Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம்

    பண்ருட்டி திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் ஏகதின பிரம்மோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவதிகையில் ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை ஏகதின பிரம்மோத்ஸவ விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு சுப்ரபாரதம், 6 மணிக்கு தோமாலை சேவை, தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் அம்ச வாகனத்திலும், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் யானை வாகன சேவையும், 4 மணிக்கு சூர்ணோத்ஸவம், 5 மணிக்கு குதிரை வாகன சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை திருத்தேர் புறப்பாடு, தீர்த்தவாரியும் 7.30 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டுஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் ஆணையர் பா.ஜெயசித்ரா, செயல் அலுவலர் க.நாகராஜன், சன்னதி அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார், ஸ்ரீதர் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்தனர்.

  • தேவேந்திரன் போற்றிய மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரம்

    தேவர்கள் தாங்கள் இழந்த செல்வங்களையும், அமிர்தத்தையும் பெற வேண்டி பாற்கடலைக் கடைவதென்ற முடிவுக்கு வந்தனர் .தனியாக  பாற்கடலைக் கடைவது என்பது தேவர்களால் ஆகாத செயல் என்றும், அசுரர்களது வலிமையையும் இதற்காக உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று யோசனை  கூறுகிறார் பிரம்மா. அதன்படி  தேவ-அசுரர்கள் இணைந்து, மந்திர மலையை மத்தாக்கி, வாசுகியை கயிறாக்கி ,மகாவிஷ்ணு  கூர்மாவதாரம் எடுத்து மத்தைத் தாங்க ,பாற்கடலை  கடைந்தார்கள். இவ்வாறு கடைந்த பாற்கடலில் இருந்து முதலில் உச்சைஸரவஸ் என்ற விசேஷக் குதிரை வந்தது,பிறகு காமதேனு, கற்பக விருக்ஷம், ஐராவதம், சுரா பானம், சந்திரன் போன்றவை தோன்றியது. இவற்றிற்கு பிறகு கண்களை கூசச் செய்யக்கூடிய பிரகாசத்துடன், யுவதி தோன்றினாள். கைகளில் தாமரையுடன் தோன்றிய அவள் அங்கிருந்த பரந்தாமனருகில் சென்று தன்னை அவனுடன் இணைத்துக் கொண்டாள்.

     

    இவ்வாறு மஹாலக்ஷ்மி வந்த பிறகு தன்வந்திரி தேஜோ ரூபமான அம்ருத கலசத்தை கையில் ஏந்தி பாற்கடலில் இருந்து வெளி வந்தார். தேவர்கள் அம்ருதம் கிடைத்தபின் எல்லாப் போர்களிலும் அசுரர்களை வென்றதால்,தேவர்கள் தங்கள் வெற்றிக்கு காரணம் மஹா-லக்ஷ்மி என்று உணர்ந்து அவளைப் பணிந்து போற்றுகிறார்கள். தேவேந்திரன் போற்றிய மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரத்தை  வெள்ளிகிழமையான இன்று  பாராயணம் செய்து மஹாலக்ஷ்மியை வணங்குவோம்.

     

    நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே

    சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

                                              

    மஹாமாயையாக ஸ்ரீ பீடத்தில் வாஸம் செய்பவளும், தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும், சங்கு,சக்ரம், கதை போன்றவற்றை கையில் தாங்கியவளுமான மஹாலக்ஷ்மி தங்களுக்கு நமஸ்காரம்.

     

     நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி

    ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

     

    கருடவாஹனத்தில் அமர்ந்தவளும், கோலாஸுரனுக்குப் பயத்தைக் கொடுப்பவளும்,அனைத்து பாபத்தையும் போக்குபவளுமான மஹாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.

     

    ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ

    ஸர்வ து:க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

     

    அனைத்தையும் அறிந்தவளும், எல்லோருக்கும் விரும்பிய வரங்களைத்தருபவளும், எல்லா துஷ்டர்களுக்கும் பயத்தைக்கொடுப்பவளும், அனைத்து துன்பத்தையும் போக்குகின்றவளுமான மாஹாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.

     

    ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி

    மந்த்ர மூர்த்தே மஹாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

     

    பல விதமான  ஸித்திகளையும், நல்ல புத்தியைக் கொடுப்பவளும், தேவியும், போகம்,மோக்ஷம் ஆகியவற்றைத் தருபவளும் மந்த்ர வடிவானவளும், எப்போதும் பிரகாசிக்கின்றவளுமான மஹாலக்ஷ்மித் தாயே!, உங்களுக்கு நமஸ்காரம்.

     

    ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி

    யோகஜே யோகஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

     

    ஆதியும், அந்தமும் இல்லாதவளும், முழுமுதற் சக்தியும், மஹேஸ்வரியும்,யோகத்தினாலுண்டானவளும்,யோகத்திற்கு பலமுமான அன்னை மஹாலக்ஷ்மியே உங்களுக்கு நமஸ்காரம்.

     

     ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே

    மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

     

    ஸ்தூலமாகவும், ஸுக்ஷ்மமாகவும், மிக பயங்கரமாகவும், மஹா சக்தியாகவும், விசாலமான வயிற்றையுடையவளும்,மஹா-பாபங்களையும் போக்குபவளுமான தேவியே, மஹாலக்ஷ்மி உங்களுக்கு நமஸ்காரம்.

