Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • புண்ணியத் தீர்த்தங்களில் நீராடும் முறைகள்!

    புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் முன்னர் கவனிக்க வேண்டியது. தண்ணீர் அருகில் சென்றவுடன் காலை வைக்காமல். கரையில் நின்றவாறு, குனிந்து வலதுகையில் சிறிது தண்ணீரை அள்ளி எடுத்து, கடவுளை நினைத்து வணங்கி பிரார்த்தனை செய்து பின், தலையில் முதலில் தெளித்துக் கொள்ள வேண்டும். முதலில் வலதுகாலை எடுத்து வைத்து தண்ணீருக்குள் இறங்கிக் குளிக்க வேண்டும். தீர்த்தங்களில் குளிக்கும்போது, மேலாடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் குளிக்கவே கூடாது, தலையை நனைக்காமல் குளித்து வரக்கூடாது. தலையும், உடலும் நனையும்படி மூழ்கிக் குளித்து எழ வேண்டும்.

    தண்ணீரில் எச்சில் உமிழ்வது, சிறுநீர் கழிப்பது போன்ற அசுத்த காரியங்களை செய்ய கூடாது. இந்தத் தவறுகளைச் செய்வதால் எந்தவித புண்ணிய பலனும் கிடைக்காது. குளத்திற்குள் குளித்துவிட்டு, உடுத்திய ஆடைகளையே களைந்து, உள்ளே போடக் கூடாது. கற்களை எடுத்துத் தண்ணீருக்குள் வீசக் கூடாது. முடிந்த வரையில் தண்ணீரை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும். அதுவே புண்ணிய பலன் பெற வழி வகுக்கும்.

    முதலில் காசிக்குச் சென்று நீராடியவர்கள், கடைசியில் இராமேஸ்வர சென்றும் கடலில் நீராடி இறைவனைத் தொழ வேண்டும். அப்போழுது தான் பக்தர்கள் மேற்கொண்ட புண்ணிய தீர்த்த யாத்திரைப் பயணம் முழுமை பெறும் என்பது ஐதீகம். கங்கை தீர்த்தத்துடன், இராமேஸ்வரம் தீர்த்தத்தையும் கலந்து புனித நாட்களில் வீட்டைக் கழுவி சுத்தம் செய்த பின் தெளித்தால், வீட்டில் தெய்வீக அருளும் இறைவனின் அனுக்கிரகமும் கிடைக்கும்.

  • புத்திர பிராப்தி அருளும் குருந்தை மலை முருகன்!

    கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் பாதையில் 28 கி.மீ. தொலைவிலுள்ள காரமடையிலிந்து அத்திக்கடவு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. குருந்தை மலை முருகன் கோவில். இத்திருக்கோவிலில் முருகப்பெருமான் குழந்தை வேலாயுதசாமியாக காட்சியளிக்கிறார்.650 வருடங்கள் பழமையான இக்கோவிலில் உள்ள முருகன் பழனி கடவுள் போல மேற்கு திசையை நோக்கி காட்சியளிக்கிறார். இம்மலைக்கு தெற்கே சஞ்சீவ மலையும், வடக்கே பகாசுரன் மலையும் உள்ளன. கீழே ஆரவல்லி, சூரவல்லி வசித்த கோட்டைகள் உள்ளன. இம்மலையின் அடிவாரத்தில் கம்பீர தோற்றத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்து இடும்பன் சன்னதியும், நாக தீர்த்தம், மயில் தீர்த்தம் உள்ளன. ஸ்தல விருட்சமாக குருந்த மரம் இருப்பதால் இம் மலையில் வாழும் முருகனுக்கு குருந்த மலை முருகன் என்று பெயர் வந்தது. இத்திருத்தலத்தில் அகஸ்தியர், அனந்தன் என்ற சர்ப்பம் சூரியன் வணங்கி, முருகனின் அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

    இக்கோவிலின் எதிரே கஜபுஷ்கரணி உள்ளது மற்றும் அனுமன் சுனை, அனுமன் கோயில் உள்ளது.அனுமன் மலையை தாவும் பொழுது, இங்கு ஒரு காலும், மற்றொரு மலையான சஞ்சீவி மலையிலும் ஒரு கால் வைத்ததாக ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பிராப்தி கிடைக்கும் என்பது இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

  • பிரதோஷ வழிபாட்டின் மூலம் அடையும் பலன்கள்

    சுக்கிலபட்சம், கிருஷ்ணபட்சம் என்ற இரண்டு பட்சத்திலும் வருகின்ற திரயோதசி திதியில் சூரியன்அஸ்தமனத்துக்கு முன்னதாக ஓன்னரை மணி நேரம். அஸ்தமனத்துக்கு பின்னதாக ஓன்னரை மணி நேரமுமே. பிரதோஷம் எனப்படும்.

