Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • நாகதோஷம் யாருக்கு ஏற்படும் ?

    ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு நான்கு, பதி மூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண் நான்கு வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும்.

    நாக தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று கணவனுக்கு தோஷத்தை எற்படுத்தும்.

    பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி செல்லும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்கும்.

    பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகுவோ, கேதுவோ நின்று நாக தோஷத்தை ஏற்படுத்தும்.

    புராண காலங்களில் நாகதோஷம் எதற்காக பார்க்கப்பட்டது என்றால், ஒருவர் சன்னியாசம் பெற்று காடுகளிலும், மலைகளிலும், கடுமையான தவங்கள் செய்வதற்கு கடுமையான விஷ ஐந்துகளினால் இவருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை அறிந்த பின்னரே அவருக்கு சன்னியாசம் கொடுக்கப்பட்டது. நாக தோஷம் இதற்காகத்தான் பார்க்கப்பட்டது. நாளடைவில் அது ஒரு பயப்படக் கூடிய தோஷமாக பார்க்கப்பட்டது.

  • இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி!

    தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கும் முப்பெரும் தேவிகளில் இச்சா சக்தி, சென்னைக்கு அருகிலுள்ள மீஞ்சூர் பக்கமுள்ள மேலூரிலும், ஞானசக்தி திருவொற்றியூரிலும், கிரியா சக்தி, திருமுல்லைவாயிலிலும் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளித்து காக்கும் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர்.

    இச்சா சக்தியான திருவுடை அம்மன் சமேத மருந்தீஸ்வராகவும், ஞான சக்தியான வடிவுடையம்மன் சமேத வேதபுரீஸ்வரராகவும், கிரியா சக்தியான கொடியிடை அம்மன் சமேத மாசிலாமணீஸ்வரராகவும் தன்னைத் தஞ்சமென்று அடைவோரைத் தாங்கும் சக்திளாக வீற்றிருக்கின்றனர்.

    பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து தூய ஆடை உடுத்தி, பயபக்கதியுடன் மேலூர் சென்று, இச்சா சக்தி அம்மனை தரிசித்து, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, நெய் தீபமேற்றி, வெற்றிலைபாக்கு, தேங்காய், பழம், புஷ்பங்களுடன் அர்ச்சனை செய்தும், அடுத்து அதே நாள் மதியத்தில் திருவொற்றியூரில் காட்சியளிக்கும் வடிவுடையம்மனான ஞான சக்திக்கு, முன்போலவே நெய் தீபமேற்றி, சிவப்பு வஸ்தரம் சாத்தி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, புஷ்பங்களுடன் அர்ச்சனை செய்தும், மூன்றாவது திருமுல்லைவாயிலிலுள்ள கிரியா சக்தியான கொடியிடை அம்மனுக்கு, நெய் தீபமேற்றி, பச்சை வஸ்திரம் சாத்தி, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பங்களுடன் அர்ச்சனை செய்து வழிப்பட்டால் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களைத் தந்து அருள்வழங்குவர் இந்த சக்திகள்.

    மேலும் தனிச்சிறப்பாக இந்த மூன்று தேவியரின் சிலைகளும், ஒரே பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்பெற்றவை, மேலும் மூன்று சிலைகளுமே ஒரே சிற்பியால் செதுக்கப்பட்டவை என்ற சிறப்பும் உண்டு.
    இச்சா சக்தியான அம்மன், நமக்கு சக்தியையும், ஞான சக்தியான அம்மன், நமக்கு முக்தியையும், கிரியா சக்தியான அம்மன், வேண்டுவோர்க்கு பக்தியையும் தந்து அருள்பாலிக்கின்றனர்.

  • வினைகளை போக்கும் நெல்லை விஸ்வநாத செல்வி!

