Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • அதிசயம்: திருப்புட்குழியில் அசையும் கல்குதிரை!!

     

    சென்னை, வேலூர் செல்லும் வழியில் 80  கிலோமீட்டர் தொலைவிலும் காஞ்சிபுரத்திலும்  இருந்து வேலூர் செல்லும் வழியில் 13  கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள பாலுசெட்டி சத்திரத்தின் அருகில் உள்ளது திருப்புட்குழி.  ராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி (புள் (பறவை)+குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது.  ஜடாயு பறவைக்கு ஈமக்கிரியை செய்யப்பட்ட தலம் என்பதால், இத்தல முலவரான விஜயராகவப் பெருமாள் ஜடாயுவை தன் மடியில் வைத்தபடி காட்சி தருகிறார். நான்கு தோள்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். , பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 58 வது திவ்ய தேசம். தாயார் பெயர் மரகதவல்லி என்பதாகும்.  இவருக்கு தனி சன்னதி  உள்ளது.  இங்குள்ள தாயார் வருத்த பயிரை முளைக்க வைக்கும் மரகதவல்லி தாயார் என அழைக்கப்படுகிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டும்.பெண்கள் இங்குள்ள ஜடாயு திர்த்தத்தில் நீராடி,மடப்பள்ளியில் தரும் வறுத்து, நனைத்த பயறை தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தின்  அதிசயம் என்னவென்றால்,உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புகளைக்கொண்ட  கல்குதிரை. இதை செய்த சிற்பி இது மாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம்.  ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால் ,முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள்  அமாவாசையன்று  இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  • திருப்பரங்குன்றத்தில் தங்கவேலுக்கு மகா அபிஷேகம்

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேல், மலை மேல் உள்ள குமரருக்கு எடுத்து சென்று, அங்குள்ள கங்கை தீர்த்த குளத்தில் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி காலை 10 மணிக்கு கருவறையிலிருந்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேல் எடுத்து வரப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் இருந்த பல்லக்கில் வைக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மலைமேல் உள்ள குமரர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள காசிக்கு நிகரான கங்கை தீர்த்த குளத்தில், தங்கவேலுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல்முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷத்துடன் பக்தியுடன் சாமி கும்பிட்டனர் பின்பு பக்தர்கள் அனைவருக்கும் கதம்ப சாதம் வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசிவிசுவநாதர் கோவில் மற்றும் மலை மேல் குமரர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியசாமி சன்னதி வளாகத்தில் உள்ள வற்றாத கங்கை தீர்த்த குளம் உள்ளது. இது, தெய்வீக புலவர் நக்கீரரின் பாவ விமோசனம் பெறுவதற்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள வேல்கொண்டு மலையின் பாறையை கீறி உருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. இதை நினைவூட்டும் விதமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, கோவிலின் கருவறையில் இருந்து முருகப் பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேல், மலை மேல் உள்ள குமாரருக்கு எடுத்து செல்லப்படுவது வழக்கம். அதுபோல இந்தாண்டுக்கான வேல் எடுக்கும் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

  • சூரனைச் வதம் செய்த கந்தப் பெருமான்….

    கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.
    முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம்.
    சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
    கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
    ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

  • கந்த சஷ்டி அனுசரிக்கும் முறை….

    கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை
    ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று. கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்த்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும். ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிக்க வேண்டும் . சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர். கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை

    இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனைஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது. அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்பெருங் கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறைமுதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது. கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான்

  • கந்த விரத மகிமை

    முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக கந்தசஷ்டி விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

  • சஷ்டி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம் …

    அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
    அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
    இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
    இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்
    மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
    வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
    சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே
    திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.

  • வேறு எங்கும் இல்லாத அதிசயம் இங்கு!

     

    வேறு எந்த கோவிலும் காணாத அதிசியம் இக்கோவிலில்

    முருகன் என்றாலே,திருச்செந்தூர்,பழனி,திருபரங்குன்றம்,பழமுதிர்ச்சோலை,திருத்தணி,சுவாமி மலை என்ற அறு படை வீடுகள் தான் நம் நினைவுக்கு வரும். அதை தவிர குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும். குன்று இருக்கும் இடமெல்லாம் தலம் தோறும் வீற்றியிருந்து. தம்மை நாடி வருவோரின் துயர் தீர்த்து நன்மை அளிக்கிறான் குமரன்.

    அத்தகைய சிறப்பு மிக்க முருகன்,பல்வேறு தலங்களில்,பல்வேறு அருட்கோலங்களுடன் காட்சி தருகிறான்.அவற்றுள் முக்கியமான ஒன்றாக விளங்குவது  இரத்தினகிரி.

    கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ளது இரத்தின கிரி மலை. இந்த ஐயர் மலையை இரத்தின கிரி, மாணிக்க மலை, சிவாய மலை, ஆராதனசலம், திருவாட்போக்கி மலை ,இதனால் ஐவர் மலை என்றும் அழைப்பார்கள்.இந்த ரத்தின கிரி மலையில் எழுந்தருளியுள்ளதால் இம்மலை உலக புழழ் பெற்றது.

    மேலும் இம்முருகன் கோவிலை 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

    இம்மலையில் முருகன் அருள் பாலிக்கதா இடமே இல்லை என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு முருகன் அருள் எங்கும்,எதிலும் நிரந்து பரவியிருப்பதாக சொல்லப்படுகிறது.

    இந்த ஆலயம் அமைந்து இருக்கும் மலையின் மீது,வேறு எங்கும் இல்லதா அதிசியமாக காகங்கள் பறப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதனால் இது சனி தோஷ நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது.மேலும் ஒரு அதிசியம் இங்குள்ள முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால்,சில மணி துளிகளிலேயே அந்த அபிஷேக பால்,தயிராக மாறி பக்தர்களை அதிசயிக்க வைக்கிறதாம்.

  • குருபகவனாக வீற்றிருக்கும் ஈசன்!!

     

    நவ கயிலாயத்தில் எந்த  கோவிலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு  இந்த ஆலயத்திற்கு உள்ளது.அது என்ன வென்றால்,சிவபெருமான் ,குருபகவனாக அமர்ந்து அருள்பாலிக்கும் சிறப்பு அம்சமாகும். நவ கயிலயங்களில் ஐந்தாவது இடத்தை பெறுவது முறப்பநாடு. இந்த கோவில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது.

    வியாழபகவனாய்  வீற்றிருக்கும்  அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ வயல்வெளிகளும் நிறைந்த இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இந்த கோவில் தாமிரபரணி  ஆற்றின்  மேற்கு கரையில் அமைத்துள்ளன. இங்கு கயிலாசநாதாரகவும்,அம்பாள் சிவகாமியாகவும் அருள் பாலிக்கிறார்கள்.

    புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு,வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்கிறது. இதனால் இந்த இடத்திற்கு தட்சிண கங்கை என்று பெயர். இங்கு நீராடினால் காசியில் நீராடுவதற்கு சமம் ஆகும். அது மட்டுமல்லாது, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் இக்கோவிலில் உள்ளது. இதனால்  இந்தியாவிலேயே மிக சிறப்பு மிக்க இடமாகும்.

    முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபதுமனின் வழியில் வந்த அரக்கன் ஒருவன்  இந்த பகுதயில் வசித்து வந்த முனிவர்களுக்கு கடுமையான தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.அத்துன்பத்தை தாங்க முடியாமல் அனைவரும் கயிலாயத்தில் ஈசனிடம் சென்று  முறைப்படி முறையிட்டனர். சிவபெருமான் உள்ளம் உருகி முனிவர்களுக்கு அருள்பாலித்தார்.முறைப்படி முறையிட்ட காரணத்தால் தான் இத்தலம் முறைப்படு நாடு என பெயர் பெற்றது. நாளடைவில் முறப்பநாடு என்றானது.

    இக்கோவிலில் கருவறை சுவர் அருகே பஞ்ச லிங்கமும்,தென்மேற்கு மூலையில்  கன்னி விநாயகரும் உள்ளனர்.வடமேற்கில் சுப்பிரமணிய சுவாமி,வள்ளி- தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.,இதனுடன் சனிஸ்வரர்,சண்டேஸ்வரர், கால பைரவர் சிலை உள்ளது. இங்கு பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். வாகனம் நாயுடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும்,வாகனம் இல்லாமல் காட்சி தரும் பைரவர் வீரபைரவர்  என அழைக்கப்படுகின்றனர்.

    இங்குள்ள கயிலாசநாதர் குரு அம்சமாக இருப்பதால் ,மஞ்சள் வஸ்திரம் சாத்தி,கொண்டைகடலை நைவேத்தியம் செய்யப்படுகிறது. சிவராத்திரி,குருப்பெயர்ச்சி,திருக்கார்த்திகை,ஆடி அமாவாசை,தை அமாவாசை  போன்ற நாட்களில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    இங்குள்ள இறைவனையும்,அம்பாளையும் வழிப்பட்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும். உடல் ஆரோக்கியம் கிட்டும்,நல்ல குடும்பம் அமையும் என்பது பக்தர்களின் ஐதிகம். இத்தலத்தில் உள்ள இறைவனை வழிப்பட்டால்  திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குருபகவானை(சிவபெருமானை) வழிப்பட்டதற்கு  சமம் ஆகும்.