    மாலை 4-30 மணி முதல் 7-30 மணி வரையில் நட்சத்திரங்கள் உதயமாகும் காலம் வரை சிவபெருமான், நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடனம் ஆடுகிறார். இந்த நேரத்தில் சுவாமியைத் தரிசனம் செய்து, பிரதட்சணம் செய்தால், ஒரு சுற்றுக்கு ஒரு கோடி சுற்றிய பலன் கிடைக்கும். திங்கட்கிழமை, சனிக்கிழமை வரும் பிரதோஷங்களில் சிவனை வழிபடுவது அதிகமான பலனைத் தரும். நந்தியின் பின்னால் நின்று, அதன் கொம்புகளுக்கிடையில் சிவலிங்கத்தைத் தரிசிக்க வேண்டும். ஒருவர் தன் வாழ்நாளில் 120 பிரதோஷங்கள் சிவனை வழிபட்டால், அவருக்கு மறுபிறவி என்பதே இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. பிரதோஷம் அன்று சிவன் கோயிலுக்குச் செல்வதால் தீமைகள் விலகி வாழ்வில் வளம் பெற்று, நன்மைகள் பெறலாம்.

  • திருவண்ணாமலை சிவபெருமான் திருத்தேர் பவனி

    சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலத்தில் இன்று (10-07-2018) சிவப்பெருமான் திருத்தேரில் பவனியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    தல வரலாறு

    பிரம்மனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார்அவருடைய அடியைத் தேடி திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்துச் சென்றார். பிரம்மா சிவபெருமானின் முடியைத் தேடி அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும் நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்ஆகியோர் தேவாரம் பதிகங்களை இத்திருத்தலத்தில் பாடியுள்ளார்கள்.என்பது இக்கோவிலில் மேலும் சிறப்பானதாக கருதப்படுகிறது.சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் உள்ள மலையே சிவலிங்கமாக இங்கு வரும் பக்தர்கள் வணங்கி வருகின்றார்கள். மேலும் இச்சந்நிதானத்தில் உண்ணாமலையம்மை. முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்கம் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    இத்திருத்தலத்தில் ஆனி மாத பிரம்மோற்சவம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த பிரம்மோற்சவம் தட்சணாயன பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது.கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிசஷக ஆராதனையும் பராசக்தியம்மன், விநாயகர், சந்திரசேகரர் சாமிகளுக்கு பூஜைகளும் செய்யப்படுகின்றன.அதன்படி முக்கிய நிகழ்வான இன்று (10-07-2018) சிவப்பெருமான் திருத்தேரில் பவனியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

     

  • மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு

    வைணவ திருத்தலங்களில் சிறப்புமிக்க ஒன்றாக போற்றப்படுவது மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில். இக்கோவிலில் வீற்றிருக்கும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக கருதப்படுகிறார். இத்திருக்கோயில் 6 கோபுரங்களுடன், 7 தூண்கள், 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்களால் அமைந்துள்ளது.

    இத்திருத்தலத்தில் மூலவராக ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, செண்பக லெட்சுமி தாயாருடன் காட்சியளிக்கிறார். இக்கோவில் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், பெயர்பெற்றதாக இத்தல வரலாறு கூறுகிறது. மேலும் இந்தத் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் அன்று அம்பாள் திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் தமிழகத்திலேயே, இரு வைணவத் திருத்தலங்களில் அம்பாள் திருத்தேர் உலா வருவார். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில். மற்றொன்று, மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில். மேலும் சன்னதியின் உள்ளிருந்தே திருத்தேர் பவனி வருவது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.அத்தகைய சிறப்புமிக்க இத்திருத்தலத்தில் இன்று (10-07-2018) ராஜகோபால சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகைபுரிந்துள்ளனர்.

  • சனி தோஷங்கள் விலக்கும் பெருமாள் கோயில்

    கரூர் மாவட்டம் பாளையம் அருகே உள்ளது தேவர்மலை. இரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மரின் கோபம் தணிந்த இடம் இது. இங்கே, `ஶ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள்’ என்ற பெயரில் காட்சிதருகிறார் பெருமாள்.

