Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • கவலை தீர … நினைத்தது நடக்க! காளிகாம்பாள் தரிசனம்!

    சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலில், வழிபட்டால், எல்லா சந்தோஷங்களும் நிறைந்திருக்கச் செய்வாள்.

    சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த அற்புதமான தலம் இது. இங்கே உள்ள ஸ்ரீகமடேஸ்வரர் சந்நிதியும் ஸ்ரீமுருகப்பெருமான் சந்நிதியும் விசேஷமானது. ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலைப் பொறுத்தவரை, முன்று அம்பிகையர் குடிகொண்டிருக்கும் ஒப்பற்ற திருத்தலம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

    மூலவராக குடிகொண்டிருக்கும் ஸ்ரீகாளிகாம்பாள் வரப்பிரசாதி. கருணைத் தெய்வம் இவள். இங்கே அவள், சாந்த சொரூபியாக காட்சி தந்து அருள்பாலிக்கிறாள்.

    அடுத்து பிராகாரத்தில் உள்ள ஸ்ரீதுர்கையும் சக்தி மிக்கவள். ராகுகாலத்தில் துர்கை வழிபாடு விமரிசையாக நடந்தேறும். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீதுர்கைக்கு ராகுகால வழிபாடு நடைபெறும். அப்போது சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் பலரும் இங்கு வந்து, காளிகாம்பாளையும் துர்கையையும் வழிபடுவார்கள்.

    அதேபோல், ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பிரமாண்ட சுதைச் சிற்பமும் இங்கே உள்ளது. அமாவாசை பௌர்ணமி ஆகிய தினங்களிலும் செவ்வாய், வெள்ளி முதலான நாட்களிலும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகளும் பரிகார வழிபாடுகளும் நடைபெறுகின்றன .

    ஸ்ரீகாளிகாம்பாளையும் துர்கையையும் பிரத்தியங்கிரா தேவியையும் தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் வளம் சேர்க்கும்! முடிந்தால், செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். நலமும் வளமும் பெறுவீர்கள்! ஐஸ்வரியம் தந்து நிம்மதியுறச் செய்வாள் காளிதேவி என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

  • குழந்தைகளை காக்கும் கருப்பசாமி!

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழ ரதவீதியில் கோவில் கொண்டிருக்கிறார் கருப்பசாமி. தன்னை நாடிவரும் பக்தர்களின் தீராத நோய்களையும் தீர்த்து அருள்பாலிக்கிறார்.மேலும் இவரின் சன்னதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டால் எல்லா பிரச்சனைகளும் நீங்கி விடும் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக இக்கோவிலுக்கு வருகின்றனர்.

    உருட்டு விழியும், முரட்டு மீசையும் கையில் அரிவாளும் கொண்டு ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார் கருப்பசாமி. இருப்பினும் குழந்தைகளின் பயத்தைப் போக்கி அவர்களைக் காத்து-கருப்பு அண்டாதபடி காத்து வருகிறார்.

    ஒவ்வாமை, காரணமாக குழந்தைகள் சரிவர சாப்பிட முடியாமல் திடீர், திடீரென பயத்தால் அழுது கொண்டேயிருப்பார்கள். இந்த குழந்தைகளுடன் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் இங்கு வந்து கருப்பசாமியை மனமுருக பிரார்த்தித்து கோவிலில் தரும் விபூதியை குழந்தைகளுக்கு பூச வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கருப்பு மை வைக்கப்பட்டு கருப்பசாமி அருள் பெற்ற தீர்த்தம் முகத்தில் தெளிக்கப்படும்.

    இதன் மூலம் குழந்தைகளின் பயம் நீங்கி அவர்கள் வழக்கம் போல் விளையாடத் தொடங்குவார்கள் என்பது ஐதீகம். குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் கருப்பசாமியை வணங்கி மை பூசிக்கொண்டால் தங்களது பிரச்சனைகள் நீங்கி நிம்மதி பெறலாம்.

