Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • பேசும் ஓதிமலை முருகன்

    சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது.
    புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்..

    சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது.

    ஓதிமலை குறித்த புராணச் செய்தி

    படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

    படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்” எனப்பட்டது.
    பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர் ஒதிமலையில் முதலில் முருகபெருமானை தரிசித்தார் பின்பு தான் முருக பெருமானின் பரிபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில் பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது .
    ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது …

    போகர் தவம் செய்த பூதிக்காடு

    இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும்.. இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம்.

    இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் “விபூதிக்காடு – தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது ..

    இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.

    பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்படுள்ளது .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப் படுகிறது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..

  • வியாழனன்று சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்

    விநாயகர் ஸ்லோகம்
    ஓம் கணாநாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே
    கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம்
    ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மனாம் ப்ரஹ்மணஸ்பத
    ஆந ஸ்ருண் வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்!
    ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ

    “அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
    தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
    குணம் அதிக மாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
    கணபதியைக் கைதொழுதக் கால்.”

    முருகன் ஸ்லோகம்
    அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் ‘அஞ்சல்!’ எனவேல் தோன்றும் – நெஞ்சில்
    ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
    ‘முருகா!’ என்று ஓதுவார் முன்.”

    சிவன் ஸ்லோகம்
    பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
    பிள்ளை யைப்பெறும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
    நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே

    அம்பாள் ஸ்லோகம்
    ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
    பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
    காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்புவில்லும்
    சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

    மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    விஷ்ணு ஸ்லோகம்
    வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
    தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    ராகவேந்திரர் ஸ்லோகம்
    ஸ்ரீ பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே.

    ஆஞ்சநேயர் ஸ்லோகம்
    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டுஅயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

    நவக்ரஹம்: வியாழன்
    குணமிகு வியாழ குரு பகவானே
    மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்
    பிரகஸ்பதி வியாழ குருபர நேசா
    கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!

  • திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெப்போற்சவம்

     108 வைணவத் தலங்களுள் ஒன்றாக போற்றப்படும்  திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயிலில் ஆனி மாத விசேஷமாக இன்று (12-07-2018) வீரராகப்பெருமாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் பிரம்மாண்டமாய் காட்சிதரும் இத் திருக்கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது.

    புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இத்திருத்தலம் இருக்குமிடத்தில் தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு படைத்த பின்பு உண்ணபவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாக பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர் உண்ட களைப்பு தீர எங்கே படுப்பது என முனிவரிடம் கூற, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். “படுக்க எவ்வுள்” என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று என்ற இத்திருத்தலத்தின் வரலாறு கூறுகிறது.

    இக்கோவிலில் மூலவராக வீரராகப் பெருமாள் காட்சியளிக்கிறார். கனகவள்ளி அம்மையார், கனேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுஜ ஆச்சாரியார், லட்சுமி நரசிம்மர். ஆகியோருக்கு இங்கு தனித்தனியே சன்னதிகள் உள்ளன. தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க இத்திருத்தலத்தில் ஆனி மாத விசேஷமாக இன்று (12-07-2018) தெப்போற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.  இந்த விசேஷத்தை கண்டு பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்துள்ளனர்.

  • சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 12 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான திருவிழா ஜூலை 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை நேரங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
    17 ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு அம்பாள் வீதிஉலாவும் நடக்கிறது. விழா தொடர்ந்து 27-ந் தேதி வரை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு அம்பாள் வீதி உலா, 10 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அம்பாள் வீதி உலா ஆகியன நடக்கிறது.

    26-ந் தேதி (வியாழக்கிழமை) 9 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு சங்கர நாராயணராகவும், 6.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமியாகவும் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    28-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி தெப்ப திருவிழா, 10 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலா, 29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்ப திருவிழா, 10 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலா ஆகியன நடக்கிறது.

  • சங்கடம் தீர்ப்பார் சனி பகவான்!

    சனி பகவானை வணங்குங்கள். எள் தீபமேற்றி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் சங்கடங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி நமக்கு அருள்வார் சனீஸ்வரர்!