    திருநெல்வேலி சந்திப்பிலிருந்து அரை கி.மீ. தொலைவிலுள்ள சிந்துபூந்துறையில் அமைந்துள்ளது.விஸ்வநாத செல்வி திருக்கோயில். நாகக்கன்னியின் பிறந்த சக்தியின் அம்சமான அஷ்ட காளியரில் ஆறாமவள் ஷெண்பகவல்லி என்ற செல்லியம்மன். என்றும் வடக்கு வாசல் செல்வி, செல்வியம்மன் என்றும் இவள் அருள்பாலிக்கிறார். மேலும் இக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மன் அஷ்ட காளியரில் பொறுமையானவளாய், ஆக்ரோஷம் கொண்டால் எளிதில் தணியாதவளாய் திகழ்கிறாள்

    முன்னொரு காலத்தில் பொதிகை மலையிலிருந்து இறங்கி குற்றாலநாதர் கோயிலுக்கு வந்தாள். நந்திதேவன் உள்ளே அனுமதிக்கவில்லை. உடனே கொடிமரத்தில் வந்தமர்ந்தாள். அதன் பின் குற்றாலநாதர் கோயிலில் திருவிழா நடக்கும்போதெல்லாம் கொடியேற்றம் அன்று வாலிப வயதுடைய யாராவது ஒருவர் இறந்து போவது, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தது. உடனே கேரள நம்பூதிரிகள் வந்து பூஜித்ததில் கொடிமரத்திலிருக்கும் செல்வியம்மன்தான் கொடியேற்றத்தின் போது நடக்கும் துர்மரணங்களுக்கு காரணம் என தெரிய வந்தது. அவர்களின் ஆலோசனைப்படி ஒரு மந்திரவாதியை வரவழைத்து செல்வியம்மனை மதிமயக்கி பொன்னாலான செம்பில் அடைத்து குற்றால மலையில் செண்பக மரங்கள் அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருந்த பகுதியில் குழித்தோண்டிப் புதைத்தனர்.

    பின்னர் ஒரு காலகட்டத்தில் மழை அதிகமாகப் பெய்ததால், குழியில் புதைக்கப்பட்ட பொற்சொம்பு மேலே வந்தது. அப்போது செங்கோட்டையை சேர்ந்த மூப்பனார் வகையறா ஒருவர் தனது வீட்டுக்கு நிலை விடுவதற்காக மரம் வெட்ட செண்பக மலைக்கு வந்தார். அப்போது செம்பு திறபட அதிலிருந்த அம்மன் அவரிடம் இங்கு எனக்காக கோவில் எழுப்பு என கட்டளையிட்டது. அதன்படி அவர் அங்கு திருத்தலம் அமைத்ததாக தல வரலாறு கூறுகிறது. பின்னொரு சம்பவத்தில் திருநெல்வேலி வாழ்ந்து வந்த காவி விஸ்வநாதர் என்பவர் தான் வீட்டுக்கு கிரகப் பிரவேசம் செய்வதற்காக கங்கையிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தார். பின்னர் செண்பக அருவியிலிருந்து நீரை எடுத்து வரும் போது அம்மன் அவரிடம் தன் திருவிளையாட்டை நிகழ்த்தி பின் நீர் வழங்கியதாக புராணக் கதை கூறுகிறது.

    இக்கோயிலில் விஸ்வநாத செல்வி தனி சந்நதியில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அடுத்த சந்நதியில் சந்தனமாரியம்மனும், துர்க்கையும் அமர்ந்துள்ளனர். கோயிலில் துவார கணபதி வடக்கு நோக்கி கன்னி மூலையில் அமர்ந்துள்ளார். செல்வி அம்மனுக்கு பூஜை செய்வது போல கருப்பசாமி கையில் மணியுடன் தெற்கு நோக்கி நிற்கிறார். ஒரு குடும்பத்துக்கான கோயில் பின்னர் ஒரு சமுதாயக் கோயிலாக மாறியது. இக்கோயிலில் பரிவார தெய்வங்களாக பைரவர், சுடலைமாடன், பிரம்மராக்கு சக்தி, பேச்சியம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வைகாசி மாதம் இரண்டாம் செவ்வாய் அன்று நடைபெறும் திருமாலை பூஜையும், நவராத்திரி விழாவும் இக்கோயிலில் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது.