    கருப்பசாமி கோவிலில் கருப்பாயி அம்மன் சிலையும் உள்ளது. இவரையும் வணங்கி அருள்பெற்றால் தீராத பிரச்சனைகளும் தீரும் என்கிறார்கள். மேலும் இக்கோவிலுக்கு வந்து கருப்பசாமியை மனதார பிரார்த்தித்து விட்டு புதிய தொழிலைத் தொடங்கினால் லாபம் கொழிக்கும், வியாபாரம் செழிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

     

  • ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை

    ஆடிப் பிறப்பை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திரமரியாதை கொண்டு செல்லப்பட்டது.

    திருப்பதி தேவஸ்தானத்தில் ஆடிப் பிறப்பை முன்னிட்டு ஆண்டுதோறும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வஸ்திர மரியாதை செல்வது வழக்கம்.

    இதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து மங்கள பொருட்கள் பெருமாளின் வஸ்திரங்கள், ஸ்ரீ ரங்கம் ஆண்டாள்கோயில் யானை மீது வைத்து எடுத்துசென்றனர்.

    பட்டர்கள் உடன் செல்ல உத்திர வீதிகளில் வலம் வந்து ரங்கா ரங்கா கோபுரத்தை அடைந்தது. பிறகு வஸ்திர மரியாதை திருப்பதி தேவஸ்தானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

  • பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை

    திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலில் இன்று (16-07-2018)  வேங்கட கிருஷ்ணர் மூலவருக்கு திருமஞ்சன சேவை நடைபெறுகிறது. 108 திவ்விய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவிலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இத்திருத்தலத்தில் எம்பெருமான் மகாபாராதப் போரின்போது  பார்த்தனுக்கு தேரோட்டிய சாரதி வடிவில் காட்சியளிக்கிறார்.

    மேலும் இத்திருத்தலத்தில் திருமாலின் ஐந்து அவதாரங்களான நரசிம்மர், ராமர், வரதராஐர், ரங்கநாதர், மற்றும் கிருஷ்ணராக பெருமாள் அருள்பாலிக்கிறார். மேலும். இக்கோவிலில் வேதவள்ளி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் ஆகியோர்சன்னதிகள் உள்ளன மேலும் இத்திருக்கோயில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. உடன் நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கு தனிச் சன்னதிகள் இடம்பெற்றுள்ளன.  இங்குள்ள யோக நரசிம்மருக்கு காலையில் முதல் பூஜை நடைபெறுகிறது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்பது இத்திருத்தலத்தின் ஐதீகம். எனவே, இவரது சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக சிறிய மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு பிரார்த்தனை செய்து பெருமாளை வணங்கினால் தீராத நோய்கள் விலகும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

    இத்தகைய சிறப்புமிக்க இத்திருத்தலத்தின் மூலவரான வேங்கட கிருஷ்ணருக்கு இன்று (16-07-2018) திருமஞ்சன சேவை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எம்பெருமானின் அருளைப்பெறுவதற்கு ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்துள்ளனர்.

  • தாலி பாக்கியம் அருளும் நித்திய சுமங்கலி மாரியம்மன்!

    சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் அலவாய்மலை, போதமலை நயினாமலை ஆகிய நான்கு மலைகள் சூழ்ந்திருக்க நடுவே அமைந்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம். இந்த ராசிபுர சலையில் கிழக்கு பார்த்த சன்னதியாக காட்சியளிப்பதுதான் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது.

