சபரிமலையில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரி மலையில் குவிந்தவண்ணம் உள்ளனர். 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் 26-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு களபாபிஷேகம் நடைபெறுகிது. பகல் 11.40 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் பிரசித்திபெற்ற மண்டல பூஜைகள் நடைபெறும். மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மண்டல பூஜை நெருங்கு வதால் சபரிமலையில் பக்தர் கள் கூட்டம் அலைமோது கிறது. இதனால் மரக்கூட்டம் வரை பக்தர்கள் வரிசை காணப்படுகிறது. 12 மணி நேரம் காத்திருந்த பிறகுதான் அவர்களால் சுவாமி ஐயப் பனை தரிசனம் செய்ய முடிகிறது.
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
ஐயப்பனுக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது….
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 15-ந்தேதி நடை திறக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்ட நாள் முதல் திரளான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மண்டல பூஜையின்போது அணிவிக்கப்படும் சுவாமி ஐயப்பன் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டது. திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த தங்க அங்கிஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின் போது, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த தங்க அங்கியானது, பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். இந்த ஆண்டு மண்டல பூஜையையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.
-
திருநள்ளாறில் குவியும் பக்தர்கள் ….
காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா கடந்த 19ம் தேதி நடந்தது. தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனிபகவானை வணங்குவதற்காக சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். சனிப்பெயர்ச்சிக்குப் பின் வரும் முதல் சனிக்கிழமை என்பதால் நாளை ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. சனிப்பெயர்ச்சி தினத்தன்று குளத்தின் படிகட்டு, தண்ணீரில் மிதந்த அனைத்து ஆடைகளும் உடனுக்குடன் அகற்றப்பட்டாலும், தண்ணீரின் உள்ளே கிடந்த ஒரு சில ஆடைகள் கடந்த இரு தினங்களாக முழுமையாக அகற்றப்பட்டு, தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்பிறகு, குளத்தில் போர்வெல் மூலம் புதிய தண்ணீர் நிரப்பப்பட்டது.
-
திருப்பதியில் அனைத்து தரிசன டிக்கெட்டும் ஆதாருடன் இணைக்க முடிவு!
லட்டு முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக திருப்பதியில் அனைத்து தரிசன டிக்கெட்டும் ஆதாருடன் இணைக்க அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம், மலைப்பாதை வழியாக நடந்து வரும் திவ்ய தரிசனம், 300 ரூபாய்க்கான சிறப்பு நுழைவு தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுதவிர, ஆர்ஜித சேவை, ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர் செல்லுதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனத்துக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதில், 300 க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டை நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் சுலபமாக பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை பக்தர்கள் அரசு அங்கீகரித்த 9 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காண்பித்து முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.மேலும், மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு 20 ஆயிரம் திவ்ய தரிசனம் டிக்கெட் நாள்தோறும் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளுக்கு எந்தவிதமான அடையாள அட்டைகளும் தேவையில்லை. ஆனால் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு தற்போது ஆதார் அட்டையை வைத்து நேரம் ஒதுக்கீடு செய்த டிக்கெட்டுகள் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சாதாரண நாட்களில் 75 ஆயிரம் பக்தர்கள், கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் 90 ஆயிரம் பக்தர்கள் வரை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.இதில், தற்போது திவ்ய தரிசனத்தில் வரும் பக்தர்களிடம் அடையாள அட்டைகள் பெறாததால், இவர்கள், இலவச தரிசன டிக்கெட் பெற்று சுவாமி தரிசனம் செய்யவும், கூடுதலாக லட்டுகள் பெறவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளும் இடைத்தரகர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேவஸ்தானத்துக்கு லட்டு விற்பனையின் மூலம் இழப்பு ஏற்படுகிறது. எனவே, முறைகேடு இல்லாமலும் தேவஸ்தானத்துக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும் 300 ரூபாய்க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட், திவ்ய தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை டிக்கெட் உட்பட அனைத்து தரிசன டிக்கெட்டையும் ஆதாருடன் இணைக்க தேவஸ்தான அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
காளஹஸ்தி சிவன் கோவில் தங்க மயமாகிறது
பஞ்ச பூதத் தலங்களில் வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில். இங்குள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ் வரர் கோவிலுக்கு தரிசனம் செய்யவும், ராகு-கேது பரிகார பூஜை செய்யவும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அப்போது கோவில் பிரகாரத்தில் உள்ள ஞானப் பிரசுனாம்பிகை அம்மன் சந்நிதி, காளஹஸ்தீஸ்வரர் சந்நிதி, கோவில் கொடிமரங்கள் ஆகியவற்றுக்கு ரூ.16 கோடி செலவில் செப்புதகடுகள் பொருத்தப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டன. காளஹஸ்தியில் வருகிற பிப்ரவரி மாதம் மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக கோவிலில் உள்ள மற்ற கொடிமர பீடங்கள், பலி பீடங்கள், மண்டப தூண் வளைவுகளில் உள்ள கூம்புகள் ஆகியவற்றுக்கு செப்புத் தகடுகள் பொருத்தி தங்க முலாம் பூச அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் காளஹஸ்தீஸ்வரர் கோவில் முழுவதுமாக தங்கமயமாகக் காட்சியளிக்கும்.
