Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • சபரிமலை மேல்சாந்தி தேர்வு அக்டோபர் 17ல் நடக்கிறது

    சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி தேர்வு வரும் 17ம் தேதி நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைப்புரத்து அம்மன் கோயில் மேல்சாந்திகள் ஆண்டுதோறும் புதிதாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியின் பொறுப்பு ஐப்பசி மாத பூஜைகளுடன் நிறைவு பெறுகிறது. கார்த்திகை முதல் தேதியில் இருந்து புதிய மேல்சாந்திகள் ெபாறுப்பு ஏற்கவேண்டும்.

    இதையொட்டி புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்ய திருவிதாங்கோடு தேவஸம் போர்டு நடவடிக்கை மேற்கொண்டு, அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் சபரிமலை அய்யப்பன் கோயில் மேல்சாந்தி பொறுப்புக்கு 67 பேரும், மாளிகைப்புரத்து அம்மன் கோயிலுக்கு 44 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு நேர்முக தேர்வு கடந்த 5, 6ம் தேதிகளில் நடந்தது. இதில் சபரிமலை மேல்சாந்திக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 14 பேரும், மாளிகைப்புரத்துக்கு 12 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் இருந்து தலா ஒருவர் வரும் 17ம் தேதி குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  • பெருமாளின் ஆர்த்தியை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாமா?

    பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு காட்டப்படும் ஆர்த்தியை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்ளலாமா?

    கூடாது……

    பெருமாள் கோவிலை பொருத்தமட்டில், பெருமாளுக்கு காட்டப்படும் ( ஆர்த்தியை ) தீபாராதனையை பெருமாளுக்கு காட்டியவுடன், ஆர்த்தியை , கர்பக்கிரகத்திலேயே ஆராதகர் வைத்து விடுவார்கள். அது தான் சரியான முறையாகும்.

    ஆனால் தற்போது சில சந்தர்ப்ப சூழ்நிலையாலும், பக்தர்களின் திருப்திக்காகவும், ஆராதகர் ஆர்த்தியை வெளியில் எடுத்து வருகிறார்கள். ஆராதகர் ஆர்த்தியை வெளியில் எடுத்து வந்தாலும் , நாம் அதை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்வது கூடாது. அது தவறாகும்.

    பெருமாள் கோவிலை பொருத்த மட்டில், பெருமாளை நேரடியாக கண் குளிர, தரிசிப்பது மட்டும் தான் முக்கியம். பெருமாள் கோவிலை பொருத்த மட்டில் ஜோதிக்கு முக்கியத்துவம் இல்லை. பொதுவாக ஆராதகரின் தட்டு , தீபம் , எதையும் பக்தர்கள் தொடுவது கூடாது.

    சிவன் ஜோதி ரூபம் என்பதால், சிவன் கோவில்களில் ஜோதிக்கு முக்கியத்துவம் அதிகம், என்கிறார்கள். இவ்வளவும் சொல்வதற்கு முக்கிய காரணம்,….எந்த கோவிலுக்கு செல்கிறோமோ, அந்த கோவிலின் முழு பலனும் நமக்கு கிடைக்க வேண்டும்.

    எனவே, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, ……. பெருமாள் கோவில் முறைக்கும், சிவன் கோவில் முறைக்கும், வித்தியாசங்கள் நிறைய உள்ளன. அவைகளை நன்கு தெரிந்து கொண்டு, அந்தந்த முறைகளை, அந்தந்த கோவில்களில், சரியாக பயன்படுத்த வேண்டும். முறைகளை மாற்றம் செய்தீர்கள் என்றால் ,அந்த கோவிலின் பலன் உங்களுக்கு கிடைக்காது. என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

     

     

  • கார்த்திகை  விரதம் முருகனுக்கு உகந்தது ஏன்?

     

    கார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

    கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது நட்சத்திர விரதம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம். 

    அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

    உணவின் மீது ஆசைப்படும் நாம் ஏதேனும் ஒரு நாளில் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது. என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.அது இறைவனுக்கு உகந்த நாளாக இருப்பது உத்தமம். இதனால்  இறையருளுக்கும் பாத்திரமாக முடிகின்றது. ஆரோக்கியத்திற்கு வித்திட்டு பலத்தையும் கொடுக்கின்றது. அன்றைய தினம் முழுவதும் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதால் ,அவை புத்துணர்ச்சியும் பலமும் பெறுகின்றன.அதனால் உடல் ஆரோக்கியம் பெறுகின்றன.