    பண்டைய காலத்தில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது  கலப்பையில் ஒரு பொருள் தட்டுப்பட்டது. உடனே அந்த விவசாயி இடத்தை தோண்டிப்பார்த்த போது அங்கு ஒரு பீடமிருந்தது. தொடர்ந்து ஒரு குடிசையில் அந்த பீடத்தை வைத்து அப்பகுதி மக்கள் அம்மனாக வழிபட்டு வந்தனர். பின்னர் மாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் நோயால் அவதியுற்று படுத்த படுக்கையாக இருந்தான். மன்னனின் நோய் தீர அவன் மனைவி இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மன் சன்னிதானத்திற்கு வந்து தன் கணவனை காப்பாற்றுமாறு கூறி, தான் அணிந்திருந்த தாலிக்கொடியை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு மாரியம்மளை வணங்கி அங்கேயே மயங்கி விழுந்து விட்டாள்.

    பக்தையின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மாரியம்மன் சிற்றரசனை குணமடைய செய்தாள். தன் மாங்கல்யத்தை காப்பாற்றிய அம்மனை நோக்கி எனது தாலி பாக்கியத்தை நிலைக்க செய்த சுமங்கலி மாரியம்மனே என்று அந்த பக்தை வணங்கியதால் இங்குள்ள மாரியம்மனுக்கு அப்பெயர் பெற்றதாக இத்திருத்தல வரலாறு கூறுகிறது.

    மாரியம்மன் கோவில்களில் கருவறைக்கு எதிரே வேம்பு கம்பம் நடப்பட்டு இருக்கும் அவ்வேம்பு சிவனை குறிப்பதாக ஐதீகம். திருவிழா முடிந்ததும் இந்த வேம்பு கம்பத்தை நீர்நிலைகளில் சேர்ப்பார்கள். ஆனால் இத்திருத்தலத்தில் உள்ள சிவபெருமானின் வடிவில் இருக்கும் வேம்பு கம்பம் 365 நாட்களும் நடப்பட்டிருக்கும். ஆகையால் கணவனை விட்டுப் பிரியாமல் எப்போதும் சுமங்கலியாக இருக்கும் அம்பிகை என்று இத்திருக்கோயிலிலுள்ள அம்மன் போற்றப்படுகிறாள். எனவே இத்திருத்தலத்திற்கு வரும் பெண்கள் தங்கள் கணவர் உடல் நலம் பெற வேண்டியும், குடும்ப பிரச்சணைகளை தீர்க்க கோரியும் கோவிலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து வேம்பு கம்பத்தில் ஊற்றி மஞ்சள், குங்குமம் வைத்து அம்மனை வேண்டி அருள் பெற்று வருகின்றனர்.

  • இறைவனின் வழிபாட்டில் பஞ்சபூதங்கள்!

    கடவுளை வழிபடும்போது உணவுப் பொருட்களை படைப்பது. மலர்களால் பூஜை செய்வது, மணியடிப்பது என்ற பலவற்றைச் செய்கிறோம். இவை ஒவ்வொன்றிற்கும் காரண காரியமுள்ளது.

    இறைவனுக்குப் பஞ்சபூதங்களும் அடிபணியும் என்பதை உணர்த்துவதற்காகவும், மனிதன் பஞ்சபூதங்களையும் பயன்படுத்துவதற்காக அவற்றை வணங்க வேண்டும் என்பதை எடு்ததுரைப்பதற்காகவும் பூஜைகள் நடைபெறுகின்றன.

     நீர் என்ற பூதத்தின் அடையாளமாகச் சுவை உணர்வைக் குறிக்கும் உணவுப் பொருட்களை இறைவனுக்குப் படைக்கின்றோம்.

    மண் என்ற பூதம் மனதை நுகரும் புலன்களோடு சம்பந்தப்பட்டது எனவே அதனை குறிக்கும் வகையாக சந்தனத்தையும், சாம்பிராணிப் புகையையும் இறைவனுக்கு அர்பணிக்கிறோம்.

    காற்று என்ற பூதம் தொடு உணர்ச்சியோடு தொடர்புடையது ஆகும். இதற்கு அடையாளமாக இறைவனுக்கு மலரிடுதல், சாமரம் வீசுதல் போன்றவற்றை செய்து வழிபடுகிறோம்.

