Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • வணிகர்களுக்கு ஏற்றம் தரும் திருப்பயற்றுநாதர்!

    திருவாரூர் – திருமகல் பேருந்து வழித்தடத்தில் வடகிழக்கே 12 கி.மீ தொலைவில் திருப்பயத்தங்குடி அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் திருப்பயற்றுநாதர் மூலவராக வீற்றிருக்கிறார். உடன் தாயார் காவியக்கண்ணியும் காட்சியளிக்கிறார். சிலந்தி மரத்தைத் தலமரமாகக் கொண்ட இத்திருத்தலத்தில் தட்சிணாமூர்த்தியின் இருபுறமும் இரு முனிவர் வடிவங்களும் அவர்களுக்கு மேலே இரு பெண்கள் வடிவங்களும் அமைந்துள்ளன. மேலும் சித்தி விநாயகர், மற்றும் முருகன் வள்ளி தெய்வானையுடன் சமேதராக இத்திருத்தலத்தில் காட்சியளிக்கிறார்.

    தல வரலாறு : சிவனடியாரான வணிகர் ஒருவர் மிளகு முட்டைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு திருப்பயத்தங்குடி வழியாக வந்துகொண்டிருந்தபோது சங்கச்சாவடியில் அரசின் ஆணைப்படி மிளகு மூட்டைகளுக்கு அதிக வரியும், மற்றப் பொருள்களுக்கு வரிச்சலுகைகளும் தரப்பட்டிருப்பதை அறிந்தார். சுங்கவரி செலுத்தினால் தமக்கு பேரிழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த வணிகர் மிளகு மூட்டைகளை பயிறு மூட்டைகளாக மாற்றி சுங்கச்சாவடி கடந்த பின் மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றித் தரவேண்டும் என சிவனிடம் வேண்டினார். பக்தனின் பிரார்த்தனைக் கேட்ப சிவனும் அவ்வாறே செய்தார். எனவே மிளகை பயிறாய் மாற்றியதால் இத்திருத்தலத்திற்கு திருப்பயிற்றூர் என பெயர் பெற்றது. திருப்பயிற்றூரே இன்று திருப்பயத்தங்குடி என வழங்கப்படுகிறது.

    இத்திருக்கோயில் வைகாசி, விசாகம், ஆனித் திருமஞ்சனம் அடி வெள்ளி, நவராத்திரி, கார்த்திகை போன்ற விசேஷ நாட்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும் மேலும் இத்தலம் வியாபார வளர்ச்சிக்கு உகந்த தலமாக விளங்குவதால், வணிகர்களுக்கு ஏற்றம் தரும் தலமாகத் திகழ்கின்றது.

  • ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வடை மாலை சாத்துவது ஏன்?

    வெண்ணெய் சாத்தி ஆஞ்நேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராம நாம ஜெபத்தால் அவர் உள்ளம் உருகுகிறார்.

    வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்களத்திலே வீர அனுமன் பாறைகளையும், மலைகளையும் பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம்.

    போர்களத்தில் கொழுப்பு நிறைந்த அரக்கர்களையும், தமது உடல் வலிமையால் வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தை சேர்த்து அவருக்கு வடை மாலை செய்து சாத்துகின்றனர்.

    சீதாதேவி பரிசாக வழங்கிய முத்து மாலையை சுவைத்து அதில் ராமசுகம் உள்ளதா என்று பார்த்து பிய்ந்து எறிந்தவர் அனுமான். அதுபோலவே கழுத்தில் அணிவிக்கப்பட்ட வடை மாலையையும் அவர் சுவைத்து பார்ப்பதாக ஐதீகம்.

  • செல்வம், ஆயுள், ஆரோக்கியம் தரும் சனிக்கிழமை விரதம்

    நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று. இந்த விரதத்தை அனுஷ்டிக்க பெரிய அளவுக்கு காசு, பணம் தேவையில்லை. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள்.

    தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. இப்போதும் திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.

  • இறை வழிபாட்டிற்கு உகந்த மலர்கள்!

    இறை வழிபாட்டின்போது ஒவ்வொரு கடவுளுக்கும் ஏற்ற மலர்களை வைத்து வணங்கவேண்டும். அவ்வாறு அந்த மலர்களை வணங்குவதற்குப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

    சிவப்பு அரளி – குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

    செவ்வந்தி  – குருகிரகப் பீடை நீங்கி சுபிட்ஷம் பெருகும்.

    நீலச்சங்கு மலர் – சனி பகவானின் ஆசி கிடைக்கும்.

    வெண்தாமரை – அமைதியான வாழ்வை ஏற்படுத்தித் தரும்.

    செந்தாமரை – செல்வம் ஆயுள் மற்றும் ஆரிய பகவானின் அருள் கிடைக்கச் செய்யும்.

    பொன் அரளி – பெண்களின் திருமணப் பிரச்சனையை போக்கும்.

    மஞ்சள் அரளி – கடன் பிரச்சனைகளை நீக்கும்.

    ரோஜாப்பூ – உடலுக்கும் உள்ளத்திற்கும் பலத்தை ஏற்படுத்தித் தரும்.