    சங்கடம் தீர்க்கும் சனி பகவானே! மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய். என்று சனீஸ்வரரைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    நாம் நினைப்பது போல, சனீஸ்வரரைக் கண்டு பயப்படவே தேவையில்லை. அன்பாளர். அருளாளர். நம் சங்கடங்களையெல்லாம் தீர்க்கக் கூடியவர். மங்கலம் பொங்கும் வாழ்வுதனைத் தந்தருளும் வள்ளல் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    முந்தையப் பிறவிப் பயன் என்பது நிச்சயம் உண்டு. இதை எந்தத் தருணத்தில் நாம் நம்புகிறோமோ இல்லையோ… சனீஸ்வர பகவான் விஷயத்தில் நம்பியே ஆகவேண்டும். ஏனெனில், நம் அத்தனைப் பிறவிகளின் பாவ புண்ணியக் கணக்குகளைப் பார்த்து, அதன்படி அருளக்கூடியவர் சனீஸ்வர பகவான் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

    முந்தைய பிறவியில் ஏற்பட்ட வினைகள்தான், இப்போதைய நம் சந்தோஷங்களாகவும் சங்கடங்களாகவும் வருகின்றன என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள். அதைக் கொண்டுதான் நம்மைச் சோதிப்பதிலும் சோதனைக்குள்ளாவதிலுமாகத் திகழ்கிறார் சனி பகவான்!

    உரசினால்தான் தங்கத்தின் மதிப்பு தெரியும். அதுபோல் நம்மை சோதித்துப் பார்ப்பார் சனிபகவான். அப்படியான சோதனை காலத்தில், நாம் நேர்மையாகவும் நியாயமாகவும், உண்மையாகவும் சத்தியத்துடனும் இருந்தால், சனீஸ்வரரின் சோதனைப் பார்வை முடிவுக்கு வரும். முறையே சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி, சனிக்கிழமைகளில் காகத்துக்கு எள் சாதம் படைத்து வந்தால், சனி பகவான் நம் மீதான கோபத்தில் இருந்து சற்றே தளர்த்தி அருள்வார் என்கின்றனர் ஆச்சார்யர்கள்.

    சனிக்கிழமை என்றில்லாமல், எல்லா நாளும் சனி பகவான் காயத்ரியும், அவருக்கு உண்டான ஸ்லோகங்களையும் சொல்லி வந்தால், சனி பகவான் யோகம் தரும் தெய்வம் என்பதை உணர்ந்து, சிலாகிப்போம்.

    எனவே சனிக்கிழமைகளில் தவறாமல் சனீஸ்வரரை வணங்கித் துதிப்போம். நம் சங்கடங்களையெல்லாம் விலக்கி, நமக்குச் சந்தோஷத்தைத் தந்தருள்வார் சனி பகவான்!

  • ஓம் வடிவத்தில் திருக்கோயில்

    தொண்ட மண்டலத்தின் மண் திருமுருகன் புகழ்பாடும் திருநீறு என்றெல்லாம் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இத்தகைய மண்டலத்தில் எல்லாம்வல்ல திருப்போரூர் முருகன் என அழைக்கப்படுகிற கந்தசாமி பெருமான் ஞானக்கடவுளாக முத்தமிழ் வேந்தனாக பக்தர்களை காத்து அருள்புரிந்து வருகின்றார்.

    சென்னை மாநகரிலிருந்து 76 கிமீ தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 27 கிமீ தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும், அருள்மிகு கந்தசாமி கோயில் கொண்ட திருப்போரூர் நகரம் அமைந்துள்ளது.

    தற்சமயம் திருமுருகன் புகழ்பாடும் திருப்போரூர் மண்ணை முந்தைய வரலாற்று காலத்தில் அப்போது சோழர் மன்னர்களாலும் பல்லவ மன்னர்களாலும் திருப்பணி தொண்டுகளால் முருகனை சிறப்புறச் செய்தனர். இரண்டாம் நரசிம்ம பல்லவன் (கி.பி.691) கால கல்வெட்டு இக்கோயிலின் மண்டபத்தூண்கள் இரண்டில் காணப்படுகிறது. முதலாம் குலோத்துங்கன் சோழ காலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் நாட்டு (கிபி 1076) இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டல ஆமூர் கோட்டம் குமிழி நாட்டு திருப்போரியூர் சுப்பிரமணிய தேவர் என்பதை அன்னை தெய்வயானை சன்னதிக்கு அருகில் உள்ள சுவரில் காணப்படுகிறது.