    ஆகாயம் என்ற பூதம் ஒலியோடு தொடர்புடையது. இதனை உணர்த்தும் வகையாக மணியடித்தல், சங்கு ஊதுதல் போன்ற சடங்குளைச் செய்கிறோம்.

    நெருப்பு என்ற தத்துவம் கண் பார்வையுடன் தொடர்புடையது. எனவே கற்பூரம், தீபம் ஆகியவற்றை ஏற்றி தீபாராதணை செய்கிறோம்.

    இவ்வாறு ஐம்புலன்களால் பஞ்சபூதங்களைப் பயன்படுத்தி, கோயிலிலும், வீட்டிலும் பரம்பொருளை அனைத்திற்கும் சாட்சியாக வைத்து நாம் வழிபட்டு வருகிறோம்.

     

  • ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் ஜுலை 20 – ஆடிப்பெருவிழா

    சென்னை பாரிமுனையிலுள்ள மண்ணடி பகுதியில் உள்ள தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டபட்டுள்ளது. புனித ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் அமைந்திருந்த இத்திருக்கோயில் ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், பிரம்மஸ்ரீ முத்துமாரி ஆச்சாரி என்பவரால் தம்புசெட்டித் தெருவிற்கு இத்திருத்தலம் மாற்றபட்டதாக இத்தல வரலாறு கூறுகிறது. மேலும் புராண வரலாற்றில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் போற்றப்பட்ட ஸ்ரீ காளிகாம்பாள், பழங்காலத்தில் மீனவர்களும் மற்றவர்களும் செந்தூரம் வைத்து வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரிலும், நெய்தல் நில காமாட்சி என்ற பெயரிலும் இத்திருத்தல அம்மன் வணங்கப்படுகிறாள்.

     

    இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ காளிகாம்பாள் தன் திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்ப மலரும் வைத்து அருள்பாலிக்கிறார். மேலும் இடது கை வரதமுத்திரையுடன் வலது கால் தாமரையில் வைத்தபடி அன்னை காளிகாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் அம்மனின் கருவறையைச்சுற்றி முருகன் வள்ளி தெய்வானையுடன் சமேதராக காட்சியளிக்கும் சன்னதியும், அருணாச்சலேஸ்வரர் சன்னதியும், துர்கை அம்மன், சண்டிகேஸ்வரரும், சூரிய, சந்திரர் சன்னதிகளும் நவகிரகங்களும் அமையப்பெற்றுள்ளன. 

     

    அத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் வருகிற ஆடி மாதம் 4 ஆம் தேதி (20-07-2018) ஆடிப்பெருவிழா கொண்டாடப்படுவிருக்கிறது. தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள், அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதணை நடைபெறவுள்ளது. இதில் (20-07-2018 முதல் 14-9-2018 வரை) அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து வரும் பத்து ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தனம், விபூதி, பால், இளநீர், பஞ்சாமிர்தம் என 108 குடம் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு பக்தர்கள் அணைவரும் ஸ்ரீகாளிகாம்பாள் அருளை பெறவிருக்கிறார்கள்.

  • கடன் தொல்லை தீர்க்கும் ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்திரம்!

    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவோரும் வீடுவாசல் என பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க முடியவில்லை என்று கலங்குவோரும் காஞ்சி காமாட்சித் தாயை மனதில் நினைத்தபடி, மனதார இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லிவந்தால், வீட்டில் கடன் தொல்லை நீங்கும். பொருள்சேர்க்கை நிகழும்.

    விரைவில், சகல செளபாக்கியங்களும் பெற்று, சுபிட்சத்துடன் வாழ்வார்கள் என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.

    மூக பஞ்ச சதியில் உள்ள ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரம் இது.

    ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்

    ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா

    த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி

    ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே

    அதாவது, காமாக்ஷி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உன்னுடைய கருணையானது தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி, நல்ல குழந்தைகள், மூவுலகிலும் மேன்மையை அடையும் நிலை ஆகியவற்றை விரைவிலேயே வரமாகத் தருகிறது.

    திரிபுரத்தையும் சம்ஹாரம் செய்த பரமேஸ்வரனின் பத்தினியே! பக்தர்களின் பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது? என்று அர்த்தம்!

    பௌர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த நாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும்.

    செல்வம், கல்வி கேள்வி என வித்தை, புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவை கிடைக்கவில்லையே என வருந்தும் பக்தர்கள், இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யுங்கள். வீட்டில் சுபிட்சம் நிலவும் என்பது உறுதி!

  • சுபிட்சம் தரும் சூரியனை வணங்குவோம்!

    ஆயிரம் கரங்கள் நீட்டுபவன்… நம்மை கரங்கள் கொண்டு அணைக்கின்றவன்… என்று கதிரவனை, சூரியனை, சூரிய பகவானை வணங்கித் துதிக்கிறோம். ஆன்ம ரீதியாகவும் சரீர ரீதியாகவும் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு நிறையவே பலன்கள் உண்டு. இதனால்தான் ‘ஞாயிறு போற்றுதும்’ என புகழாரம் சூட்டிக் கொண்டாடியிருக்கிறார் இளங்கோவடிகள்.

    சூரிய பகவானைக் கொண்டாடி வணங்குகிற அற்புதமான நாள்… ரத சப்தமி!

    காசிப முனிவரின் மனைவி அதிதி. இந்தத் தம்பதிக்கு விஸ்வான் முதலான 12 சூரியர்கள் பிறந்தார்கள் என்று விவரிக்கிறது புராணம். அதிதியின் மைந்தர்களான அவர்களுக்கு ஆதித்தர்கள் என்றும் பெயர் உண்டு.

    மேஷம் துவங்கி மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் செல்பவர் சூரிய பகவான். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்ததான ராசிக்கு செல்வதையே மாதப் பிறப்பு என்கிறோம். அதேபோல், சூரிய பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அதைக் கொண்டே அந்த மாதத்தின் பெயர்களும் அமைந்தன என்பது தெரியும்தானே! .

    சூரிய பகவான் ரதத்தில்தான் பயணிப்பார். அந்த ரதத்தில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். ஏழு குதிரைகள் கொண்ட அந்த ரதத்தில் சூரியனார் அமர்ந்திருக்க, அந்த ரதத்தை அருணன் என்பவர் சாரதியாக இருந்து ஓட்டி வருவார்! இந்த அருணன் யார் தெரியுமா? கருடாழ்வாரின் அண்ணன்தான் அருணன்.

    தேர்ச்சக்கரத்தின் மேல் பாகமும் கீழ்ப்பாகமும் உத்திராயனம் மற்றும் தட்சிணாயன காலங்களைக் குறிக்கின்றன. அருணன் தேரினைச் செலுத்த, அந்தத் தேரில் அமர்ந்து கொண்டு, உதயம், மதியம், அஸ்தமனம், அர்த்தராத்திரி என நேரங்களை உண்டாக்குகிறார் சூரிய பகவான்!

    அதனால்தான் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம் என்று விவரிக்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்!

    சூரியனைக் கொண்டாடுகிற விரதங்களில் ரத சப்தமி என்றும் சூரிய ஜயந்தி என்றும் போற்றப்படுகிற இந்த விரதம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ‘சப்த’ என்றால் ஏழு என்று அர்த்தம். அமாவாசை அல்லது பௌர்ணமியை அடுத்து உள்ள ஏழாம் நாள்… சப்தமி எனப்படுகிறது.