-
சபரிமலையில் 26ம் தேதி மண்டல பூஜை…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 26ம் தேதி பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப சுவாமி விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். கடந்த 1973ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் பாலராமவர்மா 450 பவுன் எடை கொண்ட இந்த தங்க அங்கியை காணிக்கையாக அளித்தார். இந்த தங்க அங்கி ஆறான்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.நாளை காலை 7 மணியளவில் ஆறான்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து வரப்படும். 25ம் தேதி மாலை தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானத்தை அடையும் பின்னர் தங்க அங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். மறுநாள் 26ம் தேதி, பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சார்த்தப்படும். அன்றுடன் இவ்வருட மண்டல கால பூஜைகள் நிறைவடையும். மகரவிளக்கு பூஜைகளுக்காக மீண்டும் கோயில் நடை 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
-
திருப்பதி கோயிலில் லட்டு விலை இருமடங்கானது….
திருப்பதி கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு, வடையின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளுக்கும், வி.ஐ.பி.க்களுக்கும், பரிந்துரை கடிதங்கள் மூலம் தினந்தோறும் லட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. லட்டு தயாரிப்பதற்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் கூடுதல் லட்டு விலையை தேவஸ்தானம் இருமடங்காக இன்று முதல் அதிரடியாக உயர்த்தியுள்ளது. சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு, வடையின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய லட்டு விலை ரூ.25ல் இருந்து ரூ.50 ஆகவும், பெரிய லட்டு விலை ரூ.100ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. சிபாரிசு கடிதத்துக்கு தரப்படும் சிறிய வடையின் விலையும் ரூ.25ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத லட்டு விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
-
சனி கிரக அம்சம் உடைய தலங்கள்….
1. திருநள்ளாறு
சனீஸ்வர பகவானின் தலமாகிய திருநள்ளாறு காரைக்காலில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இத்தலத்து இறைவனின் பெயர் தர்பாரண்யேசுவரர் தர்ப்பைக் காட்டில் இருந்து, தர்ப்பைப் புல்லில் இருந்து தோன்றியவர், இன்றும் இந்த லிங்கத்தின் மீது தர்ப்பைப் புல்லின் வடு உள்ளது.
திருநள்ளாறு சனீஸ்வர பகவானை ஐப்பசி மாதம், ஆட்சி பெறும் தை, மாசி மாதங்களில் வழிபடலாம். மேலும் சனீஸ்வர பகவானின் நட்சத்திரங்கள் ஆகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் சனிக்கிழமைகளில் சனி ஓரையில் வழிபட்டு, பரிகாரம் செய்தால் மிகச் சிறந்த பலன்கள் உண்டாகும்.
திருநள்ளாறு என்றாலே அங்கு சனீஸ்வர பகவானுக்கு தனிக்கோவில் இருக்கிறது என்று மட்டும் தான் நிறைய பேர் அறிந்திருப்பார்கள். ஆனால் அந்தத் தலத்தில் உள்ள மற்ற மூர்த்திகளின் பெருமைகளை அறிந்தவர்கள் சிலர் தான். ஒரு காலத்தில் இவ்வூர் தர்ப்பை புல் நிறைந்த வனமாக இருந்திருக்கிறது. வுனம் என்பதை ஆரண்யம் என்றும் சொல்வது உண்டு. அந்த தர்ப்பாரண்யத்தில் சுயம்பு உருவாக தோன்றிய ஈஸ்வரனின் பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர்.
பின்னர் தர்ப்பாரண்யேஸ்வரர் கோபுரவாசலில் மறைந்திருந்த சனி பகவானை அழைத்து தனது பட்டமாகிய ஈஸ்வர பட்டத்தை அளித்து இத்தலத்திலேயே இருந்து இங்கு வரும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யுமாறு ஆணையிட அவ்வாறே இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வரபகவான் இருப்பதாக ஐதீகம். சனி பகவானாக இத்தலம் வந்த இவர் ஈஸ்வரன் பட்டம் பெற்று சனீஸ்வர பகவான் ஆகியதாக சொல்லப்படுகிறது.