    கார்த்திகை அன்று அதிகாலையில் நதிநீராடி திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள் முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம் தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.

    ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும்.மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.

    கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்.. இவ்வளவு பெருமை வாய்ந்தது கார்த்திகை விரதம்.

  • துளசி ஏன்? பெருமாளுக்கு உகந்தது!

     

     பெருமாளுக்கு உகந்த துளசி திர்த்தம், எதற்காக உகந்தது என்றால் துளசி இலையின் நுனியில் நான் முகனும்,மத்தியில் திருமாலும்,அடியில் சிவனும்,மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும்,இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

    துளசி  பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசமான ஒன்று, பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது.பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது.

    பெருமாள் கோவில்களில் பூஜை செய்யும் பொது  அர்ச்சனைக்காகவும்,அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும் துளசி இலை முக்கியத்துவம் பெறுகிறது.

    பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பிறகு தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். தீர்த்தம் மிகச்சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதைப்புண்ணிய ஜலம் என்று கூறுகின்றனர். துளசியின் மகிமையை உணர்ந்தவர்கள் வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை நட்டு வழிபடுகிறார்கள்.

    கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும்.துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

    பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.

     

    துளசி ஆராதனை துதி!

    நாபிக்கமல மம்மா நல்லவனின் தேகமம்மா
    நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான்
    கோபிக் கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற
    கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா!

  • சிவன் அருள் கிடைக்க வழிபடும் முறை…

    சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் ராஜகோபுரத்தை தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும். சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போட வேண்டும். அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.
    கடைசியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று இரு கைகளையும் மெதுவாக தட்டி, நன்றி சொல்லி வெளியே வர வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

  • விபூதி – மூன்று கோடுகளின் மகிமை

    விபூதியால் நெற்றியில் போடும் மூன்று கோடுகளுக்கும் மகிமை உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.
    முதல் கோடு
    அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.
    இரண்டாவது கோடு
    உகாரம், தக்ஷிணாக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.
    மூன்றாவது கோடு
    மகாரம், ஆஹவனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.

  • திருமலையை மேலும் அழகுபடுத்த திட்டம்…

    திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் ரூ. 25 கோடியில் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பசுமை திட்டத்தின் அடிப்படையில் திருமலையை ரூ.25 கோடியில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் எந்தவித சிரமும் இன்றி தரிசனம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். அதிகாரிகள், காவல் துறையினர், பக்தர்களின் துணையுடன் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடத்தப்பட்டது. ஆர்ஜித சேவை டிக்கெட்கள் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

  • எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? சாஸ்திர விளக்கம்….

    20ம் நூற்றாண்டில் எண்ணெய் தோய்த்து குளியல் என்பது கொஞ்சம் அரிதாக போய்விட்டது. ஆனால் இதனால் ஏற்படும் பலன்கள் ஏறாலம்…
    ஆண்களுக்கான பலன்கள் ….
    ஞாயிறு எண்ணைய் குளியல் ;- இருதயத்தில் தாபம் .
    திங்கள் எண்ணெய் குளியல் ;-பொழிவு தரும் மேனி
    செவ்வாய் எண்ணெய் குளியல் ;-அற்பாயுள்
    புதன் எண்ணெய் குளியல் ;-செல்வநிலை மேலோங்கும்
    வியாழன் எண்ணெய் குளியல் ;-தரித்திரம் தாண்டவம் ஆடும்
    வெள்ளி எண்ணெய் குளியல் ;-ஆண்களுக்கு ஆபத்தை தரும்
    சனி எண்ணெய் குளியல் ;-தீர்க்காயுள் தரும். எனவே தான் சனி நீராடு என்று சொல்லியிருக்கிறார்கள்.
    பெண்களுக்கான பலன்களை பார்க்கலாம்…
    செவ்வாய் எண்ணெய் குளியல் ;-பாக்ய விருத்தி தரும்
    வெள்ளி எண்ணெய் குளியல் ;-செளபாக்கியவதி ஆக வாழ்வார்கள்
    இவ்வாறாக ஆண் பெண் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் !!!!
    “தசமி,பஞ்சமி ,திருதியை ,சப்தமி ,துவிதியை ஆகிய நாட்கள் சேர்ந்து வந்தால் சந்ததி விருத்தி இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகள் உள்ளது . உடல்நல குறை உள்ளோர்கள் மேற்படி திதி கலந்த சனிக்கிழமைகளில் (ஆண்கள் )எண்ணெய் குளியல் செய்ய ஆயுள் விருத்தி மற்றும் நோய் நிவர்த்தி உண்டாகும்.
    பிரதமை திதி
    சதுர்த்தி திதி 
    சஷ்டி திதி
    நவமி திதி
    சதுர்த்தசி திதி
    அமாவாசை திதி
    ஆகிய திதிகளில் எண்ணெய் குளியல்கள் செய்யின் ஆயுள் குறைவு ஏற்படும். புக்தி குறையும், உடல் வலிமை இழக்கும், செல்வநிலை நாசத்தை அடையும், தவிர்க்க முடியாமல் சாதகமான நாட்களில் இந்த திதிகள் கலந்து வந்தால் சிறிதளவு நெய் அல்லது தண்ணீர் கலந்து எண்ணெய் உடன் கலந்து தேய்க்கலாம். ஜென்ம ,அனுஜென்ம ,திரி ஜென்ம நட்சத்திரம் அமைந்த நாட்களில் மற்றும் தமிழ்மாத முதல் தேதி மற்றும் கேட்டை ,உத்தர ,திருவோணம் ,திருவாதிரை ,போன்ற நட்சத்திரம் அமைந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க செல்வநிலை நாசமும் ஆயுள் குறைவும் அமையும் ஆகவே இதை எல்லாம் தவிர்க்க வேண்டும்.