  • செல்வம் தேடி வர ஆடி வெள்ளி வழிபாடு….

    ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.

    ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
    சண்டி ஹோமம்: ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் “நவசக்தி அர்ச்சனை’ நடைபெறும். ஆடி வெள்ளியில் “சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

    ஆடி மாதம் பெண்கள் மற்றும் பெண் தெய்வங்களில் பலம் ஓங்கிநிற்க்கும் மாதமென்றால் மிகையாகாது. ஆலயமோ அலுவலகமோ அல்லது வீடோ எல்லா இடங்களிலும் பெண்கள் ஓங்கி நின்று ஆண்களை காக்கும் மாதம் ஆகும்.

  • ஆடி வெள்ளி… அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

    அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

    திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள ரவுத்திரதுர்கையம்மன் சன்னதியில், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்தும், எலுமிச்சையில் விளக்கேற்றியும் வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

    கோவை பேரூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 5 ஆயிரம் எலுமிச்சைப் பழங்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் 10 ஆயிரம் சங்குகளைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

  • பூலோக கயிலாயமாக போற்றப்படும் திருஉத்தரகோசமங்கை

    இராமநாதபுரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சிவஸ்தலம் திருஉத்தர கோசமங்கை. இந்து மத வேதங்களிலும் புராணங்களிலும் உலகில் சிவபெருமான் உறையும் முதல் திருத்தலம் இதுதான் என்று வர்ணிக்கப்படுகிறது இந்த திருத்தலம். இதன் காரணமாக இந்தகோவில் ஆதிசிதம்பரம், பூலோக கயிலாயம், சிற்றம்பலம், பொன்னம்பலம் என்றெல்லாம் புகழ்ந்து போற்றப்படுகிறது. இலங்கையில் இருந்து திரும்பி வந்த சிவன் அக்னியில் கலந்த அனைத்து சீடர்களையும் எழுப்பி அவர்களுக்கு சிறப்பு செய்ய அவர்களோடு ஐக்கியமாகி திருஉத்தரகோசமங்கையில் சகஸ்ர லிங்க மாக காட்சி தருகிறார் என்று இத்திருத்தல வரலாறு கூறுகிறது. இங்கு நடராஜருக்கு தனி சன்னதியுள்ளது. ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்ட ஓர் அபூர்வ பச்சை நிற மரகத நடராசர் சிலையுள்ளது. இச்சிலை ஓசைப்பட்டால் நாளடைவில் விரிசல் விடும் தன்மையுடையது.

    அதனால் இச்சிலை ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்திலேயே இருக்கும். மார்கழி மாதம் திருவாதிரைக்கு முதல் நாள் ஆருத்ர தரிசனத்தின் போது மட்டும் சந்தன காப்பு களையப்பட்டு மக்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள். தினமும் மூலவருக்கு சிறப்பு வழிபாடு உண்டு. இக்கோயிலுக்க முன்புறம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இலந்தை மரம் உள்ளது. இதுவே இக் கோயிலின் தலவிருட்சம் ஆகும்.

    இதன் அருகில் ஓர் சிவலிங்கம் உள்ளது இது 20 வரிசையாகப் பகுக்கப்பட்டுள்ளது. வரிசைக்கு 50 லிங்கங்கள் வீதம் 20 வரிசைக்கு 1000 லிங்கம் உள்ளன. இது போன்ற அமைப்புள்ள சிவத்தலம் வேறெங்கும் இல்லை இத்திருத்தலத்திற்கு மேலும் சிறப்பு. இத்தலம் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற புகழ்பெற்ற தலமாக போற்றப்பட்டு வருகிறது.