திருநள்ளாறு செல்லும் முன் வழிபட வேண்டிய திருத்தலங்கள்
விருத்தாசலம் : நள மகராஜன், சனீஸ்வர பகவானின் வேகம் தணிய, நாரதர் உபதேசப்படி தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது விருத்தாசலத்தில் நளமகராஜன் இறைவனை வழிபட்டபோது அங்கு அவர் சந்தித்த பரதவாஜ முனிவர் திருநள்ளாறு சென்றால் நன்மை கிடைக்கும் எனக் கூறி அருளியதால், நாமும் விருத்தாசலம் சென்று ஆலயம் தொழுது பிறகு திருநள்ளாறு செல்வது சிறந்த பரிகாரமாக அமையும்.
திரும்புகலூர் : இத்திருத்தலம் நாகப்பட்டினத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ளது. நளச் சக்கரவர்த்தி சனி தோஷம் நீங்க தீர்த்த யாத்திரை செய்யத் தீர்மானித்து வந்து இந்தத் திருத்தலமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சனி பகவானின் அனுக்கிரகம் கிடைத்து, பின்னர் திருநள்ளாற்றில் விடுதலை ஆயிற்று. எனவே இத்திருத்தலத்தையும் வழிபட்ட பிறகு திருநள்ளாறு செல்வது சிறந்த பரிகாரமாக அமையும்.
திருநாகேஸ்வரம் : கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ள இந்த ராகு தலத்தில்தான் நள மகராஜன், தனது இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். எனவே இத்திருத்தலத்தையும் வழிபட்டு திருநள்ளாறு செல்வது மிகவும் சிறந்த பரிகாரமாக அமையும்.
2. திருகொள்ளிக்காடு
தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களுள் திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாகச் சனீஸ்வரரின் அருள் பெற்ற ஒரே திருத்தலம் இந்த திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலமே ஆகும். திருத்துறைப் பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில், நால்ரோட்டில் இறங்கி மேற்கே செல்லும் ஆலத்தூர், விக்ரவாண்டியம் பாதையில் உள்ளது.
இது அக்னி பகவான் வழிபட்ட தலமாகும். மேற்கு திசையைப் பார்த்த சந்நிதி, வில்லேந்திய முருகர். இத்தலத்தில் சனி பகவான் வாயுதிக்கில் மகாலட்சுமி ஸ்தானத்தில் இருந்து, பொங்கு சனியாக அருள் தருகிறார். பொங்குசனி நடப்பவர்கள் அவசியம் தரிசித்தே ஆக வேண்டும்.
3. பவானி – கொடுமுடி
ஈரோட்டில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்திலும், ஈரோட்டில் இருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும், சனி பகவானுக்கு தனி சந்நிதிகள் உள்ளன.
இங்கு சனி பரிகாரம் செய்து வழிபட்டால் சனீஸ்வரர் அருள் கிட்டும்.4. குச்சனூர்
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் ஒன்றரை கி.மீ. தூரத்தில் குச்சனூர் திருத்தலம் உள்ளது. இத்திருத்தலத்தில் சனீஸ்வரபகவான் லிங்க வடிவில் சுயம்புவாகத் தோன்றியுள்ளார். இத்திருத்தலத்தின் மூலவர் இவரே. இந்தியாவிலேயே சனீஸ்வர பகவானுக்கான தனிக் கோவில் இதுதான். இத்தலம் பெரியாறும், சுரளியாறும் சங்கமித்து வரும் முல்லையாறு கரையில் உள்ளது.
எள்ளை விடச் சிறிய இலையையும், பூவையும் கொண்ட தலமரமாகிய விடத்தலை மரம். இந்த மரத்தின் கீழ் இறைவனைத் தியானித்த வண்ணம் சனி பகவான் காட்சி தருகிறார். சனீஸ்வரர் தமது மனைவி நீலாதேவியுடன் காட்சி தரும் உத்சவ விக்ரஹம இத்திருத்தலத்தில் உள்ளது. சனீஸ்வரர் சூரிய வம்சத்தில் பிறந்தவர் என்பதால் மூல ஸ்தான விக்ரஹத்திற்கு வைஷ்ணவ நெற்றிக்குறியான நாமம் இடுகிறார்கள்.
5. திருவாதவூர்
மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ. தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. இது சனீஸ்வர பகவான் வழிபட்ட திருத்தலமாகும். சனீஸ்வரருக்குத் தனி சன்னிதி உள்ளது. மாண்டவ்ய முனிவரைச் சனீஸ்வரர் பற்ற, அதனால் கோபமுற்ற முனிவர், சனீஸ்வரரை முடமாகப் போகச் சாபமிட்டார். இந்த சாபம் நீங்கவே சுயம்புவாகத் தோன்றி, இத்திருத்தலத்தில் காட்சி தரும் இறைவன் வேதபுரீஸ்வரர், அம்பாள் வேதநாயகி ஆகியோரை வழிபட்டு சனீஸ்வர பகவான் தன் வாதத்தைப் போக்கி கொண்டார்.