    பாரிஜாதம் – பக்தியையும், அல்லிப்பூ அதிர்ஷ்டத்தையும் வழங்கும்

    மல்லிகை – கண் பார்வையைக் குணப்படுத்தும்.

  • கோதண்டராம சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா

    ராமநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோதண்டராம சுவாமி திருக்கோவில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குட்பட்ட இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாப்படும்.அதன்படி நேற்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகியது. தொடர்ந்து தினசரி இரவு கோதண்டராம சுவாமி வெவ்வேறு வாகனங்களில்அலங்காரமாக எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வரவுள்ளார். அதன்படி இன்று கோதண்டராமசுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த நிகழ்ச்சியை கண்டு கோதண்டராமசுவாமி அருள்பெறுவதற்கு திரளான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்.

  • முற்பிறவிக் கடன்களைத் தீர்க்கும் ரிணவிமோசனர்!

    தமிழகத்து ஆலயங்கள் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு தனிச்சிறப்புகள் உண்டு. அந்த வகையில், கடன் தொல்லை தீர்க்கும் தலமாகத் திகழ்வது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சேறை செந்நெறியப்பர் சிவாலயமாகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தென்கரைத்தலங்களுள் ஒன்றாக, இச் சிவாலாயம் விளங்குகிறது.

    மனிதனுக்குச் செம்மை தரும் நெறியை முத்திநெறியை அளிக்கும் தலமாக விளங்குவதால், இறைவனுக்குச் செந்நெறியப்பர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும் முற்பிறவிக் கடன் தீர்க்கும் தேவாரத்தலமாகவும் விளங்குகிறது.கடன் பிரச்சனையை போக்கும் ரிணவிமோசனர் வாழும் தலமாகவும் இக்கோவில் போற்றப்படுகிறது.இக்கோவிலில் மூலவராக ரிணவிமோசனர் அருள்பாலிக்கிறார். மேலும் எந்தச் சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக இங்குள்ள பைரவர் தனது இடது மேல்கரத்தில் சூலம் போட்ட மணியுடன் காட்சி தருகின்றார். மேலும் சிவதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்னும் மூவகை தேவியர்கள் இத்திருத்லத்தில் வீற்றிருக்கிறார்கள். மேலும் ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தர்சஷ்டி, பிரதோஷம் போன்ற சிறப்பு நாட்களில் இங்குள்ள மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். எண்ணற்ற சிறப்பம்சமுள்ள இத்திருத்லத்திற்கு பக்தர்கள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

  • ஸ்ரீ காயத்ரி அஷ்டோத்ரம் (108 அம்மன் போற்றி)

    ஸ்ரீ காயத்ரி அஷ்டோத்ரம் (108 அம்மன் போற்றி)

    ஓம் ஸ்ரீம் உலக நாயகியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பிரபஞ்ச நாயகியே போற்றி
    ஓம் ஸ்ரீம் தேவமாதவே போற்றி
    ஓம் ஸ்ரீம் திகம்பரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் திவ்ய சொருபிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பஞ்ச முகியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பராசக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பார்வதி தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மீனாட்சி அம்மையே போற்றி
    ஓம் ஸ்ரீம் காமாட்சி அம்மையே போற்றி
    ஓம் ஸ்ரீம் விசாலாட்சி தாயே போற்றி
    ஓம் ஸ்ரீம் கர்ப்ப ரட்ச அம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் காத்தாயம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் கருமாரி அம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் சமயபுரத் தாயே போற்றி
    ஓம் ஸ்ரீம் முத்து மாரி அம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் தில்லை மாகாளியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மதுரை மாகாளியே போற்றி
    ஓம் ஸ்ரீம் நடன காளியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கால ரூபிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் அகில அண்ட ஈஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கன்யா குமாரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பானுமதியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வக்ர காளியே போற்றி
    ஓம் ஸ்ரீம் அபிராமித் தாயே போற்றி
    ஓம் ஸ்ரீம் ராஜ ராஜேஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் புவனேஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ப்ராம்மண்யே போற்றி
    ஓம் ஸ்ரீம் கௌமாரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வாராகியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சித்தா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வைஷ்ணவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மகேந்திரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சாமுண்டீஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மகேஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் குண்டாலினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பாலாம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் மூகாம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் பாகவதியம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸ்ர்வ காமினீ போற்றி
    ஓம் ஸ்ரீம் விலாசினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் விஸ்வமாயா போற்றி
    ஓம் ஸ்ரீம் விஷ்ணு துர்கையே போற்றி
    ஓம் ஸ்ரீம் சிவ துர்கையே போற்றி
    ஓம் ஸ்ரீம் பிரம்ம துர்கையே போற்றி
    ஓம் ஸ்ரீம் மகிஷாஸுர மர்த்தினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கால சம்ஹாரிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் முக்கண்ணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பிரம்ம சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் விஷ்ணு சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சிவ சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் இச்சா சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கிரியா சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஞான சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் நாத சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் விந்து சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ப்ரணவ சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் நந்தினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஆதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் அன்னலட்சுமியெ போற்றி
    ஓம் ஸ்ரீம் தனலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வித்யாலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சந்தானலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் தைர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வைராக்கியலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஜயலட்சுமியெ போற்றி
    ஓம் ஸ்ரீம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் குபேரலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஐஸ்வர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மோகனலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ரட்சகலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சித்தலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சாரதாம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸரஸ்வதி தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸப்த ஸ்வர ரூபினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸ்ரீ வித்யா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கலைவாணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சகல கலா வல்லியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வாக்தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் நாமகளே போற்றி
    ஓம் ஸ்ரீம் வேத ரூபினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வேதாந்தமுடிவே போற்றி
    ஓம் ஸ்ரீம் மந்த்ர ரூபிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸ்ரீ தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பூ தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் அன்ன வாகினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சிம்மவாகினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மாங்காளியம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் சாந்தா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கங்கா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் யமுனா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பாகிரதியே போற்றி
    ஓம் ஸ்ரீம் காவிரித் தாயே போற்றி
    ஓம் ஸ்ரீம் கர்பக விருட்சமே போற்றி
    ஓம் ஸ்ரீம் காமதேனுவே போற்றி
    ஓம் ஸ்ரீம் சிந்தாமணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மனோன்மணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சத்ய ரூபிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஜகன் மாதாலலிதாம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் சாவித்ரி தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் காயத்ரி மாதாவே போற்றி
    ஓம் ஸர்வ மங்கள சம்பூர்ண மகாதேவிக்கு அஷ்டோத்ர சதநாம அர்ச்சனை ஸமர்ப்பயாமி
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • நோய் தீர்க்கும் நெல்லை மாகாளி….