  • மாங்கல்ய பலம் தரும் பெரியபாளையத்தமன்

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது, பவானி அம்மன் திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார்.

    கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘கம்சா! உன்னுடைய தங்கைக்கு பிறக்கப்போகும் 8-வது ஆண் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும்’ என்றது அந்தக் குரல்.

    அதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், தங்கையென்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும், பிறந்த மறு கணமே கொடுத்துவிடுவதாக கம்சனிடம் வாக்குறுதி கொடுத்தார்.

    கம்சனும் இதற்கு ஒப்புக்கொண்டான். இருப்பினும், தங்கை தேவகியையும், வசுதேவரையும் தன் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று சிறையில் அடைத்தான். சிறையிலேயே வாழ்க்கை நடத்திய தேவகிக்கும், வசு தேவருக்கும் பிறந்த 7 குழந்தைகளை கம்சன் அழித்து விட்டான். 8-வதாக கண்ணன் பிறந்தார். அது ஒரு நள்ளிரவு நேரம்.

    கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி ஒலித்தது. ‘வசுதேவரே! உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்’ என்றது.

    மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந்தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது.

    ‘கம்சனே! உன்னைக் கொல்லப்போகிறவன், ஏற்கனவே பிறந்துவிட்டான். அவன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான். உரிய நேரத்தில் உன்னைக் கொல்வான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே அங்கிருந்து இங்குள்ள பெரியபாளையம் தலத்தில் பவானியாக வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.

    முற்காலத்தில் ஆந்திரப்பகுதியில் இருந்த வளையல் வியாபாரிகள் பலரும் இங்குவந்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் தங்களிடம் வளையல் வாங்கும் பெண்களுக்கு, மாங்கல்ய சுகத்துடன் வாழ மஞ்சள், குங்குமமும் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரியபாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் அவர் ஓய்வெடுத்தார். அதிகாலையில் கண் விழித்து பார்த்தபோது, அவர் அருகில் இருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த அவருக்கு, அங்கிருந்த புற்று ஒன்று கண்ணில்பட்டது. சந்தேகத்தின் காரணமாக அந்தப் புற்றை எட்டிப் பார்த்தபோது, அதற்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந்திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்புவாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா’ என்று கூறி மறைந்தார்.

    மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.

    ஆலய அமைப்பு :

    பாளையம் என்பதற்கு படைவீடு என்று பெயர். அம்மன் வீற்றிருக்கும் பெரிய படைவீடு என்பதால், பெரிய பாளையம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

    ஆலயத்திற்குள் நுழையும் போது விநாயகர் வீற்றிருக்கிறார். அவருக்கு பின்புறம் மாதங்கி அம்மன் காட்சியளிக்கிறார். ஆலயத்தின் சுற்று பிரகாரத்தில் பவானி அம்மனின் உற்சவர் சன்னிதி அமைந்திருக்கிறது. பிரகார வீதியில் வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், தாயாருடன் பெருமாள், ஆஞ்சநேயர், பரசுராமர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் பவானி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஓங்கார வடிவமாக, சங்கு சங்கரதாரிணியாக, பாதி திருவுருவத்துடன் அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக்கிறார். நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னையின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இரு கரங்களில் வாள், அமுத கலசமும் தாங்கியிருக்கிறார். அன்னையின் அருகில் கண்ணன், நாகதேவன் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.

    இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அன்னைக்கு எலுமிச்சைப் பழ விளக்கேற்றி வழிபட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும்.

  • ஆடி முதல் வெள்ளி….

    ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை.
    ஆடி மாதம் பிறந்துவிட்டது. சூரியன் திசை மாறி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் புண்ணிய காலம் இது. விவசாயத்துக்கும் வழிபாட்டுக்கும் ஏற்ற மாதம் ஆடி. ‘கற்கடக மாதம்’ என்று ஜோதிடம் ஆடியைக் கொண்டாடுகிறது. கடக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், இந்தப் பெயர் உண்டானதாம். தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி, `தேவர்களுக்கு இரவு நேரத்தின் தொடக்க மாதம்’ என்று புராணங்கள் கூறுகின்றன.