     

    பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி

    பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

     

    பத்மாஸனத்தில் அமர்ந்த தேவி, பரப்ரஹ்ம ஸ்வரூபிணியும், பரமேஸ்வரியும், உலகிற்குத் தாயுமான மஹாலக்ஷ்மி தேவியே உங்களுக்கு நமஸ்காரம்.

     

     ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே

    ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

     

    வெண்மையான ஆடையுடுத்திக் கொண்ட தேவி, பற்பல விதங்களில் அலங்கரிக்கப்படவளும்,உலகனைத்தும் உள்ளவளும், உலகிற்குத் தாயுமான தாயே!,மஹாலக்ஷ்மி உங்களுக்கு நமஸ்காரம்.

     

     மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:

    ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

     

    எவன் பக்தியுடன் மஹாலக்ஷ்மி அஷ்டகம் என்னும் இந்த ஸ்தோத்திரத்தைப் படிக்கிறானோ!,அவன் அனைத்து ஸித்தியையும், ராஜ்யத்தையும் அடைவான்.

     

     ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்

    த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:

     

     இந்த ஸ்தோத்ரத்தை தினம் ஒரு முறை சொல்வதால் மஹாபாபங்களும் விலகும். ஒரு நாளில் இரண்டு முறை சொல்வதால் தனம், தான்யம் முதலியவை உண்டாகும்.

     

    த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்

    மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

     

    இந்த ஸ்தோத்ரத்தை தினசரி காலை, மதியம், மாலை என மூன்று காலமும் படித்தால் மிகப் பெரிய சத்ருக்களையும் வெல்லலாம். எப்போதும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸந்தோஷத்தோடு,கேட்கும் வரங்களையும் மங்களங்களையும் தருபவளாக இருப்பாள்.

     

     

     

     தாயார் திருவடிகளே சரணம் …..

  • ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் நடராஜப்பெருமானுக்கு ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, புதன்கிழமை பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு காலை முதல் அருணாசலேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • துளசி ஏன்? பெருமாளுக்கு உகந்தது…

     

     

    பெருமாளுக்கு உகந்த துளசி திர்த்தம்  துளசி இலையின் நுனியில் நான் முகனும்,மத்தியில் திருமாலும்,அடியில் சிவனும்,மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும்,இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

    துளசி  பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசமான ஒன்று, பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது.பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது.

    பெருமாள் கோவில்களில் பூஜை செய்யும் பொது  அர்ச்சனைக்காகவும்,அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும் துளசி இலை முக்கியத்துவம் பெறுகிறது.

    பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பிறகு தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். தீர்த்தம் மிகச்சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதைப்புண்ணிய ஜலம் என்று கூறுகின்றனர்.

    துளசியின் மகிமையை உணர்ந்தவர்கள் வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை நட்டு வழிபடுகிறார்கள்.

    கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும்.

    துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

    பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.

     

    *துளசி_ஆராதனை_துதி!*

    நாபிக்கமல மம்மா நல்லவனின் தேகமம்மா
    நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான்
    கோபிக் கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற
    கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா!

    துளசி_ஆராதனை_துதிப்பாடலைப்

    பாடி_வழிபடுவதால்_சர்வ

    மங்களங்களும்_உண்டாகும்.

  • நவகிரக தோஷங்களை நீக்கும் சக்கரத்தாழ்வார்…

    திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை. இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன. சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார். அதே போல் அமைந்து பிரயோகிக்கும் நிலையில் காணப்படுவது பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில். சிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது. சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது. மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது. பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார் என இவை நிரூபிக்கின்றன.

  • 16 வார்த்தைகளில்_ராமாயணமா!

    பிறந்தார்,,,,,,,,,,,,,,,, வளர்ந்தார் 
    கற்றார்……………….. பெற்றார் 
    மணந்தார்…………… சிறந்தார் 
    துறந்தார்…………….. நெகிழ்ந்தார் 
    இழந்தார் ……………..அலைந்தார் 
    அழித்தார் …………….செழித்தார் 
    துறந்தார்…………….. துவண்டார் 
    ஆண்டார்……………. மீண்டார்

    விளக்கம்:

    1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.
    2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது
    3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
    4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.
    5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
    6.சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.
    7.துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.
    8. நெகிழ்ந்தார்: 
    *அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
    *குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
    *பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
    *பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
    *அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
    *சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
    *விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
    *எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, ‘கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது’ எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.
    9.இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.
    10.அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.
    11.அழித்தார்: இலங்கையை அழித்தது.
    12.செழித்தார்:சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது. ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.
    13.துறந்தார்: அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.
    13.துவண்டார்: அன்னை சீதையை பிரிய நேர்ந்தது ஸ்ரீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் கவலை செய்தது.
    15.ஆண்டார்: என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.
    16.மீண்டார்: பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.
    ஜெய்_ஸ்ரீராம்.