    கந்தபுராணத்தில் சூரபத்மன் வம்சத்தை அழிக்க அன்னை பராசக்தி அருளிய வேலாயுதத்துடன் முருக பெருமான் போர் தொடுத்தார். முருகபெருமான் தனது படைவீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மண்ணில் நின்று அசுரர்களின் அகர எண்ணத்தையும் திருச்செந்தூர் கடல்நீரில் நின்று சூரபத்மனையும் அவனது மாயை உருவத்தையும் திருப்போரூரில் விண்ணில் பறந்தபடி தாரகா சூரனையும் அவனது ஆணவத்தையும் அழித்தார்.

    முந்தைய தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் இருந்த நவாப் மன்னர்கள் கந்த கடவுளுக்கு சிறப்புமிகு கோயிலை அமைக்க வேண்டும் என எண்ணினார்கள். அச்சமயத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலைகள் கோயில் கட்டும் எண்ணத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.

    இருந்த போதிலும் நவாப் மன்னர்களின் எண்ணத்தை செயல்படுத்த காரணகர்த்தாவாக இருந்தவர் ஆதிகுரு ஸ்ரீமத் சிதம்பரசுவாமி. ஸ்ரீமத் சிதம்பரசுவாமி இறைவழிபாட்டில் திளைத்து தியானம் செய்யும் போது அவரது கண்முன் முருக பெருமானின் வாகனமாகிய மயில் பறந்துச் செல்வது போலத் தெரிந்தது. திடீரென்று மயில்வாகனம் தோன்றி மறைந்ததால் சிதம்பரசுவாமி அதன் விவரத்தை குருபிரானிடம் சொல்லி தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டார்.

    முருகபெருமானின் சூட்சமத்தை தெரிந்துக் கொண்ட குருபிரான் நீ மதுரை சென்று மீனாட்சி அம்மனை வேண்டி தவம் செய். அப்போது உனக்கு தெளிவான பதில் கிடைக்கும். அதன்படி நீ தெய்வீக பணிகளை செய் என்றார்.

    குருபிரானின் கட்டளையின்படி சிதம்பரசுவாமி மதுரைக்குச் சென்று அங்குள்ள மீனாட்சி அம்மனை நெஞ்சுருக வேண்டினார். 48 நாட்கள் ஊண் உறக்கம் இன்றி கடும் தவம் செய்தார். இருந்தபோதிலும் மீனாட்சிதேவியின்கருணை பார்வை விழவில்லை. பின்பு அவளது புகழை கசிந்துருகி நாவினிக்க பாடினார்.

    சிதம்பரசுவாமியின் உண்மையான பக்தியைக் கண்டு வியந்த மீனாட்சி அம்மன் அவரின் கண்முன் தோன்றினார். உனது ஆழ்ந்த பக்தியை மெச்சினேன். வடக்கு திசையில் புராண வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற யுத்தபுரி என்றும் அங்கு வாழ்கின்ற மக்களால் திருப்போரூர் எனச் சொல்லப்படுகிற இடத்தில் எமது மைந்தன் முருகனுக்கு திருக்கோயில் அமைத்து வழிபடு எனச் சொல்லி மறைந்தார்.

    அன்னை மீனாட்சியின் அருட்கட்டளையின் படி சிதம்ரபசுவாமி மதுரையில் இருந்து வடக்கு திசையில் உள்ள புத்தபுரி என்ற இடத்துக்கு வந்தார். யுத்தபுரி என்ற இடம் அடர்ந்த செடி, கொடிகளும் பனை மரங்களும் சூழ்ந்து இருந்தது. பல பகுதிகளில் முருகனுக்கு கோயில் அமைக்க உரிய இடம் கிடைக்காமல் தேடி அலைந்து சிதம்பரசுவாமி சோர்ந்து போனார் நிரந்தரமான இடத்தில் இருக்கவும் தம்மை தேடி அலைகின்ற தொண்டருக்கு அருள்பாலிக்க எண்ணிய முருகபெருமான் அடர்ந்த பனை மரங்களுக்கு இடையே ஒரு பனை மரத்தின் கீழ் சுயம்பு உருவில் புற்று மண்ணால் மூடிய நிலையில் காட்சி அளித்தார்.