  • அர்த்தநாரீஸ்வரறை நாடினால் குடும்பத்தில் சிக்கல் தீரும்!

     

    சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அர்த்தநாரீஸ்வரர்  இத்திருக்கோவில். அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயருடன் மூலவராக எழுந்தருளியுள்ள இவரை வழிபட்டால் சிவனையும், சக்தியையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும் மேலும் சிவனும் பெருமாளும் அருகருகே அமைந்து அருள்பாலிப்பது இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

    தல வரலாறு

        சுமார் இருநூறாண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வசித்து வந்த ஒருவரின்  தோட்டத்துக் குளத்தில் நீர் வற்றிய பொது இச்சிலைகள் கண்டறியப்பட்டது.அதன் பின்  இச்சிலைகள் எல்லாம் ஒரு கிற்று கொட்டகையில் வைத்து மக்கள் வழிபடத் தொடங்கினார்.

    நீண்ட காலமாக ஜலத்திலேய வாசம் செய்து வந்ததால் ,ஜலகண்டேஸ்வரர் என்று மற்றறொரு பெயரும் உள்ளது. இத்தல இறைவனை வணங்கினால்  குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கும்.

     மூலவர் அர்த்தநாரீஸ்வரர்  லிங்க திருமேனியராக வழிபடப்படுகிறார். இந்த ஆலய மூலவரான சிவ லிங்கத்தின்  ஆவுடையார்,மூன்றரை அடிவிட்டம் என்பது ஆலயத்தின் மற்றொரு தனி சிறப்பாகும்.

    லிங்கத் திருமேனியின் பின்புறம் கருவறைச் சுவற்றில் புடைப்புப் சிற்பமாக அர்த்தநாரீஸ்வரர் உருவம் உள்ளது. இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். சிறிய கருவறையைச் சுற்றி உள்ள  தெற்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய லட்சுமி நாராயணப் பெருமாள்  சந்நிதியும், அவருக்கு எதிரே கருடனுக்கு சந்நிதியும் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில்  ற்கு நோக்கியதெ அம்பாள்    சந்நிதியும், அருகில் நவக்கிரக சந்நிதியும் இருக்கின்றன. நவக்கிரக சந்நிதியின் பின்புறம் பைரவர் சந்நிதி உள்ளது.

