப்பதியில் குடி கொண்டிருக்கும் கோவிந்த ராஜ பெருமாளை சேவிக்க வேண்டும் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்புமிக்க பெருமாள் சயனத் திருக்கோலத்தில் இங்கு சேவை சாதிக்கிறார்.

    திருப்பாற்கடல் காட்சியாக ஆதிசேஷன் மீது. நான்கு திருக்கரங்களுடன் சயனித்திருக்கிறார் கோவிந்தராஜ பெருமாள். திருமலையின் ஏழுமலையான் கோயில் கொள்வதற்கு முன்னரே இவர் திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டதால் இவரை ஏழுமலையானுக்கு அண்ணன் என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். இச் சந்நிதானத்தில் கோவிந்தர் ருக்மிணி, சத்யபாமா, சமேதராக காட்சியளிக்கிறார்.

    கையில் செங்கழுநீர் புஷ்பத்துடன் ஆண்டாள், வித்தியாசமாக கோவிந்தராஜருக்கு வலது பக்கத்தில் வீற்றிருப்பது இக்கோவிலின் சிறப்பு அம்சம். அத்தகைய சிறப்பம்ச மிக்க கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் இன்று திருமஞ்சன சேவை, மற்றும் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

  • அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    இந்த கோவிலில் விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இதையடுத்து அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் வீதி உலா நடை பெறும்.

    இந்த விழா வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலை சாமி வீதியுலாவும், விநாயகர், சந்திரசேகர் வீதியுலாவும் நடக்கிறது.

  • திருச்சானூர் பத்மாவதி தாயார் கருட வாகனத்தில் வீதி உலா

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சுந்தராஜா சுவாமி அவதார உற்சவத்தையொட்டி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுந்தரராஜ சுவாமி கோவிலில் அவதார உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சுந்தராஜா சுவாமி கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    புராண கதையின் படி முகலாயர்கள் காலத்தில் மதுரையில் உள்ள அழகிரி பெருமாள் கோவிலை இடிக்க முயன்றனர். அப்போது அங்குள்ள அர்ச்சகர்கள் சுந்தர்ராஜ சுவாமியை திருச்சானூருக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் 1902 ஆம் ஆண்டு மகந்துகள் காலத்தில் தேவஸ்தான நிர்வாகம் இருந்தபொழுது திருச்சானூரில் சுந்தராஜ சுவாமிக்கு கோவில் கட்டப்பட்டப்பட்டு அதில் மூலவர் சிலை அமைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு உற்சவங்கள் நடத்தப்பட்டு வந்தது. சுந்தராஜ சுவாமி உற்சவர் சிலை மதுரையிலிருந்து ஆனி மாதம் கொண்டு வரப்பட்டதால் உத்திராடம் நட்சத்திரத்தில் முடியும் விதமாக சுந்தராஜ சுவாமி அவதார உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த இரண்டு தினங்களாக சுந்தராஜா சுவாமி அவதாரம் நடைபெற்று வந்தது. கடைசி நாளில் கருட வாகனத்தில் சுந்தராஜா சுவாமி விதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்தார்.

  • ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கில் வீதி உலா

    சம்பந்தர் அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும் விளங்குகிறது இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஓன்றாக இத்திருத்தலம் சிறப்பு பெற்றுள்ளது. இங்கு மூலவர் ரெங்கநாதசுவாமியுடன் அருளாட்சி புரியும் அம்மன், பர்வதவர்த்தினி. இன்று நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின் தங்கப் பல்லக்கில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு வீற்றிருக்கும் அம்பிகையின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் இத்திருத்தலத்தில் இடம்பெற்றுள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம், சேதுபீடமாக வணங்கப்படுகிறது. மேலும் இக்கோவிலில் அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் நடத்தப்படுகிறது. இங்குள்ள அம்மன் இறைவி ‘மலைவளர் காதலி’ என்ற பெயரிலும் போற்றப்படுகிறார். இத்திருப்பெயரை ஞானசம்பந்தர், ‘ஒரு பாகம் மலைவளர் காதலி பாட ஆடிமயக்கா’ என எடுத்து ஆண்டிருக்கிறார். மாசிமாத பிரம்மோற்சவமும், ஆடிமாத அம்மன் உற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் அதே சமயத்தில் அம்மன் தபசும். திருக்கல்யாண உற்சவமும்  நடைபெறுகின்றன.அத்ததைகய சிறப்புமிக்க  பர்வதவர்த்தினி அம்மன் இன்று நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின் தங்கப் பல்லக்கில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கவிருப்பதால் பக்தர்கள் இத்திருத்தலத்தில் பெருமளவு திரண்டிருக்கிறார்கள்.