  • சாப விமோசனம் தரும் பஞ்சட்டி அகத்தீஸ்வரர்

    பஞ்சட்டி அகத்தீஸ்வரர் கோவில் சென்னை – கல்கத்தா நெடும் சாலையில் வழியில் உள்ளது. காரனோடை மற்றும் பெரியபாளையம் ஜங்ஷன் தாண்டி நேராக செல்ல வேண்டும். தொடர்ந்து கல்கத்தா தேசிய நெடும் சாலையில் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் சென்று வலது பக்கம் திரும்ப வேண்டும். உல் சாலையில் ஒரு முந்நூறு அடி சென்று இடது பக்கம் திரும்பினால் கோவில் உள்ளது.
    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே பஞ்சேஷ்டியில் (பஞ்செட்டி) அமைந்துள்ளது ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. விஷேச நாட்களில் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் முக்கிய சிவ ஸ்தல மாக உள்ளது.

    கோவிலின் தல வரலாற்றில், கோவிலின் கிழக்கு பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் அகத்தியர் தீர்த்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தல வரலாற்றின்படி ஒரு முறை சுகேது என்ற அரக்கன் மகிஷாரண்யம் என்ற வனத்தில் இருந்த மகா ராட்சதர்களான மத்தன், உன்மத்தன், பிரமத்தன் என்பவர்களோடு சண்டையிட்டு சோர்ந்து போய் கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான். இதையறிந்த சுகேதுவின் மூன்று மகன்களும் ஒன்று சேர்ந்து அந்த மூன்று மகா ராட்சதர்களையும் கொன்று போட்டு, பின்னர் தங்கள் தந்தையை தேடி கடலை கலக்கினர்.

    இதனால் உலகில் பிரளயம் ஏற்பட்டு அனேக உயிர்களும் அவதிப்பட்டதை கண்ட அகத்திய முனிவர், சமுத்திரத்தை பானகம் போல் அருந்திவிட்டார்.சமுத்திரம் வரண்டதால் வேதனையடைந்த வருடன், குபேரன் ஆகியோர் அகத்திய முனிவரிடம் பணிந்து வேண்டியதால் சமுத்திரத்தை முதலில் கொஞ்சம் உமிழ்ந்து பஞ்சேஷ்டி தலத்தில் ஒரு புண்ணிய தடாகத்தை அகத்தியர் ஏற்படுத்தினார். பின், தன்னுள் மீதமிருந்த சமுத்திரத்தை பழைய நிலைக்கு கொண்டு சென்றார்.

    அகத்திய முனிவரின் வயிற்றில் சிக்கிக்கொண்ட சுகேதுவும் அவனது மகன்களும் தங்களின் பாவ விமோசனத்திற்காக அகத்திய முனிவரை மனம் உருகி வேண்டினர். மனம் இறங்கிய அகத்தியரும் அவர்களை, தான் உருக்கிய புண்ணிய தடாகத்தில் (அகத்திய தீர்த்த குளம்) மூழ்க செய்து சிவாலயத்தில் ஐந்து யாகங்கள் (தேவயாகம், பிரம்மயாகம், பூதயாகம், பிதுர்யாகம், மானுடயாகம்) வளர்க்க ஏற்பாடு செய்தார்.பஞ்சேஷ்டி (பஞ்ச-ஐந்து, இஷ்டி-யாகம்) திருத்தலத்தில் ஐந்து யாகங்களை வளர்த்து அந்த யாக விபூதியை சுகேது மற்றும் அவனது மகன்களுக்கு பூசி அவர்களுக்கு பரமபதம் அருளினார் அகத்தியர்.அகத்திய முனிவர் கூறியபடி சுகேது அரக்கனும் அவனது குடும்பத்தினரும் அகத்திய தீர்த்த குளத்தில் மூழ்கி, சிவனை வழிபட்டு யாகம் வளர்த்து சாபவிமோசனம் பெற்றதால், அங்கு வரும் பக்தர்களும் அந்த குளத்தில் மூழ்கி சிவனை வழிபட்டால் சாப விமோசனம் பெறுவதாக ஐதீகம்.