  • திருப்பதியில் விரைவில் முழுநேர இலவச தரிசனம்!

    அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் முழு நேர இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 23ம்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்குப் பின் பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இலவச தரிசனத்திற்கு நேர ஒதுக்கீடு செய்ய கவுன்டர்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்றார். மேலும், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சோதனை முறையில் இலவச தரிசனத்திற்கு நேர ஒதுக்கப்படும் என்றும் அப்போது ஏற்படும் பிரச்னைகள் சரி செய்யப்பட்ட பிறகு, 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து மூலம் இலவச தரிசனத்திற்கு முழு நேர அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • அனுமனுக்கு வெண்ணெய் ஏன்?

    ராவணன் சம்ஹாரத்திற்கு பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை சம்ஹாரம் பண்ணக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்தபோது அனுமன் கடவுளே அதற்குத் தகுதியானவர் என்று முடிவு பண்ணி அவரை அனுப்ப ஏற்பாடு செய்தனர். அனுமனுக்கு போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவருக்கு உரிய ஆயுதங்களை ஆசிர்வாதம் பண்ணி அளித்தார்கள். ஸ்ரீ கண்ணபெருமான் வெண்ணை அளித்து ‘இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடலாம்’ என்று சொல்லி ஆசீர்வதித்தார். அதன்படி அனுமன் கையில் ஆசீர்வாதமாக அளிக்கப்பட்ட வெண்ணெய் உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் போரில் சந்தித்து வெற்றி பெற்று அவர்களை அழித்து விட்டார். ஆகவே அதேபோல நாம் வெண்ணெய் சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

  • புரட்டாசி பவுர்ணமியில் பாவங்களை தீர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை….

     

    புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு உண்மை தான்.

    புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் துன்பங்களிலுருந்து விடுபடலாம்.

    அதே வேளையில்  புரட்டாசியில் வரும் பவுர்ணமி  நாளில்   சிவ  பெருமானை வழிபடுவது பலவித பாவங்களை போக்கும்  என்பது ஐதிகம்.

    அது மட்டும் இன்றி  புரட்டாசி மாதத்தில் நவராத்திரியில் அம்பாளுக்கு கொலு விருந்து  வைத்து 10-வது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்ததால் எழுந்த கோபத்தினால்  அன்னை உக்கிரமாக இருந்தாள்.

    அம்பாளை சாந்தம் அடைய செய்வதற்காக பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர். அதன் விளைவாக  குளிர்ச்சியான  ஒளி பொருந்திய முகத்துடன்  அன்னை காட்சி அளித்தாள்.

     நவராத்திரி விரதமிருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்தாள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறலாம்.

     இந்த நாளில் ஈசனை அவரவர் ஆற்றலுக்கு  ஏற்ப வழிபாடு செய்வதால் துன்பங்கள் ஒரு போதும் நெருங்காது  என்பது ஐதிகம்.

    பவுர்ணமி நாளில் சிவ பெருமானை காலையில் வழிப்பட்டால்,முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும்.பகல் வேளையில் ஈசனை  வழிப்பட்டால் முற்பிறவி மட்டும் இன்றி  இந்த பிறவியில் செய்த பாவங்களும் கூட விலகும். மாலை நேரம் அதாவது பிரதோஷ நேரத்தில் வழிப்பாடு செய்தால் அனைத்து பிறவிகளிலும் செய்த  அனைத்து பாவங்கள் நீங்கும் என்பது புரட்டாசி பவுர்ணமியின் சிறப்பு அம்சமாகும்.  

     இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    #அதன்_விவரம்_வருமாறு:-

    இன்று (புதன்கிழமை) இரவு 1.38 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 12.53 மணி வரை பவுர்ணமி உள்ளது.

    இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.

    ஓம் நமசிவாய…….

     

     

  • கோவில் கோபுரத்தில் தேச தலைவர்களின் சிலைகள்!

     

     

    கோவிலின் கோபுரங்களில் பொதுவாக சிற்பங்கள் ,தான் இருக்கும்,  ஆனால் மதுரை மேலவாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள

    நவநீதகிருஷ்ணன் ஆலய கோபுரத்தில்  மகாத்மா காந்தி,அவரது மனைவி கஸ்தூரிபாய்,ஜவஹர்லால் நேரு,நேதாஜி ஆகியோரது சிலைகள் இடம் பெற்றுள்ளன.

     இதே போல் புதுச்சேரி உப்பளத்தில் உள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் ஆலயத்தின் முகப்பில் பாரதியாருக்கு சிலை இருக்கிறது.

    பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த போது இந்த ஆலயத்திற்க்கு அடிக்கடி செல்வதுண்டு. இத்தல அம்மனைப் போற்றி பாரதியார் பல பாடல்களையும் பாடியிருக்கிறார்.

    இலங்கையில் வல்வை சிவன் கோவில் உள்ள கோபுரத்தின் தெற்கு பக்கத்தில் மகாத்மா காந்தியின் நூல் நெய்தபடி உள்ள திருவுருவ சிலையை காணலாம்.

     ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோவில் கோபுரத்திலும் காந்தி,நேரு ஆகியோரின் சிலைகளை காணலாம்.