  • பேரம்பாக்கம் ஸ்ரீ மந்தைவெளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மந்தைவெளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  வேண்டிய வரம் கிடைக்கும் என்பதால் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் , உலகில் பல அவதாரங்களாகி சக்தி உருவமாய் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீமந்தைவெளியம்மன் அம்பிகைக்கு புனராவர்தன ஜூர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.  முன்னதாக நேற்று அம்மன் கரிகோலம் மற்றும் வீதி உலாவும், அதனைத் தொடர்ந்து கணபதி பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, சக்தி ஹோமமும் நடைபெற்றது. அதே போல் இரவு அம்மனுக்கு நேத்திரபூஜை, பிரம்மச்சாரி பூஜையும், கன்னி பூஜையும் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து இன்று காலை சண்டி ஹோமம் மற்றும் மஹா லஷ்மி ஹோமம், தம்பதியர் யாகமும் நடைபெற்றது. அதனையடுத்து ஹோமம் செய்த  கலசத்தை கோயில் நிர்வாகிகள் எடுத்துவர, கலசத்தில் உள்ள புனித நீரை விமான கோபுரத்தில் ஊற்றினர். அப்போது கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.  கலசத்தில் கொண்டு வந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் பேரம்பாக்கம், மப்பேடு,கொண்டஞ்சேரி, சத்தரை, வேப்பஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

  • எண்ணிய காரியம் ஈடேற சாய் விரதம்

    ஸ்ரீ சாய் பாபா தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஆருளும் ஆசியும் வழங்குகிறார். அந்த மகானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளில் காலையிலோ அல்லது மாலையிலோ வீட்டிலிருக்கும் பாபாவின் படத்திற்கு வாசைனை மிகுந்த மலர்களை சூட்டி, கற்கண்டு, பழங்கள், இனிப்புகளை படைத்து பிரசாதமாக வழங்க வேண்டும். அன்றைய ஆகாரமாக பழ, திரவிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்ய இயலாதவர்கள் ஏதாவது ஒருவேளை உணவு அருந்துதல் போதுமானது. நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இல்லாமல் மேற்கொண்டவாறு விரதமிருக்கலாம் வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தியுடன் கடைபிடிக்கலாம். தொடர்ந்து இது போன்று ஒன்பது வியாழக்கிழமை விரதமிருந்து கடைசி வாரமான அன்று குறைந்தளவு ஐந்து ஏழைகளுக்கு உணவளித்தல் வேண்டும். இவ்வாறு விரதம் இருக்கும் நாட்களில் “ஓம் ஸ்ரீ சாய் பக்த ரக்ஷாய் நமஹ” என்னும் சாய்பாபாவிற்குரிய இம் மந்திரத்தை உங்களால் முடிந்தபோதெல்லாம் 1008 முறை ஜெபித்து வந்தால், எண்ணிய காரியம் ஈடேறும் கருணைக்கடலான பாபாவின் ஆசியால் துன்பம் விலகி சகல சந்தோஷங்கள் பெருகும்.

  • பன்னிரெண்டாவது பதிணெண்சித்தர் கூறிய ஆலய பிரகாரத்தை சுற்றும் முறைகள்

    சிவபெருமானுடைய பிராகரத்தை இடமிருந்து வலமாக ஜந்து முறை சுற்றி வர வேண்டும்

    விநாயகர், முருகன், அய்யனார், கருப்பன்னசாமி முதலியவர்களுக்கு இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றி வர வேண்டும்

    திருமால், குபேரன் பிரகாரங்களை இடமிருந்து வலமாக நான்கு முறை சுற்றி வர வேண்டும்

    சனீஸ்வரன், சூரியன், சந்திரன், பைரவர், பலி பீடம், கொடிமரம் முதலியவர்களை இடமிருந்து வலமாக ஏழு முறை சுற்றி வர வேண்டும்.