    ஶ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில் பெரிய கதவுகளுடன், கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட பிரம்மாண்ட நுழைவாயிலைக் கடந்து சென்றால், இருபுறமும் பெரிய திண்ணை அமைந்திருக்கிறது. கோயிலில் மொத்தம் மூன்று ஸ்தூபிகள். ஒன்று வெளிப்புறத்திலும், மற்ற இரண்டும் உள்ளேயும் இருக்கின்றன. நுழைவாயிலுக்கு வலப்புறத்தில் ஒரு மண்டபம் இருக்கிறது.

    செம்புத் தகட்டால் வேயப்பட்ட உயர்ந்த கொடிமரத்தைக் கடந்து சென்றால், மூலவர் சந்நிதியில் ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மூலஸ்தானத்தின் அருகிலிருக்கும் மற்றொரு சந்நிதியில் கமலவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    “இரண்யனை சம்ஹாரம் செய்த பின்னரும் சினம் தணியாமல் சீறி அலைந்த ஸ்ரீநரசிம்மரை, தேவர்கள் இங்கே ஆசுவாசப்படுத்தி அமரவைத்து, ‘மோட்ச தீர்த்தம்’ ஏற்படுத்தி, திருமஞ்சனம் செய்து சினம் தணித்தார்கள்.

    ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் மோட்ச தீர்த்தம்

    மோட்ச தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால், சனி பகவான் தொடர்பான தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம். ஒரு காலத்தில் இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி எழுவதற்குப் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரளுவார்கள். இப்போதோ மோட்ச தீர்த்தத்தில் தண்ணீர்வரத்து அவ்வளவாக இல்லை. பக்தர்கள் அதிகம் வராததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.
    தேவர்மலைச் சுற்று வட்டாரத்திலிருக்கும் எந்தக் கோயிலிலோ, வீட்டிலோ விசேஷம் என்றால், இந்த நரசிங்கர் ஆலயத்துக்கு வந்து அவரை வழிபட்டு, ‘மோட்ச தீர்த்த’த்திலிருந்து புனித நீர் எடுத்துச் செல்வது வழக்கம்.
    ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலைச் சுற்றிலும், சுண்ணாம்புப் பாறைக் கற்கள் காணக்கிடைக்கின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள், அந்தக் கற்களை உரசி, நாமம் போட்டுக்கொள்கிறார்கள்.

    சினம் தணிந்த சாந்த ஸ்வரூபியாக அருளும் ஶ்ரீகதிர் நரசிங்கப் பெருமாளை தரிசித்து வழிபட்டால் மனதில் கோபம் என்பதே ஏற்படாது என்பது ஐதீகம்.

  • திருமண பாக்கியம் அருளும் அருள்மிகு எல்லையம்மன்

    சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ முதலி தெருவில் உள்ளது சுமார் 200 வருடங்கள் பழமையான அருள்மிகு எல்லையம்மன் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி ஆலயம். இத்திருத்தலத்தின் நுழையும் பொழுதே விநாயகர், ராஜராஜேஸ்வரி அல்லி தர்பார், கையலங்கரி, முருகன் பார்வதியிடம் வேல் வாங்குதல், நால்வர் நடராஜர் முதலிய கதை சிற்பங்கள் உள்ளன. இத்திருத்தலத்தின் வலது பக்கம் விநாயகப் பெருமான் காட்சியளிக்கிறார். கருவறையின் மேலே அழகான விமானம். இங்கு குடிகொண்டிருக்கும் அம்மன் கிழக்கு பார்த்து அமர்ந்துள்ளார்.வலது கால் கீழே இருக்க இடது கால் மடிந்து அமர்ந்த கோலத்தில் அம்பாள் காட்சியளிக்கிறாள். இக்கோவிலின் ஒரு அதிசயமாக அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆகிய நால்வருக்கும் ஒரு தனி மண்டபத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்கள்.

    இக்கோவிலில் சித்திரா பௌர்ணமி விசேஷ நாட்களில் 102 குடங்களில் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெறும். வைகாசி மாத விழாவின் போது 1008 இளநீர் அபிஷேகம் நடைபெறும். ஆடி மாத பூச்சொரிதல் விழாவும் இங்கு பிரசிதம். மேலும் இக்கோவிலின் சிறப்பம்சமாக திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் 11 வாரம் செவ்வாய் அல்லது வெள்ளி அன்று ராகு காலத்தில் எலுமிச்சை மூடி விளக்கு ஏற்ற திருமணத் தடைகள் நீங்கும்.