சனியின் வாத நோய் குணமானதால்தான் இந்த ஊருக்குத் திருவாதவூர் எனப் பெயர் வந்தது. எனவே சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சனிபகவான் அருள்பெற்ற இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டால் சனீஸ்வர பகவானின் அருளைப் பெற முடியும்.
திருநெல்லிக்காவல் : இத்தலத்திற்கு திருத்துறைப் பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு என்ற இடத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். இத்தலம் பல சிறப்புகள் உடைய ஒரு அற்புதமான திருத்தலமாகும். சனி பகவானே இறைவனை வழிபட்ட பெருமை மிக்க திருத்தலம் இத்திருத்தலம். இங்குள்ள இறைவனை வழிபட்டால் சனிதோஷம் நீங்கி, சனி பகவானின் அருள் கிட்டும்.
குரங்கணில் முட்டம் : இத்திருத்தலம் காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் பாதையில், பாலாற்றைத் தாண்டி, தூசி என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து செல்ல வேண்டும். சனி பகவானின் அதிதேவதையான எமன், காகம் வடிவில் வழிபட்ட தலம் இது.
திருப்புனவாசல் : அறந்தாங்கியிலிருந்து இத்திருத்தலத்தை அடையலாம். சுனி பகவானின் அதிதேவதையான எமன் வழிபட்ட தலம்.
மயிலாடுதுறை : இங்குள்ள அருள்மிகு மயூரநாத சுவாமி திருக்கோவிலில் எமன் வழிபட்ட லிங்கம் உள்ளது.
இடும்பாவனம் : இத்திருத்தலம் முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது. சனி பகவானின் அதிதேவதையான எமன் வழிபட்ட திருத்தலம் இது.
அகஸ்தியம்பள்ளி : இத்திருத்தலம் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் பாதையில் உள்ளது. அகத்தியர் வழிபட்ட திருத்தலம் இது. சனி பகவானின் அதிதேவதையான எமன் வழிபட்ட திருத்தலம்.
பூந்தமல்லி : சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் என்னும் திருத்தலத்தில் உள்ள சனீஸ்வர பகவான் மிகவும் விசேஷமானவர்.
சனீஸ்வர பகவானுக்கு அதிதேவதையாக எமன் விளங்குவதால், அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பதால், கீழ்க்கண்ட ஆலயங்களில் எம பகவானை வழிபட்டால், சனீஸ்வரர் அருள் கிட்டும்.
ஸ்ரீவாஞ்சியம் : கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பஸ்சில் சென்று, குடவாசல், குடவாசல் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து குடவாசல், நன்னிலம் போகும் பஸ்சில் சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். இது காசிக்கு நிகரான திருத்தலமாகும். பல சிறப்புகளை உடைய திருத்தலம் இது. இங்கு எம பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது. எம பகவான் ஈசனுக்காக வாகனமாக மாறிய உருவமும் உள்ளது.
இங்கு இறைவனையும் அம்பாளையும் வழிபாடு செய்து, குப்த கங்கை, எம தீர்த்தத்தில் நீராடி எமபகவானுக்கு அபிஷேகமும், ஆராதனையும் செய்து வழிபட்டால் சனி பகவான் அருள் கிட்டி, சனிதோஷ பரிகார நிவர்த்தி ஏற்படும்.
திருப்பைஞ்சீலி : திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து டோல்கேட், மண்ணச்சநல்லூர் வழியாக 19 கி.மீ. தூரத்தில் உள்ளது. இத்திருத்தலம் பஸ் வசதி உள்ளது. இவ்வாலயத்தில் எமனுக்கு தனி சன்னிதி உள்ளது. சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டு பரிகாரம் செய்ய சனி பகவான் அருள்பெறலாம்.
-
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா…
திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் பரிகார பூஜைகள் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். சனிபகவான் இக்கோயிலில் அனுக்ரக மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள் வழங்குகிறார். இக்கோயிலில் வேறு நவகிரஹங்கள் பிரதிஷ்டை கிடையாது. இவரை தரிசித்தால் நன்மை நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனீஸ்வர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகும்போது சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறில் அதிவிமரிசையாக கொண்டாடப்படும். அந்தவகையில் இன்று, காலை 10.01 மணிக்கு சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்தார். இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர்.
-
தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் சனிபகவான்
விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசியில் இடம் பெயர்ந்துள்ளார் சனிபகவான். சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெறுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம். இந்த சனிபெயர்ச்சி தற்போது விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்து உள்ளது. இன்று காலை 10 மணி ஒரு நிமிடத்திற்கு மூலம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார் சனீஸ்வர பகவான்.