    பறவை, விலங்கினங்கள் சமாதுகளை வலமிருந்து இடமாக நான்கு முறைச்சுற்றி வர வேண்டும்

    துறவிகள் சமாதுகளை வலமிருந்து இடமாக ஏழு முறை சுற்றி வர வேண்டும்.

    இல்லறத்தார் சமாதை வலமிருந்து இடமாக ஒன்பது முறைச்சுற்றி வர வேண்டும்.

    பசுக்களை வலமிருந்து இடமாக மூன்று முறைச்சுற்றி வர வேண்டும்

    பூசையில்லாத அல்லது பாழடைந்த கோவில்களை வலமிருந்து இடமாக மூன்று முறைச்சுற்றி வர வேண்டும்.

    ஆசி வழங்கக் கூடிய குருவை, அருளார்களை வலமிருந்து இடமாக பதினெட்டு முறைச்சுற்றி வர வேண்டும். ஒவ்வொரு முறையும் அவரது பாதம் தொட்டு வணங்க வேண்டும்.

    குறிப்பு: (நீங்கள் அவர்களைப் பார்த்து முன்னால் நிற்கும்போது, உங்களின் இடதுகை, வலதுகை அடிப்படையில் தான் இடப்புறம், வலப்புறம் கையாளப்பட வேண்டும்.)

     

  • இடையூறுகளை நீக்கும் இஷ்ட தெய்வங்கள்

    மனிதர்களுக்கு ஏற்படும் எண்ணற்ற இடையூறுகளைப் போக்குவதற்கு குறிப்பிட்ட பரிகாரங்கள் இருப்பது போல குறிப்பிட்ட தெய்வங்களை போற்றி வணங்கினால் எப்பேர்ப்பட்ட இன்னல்களும் வந்த இடம் தெரியாமல் அழிவதோடு பூரண ஆரோக்கியமும், நிறைந்த செல்வமும் வளமான வாழ்வும் பெறலாம் என்பது பெரியோர் உரைத்த உண்மை. இவற்றை பயபக்தியுடன் பின்பற்றினால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

    விக்னங்கள் இடையூறுகள் நீங்குவதற்கு வணங்க வேண்டிய கடவுள்- சித்தி விநாயகர்.

    செல்வம் சேர- ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ லட்சுமிநாராயணர், ஸ்ரீ வரலட்சுமி.

    நோய் தீர ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணாமூர்த்தி.

    வீடும், நிலமும் பெற -செவ்வாய் பகவான், ஸ்ரீ சுப்பிரமணியர்.

    ஆயுள், ஆரோக்கியம் பெற-ருத்திரன்.

    மனவலிமை, உடல்வலிமை பெற -ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்.

    கல்வியில் சிறந்து விளங்க-ஸ்ரீ சரஸ்வதி தேவி.

    திருமணம் நடைபெற- ஸ்ரீ காஞ்சிகாமாட்சி அம்மன், துர்க்கை அம்மன்
    .
    மாங்கல்யம் நிலைக்க- மங்கள கெளரி.

    புத்திர பாக்கியம் பெற- சந்தான லட்சுமி, சந்தான கிருஷ்ணன்.

    தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வேங்கடாசலபதி.

    புதிய தொழில் துவங்க- ஸ்ரீ கஜலட்சுமி.

    விவசாயம் தழைக்க-ஸ்ரீ தான்ய லட்சுமி.

    சாப்பாடு கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி.

    வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்.

    சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐயப்பன்.

    பகைவர் தொல்லை நீங்க- திருசெந்தூர் முருகன், சஷ்டி விரதம் மேற்கொள்ளுதல்.
    பில்லி சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, சக்கரத்தாழ்வார், ஸ்ரீ நரசிம்மர்.

    திருஷ்டி விலக- ஸ்ரீ முத்துமாரி.

    அழியாச் செல்வமும், ஞானமும், சக்தியும் பெற- சிவ ஸ்துதி போற்ற வேண்டும்.