    பித்ரு லோகத்தில் வசிக்கும் பித்ருக்கள் அந்த லோகத்தைவிட்டு பூலோகத்துக்கு வரும் புண்ணிய காலம் ஆடி. ஆவலோடு தங்கள் சந்ததியைக் காண வரும் பித்ருக்களை வணங்கி வழிபட்டால் எல்லா தோஷங்களும் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. நதி, குளம், கடல் போன்ற புண்ணிய நீர்நிலைகளில் நீராடி, திதி கொடுப்பது இந்த மாதத்தில் விசேஷமானது. அதுவும் ஆடி அமாவாசை அன்று செய்வது நலம் பயக்கும். இறந்துபோன முன்னோர்களை வணங்கி, அவர்களுக்கு விருப்பமான உணவைப் படையலிட்டு, ஏழை எளியோருக்கு அன்னதானம் அளிப்பது நல்லது.

    `அரங்கனுக்கே ஆளாவேன்’ என்ற உறுதியுடன் வாழ்ந்த கோதை நாச்சியார் திரு அவதாரம் செய்த ஆடிப்பூரம் திருநாளில்தான், பார்வதி தேவி ருதுவான நாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினமே அம்பிகைக்கு வளைகாப்பும் செய்வார்கள்.
    மாங்கல்ய பலமருளும் வரலட்சுமி நோன்பு மங்கையர்களின் விருப்பமான விழா. நாக தோஷங்களை விலக்கும் நாகசதுர்த்தி நாக தேவதைகளோடு, விநாயகரையும் வணங்கவேண்டிய நாளாகும். மொத்தத்தில் பக்தி விழாக்களின் தொடக்க மாதமாக ஆடி விளங்குகிறது. அதனால்தான் பெரியவர்கள் இந்த மாதத்தில் வேறு மங்களகரமான நிகழ்ச்சிகள் எதையும் செய்யாமல் விலக்கிவைத்தார்கள்.

    பக்திக்கும் பண்டிகைக்கும் உரிய இந்த மாதத்தில் வீடு மாறுவதோ, சுப காரியங்கள் செய்வதோ பூஜைக்கு இடையூறாக இருந்துவிடும் என்ற காரணமும் இருக்கலாம். மேலும் தேவர்களின் இரவு நேரம், பித்ருக்கள் நம்மை நாடிவரும் காலம், இந்த மாதத்தில் செய்யப்படும் ஜப தபங்கள் ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்பது போன்ற பல காரணங்களாலும் ஆடி மாதம் சுப காரியங்களைச் செய்ய விலக்கப்பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், சகல தெய்வங்களின் பண்டிகைகளும் ஒருசேர வரப்போகும் இந்த ஆடி மாதத்தில் முடிந்தவரை எல்லா விழாக்களையும் கொண்டாடி வளமும் நலமும் பெறுவோம்!

  • திருப்பதி ஏழுமலையான் புஷ்ப பல்லக்கில் பவனி…

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்ப சுவாமி புஷ்ப பல்லக்கில் ஏழுமலையான் நேற்றிரவு நான்கு மாடவீதியில் பவனி வந்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.மேலும் நேற்று காலை சுப்ரபாத சேவையில் இருந்து இரவு 7 மணி வரை 51 ஆயிரத்து 776 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் வைகுண்டத்தில் உள்ள 27 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்தனர்.

    300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், மலைப்பாதையில் பாத யாத்திரையாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை கோயிலில் தரிசனம் செய்த பக்தர்களின் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் ரூ.3.45 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

  • வியாழக்கிழமைகளில் உச்சரிக்க உகந்த ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்லோகம்!