    சூரியனைக்கண்ட பனி போல தமது தேடலுக்கு வழி காட்டிய முருகபெருமானை சிதம்பரசுவாமி போற்றி வணங்கினார். அதன்பின்பு சுயம்பு வடிவில் தோன்றிய முருகபெருமானை எடுத்து வந்து வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகளை செய்து வழிப்பட்டார். தனக்கு கோயில் அமைக்காமல் வெறும் வழிபாடு மட்டும் செய்து வந்த சிதம்பர சுவாமிக்கு நினைவூட்ட திடீரென்று ஒரு நாள் சிதம்பர சுவாமியின் கனவில் வந்த முருகன் சுவாமியின் நெற்றியில் விபூதியை பூசி விட்டு மறைந்தார்.

    அந்த நொடிப்பொழிதில் இருந்து தமக்கு எத்தகைய வடிவத்தில் திருக்கோயில் அமைக்கப்பட வேண்டும் என்பதை தத்ரூபமாக சிதம்பரசுவமிக்கு முருகன் எடுத்துக்காட்டினார். தன்னை நாடி வருகின்ற பக்தர்களின் குறைகளை தீர்த்த காரணத்தினால் சிதம்பர சுவாமி அவர்கள் நன்கொடையாக பணத்தை வாரி வழங்கினார்கள்.

    பக்கத்து பகுதிகளில் கொள்ளை அடிக்க கொள்ளையர் கூட்டத்தினர் அவ்வழியே வந்தனர். சுவாமியிடம் கோயில் கட்டுவதற்கு நிறைய பணம் வைத்து இருப்பதை உணர்ந்த அவர்கள் சிதம்பர சுவாமியை மிரட்டி பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.

    கொள்ளையர்களால் திருப்பணிக்காக சேமித்து இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை எண்ணி முருகபெருமானிடம் சிதம்பர சுவாமி அழுது புலம்பினார். அழுது புலம்பிய சிதம்பர சுவாமிக்காக முருகன் கொள்ளையர்களின் பார்வையை பறித்தார். தங்களது கண்பார்வை பறிபோனதற்கு சுவாமியின் பணத்தை கொள்ளை அடித்ததால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கொள்ளையர்களுக்கு முருகன் உணர வைத்தார். தங்களது செயலுக்கு மன்னிக்கும்படியும் எடுத்துச் சென்ற பணத்தை மீண்டும் ஒப்படைப்பதாக சொல்லி சிதம்பரசுவாமியின் காலில் விழுந்தனர்.

    பின்பு அவர்கள் கொள்ளை அடித்த பணத்துடன் தமது சொந்த பணத்தையும் சேர்த்து வழங்கிவிட்டு சென்றனர். தமது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்ட கொள்ளையர்களுக்கு கண் பார்வை கிடைக்க சிதம்பர சுவாமி அருளினார். அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட நோய்நொடிகளுக்கெல்லாம் முருகபெருமானின் திருநீற்றை வழங்கி அவர்களை சிதம்பர சுவாமி திருப்போரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெரும்படையாக சூழ்ந்து இருந்தனர். தமது நன்றிக்கடனாக அம்மக்கள் சுவாமிக்கு நன்கொடையாக பணத்தையும் பொருள்களையும் வாரி வழங்கினார்கள். இதனால் அவர்களது நன்கொடை பொருள்கள் மலை போல குவிந்தன.

    எல்லாம்வல்ல முருகபெருமானின் அருளால் சிதம்பரசுவாமி குருவருளால் தீராத வயிற்றுவலி நீரில் தோன்றி மறையும் நீர்குமிழி போல காணாமல் போனது. இதனால் மகிழ்ச்சி அடைந்த நவாப் மன்னர் முருகன் கோயிலின் வளர்ச்சிக்காக சுமார் 650 ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினார். தானமாக பெற்ற அந்த நிலத்தில் சுவாமி திருக்கோயில் கட்டும் பணியை செய்து முடித்தார். சிதம்பர சுவாமி முழு முயற்சியால் சுமார் 17 ம் நூற்றாண்டுகளுக்கு பிற்பட்ட காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் என்றே சொல்லவேண்டும். சுவாமிகள் திருக்கோயில் மடத்திலேயே தங்கி முருகனுக்கு பூஜை செய்து அழகு பார்த்தார்.

    திருப்போரூர் சந்நிதி முறை தலைப்பில் சிதம்பர சுவாமி 762 பாடல்களை முருகன் மீது பாடியுள்ளார். இதனை பிற்காலத்தில் பக்தர்களால் முருக கடவுளை வழிபடும் போது பாடி வருகின்றனர். அருட்பிரகாச வள்ளலார் பாம்மபன் சுவாமிகள் சந்தானலிங்க சுவாமிகள் அருணகிரிநாதர் போன்ற ஆன்மீக சான்றோர்களால் திருமுருகனை வழிபாடு செய்து பாடப்பட்ட திருத்தலம்.

    முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் இங்கு கணநாதனாக திருக்கோயிலுக்கு நுழையும் முன்புற பகுதியிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். அவரை வணங்கிய பின்பே கந்த கடவுளை வணங்க ராஜகோபுரம் வழியாக கருவறைக்கு செல்லவேண்டும். கணநாதர் சந்நிதியை சற்று தள்ளி ஆதிகுரு சிதம்பர சுவாமி சந்நிதி உள்ளது. ராஜகோபுரம் நுழைவதற்கு முன்பு பெரிய வட்ட வடிவிலான மண்டபம் உள்ளது. இங்கு கொடி மரம் மயில் வாகனம் பலிபீடம் போன்றவை உள்ளது.

    தமிழகத்தில் உள்ள முருகன் சந்நிதிகளில் இல்லாத சிறப்பாக வட்ட வடிவ மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பலிபீடத்தின் முன்புறம் தமது பிரார்த்தனையில் ஒன்றாக உப்பு மினகு ஆகியவற்றை பக்தர்கள் கந்த பெருமானுக்கு காணிக்கை செலுத்தி நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

    வட்டவடிவ மண்டபத்தைக் கடந்து ராஜகோபுரம் 24 கால் மண்டபம் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறத்தில் முருகனின் மனைவியர்களில் ஒருவரான தெய்வயானை சந்நிதி உள்ளது. இச்சந்நிதிக்கு எதிர்பக்கம் உள்ள தூணில் முருகபெருமானின் கோயில் வளர்ச்சி பணிகளுக்காக 650 ஏக்கர் நிலத்தை வழங்கிய ஆற்காடு நவாப் திருவுருவ படம் வரையப்பட்டு உள்ளது. இடது புறத்தில் கருவறை மூலவரான முருகன் வள்ளி தெய்வயானை திருவுருவ சிலைகளுக்கு மட்டும் அணிவிக்கப்படுகிற வில்வமாலை இங்கு கட்டப்படுகிறது. கடைகளில் விற்கப்படுகிற மற்ற மாலைகள் இங்கு அணிவிக்கப்படவில்லை.

    இதற்கு எதிர்பகுதியில் இத்திருக்கோயிலை உருவாக்கிய ஆதிகுரு சிதம்பரசுவாமி படம் அமைக்கப்பட்டு உள்ளது சுனை விநாயகரை வணங்கி வழிப்பட்டபின்பே கருவறை நோக்கி நடக்க ஆரம்பித்தால் நம்மை அறியாமல் கை கூப்பியபடி முருகா முருகா என அழைக்கத் தோன்றும். கருவறையில் உள்ள முருகர் மற்றும் தெய்வயானை ஆகியோர் பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு திருவுருவில் காட்சி அளித்து கொண்டிருக்கிறார். தானாக தோன்றிய முருகர் வள்ளி தெய்வயானை ஆகிய திருவுருவ சிலைகளுக்கு எந்த காரணத்தைக் கொண்டும் அபிஷேக அலங்காரம் செய்யப்படுவதில்லை. அபிஷேகத்துக்கு பதிலாக புனுகு ஜவ்வாது போன்ற வாசனை திரவிய பொருட்களால் சாத்தப்படுகிறது. எதிர் திசையில் பலிபீடமும் யானை வாகனமும் அமைந்து உள்ளது. ஐராவதம் என அழைக்கப்படுகிற யானை வாகனத்தை தேவேந்திரன் தனது மகள் தெய்வ யானைக்காக சீதனமாக வழங்கப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிடத்தக்கது. கிழக்கு திசையை நோக்கியுள்ள மூலவர் சந்நிதியில் அபிஷேக ஆராதனைகளுக்காக முருகன் தெய்வயானை மற்றும் வள்ளி சிலைகள் சிறிய உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    மூலவர் சந்நிதிக்கு மிக அருகிலேயே ஸ்ரீசக்கர ஸ்தானம் என அழைக்கப்படுகிற ஸ்ரீ சக்கர சந்நிதி உள்ளது. இங்கு சிதம்பர சுவாமி தவம் செய்த இடமாகும், ஸ்ரீசக்கர சந்நிதியில் வழிபாடு செய்து விட்டு வந்தால் மனக்கவலை எல்லாம் மாயமாய் பறந்தோடும் வேண்டுவதை நிறைவேற்றி தரும் பீடம் இச்சந்நிதி அமைந்து உள்ளது.