     

  • ருத்ராட்சத்தின் மகிமைகள்!

    ஐந்து ருத்ராட்சக் காய்களை செப்புப் பாத்திரத்தில் அரை லிட்டர் சுத்தமான நீரில் போட்டு, அதனுடன் ஐந்து வில்வ இலைகளையும் போட்டு, இரவு முழுதும் ஊற வைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்நீரைக் குடிக்க வேண்டும். அப்படி 48 நாட்கள் குடித்து அதில் உள்ள வில்வ இலைகளை சாப்பிட்டு வந்தால், இதயம் சம்பந்தமான அனைத்து நோய்களும், நீரழிவு, மன உளைச்சல், அதிர்ச்சி முதலியவை நீங்கும்.

    விஷப் பூச்சிகள் தீண்டும் நேரத்தில் ருத்ராட்சத்தை எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றில் இழைத்து கடிவாயில் பூசினால் வலி குறையும்.விஷம் இறங்கும். மேலும் ருத்திராட்சத்தை ஊற வைத்த நீர் நரம்புத் தளர்ச்சி, மூட்டு வலி, இரத்தசோகை போன்றவற்றை போக்கும். ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டால், நினைவு ஆற்றல் பெருகும். ருத்ராட்சத்தினை தனியாக அணியாமல் ஏதேனும் உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் மிகவும் சிறப்பு.

    ருத்ராட்ச மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளாத காலத்தில் விபூதியில் வைக்க வேண்டும். இறந்தவர் வீட்டுக்குச் சென்று கலந்து கொள்ளும் காலத்தில் ருத்திராட்ச மாலையை கழட்டி வீட்டில் வைத்து விட்டுச் செல்வது நல்லது.

  • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு

    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக் கொட்டு திருவிழா வரும் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    ஆடிப்பட்டம் தேடி விதை என்ற ஆன்றோர் வாக்கின்படி தமிழக விவசாயிகள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற் கொள்வார்கள். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச் சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வருகின்ற திருவிழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள திருவிழாக்கள் நான்காகும். அவை ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியனவாகும்.

    இதில் ஆடி முளைக் கொட்டு திருவிழாவில் அம்மன் சன்னதி முன்னுள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    அப்போது மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித் வான் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருவார்கள்.

    நாதஸ்வர கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டு அம்மனை சேர்த்தி சேர்பர். 7-ம் நாள் அன்று இரவு திருவீதி உலா முடிந்த பின் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும். விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்கவும் வகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே ஆடி முளைக்கொட்டு திருவிழா வாகும்.

  • தீபங்களில் ஏற்றும் எண்ணெய்யின் பலன்கள்

    பசுவின் நெய் :- செல்வம் பெருகும், அஷ்டலெட்சுமிக்கு உரிய எண்ணெய் என்பதால் வளம் கொழிக்கும்.

    நீரடிமுத்து எண்ணெய்:- பிரச்சனைகளை நீக்கும். கேதுவிற்கு உரிய என்பதால் கேது தோஷங்கள் தீரும்.

    வேம்பு எண்ணெய்:- மகிஷாசுரமர்த்தினிக்கு உரியது. பிறரின் துர்பார்வை நீக்கும், எதிரிகளின் தொல்லை போக்கும்.

    இலுப்பை எண்ணெய்:- புவனேஸ்வரி அன்னைக்கு உரியது. தன தானியங்கள் பெருகும்.

    புங்கை எண்ணெய்:- திருமணத் தடைகளை நிவர்த்தி செய்யும், சர்ப்ப தோஷம் விலகும். நாகதேவதைக்கு உரியது.

    சந்தனாதி எண்ணெய்:- குபேர செல்வங்களையும், சகல சம்பத்துக்களையும் தரும்.

    ஆமணக்கு எண்ணெய்:- தட்சணாமூர்த்திக்கு உரியது. இல்லத்தில் அமைதியும் இறைவனின் அருளும் கிடைக்கும்.

    குறிப்பு:-வீட்டில் விளக்கேற்றி இறைவனை வணங்கும்போது குத்து விளக்கில் ஐந்து முகம் ஏற்றி வணங்கினால் இறைவனின் பூரண ஆசி கிடைக்கும்.