  • தெய்வீக வாழ்வு வாழ அருள் பாலிக்கும் கந்த சஷ்டி விரதம்

    கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய! கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர்.
    செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர்.
    தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர்.
    இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
    தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து, காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.
    பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
    மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

  • தீமை அழிந்த நாளே தீபாவளி திருநாள்

     

    பண்டிகைகளில் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் தீபஒளியின் அழகோடு, வான வேடிக்கை, பலவகையான இனிப்பு தின்பண்டங்கள் என கோலாகல உற்சாகம் தான் தீபாவளி. ஆனால் இது மட்டும் காரணம் இல்லை. மற்ற பண்டிகைகளில் இருந்து தீபாவளி வேறுபட இன்னும் ஒரு காரணம் உண்டு. ஒருவன் இறந்த நாளை சந்தோஷமாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிதான். நரகாசுரன் என்ற அரக்கன் இறந்த நாளான நரக சதுர்த்தியதைதான் தீபாவளியாக கொண்டாடுகின்றோம்.

    ஹிரண்யாட்சனை சம்ஹரிக்க, திருமால் எடுத்த வராக அவதாரத்தில்,பூமி தேவிக்கும் திருமாலுக்கும் பிறந்தவன் தான் பௌமன் என்ற நரகாரசுரன். இவன் பிரம்மனிடம்  தன் தாயின் கரத்தால் தான் இறக்க வேண்டும் என்கிற வரத்தை பெற்று இருந்தான்.

    பௌமன் எனும் அந்த நரகாசுரன் ,காமரூபம் என்னும் நாட்டை ஜ்யோதிஷபுரம் என்னும் நகரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தான். பெயருக்கு  ஏற்றார் போல் ஜ்யோதிஷபுரம் ஒளிபொருந்திய நகரமாக விளங்கியது.

    எல்லா உலகத்தையும் தன் வசப்படுத்த நினைத்த நரகாசுரன் , கெட்ட சகவாசத்தால்,எல்லோரையும் துன்புறுத்தலானான். பெரிய மகரிஷி, குரு, போன்றவர்களையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.

    பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்த நரகாசுரன்,“நான் என் தாயைத் தவிர வேறு எவராலும் மரணம் அடையக்கூடாது” என்று வரம் கேட்டான். பிரம்மாவும் ,“நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய்”எனக்கூறி வரத்தை கொடுத்து விட்டார்.

    வரத்தை வாங்கியதும் நரகாசுரனுக்கு அசுரக் குணம்  தலைக்கேற தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எவரும் இரவில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது என்றும்  உத்தரவு போட்டான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர்.

    தன் தாய் பூமாதேவியினால் மட்டுமே தன்னை அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார் கிருஷ்ணர். போர் ஆரம்பித்தது.

    சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள் என்பதால், சாரதியாக சத்தியாபாமாவை கண்ணன் அழைத்தார். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. முதலில் நரகாசுரனின் படைத் தளபதி முரன் என்பவனைக் கொன்றார் கிருஷ்ணர். அதனால்தான் கிருஷ்ணனுக்கு ‘முராரி’என்ற பெயர் வந்தது. நடந்த கடும்போரில், நரகாசுரன் தன் ‘கதையை’ கண்ணன் மேல் வீச, மாயக் கண்ணனும், மயங்கி விழுந்ததுபோல் நடித்தார்.

     சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு, நரகாசுரன் மேல் சரமாரியாக அம்பை எய்ய அவனும்  மாண்டான்.அவன் கேட்ட வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான்.

                                                                        

    நரகாசுரன் இறக்கும் தறுவாயில் ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்தார். சாகும் தருவாயில்,கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்டான், தன்னை சம்ஹாரம் செய்த அந்த நாளில் மக்கள் அனைவரும் தாம் பட்ட துன்பம் தீர்ந்தது என தலையில் எண்ணை தேய்த்துக் கங்கையில் நீராடினால் அவர்களுடைய துன்பங்களும், பாவங்களும் தீர்க்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் எல்லோரும் அன்றைய தினம் புத்தாடை அணிந்து. தீபமேற்றி, வெற்றித் திருநாளாக கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். “அப்படியே ஆகட்டும்”என கிருஷ்ணர் வரமளித்தார். இதுவே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

    நம் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஞான ஒளியை தீப ஒளியாக ஏற்றி வைப்போம். தீபத் திருநாளை கொண்டாடுவோம்.