    கருவறையிலிருந்து வெளியே தெற்கு புறமாக உற்சவர் மண்டபம் உள்ளது. இங்கு தான் உற்சவர் சிலைகளுக்கு பக்தர்களால் செய்யப்படுகிற அபிஷேக ஆராதனைகள் சுவாமி திருவீதி உலா போன்றவை நடைபெறுகிறது. ராஜகோபுரத்தின் உட்புற பகுதியின் பின் புறத்தில் வன்னியநாதர் விசாலட்சி நாகதேவதைகள் போன்ற சந்நிதிகள் உள்ளது. இங்கு நவகிரங்களுக்கு தனியாக சந்நிதி இல்லை. அதே சமயம் சூரியன் சனி இரு கிரங்களுக்கு மட்டும் தனித் தனியாக சந்நிதிகள் உள்ளது.

  • சனி மற்றும் ராகு தோஷம் நீக்கும் எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர்

    புதுக்கோட்டை, அறந்தாங்கியிலிருந்து, 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி. இங்கு 2000 ஆண்டுகள் பழமையான சிவ திருத்தலமுள்ளது. இக்கோவில் காளிங்கராய மன்னனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் மூலவர் அகஸ்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேதராக காட்சியளிக்கிறார். அகஸ்தியர், காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, எட்டியத்தளி கிராமத்துக்கு வந்தார். அப்போது மன்னன் காளிங்கராயன் சனி தோஷம் நீங்க திருநள்ளாறு சனி ஆலயம் செல்வதற்கு, இவ்வழியாக வந்தான்.

    அகஸ்தியர் அவனை இங்கேயே இக்கோவிலை அமைக்கச் சொன்னார்.பின், நவகிரகங்களை அமைக்கச்சொன்னார். அதன் பின் காளிங்கராய மன்னன் இக்கோவிலை அமைத்ததாக இத்தல வரலாறு கூறுகிறது. அதனால், இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம் பொதுவாக, கோயில்களில் சனீஸ்வருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால். இக்கோயிலில் இந்த அமைப்பும் மாறி உள்ளது. அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி மற்றும் ராகு தோஷம் நீங்கும்.மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் பெறுவதாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

  • கிரக தோஷம் விலக சரவண ஸ்லோகம்!

    ஓம் ஐம் க்லீம் சௌம்

    சௌம் க்லீம் ஐம்

    சௌம் க்லீம் ஸ்ரீம்

    ஸ்ரீம் க்லீம் சௌம்

    சரஹணபவ சடாக்ஷர ஞான ஸ்கந்தாய நம

    காரி தோஷம், சத்ரு தோஷம், உபத்திரவதோஷம்

    தீக்கோள் தோஷம், சர்வ, சர்வபீடை,

    சர்வரோகம் நிவர்த்தி ஓம் ஸ்வாஹா.

    இந்த ஸ்லோகத்தை காலையில் தினமும் 6 முறை கூறிய பின் நெற்றியில் விபூதி இடவும். கிரக தோஷம் விலகி மகிழ்ச்சியுடன் வாழலாம். நீராடியப் பின் முருக்பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை கூறினால் சர்வ தோஷங்கள் விலகி வாழ்வில் சுபிட்சம் பெருகும்.

  • பார்த்தசாரதி கோயில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை

    திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலில் இன்று (11-07-2018)  நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.108 திவ்விய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவிலில் எம்பெருமான் மகாபாராதப் போரின்போது  பார்த்தனுக்கு தேரோட்டிய சாரதி வடிவில் காட்சியளிக்கிறார்.

    இத்திருதலத்தில் மூலவர் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார். இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலத்தில் இருப்பதால் இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை மற்றும் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சிகள் இன்று (11-07-2018) நடைபெறுகின்றன.

     

  • நெல்லையப்பர் காந்திமதியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து திருவிழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற உள்ளன.

    அதன்படி இன்று (11-07-2018) நண்பகல் 12 மணிக்கு காந்திமதியம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து இரவு 8 மணியளவில் காந்திமதியம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.