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் வடமேற்கு முனையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பிட்டாபுரத்தி அன்னையை, ‘வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி’ என்றும் அழைக்கிறார்கள்.

    கோவிலுக்குள் நுழைந்ததும் சிறிய பலி பீடமும், கொடிமரமும், பெரிய பலிபீடமும் உள்ளது. அதைத் தொடர்ந்து வடக்கு முகமாக அனுக்ஞை விநாயகரும், வடமேற்கு முனையில் கிழக்கு முகமாக அகோர விநாயகரும் காட்சி தருகிறார்கள். இதனையடுத்து மகா மண்டபம் உள்ளது. இங்கு நின்றுதான் அம்மனை வழிபட வேண்டும்.

    இங்குள்ள அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக் கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள். இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.

    அம்மனை கருவறையை அடுத்து அர்த்த மண்ட பமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில்(பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள். இந்த எழிற்கோலத்தினை தசரா அன்று காணலாம்.

    இந்த அன்னைக்கு நடைபெறும் இரு நேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். அம்மனுக்கு பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த பிட்டை இக்கோவிலில் பூஜை செய்து வரும் பல்லவராயர் வகுப்பை சேர்ந்தவர்கள், கோவிலிலேயே தயார் செய்து அம்மனுக்கு படைத்து வருகிறார்கள்.

    அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் ஒப்பனையில் (அலங்காரத்தில்) ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.

    மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.

    வைகாசி பெருவிழா, புரட்டாசி தசரா திருவிழா, தை அமாவாசை, பங்குனி மாதம் நடைபெறும் ஆண்டு திருமுழுக்கு ஆகிய திருவிழாக்கள் இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது.

  • தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா

    தஞ்சை பெரியகோவிலில் கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இதில் வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா கணபதிஹோமத்துடன் தொடங்கி உள்ளது.

    தொடர்ந்து சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. யாகம் முடிந்ததும் வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலையில் யாகமும், மாலையில் அம்மனுக்கு அலங்காரமும் நடைபெறுகிறது. இன்று 2-ம் நாள் அம்மனுக்கு மஞ்சள் அலங்காரமும், நாளை (சனிக்கிழமை) 3-வது நாள் குங்கும அலங்காரமும், 4-வது நாள் சந்தன அலங்காரமும், 5-வது நாள் தேங்காய்ப்பூ அலங்காரமும், 6-வது நாள் மாதுளை அலங்காரமும், 7-வது நாள் நவதானிய அலங்காரமும், 8-வது நாள் வெண்ணெய் அலங்காரமும், 9-வது நாள் கனிவகை அலங்காரமும், 10-வது நாள் காய்கறி அலங்காரமும், 11-வது நாள் புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது. கடைசி நாள் அன்று மாலை அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

  • ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம்

    ராமநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோதண்டராம சுவாமி திருக்கோவில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குட்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா விமரிசையாக கொண்டாப்படும்.அதன்படி இன்று (13-07-2018) காலையில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து தினசரி இரவு கோதண்டராம சுவாமி வெவ்வேறு வாகனங்களில்அலங்காரமாக எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வரவுள்ளார். ஜூலை 18 ஆம் தேதி திருக்கல்யாணமும், ஜூலை 21 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. ஜூலை 22 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. இத்திருவிழாவில் கலந்து கொண்டு கோதண்டராம சுவாமி அருள் பெற எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்.