    குருஜி ஸ்ரீ ராகவேந்திரருக்கு உகந்த வியாழக்கிழமைகளில் அவரை வணங்கி இந்த 108 போற்றிகளை உச்சரித்தால் வாழ்வில், சுபிட்ஷம் பெருகும். 

    பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய

    சத்ய தர்ம ரதாயச

    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்

    ஸ்ரீ காம தேநுவே

    ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
    ஓம் காமதேனுவே போற்றி
    ஓம் கற்பகவிருட்சமே போற்றி
    ஓம் சத்குருவே போற்றி
    ஓம் சாந்தரூபமே போற்றி
    ஓம் ஞான பீடமே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் ஜீவ ஜோதியே போற்றி
    ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
    ஓம் துளசி வடிவமே போற்றி

    ஓம் தேவ தூதனே போற்றி
    ஓம் பிரகலாதனே போற்றி
    ஓம் பக்தப் பிரயனே போற்றி
    ஓம் திவ்ய ரூபமே போற்றி
    ஓம் தர்ம தேவனே போற்றி
    ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
    ஓம் அன்பின் உருவமே போற்றி
    ஓம் காவியத் தலைவனே போற்றி
    ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
    ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி

    ஓம் துவைத முனிவரே போற்றி
    ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
    ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
    ஓம் குருராஜரே போற்றி
    ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
    ஓம் மத்யமவத பீடமே போற்றி
    ஓம் தீனதயாளனே போற்றி
    ஓம் கருணா மூர்த்தியே போற்றி
    ஓம் ஜெகத் குருவே போற்றி
    ஓம் கலியுகக் கடவுளே போற்றி

    ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
    ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
    ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
    ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
    ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
    ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
    ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி
    ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
    ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
    ஓம் அறிவின் சுடரே போற்றி

    ஓம் பண்டித மேதையே போற்றி
    ஓம் தீய சக்தியை அழிப்பவனே போற்றி
    ஓம் வெங்கட பட்டரே போற்றி
    ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
    ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
    ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
    ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
    ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
    ஓம் அமானுஷ சக்தியே போற்றி
    ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி

    ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
    ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
    ஓம் தூய்மை நிதியே போற்றி
    ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் கண்னனின் தாசனே போற்றி
    ஓம் சத்ய ஜோதியே போற்றி
    ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
    ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
    ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
    ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி

    ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
    ஓம் மகிமை தெய்வமே போற்றி
    ஓம் அணையர் தீபமே போற்றி
    ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
    ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
    ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
    ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
    ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
    ஓம் ஸ்ரீ மஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
    ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி

    ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் வியாச பகவானரே போற்றி
    ஓம் சங்கு கர்ணரே போற்றி
    ஓம் பரமாத்மாவே போற்றி
    ஓம் குருதேவரே போற்றி
    ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
    ஓம் தயாநிதியே போற்றி
    ஓம் அருட்தவசீலரே போற்றி
    ஓம் ஞான மூர்த்தியே போற்றி
    ஓம் விஷ்ணு பக்தரே போற்றி

    ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
    ஓம் அமுத கலசமே போற்றி
    ஓம் அழகின் உருவமே போற்றி
    ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
    ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
    ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
    ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
    ஓம் மங்களம் தருபவரே போற்றி
    ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
    ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
    ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
    ஓம் காந்தக் கண்களே போற்றி
    ஒம் யதிராஜரே போற்றி
    ஓம் ஓம்கார ரூபமே போற்றி
    ஓம் பிரம்ம ஞானியே போற்றி
    ஒம் துங்கை நதியின் தூயவரே போற்றி
    ஓம் இணையில்லா இறைவனே போற்றி

    ஓம் விபீஷணரே போற்றி
    ஓம் அனாத ரட்சகரே போற்றி
    ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
    ஓம் சுந்தர வதனரே போற்றி
    ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
    ஓம் நரஹரி பிரியரே போற்றி
    ஓம் தியாகமூர்த்தியே போற்றி
    ஓம் வாணியின் வீணையே போற்றி