108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது.மதுரையை அடுத்துள்ள திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர்கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற சிறப்புமிக்க இத்திருத்தலத்தில், நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆண்டு தோறும் நடைபெறும் ஆடித்திருவிழா.
இந்த வருடத்திற்கான ஆடி உற்சவ விழா இன்று (19-07-2018) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று இரவு அன்னவாகனத்தில் கள்ளழகர் புறப்பாடும், நாளை காலை தங்கப்பல்லக்கு உற்சவமும், இரவு சிம்மவாகன புறப்பாடும் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து நாளை மறுநாள் 21-ந்தேதி காலை வழக்கமான நிகழ்ச்சிகளும், தொடர்ந்து இரவு அனுமார் வாகனத்திலும், பின்னர் 22-ந்தேதி இரவு தங்க கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடு நடக்கவிருக்கிறது.
23-ந்தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுந்தரராஜப் பெருமாள் அழகர்கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று திரும்புகிறார். அன்று இரவு சேஷ வாகனத்திலும், 24-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 25-ந்தேதி இரவு புஷ்பசப்பரத்திலும், 26-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் அழகர் புறப்பாடு நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் அன்னையர்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள். தொடர்ந்து 28-ந்தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந்தேதி உற்சவ சாந்தி நிகழ்சியும் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 11-ந்தேதி ஆடி அமாவாசையும் அன்று இரவு கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடும் நடைபெறவிருக்கிறது. திருவிழாவை முன்னிட்டு அழகர் தரிசனத்தை காண பெருந்திரளான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்.