    இத்தலத்தில் உள்ள  ஈசனையும் ,அம்பாளையும் வழிப்பட்டு வந்தால்,கணவன் மனைவிக்கு  ஒற்றுமை  அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் விலகும். இது மட்டும் இன்றி   திருமணப் பேறும் ,குழந்தை பேறும் அமையும் என்பதால்  இத்தல இறைவனை வணங்கும் பக்தர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

  • இருளிலிருந்து வெளிச்சம் : மகிழ்ச்சி தரும் தீபாவளி

     

    இருட்டு எப்போதுமே நாம் எல்லாருக்கும் பயம் தரும். வாழ்க்கை வெளிச்சமாக ஒளிமயமாக நம்முடைய இந்து தர்மம் பல வழிகளில் வழிகாட்டுகிறது. தர்மம் ஒளி என்றும், அதர்மம் இருட்டு என்பதுமே புராணம் காலம் தொட்டு சொல்லப்படும் செய்தி. பண்டிகைகள் , கொண்டாட்டங்கள், கோயில் திருவிழாக்கள் எல்லாவாற்றிலும் ஒரு பொருள் பொதிந்த அர்த்ததை நம் முன்னோர்கள் வழிகாட்டி சென்றிருக்கிறார்கள்.

     புத்தம் புதிய உடைகள், விதவிதமான பலகாரங்கள், புதிய திரைப்படங்கள், தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகள் என நம்முடைய பண்டிகைகள் கால ஓட்டத்தில் சுருங்கி போய்விட்டது. இத்தருணத்தில் வெளிச்சம் மிகுந்த தீபாவளியின் புராண பின்னணி  குறித்து அறிவோம்.

     இந்தியா முழுவதிலுமுள்ள மக்கள், மொழி , ஜாதி , ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி தீபாவளி  திருநாளை வெகு உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அன்னை பவானியின் பூஜையாக மேற்கு வங்காளத்திலும், தாம்பூலத் திருநாளாக மகாராஷ்டிர மாநிலத்திலும் குஜராத்தில் குபேர பூஜையாக புதுக்கணக்குகளை தொடங்கும் திருநாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

     தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள், தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தங்கள் வீடுகளில் அழகியலுடன்  நீண்ட வரிசைகளில் விளக்கேற்றிக் கொண்டாடுகிறார்கள்.

    தீபாவளி புராண பின்னணி

    நரகாசுரன் எனும் அரக்கனைக் கண்ணன் வதம் செய்ததை தான் தீபாவளியாக கொண்டாடி மகிழ்கிறோம்.  நரகாசுரன் என்ற  கொடூர அரக்கன் தேவர்களையும் மனிதர்களையும் அதிக அளவில் துன்புறுத்தி வந்தான். அவனது ஆட்டம் கட்டுக்கடங்காமல் போன நிலையில் தேவர்களின் தலைவனான இந்திரன் , பகவான் கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டார்.

    நரகாசுரனுடன் போர்புரிய சத்தியபாமாவுடன் புறப்பட்டார் கிருஷ்ணன் . இந்த போரில் சக்தியின் அவதாரமாகச் செயல்பட்டாள் சத்தியபாமா.

    கிருஷ்ணன் சத்தியபாமா இருவராலும் வீழ்த்தப்பட்டான் நரகாசூரன். இந்த தீய சக்தி அழிந்த நாளையே மக்கள் தீபாவாளியாக கொண்டாட ஆரம்பித்தனர்.

     எப்படி கொண்டாட வேண்டும் தீபாவளியை?

     தீபாவளி அன்று விடியற்காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து, கங்கா ஸ்நானம்  என்ற புனித நீராடுதலை செய்ய வேண்டும். தீபாவளி திருநாளில் எண்ணெயில் லட்சுமியும், நம் வீட்டுத் தண்ணீரில் கங்கையும் பிரசன்னமாகின்றனர் என்பது ஐதிகம், வீட்டுக் கிணற்றின் நீரிலோ அல்லது குழாயில் வரும் நீரிலோகூட தீபாவளியன்று நீராடினால் புனித கங்கையில் நீராடிய பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

                                                                                   

     புனித நீராடிய பின்னர் புத்தாடை உடுத்தி இறைவனை வணங்கி, உற்றார், உறவினர், நண்பர்களுடன் நல்ல கருத்துக்கள் பகிர்ந்து கொள்வது நலம்.  நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்னை மகாலட்சுமியின் பேரருள் பொழிய  இறைவனை மனதார வேண்டுவோம். தீபாவளி அன்று தொடங்கிய தீப ஒளி வரிசைகள் கார்த்திகை தீபம் வரை நமது அக புற இருளை போக்கி ஒளிமயமானதாக மாற்றுகிறது. இந்த நாட்களில் கிடைக்கப் பெறும் வெளிச்சத்தை வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாத்திடுவோம்.

     

     

     

    தீப மங்கள ஜோதி நமோ நம: